வலி அறிதல் (முதல் பரிசு)

செல்வன் காசிலிங்கம்

செல்வன் காசிலிங்கம்

அப்பாவுக்கு எம்ஜியாரை அவ்வளவாக பிடிக்காது. “நல்லா கவனி, அப்படியே தூணு பின்னால ஒளிஞ்சிகிட்டே கண்ணக் கசக்குவான் பாரு..”, என்று எள்ளல் தொனிக்க சிரித்தபடியே அவர் அடிக்கடி சொல்லும் ஒற்றை வரியே எம்ஜியாரைப் பற்றிய அப்பாவின் பரிகாசம் கலந்த விமரிசனமாக பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. அவரின் வயதேயொத்த ராஜூ அங்கிள், பலராமன் மாமா போன்ற பலராலும்  “என்னாமா கத்தி சுத்துராறுய்யா” என்றும் “கலரு மின்னுதில்ல” என்றும் பலவாறு சிலாகிக்கப்பட்டு கொண்டாடப்படும் எம்ஜியாரை அப்பாவுக்குப் பிடிக்காது என்பதே ஒரு பெரும் ஆச்சரியமான விஷயமாக எனக்குத் தோன்றும். எஸ்டேட் திடலில் மாதமொரு முறை திறந்தவெளியில் வெள்ளை திரைச்சீலையில் படம் காட்டுவார்கள். பெரும்பாலும் சாமி படங்கள், இல்லையென்றால் சிவாஜி படங்களாகவே போடுவார்கள். சிவாஜியின் படங்கள் நல்ல குடும்பப்படங்கள் என்பது அப்பாவின் எண்ணம். எஸ்டேட் யூனியனிலும் கோயில் கமிட்டியிலும் முக்கிய நபராக இருந்ததும் அவர்களே படங்களைப் போடுவதாலும் அப்பாவின் சிவாஜி சம்பந்தமான அபிப்பிராயங்கள் அங்கு எடுபட்டிருக்கக்கூடும் என்று நான் ஒருவாறு ஊகித்து வைத்திருந்தேன் .

அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் டிவி கிடையாது. நான் முழுதாய்ப் பார்த்த நான்கோ ஐந்தோ எம்ஜியார் படங்களும் பக்கத்து வீட்டு முனியாண்டி மாமா வீட்டு டிவியில் பார்த்ததுதான். எஸ்டேட்டிலேயே மொத்தமாய் மூன்றே டிவிகள்தான் இருந்தன. முதலாவது துரைமார் வீட்டில் இருந்தது. டவுனிலிருந்து எஸ்டேட் வழியாக போகும் புக்கிட் பெருந்துங் பஸ்ஸில் ஏறினால் ஒரு மணல் மேட்டின் முன்னால் இறக்கி விடுவார்கள். கிரவல் மண்ணில் கால் வைத்து இறங்கும்போதே பொன்னிற வண்ணத்தில் செம்மண் தூசு மேலெழும்பி கண்ணை மறைக்கும். ஒற்றைக் கையால் மூக்கை மூடிக்கொண்டே கண்ணைச் சுருக்கியபடி அந்த மணல் மேட்டில் ஏறினால், மேட்டில் உச்சியில் பொன்னுசாமி தாத்தா அவருடைய செக்யூரிட்டி போஸ்ட்டில் உட்கார்ந்திருப்பார். பார்வை கொஞ்சம் மந்தம் என்றாலும், ‘’தாத்தா..‘’ என்றழைத்தால் ‘’அடேய்… காசி மவனே…‘’ என்று குரலைவைத்தே அடையாளம் கண்டுகொள்வார். அவரைத் தாண்டியவுடனேயே இடதுபக்கம் ஒரு வண்டி மட்டுமே போகும் அளவில் சின்ன தார்ரோடு ஒன்று பிரியும். அதிலேயே கொஞ்சதூரம் போனால் துரைமார் வீடு வரும். கல்வீடு. நீலநிறத்தில் பெயின்ட் அடித்துக் கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட பெரிய வீடு. வீட்டு முன்னால் சிவப்புkகலரில் ஒரு ஆமைக்காடி கூட நிற்கும். அந்த வீட்டு டிவி பெரியது என்றும் புதிதாய் வாங்கப்பட்ட கலர் டிவி என்றும் அப்பா சொல்லியிருக்கிறார். நான் பார்த்ததில்லை. இரண்டாவது டிவி கங்காணி ஐயா வீட்டில் இருந்தது. அது கலர் டிவி இல்லை. அப்பாவுடன் தீபாவளி விருந்தொன்றிற்கு கங்காணி ஐயா வீட்டுக்குப் போனபோது அதைப் பார்த்திருக்கிறேன். அந்த டிவி முன்னால்தான் படுத்துக்கொண்டே, தான் வீட்டுப்பாடம் செய்வதாக கோமதி பள்ளிக்கூடத்தில் எல்லாரிடமும் பீத்திக்கொள்ளும்.

