மண்ட்டோ : இருளை வரைந்த ஓவியன்

manto-3மண்ட்டோவை நான் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மூலமே அறிந்தேன். ‘பாகிஸ்தான் சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் அவரது ‘திற’ எனும் சிறுகதை இடம்பெற்றிருந்தது. ஆதவன் தீட்சண்யா நல்ல கதைசொல்லி. அத்தொகுப்பில் முதல் சிறுகதையான ‘திற’ சிறுகதையை ஒரு கார் பயணத்தில் அவர் கூறியபோது முதலில் ஓர் மெல்லிய அதிர்ச்சி ஏற்பட்டது.

பொதுவாக இதுபோன்ற அதிர்ச்சி தரக்கூடிய சிறுகதைகளை இன்னும் ஆழ்ந்து வாசிக்க வேண்டியுள்ளது. வாசகனுக்கு அதிர்ச்சி தருவதற்கென்றே ஒரு திட்டமிட்ட உத்தியைப் பயன்படுத்தி அதை ஒரு தூண்டில் போல வாசகனின் மேல் வீசி, கவர்வதென்பது ஜனரஞ்சகப் பரப்பெங்கும் நடப்பதுதான். அதுபோன்ற எழுத்தாளனின் ஒரே நோக்கம் வாசகனை அதிர்ச்சி அடைய வைப்பது. அதுவே அவன் வெற்றி. மற்றபடி மானுடத்தின் ஆழத்தை அவ்வெழுத்துகள் அறியாது; அறிமுகப்படுத்தாது.

இணையத்தில் மண்ட்டோ குறித்துத் தேடும்போது போதுமான அளவு ‘திற’ சிறுகதை வெவ்வேறு நபர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. மண்ட்டோவை என்னால் அவ்வளவு சீக்கிரம் ஒரு சிறுகதையின் வழி கணிக்க முடியவில்லை. ஒரு படைப்பாளியின் படைப்புலகை அறிய ஒரு சிறுகதை மட்டும் போதுமானதல்ல. சதத் ஹசன் மண்ட்டோ என்ற மண்ட்டோவின் முழுப் படைப்புகள் அடங்கிய தொகுப்பின் மூலமே அவர் புனைவுலகத்திற்குள் நுழைய முடிந்தது.

ராமானுஜம் அவர்கள் மொழிபெயர்த்து புலம் பதிப்பில் பிரசுரமான மண்ட்டோவின் சிறுகதைகளையும் நினைவோடைகளையும் வாசிப்பதன் மூலம் அவரை அறிய முடியும் என நம்பினேன். சிறுகதைத் தொகுப்பை நான் வரிசையாக வாசிப்பவன் அல்ல. பக்கங்களைப் புரட்டி அப்போதைக்கு மனதை நெருங்கும் ஒரு சிறுகதையை வாசிப்பேன்.

அப்படிப் புரட்டும்போது ‘ஷரிபான்’ என்ற சிறுகதை கண்ணில் பட்டது.

கலவரத்துக்கு நடுவில் தனது வீட்டிற்குள் காலில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டாவுடன் நுழையும் காசிம் தன் மகளைத் தேடுகிறான். அவன் மகள் ஷரிபான் நிர்வாணமான கோலத்தில் உயிரற்ற உடலாக இருக்கிறாள். அவன் தன் மனைவி அதே வீட்டில் இறந்து கிடப்பதைக் காணக்கூட மனம் இல்லாதவனாக வெறிகொண்டு கோடாலியை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறான். சாலை வெறிச்சோடி இருக்கிறது. எதிர்ப்பட்ட ஹிந்துக்களை அவன் கோடாலி பதம் பார்த்து வீழ்த்துகிறது. அவன் வெறி இன்னும் அடங்கவில்லை. ஒரு சிறிய வீட்டை நோக்கி நடக்கிறான். உள்ளே ஒரு சிறு பெண். அவளை யார் எனக்கேட்கிறான். அவள் ‘இந்து’ என்கிறாள். பதினான்கு வயதைக் கடக்காத அவளின் ஆடைகளைக் கிழித்து வன்புணர்ச்சி செய்கிறான். கீழே விழுந்து தலையில் அடிபட்டதாலும் காசிமின் கைகள் அவள் கழுத்தை அழுத்தியிருந்ததாலும் அவள் இறந்துவிடுகிறாள்.

சிறிது நேரத்தில் ஒரு மனிதன் வாளோடு நுழைகிறான். அவன் அந்தப் பெண்ணின் அப்பா. அவனுக்குக் காசிமை அறிமுகம் இருக்கிறது. காசிமால் அவனை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஆயுதம் தாங்கியிருந்த அந்த மனிதன் போர்வையை விலக்குகிறான். தன் மகளின் இறந்த நிர்வாண உடலைப் பார்த்து வாள் அவன் கையிலிருந்து நழுவி விழுகிறது. வீட்டை விட்டு தன் மகளின் பெயரைக் கத்திக்கொண்டே ஓடுகிறான் எனக் கதை முடிந்தது.

