தகவல் தேடல் வேட்டையை எங்கிருந்து தொடங்குவது?
தகவல்கள் உற்பத்தி செய்யப்படும் முறை, பகிரப்படும் விதம் மற்றும் தகவல்களில் ஏற்படக்கூடிய சாத்தியமான மாற்றங்களை விளக்குவதற்கு ‘தகவல் சுழற்சி’ என்ற சொற்பதம் பயன்படுத்தப்படுகிறது. செய்தியாக மாறக்கூடிய தன்மை உடைய நிகழ்வுகள் ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறான மாற்றங்களுக்கு உட்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதன்மூலம் நமக்குத் தேவையான தகவல்களை அடையாளம் காணவும் மதிப்பீடு செய்யவும் முடியும்.
தகவல்களின் பரிணாம வளர்ச்சி
நிகழ்வுகள், கருத்துகள், கலந்துரையாடல்கள் மற்றும் சிந்தனையிலிருந்து தகவல்கள் உற்பத்தியாகின்றன. இவ்வாறு உருப்பெறும் தகவல்கள் (பல வடிவங்களில்) பின்னர் செய்திகளாக பல்வேறு தளங்களில் பொதுப்பார்வைக்கு பகிரப்படுகின்றன. பகிரப்படும் தகவல்களைப் பலர் தங்களது தேவைக்கேற்ப பயன்படுத்தத் தொடங்குகின்றனர். கிடைக்கப்பெற்ற தகவல்களை மேலும் பல புதிய / பழைய தகவல்களைக் கொண்டு கூட்டியோ, குறைத்தோ மேலும் பல புதிய தகவல்கள் உருவாக்கப்படுகின்றன. இப்படியாக ஒரு தகவல் உற்பத்தியாகும் தருணம் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் தரம், உள்ளீடுகள் வளர்ந்து/குன்றி உருமாற்றம் அடையும் தன்மையைப் பெறுகின்றது.
கீழ்காணும் வகையில் தகவல்கள் 5 படிநிலைகளில் சுழற்சிக்கு உட்படுகின்றன:-
- நாள் ஒன்று (சமூக வலைத்தளங்கள், இணையம், வானொலி, தொலைக்காட்சி)
- இரண்டாம் நாள் – முதல் வாரம் (அச்சு/இணைய நாளிதழ்கள்)
- முதல் வாரத்திற்குப் பிறகு (வார, மாத சஞ்சிகைகள்/இதழ்கள்)
- சில மாதங்கள் (ஆய்விதழ்கள்)
- முதல் வருடம் & அதற்குப் பின்னர் (நூல் வடிவம் / ஆண்டறிக்கை / களஞ்சியம் / விமர்சன நூல்)
இத்தகவல் சுழற்சிக்கு வகுக்கப்பட்டிருக்கும் கால வரையறை எல்லா வித தகவல்களுக்கும் பொருந்துவதில்லை. சிலவகைத் தகவல்கள் அவற்றின் மதிப்பு, தேவை, பயன்படுத்தும் நபர் ஆகியவற்றின் அடிப்படையில் துரித உருமாற்றத்திற்கு உட்படும். சில எவ்வித உருமாற்றமும் உண்டாகாமல் முதல் படிநிலையிலேயே நின்றுவிடும். ஆனால் பொதுப்பரப்பில் பகிரப்படும் எந்தவொரு தகவலுக்கும் மரணம் இல்லை என்பது கருத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும்.
உருமாற்றம் காணும் தகவல்களின் தன்மைகள்
- சமூக வலைத்தளங்கள், இணையம்
இன்றைய இணைய உலகில் தகவல்கள் அதிகமும் சமூக வலைத்தளங்களிலும் இதர இணைய ஊடகங்களிலும் உடனடியாகப் பகிரப்படுகின்றன. பெரும்பாலும் அவை சம்பவங்களை அப்படியே சொல்வதாகவும், மிகக் குறைவான விளக்கங்கள், ஆழம் குன்றியதாகவும் இருக்கும். நிபுணத்துவம், தர்க்கம், ஆய்வு குன்றிய பகிர்வாக இருப்பதோடு சார்புத் தன்மை (Bias) தவிர்க்க முடியாததாகவும், வதந்தித் தன்மையும் கலந்திருக்கும். (இணையச் செய்தி ஊடகங்கள் இதில் அடங்கா)
உதாரணம் : Facebook, Twitter, Blog, Google, Google News, WhatsApp
- வானொலி, தொலைக்காட்சி, இணையச் செய்தி ஊடகம்
தகவல் பகிரப்படும் காலவரையறையின் அடிப்படையில் தகவல் சுழற்சியில் இவ்வகைத் தகவல் மூலங்கள் (Information source) சமூக வலைத்தளங்களுடன் இணைத்து வகைப்படுத்தப் பட்டிருந்தாலும் இவற்றின் தன்மை முற்றிலும் மாறுபட்டதாகும். வானொலி, தொலைக்காட்சி, இணையச் செய்தி ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களின் தன்மைகள் அச்சு/இணைய நாளிதழ்களோடு பொருத்திப்பார்க்கத் தக்கவை.
உதாரணம்: மின்னல் பண்பலை, RTM 1,2,3 , செம்பருத்தி, செல்லியல்
- அச்சு/இணைய நாளிதழ்கள்:
வானொலி, தொலைக்காட்சி, வானொலி, இணையச் செய்தி ஊடகங்களில் தகவல்கள் அதிவேகமாக உற்பத்தி செய்யப்பட்டு பகிரப்படும். அவசியமற்ற தகவல்கள் நிராகரிக்கப்படுவதோடு அவசியத் தகவல்கள் விளக்கமாகவும், சற்று விரிவாகவும் பகிரப்படும். நிபுணத்துவம் மிக்க ஊடகவியலாளர்கள் சில பொருத்தமான பின்னணிகள், துணைச் செய்திகள், கருத்துகள் போன்றவற்றை இணைத்து தகவல்களுக்கு மற்றுமொரு புதிய வடிவம் கொடுப்பர்.
உதாரணம்: தமிழ் நேசன், மலேசிய நண்பன், Berita Harian, The Star, NST
- வார, மாத சஞ்சிகைகள்/இதழ்கள்
பெரும்பாலும் இவை அறிக்கை, நேர்காணல், கருத்துக்குவியல், மேலோட்டமான ஆய்வு, கணக்கெடுப்புகளின் வடிவில் இருக்கும். நாளிதழ்களைப் போல் அல்லாமல் செறிவான வடிவத்துடன் ஆய்வுத் தன்மையிலான பிரதிபலிப்புடன் இருந்தாலும் தகவல்கள் பெறப்பட்டதற்கான ஆதார நூல் பட்டியல் (Reference / Bibliography) போன்றவை இல்லாமலிருக்கும். வெகுஜன வாசிப்புக்காக பகிரப்படுவதால் இதன் மொழியும் எளிதில் அணுகக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். எழுத்தாளர்கள், நிபுணத்துவம் மிக்க பத்திரிக்கையாளர்கள், கட்டுரையாளர்கள், துறைசார் நிபுணர்கள் என கலவையான பிரிவினரிடமிருந்து உருவாகிவரும் இவ்வகைத் தகவல்களின் நம்பகத்தன்மையும் சார்புநிலைக்கு உட்படக் கூடிய சாத்தியம் கொண்டது.
உதாரணம் : வல்லினம், தென்றல், மன்னன்
- ஆய்விதழ்கள்
ஆய்வு சார்ந்த இவ்விதழ்கள் அறிஞர்கள் மற்றும் சிறப்பு ஆய்வாளர்களால் எழுதப்பெற்ற கட்டுரைகளைக் கொண்டிருக்கும். முந்தைய ஆய்வுகளை உள்ளீர்த்து, கோடிட்டுக்காட்டி, ஒப்பிட்டு, புதிய, ஆதாரப்பூர்வமான தகவல்கள் முன்வைக்கப்படும். மேலும், வெளியீட்டிற்கு முன்பாக கட்டுரைகள் இதர அறிஞர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஆசிரியர் குழு பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். இவ்வகைத் தகவல்கள் உருவாக அதிக நாட்கள் தேவைப்படுவதால் மிக அண்மையத் தகவல்களுக்கு இவ்வகை இதழ்களை நாட முடியாது. இவை கல்வி, ஆய்வுத்துறை மாணவர்களை, ஆய்வாளர்களை, அறிஞர்களை இலக்காக கொண்டிருக்கும்.
உதாரணம் : தமிழ் ஒளி, இந்திய ஆய்விதழ், பறை, Databases, Google Scholar
- நூல் வடிவம் / ஆண்டறிக்கை / களஞ்சியம் / விமர்சன நூல்
இவ்வகை வடிவங்களிலிருந்து பெறப்படும் தகவல்கள் (1) மேலோட்டமான, எளிமையான தகவல்களாகவோ; அல்லது (2) ஆழமான, காத்திரமான தகவல்களாகவோ இருக்கும். இதன் நம்பகத்தன்மை எழுத்தாளர், பதிப்பாளர் ஆகிய இரு தரப்பினரின் சார்புநிலையைப் பொருத்ததாகும். ஆய்வு நூலாக இருக்கும் பட்சத்தில் ஆதார நூல் பட்டியல் வழங்கப்பட்டிருக்கும். விமர்சன நூலாக இருக்கும் பட்சத்தில் ஒரு தரப்பை முன்மொழிய, எதிர்க்க வலுவான ஆதாரங்களையும் விவாதங்களையும் காண முடியும். இவ்வகைத் தகவல்கள் உருவாக அதிக நாட்கள் தேவைப்படுவதால் மிக அண்மையத் தகவல்களுக்கு இவ்வடிவங்களை நாட முடியாது.
உதாரணம்: தமிழ் கலைக்களஞ்சியம், தமிழ்ப் பேரகராதி, அவர்கள் பேனாவிலிருந்து கொஞ்சம் மை (நூல்), மலேசிய எழுத்தாளர் சங்கம் 2015ஆம் ஆண்டு ஆண்டறிக்கை.
உருமாற்றம் காணும் தகவல்களின் தன்மைகள் (அட்டவணை வடிவில்)
நன்றி : Brooklyn libguides
தேவைக்கும் அதிகமான தகவல்கள் நிரம்பியிருக்கும் இக்காலச் சூழலில் தகவல் சுழற்சியின் படிநிலைகளை அறிந்து வைத்திருப்பதன் மூலம் நமக்கு தேவையான தகவல்களை எந்த மூலங்களிலிருந்து பெறமுடியும் என்கிற தெளிவு நமக்கு உண்டாகும். மேலும் எவ்வகை தகவல்களை முதன்மை மூலங்களாக (Primary Sources) பயன்படுத்த வேண்டும், எவற்றை இரண்டாம் நிலை மூலங்களாக (Secondary Sources) பயன்படுத்த வேண்டும், நம்பகத்தன்மை மிக்கவை எவை, நிராகரிக்கப்பட வேண்டியவை எவை போன்ற ஆய்வு மனநிலைக்கும் இட்டுச் செல்லும்
விஜயலெட்சுமியின் கட்டுரை சற்றே தனித்துவமானது. வாசக பரப்பு அதற்கு அதிகம் இல்லையென்றாலும் அது பரவலாகப் போய்ச்சேரவேண்டும்என்ற் பொறுப்புணர்ச்சியைப் பாராட்டுகிறேன். தகவல் எப்படி திரிந்து பின்னர் வாசகர்களைக் குழ்ப்புகின்றன என்பதை அவர் தொடர்ந்து தன் ஆய்வில் சொல்லவேண்டும். குறிப்பாகத் தமிழர்கள் வெகுசன ஊடக்த்தை அல்லது அரசுசார் ஊடகத்தைப் பெரிதும் நம்புகின்றனர். அதனால் பாதிப்புறுவர்களும் அவர்களே என்பதை சொல்லும் அளவுக்கு இக்கட்டுரை நீட்சி காணுமா என்பதைக் கணிக்க முடியவில்லை.
கோ.புண்ணியவான்.
கவனிக்க வேண்டிய கருத்து. நிச்சயம் அதுகுறித்து எழுதுகிறேன். மிக்க நன்றி.