கிணற்றிலிருந்து மீண்டவள்

%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d1“அதுக்கு உங்களை மாதிரி சீதேவியப் பெத்திருக்கணும்மா. எனக்கு அதுக்கெல்லாம் கொடுப்பின இல்ல.”

தங்கம் என்னைப் பார்த்துக்கொண்டே உம்மாவிடம் சொன்னபோது எனது முகத்தில் என்ன உணர்ச்சியைக் கொண்டு வருவதென்று எனக்குத் தெரியவில்லை. அவள் சொன்னது ஒரு மெல்லிய புகையைப்போல, அந்த இடமெங்கிலும் பரவியது. அந்தச் சமையலறையை அடைத்துக்கொண்டு வெளியேற முடியாமல் தவிப்பதைப் போலத்தோன்றியது. சில்லறைக்காசைச் சுரண்டுவது போல ஒரு குரல் தங்கத்துக்கு. பேசும்போது குரல் பிசிறடிக்கும். மெல்லிய குரலும் பலத்த குரலும் ஒன்றுடனொன்று பின்னிக்கொண்டு வெளியே வரப்பார்க்கும். ஆனாலும் வாய் ஓயாமல் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள்.

எனது சிறுவயதில் தங்கம் இப்படிச்சொல்லி உம்மாவிடம் சலித்துக் கொள்ளும்போதெல்லாம் சிரித்துக் கொண்டே வெட்கத்தோடு உம்மாவின் மடியில் தலை புதைத்துக் கொள்வேன். உம்மா தலைகோதி விடுவாள். அப்பொழுதே எனக்கு நீளமான தலைமயிர். தங்கம் அருகே அழைத்து, காலடியில் அமரவைத்துக் கொண்டு, பொறுமையாக வலிக்காமல் சிக்கெடுத்து, எண்ணெய் வைத்துப் பின்னி ரிப்பனால் கட்டிவிடுவாள். பின் திரும்பச் சொல்லி முகத்தைப் பார்த்து, தனது வலது கை விரல்களால் என் கன்னத்தை வழித்தெடுத்து தனது உதட்டருகே வைத்து விரல்களுக்கு முத்தமிட்டுக் கொள்வாள். இல்லாவிட்டால் எனது நெற்றியின் இரு பாகங்களிலும் அவளது இரு கை முஷ்டிகளையும் முட்டுக் கொடுப்பதுபோல் வைத்து திருஷ்டி கழிப்பாள். ‘ராசாத்தி, யாரோட கண்ணும் படாம செழிப்பா நல்லா இருக்கணும்’ என்பாள்.

அவளது மகள் புஷ்பராணிக்கு என்னை விடவும் ஓரிரு வயது குறைவு. சிறுவயதில் அவளது தலைமுடி எண்ணைய் காணாது செம்பட்டைக் கலரில் காற்றில் அலைபாய்ந்தபடியிருக்கும். அதிலும் சுருட்டை முடி. சுருண்டு சுருண்டு மேலும் சுருள வழியற்றுப்போன அளவுக்குச் சுருட்டை முடி. சிக்கலும் ஈரும் பேனும் நிறைந்து இருக்கும். அவளது தோளில், சட்டையிலென சின்னச் சின்னப் பேன் குஞ்சுகள் ஊர்ந்து திரியும். இதனாலேயே உம்மா ஒருநாளும் அவளுடன் சேர்ந்து விளையாட என்னை அனுமதித்ததில்லை. இப்பொழுது வரைக்கும் ஒரு நாளும் தங்கம் அவளை அருகிலமர்த்திப் பேன் பார்த்து, எண்ணைய் வைத்துத் தலை சீவி விடுவதை நான் கண்டதில்லை.