முனியாண்டி மாமாவின் வீட்டிலுள்ள டிவி, அவர் காசு போட்டு  வாங்கியதல்லவென்றும் லெச்சுமி ஆன்ட்டியை அவர் கல்யாணம்vali-3 செய்தபோது சீதனமாக கிடைத்ததென்றும் கூடவே ஒரு கேசட் பிளேயரும் வந்ததென அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்.  முனியாண்டி மாமா டிவி பார்த்து நான் பார்த்ததே கிடையாது. லெச்சுமி ஆன்ட்டி மட்டுமே கேசட் பிளேயரில் நிறைய தமிழ்ப்பாட்டு கேட்பார். குறிப்பாக பி.சுசிலாவின் சோகப் பாடல்கள்தான் எப்போதும் கேட்கும். அதிலும், ‘கண்ணிழந்த மனிதர் முன்னே’ எனும் பாடலைத் திரும்பத் திரும்ப ரிவைண்ட் செய்து கேட்பார். எஸ்டேட்டிலேயே மிகவும்  அழகானவர் அவர்தானென நான் ரொம்ப நாளாய் நினைத்துக் கொண்டிருந்தேன். அம்மா, சின்னம்மா, ஜெயா அத்தை இப்படி யாருடன் சேர்ந்து நிற்க வைத்தாலும், ஆன்ட்டி மட்டும் உயரமாக, தலையில் எப்போதும் வைக்கும் மல்லிகைப்பூவுடன் தனியாகத் தெரிவார். குண்டென்றோ ஒல்லி என்றோ உடனடியாகச் சொல்லமுடியாது. அப்படி ஒரு உடல்வாகு. ஞாயிற்றுக்கிழமைகளில் ஆர்டிஎம்மில் படம் போடுவார்கள். அம்மாவுக்கு  ஆன்ட்டியைப் பிடிக்காது. அதனாலேயே நாங்கள் ஆன்ட்டி வீட்டுக்குப் படம் பார்க்கப் போவதும் பிடிக்காதென நினைக்கிறேன். அப்பாதான் கட்டாயப்படுத்தி அனுப்பி வைப்பார். படம் முடிந்து வீட்டுக்கு வந்தால் அம்மா முறைத்துக்கொண்டு ரொம்பநேரம் எங்களுடன் பேசாமல் இருப்பாள். அம்மாவை எப்படி சமாதானப்படுத்துவதென்று எனக்கு தெரியும். ஒரு முத்தம் கொடுத்தால் போதும் அல்லது “பசிக்குதும்மா…”, என்று சொன்னால்கூடப் போதும். அம்மா இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவாள். ஆன்ட்டிக்குக் கூட நான் முத்தம் கொடுத்திருக்கிறன். ஆன்ட்டியின் மகன் ரவிக்கு அது பிடிக்காது. என்னைவிட ஒரு வயது சின்னவன். நான் அங்கு போகும்போதெல்லாம் வேண்டுமென்றே ஆன்ட்டியிடம் நெருக்கம் காட்டுவான். என்னைப்போலவே அவனுக்கும் மூக்கு எடுப்பானதாகவும் அழகாகவும் இருக்கிறதென்று சொல்வதோடு “ஒன் அண்ணன்யா”, என்று அவனையும் சமாதானப்படுத்தி இரண்டு பேரையும் சேர்த்தே ஆன்ட்டி பிரியத்துடன் அணைத்துக்கொள்வார். ஆன்ட்டி