நேசமித்ரன் கவிதைகள்

nesamithran

ஒளியை முத்தமிடுதல்

மந்திரவாதியின் தொப்பிக்குள்
இருந்து மேலெழுகிற துயரநாளின் நிலவு
வன்புணர்ந்து மனம்பிறழ்ந்தவள்
மீண்டும் மீண்டும்
சொல்லும் சொல்லாய் அலைமிதந்தேறுகிறது
யாருமற்ற தீவில்
பச்சோந்தி மரணநிலையில் கொள்ளும்
நிறத்தில் உள்ள நிர்வாணத்துடன்
உடன் பயணிக்கிறது தப்பிய விண்மீனின் கிரணம்
அவ்வொளிக் கற்றை
அத்துணை ஒளிஆண்டுகள் கடந்து
பூமியைச் சேர்ந்த போது
அந்த நட்சத்திரம் எரிந்து போயிருந்தது
நான் அதன் ஒளியை முத்தமிட்டேன்
மரத்தின் ஊனத்தில் பெருகும்
பிசின் நிறத்தில் செருகப்படும் ஊசியால்
வெப்பத்திற்கு ஒளிரும்
கூண்டுக்குள் இருக்கும் பறவையின்
கர்ப்பத்தை அனுமதிக்கிறவனின்
கருணைப் புன்னகை காகிதம் தைக்கும்
டங்ஸ்டன் இழைகளால் ஆனது
சாத்தான்  தன் ஆணுறையை மறந்துவிட்டு
வந்திருக்கிறான்  
கடவுளின் அந்தப்புறத்தில்
யானைகளின் பாதங்களோ
நிலத்துள் நகரும் நீரோடு
ஒரு தகப்பனின் செவி போல்
பொத்தப்பட்டிருக்கின்றன
அந்த நட்சத்திரம் எரிந்து போயிருந்தது
நான் அதன் ஒளியை முத்தமிட்டேன்.

* * *
காலையுணவுக்கு காலத்தின் விள்ளல்

கரணம் தப்பினாலும் மரணமற்ற
விண்வெளி ஓடத்தில் மிதக்கும் அவள்
தன் பற்களைத் துலக்கி
எச்சிலை தானே விழுங்க
வேண்டி இருக்கிறது
ஈர்ப்பற்ற வெளியில்
சிறுநீரை உறிஞ்சுவதைப் போலவே
விடாய் நாட்களிலும் உறிஞ்சும்
கழிவுக் குழாய் ஒரு மாபெரும் படிமம்
இரண்டு நட்சத்திரங்களிடையே
பயணிக்கும் அப்படகின்
வயது பூமி சுற்றுவதைக்  கொண்டே
வளர்கிறது
வெளியுலாவி மீண்டு
தலைக்கவசத்தை கழற்றும் போது
வாய்க்கும் ஆசுவாசம்
இரட்டைக்குழந்தைகளின் பிரசவத்தில்
கர்ப்பவாயிலில் இருந்து
ஓர் சிசுத்தலை வெளியேறுவது
இன்று நெஞ்சு வலித்ததாய்
டைரிக் குறிப்பெழுதினாள்
பொங்கும் கருந்துளை
செற்று
ஒளிவட்டங்களை கடப்பது
இலக்குகளை எளிதில்
நெருங்க வைக்கும்
கார்த்திகை நாளில் நகரத்தின் மேல பறக்கும்
பறவையின்கண்
வீதியெங்கும் ஒளிரும்
காலையுணவுக்கு காலத்தின் ஒரு விள்ளல்  
உடற்பயிற்சியும் கூட்டு உணவும்
வடிகட்டிகளை குடல்விலக்கம் செய்வதில்
கழியும் வார இறுதிகள்
ஒரு புதிய நட்சத்திரத்திற்கு
பெயரிடுவதில் கழிந்தது நேற்று  
இந்த ஜன்னல் கண்ணாடிகள்
சமயத்தில் முகம்பார்க்கும் கண்ணாடிகளாகவே
உறைந்து நிற்பது தற்செயல் அல்ல
இன்று அவர்கள் பார்த்த விண்கல்
ஒரு மண்டையோட்டைப் போல் இருந்தது
ஸ்வஸ்திக் வடிவத்தில்
ஒரு நட்சத்திரக் கூட்டம் பார்த்தார்கள்
சூரியனின் மூச்சில் துர்வாடை
அடிப்பதாய் பேசிக் கொண்டார்கள்
இரவற்ற பகல் என்றொரு கவிதை
எழுதினாள் நேற்று
தெர்மல் இன்ஃப்ராரெட் காமிராவில்
செல்ஃபி  எடுத்துக் கொண்டார்கள்
அனைவரும்  
மிதந்தபடி உறங்கிப் போனார்கள்
ஒரு நாள் கழிந்தது