தங்கம் எங்கள் வாழைத்தோட்டத்துக்கு மத்தியிலிருந்த குடிசையில்தான் வசித்துவந்தாள். எங்கள் வாழைத்தோட்டத்தை யாராவது இருந்து பராமரிக்கவென்று அமைத்த குடிசை அது. நான் பிறக்கமுன்பே அவ் வேலைக்கென்று புஷ்பராணியின் அப்பா வந்துவிட்டாராம். அவராகவே நிர்மாணித்த அக் குடிசையிலிருந்துதான் இப்பொழுதிருக்கும் வாழைக் கன்றுகளின் தாய்வாழைகளை நட்டிருக்கிறார். பிறகு அவர் ஒரு முறை ஊருக்குப் போய் வரும்போது தங்கத்தைத் திருமணம் முடித்து அழைத்து வந்திருக்கிறார். உம்மாவுக்குப் பிரசவநேரம். கையுதவிக்கு ஒரு பெண் கிடைத்தாயிற்று என வாப்பாவும் ஒன்றும் சொல்லவில்லையாம். புஷ்பராணியின் அப்பா தோட்டவேலைகளைக் கவனிக்க, தங்கம் எங்கள் வீட்டுவேலைகளைப் பொறுப்பெடுத்துக் கொண்டாள். பிறகுதான் புஷ்பராணி பிறந்தாள். அவள் பிறந்து ஓரிரு நாளில் தங்கத்தின் அம்மா இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. மூத்தது பெண்ணாய்ப் பிறந்ததுவும், அதுவும் பிறந்த உடனேயே தன் உறவு ஒன்றினைக் காவு எடுத்ததுவும் தங்கத்துக்குப் பிடிக்காமல் போயிற்று. புஷ்பராணி பிறந்தது அபசகுனமெனத் திட்டிக்கொண்டே இருந்தாள்.

அவர்களது குடிசை அருகே வாழைக்கன்றுகளுக்கு நீரிரைக்கவென சற்று ஆழமான ஒரு கிணறு இருக்கிறது. அக்காலத்தில் கிணற்றருகே உள்ள%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d சலவைக் கல்லிலமர்ந்து கொண்டே ஒரு கோப்பையால் நீரள்ளி தலையில் ஊற்றிக் கொள்ளலாம். நீர் மிதந்து வழியும்படியான கிணறு. தெளிந்த நீர். ஆற்றிலிருந்து கொண்டு வந்து போடப்பட்ட மீன்குஞ்சுகள் ஆழத்தில் நீந்துவது மேலிருந்து பார்க்கும்போதே தெளிவாகத் தெரியும். அப்பொழுது கிணற்றைச் சுற்றிவர தடுப்புச் சுவரேதும் இல்லை. நடந்து போகையில் அதனருகே சறுக்கினால் கிணற்றுக்குள்தான் விழவேண்டும். அப்படித்தான் ஒருநாள் சிறுவயதில் புஷ்பராணி அதில் விழுந்தாள். எவ்வளவு குளிராயினும் விடிகாலையிலேயே எழுந்து தங்கம் திட்டத்திட்ட குளித்துக் கொள்வது அவளது வழக்கம். அப்பொழுது அவளுக்கு பத்து வயதிருக்கும். சறுக்கிவிழுந்தவள் நீருக்குள் அமிழ்வதும் எழுவதுமாய் இருந்தாள். பல் விளக்கிக் கொண்டே எங்கள் வீட்டுக்கொல்லையில் நின்றுகொண்டிருந்த எனது வாப்பா கண்டு ஓடிப்போய் வெளியே இழுத்துப்போட்டுக் காப்பாற்றினார். அப்பா போட்ட சத்தத்தில் நானும் உம்மாவும் ஓடிப்போய்ப் பார்த்தோம்.  ‘ஏனய்யா காப்பாத்தினீக? சனியன் செத்தொழிஞ்சிருக்கணும்’ என்று தங்கம் அழுகையினூடே கத்திக் கொண்டிருந்தாள். மகள் உயிர் பிழைத்த ஆனந்தத்தில் அழுகிறாளா, சாகவில்லை என்று அழுகிறாளா என்று தெரியவில்லை. புஷ்பராணி குளிரிலும் பயத்திலும் வெடவெடத்தபடி நின்று தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்றே வாப்பா அந்தக் கிணற்றுக்கு ஆள் வைத்து சுற்றுவர தடுப்புச் சுவர் எழுப்பிக் கட்டினார். எப்படியோ அந்தக் குடிசையிலேயே வசிக்கவந்து கிட்டத்தட்ட இப்பொழுது இருபது வருடங்கள் ஆயிற்று. இடையில் எப்பொழுதாவது அவர்களது ஊருக்குப் போய்வருவார்கள். அப்படிப் போகும்போதெல்லாம் புஷ்பராணியை எங்கள் வீட்டில் விட்டுப்போவார்கள்.

