மகள் மறுத்தல்

மகள் மறுத்தல்‘தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற வரிகளுக்கேற்ப பூர்வீகத் தமிழ்க்குடிகள் தன்மான உணர்வுடன் கோலோச்சி வாழ்ந்த வரலாறு நாம் அறிந்த ஒன்றுதான். பொதுவாகச் சங்க இலக்கியங்களை நோக்குங்கால், சீறூர் மன்னர் பெருவேந்தர் என இரண்டு ஆளுமைகள் மக்களை வழிநடத்தியதைக் காண்கின்றோம். இவ்விரு ஆளுமைகளுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் இருப்பதும் அவரவர் செயல்களைக் கொண்டு அறியமுடிகின்றது. சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களது படைபலம், அரசியல், கொடை, ஆட்சிப்பரவல் குறித்துப் பரவலாக அனைவரும் அறிவர். இவர்களன்றி இம்மண்ணில் சீறூர் மன்னர் என்ற அடையாளத்துடன் தத்தம் குடிகளை வழிநடத்திய ஒரு கூட்டமும் இருந்துள்ளது. இவர்களது பண்புகள் வேந்தர்களை விடப் பலமடங்கு உயர்ந்து விளங்கியதாகச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. அவ்வகையில் வேந்தர்கள் – சீறூர் மன்னர்களிடையே நிலவிய பண்பாட்டு அரசியலை விளக்கிட முற்படுகிறது இக்கட்டுரை.

மகள் மறுத்தல்

சங்ககால இனக்குழு மக்கள் கொண்டிருந்த வீரம்செறிந்த புறப்பண்புகளில் ஒன்றே மகள் மறுத்தல். இக்குணம் இவர்களை போராட்டக் குணமுள்ளவர்களாக அடையாளப்படுத்துகிறது. தம்மிடம் பெண்கேட்டு (மகட்கொடை) ஆதிக்கம் செய்யும் பண்பற்ற வேந்தரின் அச்செயலை சீறூர்மன்னர் எதிர்த்துத் திமிறியெழுந்ததையும், அவ்வேந்தர்களைத் திருப்பியடித்ததையும் மகள்மறுத்தல் துறைசார்ந்த பாடல்கள் விவரிக்கின்றன. அவ்வகையில், சங்க இலக்கியங்களில் இடம்பெறும் மகள் மறுத்தல், மகற்பாற் காஞ்சி போன்ற துறைகளமைந்த பாடல்கள் வேந்தன் ஒருவன் சீறூர் மன்னர்களிடம் (மருதநிலச் சீறூர் மன்னனிடம் / குறுநில மன்னரிடம்) பெண்கேட்டுச் செல்லுதல், அதற்குச் சீறூர்மன்னர் பெண் தர மறுத்தல், அதனால் ஏற்படும் போர்; ஊர்களின் அழிவு போன்ற தீங்குகளையும் சுட்டுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளால் ஆங்காங்கு நிலைபெற்றிருந்த சிறுசிறு இனக்குழுத் தலைமைக்கும், அவர்களது தனித்த அடையாளத்திற்கும் பேராபத்து ஏற்படுகின்றது. இத்தகு சூழல் இருப்பினும் சீறூர் மன்னர் பின்வாங்கியதாகச் செய்திகளில்லை. சிறு படையேயாயினும் அதைக்கொண்டு பெருவேந்தரை எதிர்கொண்டனர். சான்றாக, பறம்பு மலையினை ஆண்டுவந்த சீறூர் மன்னனான பாரியின் செல்வாக்கினைக் கண்டு அஞ்சிய மூவேந்தர்கள் ஒன்றுகூடி அவனை எதிர்த்தனர் என புறப்பாடல்கள் விவரிக்கின்றன. இறுதிவரை மண்டியிடாது பெரும்படைகளை எதிர்த்துப் போரிட்ட பாரியைச் சூழ்ச்சியினால்தான் எதிரிகள் வென்றனர். இதுபோன்றே ஏனைய சீறூர் மன்னர்களும் வீழ்ந்துவிடாத வீரமும் மண்டியிடாத மானமும் கொண்டு விளங்கினர்.

