வே.நி.சூர்யா கவிதைகள்

நடந்தேறுகிறது எதிர்பாராத இவையெல்லாம்surya-1
ஒரு கோடு கடல் ஆகுமென நினைத்திருக்கவில்லை
ஓர் இசை வாழ்க்கை ஆகுமென நினைத்திருக்கவில்லை
ஒரு குண்டூசி இரவு ஆகுமென என்று கூட நினைத்திருக்கவில்லை
இன்னும் எத்தனையோ நினைத்திருக்கவில்லைகள்
இவையெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை
குண்டூசி துளையிடும் இசை நீள்கிறது

காகிதத்தில் நீளும் பெருங்கோடென
பழமொழிகளுக்கு எதிராக மொழியை கோர்க்காதவர்கள்

தோன்றிக்கொண்டே செல்கின்றனர்
வீட்டின் கூரைகளை தாண்டிப் பறக்கும் வெண்புறா
ஒரு பட்டம் அதைத் துரத்தும்
அணைக்கட்டு நீரை எதிர்பார்க்கும் விவசாயிகள் போல

ஒரு முடிச்சுக் கயிறு தலையை எதிர்பார்க்கிறது
மனிதத் தலையும் மீனுடம்பும் கொண்டவள் வருகிறாள்

கடலின் இதயத்துடன்
இரவுக்கடலில் புதையுண்ட மலையின் அஸ்திவாரத்தில்

புதையல் தேடப்போ என்கிறாள்
என் உப்பே என

தன் குழந்தைகளைத் தாலாட்டும் தாய்மார்கள் பாடுகின்றனர்

உங்களுக்காக இதுவரை யாரும் கேட்காத  கானத்தை.

 

••••••••
வேலி தாண்டும் கறுப்பு ஆடுகள் கிளப்பும் புழுதி போலsurya-2

வண்ணத்துபூச்சிகளின் கண்களால் வரும் யாவற்றையும்

விளையாட்டுக்காக தள்ளியிருந்து பார்க்கிறேன்

ஒலியோவியங்கள் எரிக்கப்பட்டிருந்தது
நனவுப்பதிவுகள் புகையாக்கப்பட்டிருந்தது
கனவின் நாட்காட்டிகள் கிழித்து

நிலவுக்கு அப்பால் எறியப்பட்டிருந்தது
ஆழியலைகளின் சுவரொட்டி ஓட்டிய பிரதேசங்களில்

பகைவர்கள் குடியேறியிருந்தனர்
சாவின் திரவமெல்லாம் வற்றி வெறுமை பாய்ந்து கொண்டிருந்தது
தடயங்களின் காரணத்தை தடயமின்றி அழித்துக்கொண்டே

சாயை வீரர்கள் ரோந்து போகிறார்கள்
செம்புக்கம்பிகள் மீது ஊறி விரவும் மின்எறும்புகளால்

மிளிரும் விளக்குகளின் குரலற்ற நிழல்கள்

இருளை தொப்பியென அணிந்து செல்வது தெரிகிறது
கடற்காக்கைகள் தன் நிழலை

கடல் அலைகளின் மீது தவற விடுவது தெரிகிறது
காட்சிகள் கசிந்து வடிகிறது கண்களில் இருந்து
கறுப்பு சுடர் கோளம் வெண்மை பின்னணியில் உருள

தூக்கி எறிகிறேன்
அவை பரவி பறக்கும் பாக்டீரியா போல

 

••••••
புலி உறுமும் நீல மலையில் தொலைந்து போன

ஆட்டுக் குட்டி ஆகிவிடுகிறேன்

உன்னுடன் பேசாத பொழுதுகளில்
நீ மேய்ப்பனாக வந்தால் தப்பியிருப்பேன்
புலியின் நேசக்கதவு இக்கணம் இங்கு திறந்ததைக் கண்டேன்
பாய்ந்து வந்து கழுத்தில் முத்தமிட்ட அந்தப் புலி பெண் என அறிந்தேன்
மனப்புலிகள் அலையும்போது உன் பேச்சு எனக்கு எதற்கு ?
நீ தேவையில்லை போ
போய் குளிரூட்டப்பட்ட திறந்த சிறையில்

சுழலும் நாற்காலி மேல் அமர்ந்து கொள்
சதைகள் பிய்த்து எறியும்போது கொல்லும் புலிகளை நேசிக்கிறேன்
அதைவிட முக்கியமாக
குளிர்கால உன் எண்ணப் படகுகளையும்.

 

••••••

 

அவளிடம் இருந்து தப்பி பேருந்தில் ஏறினேன்surya
பேருந்திலும் அவன் இருந்தான் என பேருந்தில் இருந்து

எண்ணெய் குழாய் ஓடும் வயலில் குதித்தேன்.
வயலிலும் அவர்கள் இருந்தார்கள் என வயலை விட்டு வேகமாக ஓடி மயானத்தில் நுழைந்து களைப்பில் அங்கேயே தூங்கிப் போனேன்.
விழித்து பார்க்கையில் என் மீது மரக்கட்டைகளும்

அவற்றின் மேலே நெருப்பும் அதைச் சுற்றி அவர்களின் கூட்டம்
இதுவே பிரவாயில்லையென அங்கேயே தூங்கி விட்டேன்
கொஞ்சம் வெப்பம் அதிகம் தான்
எலும்புகள் தாக்குப்பிடிக்கும் எனத் தோன்றிற்று.

 

••••••

புகைப்படத்தில் இருந்தவரின் கையில் ஒரு புகைப்படம்
அந்த புகைப்படத்தில் இருந்தவரின் கையிலிருந்த புகைப்படத்தில்

புகைப்படம் ஏந்திய சிறுவன்
அந்த புகைப்படத்தில் இருந்தவரின் கையிலிருந்த புகைப்படத்தில்

புகைப்படம் ஏந்திய சிறுவனின் கையில்

போர் துக்க காட்சிகளின் புகைப்பட ஆல்பம்
அந்த புகைப்படத்தில் இருந்தவரின் கையிலிருந்த புகைப்படத்தில்

புகைப்படம் ஏந்திய சிறுவனின் கையிலிருந்த போர் துக்க காட்சிகளின் புகைப்பட ஆல்பத்தில் என் முன்னாள் காதலியின் சிதறிய உடல்
இதற்குமேல் இதையெழுத உனக்கு அனுமதி

2 comments for “வே.நி.சூர்யா கவிதைகள்

  1. Vishnukumar
    November 3, 2016 at 5:38 pm

    அவளிடம் இருந்து தப்பி எனத்தொடங்கும் கவிதை அருமை..

  2. கார்த்திக் திலகன்
    October 10, 2024 at 8:29 pm

    முதல் இரண்டு கவிதைகள் மிகவும் சிறப்பாக உள்ளன. ஒவ்வொருவரியிலும் கவனமாக செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகள் – அவை விரித்து வைக்கும் புதிவிதமான கற்பனை தளங்கள் ஆகியவை கவிதையின் மேல் கூடுதல் ஈடுபாட்டினை ஏற்படுத்துகின்றன

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...