காலையிலிருந்தே மோடம் போட்டுக்கொண்டிருந்தது. மழை வரப்போகிறது. வரலாம் என்று இரண்டு மூன்று நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தார். வெயில் அதிகமாகி உயிர்கள் வாடும்போது தானாக மழைபொழிந்துவிடும் இயற்கையின் சமநிலையை எண்ணி வியப்பாக இருந்தது. தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு குறைவாகத் தண்ணீர் ஊற்றினார். எப்படியும் மழை பெய்யப்போகிறது. ஊற்றுகிற தண்ணீரைவிட மழைதானே அவற்றுக்கும் பிரியமானது என்று நினைத்துக்கொண்டார். வாசலில் சற்றுநேரம் அமர்ந்திருக்க வேண்டும்போலத் தோன்றியது. உள்ளே எட்டி மணியைப் பார்த்துக்கொண்டார். மனம் சலனமில்லாமல் இருப்பதாகத் தோன்றியது. இப்போதெல்லாம் அடிக்கடி இப்படியாகிவிடுகிறது. அமைதியாக உட்கார்ந்திருந்தால் போதும்போலத் தோன்றியது. ஆனால் வேலைக்குப் போகவேண்டும். இன்னும் மூன்று மாதங்கள்தான் இந்தப்பாடு. அதற்கப்புறம் நிம்மதியாக அடிக்கடி மணி பார்க்காமல் இருக்கலாம்.
அலுவலகத்தில் நுழைந்தபோது முதலில் அனுமந்தனின் குரல் கேட்டது. வழக்கம்போல ஏதாவது விவாதம். அவனும் இவரைப்போல இந்தவருடம் ரிட்டையர் ஆகப்போகிறவன்தான். காலையில் உள்ளே நுழைந்ததிலிருந்து மாலைவரை வாய் ஓயாமல் பேச்சு. இடையிடையே எப்போதேனும் கொஞ்சம் வேலை. வாய் பேசிக்கொண்டிருந்தாலும் கை செய்துவிடக்கூடிய செக்குமாட்டு வேலைதான். இன்று, குறிப்பிட்ட ஒரு அரசியல் பிரமுகரைப் பற்றிய பேச்சு. உள்ளே நுழைந்ததுமே உற்சாகமாக செய்தித்தாளைக் காட்டி அவரையும் விவாதத்துக்குள் இழுத்துவிடுகிற முனைப்பு அவனிடம். பசவண்ணா சிரித்துக்கொண்டே வழக்கம்போல அவன் கட்சிக்கே தன் ஓட்டு என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். அவன் வாய் ஓயாமல் மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தான். எதிலும் ஒட்டாமல் கோப்புகளைத் திறந்து பார்ப்பதும் மூடிவைப்பதுமாக இருந்தார். அப்படியொன்றும் அவசர வேலை இல்லைதான். அவ்வளவாக வேலை இல்லாத, மனம் வேறு இடத்தில் லயித்திருக்கும் தருணங்களில் பார்ப்பதற்கென்றே ஒரு கோப்பு அவரிடம் உண்டு. அனிச்சையாகக் கை மேலும் கீழுமாக ஒவ்வொரு எண்ணிலும் ஊர்ந்து கணக்கிட்ட தொகையைச் சரிபார்ப்பதுபோல இருக்கும். ஆனால் மனம் சிந்தனை வயத்திலிருக்கும். அதைத் தேடியெடுத்துப் பிரித்துவைத்துக் கொண்டு மூழ்கினார். ஆரவாரமான சிரிப்பொலி.
