காதுகள்

download2016ஆம் வருடம், கோடைவெயில் அக்னி நட்சத்திரமாகப் பொரிந்துகொண்டிருந்த மே மாதத்தின் ஒருநாளில், மதுரை, சிம்மக்கல், தைக்கால் தெருவைச் சேர்ந்த விசுவாசியான தன் மாமாவின் வீட்டில் வைத்துதான் குமார் என்கிற ஜெபக்குமாரன் தன்னை கிறித்துவுக்குள் மரிக்கச் செய்து கொண்டான். ஆரம்பத்தில் சற்று விசுவாசமாக இருந்து பின்னாட்களில் தாமசைப்போல எல்லாவற்றுக்கும் சந்தேகம் கொள்கிறவனாகி கிறித்துவின் மீதான நம்பிக்கையை இழந்ததால்தான் அவனுக்கு இந்தக்கதி என்று ஆறுமுகநேரி தேவஊழிய சபையில் அங்கத்தினராய் இருந்த முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த மோசஸ் உறுதியாக நம்பினார். அது அவன் அப்பா. அவன் அம்மா மரியபுஷ்பம் சத்துணவுத் திட்டத்தில் பகுதிநேர ஊழியராக இருப்பவர், அரசு மருத்துவமனையின் வராண்டாவில் உட்கார்ந்து கொண்டு இன்னமும் போஸ்ட்மார்ட்டம் முடித்துத் தரப்படாத தன் மகன், ஆண்டவரை விசுவாசிக்காமல் செய்த தவறுகளுக்காக எப்போதும்போல இறைவனிடத்தில் மன்றாடிக் கொண்டிருந்தாள். அவன் அக்கா அழுது ஓய்ந்திருக்க, மாமா ஆண்ட்ரூஸ், மெனக்கெட்டு ஊரிலிருந்து கிளம்பி வந்து தன்வீட்டில் விஷம் குடித்துச் செத்துப்போன தன் மைத்துனன் மீது வெளிக்காட்டிக்கொள்ள முடியாதபடியும் அன்றைக்கென்று பார்த்து வரிசையாக வந்துவிட்ட பிணங்களின் மீது சற்று வெளிப்படையான எரிச்சலோடும் இருந்தான். நேற்றுவரை ஜெபக்குமாரனாக இருந்ததை கூடுமானவரையில் அதிகம் சேதப்படுத்தாமல் சீக்கிரமாகத் தருவதற்காக நானும் அவனும் அரசு மருத்துவமனையின் பல அறைகளுக்குள் புகுந்து வந்திருந்தோம். வெகுநேரமாய் ஒரேயிடத்தில் நின்றுகொண்டிருந்த நான் அங்கிருந்து நகர்ந்து சென்று புகைக்க விரும்பினேன். ஆனால் வெய்யில் தந்த எரிச்சலும் உலர்ந்த நாக்கும் அம்முடிவைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தன.

                                                                                           * * *

குமாருக்கு என்மீது தனிப்பட்ட மரியாதை இருந்தது. மதுரைக்கு வருகிறபோதெல்லாம் அவன் என் வீட்டிற்கு வரத்தவறுவதில்லை. அவன் மாமாவின் சக ஊழியன், குடும்ப நண்பன் என்பதைக் காட்டிலும் நான், பெரிய, தடித்தடியான புத்தகங்களை வாசிக்கிறவன், எழுதுகிறவன் என்பதால் என்மீது அவனுக்கு மரியாதை இருந்தது. என்னை அதிபுத்திசாலியாகவும் எல்லாவற்றுக்கும் தீர்வு வைத்திருக்கிறவனாகவும் சாவதற்கு முந்தையநாள் வரை நம்பினான் என்று நினைக்கிறேன். இத்தனை வருடப் பழக்கத்தில் என்னைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டான் என்று ஏதோவொரு ஓரத்தில் நான் நம்பிக் கொண்டிருந்தேன் என்பதால் எனக்கும் இது அதிர்ச்சியாகவே இருந்தது. என்மீது நான் வைத்திருந்த மதிப்பீடுகள், என்னை மதிக்கிற, நான் வந்தால் எழுந்து நிற்கிற ஒருவன் எனக்குச் சொல்லாமல், என்னைக் கேட்காமல் செத்துப்போனதில் கொஞ்சம் சரிவு கண்டிருந்தன. எனவே, இச்சம்பவத்தை தர்க்க ரீதியான ஒரு விளக்கத்துக்குள் கொண்டுவரும் முயற்சியிலிருந்தேன்.