போனமுறை இப்படித்தான். ஊருக்குப் போன இடத்தில் புஷ்பராணிக்கு ஒரு சம்பந்தத்தைப் பேசி முடித்து வந்திருந்தார்கள். தங்கத்தின் அண்ணன் மகன். உறவு விட்டுப் போய்விடக் கூடாது என்பதை விடவும், தன் குடிகார மகனுக்கு வேறு யாரும் பெண் கொடுக்கமாட்டார்களென்ற யதார்த்தம் புரிந்ததால், அண்ணனாகவே வந்து தங்கத்திடம் பெண் கேட்டிருக்கிறார். தங்கம் பூரித்துப் போனாள். துரதிர்ஷ்டக் கட்டைக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பாரேன் என்று தனக்குத்தானே சொல்லிச் சிரித்துக்கொண்டாள். இருந்த சேமிப்பை ஒருமுறை எண்ணிப் பார்த்துக்கொண்டாள். இங்கு வரும்போது பூ, பழம், சேலை என்று ராணிக்குப் பலதும் வாங்கிக்கொண்டு வந்திருந்தாள். சமையலறைத் தரையில் கால்நீட்டி அமர்ந்துகொண்டவள், உம்மாவை அழைத்து  “இம்புட்டுத்தூரம் நானும் வண்டியில வந்தேன். நடந்துவந்தேன். பூரிச்சுப் போய் சிரிச்சி சிரிச்சி வர்றதப்பார்த்துட்டு ஒவ்வொருத்தியும் மூஞ்சிக்கு நேர நின்னு என்னடின்னு கேட்டாளுக. மகராசி கிட்டத்தான் முதமுதல்ல சொல்லணும்னு வாயைத் தைச்சவளாட்டம் மூஞ்சத் திருப்பிக்கிட்டு வெரசா வந்தேன்” என்றாள். உம்மா என்ன விஷயமெனக் கேட்டு அருகிலிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டதும் அவள் மேலும் மகிழ்ந்துபோய் விடயத்தைச் சொன்னாள். புஷ்பராணியும் நானும் அந்த இடத்தில்தான் இருந்தோம். திருமண விடயம் தெரிந்ததும் எனக்கும் மகிழ்வாகத்தான் இருந்தது. திரும்பி ராணியைப் பார்த்தேன். அவள் சோர்ந்து போயிருந்தாள். இந்தக் கல்யாணவிடயமே வேறு யாருக்கோ என்பதைப் போல தூணில் சாய்ந்து, தூர இருந்த தென்னை மரத்தைப் பார்த்தவாறிருந்தாள். தங்கம் ஆசையாக வாங்கிக் கொண்டு வந்திருந்த, மாடு கண்டால் முட்ட வரக்கூடிய, அடிக்கிற சிவப்பு நிறத்திலிருந்த சேலையை அவள் திரும்பியும் பார்க்கவில்லை. தங்கம், உம்மாவிடம் எல்லாம் பேசி முடித்து இன்ன தேதியில் கல்யாணத்தை கோயிலில் வைத்துக் கொள்ளலாமெனச் சொன்னபோது மட்டும் ராணி தலையை உயர்த்தி சத்தமாக இந்தக் கல்யாணத்தில் தனக்குத் துளியும் இஷ்டமில்லை எனச் சொன்னாள். சொல்லிவிட்டு நிற்காமல் முற்றத்திலிறங்கி தனது குடிசையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

