பள்ளிப் பருவத்தினின்றே தமிழ்ப்பாடம் என்றால் அலாதிப் பிரியம்தான் எனக்கு. அதிலும் சிலப்பதிகாரம் குறித்த ஆர்வம் எனக்குள் அதிகரித்தது கல்லூரிப்பருவத்தில் தான். அதற்குக் காரணம், சிலப்பதிகாரக் காப்பியத்திற்கும் எங்கள் பகுதிக்கும் உள்ள தொடர்பைக் கேள்விப்பட்டதுதான். மேலும், பேராசிரியர் சி.கோவிந்தராசனார் எழுதிய ‘கண்ணகி அடிச்சுவட்டில்’ என்ற நூலும், கண்ணகிக்கோட்டம் கண்டறியப்பட்டபோது அங்கு மண்டிக்கிடந்த புதர்களை அகற்றும் குழுவில் வேலைக்குச் சென்ற என் தந்தையார் கூறிய செய்திகளும் என்னை கண்ணகி வரலாற்றைக் குறித்துச் சிந்திக்க உந்தின. ஆம், கண்ணகியைத் தெய்வமாகப் போற்றும் மரபும் அதனோடு தொடர்புடைய தொன்மங்களும், சான்றுகளும் தமிழகக் கேரள எல்லைப்பகுதியான கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் விரவிக்கிடப்பதைச் சென்ற கோடை விடுமுறையில் நான் மேற்கொண்ட சில பயணங்களின் வாயிலாக அறிந்துகொண்டேன். அவற்றை என் கல்லூரிப் பேராசிரிய நண்பர்களுடன் விவாதித்தபோது, இதனை ஒரு கட்டுரையாக எழுதுங்கள் என ஊக்கப்படுத்தினர். அதன் விளைவே இக்கட்டுரை. பொதுவாக, இலக்கியப்பதிவுகள் யாவும் முற்றிலும் கற்பனை எனப் புறம் தள்ளிவிட முடியாது. தமிழின் முதற்காப்பியமான சிலப்பதிகாரம் ஒரு வரலாற்றுக் காப்பியம் என்பதை இக்கட்டுரை விவரிக்கின்றது. இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் விவரிக்கும் கண்ணகிக் கோட்டத்திற்கு வலுச்சேர்க்கும் தடயங்களையும் சான்றுகளையும் இக்கட்டுரை உரைக்கின்றது.
அநீதியால் கொல்லப்பட்ட தன் கணவனின் மரணத்திற்கு நீதிவேண்டி முறையிடுகிறாள் கோவலன் மனைவி கண்ணகி. அவளது சாபத்தால் மதுரைமாநகரமே தீப்பற்றி எரிந்து சாம்பலானது என்கிற சிலப்பதிகாரச் சம்பவங்கள் நாம் அறிந்த ஒன்றுதான். மதுரையை எரித்தபின் கண்ணகி அங்கிருந்து மேற்கே வைகைஆற்றின் தென்கரைவழியாக, நடந்துசென்று சேரநாட்டு எல்லையான விண்ணேத்திப்பாறை வந்தடைகிறாள். இங்குவாழ்ந்த குன்றக்குறவர்கள் ஆடிய குறவைக் கூத்தினைப்பார்த்து அவளது கோபம் சற்றுத்தணிகிறது. அக்கானவர்கள் கேட்டதற்கிணங்கத் தன்வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணிலிருந்து தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து பூப்பல்லக்கில் ஏற்றி விண்ணோக்கி அழைத்துச்சென்றதாகவும், இக்காட்சிகளைக் கண்ட மலைவாழ் மக்களான கானவர்கள் மலைவளம் காணவந்த சேரன் செங்குட்டுவனிடம் கூற அவன் இமயம்வரை சென்று கல்லெடுத்து கனக,விசயர் தலையிலேற்றிக் கொணர்ந்த கல்லில் கண்ணகிக்கு சிலையெடுத்து கோவில்கட்டுவித்தான் அதுதான் மங்கலதேவி கண்ணகிக்கோட்டம் எனவும் இளங்கோ விவரிக்கின்றார். இச்செய்திகளை மையமாக வைத்து 1963ல் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் 17 ஆண்டுகால கடின முயற்சிக்குப்பின் கண்டறியப்பட்டு, இன்றைய தேனி மாவட்டம் கூடலூர் அருகில் அமைந்துள்ள மலைப்பகுதியில் உள்ளதே கண்ணகிக் கோட்டம் என நிறுவினார்.
(சேரன் செங்குட்டுவன் கட்டுவித்த கண்ணகிக்கோட்டம், (இறுதிப்படம் இமயமலைக்கல்லால் வடிக்கப்பட்ட கண்ணகிசிலையென நம்பப்படும் சிலை – சிதைவடைந்த நிலையில்…)
இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது இளங்கோவடிகள் களப்பயணம் (FieldWork) மேற்கொள்ளாமல் இம்மாபெரும் காப்பியத்தை எழுதியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பூம்புகார் தொடங்கி; உறையூர், மதுரை, வைகைக்கரை, கண்ணகிக்கோட்டம் என சிலப்பதிகாரம் சுட்டும் வழிகளெல்லாம் இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கின்றன. 2000 ஆண்டுகட்கு முன்பே தமிழன் சான்றுகளோடு இலக்கியம் புனையும் பேராற்றல் கொண்டவனாக விளங்கியிருக்கிறான் என்பது இதன்வாயிலாக புலனாகின்றது.
சில தடங்களும் தொன்மங்களும்:
கண்ணகிக்கோட்டம் இருப்பதற்கான புறச்சான்றுகளை பேராசிரியர் சி.கோவிந்தராசனார் தம் ஆராய்ச்சியின் பயனாக முன்வைத்துள்ளார். இனி, கண்ணகிக்கோட்டம் இருக்கக்கூடிய தேனிமாவட்டத்தில் கண்ணகி குறித்த தொன்மங்கள் காணப்படுகின்றதா என்று ஒரு பருந்துப்பார்வையில் ஆராய்கின்றபோது கிடைத்த சில தகவல்களை இங்குக் காண்போம்.
பொதுவாக மாரியம்மன் வழிபாடு என்பது ‘கண்ணகி வழிபாட்டின் எச்சம் தான்’ என்பது நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளின் முடிவாக உள்ளது. மதுரையினை எரித்த கண்ணகி அம்மாநகருக்குச் சாபம் விடுகின்றாள். அச்சாபத்தின் காரணமாக அடுத்த பல ஆண்டுகள் மதுரை கொடிய பஞ்சத்திற்கு உள்ளாகிறது. கண்ணகியின் சாபத்தால் வளம்குன்றி வறட்சியின் கோரப்பிடியில் சிக்குண்ட மதுரையினை மீட்க ஆயிரம் பொற்கொல்லர்களைப் பலியிட்டுக் கண்ணகியினை அமைதிப்படுத்தியதாகவும் அதன் பின்னர் மழைபெய்து மதுரை முன்புபோல வளம்பெற்றதாகவும் வரலாறு சுட்டுகின்றது. மழை பொய்த்துப்போனதால் கண்ணகியை வேண்டி, அவளை மழைத் தெய்வமாகப் பாவித்துக் கூழ்காய்ச்சிப் படைத்து வணங்கிய நிகழ்வுகள் கிராம மக்களிடையே அரங்கேறியிருத்தல் வேண்டும். இன்றைக்கும் கண்ணகி கடந்து வந்துசென்ற வழித்தடங்களில் புகழ்பெற்ற மாரியம்மன் வழிபாட்டுத்தலங்கள் இருப்பது இக்கூற்றிற்கு வலுச்சேர்ப்பதாக உள்ளது. திருச்சி சமயபுரம் மாரியம்மன், மணப்பாறை வேப்பிலை மாரியம்மன், மதுரை வண்டியூர் மாரியம்மன், தேனி வீரபாண்டி மாரியம்மன், அனுமந்தன்பட்டி மாரியம்மன், க.புதுப்பட்டி மாரியம்மன், கம்பம் மாரியம்மன் கோவில் என்று, கண்ணகி பயணித்து வந்த வழிகளெல்லாம் இக்கோவில்கள் அமைந்துளன. இவற்றில் இறுதி நான்கு கோவில்களும் கண்ணகிக்கோட்டம் அமைந்திருக்கும் தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களாகும். இக்கோவில் திருவிழாக்கள் யாவும் முறையே கண்ணகி விண்ணேற்றம் நிகழ்ந்த மாதமாகக் கருதப்படும் சித்திரை மாதத்தில் நடப்பது இங்கு குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். தேனி மாவட்டத்தில், இன்னும் குறிப்பாகக் கம்பம் பள்ளத்தாக்கில் மாரியம்மன் குறித்த வழக்காற்றுக் கதைகளை ஆராய்கின்றபோது, ஒரு பொதுத்தன்மை விளங்குவதையும் அவை கண்ணகியின் அவலநிலையினை ஒத்த பெண் தெய்வத்தைக் குறிப்பதாகவுமே உள்ளன.