குமாருக்கு வயது முப்பத்தைந்து, இன்னும் திருமணமாகவில்லை. வேலை என்று நிரந்தரமாக ஏதுமில்லை. எல்லாவிதமான வேலைகளையும் கொஞ்சநாள் பார்த்துவிட்டு ஒத்துவரவில்லையென விட்டுவிட்டான். வேலையை விட்டு அவன் நிற்பதற்கான அல்லது பெரும்பாலும் அவர்களே இவனை நீக்கி விடுவதற்கான காரணங்கள் விநோதமானவை. அவன் அப்பா ஒரு உப்பளத்தில் ட்ரைவராக இருந்துதான் குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தார். அவர் சிபாரிசு செய்து வாங்கிக்கொடுத்த அந்த வேலையையும் கொஞ்சநாள் பார்த்தான். ஆனால், வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் மாதத்தில் ஒருநாள் உப்பளத்திலிருந்து லோடு ஏற்றிக்கொண்டு வந்து வண்டியை நெடுஞ்சாலையின் ஒருமரநிழலில் சாவியோடு நிறுத்திவிட்டு பஸ்பிடித்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் படுத்துத் தூங்கினான். அந்த வேலையும் பறிபோனது. விநோதமான இவன் செய்கைகளுக்கு அவன் அம்மா பலவிதமான காரணங்களை யூகித்து செபித்துக் கொண்டிருந்தார். அவன் அப்பா அவனை இனி நம்புவதில்லை என்ற முடிவிலிருந்தார். ஊரிலும் மதுரையில் உள்ள அக்கா வீட்டிலும் என்று மாறி மாறி இருந்துகொண்டிருந்தான். ஆண்ட்ரூசும் அவன் குணம் தெரிந்ததால் வேலைக்குப் பெரிதாக முயற்சிகள் ஏதும் செய்யவில்லை.

                                                                                   * * *

இன்னும் எவ்வளவு நேரமாகும் என்று தெரியவில்லை. ஆண்ட்ரூசிடம் இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு மெதுவாக மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியே வந்தேன். சாலையைக் கடந்து எதிரிலிருந்த பெட்டிக்கடையில் இருந்த தண்ணீர்ப்பானையில் தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு சிகரெட்டைப் பற்றவைத்தேன்.

“சார் சூசைட் கேசுதான?”

திடுக்கிட்டுத் திரும்பி கேள்வி வந்த திசையைக் குழப்பத்துடன் பார்த்தேன்.

“அந்த சூசைட் கேசுக்குதான கூடவந்திருக்கீங்க?” குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த காக்கி உடையிலிருந்தவர் மருத்துவமனை ஊழியரென ஊகித்து ஆமாம் என்று தலையசைத்தேன். ”சாயங்காலம் ஆவும் பாடி கெடைக்க. புல்லா ஆக்சிடெண்டு கேசுங்க. ஏளு பாடி. காலைலேருந்து அதான். போலீசக் கவனிச்சீங்கன்னா சீக்கிரம் கெடைக்கும்.”

நான் யோசனையாய் மருத்துவர் மற்றும் மற்ற ஊழியர்களைக் கவனித்த விஷயத்தைச் சொன்னேன்.

“அது ஒண்ணும் ஒதவாது சார். சீக்கிரம் வேணுமின்னா அதோ அங்க இருக்காரே ஏட்டு அவரைப் போய்ப் பாருங்க. ஒன்னவர்ல கெடச்சிடும்.”

நான் மீண்டும் உள்ளே வந்து ஆண்ட்ரூசிடம் விஷயத்தைச் சொன்னேன். எரிச்சலாக, யோசனையுடன் தொலைவில் அமர்ந்திருந்த மாமனாரைப் பார்த்தான். “ஏற்கெனவே கொடுத்திருக்கமே…” என்றான். பிறகு இருவரும் அங்கே அமர்ந்திருந்த ஏட்டைப் பார்த்து நடக்க எங்களைப் பார்த்ததும் அவர் அங்கிருந்து எழுந்து கட்டிடத்தின் பின்பக்கமாக நடந்தார். நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம்.

