“இலக்கியம் சொல்வதல்ல காட்டுவது” – ஜெயமோகன் பட்டறை அனுபவம்.

001கடந்த 11.9.2016 – ஞாயிற்றுக்கிழமை வல்லினம் நடத்திய சிறுகதைக் கருத்தரங்கில் கலந்துகொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குறிப்பிட்ட சிலரே இதில் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டபோது, என்னையும் வருமாறு அழைத்து பங்குகொள்ளச் செய்தார்கள். இதில் கலந்துகொள்ள வல்லினம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பங்கெடுத்திருப்பது முக்கியத் தகுதி.  முதலில் ஒரு புலனக்குழுவை உருவாக்கி, போட்டியில் பங்குகொண்டவர்கள் இணைக்கப்பட்டனர். தொடர்ந்து அதில் பகிரப்படும் கதைகளை வாசித்து அது குறித்துப் பேசவேண்டும் என்பது நிபந்தனை. மௌனமாக இருந்த சிலர் உடனுக்குடன்  பாராபட்சம் இன்றி நீக்கப்பட்டனர். ஆர்வமாகக் கலந்துகொண்டவர்கள் மட்டுமே கலந்துரையாடலில் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கலைந்துரையாடலுக்கு வருவதற்கு முன் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த 20 கதைகள் எங்களுக்குள் கலந்துரையாடப்பட்டது.  சிறுகதைப் போட்டியை ஒரு சடங்காக நடத்தாமல் அதன் மூலம் நல்ல எழுத்தாளர்களை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாக அது இருந்தது.

சிறுகதை எப்படி இருக்கவேண்டும்?  ஒரு கதையை எப்படிச்சொல்லவேண்டும்? அதில் என்னென்ன கூறுகள் அவசியம்? எத்தனைப் பக்கங்கள் இருக்கலாம்? எத்தனை கதாபாத்திரங்கள் வைத்தல் அவசியம்? எப்படித் தொடங்கி எப்படி முடிக்கவேண்டும்? தலைப்பு எதைச்சார்ந்து இருக்கவேண்டும்?  போன்ற வினாக்கள் எழுத ஆரம்பிக்கிற ஒவ்வொரு எழுத்தாளனுக்கும்  இருக்கும்.   இதையொட்டிய சந்தேகங்களுக்கு விடையளிப்பதற்காகக்,  கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் எழுத்தாளர். ஜெயமோகன் எங்களோடு கலந்துரையாடினார். தேசியக் கல்விக்கழகத்தின் அழைப்பில் சிங்கப்பூருக்கு மூன்று மாதம் மாணவர்களுக்குப் புனைவிலக்கியம் தொடர்பாகப் பயிற்சியளிக்க வந்திருந்த அவர், புதிய எழுத்தாளர்களிடம் எவ்வாறு புனைவிலக்கிய அறிமுகத்தைச் செய்ய வேண்டும் என்பதில் மிகவும் புலமை பெற்றிருந்தார் என்பது அந்த நான்கு மணி நேரத்தில் அறிய முடிந்தது.

நாம் எல்லோரும் பள்ளியில் தமிழ் இலக்கியம் பயின்றிருப்போம். அங்கே குறிப்பிட்ட சிலரின் நாவல்களைக் கொடுத்து வாசிக்கச்சொல்லி இலக்கியப்புரிதல் பற்றிய கருத்துகளை எழுதுங்கள் என்பார்கள். அக்கதைகள் பெரும்பாலும் நீதி போதிப்பவையாகவே இருக்கும். அறம் சார்ந்த கதைகளாகவே அவை இருக்கும். கல்விப்பாடத்திட்டத்தின் கீழ் சில விஷயங்கள் இப்படித்தான் இருந்தாகவேண்டும். அது போதனாமுறையின் நியதி. ஆனால், 002அதுதான் இலக்கியம் என்கிற பார்வையில் இருந்து மலேசியத் தமிழ் வாசகர்கள் பெரும்பாலும் வெளிவருவதில்லை..

