கடைசியாய் காதலைப் பிரிப்பதற்காக பெண்ணை வீட்டில் அடைத்து வைக்கும் காட்சியுள்ள சினிமாவை எப்போது பார்த்தீர்கள்? காதலை எதிர்ப்பது போல? ஜாதிப் பிரச்சினை மட்டும் இல்லையென்றால், ஏகத்துக்கு காதல் திருமணங்களாய்த்தான் இருக்குமென்று நினைக்கிறேன். இருந்தாலும் படத்துக்கு நடுவில் திருமணம் ஆவதுபோல் காட்சி வந்தாலே, சரி யாரோ வந்து நிறுத்தப்போகிறார்கள் என்று தெரிந்து விடுகிறது. பெற்றோர்கள் மாறிவிட்டார்களா? காதல் திருமணங்களை ஏற்க ஆரம்பித்து விட்டார்களா? இல்லை காதல் அத்தனை தீவிரமாக இல்லையா?
இந்த நவீனகாலம், குறிப்பாக உலகமயமாக்கலுக்குப் பிறகு நாம் நமது பண்பாட்டைவிட்டுச் சற்று விலகி வந்திருக்கிறோம். முக்கியமாக, கூட்டுக் குடும்பங்கள் உடைந்ததைச் சொல்லலாம். முன்பு ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் ஒற்றை முகமிருந்தது. ஒரு தலைமை இருந்தது. இப்போது அது ஒழிந்து தனிநபர்களின் விருப்பங்கள் முக்கியமாகி உள்ளன. இதற்கு இளைய தலைமுறையின் வருமானப்பெருக்கம் ஒரு பக்கமென்றால், பெண்களின் பொருளாதார முன்னேற்றமும் முக்கியமாய் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
இந்தப்பாடலில் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு தடபுடலாக நடக்கிறது. சிலநாட்களில் திருமணம். அவள் தோழி, பேசாமல் நீ புலிகள் உலாவும் பயங்கரமான காட்டைக் கடந்து காதலனுடன் ஓடிவிடு என்கிறாள். அவள் சும்மா ஓடிப்போகச் சொல்லியிருந்தால் பிரச்சினையில்லை. ஏன் காட்டின் பயங்கரத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்? மறைமுகமாய் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையைக் கட்டிக் கொள்ளச் சொல்கிறாளோ? வீட்டார் சொல்லி அனுப்பியிருப்பார்களோ? இல்லை அவளை ஆழம் பார்க்கிறாளா?
அரும்புவிடும் பூக்களின் தேனில் செய்த
கள்ளை நிரம்பக் குடித்தனர்
புதுமணல் கொட்டி வீட்டை அலங்கரிக்கின்றனர்
நீண்ட கூந்தலுடைய எம்மகள் திருமணம் என்று
ஊரெல்லாம் சொல்கின்றனர்
செம்பைப் போன்ற காய்ந்த
ஆலிலை வடிவான வேலையும்
உன்னுடன் உள்ளத்தால் ஒன்றிய
கருந்தாடியுடையவனுமானவன் உன் காதலன்
வளைந்த கிளைகள்கொண்ட கடம்பமரத்துத்
தேன்சொரியும் மென்மலர்களைத் தளிரோடு எடுத்து
உன் குளிர்கூந்தலில் சூடி
மூங்கில்களின் அழகொழியும்படி மழைவராது
உயரே தூரம்போகிய காட்டிடத்தே
யானையை இரையாக்க முயன்று தோற்ற புலி
கடுஞ்சினத்தோடு உறுமும்
அவ்வோசை கேட்டு பெண்யானைகள் வெருண்டோடும்
உன் காதலனுடன் அவ்வழியே சென்றுவிடு.
ஒரு பெண் ஆணின் மீது கொள்ளும் அலாதி காதலுக்குப் பின்னாலும் அவளை பாதுகாத்துக் கொள்ளும் எண்ணமே இருக்கிறது. இந்தப் பாடலில் உள்ள சூழல் அதைத் தொட்டுக் காட்டுகிறது. காதலனுடனான கடுமையான பாதை அல்லது வீட்டில் பார்த்துப் பார்த்துச் செய்துவைக்கும் திருமணம். காதலனுடன் செல்லும் பாதையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று குறிப்புணர்த்துகிறாள்.
சங்கப்பாடலை வாசிக்கையில் அதன் வரிகளை ஒவ்வொன்றாய் விரித்தெடுத்துப் பொருள் கொள்ள வேண்டும். காதலன் கையில் வேலுடன் இருப்பவன். கடம்ப மரம் நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது. மழையற்ற காட்டுவழியே காதலனுடன் கடக்கச் சொல்லும் தோழி, கடம்ப மலரைச் சூடிக்கொள்ளச் சொல்கிறாள். வாசிக்கையில் புன்னகைக்க வைத்தது. ஒருவேளை அவள் அவனுடன் செல்லும் வழியில் மனம் மாறக்கூடும் என்று சொல்லியிருப்பாளோ? வீட்டை மறக்காமல் அதன் நினைவாகச் செல்வதற்காகச் சொன்னாளோ? அந்தக்காலத்தில் முருகன் இறங்கிவிட்டதாகச் சாமியாடுபவர்கள் கடம்ப மலர் சூடுவதுண்டு. முருகனுக்குக் கடம்ப இலைகள் சார்த்துவார்கள். ஏன், முருகனையே கடம்பா என்றும் கூப்பிடுகிறோம். அத்தகைய உகந்த மலரை ‘வேலுடன் செல்லும் காதலனுடன்’ செல்கையில் சூடிச்செல்வதால் அவன் நெருக்கமாய் இருப்பான். பாதுகாப்பான் என்ற அர்த்தமும் கொள்ளலாம்.
சங்கப்பாடல்:
நனைவிளை நறவின் தேறல் மாந்தி,
புனைவினை நல்இல் தருமணல் குவைஇ,
‘பொம்மல் ஓதி எம்மகள் மணன்’ என,
வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால்,
புதுவது புனைந்த சேயிலை வெள்வேல்,
மதிஉடம் பட்ட மைஅணற் காளை
வாங்குசினை மலிந்த திரள்அரை மராஅத்து,
தேம்பாய் மெல்இணர் தளிரொடு கொண்டு, நின்
தண்நறு முச்சி புனைய, அவனொடு
கழைகவின் போகிய மழைஉயர் நனந்தலை,
களிற்றுஇரை பிழைத்தலின், கயவாய் வேங்கை
காய்சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ,
இரும்பிடி இரியும் சோலை
அருஞ்சுரம் சேறல் அயர்ந்தனென், யானே.
இயற்றியவர்: கயமனார்
வெண்கடம்ப மலர்:
சமகால செயல்களுடன் சங்கப்பாடல்களை அணுகி பார்ப்பதும், எளிய திறப்புகளை ஏற்படுத்தி வாசகர்களை சுயமாக அவற்றை புரிந்துகொள்ள/ அர்த்தப்படுத்திக்கொள்ள வழிவிடுவது கவர்கிறது. பாடல் எண் போன்ற இதர தகவல்கள் தந்தால் மேல் வாசிப்புக்கு உதவும். பதிவுகள் மேலும் சில பாடல்கள் கருத்துப்பதிவுடன் நீளமாக ஆக்க கேட்டுக்கொள்கிறேன்.