வீட்டின் வெளியே மல்லிகைப்பூக்களையும் ஊதா கலரில் மோர்னிங் குளோரி பூக்களையும் தொட்டிகளில் நட்டு வைத்திருப்பார். மல்லிகைப்பூவின் வாசம் எனக்குத் தெரியும். ஆனால் ஆன்ட்டி என்னை அணைத்துக்கொள்ளும் போதெல்லாம் ஆன்ட்டியின் உடம்பில் மல்லிகைப்பூ அல்லாத வேறொரு வாசம் வீசும். அதுபற்றி  ஆன்ட்டியிடம் கேட்க வேண்டுமென்று பலமுறை நினைத்ததுண்டு. ஆனால் இதுவரை கேட்டதில்லை.

முனியாண்டி மாமா லெச்சுமி ஆன்ட்டி மாதிரி இல்லை. பக்கத்து வீடுதான்  என்றாலும் அப்பாவிடமோ அம்மாவிடமோ அவர் எப்போதும் பேசி நான் பார்த்ததில்லை. லெச்சுமி ஆன்ட்டி ஹாலில் பாட்டு கேட்கும்போதுகூட, மாமா  வீட்டுக்கு வெளியே பலகை பெஞ்சில் எங்கோ வெறிக்கப் பார்த்தபடிதான் உட்கார்ந்திருப்பார். எங்கள் வீட்டிற்கும் ஓரிருமுறை வந்திருந்து பார்த்திருக்கிறேன். இங்கும் வெளியே தாழ்வாரத்தில் தலை குனிந்தபடியே, யாரிடமும் பேச ஒன்றுமில்லை என்பது போலவே உட்கார்ந்திருப்பார். பாட்டி மட்டும் அம்மா கலக்கித் தரும் வறக்கோப்பியை அவருக்கருகில் வைத்துவிட்டு மாமாவின் கையை அன்போடு தடவிக்கொடுத்தபடி அவர் ஏதாவது பேசக்கூடுமென்று எதிர்பார்ப்பது போல பக்கத்தில் உட்கார்ந்திருப்பாள். ரொம்ப நாளைக்கு முன்பொருமுறை மாமா பாட்டியின்  கையைப் பிடித்துக்கொண்டு முகத்தை மூடிக்கொண்டே குலுங்கிக் குலுங்கி அழுதது ஞாபகம் இருக்கிறது. அவர் மரம் வெட்டும் நெரை கூட மாரியம்மன் கோவில் பின் பக்கம் இருக்கிறது. பக்கத்தில் வேறு நெரை கூடக்கிடையாது. அவர் குடிப்பாரென்றும் சொல்வார்கள். எஸ்டேட்டு சீனன் கடையில் அனுதினமும் ராத்திரி ஏழு ஏழரை மணிக்கெல்லாம் ஒரு சின்ன கூட்டம் கூடி நிற்கும். அந்த கூட்டத்தில் முனியாண்டி மாமா எப்போதும் இருப்பார். அம்மாவின் பழைய டிரான்சிஸ்டர் ரேடியோவில் ரெ.சண்முகமோ, மைதீன் சுல்தானோ பத்துமணி செய்தி வாசிக்கும் போதோ சில சமயங்களில் அது முடிந்து பைரோஜி நாராயணனின் மகாபாரதம் வானொலி நாடகம் ஒலிபரப்பப்படுகையிலோ, தள்ளாடியபடி மாமா இருட்டில் கீழே உதிர்ந்து காய்ந்து போன அரச இலைகள் சரசரக்க எங்கள் வீட்டைக் கடந்துபோவதை நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.

முனியாண்டி மாமா என்றில்லை, லெச்சுமி ஆன்ட்டியிடமோ அல்லது வீட்டுக்கு வரும் யாரிடமும் அம்மா அதிகம் பேசமாட்டாள். வந்தவர்களிடம் லேசான தலையாட்டல். அதில் “வாங்க” என்றொரு அர்த்தம் ஒளிந்திருக்கக் கூடுமென நினைக்கிறேன். அவர்களும் அதைப் புரிந்துகொண்டு “சௌக்கியமா அம்மா?”, என்று கேட்டால் “ம்ம்ம்”, என்று சொல்லிவிட்டு குசினி பக்கம் நகர்ந்து விடுவாள். பல சமயங்களில் அம்மாவுக்கு வார்த்தைகளே தேவைப்படாத ஒன்றெனத் தோன்றும். முகத்தை சுழித்தோ, உதட்டைப் பிதுக்கியோ அல்லது கண்ணை இடுக்கியோ, ஒன்றோ இரண்டோ விரல்கள் காட்டுவது இப்படி சைகைகளாகவே அம்மா நிறைய விஷயங்களை பேசுவதைப் பார்க்க குதூகலமாக இருக்கும். சற்றேறக்குறைய இருபதுக்கும் மேற்பட்ட அம்மாவுடைய பாவனைகளுக்கு நான் அர்த்தம் தெரிந்து வைத்திருந்தேன். என்மேல் உள்ள அன்பையும் பிரியத்தையும் ரகசியமாகவும் வேடிக்கையாகவும் தெரிவிப்பதற்கு அதற்கும் அதிகமான  பாவனைகள் எதுவும் அம்மாவுக்கு தேவைப்பட்டதில்லை. அவளது உலகம் தனியானது. அது அடுக்களையில் இருந்தது. அங்கு மழை பெய்யுமா, நிலாவோ சூரியனோ வரக்கூடுமோவென திடீரென்று எப்போதாவது  நினைத்துக்கொள்வேன். அம்மாவின் உலகத்தில் அனுமதி வாங்காமல் நுழையக்கூடிய சலுகை எனக்கும் தங்கச்சிக்கும் மட்டுமே இருக்கிறது. எப்போதும் எதையாவது யோசித்துக் கொண்டிருப்பது போலவே அம்மா இருப்பது ஏனென்று தெரியவில்லை. நான் அம்மாவை திடீரென்று கட்டிப்பிடித்தால் கூட, தூக்கத்திலிருந்து அப்போதுதான் விழித்தவள் போல, கொஞ்ச நேரம் சென்ற பிறகே ‘’கன்னுக்குட்டீ‘’ என்று சொல்லி என் முடியைக்கோதி கலைத்து விடுவாள். அம்மாவின் உடம்பில் லேசாக புளித்த வாசமொன்று வீசும். ஸ்கூல் லீவு  நாட்களில் அம்மாவுடன் கித்தா மங்கு துடைக்கப் போயிருக்கிறேன். அந்த  வாசம்தான் அது. அம்மா குளித்து விட்டு துவைத்த துணிகளை போட்டுக்கொண்டாலும் அந்த வாசம் மட்டும் அப்படியே அவளின் உடம்பில் தங்கி விட்டிருப்பது ஆச்சரியம்தான்.

வீட்டு ஹாலிலிருந்து உள்ளே புகுந்தால் இடதுபக்கத்தில் உள்ள சின்னரூம்தான் அம்மாவுடையது. எங்களதும் கூட. அதன் ஜன்னலினூடே பார்த்தால், வெளியேயுள்ள அரச மரம், ரோட்டின் மும்முனை முச்சந்திக்கு இடது பக்கமுள்ள ராஜாத்தி ஆன்ட்டி வீடு, தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயில், கோயிலைத் தாண்டி ஓர் மலையுச்சியும் சாயங்காலங்களில் சூரியன் மறைவதும் கூட தெரியும். வலதுபக்கத்தில் உள்ள அறையில் சாமி மேடை இருக்கும். பாட்டி அங்கேதான் தூங்குவாள். எஸ்டேட் வேலை முடிந்து அம்மா வேகவேகமாய் வீடு வந்து சேரும்போதெல்லாம், நான் பெரும்பாலும் ஸ்கூல் முடிந்து வீட்டிலிருப்பேன். பசிக்கும். சமையல் முடிந்து, சாப்பிட்ட மங்கு கழுவுவது, துணி மடிப்பதென அதன் பிறகு அம்மா பெரும்பாலும் குசினி அல்லது இந்த அறையில்தான் நடமாடிக் கொண்டிருப்பாள். அறையிலுள்ள ஃபேன் எப்போதும் கடகடவென மெலிதாக சத்தம் போட்டுக்கொண்டுதான் ஓடும். புழுக்கம் நிறைந்த அந்த அறையில் அம்மா நாள் முழுவதும் எப்படி இருக்கிறாளோ தெரியவில்லை. அரிதான சமயங்களில் ஜன்னலருகே உட்கார்ந்து, வீட்டு மூங்கில் கேட்டுக்கு வெளியே உள்ள அரச மரத்தையே அம்மா எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பாள். சாரைப்பாம்பு ஒடுவதைப்போலவே வளைந்து வளைந்து அது தன் வேர்களை மண்மேல் பரவ விட்டிருப்பதைப் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். மரத்தினடியில் அம்மா ரொம்ப நாளைக்கு முன்னம் ஒரு சூலத்தை நட்டு வைத்திருந்தாள். அதன் நடுவிலுள்ள உயரமான முனையில், வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சம் பழத்தை குத்தி மாலை மாற்றுவது அம்மாவின் வழக்கம். அதற்காக மட்டுமே அம்மா வீட்டுக்கு வெளியே வருவாளென நினைக்கிறேன். ஒருநாள் இரவு, தங்கச்சி தூங்கிய பின்பு  விழித்திருந்த என்னை இறுக்கிக் கட்டியணைத்தபடி மரத்தில் ஐயா குடியிருப்பதாகவும் ‘’அவர்தான் நம்ம குலசாமி… அவர் கையில ஒங்கள ஒப்படைச்சிட்டு நிம்மதியா சாவேன்… ஐயா பாத்துக்குவாரு.. ‘’ என்றாள். அந்த இருட்டு ரூமில் எரிந்து கொண்டிருந்த ஒற்றை மஞ்சள் குண்டு பல்ப்பின் மங்கிய வெளிச்சத்தில் அம்மாவுடைய கண்கள் அன்றைக்கு மினுமினுத்துக் கொண்டிருந்தன.

vali-1அப்பாவின் கேள்விகளுக்கு அம்மா பதில் சொல்லாமல்,  அமைதியாக கடந்து செல்லும் போதெல்லாம்  அப்பாவுக்குக் கோபம் தலைக்கேறி விடும். அன்றும் அப்படித்தான் ஆரம்பித்து நீலக்கலரில் எதோ ஒரு சின்ன போத்தல். அப்பா அதைக் காணோமென்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.  அந்த மாதிரியான  கலர் கலரான சின்னச்சின்ன போத்தல்களை லெச்சுமி ஆன்ட்டியின் வீட்டில்  பார்த்திருக்கிறேன். அம்மா சொற்களை கோர்த்துக் கொண்டிருந்தாள் போல. “கண்ட கண்ட நாய்களோட ஜாமான்லாம், இந்த வீட்டுல என்ன மசிருக்கு வருது…” என்ற வார்த்தைகள் ரூமிலிருந்து வெளியே வந்தன. அந்தக் குரல் அப்பாவை நிலைகுலைய வைத்திருக்க வேண்டும். பெருங்கோபத்துடன் அப்பா அறையில் நுழைந்து கதவை அறைந்து சாத்தினார். உள்ளே ஏதேதோ  சத்தம் கேட்டது. பாட்டி எதையோ புரிந்து கொண்டவள் போல்  “ஐயோ… இதைக்கேக்க நாதியில்லாம போச்சே… காசீ… பாவம்டா அவ… கொஞ்சம் கொஞ்சமா ஏண்டா தெனமும் கொல்றே.. ஒரேடியா அவள அடிச்சு சாவடிச்சிடு.. கண்ட கருமாந்திரத்த எல்லாம் பாக்கணும்னு என் தலையில எளுதியிருக்கே… என்னங்க என்னையும் கூட்டிட்டு  போயிருங்க“ என்று  சுவரில் மாட்டப்பட்டிருந்த தாத்தாவின் படத்தைப் பார்த்தவாறே அரற்ற ஆரம்பித்தாள். ரூமில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏதோ சண்டையென்று தெரிந்தது. கொஞ்ச நேரம் இருக்கும். தடாலென்று கதவை திறந்து அப்பா சிவந்த முகத்துடன் வெளியேறி விட்டார். அறையின் உள்ளே துணி அலமாரிக்கு பக்கத்து மூலையில் அம்மா தன முழங்கால் இரண்டையும் கட்டிக்கொண்டு சுருண்டு கிடந்தாள். முடியெல்லாம் கலைந்து முகத்தின்மேல் விழுந்திருந்தது. இடது கண்ணிற்கு கீழே கன்னம் கருநீல வண்ணத்தில் ரத்தம் கட்டிப்போய் வீங்கியிருந்தது. உடைந்து சிதறிக் கிடந்த அம்மாவுடைய ரேடியோவின் இரண்டு பேட்டரிகளில் ஒன்றை மட்டுமே அம்மாவிடம் அப்போது பொறுக்கிக்கொடுத்தேன். அம்மா அழவில்லை. பொதுவாக அம்மா எதற்காகவும் கண்கலங்கியோ அழுதோ நான் பார்த்ததில்லை. அன்று நெடுநேரம் என்னையே வெறித்துப் பார்த்துவிட்டு அம்மா என்னைக் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்து என் மடியிலேயே படுத்துக்கொண்டாள்.

அப்பாவின்மேல் கோபமாய் வந்தது. அவர் எப்போதும் அம்மாவின்  அறைக்குள் வரமாட்டார். அது எங்களுடையது மட்டுமே. வீட்டில்  சாப்பிடுவதும் அபூர்வம். ஹாலிலுள்ள மூங்கில் சோபாவின் மேல்தான் தூங்குவார். அம்மாவுடன் சகஜமாகப் பேசியோ சிரித்தோ நான் பார்த்ததில்லை. அவரே சமயங்களில் ஏதாவது கேட்டால்கூட அம்மா முகம் கொடுக்கமாட்டாள். வேலை முடிந்து யூனியன் ஆபீஸ், இல்லாவிட்டால் மாரியம்மன் கோயில் அலுவலகத்தில் மட்டுமே அப்பாவை பிடிக்க முடியும். பாட்டி காலில் அடிபட்டு வலியில் துடித்துக்கொண்டிருந்த ஒரு சமயம், அப்பாவைக் கூப்பிட யூனியன் ஆபீசுக்கு ஒரே ஒரு முறை போயிருக்கிறேன். சின்ன ரூம்தான். அப்பாவைத் தவிர ஓரிருவர் மட்டுமே அங்கிருந்தார்கள். வானம்பாடி, ராணிமுத்து, அகிலன், மு.வரதராசன் என்று  பத்திரிகைகளும் கொஞ்சம் புத்தகங்களும் இரைந்து கிடந்தன. சுவரில்  தாடி வைத்திருந்த மனிதர் ஒருவரின் படம் மாட்டப்பட்டு இருந்தது. ஆதி.குமணன் என்று யாரோ ஒருவருடைய பெயரை பக்கத்தில்  நின்று கொண்டிருந்தவரிடம் அப்பா சொல்லிக்கொண்டிருந்தார். தமிழ் நேசனோ அல்லது சாமிவேலுவோ, இந்த இருவரில் யாரோ ஒருவரிடம்  ஆதி.குமணன் என்பவர் வீரமாக சண்டை போடுவதைப்பற்றி அப்பா பேசுவதைக் கேட்க உற்சாகமாக இருந்தது. அக்கினி என்பவர் அவருக்கு இடதுகை போன்றவர் என்றும், ஓர் அண்ணன்கூட அவருக்கு உண்டென்று அப்பா ஒல்லியாய் இருந்த ஒருவரிடம் அன்று சொல்லக்கேட்டேன். இப்படிப் பல நுணுக்கமான  தகவல்களை சேகரித்து வைத்திருப்பதாலேயே எஸ்டேட்டில் சிலபேர் அப்பாவை  ‘‘வாத்தியாரே…‘’ என்றுகூட கூப்பிடுவார்கள். அப்பாவுக்கு  எல்லாம் தெரியும். காட்டுக்கு வேட்டைக்குப் போனால் என்னவெல்லாம் செய்யக்கூடாது, மீன் தூண்டிலில் புழுவை எப்படி சொருகுவது என சகல விஷயங்களைப் பற்றி என்ன சந்தேகம் கேட்டாலும் அப்பாவிடம் பதில் இருக்கும். ‘’நீயே நீச்சலடிச்சு மேல வா‘ ’என்று சொல்லியபடியே அப்பா என்னை எஸ்டேட்டுக்குப் பக்கத்திலுள்ள லெம்பத்தில் கூட ஒருமுறை தூக்கிப் போட்டிருக்கிறார். எனக்கு பிடித்த தலைவர் என்னும் தலைப்பில் ஐந்தாம் வகுப்புக்கான தமிழ் கட்டுரைப்போட்டிக்கு சம்பந்தன் என்பவர் பற்றிய கட்டுரையொன்றை அப்பாதான் எழுதிக் கொடுத்தார்.

தமிழ் டீச்சர் ராசம்மா கூட நாள்தோறும் பத்திரிகை படிப்பதும், டிவியில் செய்தி கேட்பதும் பொதுஅறிவை வளர்க்குமென்று சொல்வார். அவருடைய வீட்டில் டிவி இருக்கிறதென்று நினைக்கிறேன். ஆனால் அவரின் வீடு பக்கத்து டவுனில் இருந்தது. முனியாண்டி மாமாவின் வீடு பக்கத்து வீடாகவிருந்ததும், அவருடைய வீட்டில் டிவி இருந்ததும் அப்பாவுக்கு வசதியாக இருந்ததென நினைக்கிறேன். ராத்திரி எட்டு மணிக்கு ஆர்டிஎம்மில் தமிழ் செய்தி போடுவார்கள். தோட்டத்து வேலை மூன்று மணிக்கெல்லாம் முடிந்துவிடும். அப்பா ஆறுமணி போலத்தான் வீட்டுக்கு வருவார். ஏழு மணிக்கெல்லாம் குளித்து முடித்து எங்கள் வீட்டிற்கும் முனியாண்டி மாமாவின் வீட்டிற்கும்  நடுவேயுள்ள மூங்கில் தடுப்பைத் திறந்து மாமாவின் வீட்டுக்கு அப்பா கிளம்பும்போது மணி எட்டாவதற்கு இன்னும் நாலைந்து நிமிடங்களே மிச்சம் இருக்கும். சரியாக எட்டு மணிக்கு செய்திகள் ஆரம்பிக்கும்.

முனியாண்டி மாமாவின் வீட்டு டிவி கருப்பு வெள்ளையிலானது. வீட்டு ஹாலில் நாடு நாயகமாக மகாராