மலையிலிருந்து இறங்கி கொண்டிருந்த போது ஒரு செங்குத்தான இடம். அங்கே மரக்கட்டையின் மேல் கால் வைத்துதான் கவனமாக இறங்க வேண்டும். நான் சரியாகதான் இடம் பார்த்து கால் வைத்தேன். அது மிகவும் செங்குத்தான இடம். இருந்தும் என் காலும் மரக்கிளையில் பதிந்திருந்த என் கையும் எப்படியோ நழுவிவிட்டன. எனக்கு முன்னாடி யாரும் இல்லை. பின்னாடிதான் சிலர் இருந்தனர். சரியாக நான் மூன்று முறை சுழன்று போய் கீழே குறுக்கலாக நின்ற ஒரு தடித்த மரக்கிளையின் மேல் தரை பார்த்தப்படி விழுந்தேன். கண்விழித்து பார்த்தால் என் நெஞ்சுக்கு முன்னால் ஒரு கூரிய மரக்கிளை.
எதிர்ப்பார்த்த மரண பயம் நித்தம் நித்தம் கொல்லும் என்பது நோய் வந்து படுத்த படுக்கையாய் கிடந்த்த போது அறிந்து கொண்டேன். ஆனால் எதிர்ப்பாரமல் வரும் மரண பயம் என்ன பாடு படுத்தும் என்பதை அந்த கணத்தில் அந்த நொடியில் தான் உணர்ந்தேன். கரணம் தப்பினால் மரணம் என்பார்களே அது போல இன்னும் ஒரு கரணத்தை போட்டிருந்தால் கண்டிப்பாக அந்த மரகிளை என் மார்பை பதம் பார்த்திருக்கும். இந்நேரம் நானும் பரலோகம் சென்று சேர்ந்திருப்பேன். இதை எழுதி கொண்டும் இருந்திருக்க மாட்டேன். இருந்தும் நான் இன்னும் உயிரோடு இருப்பதற்க்கு காரணங்கள் இருக்கலாம். காரணங்கள் இல்லாமல் காரியங்கள் நடப்பதில்லையல்லவா.
கொஞ்ச நேரத்தில் என் உடல் நடுக்கம் கண்டு விட்டது. யாரருலும் என்னை காப்பாற்ற முடியவில்லை. என்னை தாங்கி பிடித்த அந்த தடித்த மரக்கிளைக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அதே நேரத்தில் என் கால் சுழுக்கிவிட்டது. அதே வலியோடு எழுந்து நடக்க முடியவில்லை. இத்தனைக்கும் நான் knee guard அணிந்திருந்தேன். ஒருக்கால் நான் அணியாமல் இருந்திருந்தால் கால் உடைந்திருக்க வாய்ப்பு உண்டு. கால் வேறு சுழுக்கி விட்டது. நடக்கவும் முடியவில்லை. அங்கேயே அமர்ந்து விட்டேன். இதனூடே மழை வேறு. என்னோடு வந்தவர்களில் ஒருவர் தைலத்தை வைத்து நன்றாக தேய்த்து விட, அந்த சூடு தந்த கதகதப்பில் எப்படியோ எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டேன். இதற்கு எப்படியாவது அங்கிருந்து போய் விட வேண்டும் என்ற உந்த்துதலும் ஒரு காரணம் என்று சொல்லலாம். நேரம் ஆகி கொண்டிருந்தது. வானமும் இருட்டி கொண்டிருந்தது.
எப்படியோ நாங்கள் அடிவாரம் வந்து சேர்ந்து விட்டோம். எங்களுக்கு முன்னே எல்லாரும் அந்த ஒட்டு குடிசையில் அடைக்கலமாகி இருந்தனர். எல்லாருமே மழையில் தெப்ப நனைந்திருந்தனர். அங்கே கொஞ்ச நேரம் தான் இளைப்பாறினோம். பின்னர் அவரவர் வாகனங்களில் ஏறி வீட்டுக்கு செல்வதாக தான் திட்டம். ஆனால் போகும் வழியில் திடீர் திருப்பம். வீட்டுக்கு போக வேண்டிய கார் வழி மாறி ஈபானிய ரூமா பஞ்சாங் நோக்கி சென்றது. அதாவது எங்களுக்கு மலையேற வழிக்காட்டியாக இருந்தவரின் கிராமத்துக்கு சென்றோம். மற்றுமொரு ரூமா பஞ்சாங். கொஞ்சம் மேடான பகுதி. காரை கீழே நிறுத்தி விட்டு கீழே இருந்து மேலே திரும்பவும் ஏறினோம். அங்கே பெரிய குடும்பமே இருந்தது. பிறந்த குழந்தையிலிருந்து நடக்க முடியாத முதியவர் வரை ஒரே கூரையின் கீழ் இருந்தனர். எத்தனை தலைமுறைகள் இன்னும் அங்கே இருக்கிறார்கள் என்று என்னால் எண்ண முடியவில்லை. இதற்கு முன் சென்ற ரூமா பஞ்சாங்கை விட இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. சற்று புன் இது கொஞ்சம் மேடான பகுதி என சொல்லி இருந்த்ந்ந்ன் அல்லவா. இவர்களின் வீடமைப்பு முறை கீழ்நோக்கி இருந்தது. இன்னும் சொல்லப்போனால் சுரங்கம் போல இருந்தது. குறுக்கலான பாதையில் சில நிமிடங்கள் சென்றோம். கீழே தான் அனைவரும் அமர்ந்திருந்தனர். எல்லாரும் சந்தோசமாக என்னவோ பேசி கொண்டிருந்தனர்.
நாங்கள் சென்றதும் எங்களை இன்முகத்துடன் வரவேற்றனர் டைகர் டின்னோடு. எங்களுக்கும் கொடுத்து உபசரித்தனர். அவர்கள் கண்ணில் மண்ணை தூவுவதே எனக்கு வேலையாகிவிட்டது. எனவே அந்த கூட்டதிலிருந்து விடுபட அப்படியே மகளிர் அணி பக்கம் கவனத்தை திருப்பினேன். ரொம்பவும் பாசமாக பேசினர். இதில் விசயம் என்னவென்றால் நானும் அவர்களும் அதிகமாக புன்னகையின் வாயிலாக தான் பேசிக்கொண்டோம். அங்கிருந்த நடுதர வயது பெண்களிடம் தான் மலாய் மொழியில் பேச முடிந்தது. அவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளை விட நான் தான் அதிகமாக கேள்வி கேட்டிருப்பேன். பெரும்பாலும் பல்கலைகழக தவணை விடுமுறைக்கு வந்திருந்தனர். கூடவே அவர்களின் தோழிகளையும் அழைத்து வந்திருந்தனர்.
அவர்களின் தோழிகளும் ஈபானியர் தாம். ஆயினும் பட்டணத்திலேயே அவர்கள் பிறந்து வளர்ந்ததால் சொந்த பாரம்பரியத்தின் முகவரி சற்று குறைவாகவே தெரிந்துள்ளது. எனவே தான் அவ்வபோது கிராமங்களுக்கு வந்து தங்கள் பாரம்பரியத்தின் பழமையை தூசி தட்டி தெரிந்து கொள்கின்றனர். உண்மையில் இது ஒரு பாராட்டுக்குறிய விசயம். என்னதான் நகரங்களின் வாசம் இங்குள்ளவர்களின் மேல் படிந்திருந்தாலும் தங்களின் மூதாதையாரின் வீரபராக்கிரம செயல்களையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதில் எல்லாருக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை ஒவ்வொருத்தரும் உணர்ந்திருப்பது என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்தது.
இங்குள்ளவர்கள் தாங்கள் இந்த இனத்தவர் என்பதை பறைசாற்றுவதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டுள்ளனர். கலப்பு திருமணங்கள் நடந்திருந்தாலும் தாய் வழி பாரம்பரியத்தையும் தந்தை வழி பாரம்பரியத்தையும் மிகுந்த சிரத்தை எடுத்து தெரிந்து கொள்கின்றனர். சிறுவயது பிள்ளைகளிடம் இருக்கும் இந்த பண்பு எனக்கு பாராட்டவே தோன்றியது. பலரிடம் இந்த பண்பு இருப்பதே இல்லை. பட்டணத்தில் இருந்து விட்டால் என்னவோ பரம்பரையே தங்க தொட்டிலில் படுத்து தங்கத் தட்டிலே சாப்பிட்டு ராஜ வாழ்க்கை வாழ்வதாக ஒரு நினைப்பு. என் அனுபவத்தில் நானே பார்த்து கேட்டிருக்கிறேன். சொல்வதற்கில்லை. ஆனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை இடைநிலை பள்ளியிலிருந்து பல்கலைகழகம் வரை ஒரு சில மாணவர் கூட்டம் தமிழை டமிலாக்கி பேசி கொண்டிருந்ததை. காரணம் இவர்கள் பெரும்பாலும் தமிழை ஆரம்பக்கல்வியாய் கொள்ளாதவர்கள். நுனிநாக்கில் அரைகுறை ஆங்கிலத்தையும் அதில் ‘லா’வை இணைத்து பேசுவதையும் மருந்துக்கு கூட தமிழை இணைக்காமல் இருந்ததையும் கண்கூடாக பார்த்திருக்கிறேன். தமிழ் பேசினால் என்ன தெரியுமா குறியீடு நமக்கு “ஏய் வொய் யூ தல்கிங் லைக் எஸ்டேட் லா” “ஹீ லூக் சோ எஸ்டேட் லா” அவர்களுக்கு எஸ்டேட் எனபது அவ்வளவு கீழ்தரமான ஒன்று. தங்களையும் எஸ்டேட் என்று பச்சை குத்தி விடுவார்கள் என்று பயந்து ஆங்கில சாயத்தை தம்மீது பூசி கொண்டு இந்த கூட்டதோடு சேர்ந்து கொண்ட சில டமில் பச்சோந்திகளையும் பார்த்திருக்கிறேன். இதில் சொல்லி கொள்வது வேறு “இ டோன்ட் நோ டமில்”
இதை படிப்பவர்களுக்கு ஒரு விசயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். பிற இனத்தவரும் தமிழை முடிந்தவரை சரியாக உச்சரிக்க முயற்சி எடுக்கும் போது தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு அதை பற்றிய தரக்குறைவான எண்ணம் இருப்பது தான் மிகவும் இழிவு. மொழி என்பது ஒலியின் வடிவம். எந்த மொழி பேசினாலும் அதை திருந்த பேச வேண்டும். ஒருவருக்கு ஒரு மொழி தெரிந்தால் அவர் ஒரு மனிதனுக்கு சமம். அதுவே நான்கு மொழி தெரிந்தால் நால்வருக்கு சமம். ஒவ்வொரு மொழியும் அதன் ரசனையோடு பேசும்போது தன் அதன் சுவை தெரியும். தெரிந்திருந்தால் தமிழை தமிழராய் பேசுங்கள்; ஆங்கிலத்தை ஆங்கிலேயராய் பேசுங்கள்; மலாய் மொழியை மலாய்க்காரராய் பேசுங்கள்; சீனத்தை சீனராய் பேசுங்கள். அங்கே தான் மொழியின் ஆக்கச்செயலை நம்மால் நன்கு உணர முடியும்.
இந்த விசயத்தில் சரவாக் மக்களை நிஜமாகவே பாராட்ட வேண்டும். அவர்களின் ஆங்கில புலமை தாய்மொழியின் தரத்துக்கு ஒப்பாக இருக்கும். இது சில ஆண்டுகள் சரவாக் ராஜா ப்ரூக் ஆளுமையின் கீழ் இருந்ததால் கூட இருக்கலாம். அதே வேளையில் தங்கள் இனத்தவரை கண்டால் தங்கள் மொழியிலெயே பேசிக்கொண்டு அங்கே நாம் இருந்தால் நமக்காக மொழி பெயர்த்து வேறு கொடுப்பார்கள். சரவாக்கில் பொதுவான மொழி சரவாக்கிய மலாய் மொழி. நம்மால் அதை பேச முடிந்தால் நமக்கு அங்கு தனி மரியாதை தான். சொல்லப்போனால் மொழியின் ஆளுமை ஒற்றுமையை கூட்டுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த ரூமா பஞ்சாங் விஜத்தை முடித்து விட்டு மீண்டும் மேரியின் ரூமா பஞ்சாங்கை சென்றைடையும் போது நான் உறங்கிவிட்டிருந்தேன். எழுந்து பார்க்கும் போது வண்டி ரூமா பஞ்சாங்கை நெருங்கி கொண்டிருந்தது. நான் தூங்குவது அறியாமல் ஜேம்ஸும் கண்ணாவும் படு ஜோராக கதைத்து கொண்டிருந்தனர் வண்டிக்குள். கால் வலியோடு பொடி நடையாக இரும்பு பாலத்தை தாண்டி செல்லவே கடினமாக இருந்தது. ஆனாலும் வெளிபடுத்த முடியுமா என்ன? எதுவுமே நடக்காதது போலே நடந்து கொண்டேன்.