காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 4

ஒருவகையில் பார்க்கப்போனால் ஆண் எப்போதும் தனது ஆதிகுணமான வேட்டையாடும் மனப்பான்மையுடனேயே பெண்ணை அணுகுகிறான். எப்படியாவது பெண்ணின் காதலைப் பெற வேண்டும். வென்றபிறகு வெற்றி ஒரு சரித்திர நிகழ்வாக மட்டும் இருக்கிறது. மீண்டும் தரையில் நடக்க ஆரம்பிக்கிறான். பெண் திரும்பத் திரும்பத் தேடுகிறாள், எங்கே அந்தக் காதலன் என்று. ஆணும்கூட ஒருவகையில் ஏக்கத்துடன் அவனையே தேடக்கூடும்.

பெண் வீட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆண் பொருள் தேடவேண்டும் என்ற வாழ்க்கையமைப்பினால் பெண் எப்போதும் சார்ந்து வாழ்பவளாக நம் சமூகத்தில் இருக்கிறாள். ஒரு குறுகிய வட்டத்தில் உழல்வதால் உலகம் அறியாதவளாக, எளிதில் ஏமாறக்கூடியவளாக கருதப்பட்டாள். இதனாலேயே அந்தக்காலத்தில் (இப்பவும்கூட) இற்செறித்தல் செய்துவந்தார்கள். (‘இற்செறித்தல்’ என்பதை இல் – செறித்தல் எனப் பிரித்துச் சொல்லலாம், ‘இல்’ என்றால் வீடு, ‘செறித்தல்’ என்றால், அடைத்துவைப்பது / மறைத்துவைப்பது / பூட்டிவைப்பது.) வயதுவந்த பெண்ணுக்குத் தாயே எதிரியாகத் தோன்றுகிறாள். எதற்கெடுத்தாலும் குற்றம். பருவத்தே பூக்காத செடியும் உண்டோ? கீழேயுள்ள வரிகளில் காதலியின் ஏக்கமும், வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு அன்னையும் கண்முன்னே தெரிகிறார்கள்.

வேட்டையில் தோல்வியறியாத

வாள்போல் வரிகள் கொண்ட புலியும் நடுங்குமாறு

சிங்கமொன்று யானையின் முகத்தைத் தாக்கி

தந்தத்தை உடைக்கும்

பெரிய மலையோரத்தில் குளிர்ந்த மலர்சூழ்ந்த அவ்விடத்தில்

ஒற்றை வேலை ஏந்தித் தனியே வரும் அவனும் அஞ்சான்

காதல்நோயால் நான் வாட கண்ணீர் பெருகுகிறது

அவனைக் காணாது இருத்தலைத் தாங்கமுடியவில்லை

என்ன செய்வேனடி தோழி

இண்டஞ்செடிப் பூவின் இதழ்களை நுட்பமாய் அவிழ்த்து

கீழே உதிர்க்கும் குளிர்காற்று வீசுகிறது

பெருமழை பொழியும் இரவு

சிற்றலைகள் மோதும் பெருங்குளத்துச் சிறுகரைக் காவலன்போல்

தாயும் தூங்காது கடுங்காவல் காக்கிறாள்

இந்தப்பாடலில் காதலனின் வீரத்தைப் போற்றும் காதலி மறைமுகமாக தன் இயலாமையை வெளிக்காட்டுகிறாள். இது ஒருவகையில் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான ஒரு பொறுமலாகவே பதிவாகிறது. பெருங்குளத்தின் சிறுகரை என்றது அவள் காதலை அணைபோட அந்தச் சிறுகரையாலோ, காவலாலோ முடியாது என்பதைக் குறிக்கிறது. அணை கட்டும்போதுதான் அழுத்தம்கூடுகிறது. காவலில் இருக்கும்போதுதான் காதலின் தீவிரமும் அதிகரிக்கிறது.

இண்டஞ்செடி:

அகம் 4

திணை: குறிஞ்சி 

இயற்றியவர்: நக்கண்ணையார்.

இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து

வாள்வரி நடுங்கப் புகல்வந்து ஆளி

உயர்நுதல் யானைப் புகர்முகத் தொற்றி

வெண்கோடு புய்க்குந் தண்கமழ் சோலைப்

பெருவரை யடுக்கத்து ஒருவேல் ஏந்தித்

தனியன் வருதல் அவனும் அஞ்சான்

பனிவார் கண்ணேன் ஆகி நோயட

எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்

யாங்குச் செய்வாங்கொல் தோழி ஈங்கைத்

துய்யவிழ் பனிமலர் உதிர வீசித்

தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்

எறிதிரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப்

பெருங்குளங் காவலன் போல

அருங்கடி அன்னையுந் துயின்மறந் தனளே.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...