பாவைக் கூத்து

அம்ம வாழிய தோழி,jeyabalan

யார் அவன் என்று வினாக்குறியானாய்

அறிந்திலையோடி?

 

வீட்டுக் காவல் மறந்து

சந்து பொந்து மரங்களில் எல்லாம்

காலைத் தூக்கி நின்றாடி

பெட்டை நாய்களுக்கு

மூத்திரக் குறுஞ்சேதி எழுதி அலையுமே

அந்தச் சீமை நாயின் பேர் இல்லத்து

வம்பனடி அவன்.

போயும் போயும் அவனையா கேட்டாய்?

 

பொம்மலாட்டப் பாவையைப்போல்

ஒருவர் சொல்லுக்கு ஒருவர் ஆடிய

இனிய நம் நாட்கள் போய்விடும் தோழி.

உன் மழலை அவனை ஆட்டும் நாள் வரை

இனி அவனே உந்தன் பாவைக் கூத்தன்.

 

காலை தோறும் எண்திசை வானிலும்

ஒன்றே போன்ற சிறு வெண் கொக்குகள்

ஆயிரம் ஆயிரம் பறக்க விடுகிற

கழிக் கரையோர புன்னை மரமினி

என் துணை ஆகுக.

 

அறம் இல்லாது

ஒரே காதல் சேதியின் ஆயிரம் பிரதி

பலருக்கு அனுப்பும் கைபேசிக் கிளியே

அவனே உனக்குச் சாலவும் பொருத்தம்

அப்பாலே போ.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...