                                                                                      * * *

குமாரிடத்தில் இருந்த சிக்கல்களுக்கு காரணம் அவன்தான் என்று வெகுநாட்களுக்கு எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தோம். ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகத்தான் அது யார் என்று அவன் வாயிலாகவே எங்களுக்குத் தெரிய வந்தது. ஊரில் அவனது பூர்வீகவீட்டை ஒட்டியிருந்த இடத்தில் அதன் உரிமையாளர் புதிதாக வீடு கட்டினார். வீடு கட்டுமானம் முடியும்வரை ஏதும் பிரச்சினையில்லை சுற்றுச்சுவர் கட்டுவதில்தான் சிக்கல் ஆரம்பித்தது. சுற்றுச்சுவர் இல்லாத தன்னுடைய நிலத்தில், பக்கத்து வீட்டுக்காரர் அரையடி முன்னே அளக்கிறார் என்பது மோசஸ்சின் வாதம். அளப்பது சரியென்பது அவர்களின் வாதம். இருவருடைய பத்திரமும் அவரவருக்குச் சாதகமாக இருந்ததில் கொஞ்சநாள் இழுபறியாக இருந்தது. நானும் ஆண்ட்ரூசும் கூட ஒருமுறை போய்ப் பேசிப்பார்த்தோம். முடிவாக, பக்கத்து வீட்டுக்காரர் போலீசை வைத்துப் பேசி, தேவையெனில் மோசஸ் அந்த அரையடிக்காக வழக்குத் தொடுக்கலாம் என்றும் சுற்றுச்சுவர் கட்டுவதைத் தடுக்கக் கூடாதெனவும் லேசாக மிரட்டப்பட்டார். பக்கத்து வீட்டுக்காரனின் செல்வாக்கிற்கு முன் மோசஸ்சின் தொடர்புகள் எடுபடவில்லை. அதன்பிறகு மோசஸ் வழக்குத் தொடுக்கவும் இல்லை. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல ஆரம்பித்ததே பிரச்சினையில் என்பதால் அதன்பிறகு இருவருக்குள்ளும் சின்னச்சின்ன விஷயங்களுக்கும் பிரச்சினையாகிப் பேச்சு வார்த்தை இல்லாமல் போனது.

இது நடந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகும் ஒவ்வொரு மதுரை வருகையின் போதும் குமார் என்னிடம் மேற்படி ஆளான செல்வத்தின் தொடரும் அட்டூழியங்களுக்காக என்னிடம் வருத்தப்பட்டான். சாக்கடையை தங்கள் வீட்டுப் பக்கம் விடுவது, குப்பையைக் கொட்டுவது என, செல்வத்தை தட்டிக்கேட்க முடியவில்லை என்பதில் உள்ள அவனது இயலாமையும் ஆதங்கமும் கோபமும் வெளிப்படையாகத் தெரிந்தது. இது நடந்துமுடிந்த விஷயம் என்பதால் நான் அதிகமாக அக்கறை காட்டவில்லை. ஆனால் ஒருமுறை குமார் சொன்ன விஷயம் என்னைச் சற்று யோசிக்க வைத்தது. அந்த செல்வம் தன்னைப் பின்தொடர்கிறான் என்றும் தன்னுடைய முதலாளிகளிடத்தில் எல்லாம் தன்னைப்பற்றி இழிவாகச் சொல்லி தன்வேலையைக் கெடுப்பது அவன்தான் என்றான்.

“அன்னிக்கு லோடு ஏத்திக்கிட்டு வரும்போது சொன்னான் சார். நீ வெளிய வந்ததுமே உன் முதலாளிகிட்ட உன்னப் பத்திச் சொல்லிட்டேன். நீ போயிட்டு வந்ததும் உன் வேலை இருக்காது, பேசாம வண்டிய நிப்பாட்டிட்டுப் போன்னு சொன்னான். இனி இவங்ககிட்ட பேசிப் பிரயோசனமில்லேனுதான், வண்டியை நிப்பாட்டிட்டு வீட்டுக்கு வந்திட்டேன்.”

நான் குழப்பமாக அவனைப் பார்த்தேன். தொடர்ந்து பேசியதில், செல்வம் தன்னைத் தினமும் ஏளனமாகப் பேசுவதும் கெட்ட வார்த்தைகளில் ஏசுவதும் பலமாதங்களாகத் தொடர்கிறது என்றான். ஆரம்பத்தில் எப்போதாவது பேசிக்கொண்டிருந்தவன் இப்போதெல்லாம் அடிக்கடி பேசுகிறான். வேலைகளை விடச்சொல்வதும் அவனேதான். இல்லையென்றால் பெற்றோர்களைக் கொன்று விடுவதாக மிரட்டுகிறான்.