* * *
தீ வாட்டும் பறை கசியும் வாசனை

வெண்பன்றியின் முலைக்காம்பு நிறத்தில்
தந்தியை மீட்டி மீட்டிச் சிவந்த விரல்
மன்னாப்பிசின் தடவிய நாக்காய்
பசி தின்று பசி மரத்த புலன்
மேகமாயிற்று
வெயில் மழைநாளில் சூரியன்
இலட்சங்கால் ஜெல்லி மீன்,
ரோமக்காடோ ஆகாசம் நோக்கி மிதக்கிறது
லார்வாவின் நரம்பில் நெசவாகும்
மயில்கண் வசீகரம்
பிறிதோர் சருமப்புணர்வில் தோன்றும்
முதற்கலவி மஞ்சள்பூசிப் பழகிய
பொன்வண்டு அடிவயிறொத்த முகம்
பாவமன்னிப்புக் கூண்டுக்கு அந்தப் புறம்
பிரார்த்தனை நேரத்து ஆகாயம்
வானவில் அங்கி அணிந்த திரிசங்கு தேவதை
செவிகளுடன்
தீ வாட்டி வார்பிடிக்கும் மரத்தோல் வாத்தியப் பறை
கசியும் வாசனை
நிலத்தின் பச்சையம் விரவிய
வியர்வையின் கஞ்சாப் புகையரும்பல்
பாசிப்பீழை படிந்த நாணல் புதர்வழி
தப்புவது போல் கடக்கும் நீர்ப்பாம்பின்
உடல்மீது பச்சை குத்துவது போல்
நா படர்த்துகிறது நிலாப்பிறை
கீறியமரத்திலிருந்து பெருகிச்சொட்டும்
ரப்பர்பால்
குவியும் மகவின் உதட்டுக்கு காம்பாகும்
நாளின் மீதான கனாவில்
வரிகள் அடர்ந்து முத்து வளர்க்கும்
சிப்பி இமைகள் தியானத்திலிருக்கும்
நுரையற்ற உப்புக்கடல்
தன் முட்டைகளைத்தானே உண்ணும்
மீனின் கருப்பைக்கு அருகே இருக்கும்
இரைப்பை
சுரக்காத முலைகளுடன்
ததும்பும் என் குறி  

* * *

செம்மீன்களை பின் தொடர்பவர்கள்

நறவப்பூவில் வடித்த கள்
மூங்கில் குடுவைகளின் அடிவயிற்றை
தொட்டு நிற்கிறது
நண்டும் பீர்க்கங்காயும் புசித்தவர்கள்
உலர்மீன் விற்க நகர் சென்றிருக்கிறார்கள்
உப்பங்கழிகளில் பூக்கும் மலர் பறித்து
வரச் சென்ற சிறுமி ஒருத்தி விலா பற்றி அமர்ந்ததில்
சிவந்தது உப்பு வயல்
கடல் கர்ப்பந்தரிக்கும் பருவங்களில்
பிளாந்தன் இலைகளின் கீழ் மீன்கள்
முட்டையிட்டிருக்கும்
நீ ஓர் இடம்புரிச்சங்கில் உதிரம் தொட்டு
எழுதியிருந்த என் பெயர்
எழுத்துப் பிழையோடிருந்தது
வயலாமைகளின் இறைச்சியுடன்
உண்ணும் கள் நாட்களில்
சகலரும் உறங்கிய பின்னிரவில்
ஆகாயத்தாமரை புதர்களிடையே முத்தமிட்டாய்
நன்னீர் நீர்க்குழிகளில் நீர் சேந்தி
வருபவர்கள் தற்கொலை செய்து
இறந்து கொண்டிருந்த நாட்களில்
கொடிக்காய்ந்த உள்ளாடைகளில்   
உன் வியர்வை வாசனை
பிறகான பிறைகளில் அவர்கள்
வந்தார்கள்
கூடுகளில் மீன் பிடித்தவர்கள்
எந்திரங்களுக்கு மாறிய நாட்களில் வந்த தூமகேது
அன்றும் வந்தான்
எல்லாம் மாறிற்று
திரைகடலோடி திரும்பி வந்திருக்கும் பிரியனே
பூதனையின் மார்கச்சை போல் இருக்கும்
இக்கோபுரங்கள் குறித்துச் சொல்ல
எனக்குக் கதைகள் மெத்த உண்டு
போலவே
இரவில் செம்மீன்களை பின் தொடர்ந்து செல்பவர்கள்
மீள்வதே இல்லை
மீத்தேன் குழிகளில் இருந்து பால்யத்தில் பார்த்த
ஆளுயர் நெருப்பு போல் பற்றி எரியும்
படகுகள் கடல் மிருகங்களின்  சொக்கப் பனை
நம் செய்திகள் மானியங்களோடு
முடிந்து விடுகின்றன  
கல்மீனின் முள்விஷம்
உன் சமிக்ஞைகள்
மெல்லக் கொல்லும்
நீர்தீர்ந்து வாயிலில் நிற்கும் சிசுவின் தலை
பிறப்புக்கும் இறப்புக்கும் நிற்கும்
இந்த நிலா மற்றும் என் காமம்
நீயோ  காயும் வலைகளை மொய்க்கும்
கரை நாய்களின் சிநேகிதன்
ஆமைகளின் கடல்வழிப் பாதை குறித்துப்
பேசிய நாளில்
எண்ணெய்க் கப்பல் எரிந்து
ஜெல்லி மீன்கள் கரையேறின
மாங்குரோவ் புதர்களில்  
உன் நீள்நகம் உடைந்து
என் காம்பொன்று அறுந்தது
தகப்பனோ சாலமன் மீன்களுடன்
கரை மீண்டான்
ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி
சந்தைக்கரையில் சிவப்புக் கொடி பறக்கிறது
எப்போதும் போல்  
செம்மீன்களை பின் தொடர்பவர்கள்
பெரிதும் மீள்வதே இல்லை
மீண்டால் இடுகாடு புகைய
செங்கொடி பரப்புகிறது கரை
உனக்கு நல்வரவு !

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...