பெண்கள் மீதான ஈர்ப்பு என்பது எங்கிருந்து தொடங்கும் என யூகிக்கவே முடிவதில்லை. தான் ஆண் என்பதும் அவள் பெண் என்பதும் புரிகின்றபோதா? அல்லது பெண் என நினைக்கும்போதே ஆணின் மனது ஈர்ப்புக்குள்ளாகிறதா என புரியவில்லை. பெண்கள் மீது ஆண்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு போலவே பெண்களுக்கும் ஆண்கள் மீது ஈர்ப்பு இருக்கத்தானே செய்யும். ஒருவேளை அப்படியெல்லாம் செய்யாதோ? இப்படியான குழப்பங்கள் எப்போதும் என்னை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது.
அந்தக் குழப்பத்திற்கு பதிலாகவோ என்னமோ ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பெண்ணின் வருகையும் என் வாழ்வில் அமைத்துவிடுகிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எப்படியோ ஆனால் என் வரையில் ஒவ்வொரு பெண்ணும் அவள் நினைவை என்னிடம் விட்டுச்செல்வதற்கான காரணத்தை நான் தேடிக்கொண்டே இருக்கிறேன். எல்லோருக்கும் இப்படித்தானோ அல்லது இயல்பாகவே எனக்கு எக்ஸ்ட்ராவாக ஏதும் சுரக்கிறதோ..?
ஆரம்பப்பள்ளியில் இருந்து இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும்போது இயல்பாகவே நாம் வளர்ந்துவிட்டோம் என்கிற உணர்வு வந்து விடுகிறது.
அப்போதுதான் மீசை அரும்பத் தொடங்கியிருந்தது. ஆனால் வகுப்பில் சில நண்பர்களுக்கு மீசை முளைத்துவிட்டிருந்தது. இடைநிலைப்பள்ளி தொடங்கிய முதல் வாரத்தில் ஆசிரியர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள் . பள்ளிக்குப் போவதே ஜாலியாக இருப்பதற்காகத்தான் எனத் தோன்றியது. எங்களுக்குக் கிடைத்திருக்கும் புது நண்பர்களுடன் எங்களை அடையாளம் செய்துகொண்டு நண்பர்களாகினோம். அதற்கு முன் பார்த்த மாணவிகளை விட இப்போது பார்க்கும் மாணவிகள் எங்களுக்கு அந்நியமாகத் தெரிந்தார்கள். நாங்கள் அவர்களுக்கு அந்நியமாகத் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் முகத்தை பார்ப்பத்தில் எங்களுக்குள் ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தது. அவர்களும் எங்களை அவ்வபோது பார்த்து வெட்கப்படுவதை வாடிக்கையாக்கி கொண்டிருந்தார்கள்.
எங்களுக்குள் இதுநாள் வரை இருந்து குழந்தை அங்குதான் காணாமல் போயிருக்க வேண்டும். ஆறாண்டுகளாக உடன் படித்த தோழி ஒருத்தி இருந்தாள். பள்ளியில் படிக்கும்போதும் உணவு நேரத்திலும் கூட நாங்கள் பேசிக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டும் இருப்போம். இடைநிலைப்பள்ளி அவளையும் என்னிடம் இருந்து அந்நியப்படுத்தியது.
அது எப்படி நடந்தது என யோசிக்கையில் நானும் தானாகவே விலகிவிட்டதாகத் தோன்றுகிறது.
ஆறாம் ஆண்டு பள்ளி இறுதி நாள் நாங்கள் எங்கள் வகுப்பில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆளுக்கு ஒருவர் வீட்டில் இருந்து சாப்பிட ஏதாவது கொண்டு வரவேண்டும். வகுப்பு மாணவர்களிடம் பணம் வசூல் செய்து அணிச்சம் ஒன்றை வாங்கி வந்தோம். எங்கள் வகுப்பாசிரியர் அதனை வெட்ட வேண்டும். அதுவரையில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தோம். வகுப்பறையை ஜிகுனா தாள்களைக் கொண்டு ஜோடித்து , மேஜைகளை ஒரே இடத்தில் நீள் மேஜையாக வைத்து நாற்காலிகளை அப்புறப்படுத்தினோம்.