என்னால் அன்று அந்த ஒரு கதையை மட்டுமே வாசிக்க முடிந்தது. எல்லாவற்றையும் தாண்டி அந்த ஹிந்து தகப்பன் ஏன் தன் வாளைக் கீழே போட்டான் என்ற கேள்வி மட்டும் தொக்கி நின்றது. ஒருவன் தன் மகளை வன்புணர்ச்சி செய்தது யார் என்று அறியாமல் எங்கோ இருக்கும் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு எல்லோர் மீதும் கோபப்பட்டு வன்முறையைச் செலுத்துகிறான். மற்றவன், தன் மகளை வன்புணர்ச்சி செய்து கொன்றவன் அருகில் இருக்க ஆயுதத்தை நழுவவிட்டு சாலையில் பைத்தியமாக ஓடுகிறான். இந்தக்காட்சி ஒரு மிரட்டலாக மனதில் உருண்டு உருண்டு விரிவாகிக் கொண்டிருந்தது. வன்முறையின் எல்லை எதுவரை? என்ற கேள்வி அன்று இரவு முழுவதும் உறக்கத்தை கலைத்துக்கொண்டே இருந்தது. வன்முறையின் எல்லை மனப்பிறழ்வாகத்தான் இருக்க முடியும் என்று பதில் தோன்றியபோது அழுத்தமான உறக்கம் வந்தது.

நாம் இன்னொரு உயிரை எந்த அளவிற்குத் துன்புறுத்திவிட முடியும். எவ்வளவு நீட்டித்து ஒரு வன்மமானtft-54-p-14-m-600x400 மனதை நம்முள் நிலைபெறச் செய்ய முடியும்? ஏன் அந்த வன்மமான மனம்  நிலைக்க விடாமல் ஏதோ ஒன்று தடுக்கிறது? போன்ற கேள்விகள் சக மனிதன் மேல் நம்பிக்கை கொள்ளவே செய்கிறது. அந்த ஹிந்து தகப்பன் மதத்தின் பெயரால் அந்த முஸ்லிமை கொன்றிருக்க முடியும். அப்படிச் செய்யவிடாமல் அவரைத் தடுத்தது எது? வாளை அவர் கைகளிலிருந்து நழுவவிட்டது எது? அவருக்கு அந்த வன்முறையின் எல்லை புரிந்திருக்கும். அப்போது அவர் செய்யப்போகும் ஒரு கொலை எந்த மாற்றத்தையும் கொடுக்கப்போவதில்லை என உணர்ந்திருப்பார். அவர் தன் மகளின் பெயரைக் கூச்சல் போட்டுக்கொண்டு வெளியே ஓடுகிறார். அவர் ஊரில் எஞ்சிய சிறுமிகளைப் பாதுகாக்க ஓடுவதாகவே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவள் மகளின் பெயர் சிறுமிகளின் பொதுப் பெயராக ஒலிக்கிறது. அவர் வன்முறையின் எல்லையைப் பார்த்துவிட்டார். அங்கு சிதைவைத் தவிர ஒன்றும் இல்லை. சிதைவுக்கு அர்த்தம் இல்லை. அர்த்தமற்றது அவரை நிலைகுலைய வைத்துவிட்டது.

மண்ட்டோவின் இந்தச் சிறுகதையை வாசித்ததும் அவர் அவ்வளவு எளிதில் கடந்துவிடக்கூடிய எழுத்தாளர் அல்ல எனப்புரியத் தொடங்கியது. சொற்களை மிகக் கவனமாகவே அவர் உபயோகிக்கிறார். மீண்டும் ‘திற‘ சிறுகதையை வாசித்தபோது அது சக வாசகனைச் சென்று அடையும் விதம் நூதனமாக இருப்பதை உணர முடிந்தது. மீள் வாசிப்பில் இக்கதை எனக்குக் கடும் குற்ற உணர்ச்சியை உண்டாக்கியது.

மயக்கத்திலிருந்து எழுந்த சிராஜூதினுக்கு தன் இருப்பிடம் சூரையாடப்பட்டது, தீவைக்கப்பட்டது, அவர் கண் முன்பே அவர் மனைவி கொல்லப்பட எப்படியாவது தங்கள் மகளான ஷகினாவை காப்பாற்றிவிடும்படி கெஞ்சியது, வேறு இடம் செல்ல இரயிலில் ஏறியது என ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகிறது. கடைசியாக அவர் தன் மகளைப் பார்த்த நிமிடம் நினைவுக்கு வருகிறது. அவரும் ஷகினாவும் வெறும் காலோடு ஓடிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அவள் துப்பட்டா கீழே விழுந்தது. அந்தப் பதற்றத்திலும் அவர் தன் மகளின் துப்பட்டாவை எடுக்கக் குனிகிறார். நிமிரும்போது அவள் கூட்டத்தில் காணாமல் போயிருந்தாள்.

அவள் அந்தக் கூட்டத்தில் ரயிலில் ஏறினாளா இல்லையா என்ற குழப்பமே அப்போது அவரை வாட்டியது. அவர் தன் மகளைத் தேடித் தேடியே ஆறு நாள்கள் கடந்தன. ஒருநாள் அவர் ஒரு இளம் சமூக சேவகர்கள் குழுவைப் பார்க்கிறார். அவர்களால் அவளை மீட்க முடியும் என நம்புகிறார். அவர்களிடம் தன் மகளின் அடையாளங்களைக் கூறி உதவி கேட்கிறார். தன் மகள் எவ்வளவு அழகானவள் எனச் சொல்கிறார். அவள் கன்னத்தில் மச்சம் இருப்பதை அடையாளமாகச் சொல்கிறார். அந்த எட்டு வாலிபர்களும் நிச்சயம் மீட்பதாக உறுதி கொடுக்கின்றனர். அதேபோல அவர்கள் உயிரைப் பணயம் வைத்து மீண்டும் அந்தக் கலவரம் நடந்த பகுதிக்குப் போகின்றனர். அங்கு ஏற்கெனவே துன்பத்தில் இருக்கும் பல ஆண்கள், பெண்கள், குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து உதவுகின்றனர். ஆனால் ஷகினாவை மட்டும் காணவில்லை.