முரண்பட்ட சமூக, அரசியல் சூழலில் சிக்கல்கள் தோன்றுவது இயல்பானதே. அவ்வகையில் எழுந்த சிக்கல்களே ‘மகற்பாற் காஞ்சி, மகள் மறுத்தல்’ ஆகிய துறைகளுக்கு வித்திட்டது. சிறுநில மன்னர்களான இவர்கள் பெருநில வேந்தர்களே பெண் கேட்டு வந்தாலும் பெண் தர மறுத்துப் போர் புரியும் முடிவுக்குத் துணிகின்றனர். இருப்பினும் படைபலம் மிக்க வேந்தர்களின் ஆதிக்கப் போக்கிற்குச் சிற்றூர்களில் கோலோச்சிய முதுகுடிச் சீறூர் மன்னர்கள் பலிகடாவாகினர். இதற்கு மகள்மறுத்தல் ஒரு முக்கியக் காரணமானது. இவர்களின் மகள் மறுக்கும் மாண்பைப் பற்றித் தொல்காப்பியம் பின்வருமாறு சுட்டுகின்றது.

“நிகர்த்து மேல்வந்த வேந்தனோடு முதுகுடி

        மகட்பாடு அஞ்சிய மகட்பால்”    (தொல்,புறத்:24)

என்ற தொல்காப்பியக் கூற்று மேல்குறிப்பிட்ட கருத்தை உறுதிப்படுத்துகிறது. அதாவது, முதுகுடித் தலைவன் மகளை மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற பெருவிருப்புடன் படையோடு வந்த வேந்தனுக்கு மகளைத் தரமறுத்தலே மகட்பாற் காஞ்சியாகும். “ஒத்து மாறுபட்டுத் தன்மேல் வந்த வேந்தனொடு தன் தொல்குலத்து மகட்கொடை அஞ்சிய மகட்பாற் காஞ்சி” என்று இந்நூற்பாவிற்கு உரைவிளக்கம் தருகின்றார் இளம்பூரணர். மகள் மறுத்தல் எனும் செயல் இனக்குழுக்களின் மானம் போற்றும் மறப்பண்பினைக் குறிப்பதாயினும், அதன் பின்விளைவு பல சிற்றூர்களின் அழிவிற்குக் காரணமானது. மகள் மறுக்கும் பெண் வீட்டாரை எதிர்த்துப் படையுடன் போர்தொடுக்கும் வேந்தனுக்கு ஈடுகொடுக்க இயலாமல் பல முதுகுடிச் சீறூர் மன்னர்கள் தோல்வியுற்று வீரமரணம் அடைகின்றனர். அவர்களது சிற்றூர்கள்; தீயிட்டும், யானைக் கூட்டங்களால் நாசம் செய்யப்பட்டும் சீரழிக்கப்பட்ட நிகழ்வுகளைப் புறப்பாடல்கள் விவரிக்கின்றன. அத்தோடு கழுதை ஏர்பூட்டி உழுவதும், தோல்வியுற்ற மன்னனின் ஊரிலுள்ள பெண்களின் தலைமயிரால் கயிறு திரித்து அவ்வூரின் யானைகளைக் கட்டி இழுத்து வருவதுமான செயல்கள், வேந்தர்கள் சிற்றூர் மன்னர்கள் மீது கொண்டிருந்த கடுஞ்சினத்தின் வெளிப்பாடாகத் தெரிகிறது. மகள் மறுத்தல் எனும் இந்நிகழ்வினால் மருதநிலத்தினில் இருந்த பல சீறூர்கள் அழிவுற்றன. பின்வரும் பாடல்கள் அதற்குச் சான்றுபகர்கின்றன.

“களிறு பொரக் கலங்கிய தண்கயம் போல,

            பெருங்கவின் இழப்பது கொல்லோ    (புறம் 341:17-18)

“மரம்படு சிறுதீப் போல

            அணங்கு ஆயினள் தான்பிறந்த ஊர்க்கே”   (புறம் 349:6-7)

மேற்கண்ட அடிகள் பெண் தர மறுப்பதால் ஏற்படப்போகும் சண்டையில் ஊரே அழியும்நிலை குறித்து விளக்குகின்றன. பெண்ணின் பொருட்டு மன்னர்கள் பகை கொண்டெழுந்ததையும், அப்பகையால் நாடே அழியும் நிலை ஏற்பட்டதையும் விவரிக்கின்றன. அழகிய வயல்களைக்கொண்ட இவ்வூர், நாளை யானைக்கூட்டங்கள் மோதிக்கொள்வதால் தம் அழகினை இழக்குமே என்றும்; பெண், தான் பிறந்த ஊருக்குத் தீப்போல் ஆனாள் என்றும் நாம் அறியமுடிகிறது.