இன்றளவும் அதுதான் இலக்கியம், இலக்கியம் இப்படித்தான் ஆரம்பிக்கப்படவேண்டும், இப்படித்தான் பயணிக்கவேண்டும், இப்படித்தான் முடிக்கப்படவேண்டும், என்கிற கோட்பாட்டினைப் பிடித்துக்கொண்டு, தற்போதைய உண்மையான வாழ்வுச்சூழலை கிரகித்து உள்வாங்கிக்கொள்ளாமல் அழகியல், மேன்நிலை, அறவழிச் சிந்தனை, நீதிவெல்லும் போன்ற போதனை சார்பான அம்சங்களைக் குறிவைத்து பழங்காலப் பின்னணியில் புனைவுகள் இந்நாட்டில் தொடர்ந்து வெளிவந்து அவை பரிசுகளும் பெற்றுக்கொண்டிருக்கின்றன. போதனைகளின்பால் கொண்டுள்ள பக்தியால் புனைவுகளின் வழி நீதிபோதனைகளை நாம் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறான மரபான சிந்தனை உள்ளவர்களின் எண்ணங்களைப் புரட்டிப்போட்டது ஜெயமோகனின் உரை. “கதைகளின் வழி நீதிகளைப் போதிக்க நீங்கள் யார்? எழுத்தாணியைப் பிடிக்கின்றபோது, உங்கள் எழுத்தை வாசிக்கின்ற வாசகன் தமிழ் இலக்கியச் சிகரங்களான அசோகமித்திரன் மற்றும் புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களின் எழுத்தினை வாசித்து தனது பார்வையினை விசாலப்படுத்தியவனாக இருந்தால், நீங்கள் சொல்கிற போதனைகள் அங்கே செல்லுபடியாகுமா? உங்களைவிட விரிவான அறிவுள்ளவர்கள் உங்கள் கதைகளை வாசிப்பார்கள் என்கிற பிரக்ஞை இருந்தால், புனைவுகளில் போதனைகளைச் சொல்வீர்களா? வாசகன் என்பவன் முட்டாள் இல்லை. அவன் நம்மைக்காட்டிலும் நுட்பமானவன் என்ற அறிதலே நல்ல கதைகள் உருவாக வழிவகுக்கும்” என்ற ஜெயமோகனின் வெளிப்பாடு இளம் எழுத்தாளர்களைச் சிந்திக்க வைத்திருக்கும்.

03கதைகளில்  தூய தமிழின் பயன்பாடு குறித்தும் அவர் தன் கருத்தைப் பகிர்ந்துகொண்டார்.  “இலக்கியம் வாழ்வியலைச் சொல்லவேண்டும், உண்மையைச் சொல்லவேண்டும், அப்படிச்சொல்கிறபோது வாசிக்கின்ற வாசகனுக்கு அது யதார்த்த உணர்வினைக் கொடுக்கும். வழக்கத்தில் உள்ள சொல்லை நீங்கள் ஏன் மாற்றியமைக்க நினைக்கிறீர்கள்? ஒரு சொல் எல்லோராலும் பேசப்படுகிறது என்றால், அதை அப்படியே சொல்வதில் என்ன பிரச்னை ? நமது  வேலை தமிழ்போதிப்பதல்ல. மலேசியாவில் தூய தமிழ் பேசப்படுகிறது என்கிறார்கள். அதில் உங்களுக்குப் பெருமிதம் உண்டு. ஆனால்  அது உண்மையா? தூய தமிழ் என்பது முற்றிலும் வேறானது. அதை தற்போதைய யதார்த்த வாழ்வியலைச் சொல்கிற படைப்புகளில் வலுக்கட்டாயமாக நுழைக்க நினைப்பது ஒவ்வாது. புனைவிலக்கியம் வாழ்வின் நிதர்சனத்தையல்லவா பேசவேண்டும். எழுதுகிறபோது தூய தமிழ்ச்சொற்களைத் தேடிக்கொண்டிருந்தால், எழுத்தில் உண்மையற்ற தன்மையே வெளிப்படும். நான் எனது ‘கொற்றவை’ நாவலை முழுமையாக பிற மொழிக்கலப்பில்லாமல் எழுதியுள்ளேன். நான் மொழியை இழக்கச் சொல்லவில்லை. எதார்த்த மொழியைச் சொல்கிறேன். உதாரணமாக ‘பேஸ்புக்’ என்பது இன்று ‘முகநூல்’ எனப் புழக்கத்தில் வந்துவிட்டது. எல்லோருக்கும் அது தெரிந்தும் விட்டது. ஆக ‘முகநூல்’ என்றே புனைவுகளில் எழுதலாம்” என அவர் விளக்கம் கொடுத்தார்.