ஒருசமயம் தற்செயலாக ஷகினா அவர்கள் கண்களில் தட்டுப்படுகிறாள். அவள் கன்னத்தில் இருக்கும் மச்சம் அவர்களுக்கு அடையாளம் சொல்கிறது. அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். துப்பட்டா இல்லாத அவளுக்கு ஒருவன் தனது மேல் சட்டையைக் கொடுத்து உதவுகிறான்.

இவ்வாறு கதை போய்க்கொண்டிருக்க சிராஜீதின் இன்னும் தன் மகளைக் காணவில்லை எனத் தேடிக்கொண்டிருக்கிறார். அவர் மீண்டும் அந்த இளம் சமூக சேவகர்கள்manto-1 குழுவைப் பார்க்கிறார். அவரைப் பார்த்ததும் அவர்கள் லாரி நகர்கிறது. “உன் மகள் வருவாள்’ என அவர்கள் கூச்சல் இடுகின்றனர். சிராஜீதினும் அவர்கள் வெற்றிபெற பிரார்த்தனை செய்கிறார். எப்படியும் அந்த சமூக சேவகர்கள் தன் மகளை மீட்பார்கள் என அவர் உள்ளம் சொல்கிறது. அவர் நம்பிக்கை அபாரமானது. ஆனால் கதையை வாசிக்கும் நமக்கு அவரின் நம்பிக்கையின் மீதுள்ள அபத்தம் புரிந்துவிடுகிறது. நிகழும் தருணத்திலிருந்து விலகி நாம் வேறொரு உண்மையை நோக்கிப் பயணிக்கிறோம்.

நான்கு நாள்களுக்குப் பின் சிலர் கூட்டமாக ஒரு பெண்ணைத் தூக்கி வருகின்றனர். ரயில் தண்டவாளம் அருகே கிடந்தது என்கின்றனர். அந்த உடலை மருத்துவமனைக்குள் சேர்க்கின்றனர். சிராஜூதினும் அவர்களைப் பின்தொடந்து சென்று உயிரற்ற உடலாக இருக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து ‘ஷகீனா’ என அலறுகிறார். ஆம், அவள் ஒரு பிணம் போல இருக்கிறாள். நாடித்துடிப்பை பரிசோதித்த மருத்துவர் இருளாக இருக்கும் அந்த அறைக்கு வெளிச்சம் வர வைக்க ‘திற’ என்கிறார்.

செயலற்றுக் கிடந்த அந்த உடலில் அசைவு ஏற்பட்டு அதன் கைகள் இடுப்பில் கட்டியிருந்த நாடாவை அவிழ்த்து சல்வாரை கீழே இறக்கியது. மருத்துவருக்கு உடல் வியர்க்க சிராஜூதின் “என் மகள் உயிரோடு இருக்கிறாள்” என சந்தோசத்தில் கத்துவதாக சிறுகதை முடிகிறது.

இந்தச் சிறுகதையில் அவள் வன்புணர்ச்சி செய்யப்பட்டதாக எந்த இடத்திலும் ஒருவரிகூட இல்லை. சிறுகதையின் முடிவு அவள் ஆழ்மனம் வன்புணர்ச்சிக்கு பழகும் அளவுக்கு மனம் எவ்வாறு சிதிலமடைந்துள்ளது என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது. தன் மகளின் மானம் காக்க துப்பட்டாவை தேடி எடுத்த அப்பா அவளிடம் எஞ்சி இருக்கும் உயிருக்காக மட்டுமே சந்தோஷப்படும் அளவுக்கு வாழ்வு கசங்கியிருக்கிறது. இவை ஒரு புறம் இருக்க, இக்கதையை வாசிக்கும் எந்த வாசகரும் மகள் மீட்பவர்களிடம் கிடைத்த பின்பும் தகப்பனிடம் சேராததற்கு அவர்களாகவே ஒரு காரணத்தைக் கண்டடைகின்றனர்.

சிறுகதையில் அவள் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப் பட்டதை சிறுகதை ஆசிரியர் சொல்லாதபோதும் அவ்வாறுதான் நடந்திருக்கும் என நம்மை ஒரு முடிவுக்கு நகர வைப்பது எது?

ஒரு தீவிரமான வாசகன் சிந்திக்க வேண்டிய கணம் இதுதான். எத்தனையோ எண்ணற்ற சம்பவங்களை கற்பனை மூலம் சொல்ல முடிகிற மனித மனம், ஆசிரியர் விடும் இடைவெளியை நிரப்பப் பயன்படுவது வாசகன் கொண்டுள்ள வன்முறை மனம்தான். இந்தக் கதையை வாசித்து முடித்தபோது நான் என்னை அந்த இளம் சமூக சேவையாளர்களில் ஒருவனாகவே கற்பனை செய்துகொண்டேன். எனக்குக் கடும் குற்ற உணர்ச்சியை இக்கதை கொடுக்க அதுவே காரணம்.

அந்த சேவையாளர்கள் கெட்டவர்கள் அல்ல. அவர்கள் அனைவருக்கும் உயிரைப் பணயம் வைத்து உதவுகிறார்கள். ஆனால் சட்டங்கள் இல்லாத கலவர தேசம் அவர்களுக்குள் இருக்கும் மனிதத்தை வெளிக்கொணர்வது போலவே மிருகத்தையும் ஒருகணம் வெளிக்கொணர்கிறது. மனிதத்தால் நன்மை அடைந்தவர்கள் சில பெண்கள், ஆண்கள், குழந்தைகள் போல மிருகத்தால் நிந்திக்கப்பட்டவர்கள் ஷகினா அல்லது அவளைப் போல சிலர்.

மனிதன் என்பவன் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விலங்கு. சமூக அறம் அவனை கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால் அந்த மனம் ஓயாத மிருக ஓலத்தை மௌனமாக வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நமது மனதில் இருக்கின்ற மிருகத்தின் ஒரு பகுதிதான் இந்தக் கதையில் இடைவெளியை நிரப்புகிறது. நமக்குள் இருக்கும் மிருகத்தை இரக்கம் இல்லாமல் அடையாளம் காட்டுகிறார் மண்ட்டோ என அப்போது புரிந்தது.

மண்ட்டோவின் புனைவுலகம் மிக விசாலமானது. ஆனால் ‘திற’ அல்லது ‘ஷரிபான்’ போன்ற அவரது பிரிவினை வன்முறை சம்பந்தப்பட்ட கதைகள் பிரபலமாக இருந்ததால் மண்ட்டோவை பிரிவினைக் கலவரங்களுக்குள் சுருக்கிப் பார்க்கும் ஒரு போக்கு உள்ளது. 250 சிறுகதைக்கும் மேலாக எழுதியுள்ள அவரின் ஆளுமையை விரிவாக உள்வாங்க ராமானுஜம் மொழிபெயர்த்த தொகுப்பு உதவுகிறது. மனதின் இருண்ட பகுதிகளை மண்ட்டோவின் எழுத்துகள் தொட்டுச்செல்வதை ‘அவமானம்’ சிறுகதை மூலம் அறியலாம். புறவயமாக மட்டும் வாழ்வைப் பார்க்காமல் மண்ட்டோவின் கண்கள் மனித மனங்களில் ஊடுருவிச்செல்லும் சூட்சுமத்தை இக்கதையில் பார்க்கலாம்.

சுகந்தி என்ற  பாலியல் தொழிலாளியிடம் அன்பு செலுத்துகிறான் மாது என்ற கடைநிலைப் போலிஸ்காரன். தொடக்கத்தில் அவனது பேச்சு சுகந்தியிடம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் கற்பனையில் அவனுடைய மனைவியாகத் தன்னைக் காட்சிப்படுத்தியெல்லாம் பார்க்கிறாள்.

மாது புனேவில் உள்ளவன். மாதத்திற்கு ஒருமுறை வந்து போகும்போதெல்லாம், “இங்கே பார் சுகந்தி, நீ உன் தொழிலை மறுபடியும் தொடங்கினால் நீயும் நானும் நண்பர்களாக இருக்க முடியாது. இனி ஒரே ஒரு முறை நீ எந்த ஆணையாவது இந்த அறைக்குள் நுழையவிட்டால், உன் முடியைப் பிடித்திழுத்து இந்த வீட்டை விட்டு வெளியே விட்டெறிவேன்… நான் புனே போய்ச் சேர்ந்தவுடன், உன் மாதச் செலவுக்கான பணத்தை மணியார்டர் மூலம் அனுப்பி வைக்கிறேன்… ஆமாம், இந்த அறைக்கு எவ்வளவு வாடகை” என்ற வசனத்தைச் சொல்லத் தவறியதில்லை. ஆனால் மாது புனேவிலிருந்து பணம் அனுப்பியதுமில்லை. சுகந்தி தன் தொழிலை நிறுத்தியதுமில்லை. அவன் ஏன் பணம் அனுப்புவதில்லை என சுகந்தி கேட்காதது போலவே அவளுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று மாதுவும் சுகந்தியிடம் ஒருபோதும் கேட்கவில்லை. இருவரும் ஓர் உண்மையின் மீது நின்று அறிந்தே நாடகம் ஆடிக் கொண்டிருந்தனர்.

ஒருமுறை சுகந்திக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது. தன் சக தோழிக்குக் கொடுத்து உதவ அவள் மாதுவிடம் உதவி கேட்க நினைக்கிறாள். ஆனால் மாது வரும் வரை காத்திருக்க முடியாது. சேட் ஒருவன் அழைப்பதாகக் கூறி தரகர் அழைக்கவே கடுமையான உடல் நோவிலும் உடன் செல்கிறாள். சேட் அவளைப் பார்த்து ‘நோ’ எனக் கூறி காரை எடுத்துக்கொண்டு வேகமாகப் போய் விடுகிறான். சுகந்தியைச் சேட்டுக்குப் பிடிக்கவில்லை என தரகன் கூறுகிறான்.

சுகந்திக்கு அந்தச் சொல் சுடுகிறது. கடும் அவமான உணர்ச்சி ஏற்படுகிறது. தனது அழகு குறித்து தனக்குள்ளேயே விவாதம் செய்கிறாள். அவளால் அவ்வளவு எளிதில் அந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அலைந்து திரிந்து அதிகாலையில் அறைக்கு வரும்போது மாது அங்கே இருக்கிறான். அவன் “இப்படித்தான் காலையில் நடக்க வேண்டும் அது உடலுக்கு நல்லது” என்ற தொனியில் ஒன்றும் அறியாதவன் போல பேசுகிறான். பின்னர் அவளிடம் அவசரமாக ஐம்பது ரூபாய் கேட்கிறான்.

தனது நாடகத்திலிருந்து அந்நிமிடம் வெளியேறிய சுகந்தி அந்தப் போலிஸ்காரனையும் அதிலிருந்து வன்மமாக வெளியே பிடுங்கி எறிகிறாள். அவனை அவமானப்படுத்துகிறாள். அத்தனை நாள்கள் அவர்கள் லாவகமாகப் போட்டு வந்த நாடகத்தின் அபத்தத்தின் மீது காறி உமிழ்கிறாள். அவன் இனி அங்கு வந்தால் அவனைச் சட்டச் சிக்கலில் மாட்டிவிடக்கூடும் என மிரட்டி துரத்தி அடிக்கிறாள். பின்னர் அங்கிருக்கும் ஒரு சொறிநாயின் அருகில் படுத்துக்கொள்வதில் அவள் தன் மேல் வைத்திருந்த அத்தனை கற்பனைகளையும் கலைத்துப் போடுகிறாள் எனப்  புரியவைக்கிறாள். ‘அவமானம்’ சிறுகதை அதோடு முடிகிறது.

இச்சிறுகதையைப் படிக்கும் பலரும், மாது தன்னை ஏமாற்றுவதை அறிந்து அவள் கோபம் கொள்கிறாள் என ஒற்றை வரியில் கதையைப் புரிந்துகொள்ள முயல்வதைப் பார்த்துள்ளேன். ஒரு பாலியல் தொழிலாளியின் எழுச்சி, புரட்சி என தட்டையாகச் சிறுகதையைக் கற்பிதம் செய்துகொள்ளும் பண்பு நம் மத்தியில் அதிகம். சுகந்திக்கு மாதுவின் மீது கோபமில்லை. அவளுக்கு உண்மையின் மீது கோபம். சேட் சொன்ன உண்மை அவளை உலுக்கிவிட்டது. அது சேட்டின் குரல் மட்டும் அல்ல. ஒட்டுமொத்த ஆண்களின் குரல். மாதுவின் குரலும் அதுதான். ஆனால் சுகந்தியால் பயனடையும்வரை மாது அந்த உண்மையைச் சொல்லவே மாட்டான். அவனுக்கும் அவளைப் பிடிக்காதுதான். உண்மைகள் சில நேரங்களில் சலுகைகள் கிடைக்க இடையூறாக இருக்கலாம். உண்மையைச் சொல்லாத மௌனங்களினால்தான் மனித உறவுகள் இன்றளவும் அத்தனை உன்னதமாய் வர்ணிக்கப்படுகின்றன.

சதத் ஹசன் மண்ட்டோ கதைகளில் வரும் பாலியல் தொழிலாளர்கள் வித்தியாசமானவர்கள். அவர்களை அவ்வளவு சீக்கிரம் ஒருவன் அவமதிப்பது சாத்தியமற்றது. ‘நூறு விளக்குகளின் வெளிச்சம்’ சிறுகதையில் வரக்கூடிய பாலியல் தொழிலாளியை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

ஒரு காமத்தரகன் தனியே நிற்கும் ஒருவனிடம் பெண் ஆசையை மூட்டுகிறான். இவனும் தரகன் பின்னே பெண் இருக்கும் பாழடைந்த கட்டடத்தில் நுழைகிறான். அங்கே அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருக்கிறாள். தரகனிடம் தான் தூங்க வேண்டுமென கெஞ்சுகிறாள். அவன் இசைவதாய் இல்லை. அவளது பலவாறான கெஞ்சல் எதுவுமே பலிக்காததால் வேறு வழியில்லாமல் அவனுடன் செல்கிறாள். அவள் மீது தரகனால் அவ்வளவு வன்முறை செலுத்தப்படுவது அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. அதோடு அவள் படுத்திருக்கும் அந்த அறை நூறு விளக்குகள் எரிந்தால் கிடைக்கும் வெளிச்சத்துடன் இருக்கிறது. அதில் எப்படி ஒருவர் உறங்க முடியும் என்ற குழப்பமும் அவனைச் சூழ்கிறது. பெண்ணை அழைத்துச் செல்கிறான். அவன் கேள்விகளுக்கு அவள் கடுமையான பதிலைக் கொடுக்கிறாள். தங்கும் விடுதியில் ‘உன் வேலையை முடி!’ என மிரட்டும் தொனியில் பேசுகிறாள். அவளது அப்போதைய தேவையெல்லாம் தூக்கம். ‘நான் தூங்கி அதிக நாள்களாகிவிட்டது’ எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறாள். அவன் அவளிடம் ஒன்றும் செயல்படாமல் மீண்டும் அந்த பாழடைந்த கட்டடத்தில் விடுகிறான்.

மறுநாள் அவன் நண்பனிடம் நடந்ததைச் சொல்கிறான். அந்த தரகனின் தலையில் கல்லை எடுத்துப்போட வேண்டும் எனக் கோபப்படுகிறான். பின்னர் இருவரும் பிரிகின்றனர். பின்னர் அவன் நண்பன் அங்கு செல்கிறான். தரகனுக்கு வெளியே  காத்திருந்து வராததால் அவனே பாழடைந்த கட்டடத்தின் உள்ளே நுழைகிறான். மாடியை அடைந்தபோது வெளிச்சத்தைப் பார்க்கிறான். திறந்திருந்த கதவின் வழி மெல்ல வெளிச்சம் வந்த அறையின் உள்ளே பார்க்கிறான். அவள் நிம்மதியாகப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள். அருகில் தலை கொடூரமாக கல்லால் நசுக்கப்பட்டு தரகன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறான்.

சமூக அநீதிகளைப் பார்த்துக் கோபப்படுவதும் பொங்கி எழுவதுமாக பாவனை செய்வதுமாக நாடகம் ஆடும் மனிதர்களின் பிரதிநிதியாகவே அவளை மீண்டும் திருப்பி அனுப்பியவனைக் காண முடிகிறது. ஆனால் மண்ட்டோவின் சிறுகதைகளில் வரும் பாலியல் தொழிலாளர்கள் கரிசனத்தை எதிர்பார்க்காதவர்கள். அவர்களுக்குத் தங்கள் தேவையைப் போராடிப் பெற முடியும். உண்மையில் அவன் காட்டிய கழிவிரக்கத்தின் மேலெல்லாம் அவளுக்கு எந்த அக்கறையும் இருந்திருக்காது. அவளுக்குத் தெரியும் தன்னை மீட்டுக்கொள்ள.

மண்ட்டோ பாலியல் தொழிலாளர்களை எவ்வாறு அணுகினார் என்பதை பல்வந்த் கார்கி என்ற எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர் தன்னுடைய அனுபவப் பகிர்வில் கூறும் இடம் முக்கியமானது. ‘அவன் விலைமாதுக்களின் உலகில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவர்களிடமிருந்து விலகியே இருந்தான். பாவங்கள் சுமந்து கொண்டிருக்கும் அவர்களிடம் மனிதத்தன்மையைக் கண்டான். சதை வியாபாரம் செய்யப்படும் சந்தையில்கூட அவன் ஒரு பெண்ணின் இதயத்தைத் தேடிக்கொண்டிருந்தான்.’

மண்ட்டோ அவ்வாறுதான் வாழ்ந்திருக்க வேண்டும். பாலியல் தொழில் புரியும் உலகில் உள்ள பெண்களைவிட அதை நாடிவரும் ஆண்கள் எவ்வாறான மனிதத்தன்மை அற்றவர்கள் என அவரது கதைகளே சான்றாகின்றன. ‘ஹமீதின் குழந்தை’ என்ற சிறுகதையை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

ஹமீத் என்பவனின் தோழன் லாகூரில் இருந்து வந்தது முதல் உல்லாசம் குறித்தே பேசிக்கொண்டிருக்கிறான். உல்லாசம் என்பது அவன் அகராதியில் பெண்கள். எனவே தோழனின் வற்புறுத்தலின் பேரில் இருவரும் பாலியல் தொழிலாளர்களைத் தேடிப் பயணம் செய்கின்றனர். ஹமீதுக்கு யாரையும் பிடிக்கவில்லை. இறுதியில் சிவாஜி பார்க் அருகில் இருந்த ஒரு பங்களாவில் தரகன் ஒருவனைச் சந்திக்கின்றனர். அவன் ஒரு அழகியைக் காட்டுகிறான். ஹமீது அவள் அழகில் மயங்குகிறான். வாடகைக்கு இல்லையென்றால் இப்படிப்பட்ட அழகியை எப்படியும் நெருங்கவே முடியாது என அவனுக்கு அங்ஙனம் தோன்றுகிறது. அவளுடன் இரவைக் கழிக்கிறான். அவளுக்கு அவன் பேசும் ஹிந்துஸ்தானி புரியவில்லை. அவள் மராத்தியில் பேசுகிறாள்.

ஹமீதுக்கு தன் மனைவியையும் இரு குழந்தைகளையும் நினைத்து கவலையாகவும் பயமாகவும் இருக்கிறது. ஊரில் இருக்கும் அவர்களுக்கு உண்மை தெரிந்தால் புயலே வீசும் என அவனுக்குத் தெரியும். ஒவ்வொருநாளும் மீண்டும் அவளைப் பார்ப்பதில்லை என உறுதி எடுப்பான். ஆனால் விடிந்தவுடன் கால்கள் தானாக அந்த பங்களாவின் முன் நிற்கும். தொடர்ந்து 15 நாள்களுக்கு அவளோடு இருந்ததால் தொழில் பாதித்தது. அதனால் நிச்சயம் அவளை விட்டு நீங்குவது என முடிவு செய்து அவளைப் பார்க்கப் போனான். ஆனால் அவள் தான் கருவுற்றிருப்பதாகச் சொல்கிறாள். அவன் பதற்றமடைகிறான். அது அவனது குழந்தையா எனக் கேட்டு அதிர்கிறான். அவளுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாததால் அவன் பதற்றம் மேலும் அதிகமாகிறது.

அவன் அந்தக் கருவைக் கலைக்கப் பலவாறாக முயல்கிறான். மருத்துவ முறைகள் எதுவும் பயனளிக்கவில்லை என மந்திரவாதிகளை நாடுகிறான். எதுவுமே கருவை அசைக்க முடியவில்லை. ஹமீதுவுக்கு இப்போது அவள் மேல் கடும் கோபம் வருகிறது. அவளை வெறுக்கிறான். அவள் அழகு அவனை ஒன்றுமே செய்யவில்லை. தற்செயலாகப்படும் விரல் கூட அவனைக் கோபமடைய வைக்கிறது. குழந்தை வயிற்றில் வளரத்தொடங்கியதும் அவள் தன் கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறாள்.

ஹமீது குழந்தையைக் கொல்ல ஒரு ரௌடியை அணுகுகிறான். ரௌடியோ தான் குழந்தையைக் கொல்வதில்லை என்றும் குழந்தையை கடத்தி வருவதாகவும் கொல்லும் பொறுப்பை அவனையே ஏற்கும்படியும் சொல்கிறான். திட்டமிட்டபடி செயல் நடக்கிறது. துணியில் சுற்றி எடுத்துவரப்பட்ட குழந்தையின் தலையின் மேல் கல்லைத் தூக்கிப்போட எத்தனிக்கும் போது ஹமீதுக்கு குழந்தையின் முகத்தைப் பார்க்கத் தோன்றுகிறது. தீக்குச்சி வெளிச்சத்தில் பார்க்கிறான். குழந்தை தரகனின் முகச் சாயலில் இருக்கிறது. ஹமீது உரக்கச் சிரிக்கிறான். குழந்தையை இருக்கும் இடத்திலேயே விட்டுவிட்டுச் செல்கிறான் என கதை முடிகிறது.

முதலில் தனது குழந்தை ஒரு பாலியல் தொழிலாளிக்குப் பிறப்பதால் கலக்கம் அடையும் ஹமீது அதைக் கருவிலேயே கொல்லத் துடிக்கிறான். அந்தக் குழந்தை பிறந்தவுடனும் அதைச் சிதைக்க நினைக்கிறான். ஆனால் அது வேறொருவனின் குழந்தை எனத் தெரிந்தபின் அங்கேயே விட்டுப்போகிறான். அப்போதும் அவனுக்கு அந்தக் குழந்தை இறந்துவிடும் என்ற கவலையெல்லாம் இல்லை. காரணம் அவனுக்கு அந்தப் பெண்ணின் மீது எவ்வித மரியாதையும் இல்லை. அவனுக்கு அவள் வெறும் சதை. அவளுக்கான சுதந்திரம் என்றும் தேவை என்றும் ஹமீதின் பார்வையில் ஒன்று இல்லை. அவள் அவனது பொருள். இவ்வாறு ஆண் மனோநிலையை மிக நுட்பமாக விமர்சிக்கிறார் மண்ட்டோ.

இந்த விமர்சனக் குரலை ‘ஜுபைதா’ என்ற சிறுகதையில் இன்னும் அழுத்தமாகக் கேட்கலாம்.

ஜுபைதாவுக்கு ஏற்றார்போல மாப்பிள்ளையைத் தேடி கடைசியில் கொஞ்சம் வயதான ஆனால் வசதியான மாப்பிள்ளைக்கு இரண்டாம் தாரமாகக் கட்டி வைக்கின்றனர் பெற்றோர்கள். திருமணமாகி பல ஆண்டுகள் அவர்களுக்குக் குழந்தை இல்லை. கணவன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வியாபாரத்தில் மும்முரமாக இருக்கிறார். ஆனால் ஜுபைதாவின் தாய் அவளை நச்சரிக்கிறாள். பல மந்திரவாதிகளிடம் அழைத்துச் சென்றும் பல மருந்துகளைக் கொடுத்தும் அவளை அலுப்புறச் செய்கிறாள். குழந்தை பெற்றுக் கொள்ளாததற்குத் தான் காரணமல்ல என அவள் சொல்ல முயன்றும் அவள் அம்மா அதெல்லாம் கடவுளின் கருணையால் வருவது என அவள் பேச்சைப் புறக்கணிக்கிறாள்.

சில நாள்களில் ஜூபைதாவுக்குக் குழந்தை அழும் சத்தம் கேட்கத் தொடங்கியது. மார்பில் பால் ஊறுவது போல உணர்கிறாள். அவ்வப்போது ரவிக்கையை அவிழ்த்துப் பார்த்து இல்லாததில் குழப்பம் அடைகிறாள். வியாபாரத்தில் அதிக லாபம் சம்பாதிக்கும் அவள் கணவன் ஒருநாள் சில பணத்தாள்கள் பால் பாத்திரத்தில் இருப்பதைப் பார்க்கிறான். அந்தப் பணத்தைக் குழந்தைகள் அங்கு போட்டிருப்பார்கள் என ஜூபைதா சாதாரணமாகச் சொல்கிறாள். அவன் அதிர்ச்சியாகிறான். ஆனால் அவளோ குழந்தைகள் பள்ளிக்குச் சென்று திரும்பிவரும் நேரம் என்றும் வந்தால் நிச்சயம் விசாரிப்பதாகவும் கூற மனைவியின் நிலை மோசமடைவதை உணர்கிறான்.

கணவன் கருக்கலைப்பில் ஈடுபட இருந்த ஒரு பெண்ணிடம் தான் அந்தக் குழந்தையை வாங்கிக்கொள்வதாகக் கூறுகின். அந்தக் குழந்தை பிறக்க இருந்த ஒரு மாதத்தில் அவள் கருவுற்றிருப்பதாகக் கூறி நம்பவைக்கிறான். ஆனால் அவளோ இதற்கு மேலும் குழந்தைகளா என அலுத்துக்கொள்கிறாள். குழந்தை பிறந்தவுடன் அவள் உறங்கிகொண்டிருக்கும்போது குழந்தையை அவள் அருகில் வைத்து குழந்தை பிறந்துவிட்டதாகக் கூறுகிறான். அவள் ஆச்சரியப்பட்டு, “நான் வலியில் மயக்கமடைந்திருக்க வேண்டும். அதனால் எனக்கு குழந்தை பிறந்ததே தெரியவில்லை” என ஆச்சரியப்படுகிறாள்.

மறுநாள் அவன் அறைக்குள் நுழையும்போது ஜுபைதா உடலிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருக்கிறது. அவள் அவன் சவரம் செய்யும் கத்தியால் மார்பை கோபத்துடன் வெட்டிக்கொண்டிருக்கிறாள். கணவன் அவள் செய்கையைக் கண்டித்து அலற, அவள்  “இரவு முழுக்கக் குழந்தை அழுகிறது. பாழாய்போன மார்பில் பால் இல்லை. இது இருந்து என்ன பயன்” எனச் சொல்லி நிரந்தரமாய் உறங்கிப் போகிறாள்.

உண்மையில் அந்தக் கணவனால்தான் ஜூபைதாவுக்குக் குழந்தைப் பிறக்கவில்லை என அவள் அம்மா உட்பட அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் திட்டமிட்டு அதை மறைக்கின்றனர். பெண்ணைத் தொடர்ந்து உடல் மற்றும் உள ரீதியில் சித்திரவதை செய்வதன் மூலம் ஆணின் குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக அவளைக் குற்ற உணர்ச்சிக்குத் தள்ளுவதன் வழி அவள் இருப்பு அர்த்தமற்றதாக்கப்படுகிறது. குற்ற உணர்ச்சியில் வாழும் ஜுபைதா இறுதியில் எவ்விதக் குற்றமும் செய்யாமல் குற்ற உணர்ச்சியாலேயே சாகிறாள்.

இறந்தவர்களைக் கொச்சைப்படுத்தி அவர்களின் அந்தரங்கங்களைத் திருடியவன் என்றும், அரசாங்கத்தால் கம்யூனிஸ்ட் என்றும், இடதுசாரி இயக்கங்களால் பிற்போக்குவாதி என்றும், சில இலக்கியவாதிகளால் அகங்காரம் கொண்டவன் என்றும், ஆபாச இலக்கியம் படைத்தவன் என்றும் மண்ட்டோ பலரது பார்வையில் விமர்சிக்கப்பட்டது இந்நூலில் ராமானுஜம் அவர்களின் முன்னுரையில் தெரியவருகிறது. ஆனால் இப்படியான அனைத்து விமர்சனங்களையும் மீறி இந்தியத்துணைக் கண்டத்தில் மிகச்சிறந்த எழுத்தாளராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

பாகிஸ்தான் உருவானபின் அவர் அந்நாட்டை ஏற்றுக்கொண்டார். 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள், வானொலி நாடகங்கள், திரைப்படங்களுக்கான கதைகள், கட்டுரைகள், நினைவோடைகள் என்று இருபது வருடங்கள் இயங்கியவர் 43ஆவது வயதில் இறந்தார். வாழ்ந்த காலத்தில் ஆறுமுறை ஆபாச இலக்கியம் படைத்ததாக நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டார். மதம், குடும்ப அமைப்பு, புனிதம் போன்ற அதிகார மையங்களைக் கேள்வி எழுப்புவது ஒரு படைப்பாளியின் முக்கியப் பணி என்றால் அதற்கான கல்வீச்சுகளைப் பொறுப்பதும் அவன் கடனே என மண்ட்டோவுக்கு எப்போதோ புரிந்திருக்க வேண்டும்.

அவர் சொல்கிறார்:

‘என் கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை. என் கதைகளின் தவறுகள் என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச் சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது.’

துணைநூல் பட்டியல்

  1. மண்ட்டோ, சா. ஹ. (2013). மண்ட்டோ படைப்புகள். (ராமனுஜம், தமிழாக்கம்.). சென்னை: புலம் பதிப்பகம்.

 

3 comments for “மண்ட்டோ : இருளை வரைந்த ஓவியன்

  1. Kalaishegar
    November 4, 2016 at 9:40 am

    ‘இருளை வரைந்த ஓவியன்’ மிக பொருத்தமான தலைப்பு. அவரின் அனைத்து கதைகளும் இருளோடு தொடர்புடையதாகவே தென்படுகிறது. மண்ட்டோ எனும் சர்ச்சைக்குரிய படைப்பாளியின் வடிவங்களை, புதிதாய் வாசிக்கும் என்னைப்போன்றோர் சுயமாய் வாசிக்கையில், அவ்விருளில் முட்டி மோதி வீழ்ந்திருப்போம்.
    அவைகளை வாசித்து உள்வாங்கி *திற*ந்து , *நூறு விளக்குகளின் வெளிச்சம்* போட்டு காட்டியுள்ளீர்கள்.
    ஒரு படைப்பை எப்படி பரிசீலிப்பது, கட்டம் போட்டு கடப்பது, பிறகு அதனை சொந்த பாணியில் விளக்குவது போன்ற யுக்திகளில் நவீனுக்கு நிகர் நவீனே!
    நிறைய வாசிக்கவும் பிறகு வாசித்ததை சுவாசிக்கவும் தொடங்கியுள்ளேன் தங்கள் தூண்டுதலால். நன்றி நண்பரே!

  2. ம.நவீன்
    November 4, 2016 at 10:38 am

    தொடர்ந்து வாசியுங்கள். உரையாடலுக்கு முன்பான ஆயர்த்தம் அது. – நவீன்

  3. ஸ்ரீவிஜி
    November 16, 2016 at 2:07 pm

    அற்புதமான சிறுகதைத் தொகுப்பு ஒன்றினைக் கூர்ந்து வாசித்தது போல் இருந்தது இந்த விமர்சனக் கட்டுரை. ஒரே வாசிப்பில் பல சிறுகதைகளின் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்ட விதம் சிந்தையைக் கவரச் செய்தது.
    வாசிப்பில் மேலும் மேலும் ஆர்வத்தைக் கூட்டுகிற வித்தையை நன்கு கற்றுவைத்திருக்கின்ற நவீன் போன்ற எழுத்தாளர்களின் விவேக எழுத்துப்பாணி நிச்சயம் பல வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வாசிப்பின் பால் ஆர்வத்தைத் தூண்டும் என்றால் அது மிகையல்ல.
    இக்கதைகளின் மூலம் நான் கண்டடைந்த உண்மைகள், கதைகள் கற்பனைகளின் தொகுப்புகள் அல்ல, அவை நிஜங்களின் வெளிப்பாடே. சில சம்பவங்கள் நமக்கு வெறும் செய்திகள்தான். ஒரு `உச்’ கொட்டலோடு நமது பரிதாப உணர்வு அடங்கிவிடுகிறது. அதுவே அதை நேரில் உணர்தவர்கள் பார்த்தவர்கள் அனுபவப்பட்டவர்கள் சிறுகதை வடிவில் நமக்குக்கொடுக்கிறபோது, அந்த பாதிப்பு ஒவ்வொரு வாசகனையும் எதாவதொரு வடிவில் குடைந்துகொண்டே இருக்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...