“எப்படி? சரியாப் புரியல? அவனா?”

“அவன் குரல்தான் சார். பக்கத்து வீட்டுல இருந்துதான பேசுறான்.” என்றான்.

கொஞ்சநேரத்தில் எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. மறுநாள் அலுவலகத்தில் ஆண்ட்ரூசிடம் அவனுக்குள்ள பிரச்சினையை விளக்கி உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துப்போகச் சொன்னேன்.

அதைத் தொடர்ந்து வந்த மாதங்களில் கொஞ்சநாளுக்கு மருத்துவம் தொடர்வதும் பிறகு அதை நிறுத்திவிட்டு ஆன்மீக முயற்சிகளில் இறங்குவதும் வாடிக்கையானது. அவன் அப்பாவுக்கு மகன் மருத்துவம் செய்து கொள்வதில் விருப்பமில்லை. மோசஸ், தான் கிறித்துவை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து தனக்கும் தன் மனைவிக்கும் மருத்துவரே தேவைப்பட்டதில்லை என்பதைத் தெளிவாக ஆண்ட்ரூசுக்கு விளக்கினார். உடல்நலம் பாதிக்கப்பட்ட சமயங்களில் கூட கர்த்தரின் பரிசுத்த எண்ணெய் அல்லது புனித நீரே போதும். அது எல்லா நோய்களையும் விரட்டிவிடும். ஆண்ட்ரூசால் அவரை மாற்ற முடியவில்லை. அதன்பிறகு எப்போதாவது அவன் மதுரைக்கு வரும்போது மட்டும் மருத்துவமும் ஊரிலிருக்கும்போது  ஜெபமும் தொடர்ந்தது. மாத்திரையை நிறுத்தினால் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அல்லது ஆக்ரோஷமாக யாருடனோ பேசினான். பிரச்சினை அதிகமாவது போல் கேள்விப்பட்டால் ஆண்ட்ரூஸ் அவனைக் கிளம்பி வரச்சொல்லுவார். அல்லது சென்று அழைத்து வருவார்.

                                                                                         * * *

அடுத்த இரண்டு மணிநேரத்தில் கிடைத்துவிட்டது. வெள்ளைத் துணியில் சுற்றி ஸ்ட்ரெச்சரில் கொண்டுவந்து வெளியில் கிடத்தினார்கள். முகச்சாடை மாறி வேறு யாரோ மாதிரி இருந்தான். வாய் லேசாகக் கோணிப்போய் முகம் சற்றே நீலம் பாரித்திருந்தது. உதடு ஒருபுறம் வீங்கினாற்போலத் தெரிந்தது. கண்கள் மூடியிருப்பதற்காக தைக்கப்பட்டிருந்தது. இவ்வளவு நேரம் ஜெபித்துக் கொண்டிருந்த அவன் அம்மா அழ ஆரம்பிக்க மோசஸ்சும் சேர்ந்து கொண்டார். சிறிதுநேரம் கழித்து இருவரும் மீண்டும் அழுகையினூடே ஜெபிக்க ஆரம்பித்தனர்.

அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து,      அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள்       நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.

எனக்கு அவர்களைப் பார்க்க கோபமாக வந்தது. அவன் சாவுக்கு அவர்களும் ஒருவகையில் காரணம். ஆனால் எப்படி அதை உணராமல் அவர்களால் இருக்க முடிகிறது என்று ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை உணர்ந்துதான் அழுகிறார்களோ? அங்கிருந்து நகர்ந்து அமரர் ஊர்தி ஓட்டுபவரோடு பேசிக்கொண்டிருந்த ஆண்ட்ரூஸை நோக்கி நகர்ந்தேன்.

