காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 6

%e0%ae%85%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-6தங்கர்பச்சானின் சொல்ல மறந்த கதை திரைப்படம் தலைகீழ் விகிதங்கள் நாவலின் தழுவல். மிக அழகாக, நுணுக்கமாக எடுத்திருப்பார். மாமனார் வீட்டோடு இருப்பது அசிங்கம், நெருங்கிய நண்பனுக்கு ஒருவேளை சோறுபோடக்கூடத் தான் வக்கற்று இருப்பதை, பணம் என்ற கண்ணுக்குத் தெரியாத கயிறால் அவன் முடக்கப்பட்டிருப்பதை நுட்பமாகச் சித்தரித்திருப்பார். சிவதாணுவின் மனைவி கடைசிவரை அவனைப் புரிந்துகொள்ளவில்லை. இவ்வளவு பணம் இருக்கையில் வசதியாய் வாழ்வதை விட்டுவிட்டு எதற்குப் போய் தனிக்காட்டில் கஷ்டப்படவேண்டும், ஏன் இவனால் தன்னோடு சந்தோசமாக இருக்க முடியவில்லை? அப்படியென்றால் தவறு இவன் மீதுதான்; இவனை நம் வழிக்குக் கொண்டுவரவேண்டும் என்றுதான் யோசிப்பாள்.

மேலும் குழந்தை என்றொன்று வரும்வரைதான் பெண்ணானவள் ஆணின் மேல் சாய்ந்திருக்கிறாள். பிறகு அவளுக்கு வேறொரு ஆதாரம் கிடைத்துவிடுகிறது. பிள்ளை வந்தபிறகு கணவன் மனைவி அந்நியோன்யம் குறைவது ஒரு தற்காலிக நிகழ்வு. ஆண் பெரும்பாலும் பொருளாதார ரீதியிலேயே சிந்திக்கிறான். அது குடும்பம் என்னும் கூட்டுக்கு வெளியில் நிகழ்வது. கூட்டைக் கவனித்துக்கொள்ளும் பெண் அதைப் பற்றி அலட்டிக்கொள்வதில்லை.

இந்தப் பாடலில் தனது வறட்டு வீம்பால் வேங்கை மரத்தைப் புலியெனக் கருதி அடிமரத்தில் முட்டி ஆர்ப்பரிக்கும் ஆண்யானையை,elephants-show-emotion_cc6d32507f281a67 தன்னோடு சேர்ந்திராது பொருள்தேடிப் பிரிந்த கணவனுக்கு உதாரணமாகச் சொல்கிறாள். மேலும், செம்மணலில் புரண்டு பிளிறும் அதன் செய்கை, போர் செய்து அக்களத்தினையே தன் நிலமாகக் கொள்ளும் படைவீரனைப் போல இருக்கிறதாம். இதில் ஒரு கேலி இருக்கிறது. பெரும்பாலும் ஆண்கள் ஒரு விசயத்தில் ஈடுபடும்போது பிறவற்றை மறந்துவிடுகிறார்கள். ஆண்களின் புத்தி அம்பைப்போல ஒற்றை இலக்கை நோக்கியது. பெண்களைப்போல ஒரே நேரத்தில் பலவேலைகளைச் செய்யத் தெரியாது. தன் வாழ்க்கையே அதில்தான் இருக்கிறது என்பதுபோல் ஆண்கள் மாய்ந்து மாய்ந்து செய்யும் செயலில் ஈடுபடுவார்கள். வேலைக்குப்போகும் பெண் ஒருபோதும் அலுவலகத்தை வீட்டுக்குத் தூக்கி வருவதில்லை.

இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாய்மொழித் தழும்பன் யானையால் மிதிபட்ட தழும்பை உடையவன். இதில்கூட ஒரு குறிப்பு உள்ளது. தலைவி தன்னுடைய துயரை உணரக்கூடியவனாக அந்த அரசனைக் காட்டிவிடுகிறாள். ஒருமுறை ஊணூரில் பெண்கேட்டு வந்த வாய்மொழித் தழும்பனுக்கு பெண்ணை மறுத்திருக்கிறார்கள். அதனால் அவனது தேர்ப்படையும் யானைப்படையும் இவ்வூரைச் சிதைத்திருக்கிறது. இப்பாடலின்படி ஊணூர் அவனுக்குரியது என்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பு: ஊணூர் தற்போதுள்ள கோடியக்கரைப் பகுதி. வாய்மொழித் தழும்பன் யாழ்ப்பாணர்களின் தலைவன்.

தோள் மெலிந்து தளர்ந்தது

அழகு அல்குல் வரிகளும் வாடின

எனக்கு என்னாகுமோ என்று கண்ணீர்விடும்

என்னன்புத் தோழியே,

மதம்கொண்ட யானை வழியில் காணும்

பொன்னிறப் பூக்கள் பூத்த வேங்கை மரத்தைப் புலியெனக்

கருதி அடிமரம் முட்டும்

செம்மண்ணில் புரண்டு பிளிறும்

களம்கொண்ட போர்வீரனின் குரலாயது ஒலிக்கும்

அத்தகு வழிப்பாதை பலகடந்து செல்லும்

அவராவது நோயின்றியிருக்கட்டும்

தமிழகம் முழுதும் ஆளும் இரவலர்க்கருளும்

தழும்பன் தூங்கல் ஓரியாரால் பாடப்பட்டவன்

யானை மிதித்த தழும்புடையவன்

அவனுக்குரிய ஊணூருக்கு அப்பாலுள்ளது

வளம்பொருந்திய உப்பளங்கள்கொண்ட மருங்கூர்ப்பட்டினம்

அவ்வூரின் கடைவீதிச் சப்தம்போல்

நம்மூரில் அலர் எழச்செய்து அவர் சென்றுவிட்டார்

சங்கப்பாடல்:

நுதல்பசந் தன்றே தோள்சா யினவே

திதலை யல்குல் வரியும் வாடின

என்னா குவள்கொல் இவளெனப் பன்மாண்

நீர்மலி கண்ணொடு நெடிதுநினைந் தொற்றி

இனையல் வாழி தோழி நனைகவுள்         5

காய்சினஞ் சிறந்த வாய்புகு கடாத்தொடு

முன்னிலை பொறாஅது முரணிப் பொன்னிணர்ப்

புலிக்கேழ் வேங்கைப் பூஞ்சினை புலம்ப

முதல்பாய்ந் திட்ட முழுவலி யொருத்தல்

செந்நிலப் படுநீ றாடிச் செருமலைந்து         10

களங்கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்

பலஇறந்து அகன்றன ராயினும் நிலைஇ

நோயில ராகநங் காதலர் வாய்வாள்

தமிழகப் படுத்த இமிழிசை முரசின்

வருநர் வரையாப் பெருநா ளிருக்கைத்         15

தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப்

4பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன்

கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்

விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்

இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து         20

எல்லுமிழ் ஆவணத்து அன்ன

கல்லென கம்பலை செய்தகன் றோரே.

இயற்றியவர்: நக்கீரர்.

(நன்றி: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D )

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...