பயத்தையும் நெரிசலையும் கொடுத்து வந்த வகுப்பறை இப்போது ஓடி விளையாட ஏதுவான குட்டி திடலாகிவிட்டிருந்தது. எங்களின் துள்ளலும் கொண்டாட்டமும் அதன் எல்லையை அடைந்துவிட்டதை உணர்த்தோம். என் தோழிதான் அதைத் தொடங்கி வைத்தாள்.
ஆசிரியர் அணிச்சலை வெட்டியபின் வகுப்புத் தலைவி அதனை இதர மாணவர்களுக்கு வெட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் பேசிக்கொண்டே சாப்பிடும் நேரத்தில் வகுப்பின் மூலையில் தோழி அழுதுகொண்டிருந்தாள்.
அவளின் அழுகை சத்தம் மட்டும் போதுமானதாக இருந்தது. வகுப்பில் இருந்த எல்லா மாணவிகளும் அழ ஆரம்பித்துவிட்டார்கள். கூடவே சில மாணவர்களும் சேர்ந்து கொண்டார்கள். அவளை சமாதானம் செய்ய முயன்றேன். அழுதுகொண்டே என் கையை பிடித்துக்கொண்டு,
“டே இனிமே நாம் இந்த ஸ்கூல் சட்டை போட முடியாதுடா….” என்றாள்
“அய்ய… இதுக்கா அழுவற .. அதான் வேற சட்டை போடப்போறோமே…”
“இல்லடா எனக்கு இந்த கலரு சட்டைதான் பிடிக்கும், எங்க அக்காவோட சட்டைய பாரு.. அதெல்லாம் ஒரு கலரா சொல்லு… இந்த கருநீல சட்டைதான் எனக்கு அழகா இருந்துச்சி… இனிமே இதை போட முடியாது…”
“ஆமா, நீ பரவால, எங்களை பாரு… இனிமே இந்த அரைக்கால் சுலுவாரை போட மாட்டோம்ங்கறதே ஜாலியா இருக்கு…”
“சொல்லுவ சொல்லுவ…”
“ஆமா. எத்தனை தடவை காத்தாடியை சுத்தம் செய்யும் போதும், ஒட்டடை அடிக்கும் போதும் கால் வலிக்க வலிக்க ரெண்டு தொடையை ஒட்டிக்கிட்டு நின்னுருக்கேன் தெரியுமா..”
”ஏண்டா நாங்க மட்டும் கழுத்து வலிக்க எவ்வளவு நேரம் கீழயே பார்த்துக்கிட்டு இருந்தோம்.. அதெல்லாம் தெரியாதுடா உங்களுக்கு..”
“சரி சரி..இன்னிக்குத்தான் கடைசி இன்னுக்குமா சண்டை போடுவ…”
கேட்டதில்தான் தாமதம் , அழுகையை அதிகமாக்கிவிட்டாள்.
“அந்த ஸ்கூலுக்குப் போனா நாம பேசுவமா இல்லையான்னுகூட தெரியல.. கிளாசையெல்லாம் வேற வேறயா மாத்திடுவாங்களாம்டா…”
“போச்சி… இப்போ இதுக்கு அழுவ ஆரம்பிச்சிட்டயா… தோ பாரு இந்த ஸ்கூல்ல நீதான் எனக்கு கிடைச்ச முதல் பிரண்டு…. நாம ஆறு வருசமா கூட்டாளியா இருக்கறோம்… என்ன சண்டை வந்தாலும் அரைமணிநேரத்தில் நாம பேசிக்கறோம்… புது ஸ்கூலு போனா மட்டும் என்ன மாறிடுவோமா…. ”
”ஆமா… ஆனா….”
“நீ ஒன்னும் பேச வேணாம்… நீ அழுது எல்லாரையும் அழ வச்சிட்ட… வா போய் எல்லார்கிட்டயும் பேசுவோம்…”
ஆளுக்கு ஆள் நட்பு தொடர்வதற்கான உறுதி மொழிகளைக் கொடுத்துக்கொண்டோம்.
அன்றுதான் இறுதி நாள். இனி மீண்டும் பள்ளிக்கு வருவதென்றால் அடுத்த மாதம் வரவிருக்கும் பரிட்சை முடிவுகளை எடுக்கத்தான். மீண்டும் எப்போதோ என யூகிக்க முடியாவிட்டாலும், ஒவ்வொரு வாரப் பள்ளி விடுமுறைக்கும் ஆரம்பப் பள்ளிக்கு வருவதாகத் திட்டம் போட்டதோடு சரி. எதுவுமே நடக்காமல் போனது.
முதலாம் ஆண்டில் , மூன்றாம் மாதத்தில்தான் என் தோழி பள்ளிக்கு வந்தாள். அவள் அப்பாவுக்கு வேலை மாற்றலாகிவிட்டதால் இங்கு வந்திருப்பதாக வகுப்பு ஆசிரியர் அறிமுகம் செய்தார். அவளை அமர வைக்க இடம் தேடும் போதுதான் என் அருகில் இருக்க வேண்டியவன் அன்று வராததால் காலியாக இருந்த இடத்தில் ஆசிரியர் அமர வைத்தார். அமர வைத்த ஆசிரியர் சும்மா இருக்கவில்லை.
“மணி, இனி இந்த பொண்ணுதான் உன் கூட்டாளி பார்த்துக்கோ” என்று பாடத்திற்குள் நுழைந்துவிட்டார். ஆசிரியர் அப்படிச் சொன்னதன் காரணம் எனக்குப் பிடிபடவில்லை ஆனாலும் புல்லரித்தது. பிறகுதான் தெரிந்தது கடந்த மூன்று மாதப் பாடங்களை அவளுக்கு சொல்லிக்கொடுக்கும் வேலைக்காக ஆசிரியர் அப்படி சொல்லியிருக்கிறார். என் மண்டையிலேயே ஒன்றும் அதுவரை ஏறவில்லை என்பதெல்லாம் வேறு விசயம்.
சாதாரணமாவளாகத் தெரிந்தவள் ஒருநாள் சட்டென தேவதையாக மாறிவிட்டாள். ஆசிரியர் வகுப்பினரில் யாருக்கு கதை சொல்லத் தெரியும் எனக் கேட்டதில் இவள் மட்டும் சத்தமிட்டு கையை உயர்த்தினாள். வெறுமனே கைகளை தூக்கிய எங்களைவிட அவளிட்ட சத்தம் ஆசிரியரை கவர்ந்திழுத்தது.
மேஜை உயரமே இருக்கும் அவளை ஆசிரியர் அவரின் மேஜை மீது தூக்கி நிற்க வைத்தார். அவளும் தன் கைகுட்டையை எடுத்துத் தன் கழுத்தில் கட்டிகொண்டாள்.
”நான் இப்போ தேவதை கதை சொல்லப்போறேன்” என்று தொடங்கினாள்
அந்த நொடிதான் அற்புதம் நிகழந்தது, வகுப்பு முழுக்க வேறு வண்ணமானது அவள் கழுத்தில் கட்டியிருந்த கைகுட்டை இறகுகளாக மாறின. பள்ளிச்சீருடை வெண்மையாக மாறிக்கொண்டிருந்தது. தலையை இப்படியும் அப்படியும் ஆட்டியபடி கைகளால் மாய மந்திரம் செய்வதுபோல ஏதேதோ காற்றில் வரைந்து கதையைச் சொல்லிகொண்டே போனாள். அவள் சொல்லும் கதைகளில் அவளே பல சத்தங்களை சேர்த்துக்கொண்டாள். கதைக்கு இடையில் வாசலைப் பார்த்தாள். நாங்களும் யாரோ வந்திருக்கிறார்களோ என வாசலைப் பார்க்க, சட்டெனச் சிரித்தாள்.
“இப்படித்தான் வாசலில் இருந்த பாட்டி பயங்கரமா சிரிச்சாங்க..” என்று சூனியக்காரி வீட்டுக்கு வந்திருக்கும் இரண்டு சிறுவர்கள் கதையைத் தொடர்ந்தாள்.
தேவதையான அந்த தருணத்தில் இருந்துதான் எங்கள் நட்பும் ஆழமானது. ஓய்வு நேரங்களில் அவள் எனக்கு ஒவ்வொரு கதையாக சொல்லிகொண்டே இருப்பாள். ஒருபோதும் அவளைப்போல என்னால் எந்தக் கதையையும் அத்தனை சுவாரஸ்யமாகச் சொல்லவே முடியவில்லை. ஆனால் நடிகர்கள் பேசும் வசனங்களை அவர்கள் பாணியிலேயே பேசி நடித்துக் காட்டி என் திறமையை நிரூபித்து வந்தேன்.
இப்போது இடைநிலைப் பள்ளியில் முதல் நாள். மீண்டும் அதே மாணவர்களும் சில புதிய மாணவர்களும் வந்திருந்தார்கள். வகுப்பில் இருந்த நான் பழைய நண்பர்களுடனும் புதிய நண்பர்களுடனும் நட்பை பாராட்டி அறிமுகம் செய்துகொண்டிருந்தேன். ஆனால் என் தோழி என் வகுப்பில் இல்லை. ஏதோ ஒரு கவலை உள்ளுக்குள் இருந்தது. அவள் வீடும் தெரியாது. வீட்டுத் தொலைபேசியும் தெரியாது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். ஒருவேளை வேறு வகுப்பில் இருக்கலாம் என விசாரித்தேன். யாருக்கும் தெரியவில்லை. சில மாணவிகள் மட்டும் அவளை விசாரிக்க என் மீது கோபம் கொண்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
ஒரு மாதம் பள்ளியில் எல்லாமே பழகிப்போனது. ஒருநாள் வகுப்பின் முன் மஞ்சள் பூசிய முகத்துடன் மாணவி ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள். . வகுப்பு ஆசிரியர் அவளை எங்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு பெண்கள் அமர்ந்திருக்கும் குழுவில் அமரச்சொல்லிவிட்டு பாடப் புத்தகத்தை திறந்தார்.
எனக்கு நன்றாகத் தெரிந்தது அவள்தான் அவளேதான். ஆனால் அவளைப் பார்க்க எனக்கு ஏதோ பதட்டம் இருப்பதை உணர்ந்தேன். வயிற்றில் ஏதோ வட்டமடித்தது. அவள் என்னை கவனித்திருக்க வேண்டும். அவள் ஆசிரியர் சொன்ன இடத்தில் அமர்ந்து அடுத்த நொடியில் என்னை பார்த்தாள். நானும் அவளை பார்த்தேன். என்னை அறியாமல் சிரித்தேன். அவள் எந்த பிரக்ஞையும் இல்லாமல், யாரையோ பார்ப்பதுபோலப் பார்த்து சட்டென திரும்பிக்கொண்டாள்.
என்னால் அதன் பிறகு அவளைப் பார்க்கவோ பழைய நட்பை நினைவுபடுத்தவோ முடியவில்லை நான் முயற்சிக்கவுமில்லை. மூக்கின் கீழ் முளைக்க தயாராக இருக்கும் உரோம மொட்டுகளை தடவிப்பார்த்துக் கொண்டேன். பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பன்
“டே மச்சான் அங்க பாருடா” என்றான். அவன் காட்டிய இடத்தில் ஒரு மாணவி குனிந்து, கழண்டுவிட்ட காலணி கயிறை கட்டிக்கொண்டிருந்தாள்.
அப்போதுதான் மாணவர்கள் என்ற பொதுப்பெயரில் இருந்து ஆண்கள் பெண்கள் என நாங்கள் எங்களை அந்நியப்படுத்திக் கொண்டதை உணர்ந்தேன். இந்த மாற்றம் அவசியம்தானா? அந்த மாற்றத்தை எப்படி புரிந்துகொள்வது என இன்றுவரை மனதின் ஓரத்தில் குழப்பம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.