எத்தனை பிணைப்புகள், எவ்வளவு வேரோடி இருக்கிறார்கள் இவர்கள் ஒவ்வொருவரும். இதெல்லாமும் அபத்தம் என்று தோன்றினாலும் சொல்லமுடியாது. இன்னும் கொஞ்ச நேரத்தில் காப்பி, வடை, சமோசா என்று செக்ஷனே உட்கார்ந்து தின்னும். காலைச்சிற்றுண்டி செரிக்கும் முன்பே நாலு ‘மத்தூர் வடை’ தின்பது என்ன மாதிரியான மனோபாவம் உள்ளவர்களுக்குச் சாத்தியம் என்று யோசித்தார். ஒருவேளை மனைவி உயிரோடு இருந்திருந்தால் தானும் இவர்களோடு சேர்ந்து வடைதின்றிருக்கக் கூடும். ஆனால், அவள் போனதிலிருந்துதான் இந்த விட்டேத்தியான மனநிலை என்றில்லை. எல்லாம் மிகச்சமீபமாகத்தான். ஒருவேளை ரிட்டையர்மெண்ட் குறித்து பயப்படுகிறேனா? இந்த அன்றாடச் செக்குமாட்டு வாழ்க்கையிலிருந்து விடுபடுவதில் வருத்தம் எதுவும் இல்லைதான். பென்ஷன் இருக்கிறது. வாழும்வரை கவலையில்லை. சொந்தவீடு. மகனுக்கும் மகளுக்கும் கல்யாணம் செய்துவைத்து பேரன் பேத்திகளைப் பார்த்தாகி விட்டது. அந்தவகையில் கடமை முடிந்ததுதான். ஆனாலும் ஏன் இந்தச் சஞ்சலம் அடிக்கடி ஏற்படுகிறது?
“சார்! உங்களுக்கு?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார். அட்டெண்டர். “டீ மட்டும்,” என்று சொல்லிவிட்டு மீண்டும் கோப்புக்குள் மூழ்கினார்.
இது உண்மையில் ஒருவகையான சலிப்புதான். ஓட்டல் சோறு, தனிமை ஆகியவை எனக்கு அலுக்க ஆரம்பித்துவிட்டன. பதினாறு வருடங்கள் இதைத் தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம்தான். உடலளவில் இன்னமும் ஐம்பதைக்கூட நெருங்கவில்லை என்ற தோற்றம். சிறுவயதில் சாப்பிட்ட கம்பும் கேழ்வரகும்தான் இன்று இந்த நகரத்துக் கடை உணவுகளிடமிருந்து காப்பாற்றுகிறது என்று நினைத்துக்கொண்டார். சிறுவயதிலிருந்து அப்படியொன்றும் ருசிக்காகச் சாப்பிட்டுப் பழகியவரல்ல. அவர் மனைவியும் அப்படியொன்றும் விதம் விதமாகச் சமைக்கிறவளில்லை, சில பதார்த்தங்களையே மறுபடி மறுபடி செய்து கொடுக்கிறவள்தான். ஆனால் இருபது வருட குடும்பத்தில் ஒருநாளும் அது சலிப்பாகத் தோன்றியதே இல்லை. அவ்வப்போது அவர் மட்டும் வெளியில் சாப்பிடுவது உண்டென்றாலும், அதை ஒருபோதும் மனைவியின் சமையலோடு ஒப்பிட்டுப் பார்த்தாரில்லை.
வெளியே வந்தபோது மழைபெய்து ஓய்ந்திருந்தது. பேருந்து நிறுத்தம்வரை நடந்து சென்றவர், அங்கே நிற்காமல் தொடர்ந்து நடந்தார். கல்யாணமான புதிதில் மனைவியோடு நந்தி ஹில்ஸ் போனது ஞாபகத்துக்கு வந்தது. அங்கேயும் இதைப்போன்ற சீதோஷ்ணம் வருஷம் முழுக்க இருக்கும். அதற்கடுத்து அவளோடு எங்கே போனோம் என்று யோசித்துப் பார்த்தபோது துணுக்கிட்டது. எங்கேயும் போனதாக ஞாபகமில்லை. அவள் இருக்கும்போது இது தோன்றவேயில்லை. ’நானாவது டெபுடேஷன், டூர், அது இது என்று சுற்றியிருக்கிறேன். பல இடங்களைப் பார்த்திருக்கிறேன். அவள் அந்த வீட்டைவிட்டுத் தாண்டியதே இல்லை. கல்யாணம், சாவு என்று அனைத்து விசேஷங்களுக்கும் நான்தான் போயிருக்கிறேன், அவளை அழைத்துச் சென்றதில்லை’. என்ன செய்ய? இது இனிமேல் சரி செய்யவே முடியாத தப்பு. நடக்கும்போதே பாதை மங்கலானது. சுய உணர்வுக்கு மீண்டுவந்து சுற்றும் முற்றும் பார்த்தபோது, நடந்தே இரண்டு நிறுத்தங்களைக் கடந்திருந்தார். மூன்றாவது நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கத் தொடங்கினார்.
“ஒரு பழம் ஆறு ரூவாம்மா, நாலு பழமா எடுத்தா இருபது ரூவாதான்மா. தேன் மாதிரி இனிக்கும் சார். வாங்கிக்குங்க சார்.”