மேலும், “கதை எழுதுகிறவர்கள், எப்படி அக்கதையினை முடிக்கவேண்டும் என்கிற முன்முடிவு இல்லாமல் கதை எழுத ஆரம்பிக்கக்கூடாது. முடிவில் சொல்லப்படும் திருப்பமே வாசகனின் கண்களை அலக விரியவைக்கின்ற சிறந்த சிறுகதைகளாகப் பேசப்படும். முடிவில் ஒரு தொடக்கம் இருக்கவேண்டும். வாசகன் அதை மனதால் அசைபோட்டுத்  தொடரவேண்டும்.  சொல்லவிருக்கின்ற கரு மனதில் நிழலாடட்டும், பிறகு அது பிரிந்து இரண்டு கதைகளாகவும் மாறலாம், வேறொரு தடத்திற்கும் அது நம்மை இட்டுச்செல்லலாம்.  ஆனால் எப்படி ஒரு கதையினை முடிக்கப்போகிறோம் என்கிற தெளிவு இல்லாமல் எழுத ஆரம்பித்தோமென்றால், கதையில் சலிப்பூட்டும் சங்கதிகள் நுழையத் துவங்கிவிடும். பிறகு அது வாசகனுக்குச் சோர்வினை ஏற்படுத்திவிடும்.” என புதிய எழுத்தாளர்களுக்கான ஆரம்ப ஆயத்தங்கள் சிலவற்றை முன்வைத்தார்.

உத்தி பற்றியும் அவர் கருத்துரைத்தார். “ஒரு படைப்பிற்குள் வாசகனை நுழைக்க, எழுத்தாளர் எந்த உத்தியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் வாசகனை ஏமாற்றக்கூடாது.” இங்கே, ஒருபக்கக் கதை ஒன்றினை உதாரணம் காட்டினார். “ஒரு கொலை நடக்கிறது , இருவர்தான் சாட்சி. மற்றொரு இடத்திலும் அதேபோன்று கொலை நடக்கிறது அங்கேயும் அதே இருவர்தான் சாட்சி. மூன்றாம் இடத்திலும் இதே பாணியில் மீண்டும் ஒரு கொலை நடக்கிறது. இங்கேயும் அந்த இருவர்தான் சாட்சி. யார் அந்த இருவர்? என கதையின் முடிவில் சொல்கிறார்கள்.  ‘எழுதிய நானும் வாசித்த நீயும்’ என கதை முடிகிறது. இது சுவாரஸ்யமான கதை நகர்த்தல் பாணிதான். ஒருவகையில் வாசகனை வசப்படுத்தும் யுக்தி. ஆனால்  இம்மாதிரியான கதைகள் எப்போதுமே இலக்கியம் ஆகாது.” என சுவாரசியமான உத்திக்கும் கதை கொண்டுள்ள வாழ்வு குறித்த அக்கறைக்குமான வித்தியாசத்தை விளக்கினார். பொழுதுபோக்கு இலக்கியங்களின் தன்மையையும் இதன் வழி எங்களால் அறிய முடிந்தது.

வர்ணனைகள் குறித்தும் ஜெயமோகன் இந்த அமர்வில் பகிர்ந்துகொண்டார். “ஆண்டாண்டு காலமாக பல பழைய எழுத்தாளர்கள் கையாண்டு வந்திருக்கின்ற சிறுகதை வர்ணனைகளின் தன்மைகளை நாம் கைவிடவேண்டும். உதாரணம், காலைச்சூரியன் உதயமாகி, அதன் ஒளிக்கீற்றுகள் ஜன்னலைத் துளைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தது, கமலா படுக்கையில் கிடந்தாள்’ போன்றவை சோர்வளிக்கக்கூடியவை. நல்ல வாசகன் ஒருபோதும் பழமையாகிவிட்ட வர்ணனைகளை விரும்புவதில்லை” என்றார்.

ஜெயமோகன் சொல்லும் அனைத்தும் எங்களுக்கு மிக எளிதாகப் புரியும்படி இருந்தது. முக்கியமாக அவர்004 நல்ல சிறுகதையின்  அடிப்படைத்தன்மையைச் சொன்ன விதம். “கதையைச் சொல்லாதீர்கள். கதையைக் காட்டுங்கள். வாசகனை கதையோடு பயணிக்கவையுங்கள். உதாரணத்திற்கு: ‘நான் இன்று ஒரு விபத்தைப் பார்த்தேன். இரண்டு பேர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். எனக்கு இனம்புரியாத ஓர் உணர்வு வந்தது. அதை எப்படிச்சொல்வதென்றே தெரியவில்லை.’ இப்படி எழுதுதைவிட, காலையில் அலுவலகம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கையில் இரண்டு கார்கள் சாலையில் தடம்புரண்டு கிடந்தன, பின் இருக்கையில் நான், டிரைவரின் தோளில் தட்டி, மெதுவாகச் செல்லும்படி சொல்லி, இடர்பாடுகளில் சிக்கிய உடல்களை ….’ என்று தொடர்ந்தால் காட்சி வாசகனுக்குக் காட்டப்படுகிறது.  இதில் micro details அவசியமானது. நுண்ணிய தகவல்களே ஒரு சிறுகதையை கலைத்தன்மையுடையதாக மாற்றுகிறது. ‘Micro details’ கதை பாணிக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லலாம். ஒரு பெண் காலையில் எழுந்து காப்பி போடுகிறாரென்று வைத்துக் கொள்ளுங்களேன். அவளைப்பற்றிய ஒரு  பார்வையை நாம் வாசகனுக்குக்  கொடுக்கவேண்டும். ‘அவள் படுக்கையை விட்டு எழும்போது நேற்று இரவு வாசித்த புத்தகம் மார்பில் இருந்து கீழே விழ, அதை எடுத்து அறையில் உள்ள புத்தக அலமாரியில் வைத்துவிட்டு, ரிமோட் கன்ட்ரோலைத் தட்டி தொலைக்காட்சிப்பெட்டியினை முடுக்கி, ஆங்கிலப்பாடல் ஒன்றினைக் கேட்டுக்கொண்டே, காப்பி போட மைஃக்ரொவேவ் அவனை ஆன் செய்தாள்’ என்று காட்டலாம்.  அப்படிக்காட்டுகிறபோது, வாசகன் கதைக்குள் நுழைகிறான். அவனே அந்தப்பாத்திரத்தின் நிலைமையை யூகித்துக் கொள்கிறான்.  அவள் யார்? ஏழையா? செல்வசெழிப்பில் உள்ளவரா? படித்தவரா என்பனவற்றையெல்லாம்  விலாவாரியாக விளக்கத் தேவையில்லை. அவை எல்லாமே அந்த micro details பின்புலத்தில் வாசகனுக்கு விளங்கிவிடுகிறது.”

வாசகனை சஹிருதயன் என்கிறார் ஜெ. அவனை நம்மோடு பயணிக்கவைக்கவேண்டும். நாம் சொல்லாமல் விட்ட விஷயங்களில் அவன் நுழைந்துகொள்வான். வாசகனுக்குப்புரியாது என்று நினைத்து, விலாவாரியாக நாமே எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டு போனால், நாம் அவனை அவமதிக்கிறோம் என்றே பொருள் என விளக்கினார்.

இளம் எழுத்தாளர்களின் சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்துக்கொண்டிருந்த ஜெயமோகன் “கதையினை சீரியல் போல் இழுக்கக்கூடாது. ஒரு அம்மா கதை எழுதினார். இந்தியாவில் பிறந்து வளர்ந்து, பள்ளிக்குச்சென்று, கல்லூரி படித்து, மலேசியாவில் வாழ்க்கைப்பட்டு, கஷ்டப்பட்டு குழந்தைகள் பெற்று, குழந்தைகளைப்  பேணி வளர்த்து, அவர்களை பள்ளிக்கு அனுப்பி, கல்லூரிக்கு அனுப்பி, கல்யாணம் முடித்து பேரப்பிள்ளையினை பற்றி சொல்லவந்த கதை அதுவாம். ‘அம்மா உங்களின் கதைக்கு எவ்வளவு பணம் எதிர்ப்பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டு சீரியல்களில் சேர்த்துக்கொள்ளலாமே!’, என்று வேடிக்கையாகக் கேட்டேன் என தனது அனுபவத்தைப் பகிர்ந்தவர், ஒரு சிறுகதைக்கு யார் முக்கியம் என்று கருதுகிறீர்களோ, அவர்களைப் பற்றி மட்டுமே சொல்லுங்கள். மற்றவர்களை மிதமாகக் காட்டி நிறுத்திக்கொள்ளலாம். கதை நம்மோடு மிக நெருக்கமாக இருக்கவேண்டும். ” என்றார்.

“சுவாரஸ்ய டுவிஸ்ட்களைக் கொண்ட தற்போதைய ‘ஜோக்ஸ்’கள் எல்லாமும் சிறுகதை வடிவமே. ஜோக்ஸ்களைச் சொல்லி முடித்தவுடன் நாம் சிரிக்கிறோம். அதற்கு நாம் விளக்கம் கொடுத்துக்கொண்டா இருக்கிறோம்? கேட்பவனுக்குப் புரிகிறதுதானே! புரிந்ததால்தானே சிரிக்கின்றான். சர்தார்ஜி ஜோக் ஒன்று  உதாரணம் சொல்லலாம். ஒரு சர்தார்ஜி, பூனையை எடுத்துக்கொண்டு செல்கிறார். அதைப்பார்த்த ஒருவன்,“பூனையை எங்கே கொண்டு செல்கிறாய்.?” எனக்கேட்க, சர்தார்ஜி, “பூனையைக் குளிப்பாட்டப் போகிறேன்.’’ என்றார். மற்றவன், “பூனையை நீரில் நனைத்தால் செத்துப்போகும்’’ என எச்சரிக்கிறான். சர்தார்ஜி, “அதெல்லாம் எனக்குத்தெரியும்.’’ எனப்போகிறார். மீண்டும் திரும்புகிறபோது சர்தார்ஜி மட்டும் தனியே வந்தார். அதே ஆள் “பூனை எங்கே.?’’ எனக்கேட்க சர்தார்ஜி, “செத்துப்போச்சு.!’’ என்கிறார் வருத்தமாக. மற்றவனும் வருத்தமாக “நான்தான் சொன்னேனே, நீரில் நனைத்தால் செத்துப்போகும் என்று’’ எனக்கூற சர்தார்ஜி, “நனைத்ததால் செத்துப்போகவில்லை, பிழிந்தபோதுதான் செத்துப்போச்சு..!!’’ என்கிறார். இதைக்கேட்டவுடன் நாம் சிரிக்கிறோம். காரணம் கதையில் நாம் ஒன்றிவிட்டோம். வாசகன் சுய புத்தியில் கதையினைப் புரிந்துகொண்டு, எங்கே என்ன தவறு நிகழ்ந்திருக்கும் என்று யூகித்து, உள்வாங்கிக்கொள்கிறான். ஆனால் இது எல்லோருக்கும் புரியும் என்றும் சொல்லிவிடமுடியாது. காரணம் வயதானவர்களுக்கு ஜோக்ஸ் புரியாது. என்ன ஜோக்ஸ் சொன்னாலும் விளக்கம் கேட்பார்கள். விளக்கம் கொடுத்து சிரிக்கவைக்க முடியுமா? ” என கதையில் ஒரு திருப்பம் கொடுக்கும் சுவாரசியத்தை எளிமையாக விளக்கினார்.

005“இதே நிலைதான் இங்குள்ள இலக்கியச்சூழலிலும்.  படைப்புலகம் போற்றுகிற ஆளுமைகளாக சில இலக்கியவாதிகள் நம்மோடு இருப்பார்கள். நல்லவர்கள். அவர்களின் குணாதிசயங்களைப் பற்றி குறைசொல்ல இயலாது. பண்பானவர்கள். இலக்கியம் பற்றிய தேர்வுகள் போதனைகள் எல்லாமும் அவர்களின் அதிகாரத்தில் இருக்கும். ஆனால் வாழ்வைப்பேசுகிற நிஜமான இலக்கியங்களை, `அது இலக்கியமே இல்லை.’ என்பார்கள். வட்டார வழக்கை, `எழுத்துப்பிழை.’ என்பார்கள். நிதர்சனப் பேச்சு வழக்கை, `பிறமொழிக்கலப்பு’ என்பார்கள். உண்மையைச் சொன்னால், `செக்ஸ் கதை.’, என்பார்கள். அரசியல் ஆளுமைகளைச் சாடினால், `தேவையில்லாத புகுத்தல்’ என்பார்கள். வாசகனின் புரிதலுக்காக  முடிவைச் சொல்லாமல் விட்டால், `கதையை முடிக்கவில்லை’ , என்பார்கள். அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், நமது எழுத்து, எந்த விதத்திலும் பத்திரிகை ஆசிரியர்களின் அகங்காரத்தைக் காயப்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்படி இருந்தால், பிரசுரத்தகுதியை அது இழந்துவிடும். இப்படித்தான் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த வாசிப்பும் குறுகி, வளர்ச்சி குன்றிப்போகிறது.” என அவர் கூறியபோது மலேசியச் சூழலுக்கு முழுக்கப் பொருந்திவருவதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

தொடர்ந்து ஜெ, நிறைய சுவாரஸ்ய திருப்புமுனைகளைக் கொண்ட கதைகளை எங்களோடு பகிர்ந்தார். கேட்பதற்கு அவ்வளவு உற்சாகமாக இருந்தது. அக்கதைகளைச் செவிமெடுத்தவர்களுக்கு, சிறுகதைகள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்கிற தெளிவு நிச்சயம் பிறந்திருக்கும். சிறுகதையிலிருந்து பேச்சு கொஞ்சம் இலக்கிய வாசிப்பு குறித்தும் சென்றது. சங்க இலக்கியம் பயில்வதற்கு நீங்கள் நவீன இலக்கிய வாசிப்பில் இருந்தே தொடங்கலாம். வாசிப்பில் தேர்ச்சி கூடும்போது சங்க இலக்கியங்களுக்குள் மிகச்சுலபமாக நுழைந்து விடுவீர்கள். மு.வரதராசன் தொடங்கி உரையாசிரியர்கள் பலர் சில குறள்களுக்குச் சரியான முறையில் விளக்க உரையினை எழுதாமல் இருக்கின்றார்கள். திருக்குறளில் சொல்லப்பட்ட விவரங்கள் வேறு. ஒவ்வொரு குறளும் ஒரு கவிதை. அதை நுணுகி வாசிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு :

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்

என்ற குறளை எடுத்துக்கொள்வோம். இதன் பொருள் மிக மேம்போக்காகவே சொல்லப்படுகிறது. ஆனால் இக்குறளை  எப்படிப் பார்க்கவேண்டும்? குழல் எனும் இசைக்கருவி உதட்டால் உரசுகிறபோது இசையினை வழங்கக்கூடியது. யாழ், விரல்களால் மீட்டுகிறபோது இசையினைக் கொடுக்கக்கூடியது. இப்படி உள்வாங்கினால் இதன் அர்த்தம் வேறுபடும் .அதாவது குழந்தையை உதடுகளால் முத்தமிட்டும், தொட்டு மார்போடு அணைத்தும், அறியும் பேரனுபவம் இக்குறளின் வரியில் உள்ளது.

வல்லின ஏற்பாட்டின் கீழ் நடந்தேறிய இவ்விலக்கியக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, எனது எழுத்து பாணியும் மாறியிருக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன். இதுபோன்ற இலக்கிய கலந்துரையாடல்கள் நமக்குத் தூண்டுகோல்தான். எழுத்துலகில் தொடர்ந்து பயணிக்க,  எழுத்தாளர்களுக்கு நல்ல இலக்கிய வாசிப்பு அவசியம் என்கிற கருத்தினை முன்வைத்து விடைபெற்றார் ஜெயமோகன்.

நல்ல இலக்கிய வாசிப்பிற்கு, தமிழ் இலக்கிய உலகம் கூறும் பல எழுத்தாளர்களின் பட்டியலையும் பகிர்ந்திருந்தார். அதில் நான்  இதுவரையிலும் நினைத்து வைத்திருந்த பல எழுத்தாளர்கள் வரவே இல்லை. புதுமைப்பித்தன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன், மாதவையா, மௌனி, கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, எம்.எஸ்.கல்யாணசுந்தரம், சி.சு செல்லப்பா, லா.ச.ராமாமிருதம், சுந்தரராமசாமி. பிரமிள், வல்லிக்கண்ணன், அ.முத்துலிங்கம், எஸ்.ராமகிருஷ்ணன், ஆதவன்,  இந்திராபார்த்தசாரதி, ஆ.மாதவன், ஜெயகாந்தன், வண்ணதாசன், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், திலீப்குமார், சு.வேணுகோபால், பெருமாள் முருகன் எனப் பட்டியல் நீளுகிறது.

அவற்றையெல்லாம் வாசிக்க வேண்டும். நல்ல புனைவுகளை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னைப்போல பிறருக்கும் தோன்றியிருக்கலாம்.

6 comments for ““இலக்கியம் சொல்வதல்ல காட்டுவது” – ஜெயமோகன் பட்டறை அனுபவம்.

 1. Kalaishegar
  October 8, 2016 at 3:49 pm

  மேடையேறிய சிறந்தவொரு படைப்பை, கரு கலையாமல், அசல் சிதறாமல் சிறந்த திரைப்படமாக்கியது போல அமைந்துள்ளது சகோதரி ஸ்ரீ விஜியின் உணர்வுபூர்வ விளக்க நடை.

  பட்டறையில் பங்குபெறாதவர்களும் பயனடையட்டும் என்ற பக்குவ மனப்பான்மையில் சிறப்பாய் விவரித்துள்ளார்.

  போற்றத்தக்க படைப்பு.

  நன்றியுடன்,
  கலைசேகர்

 2. kamaladevi
  October 14, 2016 at 12:22 pm

  நன்றி நண்பரே…நீங்கள் விவாதித்த சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கலாம்

 3. Sega
  October 20, 2016 at 10:32 am

  நிகழ்ச்சி பற்றிய விவரம் மட்டுமல்லாமல் பட்டறையில் கலந்து கொண்ட அனுபவம் கொடுத்தது உங்கள் எழுத்தும் விளக்கமும். நன்றி!

 4. November 20, 2016 at 11:54 pm

  ஜெயமோகனின் அந்த பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.அழைத்தவர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிகழ்வு அதுவென்று தெரிந்து கொண்டேன்.சகோதரி ஸ்ரீவிஜியின் கட்டுரை முழுமையாக அந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அனுபவத்தைத் தந்தது.என் காலத்தில் இப்படியெல்லாம் எடுத்துச்சொல்ல வாய்ப்பே இல்லை.ஏதோ வாசிப்பனுவத்தை வைத்தே நான் கதைகள் எழுதினேன். சில நுணுக்கங்களை ஜெயமோகன் சொல்லியது எனக்கு மிகுந்த பயனைத்தந்துள்ளது. கடந்த வாரம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறுகதையை எழுதினேன். அதை இந்த கட்டுரையைப்படித்த பிறகு கிழித்துப்போட்டுவிட்டேன். தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஒவ்வொரு முறையும் என்னை ஒரு மாணவனாகவே கருதிக்கொள்ளும் மனப்பக்குவத்தை சகோதரியின் கட்டுரை தந்துள்ளது.
  ஜெயமோகன் பட்டியலிட்டுள்ள எழுத்தாளர்களை ஏறக்குறைய முழுதுமாக இல்லாவிட்டாலும் பகுதியாவது வாசித்திருப்பேன். மீண்டும் மறு வாசிப்பு செய்ய வேண்டும். மேற்சொல்லப்பட்ட எழுத்தாளர்கள் அன்றி சில மாற்றுமொழி படைப்புகளையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.குறிப்பாக மாண்ட்டோவின் கதைகள். உருதுமொழியில் எழுதியவர்.
  நவீன் நவம்பர்மாத வல்லினத்தில் மிக அற்புதமாக அவரின் கதைகள் பற்றி எடைபோட்டுள்ளார்.ஒரு படைப்பை எப்படியெல்லாம் திறனாய்வு முறையில் வாசிக்கலாம் என்பதை அறிந்து கொள்ள
  நவீனின் கட்டுரை அமைந்துள்ளது.
  குஸ்வந் சிங் போன்றவர்கள்கூட மாண்ட்டோ போல் எழுத முடியவில்லையே என்று வருத்தப்பட்டு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
  சை.பீர்முகம்மது.

  • ஸ்ரீவிஜி
   December 22, 2016 at 5:13 pm

   நன்றி சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *