மலேசிய மக்கள் தொகையில் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவான நிலையில் உள்ளது யாவரும் அறிந்ததே. இந்த நிலையை மாற்றுவதற்கு நீண்ட கால முயற்சிகள் தேவைப்படும். ஆனால் அது சாத்தியப்படாத ஒன்றாகும். எனவே, இருக்கும் தமிழர்கள் நல்லபடியாகவும் நல்ல நிலையிலும் வாழ வேண்டும் என்று பல நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், ஈராண்டுகளுக்கு முன் வெளிவந்த அதிர்ச்சிகரமான தகவலாக அமைவது, மலேசியாவில் தற்கொலைச் செய்துகொள்ளும் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதாகும் (Aishvarya, S., et al. 2014). இதுபோன்று மேலும் பல ஆய்வுகளை அலசிப்பார்க்கும் பொழுது, தற்கொலை தமிழர்களின் கலாச்சாரமாக மாறிவருவது போன்று தெரிகின்றது. தற்கொலை செய்து கொண்டவர்கள் மற்றும் தற்கொலை செய்ய முயற்சி எடுத்தவர்களுள் அதிகமானோர் தமிழர்கள் என்று மருத்துவமனைப் பதிவுகளும், மருத்துவர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பேட்டியிலும் தெரியவந்துள்ளது (திவ்ய தர்ஷினி, நேர்காணல், ஜூலை 8,2016). ஏன் தமிழர்களுக்கு இந்த அவல நிலை?
உலகளாவிய நிலையில் வருடம்தோறும் ஒரு கோடி மக்கள் தற்கொலையின் காரணத்தினால் உயிரிழக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வு படி (World Health Organization, 2012) 2020ஆம் ஆண்டிற்குள் ஏறத்தாழ 1.53 கோடி அல்லது 3% மரணங்கள் தற்கொலையினால் நிகழ்கின்றன. மேலும், தற்கொலை முயற்சியில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 10 முதல் 20 மடங்கு அதிகரிக்கும் என்றும் கணிக்கப்படுகின்றது. அதாவது, ஒவ்வொரு 20 வினாடிக்குள்ளும் ஒரு மரணம், ஒன்று அல்லது இரண்டு வினாடிக்குள் ஒரு தற்கொலை முயற்சியாக இது வர்ணிக்கப்படுகிறது.
மலேசியாவில் 1999ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டு வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிலையான உயர்வைக் காட்டுகிறது. தற்கொலைச் சம்பவங்களின் சதவீதம் கடந்த 45 ஆண்டுகளில் 60 விழுக்காடு அதிகரித்துள்ளதும் வருத்தமளிக்கும் விடயமாகும் (Aishvarya, S., et al. 2014). அதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகமாக தற்கொலைச் செய்துகொள்கின்றனர். இதில் மேலும் வருத்தமளிப்பது, மலேசியாவில் நடக்கும் தற்கொலைச் சம்பவங்களில் 70 விழுக்காடு தமிழர்களை உள்ளடக்கியது என்பதாகும். 2014ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் (Aishvarya, S., et al. 2014), மலேசியாவாழ் தமிழர்களின் தற்கொலைச் சம்பவங்கள் ஆசியாவிலேயே அதிக விழுக்காட்டினைத் தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதற்கடுத்த நிலையில் மலாய்காரர்கள் மற்றும் மிகவும் குறைந்த விழுக்காட்டினர்களாக சீனர்களின் தற்கொலை முயற்சிகள் இருக்கின்றன. இஸ்லாமியர்களின் மத போதனையின்படி தற்கொலை என்பது மிகப்பெரிய பாவச் செயலாகக் கருதப்படுவதால் அதற்கான முயற்சிகள் எல்லாக் காலங்களிலும் குறைவாக உள்ளதை காணமுடிகின்றது.
பல்வேறு நிலைகளில் தற்கொலைத் தூண்டுதல்களுக்கு உள்ளாகும் மலேசிய தமிழர்கள் அதிக அளவில் வறுமையினாலும், குடி பழக்கத்திற்கு அடிமைப்பட்டு இருப்பதாலும் நிகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் அபரிமித வளர்ச்சியில் ஈடுகொடுக்க முடியாமல் வறுமையின் பிடியில் சிக்கி, அதனால் கடன் வாங்கி, அதனை மீண்டும் கொடுக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆட்பட்டு தற்கொலைச் செய்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையினை இந்நாட்டு தமிழ் நாளிதழ்களேகூட சான்று பகரும். வட்டி முதலைகளின் மிரட்டலுக்கு அஞ்சி தற்கொலை செய்துகொண்டவர்கள் பற்றிய செய்திகளும் அண்மைய காலங்களில் சகஜமாக நிகழத் தொடங்கியுள்ளன. கடன் படுபவர்கள் வறுமையினால் மட்டுமல்லாமல், தேவையற்ற வங்கி கடனை வாங்கியவர்களாகவும் இருக்கின்றனர். MDI எனப்படும் மலேசியாவில் திவால் துறையின் கணக்கெடுப்பின்படி 14.12% இந்தியர்கள் திவாலாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது (MDI, 2012).
ஆடம்பரமான வாழ்க்கையைப் பிறருக்குக் காண்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தங்களின் தகுதிக்கும் மீறி கடன்களை வாங்கி, அதனைச் செலுத்த இயலாமல் போகும் நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். நிலைமை மற்றவர்களுக்குத் தெரிந்து அவமானப்படுவதற்கு முன் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவையே கடைசியில் கையிலெடுக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, தொன்றுதொட்டு பொருளாதார பலம் மிக்கவர்களாக விளங்கியவர்கள், வியாபாரத்தில் நொடித்துப்போகும்போது, சமுதாயத்தில் தங்களின் நல்ல பெயர் கெட்டுவிடும் நிதர்சனத்தை எதிர்கொள்ள முடியாமலும் மனம் உடைந்து தற்கொலை முயற்சியில் இறங்குகின்றனர்.
மேலும், இளைஞர்கள் பலரும் தற்கொலைச் செய்துகொள்வதற்கு முக்கிய மூன்று காரணங்களாக (1) காதல் தோல்வி; (2) வாழ்க்கையில் தோல்வி மற்றும் (3) கல்வியில் உண்டாகும் தோல்வி ஆகியவை இருப்பதை பீபிரெண்டெர்ஸ் (Befrienders) எனும் இயக்கத்தின் தலைமை விளம்பர இயக்குனர் கூறியுள்ளார் (ஆர்டி அயாடலி, நேர்காணல், ஏப்ரில் 18, 2016). இளையோர் பொதுவாக நம்பிக்கை துரோகத்தைத் தாங்கிக்கொள்ள மாட்டாதவர்களாக இருப்பதாகவும் நண்பர்களை நம்பி சொல்லப்படும் வாழ்க்கை குறித்த இரகசியங்களைச் பொதுவெளிக்கு வந்துவிடுவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவசரப்பட்டு தற்கொலை முடிவை நாடுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
காதல் தோல்வியில் பாதிக்கப்படும் இளைஞர்கள் பெரும்பாலும் ஆண்களாக உள்ளனர். ஒரு பெண்ணை உண்மையாக விரும்பி, அவர்கள் அப்பெண்ணுக்காக தங்களின் வாழ்க்கையை இழக்கவும் தயாராக இருக்கும் வேலையில், உயிரை இழப்பது பெரிதல்ல எனும் எண்ணத்தில் தற்கொலை செய்துகொள்கின்றனர். காதல் தோல்வியினால் தற்கொலைச் செய்துகொள்ளும் பெண்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலே உள்ளார்கள் (Lakshiny, 2015). பொதுவாக பெண்கள் தங்களின் மனதில் எழும் குழப்பங்களையும், வாழ்க்கையில் எழும் சவால்களையும் பிறரோடு பகிர்ந்துக்கொள்ளும் தன்மையுடையவர்கள். ஆண்களோ எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அனைத்து பிரச்சனைகளையும் தங்களின் மனதிற்குள்ளேயே அடக்கிவைத்துக் கொள்பவர்களாக இருக்கின்றனர். இதனால் ஆண்கள் எளிதில் மனஉளைச்சலுக்கு ஆளாகி தவறான முடிவுகளை எடுக்கின்றனர். தங்களின் பிரச்சனைகளை வெளியே சொல்வது தங்கள் தன்மானத்திற்கு இழுக்காக ஆண்கள் பெரும்பாலும் கருதுகின்றனர் (George, E.M., 1998).
இளையோர்களின் தற்கொலை சம்பவங்களுக்கு கல்வி அடைவு நிலையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. மலேசியாவில் முதன்மை தேர்வுகளாகக் கருதப்படும் யூ.பி.எஸ்.ஆர், பி.டி3, எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் போன்றவற்றில் நல்ல மதிப்பெண்களை எடுக்க தவறிய மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுக்குப் பயந்தும், சமுதாயத்தின் பார்வைக்குப் பயந்தும் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு வருடமும் தமிழ் நாளிதழ்களில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களின் செய்திகள் ஒரு புறமும், சிறந்த தேர்ச்சி பெற தவறியதால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களின் செய்திகள் மறுபுறம் வருவதை நாம் காணலாம். தற்கொலைச் செய்துகொள்பவர்கள் தங்களின் அறிவை விட, உணர்ச்சிகளுக்கு இடம் தருபவர்களாக இருக்கின்றனர் என்பது இவ்விதம் தெளிவு.
அரச மலேசிய காவல்துறையின் தலைமையகத்தின் (புகிட் அமான்) பொது பிரிவில் பதியப்பட்ட தரவின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு தற்கொலைச் செய்துகொண்ட தமிழர்களின் எண்ணிக்கை 46ஆகவும், அவ்வெண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் 58ஆக உயர்வு கண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பதியப்பட்ட தற்கொலை சம்பவங்களின் வயது பகுப்பாய்வில் 69%(40) ஆண்களும் 31%(18) பெண்களும் ஆவர். இதிலிருந்து மன உலைச்சலுக்கு ஆளாகும் பெரும்பாலானோர் ஆண்களாக உள்ளது தெளிவு.
மன உளைச்சல், பயம் அல்லது பதற்றம், மற்றும் மன அழுத்தம் தற்கொலைச் சம்பவங்களுக்கு முதன்மை காரணங்களாகக் கூறப்படுகின்றன. தற்கொலை செய்ய துணிபவர்களைச் சில முன் அறிகுறிகளின்வழி கண்டுகொள்ள முடியும் (Aishvarya, S., et al. 2014). தற்கொலை முயற்சியை எடுக்கும் நபரின் பழக்க வழக்கங்கள் முற்றிலும் வேறுபட்டிருக்கும். அவர்களின் உடை, நடத்தை, பேச்சு அனைத்திலும் ஒருவித அலட்சியப் போக்கு தென்படும். இவை முதல் கட்ட அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கை ஒருவரிடத்தில் காணும்போது, உடனடியாக அவரிடம் பேச்சுக் கொடுத்து அவரின் மனக்கவலை என்னவென்று கண்டறிதல் அவசியம். சிறுவர்களின் தற்கொலைச் சம்பவங்களைக் கையாள்வது அவர்களின் பெற்றோர்களின் கையிலும், அவர்களிடம் நெருக்கமாகப் பழகும் நபர்களின் கையிலும்தான் உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களிடம் மிகவும் அன்பாகவும், பாசமாகவும் பழக வேண்டும். பாதிகப்பட்டவர்களைத் தனியே எங்கும் செல்லவிடாமல் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அனைத்திலும் உடன் இருப்பதாக அவர்களது மனதில் பதியவைப்பதன்வழி மன அளவில் அவர்களை வலுபெற செய்வது அவசியமாகும். அவர்களை தியான வகுப்புகள், யோகாசன வகுப்புகள் போன்றவற்றிற்கு அனுப்புதல் அவசியம். இது போன்ற வகுப்புகள் நம் ஆன்மாவிற்கு பலத்தைக் கொடுக்கும். நடுத்தர வயதினரும், வயோதிகர்களும் அவர்களின் குடும்பத்தினருடன் அதிக நேரம் ஒதுக்க வேண்டும். இதனால் அவர்களின் எண்ணம் சிறுக சிறுக மாற்றமடைவது உறுதி (Aishvarya, S., et al. 2014).
மேலும், பீ•பிரெண்டெர்ஸ் (befrienders.org) போன்ற தன்னார்வ இயக்கத்தினர்கள் தற்கொலை முயற்சி எடுக்கும் நபர்களுடன் தொடர்புகொண்டு தொலைப்பேசி மூலமாகவே தன்முனைப்பு வழங்குகின்றனர். பீ•பிரெண்டெர்ஸ் இயக்கத்தின் கூற்றுபடி அவர்களிடம் தொடர்புகொள்பவர்களில் அதிகமானோர் சீனர்கள், மலாய்க்காரர்களாகவே இருக்கின்றனர். இந்தியர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலே தொடர்புகொள்கின்றனர் (insiders Malaysia, 2015).
நிலைமையை வைத்துப் பார்க்கும்போது பீபிரெண்டெர்ஸ் போன்ற இன்னும் பல தன்னார்வ இயக்கங்களின் உதவி தமிழர்களுக்கு அதிகம் தேவைப்படுவது தரிய வருகிறது. எனவே இவ்வியக்கங்களைப் பற்றிய தெளிவினைத் தமிழர்களுக்குக் கொண்டுச்செல்லும் முயற்சியை ஊடகங்களும், அரசு இயக்கங்களும் முனைப்பு காட்டி மேற்கொள்ள வேண்டும். இதன்வழி தமிழர்கள் மத்தியில் தற்கொலை சம்பவங்களைக் குறைக்க இயலும் என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும், தற்கொலை என்பது தீர்வல்ல எனும் வகையில் மக்களுக்கு தெளிவுறுத்தும் கலந்துரையாடல்களும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தற்கொலை செய்துகொள்வதில் இருக்கும் மனஉறுதியை வாழ்ந்துக்காட்டுவதில் செலுத்தினால் வாழ்க்கை சிறக்கும் என்பது புரியும் நிலையில் நல்லதொரு மாற்றத்தை நாமும் காணலாம்.
மேற்கோள்
1. -.(2012). Mental health. World Health Organization, Suicide Prevention (SUPRE). Retrieved from http://www.who.int/mental_health/prevention/suicide/suicideprevent/en/
2. Aishvarya, S., and et.al. (2014). Suicide attempts in Malaysia from year 1969 to 2011. The Scientific World Journal. Vol 2014. Retrieved from http://researchonline.jcu.edu.au/38475/1/AishavryaManiamOe%26%20Pi%20suicide%20attempts%20review%20SciWJ.pdf
3. George, E.M. (1998, July-August). Why women are less likely than men to commit suicide. Comprehensive Psychiatry. Vol 39(4). Retrieved from http://www.sciencedirect.com/science/article/pii/S0010440X98900578
4. Joseph Sivapalan. (2012). Suicide rate on the rise in Malaysia. The Star. Retrieved from http://www.thestar.com.my/news/nation/2012/06/05/suicide-rate-on-the-rise-in-malaysia/
5. K. Kannan, S. K. Pillai, J. S. Gill, K. O. Hui, and V. Swami, “Religious beliefs, coping skills and responsibility to family as factors protecting against deliberate self-harm
6. Lakshiny. (2015, September 7). Suicide is the 2nd leading cause of death among youth- a closer look at the situation in Malaysia. Malaysian Digest.com. Retrieved from http://www.malaysiandigest.com/features/568013-suicide-is-the-2nd-leading-cause-of-death-among-youth-a-closer-look-at-the-situation-in-malaysia.html
7. Maniam, T and Chan, L.F. (2013). Half a century of suicide studies—a plea for new directions in research and prevention. Sains Malaysiana. Vol. 42(3).
8. Norhayati Ibrahim, Noh Amit & Melia, W.Y.S. (2014, October 23). Psychological factor as predictors of suicidal ideation among adolescents in Malaysia. Plos One. Retrieved from http://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0110670
9. ஆர்டி அயாடலி , நேர்காணல், ஏப்ரில் 18,2016
10. திவ்ய தர்ஷினி, நேர்காணல், ஜூலை 8,2016
11. http://www.insolvensi.gov.my/about-us/resources/statistics/bankruptcy/217-bankruptcy-statistic
நல்ல பதிவு. மேலும் நிறைய எழுதுங்கள்.
அருமையான பதிவு… இது போன்று தாங்கள் மேலும் பல ஆய்வுகள் மேற் கொண்டு பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்… 🙂
அருமை அருமை விழிப்புணர்வு தேவை மக்களே வலியுறுத்தும் எழுத்தாளருக்கு வாழ்த்து
இன்னும் பல நன்மையுள்ள பதிவுகளைப் பதிவு செய்ய வாழ்த்து!
வாழ்த்துகள்..இன்னும் பல பதிவுகள் பதித்து எழுத்துலகில் சாதனை படையுங்கள்!
நல்ல முயற்சி . தொடர்ந்து எழுத வாழ்த்துகள்..
நல்ல பதிவு…எழுத்துலகில் தங்களின் பயணத்தைத் தொடர வாழ்த்துகள்