                                                                                      * * *

கடைசியாக அவன் வந்தபோது என்னைப் பார்க்கவில்லை. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் வந்திருந்தபோது அவன் மட்டும் தனியாக என்னைப் பார்க்க வந்திருந்தான். சுவாதீனமாக என் அறைக்குள் வந்து படுக்கையிலிருந்த தலையணையை நகர்த்தி வைத்துவிட்டு உட்கார்ந்து கொண்டான். சற்று இளைத்துக் கருத்திருந்தான். நிறையக் குடிக்கிறான் என்று அவன் அம்மாதான் அவனை அனுப்பிவிட்டிருந்தார். நான் அதைப்பற்றிக் கேட்காமல், உடல்நலம் குறித்து விசாரித்தபோது ‘இருக்கேன் சார்’ என்றான். மாத்திரையைப் போட்டால் தூக்கம்தான் வருகிறது, வேறு வேலை எதுவும் செய்ய முடியவில்லை என்றான். மாத்திரை போடாவிட்டால் குரல்கள் அதிகரிக்கின்றன என்றான். இப்போது நிறையக் குரல்கள். அப்பாவுக்கு தான் மருந்து சாப்பிடுவதே பிடிக்கவில்லை என்றும் கர்த்தரை விசுவாசிக்கும்படியும் ஆண்டவர் மீது அவன் உண்மையான நம்பிக்கை கொள்ளும் நாளில்தான் இதிலிருந்து விடுபட முடியும், அவருக்கெதிரான கேள்விகளே சாத்தான், அதுவே கர்த்தரிடமிருந்து உன்னுடைய நம்பிக்கையைத் துரத்துகிறது என்று உபதேசிப்பதைச் சொன்னான்.

“ஆனா, அது என்னால முடியல சார். கேள்வி வரத்தான் செய்யுது.” என்றான். “ரெண்டு மனசாக் கெடந்து அலையுது சார். எது சரின்னு தெரியல. அப்பா சொல்றதக் கேக்கவா? இல்ல மாமா சொல்றதயா? இல்ல அக்கா சொல்றதயா?”

அவன் அக்கா, ஆண்ட்ரூசின் மனைவி, இது பக்கத்து வீட்டுக்காரன் வைத்த சூனியம் என்று தீவிரமாக நம்பினாள். அதற்கான தனிச்சடங்குகள் வேறு இவன் வரும்போதெல்லாம் நடந்தது.

“அம்மா என்ன சொல்றாங்க?”

“செபிச்சுட்டே கெடக்காங்க சார். அப்பா சொல்றது சரின்னுதான் நெனக்கிறாங்க போல.”

“பக்கத்து வீட்டுக்காரனோட ஏதும் பிரச்சினையில்லையே?”

“இல்ல சார். அதெல்லாம் இல்ல. அவன் எங்கயோ வெளியூர்ல வேல பாக்குறான் போல சார். எப்போதாவதுதான் வரான். அப்பாவும் சரி, நானும் சரி கண்டுக்காம ஒதுங்கியேதான் இருக்கோம்.”

“பேசாம இங்கயே இருக்கலாமில்ல. நாலஞ்சுநாள் மேல தங்க மாட்டேன்ற. எதுக்கு இப்படி அல்லாடணும்? வைத்தியமும் தொடர்ந்து நடக்கும். அங்கபோனா மாத்திரையை விட்டுர்ற. வேலைவெட்டிக்கும் போகமுடியல. வீட்டுலயேதான் கெடக்க.”

“அப்பா, அம்மா தனியா இருப்பாங்களே சார்.” என்றவன் சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு, “பேசாம காது கேக்காத மாதிரி ஏதாவது செஞ்சிட்டா பிரச்சினை இல்லேல்ல சார்?” என்றான்.

நான் திடுக்கிட்டு அது காதில் கேட்பதல்ல, மூளையில் உற்பத்தியாவது என்று விளக்கினேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டான்.

“இது நிஜமில்லைனு நம்பு. மறுபடி மறுபடி சொல்லிக்கோ. உனக்குள்ள அந்தப் புரிதல் வரணும். பேசறது அவனில்லை. உண்மையில் யாரும் பேசவே இல்லை. பேசுறதா மனசு நம்புது. அழுத்தத்துனால மனசு தானா உண்டாக்கிக்கிட்ட கற்பனை. அது கேக்குற கேள்விக்கு பதில் சொல்லாதே. அது சொல்றத செய்யாதே. நல்ல விஷயங்கள்ள, உனக்குப் பிடிச்ச விஷயங்கள்ள கவனம் செலுத்து. காதே இல்லன்னாலும் இது கேக்கத்தான் செய்யும்னு புரிஞ்சுக்கோ. ஏன்னா இது வெளியில இருந்து வரலை. உள்ள இருந்து வருது. உனக்குள்ள இருந்து. புரியுதா?”

“டாக்டரும் இதையேத்தான் சொல்றாரு.”

மெதுவாய் தலையாட்டியபடி புன்னகைத்து விட்டு எழுந்து விடைபெற்றுச் சென்றான்.