ஆப்பிள் பழங்களைக் கையில் வைத்தபடி கூவிக்கொண்டிருந்தான். மனைவிக்குப் பிடிக்குமா என்று யோசித்துப்பார்த்தார். தெரியவில்லை. அவளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டதில்லை. ஏன் இன்று அவளைப்பற்றி அதிகமாக நினைக்கிறேன். பேரனுக்கும்கூட ஆப்பிள் பிடிக்கும். ”இங்க வாப்பா,” என்று அவனை அழைத்தார்.
உடனே வந்து நாலு பழங்களைக் கையில் வைத்தபடி முகத்துக்கு நேரே நீட்டினான். “ஒரு பழம் ஆறு ரூவா சார், நாலு இருபது ரூபாதான் சார். தேன் மாதிரி இனிக்கும் சார்.”
“கொடு.” என்று பணத்தை நீட்டினார்.
கூடையை நிறுத்தத்திலிருந்த திண்ணையில் வைத்துவிட்டு அவரிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டான். நாலு பழங்களைப் பொறுக்கியெடுத்து தாளை உருவி அதில் பொதித்துச் சுற்றினான். ப்ளாஸ்டிக் கவர் ஒன்றை எடுத்து அதற்குள் வைத்து நீட்டினான். “மிச்சம் கொடு.” என்றார் வாங்கிக் கொண்டே.
“இருபது ரூவாதான் சார் கொடுத்தீங்க.”
“ஐம்பது ரூபாய்ப்பா, எடுத்துப்பாரு.”
“இல்ல சார், இருபதுதான். ஐம்பது ரூபாய் நோட்டே என்கிட்ட கிடையாது சார்.”
“அப்ப நான் பொய் சொல்றனா? ஏன் சார்! நீங்க பாத்தீங்கதானே.” என்றார் பக்கத்திலிருந்தவரிடம்.
“இல்லை, கவனிக்கலை.”
“இல்ல எஜமானரே!, இங்க பாருங்க. என்கிட்ட ஐம்பது ரூபாயே இல்லே பாருங்க. எல்லாம் இருபது, பத்து, அஞ்சுதான். அப்படியெல்லாம் ஏமாத்த மாட்டோம் சார்.”
“அப்ப நான் சொல்றது பொய்யா? என்கிட்ட இருபது ரூபா நோட்டே கிடையாது. நான் கொடுத்தது ஐம்பதுதான். நீ அத உன் பாண்ட் பாக்கெட்ல வெச்சே. இப்போ இல்லைன்னு சட்டைப் பாக்கெட்ல இருந்து எடுத்துக்காட்டுனா ஏமாந்துருவனா?”
“இல்லே சார்! மல்லி! ஏ மல்லி! இங்க வாயேன். இத என்னன்னு கேளு!” கையைக்காட்டி யாரையோ அழைத்தான்.
அந்த மல்லி என்பவன் வருவதற்குள் நடக்க ஆரம்பித்தார். உள்ளே பயத்தோடு முணுக் முணுக்கென்று கோபம் துளிர்த்தபடி இருந்தது. பாவிகள்! காசுக்காக எதையும் செய்யத் தயங்காத பாவிகள்! மாதேஷின் ஞாபகம் வந்தது. அவனும் இப்படித்தான் ஆரம்பத்தில் குழைந்து குழைந்து பேசி ஏமாற்றினான். செக்ஷனில் இருந்த எல்லோரிடமும் தன்னை ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் என்று அறிமுகம் செய்து கொண்டான். அவன் எங்கே, இந்த அனுமந்தன்தானே தனக்குத் தெரிந்தவன் என்று அறிமுகப்படுத்தி வைத்தான். எல்லோரும் அவன் சொல்வதைக்கேட்டுத் தவணை முறையில் ப்ளாட் வாங்கலாம் என்று கிளம்பினார்கள். இடத்தைக் காண்பித்தபோது, கொஞ்சம் ஊருக்கு வெளியில் இருந்தாலும் பரவாயில்லை என்று மூன்று ப்ளாட்டுகள் வாங்கினார். ஒழுங்காகத் தவணை கட்டி முடித்து பத்திரப்பதிவும் நடந்தது. அத்தோடு அவன் ஆளைக் காணோம். ஒருவருடம் கழித்து எதற்காகவோ அந்த நிலத்தைப் பார்க்கப்போய் கேசவன்தான் கண்டுபிடித்துச் சொன்னான். பத்திரத்தில் பதிந்து கொடுத்த நிலம் வேறு, காண்பித்த நிலம் வேறு. உண்மையான நிலம் அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் வேறொரு கிராமத்தில் உள்ளடங்கிக் கிடந்தது. கட்டிய பணத்திற்குக் கால்வாசி விலை கூடத் தேறாது என்றனர். அனுமந்தன் அங்கு நிலம் வாங்கவில்லை என்கிற விஷயம் அப்போதுதான் எல்லோருக்கும் உறைத்தது. அவனுக்கும் அதில் பங்கு இருக்கலாம். ஆனால் தைரியமாக அனுமந்தனைக் கேள்விகேட்க யாராலும் முடியவில்லை. சில வருடங்கள் கழித்து மதிப்பு உயரும் என்று சமாதானம் செய்து கொண்டார்கள்.
காசுக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள். கொடும் பாவிகள். எல்லோரும் காசுக்காகப் ஆலாய்ப் பறப்பவர்கள்தான், நானும் காசு சேர்த்திருக்கிறேன், ஆனால் இப்படியல்ல. இந்தப் பாவிகளோடெல்லாம் பழகியதற்காகவே ஏதேனும் நதியில் நூறுமுறை மூழ்கியெழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். மனைவிக்குச் செய்த பாவங்களுக்காகவும் என்ற நினைப்பு தானாக உருவானது. அவளை எதற்காகவாவது கஷ்டப்படுத்தினேனா? அப்படி எதுவும் நினைவில் இல்லை. எதையும் ஆசைப்பட்டுக் கேட்டவள் இல்லை. நாமாவது ஏதாவது வேண்டுமா என்று கேட்டுச் செய்திருக்கலாம். குறைந்தபட்சம் அவளது கடைசிக்காலத்தில். எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கிறேன். உண்மையில் அவளைத்தான் செக்குமாடாக்கி எங்கேயும் நகரவொட்டாமல் அழித்திருக்கிறேன். வாங்கிக் கொடுத்ததை உடுத்திக்கொண்டாள், கொடுத்ததைச் சாப்பிட்டாள், தனக்கென எந்தக் கருத்தும் விருப்பமும் வைத்துக் கொள்ளவில்லை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் என்னை எதிர்த்துப் பேசியதில்லை. புண்ணியவதி, அதனால்தான் முந்திக்கொண்டு விட்டாள். மீண்டும் பாதை பார்வையிலிருந்து மறையலானது. சுதாரித்துக் கொண்டு நின்றார். இன்னுமொரு நிறுத்தத்தைக் கடந்திருந்தார்.
சற்றுத் தள்ளி லால்பாக். மூடும் நேரம் நெருங்கிவிட்டதால் கூட்டம் குறைவாக இருந்தது. உள்ளே நுழைந்து அமர்ந்துகொண்டார். சற்றுத் தள்ளி எதிரில் அமர்ந்திருந்தவர்கள், இவர்கள் வயதை ஒத்தவர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். இருள்சூழும் நேரத்தில் கிளம்புவதற்காக எழுந்தவர்கள். நின்றுகொண்டே பேச்சு தொடர்ந்தது. அரசியல், தண்ணீர்ப் பிரச்சினை, கௌரவம் என்று கலவையான வார்த்தைகள். நிமிர்ந்து பார்த்ததும் இவரையும் விவாதத்தில் சேர்த்துக்கொள்வது போல ஒருவர் இவரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். “என்ன சொல்கிறீர்கள்?”. சரிதான் என்பதைப்போல இவர் தலையசைத்துப் புன்னகைக்க முயன்றார். நல்லவேளையாக அவர்கள் பேசிக்கொண்டே நகர்ந்து சென்றனர். என்ன கௌரவம்? எல்லோருக்கும் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது. தன்னுடைய கௌரவம் இன்னமும் எத்தனை நாளைக்கு என்ற சிந்தனை உருவானது. ஆயாசமாக உணர்ந்தார்.
இப்படியெல்லாம் அதிகமாக யோசிக்கக் கூடாது, யோசித்தால் ரத்த அழுத்தம் அதிகமாகும் என்று டாக்டர் எச்சரித்தது ஞாபகம் வந்தது. மகள் வீட்டுக்குப் போகலாமா என்று யோசித்து வேண்டாம் என்று முடிவு செய்தார். இன்று என்ன கிழமை? வியாழனா, வெள்ளியா? கொஞ்சம் அழுத்தி யோசித்தபோது குழப்பம் அதிகமானது. எந்தக்கிழமையாக இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். வீட்டிற்குப் போகலாம் என்று எழுந்து, அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பேருந்தில் ஏறினார். அதிர்ஷ்டவசமாக சீட் கிடைத்தது. கடைசியாக மகன் எப்போது தன்னை வந்து பார்த்தான் என்று யோசித்தார். ஆறு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. தான்தான் ஒவ்வொருமுறையும் ஏதாவது காரணத்துக்காக அவனைப் பார்க்கப் போகிறோம் என்று தெரிந்ததும் உள்ளிருந்து பொங்கிப் பொங்கி வந்தது. மகள் மட்டும் என்னவாம்? அவளும் அப்படித்தான். எல்லாம் சுயநலவாதிகள், பேரக்குழந்தைகளுக்காகப் பார்க்க வேண்டியதாயிருக்கிறது. மாதமிரு முறையாவது இரண்டு வீட்டிற்கும் போய்ப் பார்த்துவிட்டு வருவார். திடீரென ஒரு விருந்தாளியைப் போலத்தான் இருவருமே தன்னை நடத்துகிறார்கள் என்று உறைத்தது.
வீடு வந்துசேரும்போது விட்ட இடத்திலிருந்து மீண்டும் மழை ஆரம்பித்திருந்தது. உள்ளே சென்று லைட்டைப் போட்டுவிட்டு முன்னறையில் அமர்ந்து, வாசலில் மழைபெய்வதை வேடிக்கை பார்த்தபடி இருந்தார். எதிலுமே ஒட்டுதல் இல்லாத உணர்வு மறுபடியும். மகனும் மகளும் போன் செய்து கூடத் தன் நலம்பற்றி விசாரிப்பதில்லை. தன்னுடைய தேவைகள் குறித்து அவர்களுக்கு என்ன அக்கறை? நான் செத்தால் இந்த வீடு, பணம் என்று கராறாகப் பங்கு போட்டுக் கொள்வார்கள். அதுதான் அவர்களுக்கு முக்கியம். நான் இப்படித் தனியாக இருப்பதுபற்றி அவர்களுக்கென்ன? பாவிகள். மணியைப் பார்த்தார். இன்னும் கொஞ்சநேரத்தில் சாப்பாடு வரும். சாப்பிட்டுப் படுத்து காலையில் எழுந்தால் மறுபடி அலுவலகம். காலண்டரைப் பார்த்தார் அன்று புதன்கிழமை. நாளை அலுவலகம் உண்டு.
வாசலில் பெய்கிற மழையை கூடத்தில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். உள்ளேயிருந்து ஒரு கசப்பு உருவாகி தொண்டைவரை வந்தது. இவர்களோடு ஊடாடிக் கொண்டிருப்பதால் இந்த ஒட்டுமொத்தப் பாவிகளின் பாவமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்மேலும் ஒட்டிக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. இந்தப்பாவிகள் மத்தியில் இருந்து நானும் கொஞ்சம் கொஞ்சமாய் அதில் மூழ்கி… எங்கேயாவது சென்று இதைக் கழுவவேண்டும். ரிட்டையர் ஆகிறவரைதான், அப்புறம் கிளம்பிவிட வேண்டும். ஒருவாரம் முன்பு ஏதோவொரு சேனலில் பார்த்த நிகழ்ச்சியில் காசியைப்பற்றி வந்ததே. சரிதான். காசிக்குப் போகலாம். காசிக்குச் சென்று மனைவிக்குக் காரியங்கள் செய்தால் அவளுக்கும் கூட நல்லதுதானே. குழந்தைகள் குழந்தைகள் என்று இவர்களுக்குச் செய்ததில் பத்து சதம்கூட அவளுக்குச் செய்ததில்லை. குறைந்தபட்சம் அவளுக்கு இதையாவது நான் செய்யவேண்டும். அப்படியே மனிதனாய்ப் பிறவி எடுத்து இத்தனை பாவிகள் மத்தியில் வாழ்க்கை நடத்திய பாவத்துக்காகவும் முங்கியெழ வேண்டும். அந்நிகழ்ச்சியில் சொன்ன காசியின் பெருமைகள் ஞாபகத்துக்கு வந்தன. காசியில் இறக்க முக்தி என்றார்களே. பேசாமல் அங்கேயே இருந்துவிடலாமா? போகும் உயிர் அங்கே போவதும் நல்லதுதானே. காசிதான் சரியோ? கருடன் பறக்காத காசி, பல்லி ஒலிக்காத காசி, கங்கையில் மிதக்கும் காசி, பிணங்கள் எரியும் காசி. எவ்வளவு பெரிய சுடுகாடு, மொத்த நகரமே சுடுகாடுதான். இடையறுத்து ஓடும் நதியும் கரைகளைப்போலவே அத்தனை உயிர்களை, உடல்களை விழுங்கியிருப்பது. எரிந்து கொண்டோ, நீர்வாழ் உயிரிகளால் உண்ணப்பட்டுக் கொண்டோ இருக்கும் தன்னுடலை ஒருகணம் யோசித்துப் பார்த்தார். உள்ளுக்குள் மெலிதான பயம் ஒன்று உருவானது. கலைத்து, எழுந்துசென்று சாமி மாடத்தில் விளக்கேற்றினார். அக்கமாதேவியின் வசனங்களை சற்றுநேரம் புரட்டிப்பார்த்தார். மனம் ஒன்றவில்லை.
நான்பெற்ற இவர்கள் நிச்சயம் அங்குமிங்குமாக என்னைப் பந்தாடப்போகிறார்கள். வைத்துக்கொண்டாலும் இவர்களுக்குத் தொண்டூழியம் செய்வதற்காக என்னை வைத்துக் கொள்வார்கள். அல்லது வீடு என்பெயரில் இருக்கிறது என்பதால். அதற்காக நல்லவிதமாக நடிப்பார்கள். உண்மையான அக்கறை இருந்தால் இப்படித் தனியாக விட்டுவைப்பார்களா? எடுத்துக் கொள்ளட்டும், பணம் பொருள் என்று எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளட்டும். என்ன மாதிரியான ஜென்மங்கள்! சை! எதுவும் சாஸ்வதமில்லை, எதுவும் தன்னதில்லை, எதையும் கொண்டுபோக முடியாது என்று அறியாத ஈனப்பிறவிகள். படபடப்பாக வந்தது. இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாது. உடலுக்கு நல்லதல்ல. சாப்பிட்டுவிட்டு மாத்திரையைப் போட்டுப் படுத்துக்கொண்டார். இந்த மாத்திரைதான் கசப்பை உண்டாக்குகிறதோ? அல்லது சுற்றியிருப்பவையா? இல்லை. நான்தான் எல்லோரிடமும் அதிகம் எதிர்பார்க்கிறேனா? ஒருவேளை இந்தக்கணம் என் உயிர் நின்றுபோனால் யாருக்குத் தெரியும்? பக்கத்திலுள்ள யாராவது கவனித்தால்தான் உண்டு. ஒரு சனி ஞாயிறு வரவில்லையென்றால் இரண்டுபேருமே கண்டுகொள்ளப் போவதில்லை. மீண்டும் கசப்பு தொண்டைக்கு வந்தது. வலுக்கட்டாயமாக நினைவுகளைப் புறந்தள்ளிவிட்டு படுத்துக் கண்ணை மூடிக்கொண்டார்.
ஜனத்திரளுக்கு நடுவே முன்னேறி நடந்து கொண்டிருந்தார். ஒரேயிடத்தில் இருப்பது போலவும் தெரிந்தது. திடீரெனப் படிகள் தெரிந்தன. அதில் இறங்கி நீரில் காலை நனைத்துவிட்டு மீண்டும் மேலேறியபோது அவன் நின்றுகொண்டிருந்தான். அவன் கைநீட்டிக் காட்டிய இடத்தில் மகன் மகள் குழந்தைகள் என அனைவரும் இருந்தனர், இவர் மனைவி மந்தாரை இலையில் எல்லோருக்கும் புளியோதரை வைத்துக் கொடுத்தாள். எரிப்பதற்குக் காசு கேட்கிறான். அவன் கேட்கிற காசு அதிகம் என்று தோன்றியது. ‘எட்டுபேர் சார், வேலை அதிகம். நியாயமான காசு சார்’ என்றான். மனைவி கரண்டியை நீட்டியபடி காசைக் கொடுங்கள் என்பதாகக் கையசைத்தாள். ஏன் உயிரோடு இருப்பவர்களை எரிக்கப்போகிறோம் என்ற திகைப்பும் குழப்பமும் இருந்தது. நேரமில்லை என்பதாக அவன் நதியைச் சுட்டிக்காட்டினான். காலில் ஏதோ குறுகுறுவென்று இருந்து, குனிந்து பார்த்தபோது நதிநீர் அவர் காலைச்சுற்றி ஓடியது. உடலை அசைக்க முடியாமல் இருந்து விடுபட்டு எழுந்தபோது, அவர் வழக்கமாக எழும் நேரத்திற்கு முன்னதாகவே எழுந்து விட்டிருந்தார்.
அலுவலகத்தில் கால்வைக்கும்போது சரியாகப் பத்து அடித்தது. கையெழுத்தைப் போட்டுவிட்டு செக்ஷனுக்கு வந்தபோது வழக்கம்போல அனுமந்தாவின் குரல் உயர்ந்திருப்பதையும் எல்லோரும் ஆமோதிப்பாகத் தலையசைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்து, என்ன விஷயம் என்று விசாரித்தார். “காலையில் பேப்பர் பார்க்கலயா சார்,” என்றபடி ஒருவன் சீட்டிலிருந்து எழுந்துவந்தான், இவர் எப்போதும் அலுவலகத்தில்தான் பேப்பர் பார்ப்பது வழக்கம், இல்லையென்று தலையசைத்தபடி கையை நீட்டினார். முதல் பக்கத்திலேயே கொட்டை எழுத்துகளில் அண்டை மாநிலமொன்று இங்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதைக் கண்டு மேலும் படித்தார். அரசு ஊழியர் அமைப்பு உட்பட நானூறுக்கும் மேற்பட்ட அமைப்புகள் மறுநாள் நடக்கும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்றது செய்தி. இது ஒருவாரமாகத் தலைப்புச் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருந்த பிரச்சினைதான்.
மாலையில் பார்க்கில் இருட்டும்வரை உட்கார்ந்திருந்துவிட்டுப் பேருந்தில் வீட்டுக்குத் திரும்பும்போது நடத்துநர் உட்படப் பெரும்பாலானோர் ஆவேசமாக இதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்ததைக் கவனிக்க முடிந்தது. நடத்துநரை அழைத்து சீட்டை வாங்கிக் கொண்டார். அதைப்பற்றிச் சிந்திக்காமல் இருந்தாலும் அதிலிருந்த தர்க்க நியாயங்களைச் சிந்தித்து படபடப்பு அதிகமானது. இதில் என்ன நியாயம் இருக்கிறது? எது நம்முடையது, அதை அடுத்தவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று சொல்வதற்கு? ஆனால், இதைப்பற்றி யோசிக்க வேண்டியதில்லை. யோசித்தால் கெடப்போவது தன் உடல்நிலைதான் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டார். இதுவொரு அரசியல், சாமான்யனான தனக்கு இதில் என்ன தொடர்பு? ஆனால் ஏனோ மனம் சிந்தித்துக்கொண்டே சென்றது. இரண்டு நிறுத்தங்களுக்கு முன்பே இறங்கிக் கொண்டார்.
நடந்துகொண்டே யோசித்துச் சுயநினைவுக்குத் திரும்பியபோது கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்த ஒரு தெருவில் நிற்பது தெரிந்தது. நாளைக்குத்தானே! நடமாட்டமில்லாத அந்தத் தெருவுக்கு எப்படி வந்தோம் என்று திகைத்துத் திரும்பியபோது சிலர் ஒருகடையின்மீது கல்லெறிந்து விட்டு “இது அவனுங்க கடை” என்று இவரிடம் சொன்னபடி நடந்து சென்றனர். கடை வாசலில் மாட்டியிருந்த ட்யூப்லைட் உடைந்து சிதறியிருந்தது. வரிசையாக மாட்டியிருந்த மூன்று அலங்கார விளக்குகளில் ஒன்று மட்டும் மிச்சமிருந்தது. வியப்புடன் யோசித்தபடி அவர்கள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தார். மறுபடி தெரு அமைதியானது. திகைத்துப்போய் சில கணங்கள் அங்கேயே நின்றிருந்தார். உள்ளிருந்து ஒரு கசப்பு மீண்டும் வாய்வரை மேலேறி வந்தது. குனிந்து ஒரு கல்லை எடுத்து எறிந்து மீதமுள்ள அலங்கார விளக்கை உடைத்துவிட்டு வேகமாக நடந்தார்.
1.சுயத்தை உணர தனிமையே சிறந்த நிலை.
2.தொடர் தனிமை ஆபத்தானது.
இவ்விரு விடயங்களின் பின்னலில், ஒரு முதியவரின் மனநிலை அதிர்வுகளை அழகாய் காட்டுகிறது ஸ்ரீதரின் ‘இருப்பது’.
முதியவர் என்று சொல்வதற்கில்லை. காரணம் இன்னும் ரிட்ரையர் ஆகவில்லை. ஐம்பத்தைந்து வயது கூட இல்லை. அதற்குள் தனிமை வாட்டுகிறது. மனைவியை இழந்தவர் என்பதால் தக்க துணை இல்லாமல் வெறுமை வாட்டுகிறது. விரக்தியால் வரும் வேதனை வெறுப்பின் உச்சத்திற்கு ஒருவரை கொண்டு செல்கிறது என்பதனை சொல்லியிருக்கின்றார் கதாசிரியர். இறுதியில் அதைத்தான் நமக்கும் காட்டியிருக்கின்றார்.
கதையை நீண்ட வாக்கியங்களைக் கொண்டு இழுக்காமல் சிறிய சிறிய எளிய வாங்கியங்களால் அழகாக நகர்த்தியுள்ள விதம் ஈர்க்கிறது. எழுத்தில் நான் செய்கிற தவற்றை இக்கதை (வாக்கிய பாணி) என்னை திருத்துகிறது. அழகிய எழுத்து நடை.
கரு – தனிமையில் உழலும் ஒருவரின் உளவியல் சிக்கலைச் சொல்கிறது. ஒரு சூழலில் ஏமாற்றம் அடைந்த மனம், சந்திக்கும் சிலரை அதே நிலையில் வைத்துப்பார்க்கிறது. நெருக்கமான ஒருவரை இழந்த (மனைவி) நிலையில் மனம் சதா அவரையே நினைத்து வட்டமடிக்கிறது. ஏங்குகிறார் என்றும் சொல்லலாம். தவணைமுறையில் கிடைக்கின்ற அன்பிற்காகவும் ஏங்குகிறார். துணையிழந்த மனத்தின் வேதனை இங்கே தெளிவு.
வேலைக்குச் செல்கிறார் என்று சொல்லாமல் விட்டிருந்தால், நான் நிச்சயம் இக்கதாநாயகனை எழுபத்தைந்து வயது முதியவராகவே நினைத்துக்கொண்டு கதையினை வாசித்திருப்பேன். காரணம் நாயகனுக்கு அவ்வளவு தள்ளாட்டம் மற்றும் தெளிவற்ற நிலை.
பிடித்த வரி – //உள்ளேயிருந்து ஒரு கசப்பு உருவாகி தொண்டைவரை வந்தது. இவர்களோடு ஊடாடிக் கொண்டிருப்பதால் இந்த ஒட்டுமொத்தப் பாவிகளின் பாவமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்மேலும் ஒட்டிக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. இந்தப்பாவிகள் மத்தியில் இருந்து நானும் கொஞ்சம் கொஞ்சமாய் அதில் மூழ்கி… எங்கேயாவது சென்று இதைக் கழுவவேண்டும்// சிலரிடம் ஏற்படுகிற மன ஒவ்வாமைகளைக் கண்டும் காணாததுபோல் மீண்டும் அவர்களிடம் சகஜமாக இருந்தாக வேண்டும் என்கிற நிலைவருகிற போது, நமக்கும் இந்தச் சிந்தனை வரும். நானும் இதை உணர்ந்துள்ளேன்.
நல்ல வாசிப்பு அனுபவத்தைக்கொடுத்த சிறுகதை.
இருப்பது சிறுகதை அருமை . பெற்ற மகன் மகள் இருந்தும் தன்னைக் கவனிக்காத ஆதங்கத்தை பெரியவரின் மூலம் நன்கு விளக்கப்பட்டுள்ளது. கதாசிரியருக்குப் பாராட்டுக்கள். வல்லினம் ஆசிரியருக்கு நன்றி
பூ.சுப்ரமணியன் ,பள்ளிக்கரணை, சென்னை