பேய் பிடித்தவள் போல தங்கம் எழுந்து கத்திக் கொண்டே அவள் பின்னால் ஓடினாள். ராணி ஓடவில்லை. இலேசான பள்ளத்தில் நீர் இறங்குவதைப் போல சிறிதும் சலனமற்ற அமைதியான நடை. தங்கம் ஓடிப்போய் அவளது முழங்கைக்கு மேலால் இறுகப்பிடித்து முதுகில் அடித்தாள். ஏதேதோ கெட்டவார்த்தைகளைச் சத்தமாகச் சொல்லிச் சொல்லி அடித்தாள். ராணி அழவில்லை. இறுகிப் போன பாறைபோல முகத்தையும் உடம்பையும் வைத்துக்கொண்டு வளைந்து கொடுத்தாள். உம்மாவும் நானும் ஓடிப்போய் ஒருவரையொருவர் விலக்கியெடுத்தோம். தோட்டத்தைப் பார்க்கப்போன அவளது அப்பா சத்தம் கேட்டு ஓடி வந்ததும் தங்கம் அவரிடம் விடயத்தைச் சொல்லிவிட்டாள். அவரும் தன் பங்குக்கு அவளை அடிக்கும் முன் உம்மா, ராணியைத் தன் முதுகுக்குப் பின்னால் இழுத்து வைத்துக்கொண்டாள். மழை தூற ஆரம்பித்தது. ராணி அன்றும் என் வீட்டில் தங்கட்டுமென அம்மா சொல்லித் தன்னோடு நிறுத்திக் கொண்டாள். தங்கமும், கணவனும் குடிசைக்குப் போனார்கள். பூவும் பழமும் சேலையும் சமையலறையில் விழுந்து கிடந்தது. உம்மா அதை எடுத்து மடித்து வைத்தாள்.

கனத்த மழை பெய்யத் தொடங்கியது. பெருஞ்சத்தத்தோடு தூரத்திலெங்கோ இடி விழுந்த ஓசையும் கேட்டது. வாப்பா வந்ததும் அவரிடமும் உம்மா விடயத்தைச் சொன்னாள். வாப்பா எதுவும் பதில் பேசவில்லை. உம்மா வேறு யாருக்கோ சொல்வதைக் கேட்பதுபோல கேட்டுவிட்டு கையிலிருந்த பத்திரிகையைத் தொடர்ந்தும் வாசிக்கத் தொடங்கினார். இரவு உம்மா கொடுத்த சாப்பாட்டைக் கூடத் தொடாமல் புஷ்பராணி அழுதுகொண்டே இருந்தாள். அம்மா ‘அழாதே’ என அன்பாகச் சொல்லி இந்தக் கல்யாணம் பிடிக்காத காரணத்தை அவளிடம் வெகு இயல்பாகக் கேட்டாள். உம்மா கேட்பதற்காகவே காத்திருந்தவள் போல ஒரு குடிகாரனுக்கு இரண்டாவது தாரமாக வாழ்க்கைப்பட்டுத் தன் வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளத் தான் விரும்பவில்லை எனச் சொல்லி மேலும் ஏங்கி ஏங்கி விசும்பத் தொடங்கினாள். அன்று உம்மா ரகசியமாக என்னிடம் புஷ்பராணியை எனது அறையிலே தூங்க வைத்துக்கொள்ளும்படி சொன்னாள். அவள் ஏதாவது செய்துகொள்ளக் கூடுமென உம்மா பயந்திருப்பாள். வெளியே மழை விடிய விடியப் பெய்தது.

%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-3மறுநாள் காலை தங்கம் வீட்டுவேலைக்கு வந்தபோதிலிருந்து அவளும் ராணியும் எதிரெதிர் சந்திக்க நேர்ந்தால் கூட இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. யாரோ தெரியாதவரைக் கடந்துசெல்வதைப் போல ஒருவரையொருவர் கடந்து சென்றனர். இருவருக்குமிடையில் மௌனம் ஒரு செங்குத்துத்திரை போல விரிந்து கிடந்தது. சமையலறையில் இருவரும் வேலையிலிருக்கும்போது புஷ்பராணிக்குக் கேட்பதற்கென்றே உம்மாவிடம் தனது அண்ணன் மகனுக்கு இருக்கும் சொத்துக்கள் பற்றியும் பண வசதி பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தாள் தங்கம். உம்மா, அவனது மூத்த தாரத்துக்கு என்ன நடந்தது என ஓரிரு முறை கேட்டும் பதிலளிக்காமல் அவள், அவனது வசதிகளைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தாள். புஷ்பராணி அன்று யாருடனும் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. நேற்று எதுவுமே நடக்கவில்லை என்பது போலவும், நடந்தவை எதிலும் தனக்குச் சம்பந்தமில்லை என்பது போலவும் அவளது அமைதியான முகபாவனையும் நடவடிக்கைகளும் இருந்தன. தங்கம் வேலைகளை எல்லாம் முடித்து இரவு தனது குடிசைக்குப் போகும்போது உம்மா அவள் விட்டுச் சென்றிருந்த புடவை, பூ, பழங்களை அவளிடம் கொடுத்தாள். பூ வாடிப் போயிருந்தது. அவள் பூவைக் கசக்கி குப்பைத் தொட்டியில் எறிந்தாள். அவள் போன கொஞ்சநேரத்துக்குப் பிறகு புஷ்பராணி பின்னால் போனாள். ‘போனால் தங்கம் அடிப்பாள். போகாதே’ என உம்மா சொல்லிப் பார்த்தாள். அவள் கேட்கவில்லை. சாம்பல் மூடிய தணலாய் விடயம் ஓய்ந்திருந்ததென்பதைப் பின்னர்தான் அறிந்தோம். இருள் ஒரு இராட்சஸப் பேயைப் போல எங்கும் பரவத் தொடங்கியது.

இரவு என்ன நடந்ததோ, எந்த நேரத்தில் குதித்தாளோ மறுநாள் விடிகாலையில் உம்மா எழும்பிப் பார்க்கும்போது எங்கள் வீட்டுக் கிணற்றில் புஷ்பராணி மிதந்தாள். நல்லவேளையாக செத்துப் போய் மிதக்கவில்லை. தலையை மட்டும் ஒரு தாமரை இலையைப் போல வானம் பார்க்க வைத்தபடி அவள் மிதந்து மேலே பார்த்துக் கொண்டிருந்தாள். தண்ணீரள்ளப் போன உம்மா பார்த்துவிட்டு அலறினாள். வாப்பாவும் நானும் எழுந்து ஓடிவந்தோம். வாப்பா கயிறு கொண்டுவரும்படி போட்ட சப்தத்தில் தங்கமும் அவள் கணவனும் எங்கள் வீட்டுப் பக்கம் ஓடிவந்தார்கள். உம்மா பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். தங்கம் பார்த்துவிட்டு ‘இதையெல்லாம் பார்க்க நான் இன்னும் உசிரோடு இருக்கேனே’ என்று மாரோடு அடித்துக் கொண்டாள். அவள் கணவன் கோபத்தில் உறுமிக் கொண்டே வாப்பாவுடன் சேர்ந்து நன்கு தடித்த கயிற்றை கிணற்றுக்குள் விட்டு அவளை அதைப் பிடித்து ஏறி வரச் சொன்னான். எவ்வளவு நேரமாக நீரினுள்ளே கிடந்தாளோ, கை விரல்களெல்லாம் ஊறிப்போய் வெளிறி சுருங்கிக் கிடந்தன. வெளியே வந்தவளை தங்கம் அடிக்கவெனப் பாய்ந்தாள். நான் தடுத்து புஷ்பராணியை எங்கள் வீட்டுக்குள்ளே எனது அறைக்கு அழைத்துச் சென்று ஈரத்தைத் துடைக்க துவாலையைக் கொடுத்தேன். பிறகு ஒரு சல்வாரைக் கொடுத்து அணிந்துகொள்ளச் சொன்னேன். உம்மா அதற்குள் சூடாகக் கோப்பி ஊற்றி எடுத்துவந்தாள். தங்கமும் அவள் கணவனும் சமையலறையில் கோபத்தோடு கத்திக் கொண்டிருந்தது அறைக்குள்ளேயே கேட்டது. உம்மா கோப்பியைத் தந்துவிட்டு அறையை உட்புறமாகத் தாழிட்டுக் கொள்ளச் சொல்லி நகர்ந்தாள்.

வெளியே சத்தம் பலமாகக் கேட்டது. வாப்பா அமைதியாக அவர்களைச் சமாதானப்படுத்தப் பார்த்தார். அவர்களது குரல் பலத்துக் கொண்டே வந்தபோது வாப்பாவின் குரல் ஓங்கியது. அதைத் தொடர்ந்து ஒரு கனத்த மௌனம். எந்த ஓசைகளுமில்லை. அழுதுகொண்டே இருந்த  புஷ்பராணியும் நானும் என்ன நடக்கிறது என்பதுபோல ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். வாப்பாவின் குரல் சாந்தமானதாகவும் உறுதியானதாகவும் வெளியே கேட்டது. ‘சே..நான் காப்பாத்துன உசுரு..இப்படிக் கொல்லப் பார்க்குறீங்களே.. இனி ராணியும் எங்க வீட்டுப் பொண்ணுதான். அவளுக்குப் புடிச்சமாதிரி நானே அவளுக்கொரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கிறேன். அதுவரைக்கும் அவள் இங்கேயே இருக்கட்டும்’ என்று வாப்பா சொன்னதும் தங்கம் அவர் காலில் விழுந்ததாக உம்மா பிறகு சொன்னாள்.

புஷ்பராணி குதித்தது நாங்கள் குடிக்க நீரெடுக்கும் கிணற்றில்தான். அதுவும் சற்று ஆழமானதொரு கிணறு. இனி அதனை இறைக்காமல் நீரெடுக்க முடியாது. இறைக்கும்வரை பக்கத்து வீட்டிலிருந்து குடம்குடமாக நீரெடுத்து வந்து தந்தாள் தங்கம். கிணற்றை இறைக்கும் வேலையை வாப்பா வார இறுதி விடுமுறை நாளுக்கு ஒத்திப் போட்டார். அதுவரை காத்திருக்க முடியாமல், தங்கம் ஒருவனை அழைத்துவந்தாள். கிணற்றை இறைக்கவேண்டுமென அவனிடம் சொல்லாமல் எனது வைரமோதிரமொன்று தவறி அதில் விழுந்ததாகவும் அதனை எடுக்கவேண்டுமெனச் சொல்லி அழைத்து வந்தாள். அவன் வந்து பார்த்து கிணறு ஆழமென்றும் கிணற்றை இறைக்காமல் மோதிரத்தை எடுக்க முடியாதெனவும் இறைப்பதற்குக் கூலியாக தான் அந்த மோதிரத்தை எடுத்துக் கொள்வதாகவும் சொன்னான். இது எதுவும் வீட்டில் தையல் வேலையிலிருந்த உம்மாவுக்கோ எனக்கோ யாருக்குமோ தெரியாது. காலையில் வந்தவன் மதியச் சாப்பாட்டுக்குப் பின்னரும் அவனும் தங்கமும் சேர்ந்து கிணற்றில் ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் இறைத்துவிட்டார்கள். இறுதியில் அவன் மோதிரம் கிடைக்கவில்லையென்று கூலி கேட்டு சண்டை பிடிக்கத் தொடங்கினான். பிறகுதான் உம்மா விசாரித்ததில் தங்கத்தின் சூழ்ச்சி புரிந்தது. உம்மா அவன் முன்னால் எதுவுமே பேசாமல் அவன் கேட்ட பணத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள். அவன் போன பின் என்றுமே தங்கத்தை திட்டியிராத உம்மா அன்று அவள் பொய் சொல்லி வேலை வாங்கியதற்காக நன்றாக ஏசிவிட்டாள்.

