நீயின்றி அமையாது உலகு – 7

tayagஉதடுகள் இரண்டும் ஒட்டிக்கொண்டன. கண்களைத் திறக்கத் தேவையான விசை எதுவென பிடிபடவில்லை. புருவங்கள் துடித்தன. கண்கள் மூடியபடியே இருந்தன. அந்த நொடி வாழ்வின் எல்லையில் நின்று எல்லையற்ற எதையோ பார்ப்பதாகப் பட்டது. கருமேகங்களின் மேல் நான் மிதப்பதாகவும், நானே மழையாகப் பொழிவது போலவும். நானே கடலாக, நானே நீராவியாக, அருவமானதாக, நானே அண்டம் முழுதும் நிறைந்துவிட்ட சூரியனாகி விட்டது போல, எல்லாவற்றிலும் நானே இருந்தேன் எல்லாவற்றையும் நானே இயக்கிக் கொண்டிருந்தேன்.

இன்னும் கொஞ்சநேரத்தில் அவள் உயிரை நானும் என் உயிரை அவளும் உறிஞ்சிவிடுவோம் என எச்சரிக்கை செய்த மனது அதனையே விரும்பியதுதான் விநோதம். அப்போது எனக்கு வயது 21 அவளுக்கு… இல்லை. . . இல்லை. . . அவருக்கு வயது 30!!!

பெண்களிடம் பேசுவது இயல்பாகவே மனதைக் குளிரச்செய்யும் ஒன்று. எந்தப் பெண்ணும் தன்னுடன் பழகும் ஆணின் மனதை சரியாகவே புரிந்துகொள்கிறாள். அவளால் தன்னுடைய எல்லையில் நின்றபடியே ஆணின் எல்லையை அழிக்க முடிகிறது. எல்லையற்ற கட்டுக்குள் ஆணை வரவைக்க முடிகிறது. அத்தகைய சக்தியை இன்னமும் நாம் புரிந்துகொள்ளவில்லை என்பது ஒரு புதிர்தான்.

குடும்பத்தில் மூத்தவளாகப் பெண் பிறந்துவிட்டால் அவளுக்கு அடுத்ததாக பிறக்கும் ஆணுக்கு தலையில் சொட்டை விழும் என்று ஏதோ நகைச்சவைப் புத்தகத்தில் படித்தேன். மனதில் குறுகுறுவென்றது. அந்தநாளில் எனக்கு முடி உதிருவதாக கற்பனை செய்துகொண்டிருந்தேன். ஒவ்வொருமுறை தலைவாரும்போதும் முடி உதிர்கிறதா என சீப்பையும் தரையையும் கவனிப்பேன். பின்னர் நானே ஒவ்வொரு முறையும் தலைமயிரை பிடுங்கிப் பார்க்கலானேன். உண்மையில் சீவும்போது உதிர்ந்த முடியை விடவும் நான் சந்தேகித்து பிடுங்கிய மயிர்தான் அதிகமாக இருந்தது எனப் பிறகு கண்டுகொண்டேன். சரி, படித்த அந்த நகைச்சுவை உண்மையா என பரிசோதிக்க முடிவு செய்தேன். அப்படி அது சரியென்றால் எனக்கு வழுக்கை விழாது ஏனெனில் எனக்கு மூத்ததாய் சகோதரி யாரும் பிறக்கவில்லை. அப்படி அது தவறென்றால் உடனே முடி உதிர்வதைத் தடுக்கக் களம் இறங்கியாக வேண்டும்

பள்ளிநண்பர்களிடம் அதுகுறித்து   வேறு  சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. யாரும் தனது அக்காவைப் பற்றியோ தங்கையைப் பற்றியோ பொதுவாகப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. மிக நெருக்கமானவர்களிடமே கொஞ்சமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் தனக்கு எந்தப்பயனும் இல்லாமல் அக்காவும் தங்கையும் இருக்கிறார்கள் என்பதுபோல தட்டிக்கழித்துவிடுகிறார்கள். அக்காவாக இருந்தால் நமக்கு சம்பாதிச்சிக் கொடுக்கணும் தங்கையாக இருந்தால் நாம சம்பாதிச்சிக் கொடுக்கணும் எனும் எழுதப்படாத விதி பல வீடுகளில் உள்ளன. எனக்கு உடன்பிறந்த அக்கா இல்லையென்றாலும் தோழிகளால் அதைச்   சமன்படுத்திக்   கொண்டேன்.

