முஸ்தாங்: விடுதலையின் கலகக்குரல்

mustang-3துருக்கியில் வாழும் பெண்கள் தங்களுக்கு உரிமைவேண்டி போராடிக் கொண்டிருக்கின்றனர்.  பெண்களின் மேல் செலுத்தப்படும் ஆதிக்கமும் வன்முறையும் அவர்களுக்கு இழைக்கப்படும் பாலுறவுக் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கான குரல் மறுக்கப்படுகிறது.  2012 மற்றும் 2014 ஆண்டுகளுக்கு இடையில் துருக்கியில் மட்டும் 90,483 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. வல்லுறவு, பாலியல் வன்கொடுமை, சிறுவயதுப் பெண்களிடம் பாலியல் தொந்தரவு போன்ற குற்றங்கள் இவைகளுள் அடங்கும். 15 வயது முதல் 19 வயது வரையிலான பெண்களின் இறப்பிற்கு முக்கியக் காரணமாக பிரசவம் மற்றும் கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. சிறார் திருமணம் பெண்களின் கல்வி உரிமையைப் பறிக்கிறது. 2013 ஆம் ஆண்டில், காசியாண்டெப் பல்கலைக்கழகம்  நடத்திய ஆய்வின்படி 82 விழுக்காடு சிறார் மனைவிகள் கல்வி அறிவு பெறாதவர்கள் என்று அறிவிக்கிறது.

துருக்கி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறார் திருமணத்தின் குறைந்தபட்ச வயது 15 ஆகும். துருக்கியின் அரசியலும் சமூகவியலும் பெண் உரிமைக்கு எதிராகவும் பெண்களுக்கு ஆதரவாக  ஒலிக்கப்படும் குரலுக்கு காதடைத்துக் கொள்வதாகவும் இருந்து வருகிறது அங்குள்ள இன்றைய இந்த நடப்புச் சூழலை எதிர்க்கும் மொழியாக வந்துள்ள முஸ்தாங் திரைப்படம் உலக மக்கள் பார்வையை ஈர்த்துள்ளது.

எந்தவொரு கடிவாளமும் இல்லாமல் தனக்கு வேண்டும் தூரம், சுதந்திரமாகச்  சுற்றித்திரியும் காட்டுக்குதிரைகளைக்  கூண்டுக்குள் அடைத்து, சொல்பேச்சு கேட்கும் சர்க்கஸ் குதிரைகளாகவும், பால் பாகுபாடின்றி சக நண்பர்களுடன் சுதந்திரமாக விளையாடித் திரியும் பெண்குழந்தைகளின் உலகத்தை அவர்களிடமிருந்து அபகரித்து, அவர்களை திருமணத்திற்கான “மனைவித் தொழிற்சாலைகளாக” மாற்றியமைக்கும்  பழமைவாதங்களை நமக்குச் சொல்ல முயலும் கதையே முஸ்தாங்.

பெண்களின் அசைவுகள், செயல்பாடுகள் அனைத்தையும் உடலுறவு என்ற ஒன்றுடன் மட்டுமேmustang-2  தொடர்புபடுத்துவதும், இதன் அடிப்படையில் அவர்களின் ஒழுக்க நெறியை வரைப்படுத்துவதும் பழமைவாதிகளின் பண்பாடாக இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. திருமணம் என்ற பெயரில், பெண்களைச் சட்டப் பூர்வமாக்கப்பட்ட கட்டில் சுகமளிப்பவளாகவும், ஆணாதிக்க உலகில் பேச்சுரிமை இழந்த  அடிமையாகவும், இறக்கும் வரையிலும் ஆண்களுக்குப் பணிவிடை செய்யவேண்டிய இயந்திரங்களாகவும் நடத்தப்படும்  பெண்களின் நிலைமையை,  துருக்கி நாட்டின் பெண் உரிமையை மறுக்கும் சமூகவியலைக் காட்டுகிறார் இயக்குனர் எர்குவான். இந்தக் கருப்பொருளை ரசிகனிடம் எடுத்துச் செல்லும் ஊடகமாக ஐந்து உடன்பிறந்தவர்களின் வாழ்க்கையைக் காட்டும் போக்கில் கதையை நகர்த்தியுள்ளார்.

இஸ்தான்புல் நகரத்திலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள குடியிருப்புப் பகுதியில் வாழும் கிராமப்புற சமூகத்தார் கொண்டிருக்கும் பழமைவாத நம்பிக்கையின் அழுத்தத்தை அனுபவிக்கின்றனர், பெற்றோரை இழந்த, பாட்டி மற்றும் தாய்மாமன் கவனிப்பில் வளரும் ஐந்து இளம்மாணவிகள். பள்ளி இறுதி நாளில், கடற்கரை ஓரத்தில், வெகுளித்தனமாக,  சக மாணவர்களுடன் விளையாடியதைக் காம உணர்வைத் தீர்த்துக்கொள்ளும் விளையாட்டு என்று கோள் மூட்டுகிறது பாட்டி வீட்டின் அண்டைய சமூகம். இங்கிருந்து ஆரம்பமாகிறது பழமைவாதிகளின் சிறைச்சாலையும், மனைவிகளைத் தயார் செய்யும் தொழிற்சாலையும்.

லாலே, உடன்பிறந்தவர்களின் வரிசையில் ஐந்தாவது. 12 வயது இருக்கும். காட்சிகளின் பின்னணியில் கதைசொல்லியாக அவளின் குரலே கதையை நகர்த்துகிறது. சுட்டியானவளாகவும், பழமைவாதத்தை எதிர்ப்பவளாகவும் உள்ள லாலே, விடுதலையை நோக்கிப்போராடும் போராட்டம் துருக்கிப்பெண்களின் நிலையை பிரதிநிதிக்கிறது.

“ஆண்களின்  தோள்மேல் ஏறி உட்கார்ந்து ஐந்து பெண்களும் உங்களுடைய குறியை அவர்களின் கழுத்தோடு உரசி சுகம் அனுபவித்தீர்கள்” என்று வீட்டுக்கு வந்தபிறகு அப்பிள்ளைகளைத் திட்டித் தீர்க்கிறாள் அவர்களுடைய பாட்டி.

தன் எதிர்வினையை நாற்காலியை உடைத்துக்காட்டுவதன் மூலம்  தன்பாட்டிக்குத்  தெரிவிக்கிறாள் லாலே. “என்னுடைய பிட்டம் இந்த நாற்காலியில் பட்டு விட்டதால் இதுவும் அவமானப் பொருளாகிவிட்டது” என்று லாலே தன் பாட்டியிடம் தெரிவுக்கும் காட்சி, எதார்த்தமானதாகவும், அடக்கப்பட்ட பெண்களின் அழுத்தமான குரலாகவும் ஒலிக்கிறது. ஒழுக்க மார்க்கங்கள் எப்போதும் பெண்களையே குறி வைப்பதை இந்தக் காட்சிகள் நமக்குச் சொல்கின்றன.

துருக்கியில் பிறந்து பிரான்சில் வளர்ந்து, அதிகமான விடுமுறை நாட்களை துருக்கி நாட்டில் கழித்த அனுபவத்திலிருந்து தனக்குக் கிடைத்த,  அந்நாட்டில் உள்ள பால் பாகுபாட்டை பல காட்சிகளில் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். படத்தில் முக்கியப் பாத்திரங்களாக இடம்பெற்றிருக்கும் சோனே, சல்மா, நூர், ஈஸ், லாலே ஆகியோர்,  அக்காள் – தங்கைகளின் கதாபாத்திரங்களின் மூலம், ஒழுக்கம் எனும் கற்பிதம்  பெண்களை எந்த வகையிலும் நெறிப்படுத்த முயலவில்லை, மாறாக, அவர்களைப்  பாலுணர்வு அடிப்படையில் எடைபோடும் போக்கையே கொண்டிருக்கிறது என்பது இப்படத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது.

வீட்டைச்சுற்றி உயரமான சுவர் எழுப்புதல், கம்பிகளைப் பொருத்துதல், பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்தி வைத்தல், கணினி, தொலைபேசித் தொடர்பை இவர்களிடமிருந்து துண்டித்தல், உடல் முழுவதையும் மறைக்கும் ஆடையை உடுத்தச் சொல்லுதல் போன்ற கண்டிப்புகளைக் கொண்டு வந்த பாட்டியின் செய்கையால் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்த சகோதரிகள் அந்த நான்கு சுவர்களுக்குள்ளும் தங்களின் போக்கிலேயே இருக்கின்றனர்.

mustang-6இவர்களைப் ’பெண்ணாக’ இருக்கச் சொல்லித் தயார்படுத்தும் பாட்டியின் பணி, சந்தையில் சுலபமாக விலைபோக அவர்களைத் தயார்படுத்துவதாகவே இருக்கிறது. பெண்களுக்கு மட்டுமே கற்பு இருப்பதாகவும், அதை அவர்கள் பாதுகாக்க வேண்டும் என்பதாகவும், பெண்களின் ஒழுக்கத்தை அவர்களின் கன்னிச்சவ்வில் புதைத்து வைத்துள்ளது பழமைவாதம். திருமணமானவளின் கன்னிச்சவ்வு முதல் உடல் உறவில் கிழிந்து ரத்தக் கசிவை ஏற்படுத்தும். உடலுறவின்போது அந்த ரத்தக்கசிவு படுக்கை விரிப்பில் பட்டிருக்க வேண்டும். அந்த ரத்ததைக் காண மாப்பிள்ளையின் பெற்றோர் மறுநாள் படுக்கை விரிப்பை பரிசோதிக்க அறைக்கு வருவர். ரத்தக்கறை இருந்தால் அவள் கன்னி. இல்லையென்றால் அவள் கண்டவரோடு படுத்தெழுந்தவள் என்று சந்தேகிக்கப்படுவாள். சந்தேகத்தை உறுதிசெய்ய மணமகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கன்னிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவாள்.

இதை சல்மா கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார் எர்குவென். முதல் இரவுக்குப் பிறகு ரத்தக்கறை படுக்கை விரிப்பில் காணப்படாததால் அவள் மேல் சந்தேகம் கொண்டு அவளைக் கற்புப்பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவள் கன்னி கழியாதவள் என்று உறுதி செய்யப்படுகிறது. “உலகெல்லாம் படுத்து எழுந்தவள் நான். அதனால்தான் எனக்கு ரத்தம் வரவில்லை” போன்ற உரையாடல்கள் சல்மாவைப்போன்று தினம் தினம் பழமைவாதிகளால் அவமானப்படுத்தப்படும் பெண்களின் வெறுப்புணர்ச்சியின் குரலாகக் காண முடிகிறது.

தான் விரும்பியதைச் செய்து பார்க்கும் மனமானது  தடை விதிக்கப்படும் செயலை செய்து பார்ப்பதிலேயே ஆர்வம் கொள்கிறது. குறிப்பாக, குழந்தைகளின் உளவியல் இப்படித்தான். தொடாதே, செய்யாதே என்ற கட்டளையைப் புறக்கணித்து தன் மனம் விரும்பும், அறிய ஆசைப்படும் விடயங்களைச் செய்து முடிப்பதில் மும்முரமாகச் செயல்படுகிறது. தனக்குப் பிடித்த காற்பந்து விளையாட்டைக்காண சாதுர்யமாகத் திட்டமிட்டு, அவ்விருப்பத்தை அடையும் வரை போராடி நிறைவேற்றிய லாலேவின் உறுதி இதற்கொரு உதாரணம்.

பெண்கள் பாலுறவுக்காகப் படைக்கப்பட்டவர்கள் என்று அதிகாரப்பூர்வமாக உடலுறவுக்குத் தயார் செய்யப்பட்ட பண்டங்களாகிவிட்ட பெண்களுக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்தும் பெண்ணாகவும் லாலே இருக்கிறாள். எதை எல்லாம் பெண்கள் கற்றுக்கொள்ளக் கூடாது என்று பழமைவாதம் தடை போட்டதோ அதை எல்லாம் கற்றுக்கொண்டு, வீட்டில் சிறைப்படுத்தப்பட்ட தன்னையும் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட தமக்கையையும் சிறையிலிருந்து விடுதலை செய்து கொள்கிறாள் லாலே. பெண்களின் விடுதலை முழுமை பெற அவர்கள் கல்வியைத் தொடர.வேண்டும் எனும் செய்தியை தப்பித்து ஓடிய லாலேவும் ஈசும் இஸ்தான்புல்லில் வசிக்கும் தங்களுடைய ஆசிரியரின் முகவரியைத் தேடிச்செல்லும் காட்சிகளின் வழி சொல்லியிருக்கிறார் எர்குவென்.

படத்தில் காட்டப்பட்ட ஐந்து சகோதரிகளும் ஐந்து தலைமுறையைக் காட்டும் குறியீடாகப் பார்க்கலாம். லாலே நடப்புத் தலைமுறையைப் பிரநிதிக்கும் தலைமுறையாகவும் இந்தத் தலைமுறையில் பெண்களுக்கான சுதந்திரம் தைரியமாகப் பேசப்படும் என்றும் இப்புதிய தலைமுறை முக்காடுகளுக்கு வெளியே தலைகாட்ட விரும்பும் சுதந்திரப் பறவை என்பதையும் முன்வைக்கிறது. பழமைவாதங்களால் முக்காடு போடப்பட்டாலும் மனிதத்  தேவைகளுக்கு ஒருபோதும் முக்காடு போட முடியாது என்பது நிதர்சனம்.

படத்தின் கதாபாத்திரங்கள் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் மதத்தின் அடிப்படையில் பழமைவாதங்களைச் சாடாமல், அதனைப் பக்குவமாக எடுத்துச் சொல்லும் நுட்பத்தை காட்சிகள் வாயிலாகவும் கதாபாத்திரங்களின் வாயிலாகவும் நமக்குச் சொல்லி இருக்கிறார் எர்குவென். தான் ஒரு பெண்ணாக இருப்பதினால் இப்படத்தை வெளியிடுவதில் காலதாமதத்தை எதிர் நோக்கியதாகவும் இதே தான் ஒரு ஆணாக இருந்திருந்தால் சிரமத்தை எதிர்கொண்டிருக்க அவசியம் இருந்திருக்காது என்று ஊடகப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் எர்குவென். லாலே கதாபாத்திரத்தின் நிகழ்வுகள் தம்முடைய பால்ய வயது அனுபவங்களில் சில என்றும் துருக்கியில் அல்லல்படும் பெண்களின் விடுதலைக்காகவே தம்முடைய படம் பேசுகிறது என்றும் எர்குவென் கூறுகிறார்.

பழமைவாதங்கள் உலகில் உள்ள எல்லா மதவாதிகளிடமும் கடுமையாகக் காணப்படுகிறது. மதவாதிகளின் பழமைவாதங்கள் பெண்களை நோக்கி மட்டுமே பாய்கிறது. அவர்களின் ஒழுக்கதைப் பேசுகிறது, செக்ஸ் பற்றி பேசக்கூடாது என்கிறது. ஆனால், அதே பெண்களை அதே செக்ஸ் உறவுக்கு திருமணம் என்ற பெயரில் தயார் செய்கிறது. மனைவி என்பவளை பிள்ளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மட்டுமே பழமைவாதம் ஏற்றுக்கொள்கிறது என்பதுதான் இதில் வருந்த வேண்டிய விஷயம்.

 

3 comments for “முஸ்தாங்: விடுதலையின் கலகக்குரல்

 1. ஸ்ரீவிஜி
  October 8, 2016 at 10:58 pm

  கன்னிச்சவ்வு…முன்பு நம்மவர்களாலும் பெண்களின் மத்தியில் பரவலாகப் பேசப்பட்ட ஒன்றுதான். அருமையான திரைப்பட விமர்சனம்

 2. Kalaishegar
  October 18, 2016 at 10:58 pm

  வளமான மொழிநடை.
  தரமான விமர்சனம்.
  வாழ்த்துக்கள் நண்பரே🙏🏼

 3. October 20, 2016 at 4:42 pm

  கன்னிச்சவ்வுதான் கன்னிகள் சாகும் வரை விடுவதில்லை.அது அவர்களுக்குப் போடப்பட்ட கன்னி. இந்திய ஆப்பிரிக்கப் பெண்களுக்குத்தான் அப்படியென்றால் துருக்கியிலுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *