நமக்கான குரல்களை நசுக்கி எவ்வளவு தூரம் ஓடிடுவோம்

தயாஜி படம்வானொலியில் அறிவிப்பாளராய் இருப்பதால் அவ்வபோது, அடையாளைப்படுத்துவும், நானும் இருக்கிறேன் என்பதை காட்டவும் சிலவற்றை செய்யவேண்டியுள்ளது. சில வாரங்களுக்கு முன்னால் பேட்டி எடுக்க வந்திருந்தார்கள் ; வழக்கமான கேள்விகளுடன்.

பொதுவாக இப்படி பேட்டி எடுக்க வருகின்றவர்களிடம் சிலவற்றை கவனிக்கலாம். நம்மை பேட்டி எடுக்க வந்து, நம்மை பற்றி நாம்மையே சொல்ல வைப்பார்கள். நாம் சொல்வதை கவனிக்காமல், அடுத்தடுத்த கேள்விகளை கேட்பார்கள். அவர்களை பொறுத்தவரை, அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் நாம் ஓவ்வொரு பதிலாக சொல்ல வேண்டும். சில சமயம் அவகளின் அடுத்த கேள்விக்கும் சேர்த்து நாம் பதில் சொல்லிவிடுவோம். இருந்தும் கேள்வியை கேட்டு , மீண்டும் நாம் சொன்னதை சொல்ல வேண்டும்.

அப்படி எனக்கு கொடுக்கப்பட்ட கேள்விகளை குறிப்பிடும்படியாக கேள்வி இருந்தது. இந்த கேள்விகளுக்கு நாம் வைத்திருக்கும் பதில்கள் மூலம் நம்மை நாம் சில சமயம் அறிந்துக் கொள்ளலாம். கேள்வி ஒன்றாக இருந்தாலும், இடைவேளிக்கு பிறகு அதே பதிகள் இருக்குமா என்பது சந்தேகம்தான்.

அதனால்தான் என்னவோ புத்தர் சொல்வதாக ஒரு வாக்கியம் உண்டு ‘கேள்விகள் ஒன்றுதான், அதற்கு நாம் தரும் பதில்தான் மாறிகொண்டெ இருக்கிறது.’

நேற்று சொன்ன பதில்களில் நமக்கே கூட இப்போது உடன்பாடு இருப்பதில்லை; கேள்விகள் அப்படியே இருந்த பொழுதும்….

கேள்விகளின் தனியே தெரிந்தவை இவை;

நீங்கள் பேட்டி கண்ட வி.ஐ.பி-கள் யார்..?

அந்த அனுபவம் எப்படி இருந்தது..?

எல்லாமே ஒரு வகையில் வாய்ப்புதான். எல்லோருக்கும் ஆசை உண்டு. வி.ஐ.பி-களை பேட்டி காண்பதற்கு.  பேட்டியின் மூலம் வி.ஐ.பி தெரிகிறாரோ இல்லை, பேட்டி காண்பவருக்கு பெயர் உண்டு.

நான் பேட்டி கண்ட வி.ஐ.பி-கள் யார்யாரென  யோசிக்கையில்; என் வரையில் நான் பேட்டி கண்ட வி.ஐ.பிகள் சிலர் இருக்கிறார்கள். பாலியல் தொழிலாளி, போதை பித்தர், சிறை கைதி, கொலை குற்றவாளி.

ஒவ்வொருவருக்கும் ஒரு பின்னனி இருக்கிறது. சிலர் “என்னோட விதி இப்படி ஆச்சி”, “எப்ப செஞ்ச பாவமோ இப்ப அனுபவிக்கறேன்”, “எங்க அப்பா அம்மா ஒழுங்கா இருந்தா நான் ஏன் இப்படி ஆகறேன்.” எனதான் தத்தம் கதைகளை ஆரம்பிக்கிறார்கள்.

பொதுவாகவே போதை பித்தர்களின் பின்னனி ஒன்றுதான். அப்பா அம்மா. “வீட்டில் என்னை கண்டுக்க மாட்டாங்க” என்பதுதான் அவர்களின் தொடக்கப்புள்ளி. படிக்கும் போதிலிருந்தே இவர்கள் கவனிக்க ஆளில்லாமல் வழி மாறிவிடுகிறார்கள். தன் மீது அக்கறை உள்ளவர்களென வந்து சேரும் நண்பர்களாகட்டும், நபர்களாகட்டும், தாய் தந்தையைவிட பிள்ளைகளோடு நெருக்கமாகிவிடுகின்றார்கள்.

தன் மீது அக்கறை உள்ள, தான் அழும் போதும் சிரிக்கும் போதும் உடன் இருப்பவர்களின் பின்னனியை விட அந்த நேரம் அவர்கள் கொடுக்கும் ஆறுதல்தான் முக்கியமாக படுகிறது.

வயது 15. ஆனால் மறுவாழ்வு மையத்தில், தனி அறை ஒன்றில் தனக்குத்தானே பேசிக் கொண்டும் வாயில் எச்சில் வடிய அமர்ந்திருக்கிறான். எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்க தயாராய் பெற்றோர்கள் இருந்தாலும், அவன் குணமாக ஆறு மாதங்களேனும் ஆகலாம் என சொல்லிவிட்டார்கள், மறுவாழ்வு மையத்தினர். பள்ளிக்கு பல நாட்கள் போகாமல் இருந்ததையே கண்டுபிடிக்க முடியாமல் இருந்த பெற்றோர் அவனது பழக்கவழக்கத்தை கவனித்திருக்க வாய்ப்பு இல்லைதான்.

அப்பாவுடன் அடிக்கடி கடைக்கு செல்லும் பையன் அவன். வித வித பீர்களை குறித்து அப்பா ரசிக்கும் படி சொல்வதை ருசிக்க ஆசை தோன்றியது. அப்பாவை போல அவ்வபோது குடிக்கவில்லை. அதுதான் பிரச்சனை. வீட்டினர் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் பணத்தை கொடுத்துவிடுவதால்,  அவனது குடியை கண்டிக்க யாருக்கும் வாயில்லை. இப்போது மறுத்துவமனையில்.

கொலைகாரர்கள் எல்லோரும் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. எனக்கு தூக்குன்னுதான் தெரியுமே.. அவனை கொன்னுட்டேனே அது போதாதா.. என்று பேட்டி கொடுத்தவர் இன்னேறம் தூக்கிலேறியிருக்கலாம். ஆனாலும் ஒரு ஆசிரியரின் மகன் இப்படி ஆனது ஏற்க முடியவில்லை.

பாலியல் தொழிலாளி குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். பேட்டி எடுத்துக் கோண்டிருக்கும் போதே, தூரத்தில் நடந்து போய் கொண்டிருந்தவர்களை காட்டி;

“அதோ போறா பாருங்க.. அவதான் என்னோட மக… அவளோட அப்பன் போன பிறகு இவளுக்காகத்தான் இந்த தொழிலுக்கே வந்தேன்.. இப்ப என்னடான்னா… என்னைய இங்கயே விட்டுபுட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டி போய்ட்டா… ஒரு வார்த்த கூப்பிடிருக்கலாம்… எனக்கு என்ன விதியா இந்த எழவு வேலைய செய்யனும்னு.. அப்போ வேற வழி இல்ல… ஒடம்பு நல்லா இருந்துச்சி.. இப்போ எவன் வரான்..  சொல்லுங்க… நக்கி நக்கியே பொழுப்பு ஓடுது.. ச்ச்சே…” இவரது  இந்த கடைசி வார்த்தைகள். பேட்டியில் வரவில்லை. இன்னமும் என நினைவில் காட்சி படிமங்களாக ஒட்டிக் கொண்டிருக்கிறது.

எல்லோரும்தான் பணத்தின் பின் ஓடிக்கொண்டிருக்கிறோம். பணம் என்ன எளிதாக கிடைத்திவிடுமா என்ன..? எவ்வளவு தூர ஓட்டம் அது…? எத்தனையெத்தனை சமரசங்கள்..?

ஆனால், எந்த நெடுந்தூர பயணத்திலும் வெற்றிக்கு மிக அருகில் செல்வதற்கு நமக்காக உற்சாகம் கொடுக்கும் ஒரு குரலாவது வேண்டும். அந்த குரல்வலையை நெருக்கி, நாம் ஓடிக் கொண்டிருந்தால், எவ்வளவு தூரம்தான் நாம்மால் ஓட முடியும், திரும்பிப் பார்க்காமல்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...