வதை ~ வாதை ~ வார்த்தை

naran-intw

~“சரியான பால்யம் கிடைக்காத எவரும் பிற்பாடு வார்த்தையையும்,         எழுத்துகளையும் பின்தொடர்கிறார்கள்…” ~

நரன் ( 1981 ) 

கவிஞர், சிறுகதை எழுத்தாளர். மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான  இவரின் “லாகிரி” கவிதைத் தொகுப்பு  சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமான கவனத்தைப் பெற்றுள்ளது. வெளிவந்து ஒரு மாத்திற்குள்ளாகவே அதிகமான பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறும் நரன் டிசம்பரில் மறுபதிப்பு வெளியாகிறது என நமக்களித்தப் பேட்டியில் குறிப்பிட்டார். இவ்வளவு குறுகிய காலத்தில் (கிட்டத்தட்ட மூன்று மாதம்) மறுபதிப்பு வெளியாவது தமிழ் நவீன கவிதைச் சூழலுக்குப் புதிது. சென்னையில்  ஊடகவியலாளராகப் பணியாற்றுகிறார்.  அக்டோபர் மாத “தடம்“ இதழில் வெளியான இவரின் முதல் சிறுகதையே (“பெண் காது”)   பரவலான கவனத்தைப் பெற்று பலராலும் பொதுவெளியில் பாராட்டப்பெற்றது கவனிக்கத்தக்கது.

இதுவரை இவர் எழுதிய நூல்கள்:

உப்பு நீர் முதலை – ( 2010 – காலச்சுவடு பதிப்பகம் )

ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் – முதல் பதிப்பு ( 2013 – கொம்பு பதிப்பகம் )

                                                          இரண்டாம் பதிப்பு ( 2016- டிஸ்கவரி )

லாகிரி – 2016 ( சால்ட் பதிப்பகம் )

விரைவில் “உரோமம்” நாவல் வெளியாகவிருக்கிறது.

“361 டிகிரி” மற்றும் “சால்ட் ” இதழின் ஆசிரியர். சால்ட் பதிப்பகமும் நடத்தி வருகிறார்.

 

நீங்கள் பிறந்து வளர்ந்த சூழல், இலக்கியத்துடன் எப்படி அறிமுகம்நவீன கவிதைக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

நான் பிறந்தது விருதுநகரில். கிறித்துவ வளர்ப்பு .

என் அம்மா வீட்டு வழியினர் அறுபது ஆண்டுகளாக விருதுநகரில் பருப்பு மற்றும் எண்ணெய் மில்கள் அமைத்துக் கொடுப்பதும், அது சார்ந்த வணிகத்திலும் இருந்தார்கள். அரச வைத்தியத்திற்காக ஐந்து தலைமுறைக்கு முன் எட்டயபுரம் சம்ஸாதனித்திலிருந்து தானமாய் வழங்கப்பட்ட ஒரு கிராமத்தை என் அப்பா குடும்பத்தினர் நிர்வகித்தார்கள். கோவில்பட்டி – தூத்துக்குடி செல்லும் வழியில் இருக்கும் அச்சங்குளம் என்ற அந்த ஊரில் இன்னமும் ஒரே குடும்பத்திலிருந்து கிளை பிரிந்தவர்கள்தான் வசிக்கிறார்கள். பாம்புக்கடி மற்றும் விஷக்கடிகளுக்கு மந்திரங்களின் மூலம் முறிவு தருவது என் குடும்பத்தினருக்குத் தெரிந்திருந்தது. பதிமூன்று வயதில் மந்திரம் வாங்கப் பெற்றவனாக இருந்தாலும் அதில் அறவே  நம்பிக்கை அற்றவனாகவும், அதைப் பரிசோதித்துப் பார்க்க விருப்பம் இல்லாதவனாகவும் இருந்தேன்.  அப்படியாக, என் தலைமுறையின் இறுதி மருத்துவன் ஆனேன்.

என் 6 வயதில் என் அப்பா இறந்து போனார்.பள்ளிக்காலங்களில் கிறித்துவ ஈடுபாடு தீவிரமாய் இருந்தது.naran-intw-3 தேவாலய நாடகங்கள் போடுவதும், அதில் நடிப்பதும் பிடித்திருந்தது.  நாடகங்களை நானே எழுதத் தொடங்கியபோது, விவிலியத்தின் நீதி மொழிகளை  தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். வார்த்தைகளின் மீது பெரும் ஆர்வம்  ஏற்படத் துவங்கியது அப்போதுதான். அதை என் தமிழ் ஆசிரியர்கள் எளிதாக அடையாளம் கண்டு கொண்டார்கள். பள்ளி நூலகம் விருப்பத்திற்குரிய இடமாக மாறியது. பள்ளி ஆண்டு மலர்களில் அதிகமான பக்கங்களை நிறைப்பவனாக இருந்தேன். என் ஆர்வத்தை கண்டுகொண்ட நண்பர் நெல்சன், மதுரைக்கு செல்லும்போதெல்லாம் கவிதை நூல்களை வாங்கி வந்து தருவார். கல்லூரியில் வணிகவியல் துறை எடுத்திருந்தபோதும்  தமிழ்த்துறையில்தான் அதிக நேரம் இருந்தேன். என் பேராசிரியர்கள் புதிய புத்தகங்களை வாசிக்க உதவினார்கள். அதில் இரண்டு பேர் கோணங்கியோடு  நெருக்கமாய் நட்பில் இருந்தார்கள். கோணங்கி, எஸ்.ரா, ஜெயமோகன், விக்ரமாதித்யன் நம்பி, தேவதேவன் என புதிய மனிதர்கள் எழுத்தின் ஊடாக எனக்கு நெருக்கம் ஆனார்கள்.

2002-ஆம் ஆண்டு, கல்லூரி முடிந்த அன்றே, சென்னைக்கு ரயில் ஏறினேன். இயக்குனர் வசந்தபாலனோடு அறிமுகம் ஏற்பட்டது. ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் நெருங்கிப் பழக வாய்த்தது. அவர் வீட்டில் ஒரு சிறு நூலகம் இருந்ததால், ஒரு வருடம் அவரின் வீட்டிற்கு அடிக்கடி போவதும் அங்கேயே அமர்ந்து நூல்கள் வாசிப்பதுமாய் கழிந்தது. அப்போது எனது கவிதைகள் சில தீராநதி, காலச்சுவடு இதழ்களில் வெளிவந்திருந்தது. 2004-இல் தேவதச்சனின் சில கவிதைகளை வசந்தபாலன் வாசிக்கத் தந்தார்.  வாசிக்க, வாசிக்க அந்தக் கவிதைகள் கொடுத்த பிரமிப்பு அதுவரை நான் எழுதியது கவிதையே இல்லை என என்னை முடிவெடுக்க வைத்தது. மாற்றுத் துணி கூட எடுத்துக் கொள்ளாமல் உடனே அங்கிருந்து கிளம்பி கோவில்பட்டி போய் தேவதச்சனை சந்தித்தேன். அவரது சேது ஜூவல்லர்ஸ் கடையில் உட்கார்ந்து காலை முதல் இரவு வரை என்னோடு பேசினார். அந்த ஒரு நாள் உரையாடல்தான் என் கவிதையை இன்றுவரை வழிநடத்துகிறது எனத் தீர்மானமாக நம்புகிறேன். தேவதச்சனின் கவிதைகளின் பிரமிப்பு எனக்கு பிரம்மராஜன் கவிதைகளிலும் இருக்கிறது. இது போலவே அதே ஆண்டு ஒருமுறை மனுஷ்யபுத்திரனின் “என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்”  தொகுப்பை வாசித்து முடித்த கையோடு   மிகுந்த மழையில் நனைந்தபடியே அவரின் வீட்டு வாசலில் போய் நின்றேன். அந்த மழையில் இருவரும் ஒரு வரிகூடப் பேசிக்கொள்ளாமலே நனைந்தபடியே  ஒருவரைப்பார்த்து ஒருவர் கண்ணீர் சிந்தினோம்.

சென்னைக்கு வந்து சில ஆண்டுகளிலேயே, லீனா மணிமேகலையின் நட்பு கிடைக்கிறது. அவர் எனக்கு நிறைய சிற்றிதழ்களைக் கொடுத்து என் வாசிப்பைத் தீவிரமாக்கினார். லீனா, குட்டிரேவதி, சல்மா, இளம்பிறை, மாலதிமைத்ரி, சுகிர்தராணி என பெண்கள் அந்தக் காலகட்டத்தின் ஒட்டு மொத்தத் தமிழ் கவிதைச்சூழலை மாற்றி எழுதிக்கொண்டிருந்ததை அறிய முடிந்தது. சிற்றிதழ்களில் மட்டும் எழுதிக் கொண்டிருந்த சி. மோகன், யூமா வாசுகி, கண்டராதித்தன், செல்மா பிரியதர்சன், ஸ்ரீநேசன், ஷங்கரராமசுப்ரமணியன், பழனிவேல், ராணி திலக், யவனிகா ஸ்ரீராம், லக்ஷ்மி மணிவண்ணன்  ஆகியோரின் படைப்புகள் மேலும் வாசிப்பையும் எழுத்தையும்  தீவிரமாக்கியது.