சாமாண்டியம்மனும் கண்ணகியும்
கம்பத்திலிருந்து சுருளிஅருவிக்குச் செல்லும் சாலையில், சாமாண்டிபுரம் என்கிற அழகிய சிற்றூர் உள்ளது. முல்லையாற்றுப்படுகையில் அமைந்த இவ்வூரில் முல்லைப்பெரியாற்றின் கரையோர வயல்வெளிகளுக்குள் ஒரு பழைமையான கோவில் ஒன்றுண்டு. அதுதான் சாமாண்டியம்மன் கோவில். இக்கோவிலின் வரலாற்றை மக்கள் இவ்வாறு விவரிக்கின்றனர்; அக்காலத்தில் கணவனை இழந்த பெண்ணொருத்தி இவ்வழியாகச் செல்கையில் இவ்விடத்தில் நின்று அழுதுகொண்டிருந்தாள். நீண்ட கூந்தலை உடையவளான அப்பெண் வயல்வெளியாகச் சென்றுகொண்டிருந்த இவ்வூர் வளையல்காரரிடம் தம் கைகளுக்கு வளையல் கேட்டதாகவும், வளையலைக் கொடுத்தபோது அவளது அழுகை இன்னும் அதிகமானதாகவும், வளையலைப் பெற்றுக்கொண்ட அவள் அதனை அணியாமல் தெற்கு நோக்கிச் சென்றதாகவும், அதனால்தான் இக்கோவிலின் வாசல்கூட தெற்கிலுள்ள மலையினை நோக்கி அமைந்திருப்பதாகவும் கூறுகின்றனர். அந்தத் தெற்கிலுள்ள மலைதான் கண்ணகிக்கோட்டம் அமைந்துள்ள வேங்கக்காடாகும். இந்தச் சாமாண்டியம்மன் கோவிலில் இருந்து பார்க்கையில் மலையிலுள்ள கண்ணகிக்கோட்டம் தெளிவாகத் தெரிகின்றது. இக்கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதப்பொருள் வளையல், குங்குமம், மங்கலநாண் ஆகும். கணவனின் ஆயுள் வேண்டுவோர், பிரிந்துசென்ற கணவன் மீண்டும் சேர விரும்புவோர் வழிபடும் கோயில் இதுவாகும். இவையெல்லாம் கண்ணகியின் தொன்மத்தினை ஆணித்தரமாக நமக்கு நினைவூட்டுவனவாகும்.
வண்ணாத்திப்பாறையெனும் விண்ணேத்திப்பாறை
கம்பம்கூடலூரில் யாரிடமாவது சென்று வண்ணாத்திப்பாறை எங்கிருக்கிறது என்றுகேட்டால், அவர்களது விரல்சுட்டும் இடம் மங்கலதேவி கண்ணகிக்கோட்டம் அமைந்துள்ள மலை நோக்கியே அமையும். இதனை மக்கள் பேச்சு வழக்கில் வண்ணாத்திப்பாறை என்றாலும், கடல் மட்டத்திலிருந்து 5500 அடி உயரமுள்ள அம்மலையில் வண்ணாத்தி என்கிற சொல் இடுகுறியாகவோ காரணமாகவோ இருக்க வாய்ப்பில்லை. மாறாக, விண்ணேத்திப்பாறை என்பதே சிலப்பதிகாரக் கண்ணோட்டத்தில் ஆராயும்போது சரியாக அமையும். கண்ணகி கோவலனுடன் விண்ணேற்றம் சென்ற இடமாதலின் விண்ணேத்திப்பாறையென வழங்கியிருக்கலாம். விண்ணேத்திப்பாறையே சிற்றூர் மக்களது பேச்சுவழக்கில் காலப்போக்கில் வண்ணாத்திப்பாறையாக மாற்றம் பெற்றிருக்கவேண்டும்.
இந்திரவில் போன்ற சுருள்வீழ் (சுருளி) அருவி
சிலப்பதிகாரக் காப்பியத்தில் குறிப்பிடப்படும் குன்றக்குறவர் வாழ்ந்த பகுதியில் அவர்கள் அருவியாடி மகிழ்ந்த மலையருவி குறித்த பதிவுகள் இடம்பெறுவதை நாமறிவோம். இளங்கோ இதனை,
“ இந்திரவில்லின் எழில்கொண்டு இழும் என்று
வந்து ஈங்கு இழியும் மலையருவி ஆடுதுமே
ஆடுதுமே தோழி! ஆடுதுமே தோழி!
