நெடுநாட்களுக்கு முன் அறிமுகமான ஒரு பெண் ஒருநாள் திடீரென என்னிடமிருந்து பரிசு கேட்டாள். ஒரு நிமிடம் யோசித்தேன். அன்று அவளுக்குப் பிறந்தநாளும் இல்லை; மற்ற சிறப்பு நாளும் இல்லை; அல்லது ஏதாவது எனக்குத் தெரியாமல் எதையாவது சாதித்திருந்தாரோ; ஒருவேளை அவர் ஏதேனும் பரிசை எனக்காக வாங்கிவைத்துக்கொண்டு கொடுக்கல் வாங்கல் முறையில் கேட்கிறாரோ என்று சில கேள்விகள் எழுந்தன.
பரிசு என்பது கேட்டுப் பெறுவதோ? அப்படி கேட்டுப் பெறவேண்டிய பரிசு என்றால் அதை எந்த உறவு முறையினரிடம் கேட்கலாம்? அவளிடமே ”என்ன பரிசு வேண்டும்?” என்று கேட்டேன். “நல்லா யோசிச்சு நல்ல பரிசா வாங்கித் தாங்க” என்று சொன்னாளே தவிர வேறு ஒன்றும் க்ளூ இல்லை.
பிறகு அடுத்தகட்ட கேள்விகள் தோன்றின. நான் எதற்காகப் பரிசு வாங்கிக் கொடுக்கவேண்டும்? அந்தப் பரிசு எதைப் பிரதிபலிக்கவேண்டும்? என் மீதான மதிப்பீட்டை எந்த அளவுக்கு அப்பரிசின் மூலம் நிர்ணயம் செய்ய முனையவேண்டும்?
பரிசுகள் வாங்கிக்கொடுத்து எல்லாம் எனக்குப் பழக்கமில்லை. பரிசுகளில் எனக்கு நம்பிக்கையும் பிடிமானமும் எப்போதும் இருந்ததில்லை. ஒருசமயம், என் பள்ளிப்பருவத்தில் பிரியாவிடையின்போது எல்லா நண்பர்களும் ஆளாளுக்குப் பரிசுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் பரிசை எதிர்பார்த்துக் காத்திருந்த சமயம், ஒரே வகையான எதிர்பார்ப்பை எல்லாருடைய முகத்திலும் பார்த்தேன். ஆனால், கிடைத்த பரிசைத் திறந்து பார்த்தபின் வாங்கிக்கொண்டவர்களின் முகத்திலும் வாங்கிக்கொடுத்தவர்கள் முகத்திலும் வெவ்வேறு விதமான வெளிப்பாடுகள். அவை:
- நான் வாங்கிக்கொடுத்ததில் பாதி விலைகூட தேறாது இந்தப் பரிசு எனும் ஏமாற்றம்,
- இந்தப் பரிசுக்குப் பதிலாக அவனுக்குக் கிடைத்த பரிசு எனக்குக் கிடைத்திருக்கலாம் எனும் பேராசை,
- ஹ்ம்ம்! இதை வைத்து என்ன செய்வதாம்? எனும் சலிப்பு,
- நான் வாங்கிகொடுத்தது ரொம்ப சின்னப் பரிசாக இருக்கிறதே, என்ன நினைத்துக்கொள்வார்களோ எனும் குற்ற உணர்ச்சி,
- இன்னும் கொஞ்சம் காசைப் போட்டு பெரிய பரிசாக வாங்கிக் கொடுத்திருக்கலாம் எனும் இயலாமை,
- கடைசிவரை பத்திரமாக வைத்துக்கொள்வார்களா என்ற கவலை,
இவை எல்லாவற்றையும் விட எனக்குப் பெரிதாகத் தெரிந்தது ஒருவர் கொடுக்கும் பொருளின் விலைமதிப்பு அவருடைய சுயமதிப்பை நிர்ணயம் செய்துவிடுமோ என்ற பயம்தான். விரும்பியோ விரும்பாமலோ நாம் எல்லாருமே சிறந்த ஒன்றைத்தான் விரும்புகிறோம். அந்தச் சிறந்த ஒன்றைப் பெற, பல சமயங்களில் அதிக விலைகொடுக்க வேண்டியுள்ளது.
நம்மைப் பெரிதாக அறியாத ஒருவரிடமிருந்து ஆயிரம் வெள்ளிக்குக் கிடைக்கும் பரிசுக்கும் நம்முடனேயே காலங்காலமாய் இருக்கும் நண்பனிடமிருந்து கிடைக்கும் ஒருவெள்ளிப் பரிசுக்கும் எத்தனை வித்தியாசங்கள் இருக்கின்றன? ஆனால், மனசு என்ன சொல்லும்? அந்த விலையுயர்ந்த பரிசைக் கொடுத்தவன் நமது நண்பனாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று ஒரு கணமாவது யோசிக்கும் அல்லவா? அப்படியென்றால் நமக்காக தன் வாழ்நாளில் இடம் ஒதுக்கித் தந்த நண்பனின் நட்பு அந்த ஒற்றைப் பரிசின் முன் ஒருகணமேனும் தோற்றுவிடுகிறதே!
பரிசின் தன்மை என்ன? ஒருவர் இன்னொருவருக்கு மனமுவந்து தன்னுடைய நன்றியை வெளிப்படுத்தவோ அல்லது அவரைப் பாராட்டி கௌரவிப்பதற்குத்தானே. இதில் ஒருவரிடம் வலிய வந்து கேட்டுப் பெறுதல் எந்த வகையில் பரிசென்று சேரும்? இதை, ஒருவர் இன்னொருவர் மீதான தனது உரிமையையும் மதிப்பையும் மீள்பார்வை செய்யும் ஆய்வாகவே நான் கருதுகிறேன்.
எனக்குப் பரிசுகளைக் கொடுப்பதிலும் வாங்குவதிலும் இருக்கும் வெறுப்புக்கு இன்னொரு காரணமும் உண்டு. இன்று ஒருவருக்கு நாம் ஒரு நினைவுப்பரிசு கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதை எத்தனை நாள் அவர் வைத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? ஒரு வருடம்? பத்து வருடம்? என்றோ ஒருநாள் குப்பைக்குப் போகவேண்டிய பரிசை கொடுத்தால் என்ன கொடுக்கா விட்டால்தான் என்ன? நான் வெற்றிபெற்ற எத்தனையோ பரிசுக் கேடயங்கள், கோப்பைகள், பதக்கங்கள் எல்லாம் எப்போது குப்பைத் தொட்டிக்குப் போயின என்றுகூட எனக்கு நினைவில்லை. என் சாதனைகளைப் பெருமை பீற்றிக்கொள்ளக்கூட ஒரு பரிசும் என்னுடன் இல்லாதபோது ஏதோ ஒரு பிறந்தநாளுக்காக அல்லது பட்டமளிப்பு நாளுக்காக வழங்கப்பட்ட பரிசு எங்கனம் என்னுடன் இருக்கப்போகிறது. இதில் இன்னொரு கொடுமை, எந்தப் பரிசு யாரால் கொடுக்கப்பட்டது என்றுகூட நினைவில் இல்லாமல் போனதுதான். அதிகமான பரிசுகளும் ஒரு சுமைதானே!
எந்தப் பரிசை வாங்கும்போதும் நாம் ஏதாவது ஒரு மனநிலையில் இருப்பதைத் தவிர்க்கமுடியாது. உதாரணத்திற்கு:
- இந்தப் பொருள் இவருக்கு எந்தளவு உதவக்கூடும் எனும் இயல்பு வாழ்க்கையைப் பற்றிய சிந்தனை,
- இந்தப் பொருள் எனக்குச் செலவையும் தரக்கூடாது; அதேநேரத்தில் வாங்குபவருக்கு மதிப்புள்ளதாகவும் இருக்கவேண்டும் எனும் பொருளாதாரச் சிந்தனை;
- கடந்த முறை அவன் எனக்கு இன்ன விலையில்தான் பரிசு வாங்கிகொடுத்தான்; அதே விலையில் உள்ள பரிசை வாங்கித்தரவேண்டும் எனும் வியாபாரச் சிந்தனை;
- இன்ன பரிசைக் கொடுத்தால் பிற்பாடு இவனால் நமக்குக் காரியம் ஆகலாம் எனும் அரசியல் சிந்தனை;
- இந்தப் பரிசைக் கொடுப்பதன் மூலம் இவன் காலமெல்லாம் நம்மை மறக்கமாட்டான் எனும் அதீத சிந்தனை;
- அல்லது குறைந்தபட்சம் நமக்கும் அவருக்குமுடனான உறவைத் தெளிவுபடுத்திக்கொள்ள முற்படும் முன்னெச்சரிக்கைச் சிந்தனையாகவும் இருக்கலாம்.
இன்னும் பலவகையான சிந்தனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். காதலிக்கத் தொடங்கும் ஆண் ஒரு பெண்ணுக்குக் கொடுக்கும் பரிசில் தனது காதலை மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ தெரிவிக்கும் எண்ணத்தில் ஒரு பரிசைக் கொடுக்கிறான். பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் பழகுகிறார்கள். அந்தக் கட்டத்தில் அவன் கொடுத்த பரிசு காதல் பரிசாகவே இருக்கிறது. இன்னொரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் வெறுத்துப் பிரிகிறார்கள். அப்போது அந்தப் பரிசின் நிலை என்ன? வாங்கிக் கொள்ளும்போது இருந்த காதல் உணர்வும் மனநிலையும் அதைத் தூக்கி எறியும்போது இருக்குமா? அப்படி இல்லாத பட்சத்தில் அந்தப் பரிசு எதற்கு?
பரிசு வகைகளில் இன்னொரு அங்கம் வாழ்த்து அட்டைகள். இதில் மின் அட்டைகளும் அடங்கும். இவை எந்த வகையில் அனுப்புநருக்கும் பெறுநருக்கும் லாபம் இருக்கிறது? தன் சொந்தச் சொற்களை எடுத்துக் கோர்த்து உளமாரச் சொல்லாத ஒரு செய்தியை யாருடைய மூளையிலோ உதித்த, தொழில்ரீதியாக உற்பத்தி செய்யப்பட்ட வாழ்த்துச் செய்தி எந்த அளவுக்கு பெறுநரைச் சென்றடையப் போகிறது? இன்னொருவர் சொன்ன வாழ்த்தைக் காசு கொடுத்துத் தனதாக்கி பிறருக்குத் தருவதில் வியாபாரத்தைத் தவிர என்னால் வேறொன்றையும் பார்க்க முடியவில்லை. இதே நிலைதான் பொருட்களுக்கும். ஒருவருக்கு வாங்கிக்கொடுக்கும் பொருள் நமது எண்ணத்தில் இருந்து உருவானது அல்ல; நமது நேரடி உழைப்பு அப்பொருள் உருவாக்கத்தில் இல்லை; எந்த மூலப்பொருளை வைத்துச் செய்யப்பட்டது எனும் தகவல்கூட நமக்குத் தெரியாது. காசு கொடுத்துவிடுவதால் அந்தப் பொருளைச் சொந்தம் கொண்டாடிக் கொள்கிறோம். அதைக்கொடுத்து நன்றியையும் பெற்றுக்கொள்கிறோம். இதில் வியாபாரம் கலந்திருக்கவில்லையா?
வாங்கிக் கொடுப்பதைவிட நானே என் கைப்படச் செய்துகொடுத்தால் என்ன என்றும் யோசித்ததுண்டு. எனது சுய சிந்தனையில் ஒன்றை உருவாக்கி என் வாழ்நாளில் சில நாட்களை ஒதுக்கிக் கைப்பட செய்து கொடுக்கப்படும் பரிசில்தான் என் உண்மையான அன்பையும் எனக்கான தனித்துவ அடையாளத்தையும் காட்டமுடியும் என்று முயன்றதுண்டு. வாங்கிக்கொடுக்கும் பரிசுக்கும் செய்துகொடுக்கும் பரிசுக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? ஆனால், ஒரு காலகட்டத்துக்குப் பிறகு அவையும் குப்பைக்குத்தான் போயின. பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு இந்தப் பரிசுப் பரிமாற்றங்களெல்லாம்?
பரிசுகள் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒருவரை தனித்தன்மை மிக்கவராக மாற்றிக்காட்டலாம். இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கலாம்; வாய் திறந்து சொல்லமுடியாத ஒன்றை பரிசின் மூலமாகச் சொல்லிவைக்கலாம். ஆனால், இவையெல்லாம் எத்தனைக் காலத்துக்குத் தாக்குப்பிடிக்கும்? இதுதான் என்னுடைய கேள்வி!
என்னிடம் பரிசு கேட்ட அந்தப் பெண்ணுக்கு, பேசாமல் காசாக கொடுத்துவிடலாம் என்று முடிவுக்கு வந்தேன். இதை மொய் அல்லது ’அங்பாவ்’ என்று நிலையில் யோசித்தேன். அங்பாவ் கொடுப்பதில் சில வசதிகள் உண்டு. ஒருவரிடம் இருந்து எதிர்பாராத நிலையில் வரக்கூடிய பரிசுக்கு நிகராக தொகையை கூட்டியோ குறைத்தோ மாற்றிவைத்துக் கொள்ளும் வசதி இதில் இருக்கிறது. அதே நேரத்தில் எதை வாங்குவது எனும் குழப்பம் தேவையில்லை; குப்பைக்குப் போகுமோ எனும் கவலை இல்லை; எந்த சந்தர்ப்பத்திலும் அலட்சியப் படுத்தப்படாமல் இருக்கும்; ஏதாவது தேவைக்குப் பயன்படும் எனும் தற்காப்புக் காரணத்தைச் சொல்லிக்கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இருசாராரிடமிருந்தும் ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். ஆனால், இதிலும் ஒரு வியாபாரமும் அரசியலும் இருக்கவில்லையா? சௌகரியத்துக்கு ஏற்ப தரும் பரிசில் என்ன தனித்தன்மை இருந்துவிடப்போகிறது?
ஒருவருடைய வாழ்வில் விலைமதிக்க முடியாதது எதுவாக இருக்கும்? ஒருமுறை கொடுத்துவிட்டால் திரும்பப் பெறமுடியாதது என்னவாக இருக்கும்? நேரம்தானே? நான் ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கும் பெரிய பரிசு அவருடைய வாழ்க்கையிலிருந்து எனக்கான நேரத்தையே. தபாலில் அனுப்பப்படும் வாழ்த்துச் செய்திக்கும் தோளில் கைபோட்டு வாயாரச் சொல்லும் வாழ்த்துச் செய்திக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளன?
இது நிரந்தரமானது! ஒருவருக்காகச் செலவிட்ட நேரத்தைத் தூக்கிக் குப்பையில் போடமுடியாது. பிறகொருநாள் ஒருவருக்கொருவர் வெறுத்துக்கொண்டாலும் முன்பு செலவழித்த இனிமையான பொழுதுகளை ஓரங்கட்ட முடியாது. இன்று மறந்தாலும் இருபது வருடம் கழித்து ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்மோடு செலவழித்த நேரம் ஒருவரின் நினைவுக்கு வருமானால் அதுதானே நாம் கொடுத்த பரிசின் வெற்றி?
என் குடும்பத்தினருக்காக பரிசென்ற பெயரில் நான் எதையுமே வாங்கிக் கொடுத்ததில்லை. ஆனாலும், குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருடைய பிறந்தநாளுக்கும் நான் வீட்டில் கட்டாயம் இருந்தாக வேண்டும் என்று எனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையின் மூலம் என் வாழ்க்கையில் உரிமை கொண்டாடும் என் பெற்றோரின் நோக்கம் எனக்குப் புரிந்தது. ஒருமுறை தவறவிட்டால் அந்தத் தருணம் மீண்டும் வராது. என் குடும்பத்தில் யாரும் என்னிடம் பரிசு கேட்டது இல்லை. என் வருகையைத்தான் கேட்டிருக்கிறார்கள். என் வாழ்நாளில் அவர்களுக்காகக் கொடுக்கப்படும் நேரத்தைத் தவிர மற்ற எதுவும் எனக்கு மதிப்புள்ள பரிசாகத் தோன்றவில்லை.
அந்தப் பெண்ணிடம் நான் என்னுடைய மிகச்சிறந்த பரிசான நேரத்தைத் தருவதாகச் சொன்னேன். என் மீதான அவளது மதிப்பீட்டை அதிலிருந்து அளவிட்டுக்கொண்டேன்.
என்னுடைய மிகச்சிறந்த பரிசான நேரத்தைத் தருவதாகச் சொன்னேன் SEMMA!!!!!
அருமையாக சொன்னீர்கள் ஐயா. நேரத்தை எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது அல்லவா…….