“யார்மகள்? என்போய்; கூறக் கேள், இனி

            குன்றுகண்டு அன்ன நிலைப்பல் போர்பு

            நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை

வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்

            தொல்குடி மன்னன் மகளே; முன்நாள்

            கூறி வந்த மாமுது வேந்தர்க்கு”   (புறம் 353:7-12)

அழகிய அணிகளை அணிந்து மயிலின் சாயலை ஒத்து நடந்து செல்லும் இவளைக் கண்டதும்; தேரை நிறுத்தி, அவளையே பார்த்தவண்ணம் யார் மகள் இவள் என வினாவுகின்றாயே, மலை போன்ற நெற்குவியலைக் கொண்டவரும், தம் வீரர்க்கு குறைவின்றி அவற்றைக் கொடுப்பவரும், தம் குடிப் பெண்களைக் கேட்டு வந்த வேந்தரை போர்க்களத்தில் வீழ்த்தியவரும் இவளது தமையன்மார்கள். அத்தகைய மருதநிலச் சீறூர் மன்னன் மகள் இவளாவள் என்று பாடல் நீள்கின்றது.  இப்பாடலில் வேந்தர்கள் பெண்கேட்டும் சீறூர் மன்னர் தர மறுத்த செயல் சுட்டப்படுகின்றது.

 “…………………………இவள் தன்னைமாரே

            செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி

            நிரல் அல்லோர்க்குத் தரலே இல் என

            கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்

            குழாஅம் கொண்ட குறுதிஅம் புலவோடு

            கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்

            இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ

            என் ஆவதுகொல் தானே

            பன்னல் வேலி இப்பணை நல்லூரே”    (புறம் 345:12-20)

பல வேந்தர்கள் இப்பெண்ணை விரும்பி மணம்செய்ய வந்தனர். ஆயினும் இவள் தமையன்மார்கள் அவ்வேந்தர்கள் தரும் பொருளை விரும்பாதவர்கள். அதற்குப் பதிலாகப் போரை விரும்பி ஏற்பவர்கள். பண்புடையோர்க்கு அன்றி வேறு எவருக்கும் அவர்களது பெண்ணைத் தரோம் என மறுத்துரைப்போர். இருப்பினும் இப்பெண்ணால் இவ்வூர் என்ன நிலைக்கு ஆளாகுமோ என மேற்கண்ட பாடல் குறிப்பிடப்படுகிறது. இந்நிகழ்வு வேந்தரை எதிர்க்கும் மறக்குடியினரின் வீரத்தைச் சான்று பகர்கின்றது.

            “வென்று எறி முரசின் வேந்தர் என்றும்

            வண்கை எயினன் வாகை அன்ன

            இவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்

            என் ஆவதுகொல் தானே தெண்ணீர்ப்

            பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை

            தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின்

            காமரு காஞ்சித் துஞ்சும்

            ஏமம் சால் சிறப்பின் இப்பணை நல் ஊரே”    (புறம் 351:5-12)

வேந்தர்களை எதிர்க்கும்போது உண்டாகும் சண்டையினால், வளம்மிக்கப் பல மருதநில ஊர்கள் பாழ்பட்டன. அதனால் புலவர்கள் அவ்வூரினைக் குறித்த அச்சத்தினால் இவ்வூர் என்னாகுமோ என்றுரைப்பதாகப் பல பாடல்கள் காணப்படுகின்றன. மகள்மறுத்தல் தொடர்புடைய பாடல்களில் பெண்ணின் திருமணமே பாடுபொருளாக அமைவதால், அதற்குக் காரணமான பெண்ணின் பேரழகு பாடல்களில் பெரிதும் புனையப்பட்டுள்ளது. வேந்தனாக இருந்தும் போர் தொடுத்துத் தன்னுயிர் கொடுத்தாவது அடையத் துடிக்கும் ஒரு பெண்ணைப் பேரழகியாகக் காட்டுதல்தானே பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் இத்துறையின் பாடல்களில் பெண்ணழகைப் புனையத் தவறவில்லை.