இது உண்மையில்லை என்று எல்லோரும் சொன்னாலும் உண்மையல்ல என்று அவனே நம்ப நினைத்தாலும் கூட அந்தக் கணத்தில் அது தரும் உண்மை போன்ற தோற்றத்தின் அழுத்தமும் அதிலிருந்து வெளிவர அவன் கொள்ளும் மனப்போராட்டம் குறித்தும் தீவிரமாக யோசித்தபடி நெடுநேரம் படுக்கையிலேயே கிடந்தேன்.

                                                                                         * * *

மோசஸ்சும் அவர் மனைவியும் அக்காவும் முதலில் வேனின் பின்பக்கம் ஏறிக்கொண்டார்கள். உடல் வண்டியில் ஏற்றப்பட்டது. கால் மோசஸ்சின் அருகில் இருக்க தலை அவன் அம்மாவின் அருகில் இருந்தது. அம்மா அவனது நெற்றியை வருடியபடி இருந்தாள். இப்போது யாரும் அழவில்லை. மோசஸ் மெல்லிய குரலில் ஏதோ சொல்ல திரும்பிப் பார்க்காமல் தலையை அசைத்தாள். அவளது கை குமாரின் நெற்றியை வருடியபடி இருந்தது. ஆண்ட்ரூஸ், புத்தகமொன்றில் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு வண்டியின் முன்பக்கம் ஏறிக்கொண்டான். என்னைப்பார்த்துப் போய்வருகிறேன் என்பதுபோலத் தலையசைத்தான். நானும் பதிலுக்குத் தலையசைத்துவிட்டு உடன் வரமுடியாததற்கு வருத்தம் தெரிவித்துவிட்டுப் பின்னால் நகர்ந்து நின்று கொண்டேன். வண்டி மெதுவாக அசைந்து மருத்துவமனையை விட்டு வெளியேறியது.

நான் அங்கிருந்து வெளியே நிறுத்தியிருந்த வண்டியை எடுக்க நடந்தேன்.

“ஆச்சா சார், நீங்க போகல போல.” கடையில் பார்த்த அதே மருத்துவமனை ஆள்.

“இல்ல பையனுக்கு ஒடம்பு சரியில்ல. ஒய்ஃப் தனியா அவனப் பாத்துக்க முடியாது.” என்று சொல்லிவிட்டு ஏன் இதைச் சொன்னேன் என்று யோசித்தேன்.

“கம்மி வயசு ஆளுதான், இல்ல சார்,” என்று என்னிடம் சொல்லிவிட்டுப் பதில் எதிர்பார்க்காமல் பக்கத்திலிருந்தவனிடம் பேச ஆரம்பித்தான். “பால்டாயிலு. குடிச்சதோட இல்லாம காதுல ஊத்திகினான். நேரா சல்லுனு மூளைக்கு ஏறிட்ச்சு. கொண்டு வர்றப்பவே பொணந்தான்.”

“அவ்ளோதான் என்ன பண்றது? லவ் பெயிலியரா சார்?”

நான் சிலநொடிகள் தயங்கி பேசாமல் நின்று கொண்டிருந்துவிட்டு வண்டியை நோக்கி நடந்தேன்.

2 comments for “காதுகள்

  1. பாலா கருப்பசாமி
    July 3, 2016 at 1:23 am

    ரிஷி என்பவருடைய மலச்சட்டி என்றொரு சிறுகதை. பதட்டம், பயம், ஏமாற்றம் ஏற்படும்போதெல்லாம் அடிவயிற்றைப் புரட்டிக்கொண்டு மலம் கழிக்கவேண்டும்போல் அவனுக்குத் தோன்றும். எல்லா விஷயங்களும் உளவியலோடு வந்து முட்டிக் கொள்கின்றன. மனம் மிகச் சின்ன விசயங்களைப் பெரிதாக்கவும் பெரியதைச் சிறிதாக்கவும் லென்ஸ் வைத்திருக்கிறது. சுழலைப் போல அதற்குள் சிக்கிக்கொண்டால் கடினம்தான். கதை நன்றாக வந்திருக்கிறது ஸ்ரீதர். கொஞ்சம் வேகமாய்ப் போனது போலிருக்கிறது. தலைப்பு வேறு வைத்திருக்கலாம். 🙂

  2. July 12, 2016 at 12:16 am

    நல்லா எழுதியிருக்கீங்க… தரம் சிறப்பு … கண்முன்னால் எல்லாம் விரிகிறது. தொடருங்கள்…………

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...