அன்புவேந்தன் கவிதைகள்

அன்பின் வழி அதுanbu-2

 

நமது அன்பின் பெரும்பொழுது

எல்லையற்று விரியும்

இப்பெருநிலத்தின்

உயிர்க்கூட்டங்களின் மேல்

பிரபைகளைப் பொழிந்தபடி

நட்சத்திரங்களில் சிமிட்டிக்கொண்டிருக்க

நாம் அப்போதுதான்

ஒரு முத்தம் பகிரத் தொடங்கியிருந்தோம்.

 

தடங்களைத் தளர்த்தியபடி

நெகிழ்ந்த புலன்கள் பாவி

சிகரங்களையும்

சமவெளிகளையும்

பள்ளத்தாக்குகளையும்

சுழித்துத் திளைக்கும்

நமது அன்பின் நீர்மத்தில் மிதந்தபடி

ஒரு புணர்தலைத் தொடங்கியிருந்தோம்

 

திராவகத் தனிமையுள்

உருகி ஒளிர்ந்த சுயத்தின் மெழுகால்

வனைந்த பொம்மையுரு

யுகக்காத்திருப்பின் பிறைக்கீற்றாய்

நீ கிரணித்தாய்

உனது அன்பின் கதகதப்பில்

அது உமிழ்நீரொழுக

மொழி மிழற்றிய

காலச் சொட்டிலிருந்துதான்

நமது அன்பின் தீராப்பூரணத்தை

தின்னத் தொடங்கியிருந்தோம்

 

கூட்டிசைத் தாண்டவத்தினோர்

உச்சகதியில்

சிறுசொல் இடறி

நம் ஓர்மை பிசகிய

அத்தருணத்திலிருந்துதான்

நமது அன்பின் மென்சவ்வு

வலிக்கத் தொடங்கியிருந்தோம்.

 

தகி தகி தகிட

தகிட தகிட

தகித்தோம்

என்புதோல் நோக

தின்பன் கடிப்பன் தீர்ப்பன் என்பதாக

நம் விரல்களில் ஒலித்த

பூனைநகங்களின் உறுமலிருந்துதான்

நமது அன்பின் வன்மையை

அஞ்சத் தொடங்கியிருந்தோம்.

 

யாவும் கடந்து போகும்

நிலங்களும் பொழுதுகளும் உயிர்களும்

அற்றவையும்

பற்தடங்களில் பதிந்து நகரும்

சங்கிலிக்கண்ணிகள் சாத்தியமாக்கிய

நமது அன்பின் சக்கரங்களின் ஒத்திசைவின்

ராகத்திலிருந்துதான் அன்பே

நாம் பெருவெளியின் பயணத்தைத்

தொடங்கியிருக்கிறோம்.

 

* * * *

 

நிச்சயிக்கப்பட்ட மரணம்anbu-3

தன் துளிகளை

ஒவ்வொன்றாய் உலர்த்திக் கொண்டிருக்கிறது

 

உயிரில் பெருகும்

அன்பின் ஈரப்பதம்

வாழ்தலின்

நீர்மையைப் பெருக்கியபடியிருக்கிறது

எஞ்சித்திருத்தலின்

மிகக் கீழ்மையானதொரு

முத்தத்தின் நிமித்தம்

கொடுங்கனவுகளைத் துரத்திச்சென்று

கவ்விக் கொணரும்

என் விலங்கு இருதயம்

குரைத்தபடியே வாலாட்டிக்கொண்டு.

 

முதிர்ந்த இதழ்களின் பூவினுள்

முணுமுணுக்கும் சிறுவண்டு

மற்றுமோர் பருவத்தின்

மற்றுமோர் நாளில்

நிகழ்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...