வாசிப்பில் நான் என்னைத் தொலைத்துக் கொண்டிருந்ததை என் அம்மா விரும்பவில்லை. அவருக்கு என் மேல் வேறு மாதிரியான எதிர்பார்ப்புகள் இருந்தன. அம்மாவின் 26 வயதில் ஒரு தீய பழக்கமும் இல்லாமல்…காரணம் ஏதும் இல்லாமல் கிட்னி  பழுதடைந்து என் அப்பா இறந்து போனார். அவர் அப்போது 31 வயது இளைஞர்.கிட்னி பழுதடைந்து இறந்த அவரது மருத்துவச் செலவுக்காக எல்லா சொத்துகளையும் இழந்திருந்தோம். என் இளமைக்காலம் 3 விதமான பெண்கள்  நடுவே கழிந்தது. அது மிகவும் சிக்கலான வாழ்க்கை முறை. தன் 26 வயதில் தனது கணவனை இழந்த தாய்… என் அக்கா,  ஆட்டிசம் பாதிக்கப்பட்ட என் தங்கை, இவர்களிடையே நான். உறவினர்கள் எல்லோரும் பெரும் வணிகர்களாய் இருந்தார்கள். எனவே, என் குடும்பத்தை மீட்கும் பொருட்டு என் அம்மா என்னை ஒரு வணிகனாகப் பார்க்க ஆசைப்பட்டார். நான் வாசிப்பு, எழுத்து, பயணம் என இருக்க விரும்பினேன். இந்த முரண்பாட்டால் நான் ஊருக்குச் செல்வதைத் தவிர்க்கத் தொடங்கினேன். சென்னையில் சரியான உடல் பராமரிப்பின்றி உடல் மெலிந்தது, கூடவே மனநிலையிலும் சிக்கல் வரத் தொடங்கியது. அம்மாவின் தொலைபேசி அழைப்புகளையும் நான் தவிர்க்க, அவர் சொல்லிக்கொள்ளாமல் ஊரில் இருந்து கிளம்பி எனது அறைக்கே வந்து விட்டார். திரும்பவும் ஊருக்கு வரச் சொல்லி அழுதார். 2005-இல் அவரின் பேச்சைக் கேட்க முடிவெடுத்து சென்னையில் இருந்து ஒட்டு மொத்தப் புத்தகங்களையும் மூட்டை கட்டினேன். சில புத்தகங்களை எடுத்துக்கொண்டு மீதி அத்தனை புத்தகங்களையும் நண்பர்களுக்குக் கொடுத்து விட்டேன்.

அதன்பிறகு ஐந்து வருடங்கள் முழுக்க பங்குசந்தை சார்ந்த தொழில். முழுக்க என்னை ஒப்புக் கொடுத்து ஒரு நிறுவனத்தை வளர்த்தேன். ஆனால் ஏமாற்றப்பட்டேன். ஐந்து வருடங்கள் வேலை செய்த பணத்தை திரும்பக் கேட்டபோது, காவல்துறையில் மாட்டி விடப்பட்டேன். அப்போதுதான் திருமணம் ஆகி என்னோடு வந்திருந்த மனைவி முன் மிரட்டப்பட்டு, என் பணத்துக்கான சாட்சியங்கள் அழிக்கப்பட்டன. நிராதரவான மனநிலையில் 43 தூக்க மாத்திரைகளை விழுங்கி, பிறகு காப்பாற்றப்பட்டேன். வாழ்க்கை குறித்தும், மனிதர்கள் குறித்தும் அவநம்பிக்கை வந்தது. அந்த  இறுக்கமான காலகட்டத்திலிருந்து தப்பிக்க ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் தொகுப்பை எழுதினேன்.

பொருளாதாரமாய் எவ்வளவோ கடந்து வந்து விட்டாலும் அந்த நேரத்தில்  ஆட்டிசத்தின் பாதிப்பிலிருந்து விலகாத என் தங்கையையும்  அம்மாவையும் கவனிக்கத் தவறியவனாக இன்று வரை குற்ற உணர்வு கொள்கிறேன். என் குடும்ப அமைப்பு சின்னாபின்னமாகி போனதில்  இந்த நிகழ்வுக்குப் பெரும் பங்குண்டு..

ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் தொகுப்பு உங்கள் முந்தைய கவிதைகளில் இருந்து வேறுபட்டிருந்தது. லாகிரியும் அவ்வாறே. ஏன்?

naran-intw-1வேறு வேறு கவிதைகள் அல்லவா.. அதனால் வேறு வேறு மாதிரி எழுதிப்பார்க்கிறேன். ஒவ்வொரு தொகுப்புக்கும் மூன்று வருடங்கள் கால இடைவெளி வேறு இருக்கிறது. அந்த இடைவெளியில் என் வாழ்வில் நிகழும் மாற்றங்கள், அனுபவங்கள், வாசிக்கும் நூல்கள், ஓவியங்கள்,  உளச் சிக்கல்கள், சமூக நிகழ்வுகள் இவை எல்லாமும்தான் நான் எதை எழுத வேண்டும் எனத் தீர்மானிக்கின்றன. உப்பு நீர் முதலைக்கும், ஏழாம் நூற்றாண்டின் குதிரைக்கும் இடையே இரண்டு முறை காவல்துறை அனுபவங்கள் கிடைத்தன. எந்தத் தவறும் செய்யாமல் தண்டிக்கப்பட்டேன். ஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறேன். இடையே விரும்பி ஒரு குழந்தை பெற்றிருக்கிறேன். பணத்திற்காக என் அத்தனை உணர்வுகளும் மழுங்கிப் போகுமளவுக்கு கடுமையான வேலைகளைச் செய்திருக்கிறேன். மனிதர்களிடம் இருந்து விலகி தலைமறைவாய் வாழ்ந்திருக்கிறேன். வாழ்வும், அனுபவமும் மாற, மாற கவிதைகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன.

மொழியாகவும்   ஒவ்வொரு தொகுப்பிற்கும் வேறு வேறு மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்குமென எனக்குத் தோன்றுகிறது. அதைத் தாண்டியும் சில விஷயங்களை  முதல் தொகுப்பிலிருந்து விடுவிக்க முடியாமல் வைத்துக்கொண்டே இருக்கிறேன்.  எண்களை, நிறங்களை அதிகம் பயன்படுத்துவதை நான் மாற்றிக்கொள்ளவில்லை. காரணமில்லாமல் அவை கூடவே இருக்கின்றன.

தமிழின் முதல் நேரடி ஜென் கவிதைகளை முயற்சி செய்திருக்கிறீர்கள். அதைச் செய்ய நினைத்ததற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணங்கள் உண்டா?

2010 வரை மூன்று வருடங்கள் ஜென் குறித்து நிறைய வாசிக்கவும், எழுதிப் பார்க்கவும் செய்தேன். அதன் அமைதிநிலை பிடித்திருந்தது. 17 கவிதைகள் எழுதி இருந்தேன். என்னளவில் அந்தக் கவிதைகள் இப்போதும் பிடித்தமானவை. 2009-இல் இங்கிலாந்திலிருந்து வெளி வரும் “The Journal” இதழிலும், “The cannon’s mouth ”  இதழிலும்  அந்தக் கவிதைகள் வெளியாகின. அந்தக் கவிதைகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர்   M.A.Schaffner எனக்கொரு கடிதம் எழுதி இருந்தார். அவருடைய மூன்று கவிதைகளும் அதே இதழில் வந்திருந்தன. நான் ஜென் மார்க்கத்தைக் கடைபிடிப்பவன் என நினைத்து, ஜென் குறித்தும், ஜென் கவிதைகள் குறித்தும் நிறைய கேள்விகள் எழுப்பி இருந்தார். எதற்கும் என்னிடம் பதில் இல்லை. அதே வருடத்தில் எனது 11 கவிதைகள் “Poem hunter” – இல் “E -Book” ஆக வெளியானது. அந்தக் கவிதைகளில் சிலவற்றை “உப்பு நீர் முதலை” தொகுப்பில் சேர்த்திருந்தேன். அந்தக் கவிதைகளிலும் ஜென் மனநிலை இருப்பதாக நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள்.

கவிதைகளில் வடிவ ரீதியிலான சோதனைகளையே அதிகம் செய்து பார்க்கிறீர்கள். ஏன்?

சவாலான விளையாட்டுகள் பிடிக்கும் இல்லையா, அப்படித்தான்.  ஒரு  பாதுகாப்பான இடத்திற்குள் நின்று கொண்டு ஒரே மாதிரி விளையாடுவது பிடிக்கவில்லை. புதிதாய் ஒன்றை பரிசோதித்துப் பார்க்க மனம் விரும்புகிறது. சென்று சேரும் ஒரே இடத்திற்கு வெவ்வேறு சாலைகளில் பயணிப்பது போல. கவிதையின் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் வெவ்வேறு மாதிரியாய் எழுதிப் பார்க்கிறேன். இங்கே எது கவிதை எது கவிதையல்ல என தீர்மானிக்கப்படாமல் இருப்பதும் சவுகரியமாய் இருக்கிறது.

சமயங்களில் பெண்கள் குறித்தும், அவர்களின் உடல் ரீதியான கஷ்டப்பாடுகள்  குறித்தும்  எழுதியிருக்கிறீர்கள். ஒரு ஆண் படைப்பாளியாக அதை எழுத வேண்டியதன் அவசியம் என்ன ? 

 

எந்தவொரு கலை வடிவத்திற்கும்  வயதும், பாலினமும் தேவையில்லை என்று நம்புகிறேன்.” 

மீண்டும் என் வாழ்வியல் அனுபவத்திற்குத்தான் வருகிறேன். பால்யத்திலிருந்து மூன்று விதமான பெண்கள் நடுவே வாழ்ந்தேன். அது மிகவும் சிக்கலான வாழ்க்கை முறை. 26 வயதில் கணவனை இழந்த ஒரு தாய், என் அக்கா, அவள்  என்னிலும் மூன்று வயது மூத்தவள்.  தம் உறவினர்களைப் போல தம்மால் வாழமுடியவில்லையே என  எப்போதும் அங்கலாய்த்தபடியே இருப்பாள்.  ஆட்டிசத்தால் எந்த இயக்கமுமில்லாமல் வெறுமனே உயிரோடு மட்டுமே இருக்கும் என் தங்கை. இவர்களிடையே நான்.

மூன்று பெண்களின் வாழ்க்கையையும் கூர்ந்து பார்த்தபடியே இருப்பேன். இப்போதுவரை என் அப்பாவின் தோற்றம் எனக்குப் புகைமூட்டமாய்தான் நினைவிருக்கிறது. அம்மா ஒரு சிறிய ஹோட்டல் நடத்தினார். அதிகாலையிலிருந்து  இரவு பதினோரு மணிவரை கடுமையாய் உழைப்பார். நானும் அதே நேரம் வரை விழித்திருப்பேன். என் பத்து வயதிலிருந்து கல்லூரி  படித்து முடியும் வரை தினமும் ஓய்வு நேரங்கள் முழுக்க நான்தான் கடையில் டீ போடுபவன்.

என் அக்கா திருமணமாகி சென்னைக்குச் சென்றதும்  பெரும்பாலும்  என் தங்கையை  வீட்டில் பூட்டி விட்டுதான் செல்வோம்.  நான் கல்லூரி முதல் ஆண்டு படிக்கும்போது ஒருநாள் மதிய இடைவேளையில்  கதவைத் திறந்து பார்க்கும்போது அவளின் படுக்கை முழுக்க ரத்தக்கறை. அவளின் முதல் மாதவிடாய்  குருதி. எந்த உறுத்தலுமில்லாமல்  அவளைத் தூக்கிக் கொண்டுபோய் குளிப்பாட்டி மீண்டும் வந்து கிடத்துகிறேன். வீட்டைத் துடைத்து உலர வைத்துவிட்டு என் அம்மாவிடம் போய் சொன்னேன். வீட்டிற்கு வந்து பார்த்தபின் என் அம்மா வெடித்து அழுதார். நானும்  அழுதேன். அன்று முழுவதும் எங்களுக்குள் பேச வார்தையே இல்லாமல் கண்ணீர் மட்டுமே வந்துகொண்டிருந்தது.

இதிலிருந்து தான் லாகிரி தொகுப்பிலிருக்கும்    மாதவிடாய் கவிதையும், பெண்ணுடல் கவிதையும்  உருவாகிறது.

 

  விடாய் நாளின்

 

வரைய தூரிகை இல்லாதபோது 
  அவள் தம் யோனி வரப்பின் கறுமயிர்களால் வரைந்தாள்.
  வர்ணங்கள் இல்லாத பொழுது விடாய் நாளின் செந்நிற ஒழுக்கை

  அம்மையே, தமக்கையே, இல்லாளே, மகவே 
  இனி உன் தொடையிடை ஓவிய கித்தானை அலசி பிழிந்து 
  மறைவில் காயபோட வேண்டா.

  அத்துயர் மிகுந்த ஓவியத்தை
  துயரத்தின் நறுமணத்தை
  நடு வீட்டில் காட்சிபடுத்து.
  பார்வையிட வீட்டின் ஆண்களை அழை.

  உற்றுப் பார்க்கச் சொல்.
 முள் முடி சூட்டப்பட்ட இயேசுவின் முகம் 
 வெரோனிக்காளின் கைகுட்டையில் பதிந்ததைப்போல 
 கிதானில் யோனியின் முகம் பதிந்திருப்பதைக் காட்டு.

 பின் 
 முழுக்க ரத்தம் பூசப்பட்ட 
 விடாய்த் துணியை சிறிது சிறிதாய் அரிந்து 
 வீடெல்லொம் தோரணம் கட்டு
 வலியைக் கொண்டாடு… “ 

 

பெண் உடல்

குழந்தையைப் போல் பரிசுத்தமாய் கழுவப்பட்டு 
வெள்ளைத்துணியால் சுற்றப்பட்டு 
தேவாலய வெண் உடுப்பைப் போல் வெளுக்கப்பட்டு 
சுருக்கங்கள் அகற்றப்பட்டு 
காப்பர் பாத்திரங்களைப் போல் நன்றாய் துலக்கப்பட்டு

 

பின் 

அந்த மூன்று எழுத்தும் நன்றாய் நக்கப்பட்டு 
என்பதொரு பூச்சி குதிக்காலால் நசுக்கப்பட்டு 
மலிவு விலைக்கு விற்கப்பட்டு 
ஆள் துளை கிணறு உறிஞ்சப்பட்டு
தரை விரிப்பு,,உங்கள் பாதங்களால் அதன் முகம். துடைக்கப்பட்டு

 எளிய விவசாயியின் நிலத்தில் ஊன்றப்பட்ட அடையாளக்கல்.பிடுங்கி எறியப்பட்டு
பிரபஞ்சத்தில் முதலில் சுவைக்கப்பட்ட ஆப்பிள் கனி. விலக்கப்பட்டு
ஆலைக்கு கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனம்உருவப்பட்டு
கூட்டல்குறி வடிவ மரச்சட்டத்தில் விரிக்கப்பட்ட கரம்அறையப்பட்டு 

பூர்வீக பழங்குடி.துரத்தப்பட்டு 
நள்ளிரவு உண்டியல்உடைக்கப்பட்டு
குடி மேஜையின் சதைப்பற்றுள்ள இளங்கன்றுஉண்ணப்பட்டு
ஆஸாதிஆஸாதி.. என ஓடிவரும் காஷ்மீரி சிறுவன்.துளைக்கப்பட்டு 
எளியவனின் தலை மயிர்.அதிகாரத்தால் மழிக்கப்பட்டு, 
சபையில் குடிகார அரசனின் கையிலிருக்கும் துகில்.அவிழ்க்கப்பட்டு

………கடிக்கப்பட்டுஉண்ணப்பட்டுதுப்பப்பட்டு
புகைக்கப்பட்டு,,அருந்தப்பட்டு
கசக்கப்பட்டுஉடைக்கப்பட்டு,……

மீண்டும் ஒரு முறை.
குழந்தையைப் போல் பரிசுத்தமாய் கழுவப்பட்டு.
வெள்ளைத்துணியால் சுற்றப்பட்டு.
……..
புதைக்கப்பட்டு.இல்லையேல் சிதையூட்டப்பட்டு.

~ 
எத்தனை ஆண்டுகள் ஆவியாகிவிட்டன இப்படியாய்.

  {குறிப்பு: இதற்காகவெல்லாம்  நீங்கள் என்னை ஒரு புனித ஆத்மாவாக சித்தரித்துக் கொள்ளத் தேவை இல்லை.}

உரைநடையை விட துல்லியமான சவுகரியமான வடிவம் கவிதைதான். அப்படி இருந்தும் சிறுகதை மேல் ஆர்வம் ஏற்பட என்ன காரணம்?

கவிதை துல்லியமான வடிவம் என்பது மிகச்சரி. ஆனால் சவுகரியமான வடிவம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். காலங்காலமாக கவிதை மட்டும் ஏன் சோம்பேறித்தனமான, இலகுவான படைப்பு வடிவமாக பார்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது எனப் புரியவில்லை. நவீன ஓவியம், நவீன இசையை உருவாக்குவதைப் போல, பிற எந்தக் கலை வடிவத்தையும் உருவாக்குவதைப் போலவே நவீன கவிதையை எழுதி முடிக்கவும் மெனக்கெட வேண்டியிருக்கிறது. மெனக்கெடல் இல்லாத கவிதைகள் அப்பட்டமாக வெளித்தெரிந்து விடும்.

சிறுகதை எழுதத் தொடங்கியது இப்போதாய் இருக்கலாம். ஆனால் கவிதைகள் வாசிக்கத் துவங்கிய காலத்தில் இருந்தே, சிறுகதைகள், நாவல்களையும் வாசித்துக் கொண்டேதான் இருக்கிறேன். எனது முதல் சிறுகதை ’பெண்காது’ தடம் இதழில் வெளிவந்தது. அதற்குக் கிடைத்த வரவேற்பும், பாராட்டுகளும் இன்னும் சிறுகதைகளை எழுத வேண்டும் எனும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் புத்தகக் கண்காட்சிக்கு ‘’உரோமம்’’ என்னும் என் நாவலும் வெளிவர இருக்கிறது.

வடிவ ரீதியாக உங்கள் கவிதைகள் மாற்றம் பெற்றாலும் நேரடியாகச் சொல்லும் முறையை நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லை. இதை எப்படிப் பார்க்க வேண்டும் ? 

அது என் இயல்பாய் இருக்கிறது. நேரடியாகச் சொல்வது பிடித்திருக்கிறது. வாசகனை நாம் ஏன் ஏமாற்ற வேண்டும்? கவிதையில் மட்டும் அல்ல. இயல்பில் மனிதர்களோடு பேசுவதிலும் பழகுவதிலும் கூட நேரடியாகவே இருக்கிறேன்.

என் படைப்பையும் என் மனநிலையையும்  வேறு வேறாகப் பார்ப்பதில்லை. என் மனநிலையில் என்ன இருக்கிறதோ அது அப்படியே  பிரதிபலிக்கிறது. படைப்பிற்கும் எனக்கும் கூடுமானவரை இடைவெளியில்லாமல் பார்த்துக் கொள்கிறேன். படைப்பின்  முன் நான் நேர்மையாய் இருக்க விரும்புகிறேன். அதனிடம் என்னை  நிர்வாணமாய் ஒப்புக் கொடுக்கிறேன்.

( “…. வலிந்து உங்கள் படைப்பின் மீது புனிதத் தன்மையை ஏற்றி வைக்காதீர்கள் ”   )

கவிதைகளை மொழிபெயர்ப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அதற்கான தேவை இருக்கிறதா?

மிக முக்கியமான தேவை இருக்கிறது. தமிழ்ச் சூழலில் இப்போது எழுதப்படும் கவிதைகளை உருவாக்கிக் கொடுத்ததில் வேற்றுமொழிக் கவிதைகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகவே நினைக்கிறேன். என் கவிதைகளின் வடிவ முயற்சிக்கு முன்னோடியாகவும், நம்பிக்கையாகவும்  இருந்தது மொழிபெயர்ப்பு கவிதைகளே. ஒப்பீட்டளவில் வேறு மொழிகளில் இருந்து இங்கேவரும் கவிதைகள் அளவுக்கு இங்கிருந்து பிற மொழிகளுக்கு கவிதைகள் மொழிபெயர்க்கப்படவில்லை. நம் கவிதைகள் அருகில் இருக்கும் தென் பிராந்திய மாநில மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் கூட இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. என்பது வருத்தமானதல்லவா?

சமகாலக் கவிஞர்கள் மற்றும் முன்னோடிகளில் யாரை விரும்பி வாசிக்கிறீர்கள்?

முன்னமே சொன்னதுபோல், என் கவிதை முன்னோடிகள் தேவதச்சனும், பிரம்மராஜனும் தான். சக பயணிகளான கதிர்பாரதி, இளங்கோ கிருஷ்ணன், பாம்பாட்டி சித்தன், நேசமித்ரன், இசை, வெய்யில், வே,பாபு, சாம்ராஜ், லிபி ஆரண்யா, போகன்சங்கர், சபரிநாதன், ரியாஸ் குரானா, அனார் ஆகியோரின்  கவிதைகள் பிடித்திருக்கிறது. இவர்கள் கவிதைகளில் தனித்தன்மை இருப்பதாக நினைக்கிறேன். இதற்கு  முந்தைய காலகட்டங்களில் சி. மோகன், மனுஷ்யபுத்திரன், யூமா வாசுகி, கலாப்ரியா, குட்டிரேவதி, லீனா மணிமேகலை, மாலதி மைத்ரி, சல்மா, சுகிர்தராணி, தமிழ்நதி, ஸ்ரீநேசன், கண்டாராதித்தன், ரமேஷ் பிரேதன், லஷ்மி மணிவண்ணன், சங்கர்ராமசுப்ரமணியன், கரிகாலன், என்.டி.ராஜ்குமார், யவனிகா ஸ்ரீராம், சுகுமாறன் ஆகியோரின் கவிதைகள் பிடித்தமானவையாக இருக்கிறது.

{ குறிப்பு : “நிச்சயமாக இது முழுமையான பட்டியல் இல்லை. நினைவில் இருந்து சரிந்தவை“ }

புகைப்படம் மற்றும் வரைகலைகளில் உங்களது ஈடுபாடு குறித்து… உங்கள் கவிதைகளோடு அவற்றை எவ்வாறு தொடர்புபடுத்துகிறீர்கள்?

நெருக்கடியான வாழ்க்கையின்போது இளைப்பாறுவதற்கு ஒரு சிறுபயணம் போவோம் இல்லையா, அப்படித்தான் இதையும் செய்கிறேன். கவிதைகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாதபோதோ, சிறு இளைப்பாறுதல் தேவைப்படும்போதோ, வேறு ஒரு கலையை முயற்சி செய்து பார்க்கிறேன். அது ஓவியம் வரைவது, புகைப்படங்கள் எடுப்பது, ஓவிய மரபைத் தேடிச்செல்வது, நாடகங்கள் நடித்துப் பார்ப்பது என்பதாக இருக்கிறது. பயணம் எங்கே சென்றாலும் வீடு திரும்புவோம் இல்லையா, அதேபோல் எந்தக் கலைவடிவத்தை தேடிச் சென்றாலும் மீண்டும் மனம் கவிதைக்கே திரும்பி விடுகிறது. ஆனால் அதில் விருப்பமான பிறகலைகளை இணைத்துப் புதிதாக முயற்சி செய்து பார்க்கிறேன். என் சிறந்த. நண்பர்களில் இரண்டு பேர்  மிக முக்கியமான ஓவியர்கள். மணிவண்ணன் மற்றும் ரோஹிணிமணி.

தமிழ்சூழலில் வழங்கப்படும் அங்கீகாரம் மற்றும் விருதுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்ச்சூழலில் அங்கீகாரம் எப்போதுமே மிகத் தாமதமாக வழங்கப்படுவதாகவே நினைக்கிறேன். படைப்பாளியின் மீது முழுக்கத் தூசிபடிந்த பிறகே, இங்கு அவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். ஆச்சர்யமாக சிலருக்குச் சரியான நேரத்தில் அங்கீகாரம் கிடைத்தாலும் அதற்கு வரும் எதிர்க்குரல்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த எதிர்க்குரலின் காரணமாக விருது வழங்கும் அமைப்புகளும் சோர்வுற்று, தங்கள் வேலையை நிறுத்தத் தொடங்கிவிட்டார்கள். சக படைப்பாளிக்கான அங்கீகாரத்தின் மீது எரிச்சலுற்று பொதுவெளியில் விமர்சிப்பது, அந்த படைப்பாளியை அவமானப்படுத்துவது இதெல்லாம் அறிவார்ந்த சமூகச் செயல்தானா? என்கிற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

4 comments for “வதை ~ வாதை ~ வார்த்தை

  1. Kalaishegar
    November 4, 2016 at 6:15 pm

    நரன் பற்றிய கட்டுரையை வாசிக்க ஸ்வாரஸ்யமாய் அமைந்தது. புதிய பரிமாணம், புதிய யுக்திகள் என கவனிக்கப்பட வேண்டிய ஒருவராய் காட்சி கொள்கிறார். பகிர்வுக்கு நன்றி.

  2. ஸ்ரீவிஜி
    November 7, 2016 at 5:25 pm

    `என் இயல்புதான் என் படைப்பு’ அருமையான நேர்காணல். நல்ல வாசிப்பைக் கொடுத்தது.

  3. November 15, 2016 at 11:02 pm

    Superb நரன், ஆனால் ஒன்று புரியவில்லை, ஏன் என் கண்களில் நீர் வரத்துங்கியது………..!
    God bless u…….

  4. Bharathy Gangadharan
    July 16, 2020 at 8:38 pm

    இயல்பான படைப்புகளை அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் மாறுபட்ட கோணங்களில் அனேகமான படைப்பாளிகளின் தன்மையினின்றும் மாறுபட்டு ஆச்சரியமாக ப்ரமிக்க வைப்பதில் நரனின் படைப்புகள் குறிப்பிடத்தக்கது . சிறுதைகளாகட்டும் கவிதைளாகட்டும் நரனின் எழுத்து நடை தனிதான் . அருமை வாழ்த்துக்கள் .

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...