ஆரம்பப்பள்ளி படிக்கும் சமயத்தில் என்னைவிட வயது அதிகமான பல தோழிகள் எனக்கு இருந்தார்கள். அப்போது மட்டுமல்ல பள்ளிப்படிப்பு முடிந்த பின்னரும் எனக்கு அப்படியான நட்பும் அன்பும் கிடைத்தன. என்னால் அவர்களுடன் இயல்பாகவே பழக முடிந்தது. இப்படி சொல்லிய உடன் மலிவு சினிமாக்களில் பார்த்து பழகிய நகைச்சுவை ரசனையின் வெளிப்பாடாய் “இவனுக்கு ஆண்டிபோபியா அல்லது அக்கா போபியா” என்ற வியாதி இருக்கலாம் என சிலர் யோசித்திருக்கலாம்.tayag-2

நினைத்துப்பார்க்கையில் நான் பழகிய நண்பர்களுக்கும் இப்படித்தான். அவர்களைவிட வயது அதிகமான தோழிகள் இருக்கவே செய்கிறார்கள். சமீபத்தில் நண்பர்களுடன் இரவு விடுதியில் கதை பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எங்களின் பேச்சு அக்காக்களின் பக்கம் திரும்பியது.

தன்னைவிட வயது அதிகமான பெண்களையே இத்தலைமுறை ஆண்கள் விரும்புவதாகவும். அவர்கள்தான் பக்குவமாக நடப்பதாகவும் தம்முடைய கணவனைக் குழந்தைபோல பார்த்துக்கொள்வதாகவும் வெளிநாட்டினர் நம்புவதாக பேசிக்கொண்டோம்.  நமக்குத் தாமதமாகத்தான் தெரிந்தது எனவும் சொல்லிச் சிரித்துக் கொண்டோம். சிரித்த அடுத்தநொடி என்னால் அவர்களுடன் அமர்ந்திருக்க முடியவில்லை. மனதில் ஏதோ நெருடல். கொஞ்சமாய் (!) குடித்ததால் இருக்கலாம். ஆனாலும் ஆரஞ்சு ஜூஸுக்கெல்லாமா போதையாகும் என்று சொல்லிக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்து படிக்கட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பால்கனியில் நின்றுகொண்டேன்.

உணவு பரிமாறிய அம்மா, சமையலறைக்குச் சென்றுவிட்டார். அப்பாவும் நானும் மட்டுமே அமர்ந்திருந்தோம். அப்போதெல்லாம் தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடுவது வழக்கம். பல நாட்களாக அப்பாவிடம் கேட்டு விடுவது என்று மனதில் தேக்கி வைத்திருந்த கேள்வியைக் கேட்பதற்கான நேரம் இதுவென உள்ளுக்குள் என்னமோ கிளப்பிவிட்டது. பின்னர் என்ன நடக்கும் என்கிற பயத்தைவிட பதில் தெரியவேண்டிய ஆர்வம்தான் முதன்மையாக இருந்தது.

“அப்பா நம்மைவிட வயசு கூட உள்ளவங்களைக் கல்யாணம் செய்யக் கூடாதா..?

அப்பா சாப்பிடுவதை நிறுத்தினார். என் கண்களையே ஆழமாகப் பார்த்தார்.

“எப்படிடா கல்யாணம் செய்றது? அவங்க நமக்கு அக்கா இல்லையா..?”

அப்பா மீண்டும் சாப்பிடத் துவங்கினார். என்னால் அப்பாவை வைத்த கண் வாங்காமல் பார்க்க மட்டுமே முடிந்தது. புரிந்துகொண்ட அப்பா,

“இரு உங்கம்மாகிட்ட சொல்லவா….”

“ஐயோ! வேணவே வேணாம்.. சும்மாதான் கேட்டேன்… விடுங்க..” என்று சாப்பிட ஆரம்பித்தேன்.

இன்றுவரை அம்மாவுக்குத் தெரியுமா தெரியாதா என்று எனக்குத் தெரியாது. அதன்பிறகு அப்பாவும் நாசுக்காகக்கூட என்னிடம் அக்கேள்வி குறித்துக் கேட்கவில்லை. ஒருவேளை கேட்டிருந்தாலோ கோபப்பட்டிருந்தாலோ என்னவெல்லாமோ நடந்திருக்கலாம். தடைபடும் நீரோட்டத்தின் வேகம் அதிகரிப்பது போல அந்த வயதில் கிறுக்குத்தனமாக எதையாவது செய்திருப்பேன். நிதானமாக எதிர்கொண்ட அப்பாவின் செயல், என்னை மேற்கொண்டு குழப்பமடையாமல் செய்தது.

அப்பாவிடம் அப்படி கேட்க என்ன காரணம்.

எஸ்.டி.பி.எம் படிப்பு முடிந்து தற்காலிகமாக வேலை தேடிக்கொள்ளச் சொன்னார்கள். பரிட்சையில் எப்போதும்போல நல்ல புள்ளிகள் கிடைக்கப்போவதில்லை என்பது தெரிந்ததுதான். ஆகவே தேர்வு முடிவு வரும் முன்னமே ஏதாவது இடத்தில்  நிரந்தரமாக வேலைக்குப் போகலாம் என்று முடிவு செய்தேன். ஏற்கனவே எடுத்திருந்த சான்றிதழ், பரிட்சை புள்ளி விபரங்களை எடுத்துக்கொண்டு அங்குள்ள வேலைக்கு ஆள் தேவையென்ற பலகைகள் கொண்ட தொழிற்சாலைகளுக்குச் சென்றேன். தொழிற்சாலைகளில் வேலை கிடைக்கவேண்டுமெனில் ஒன்று படித்து பட்டம் வாங்கியிருக்க வேண்டும் அல்லது படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். நான் இரண்டுக்கும் நடுவில் நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டதால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டேன்.

பின்னர் உறவினர் மூலம் ஒரு வேலை வாய்ப்பு குறித்துத் தெரிய வந்தது. அங்கு அவசரமாக ஆள் தேவையென்பதால், முதல் நாள் நேர்முகத்தேர்வை முடித்ததும் மூன்று நாள்களில் வேலைக்கு வரச்சொல்லிவிட்டார்கள்.

மின்சார பிளக்குகளின் உள்ளிருக்கும் மின் கம்பிகளை செய்யும் தொழிற்சாலை அது. நல்லவேளையாக எனக்கு கூட்டத்தோடு வேலை இல்லாமல் தனியே ஐந்து பேர் கொண்ட அறையில் வேலை. தொழிலாளர்கள் செய்யும் மின்கம்பிகளின் சிலதை தேர்ந்தெடுந்து அதன் தரத்தை பரிசோதிக்கும் பணி.

அப்போது பார்க்கக் கொஞ்சம் அழகாக இருந்திருக்க வேண்டும். உள்ளுக்குள் சினிமா நாயகனாகும் ஆசை இருந்ததால், நடை உடை எல்லாம் தோரணையாக இருக்கும். அதிலும் அதிர்ஷ்டம் கிடைத்தது. மற்ற பணியாளர்கள் போல நாங்கள் சீருடை அணியத் தேவையில்லை.

தொழிற்சாலை என்பது வெறும் பொருட்கள் உற்பத்தி செய்யும்கூடம் அல்ல. எழுத்திலோ திரையிலோ காண முடியாத பல கதைகளை அங்கு பார்க்கலாம் கேட்கலாம். உண்மை என்பது கற்பனையை விட மோசமானது என்பதை அங்குதான் தெரிந்துகொண்டேன். இதற்கு முன், படிக்கும் சமயத்தில் பகுதி நேரமாக துப்புரவுப் பணியாளர் வேலை செய்தது இச்சூழலைப் புரிந்துகொள்ள உதவியது.

எனது உறவினர் அங்கு பணி செய்ததால் அம்மாவிடம் ஏதோ சொல்லியிருக்க வேண்டும். வேலைக்கு சேர்ந்த சில வாரங்களிலேயே அம்மா அறிவுரை கூறத்தொடங்கிவிட்டார். அதில் முக்கியமானது மலாய் பெண்களிடம் பார்த்து பழக வேண்டுமாம். ஆண்கள், அவர்களின் அழகில் சீக்கிரத்தில் மயங்கக்கூடியவர்களாம். பள்ளிக்கூடத்தில் பார்த்த மலாய் பெண்கள் போல அல்லாமல். இவர்கள் பார்ப்பதற்கு லட்சணமாய் இருந்தார்கள். கூடவே இந்தோனேசியப் பெண்கள், மியன்மார், வியட்னாம் பெண்கள் என அழகிகள் நிறைந்த இடமாகத் தெரிந்தது. நம்மவர்களும் கணிசமாகவே இருந்தார்கள். அழகானவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் என்னால் சிலரை மட்டுமே சந்திக்க முடிந்தது. என் பணி அவர்களின் வரிசையில் முதலில் அமர்ந்திருப்பவரிடம் இருந்துதான் பரிசோதிக்க கம்பிகளை எடுக்க வேண்டும்.. என் நேரம், அழகானவர்கள் எல்லாம் வரிசையின் கடைசியில் இருக்க, முன் வரிசையில் பாட்டிகள் அமர்ந்திருந்தார்கள்.

வேலை ஆர்வத்தில் நான் பரிசோதித்த கம்பியில் உள்ள கோளாறை கவனிக்காமல் போனேன். வேலை ஆர்வம் என்பது கண் முன் பார்க்கவேண்டிய கம்பிகளைப் பார்க்காமல் அதைத்தாண்டி கண்களை அலைய விட்ட ஆர்வம்தான். ஒரு பெட்டி நிறைய கம்பிகள் வீணாகிப்போtayag-1னது. வேலைக்குச் சேர்ந்து சில மாதங்கள்தான் ஆகிறது . நான்தான் காரணம் என்று தெரிந்தால் நிச்சயம் வேலையில் இருந்து நீக்கிவிடுவார்கள். வேறு வேலை தேடிக்கொள்ளலாம்தான். ஆனால் இத்தனை அழகிகளை ஒரே சமயத்தில் இழந்துவிட விரும்பவில்லை. நான் மாட்டிக்கொண்டால் என்னுடம் சேர்ந்து இன்னும் நான்கு பணியாளர்கள் மாட்டிகொள்வார்கள் . ஐந்து  பேருமே ஒரே தவறைத்தான் செய்திருக்கிறோம்.. வரைபடத்தில் இருப்பது போலத்தான் கம்பிகளை இணைக்க வேண்டும். ஆனால் வலது பக்கம் இருக்க வேண்டிய கம்பி இடது பக்கத்திலும், இடது பக்க கம்பி வலது பக்கத்திலுமாக மாறிப்போனது. பெட்டியில் அடுக்கும்போதுதான் வரைபடத்தை தலைகீழாகப் பார்த்துள்ளோம் எனப் புரிந்தது.

அப்போதுதான் அவரை சந்தித்தேன். குள்ளமான உருவம் . கறுத்த நிறம். எதையும் எவரையும் எடுத்தெறிந்து பேசும் குணம். யாரிடமும் பயமில்லை என்கிற நடை. தொழிற்சாலைக்கு வரும் கம்பிகள் எல்லாம் அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தன. எந்தப் பிரிவுக்கு எத்தனை நீளம் கம்பிகளை வெட்டிக்கொடுக்க வேண்டும் என்கிற பொறுப்பில் அவர் இருந்தார்.

நாங்கள் ஐந்து பேரும் அவரது அறைக்கு சென்றோம். யாருக்கும் சந்தேகம் வராமல் பார்த்துக்கொண்டோம். எட்டப்பன்களும் எட்டம்மாக்களும் எங்கு வேண்டுமானாலும் இருப்பார்கள் என்பதை அங்கு சென்ற சிலநாட்களிலேயே கண்டுகொண்டேன். ஐந்துபேரில் நான் மட்டும் புதியவன் என்பதால் அவரின் தோரணை எனக்கு மிகுந்த பதட்டத்தைக் கொடுத்தது.

எப்படி அவரிடம் உதவி கேட்பது என்றும் எனக்கு தெரியவில்லை. அவர்தான் ஆரம்பித்தார் “என்ன தம்பி எதுக்கோ தப்பா சைன் வச்சிட்டிங்களாமே இப்படித்தான் வேலை செய்விங்களா..?”

எனக்கு அது அவமானத்தைக் கொடுத்தது. அவரது உதடுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். கம்பிகளைக் கொண்டு அவ்வுதடுகளைத் தைக்க வேண்டும் என்று தோன்றியது. பின்னாளில் அவ்வுதடுதான் எனக்கு பல திறப்புகளைக் கொடுக்கும் என்று தெரிந்திருக்கவில்லை. அவரின் வயதும் அப்போது எனக்குத் தெரியாது.

1 comment for “நீயின்றி அமையாது உலகு – 7

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...