“பாரி பறம்பின் பனிச்சுனை போல

            காண்டற்கு அரியன் ஆகி மாண்ட

            பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய

            துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென

            அகில் ஆர் நறும்புகை ஐதுசென்று அடங்கிய

கபில நெடுநகர் கமழும் நாற்றமொடு

            மனைச் செறிந்தனளே வாணுதல் இனியே

            …………………  ………………………   …………………….

            யார் ஆகுவர்கொல் தாமே நேரிழை

            உருத்த பல்சுணங்கு அணிந்த

            மருப்பு இள வனமுலை ஞெமுக்குவோரோ?”  (புறம் 337:6-22)

இங்கு பாரியினது பறம்பு மலையினில் உள்ள பெண்ணின் அழகு சுட்டப்பட்டு, இத்தகு அழகுடைய இவளை கொள்வார் யாரோ என விவரிக்கப்படுகிறது. இதன் வாயிலாக பேரழகு பொருந்திய இவளால் இவ்வூருக்கு நேரப்போகும் விளைவு குறித்து ஆரூடம் கூறுவது போல் இப்பாடல் அமைகின்றது.

“நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்

            கடிய கூறும் வேந்தே; தந்தையும்

            நெடிய அல்லது பணிந்து மொழியலனே

            ….மரம்படு சிறுதீப் போல

            அணங்கா யினள்தான் பிறந்த ஊர்க்கே”   (புறம் 349:1-7)

இப்பாடலில் பெண்ணின் வளர்ப்பும், வனப்பும், கண்டோர் வியக்கும் வண்ணம் அமைந்து, ‘இத்தகு பெருமைக்குரிய பேரழகியைப் பெறப் போகிறவர் யாரோ?’ என்று கேட்கும் விதமாக, இனக்குழுவின் குறைவுபடாப் பெருமிதம் காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பெண்ணின் பேரழகே, வளமான இவ்வூருக்குப் பகையானது என்று புகழ்வதுபோல எதிர்மறையில் சுட்டப்படுகிறது. இன்றும் சிற்றூர்களில் பாடப்படும் நாட்டுப்புறப்பாடல்களில் பெண்குழந்தையின் அழகினைப் புனைந்துப் பாடுவதும், இத்தகு அழகு யாருக்குச் சொந்தமாகப் போகிறதோ? எனப் பாடும் மரபு காணப்படுகிறது. ஓர் அரசன் ஒரு குறிப்பிட்ட பெண்ணை அடைந்தே தீருவேன், இல்லையென்றால் போரிட்டு வீரமரணம் அடைவேன் என்று நெடுமொழி கூறுகின்றான். அதன்படி பெண்கேட்டுச் சென்று ஏமாற்றம் அடைகிறான். அதன் பிறகு நிகழும் மோசமான நிகழ்வுகள் அவ்வூர் அழிவிற்குக் காரணமானது. இதனை,

“….அவளோடு நாளை

                  மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ

                  ஆர் அமர் உழக்கிய மறங்கிளர் முன்பின்

                  நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு

                  வாரா உலகம் புகுதல் ஒன்று எனப்

                  படை தொட்டனனே குரிசில்”   (புறம் 341:11-16)

இவ்வாறு சூளுரைப்பதற்குக் காரணம் உண்மையில் அப்பெண் மீதான காதலா? இல்லை, ஆதிக்க உணர்வா? ஆட்சி பரப்பினை விரிவுப்படுத்தும் தந்திரமா? எனப் பல கோணங்களில் சிந்திக்க இங்கு இடமுள்ளது. மேற்கண்ட பாடல் வரிகள், ‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்ற திரைப்படத்தின் புகழ்பெற்ற வரிகளை  நமக்கு நினைவூட்டுகின்றது. அக்காலச்சமூக எச்சத்தின் தொடர்ச்சியாகவே இவ்வரிகள் உள்ளன எனலாம். மேலும், நாற்படைகளோடு பெண்ணின் ஊரை முற்றுகையிட்டு வேந்தன் காத்திருக்கின்றான். இந்நிலையில் பெண்ணின் தந்தை பின்வருமாறு கூறுகின்றான்,

“……………………………………………கருஞ்சினை

                  வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்

                  மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்

கொற்ற வேந்தர் வரினும் தன்தக

                  வணங்கார்க்கு ஈகுவன் அல்லன்”    (புறம் 338:5-9)

தன் குடித்தகுதிக்குப் பணியாதவர் வலிமையில் பெரியவர்களான  மூவேந்தர்களே என்றாலும், அவருக்கு என் பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்று பெண்ணின் தகப்பன் கூறுவதாகப் பாடல் பொருளுணர்த்துகின்றது. இங்கு பெருநில வேந்தரை எதிர்க்கும் இனக்குழுத் தலைவனின் வீரத்திறமும், உயர்ந்த பண்பினை எதிர்பார்க்கும் மேன்மையும் புலப்படுத்தப்படுகிறது. மேலும் வேந்தனின் அரசதிகாரம் ஓங்கிப் புலப்படுவதும் அதற்கு எவ்வகையிலும் இனக்குழுத் தலைவனின் தன்மானச் சீற்றம் குறையாமல் வெளிப்படுவதும் அறியமுடிகிறது.

“வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;

கடவன கழிப்பு இவள் தந்தையுஞ் செய்யான்”   (புறம் 336:1-12)

           

“நலம்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும்,

  புரையர் அல்லோர் வரையலள் இவள் எனத்

  தந்தையும் கொடாஅன் ஆயின்..”     (புறம் 343:11-12)

           

“திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே

  பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே…”   (புறம் 342:5-6)

வேந்தர்களிடம் படைகள் பெரிது, வீரர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பினும் சீறூர்மன்னன் கலங்கவில்லை, உடன்படவில்லை. சீறூர் மன்னனின் புதல்வர்கள் துணையோடு வேந்தர்களை உக்கிரமாக எதிர்கொண்டனர் என்பதைப் பார்க்கிறோம். பொருள் விரும்பாப் பெரும்பண்பும், தகுதி நோக்கும் தகைமையும், வேந்தனின் சினத்தையும் பொருபடுத்தாப் பேராண்மையும் இனக்குழுத் தலைமைக்கேயுரிய தனித்த அடையாளமாக அமைகின்றன. குடியின் தன்மானத்தைக் காக்கத் தன் தந்தைக்குத் துணைநின்று பெண்ணின் உடன்பிறந்த ஆண்கள் வீறுகொண்டு நிற்பதும், வேந்தரை எதிர்த்துப் போரிடத் துணிவதும் நோக்கத்தக்கதாகும். சீறூர் மன்னனின் வீரத்தினை அளவிடப் பின்வரும் இந்த ஒருபாடல் போதும்,

“பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்,

மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரற் சீறியாழ்

நன்மை நிறைந்த நயவரு பாண!

சீறூர் மன்னன் சிறியிலை எகம்

வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே;

வேந்துஉடன்று எறிந்த வேலே,

என்னை சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே;

உளங்கழி சுடர்ப்படை ஏந்தி,

நம் பெருவிறல் ஓச்சினன் துரந்த காலை,

மற்றவன் புன்தலை மடப்பிடி நாணக்,

குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே”.   (புறம் – 308)

வேந்தனுக்கும் சீறூர் மன்னனுக்கும் நடக்கும் போரில் வேந்தன் சீறூர் மன்னனின் மார்பில் வேலெறிந்தான். அவ்வலியையும் பொருட்படுத்தாமல் தன் மார்பில் எறிந்த வேலை பிடுங்கி வேந்தனின் யானை மீது எறிந்தானாம் சீறூர் மன்னன். இவ்வீரச் செயலை கண்டு வேந்தனே நாண வேந்தன் கூட்டி வந்த யானைப் படை அனைத்தும் பின் வாங்கியதாம். இவ்வாறு இவர்களின் மறப்பண்பு வேந்தரினும் ஓங்கி நிற்பது போல் புறப்பாடல்கள் அமைந்துள்ளன.

மகள்மறுத்தலுக்கான காரணங்களும் சிந்தனைகளும்

வேந்தர்கள் பலர் இனக்குழுத் தலைமைக்குள் வலிந்து மணமுடிக்க முயன்ற முயற்சிக்குக் காரணம் பேரரசின் எல்லையை விரிவுபடுத்தவும், அதன்வழித் தங்கள் வல்லாண்மையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவும் நினைத்த அரசியல் உத்தி என்றும் கூறலாம்.

அன்பினாலும் காதலினாலும் ஒரு பெண்ணை விரும்பி முறையாகக் கேட்டுவரும் மரபினருக்கும்; வம்பினால், அதிகாரத்தால், செல்வப் பெருக்கால் ஒரு பெண்ணை அடைய நினைக்கும் வேந்தர் மரபினருக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. இந்த வேறுபாடே மகள்மறுத்து மொழிதலுக்குப் பெருஞ்சிக்கலாக அறியப்படுகிறது. மருதநிலப் பெருக்கம் என்பது முக்கிய பொருளாதார மையமாகக் கருதப்பட்ட சூழலில் மருதநில ஊர்களுக்குத் தலைவர்களாய் வாழ்ந்த முதுகுடி மன்னரிடம் மகட்கொடை வேண்டிய வேந்தர்களின் நோக்கம் மருதநில வயல்களைக் கைப்பறுதலே ஆகும். இத்தகைய சமூக அரசியல் சிக்கலால் இனக்குழுக்களின் அடையாளம் சுருங்கி நாளடைவில் முடிவுற்றது. வேந்தர்களது எழுச்சியும், அவர்களது ஆட்சியும் எங்கும் வேரூன்றி வளர்ந்தது. இதனால் மருதநிலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர் அழிவுற்றனர். வேந்தராட்சி மேலும் விரிவடைந்தது. சீறூர் மன்னர்களைக் குறித்துப் பாடப்பட்ட புறப்பாடல்களில் நேரடியாகப் பெயர் சூட்டப்பட்ட சிலரைத் தவிர, ஏனையோரைப் பாடலில் இடம் பெறும் சீறூர் எனும் ஊர்ப்பெயரினை வைத்தும்; சீறூர் மன்னர், சீறூர் நெடுந்தகை,  சிறுகுடிக் கிழான், சீறூர் வன்மையோன், சீறூர் மதவலி என்ற அடைமொழிகளை வைத்தும் அக்காலச் சிற்றூர்களில் வசித்த திணை குடிகளின் தலைவர்களை அடையாளம் காணமுடிகின்றது.

இனக்குழுச் சமூகம் பெருவேந்தர்களால் சூரையாடப்பட்டு உருத்தெரியாமல் அழிவதற்கான காரணங்களுள் ஒன்றாகவே மகள்மறுத்தல் செயலைக் கருத வேண்டியுள்ளது. இனக்குழுக்களைப் பேரரசுகள் அழிக்கத் தொடங்கியமை, அவை அழிந்த பின் பேரரசுகள் தம்மை இனக்குழுவினரைப் போற்றுபவராக நிலைநிறுத்திக் கொண்டமை, அதாவது இனக்குழு இடத்தில் தம்மை நிறுத்திக் கொண்டமை ஆகிய இரு நிலைகளையும் சார்ந்து சங்க இலக்கியப் பதிவுகள் நிகழ்ந்துள்ளன. இந்தப் போராட்டச்சூழலில் புலவர்கள் வாழ்வியல் கேள்விக்குறியாகும் நிலைமை ஏற்பட்டது. இனக்குழுச் சீறூர் மன்னர்களைச் சார்ந்து நிற்க முடியாமல் பாணர்களும், புலவர்களும் அவதிப்படுவதைக் காணமுடிகிறது. அதே நேரத்தில் பெருவேந்தர்களின் அதிகாரத்துடன் ஒத்துப்போக முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் புலவர்கள் துன்புறுவதையும் காணமுடிகிறது. இனக்குழு மக்களுக்கும் வேந்தர்களுக்கும் இடையே ஒரு போராட்டம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருந்துள்ளது. இவை ஒருபுறமிருக்க, வேந்தர் ஏன் இச்சீறூர் மன்னரைக் குறிவைத்துத் தாக்கவேண்டும். தவிர, பெருநிலப்பரப்பை ஆளுகின்ற செல்வாக்குமிக்க வேந்தன் பெண்கேட்கும்போது ஏன் இந்தச் சீறூர் மன்னர் பெண்தர மறுக்கின்றனர்? வேந்தனின் விருப்பத்திற்கு இசைந்து, தமக்கும் தம் குடிகளுக்கும் வேண்டியதை அவனிடமிருந்து பெற்று வறுமையைப் போக்கியிருக்கலாமே! மறுக்கும்போது ஏற்படும் போரினைத் தவிர்த்து தம் மக்களையும் எல்லையினையும் மீட்டிருக்கலாமே! இது போன்ற வினாக்களும் ஐயங்களும் எழத்தான் செய்கின்றன.

இந்நிலையில் இவ்வேந்தர்கள் தமிழர்கள்தானா? என்ற கருதுகோளினையும் சில ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். அதற்கான காரணங்களுள் ஒன்று; வேந்தர்களில் பாண்டியன் தன் மெய்காப்பாளர்களாக அந்நியர்களை (மிலேச்சர்களை) (முல்லைப்பாட்டு: 61) நியமிக்க வேண்டிய காரணம் என்ன? மெய்காப்பாளர் என்போர் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பவர். தமக்கு மிகவும் வேண்டியவர்களாகவும், தம்மீது அக்கறை உடையவர்களாகவும் இருப்பர். அப்படியிருக்க பாண்டிய வேந்தன் ஒரு தமிழரை நியமித்திருக்கலாமே என்னும் கருதுகோளை முன்வைக்கின்றனர். மற்றொன்று; தமிழ்குடிகளான இனக்குழு மன்னர் வேந்தர்கள் பெண் கேட்டு வருகையில் ஏன் தர மறுக்கின்றனர். அவர்கள் தமிழர்கள் எனில் பெண் தர முன்வந்திருக்கலாம் அல்லவா. வேந்தர்களுக்குத் தமிழ்குடிகள் மீது அக்கறை இருப்பின் ஏன் அவர்கள் சார்ந்த சிற்றூர்களைச் சூரையாடுகின்றனர். இதுபோன்ற கருத்துக்களுக்கு விரிவான ஆய்வே பதில்களாகும்.

 

6 comments for “மகள் மறுத்தல்

  1. chrisha
    August 14, 2016 at 10:42 pm

    கடைசியில் கூறப்பட்ட வினாக்களே என் மனதின் உள்ளும் எழுந்தது விடையும் தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்

    • December 15, 2016 at 5:27 pm

      கட்டுரையினை ஆழ்ந்து வாசித்து மறுமொழிந்தமைக்கு நன்றி… தொடர்வோம்…

  2. த.இலட்சுமன குமார்
    November 11, 2020 at 11:22 pm

    கட்டுரை என் நினைவில் ரீங்காரமிடுகின்றது தொல் பழங்காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்துகிறது உங்களின் வர்ணனை விளக்கம் அருமையிலும் அருமை
    வாழ்த்துக்கள் என்றென்றும் அன்புடன் த. இலட்சுமணன குமார்

  3. த.இலட்சுமன குமார்
    November 11, 2020 at 11:30 pm

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் பழங்காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை என்கண்முன்னே நிறுத்துகிறது உங்களின் வர்ணனை விளக்கம் அளிக்கும் விதமும் பாமரனுக்கும் எளிதாக புரியும் வகையில் சிறப்பாக உள்ளது மீண்டும் வாழ்த்துக்கள்

  4. Banumathi
    November 13, 2021 at 1:48 pm

    வணக்கம். இக் கேள்வியை (பென் கொடுக்க மறுக்கும்இதனால் எத்தனைகுடும்பங்கள காரணம்)நான் பல இலக்க்கிய கூட்டங்களில் கேட்டிருக்கிறேன். பலவாறான பதில்கள் இருப்பினும் இப் பதில் வேறு கோணத்தில் சிந்திக்க வைத்தது. அந்த பதில்
    சக்கரவர்த்திகள் என்றால் நமக்கு அடங்கியிருக்கமாட்டார்கள் . குறுநிலமன்னன்
    என்ற அதிகாரம் செலுத்தமுடியாது . வீட்டோடு
    மாப்பிள்ளை அதாவது மருமகனை கட்டுபடுத்தமுடியாதுஎன்ற அதிகார போக்கே காரணமாக இருக்கலாமா?இன்றும் நாம் சிலவிசித்திர குணங்களுடைய பென்களின் பெற்றோரைப் பார்க்கிறோமே.
    தனக்கு கீழ் நிலையில்உள்ள வீட்டில் பென்கொடுத்து அதிகாரம் செய்வதைப் பார்க்கிறோமே!

    • முனைவர். கா. பானுமதி
      December 8, 2023 at 3:48 pm

      மூவேந்தர்கள் தமிழ் வளர்த்தவர்கள் என்பதுதானே உண்மை

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...