—————————————————
மஞ்சுசூழ் சோலை மலையருவி ஆடுதுமே, ”
(வஞ்சிக்காண்டம், குன்றக்குரவை)
என்று குறிப்பிடுகின்றார். இங்குச் சுட்டப்படும் அருவி கண்ணகிக்கோட்டம் அருகாமையில் அமைந்துள்ள சுருளி அருவியே என்பது ஆய்வாளர்களது முடிவாக உள்ளது. இளங்கோ இதனை இந்திரனது வில் போன்ற தோற்றமுடைய அருவியென்கிறார். அதாவது வில்போல் வளைந்து வீழும் அருவியென்பது அவரது கூற்று. சுருண்டு வீழும் அருவி – சுருள்வீழ் அருவி – சுருளி அருவி என விரித்துப் பொருள்கொண்டும் இதனைப் பார்க்கலாம். மேற்கண்ட பாடலில் “மஞ்சுசூழ் சோலை மலையருவி” என்ற வரி கவனிக்கத்தக்க ஒன்றாகும். மஞ்சு என்பது மேகத்தைக் குறிக்கும் சொல்லாகும். இச்சுருளியருவிக்கு அருகாமையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் மேகமலை என்ற புகழ்பெற்ற இடமும் உள்ளது. எப்போதும் மேகங்கள் சூழ்ந்துள்ள மலையாதலின் மேகமலை என்றழைக்கப்படுகிறது. ஆகவே இளங்கோ குறிப்பிடும் அருவி இதுவே என்பது தெளிவாகின்றது. தவிர, கூடலூரை அடுத்து மேற்கே இரண்டு கி.மீ தொலைவில் சுரங்கனாறு அருவி ஒன்றும் உள்ளது. தோற்றத்தில் இளங்கோ விவரிக்கும் காட்சியை ஒத்து இதுவும் உள்ளது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். இந்த அருவி வீழும் மலைக்குப் பின்பகுதியில் மலைவாழ் மக்கள் இன்றும் வாழ்கின்றனர்.
குன்றக்குறவரும் பளியன் குடியும்
பளியன்குடி – மலைவாழ் பளியர் இன மக்கள் வாழும் தொன்மையான பகுதியாகும். இது மிகச்சரியாகக் கண்ணகி கோட்டத்திற்குக் கீழே அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியாகும். இம்மக்களின் வாழ்வாதாரம் வண்ணாத்திப்பாறை, வேங்கக்காடு என்கின்ற மலைப்பகுதிகளேயாகும். அங்குக் கிடைக்கும் தேன், வாசனைப்பட்டை, வாசனைப்பொருட்கள், மூலிகைகள், கடுக்காய் போன்ற இயற்கை வளங்களைச் சேகரித்துப் பிழைக்கின்றனர். சிலப்பதிகாரம் சுட்டும் குன்றக்குறவர் இவர்களே என்று துணிவதற்குப் பல சான்றுகள் உள்ளன. இம்மக்களது குலதெய்வம் பளிச்சியம்மன். பூர்வகுடிக் குறிஞ்சிநில மக்களான இவர்கள் தாம் வாழும் பகுதிக்கு ‘பளியன்குடி’ என இலக்கணநூலார் வகுத்தபடி (குடி) பெயரிட்டுள்ளனர். இவர்களது குலக்குறி (Totem) மரமாக வேங்கை மரத்தினைச் சுட்டுகின்றனர். வேங்கைமரங்கள் சூழ்ந்த பகுதியில்தான் தங்கள் குடியிருப்புகளை அமைத்துள்ளனர்.
தவிர, கண்ணகி கோட்டத்திற்குத் தெற்கு, அதாவது தற்போதைய கேரளப் பகுதியில் உள்ள தேக்கடி படகு இல்லத்தில் முன்பதிவு செய்துகொண்டு காட்டினுள் வாழும் பழங்குடியினரைச் சந்திக்கும் (Tribal visit) சுற்றுலா ஏற்பாடு இங்கு பிரபலமான ஒன்று. கேரள வனத்துறையின் கீழ் இயங்கும் இச்சுற்றுலா, வெளிநாட்டுப்பயணிகளை ஈர்க்கக்கூடிய ஒன்றாகும். அவ்வாறு அழைத்துச் சென்று காண்பிக்கப்படும் சுற்றுலா வாயிலாக நாம் அங்கு வாழும் பூர்வகுடிகளைச் சந்திக்கலாம். அவர்களது இருப்பிடமும் முல்லையாற்றின் ஓரமாகச் சரியாக கண்ணகி கோட்டத்திற்குத் தென்கிழக்கில் அமைந்துள்ளது. ஆக, எப்படிப்பார்த்தாலும் இங்கு கானவர் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது. இளங்கோ குறிப்பிடும் கானவர் இக்குடியைச் சார்ந்தவர்கள்தான் என்பது தெளிவு.
வேங்கைக்கானலும் வெட்டுக்காடு என்கிற வேங்கக்காடும்
கூடலூர், லோயர்கேம்ப் பகுதி மக்கள் கண்ணகிக்கோட்டம் அமைந்துள்ள மலையுச்சியினை வண்ணாத்திபாறை என்றும் அவ்வனப்பகுதிகளை வெட்டுக்காடு என்றும் வேங்கக்காடு, வேங்கச்சோலை என்றே இன்றளவும் அழைக்கின்றனர். அவர்கள் அவ்வாறு அழைப்பதிலும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. கண்ணகிக்கோட்டம் அமைந்திருக்கும் மலையில் பல்வேறு அரிய மரங்கள் இருப்பினும் அவற்றுள் அதிக அளவில் வேங்கைமரங்களே காணப்படுகின்றன. குறிஞ்சிநிலத்தின் அடையாளங்களில் ஒன்றான இவ்வேங்கை மரங்கள் சூழ்ந்த பகுதியில்தான் கானக்குறவர்கள் கண்ணகியினைக் கண்டதாக இளங்கோ விவரிக்கின்றார்.
கி.பி 2ஆம் நூற்றாண்டில் நடந்ததாக அறியப்படும் கண்ணகி கோவலன் தொடர்பான வரலாற்று நிகழ்வுகள் இம்மண்ணில் நிகழ்ந்த உண்மைச் சம்பவமாகவே எண்ணவேண்டியுள்ளது. அதனைச் சிலப்பதிகாரமெனக் காப்பிய வடிவில் இளங்கோ படைக்கும்போது புலவர்களுக்கேயுரிய கற்பனை, உணர்ச்சி நயங்கள் கலந்து விவரித்திருக்கலாம். ஆனால் அவர் விவரிக்கும் நிகழ்வுகள் உண்மையே என்பது இன்றைக்கு நாம் காணும் பல்வேறு சான்றுகளின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் கண்ணகி வரலாற்றைக் கேள்விப்பட்ட இளங்கோ சேரநாட்டின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு காப்பியத்தினை எழுதியிருக்க வாய்ப்பில்லை. அவர் பல ஆண்டுகள் கள ஆய்வினை மேற்கொண்டிருக்க வேண்டும். கண்ணகி வழித்தடத்தில் நிச்சயம் பயணித்திருக்க வேண்டும். இல்லையெனில் இவ்வளவு நுட்பமான சான்றுகளுடன் காப்பியம் படைத்திருக்க வாய்ப்பேயில்லை. ஆகவே இளங்கோ நம்மிடையே ஒரு களஆய்வு முன்னோடியாக மிளிர்கின்றார். மக்களது பண்பாட்டுடன் தொடர்புடைய நம்பிக்கைகள் அனைத்தும் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகள் அல்ல. அவற்றுள் அம்மண் சார்ந்த வரலாற்று நிகழ்வுகள் காலம்காலமாக தலைமுறை கடந்து உயிர்ப்புடன் பாதுகாக்கப்படுகின்றன என்பதைப் பல்வேறு தளங்களில் நாம் ஆராய வேண்டும் என்பதற்கு கண்ணகி வரலாறு ஒரு சான்றாகும்.
அருமையான பதிவு. கம்பம் நான் பிறந்த ஊர். நீங்கள் அளித்த வரலாற்று ஆதாரங்கள், இடக் குறிப்புகள் அனைத்தும் சரியே.
நன்றி மாதரசி அவர்களே… அடுத்தடுத்து நம் மண் சார்ந்த வரலாறுகளை ஆராந்துகொண்டிருக்கிறேன். அவற்றையும் வல்லினம் வாயிலாக வெளியிவேன்…
படித்துவிட்டுப் பகிரவும். நன்றி
மிக அருமையான கட்டுரை; மிக நுட்பமான ஆராய்சிக்குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. இந்தச் செய்திகள் பரவ வேண்டும்.
தங்களது செய்திக்கு
நன்றி தோழரே… தொடரும்…
இந்த கட்டுரை கதையாக இல்லை. உன்மை சம்பவமாக நான் இதை பார்க்கிறேன்.குன்றக்குறவர்கள் என்ற இனம் மலைக்குறவர் என்ற பெயரும் பெற்றுள்ளது. இவர்கள் மலைகளில் இருந்து எப்போது சமவெளிப்பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள் என்பதை விவரிக்க வேண்டுகிறேன். ் என்றும அன்புடன் ஆதிக்குமார்.
very mice article