வாப்பா ஒரே மாதத்தில் புஷ்பராணிக்கு ஒரு பையனைப் பார்த்துவிட்டார். அவரது அலுவலகத்தில் காவல் வேலை செய்பவரின் மகன். அந்தப் பையனும் ஒரு கல்லூரியில் காவல் வேலை செய்பவன்தான். வாப்பா சொல்லி அந்தப் பையனும் குடும்பத்தாரும் வந்து புஷ்பராணியைப் பார்த்தார்கள். அவர்களுக்கு அவளைப் பிடித்துவிட்டது. அவளுக்கும்தான். தாலி, தோடு என்பவற்றைப் பெண்வீட்டார் செய்துபோட்டு இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணத்தை கோயிலில் எளிமையாக வைத்துக்கொள்ளலாமெனச் சொல்லிவிட்டார்கள். அவர்கள் வந்துபோனதிலிருந்து அவள் தனியாகச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

திருமண விடயம் கேள்விப்பட்டு தங்கத்தின் அண்ணனும் மகனும் வந்து அவளது குடிசைக்கருகே சத்தம் போட்டார்கள். புஷ்பராணி எங்கள் வீட்டிலிருந்தாள். அவளை அறைக்குள் வைத்து நாங்கள் உள்ளே பூட்டிக்கொண்டோம். வாப்பா வேலைக்குப் போயிருந்தார். அவர்கள் வந்து எங்கள் வீட்டு வாசலருகேயும் சத்தம் போட்டார்கள். எல்லோரையும் கொல்லப் போவதாகவும் ராணி எப்படி இன்னொருத்தனுடன் வாழப்போகிறாளெனத் தாங்கள் பார்க்கப் போவதாகவும் கூச்சலிட்டார்கள். எங்களது இதயங்கள் தடதடவென அடித்துக் கொண்டன. உடல் பதற ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். அதிலும் புஷ்பராணி மிக அதிகமாக வெலவெலத்துப் போயிருந்தாள். பயத்தில் சல்வார் முந்தானையை வாய்க்குள் அதக்கிக் கொண்டு விசும்பினாள். ஒரு பெரும் மலையிலிருந்து கற்கள் தொடராக உருண்டு வந்து ஓய்ந்துவிட்டதைப் போல அவர்களது கூச்சல், சந்தடி ஓய்ந்தபிறகுதான் நாங்கள் கதவைத் திறந்தோம். தங்கமும் அவள் கணவனும் அடிபட்ட காயங்களோடு வந்து எங்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள். வாப்பா வந்தபிறகு நடந்த விடயமறிந்து அவர்களிருவரையும் கூட்டிக்கொண்டு போய் பொலிஸில் முறைப்பாடு கொடுத்தார்.

இன்று மதியம் உம்மாவின் தூரத்து உறவுமுறையிலிருந்து என்னைப் பெண் பார்க்க வந்திருந்தார்கள். வந்தவர்களுக்கு என்னைப் பிடித்துப் போயிற்றா அல்லது வாப்பா, உம்மாவிற்குப் பிறகு எனக்கு வர இருக்கும் நகைகள், வீடு, காணி நிலபுலன்கள் பிடித்துப் போயிற்றா என்று தெரியவில்லை. பெண் வீட்டாருக்கு எந்தச் செலவும் வைக்காமல் என்னை மணமுடிக்கப் போவதாக வாக்குறுதி தந்தார்கள். அவர்கள் போன பின்பு உம்மா இது பற்றி பெரும் மகிழ்வோடு சொன்னதைக் கேட்டுவிட்டுத்தான் தங்கம் ‘அதுக்கு உங்களை மாதிரி சீதேவியப் பெத்திருக்கணும்மா. எனக்கு அதுக்கெல்லாம் கொடுப்பின இல்ல.’ என்று சொன்னாள். விழிகள் கலங்க மௌனமாக நின்றபடி நான் புஷ்பராணியைப் பார்த்தேன். கீரையை ஆய்ந்துகொண்டு என்னையே பார்த்தபடியிருந்தவள் தலைகுனிந்து கொண்டாள். அவளுக்கு எல்லாம் தெரியும். ஒரு கல்வியறிவற்ற ஏழைப்பெண்ணுக்கு தனது எதிர்கால வாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டுமென்ற எண்ணத்தோடு அமைதியாகவும், அதிரடியாகவும் போராடி தனது வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல இயலும் என்னால்?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *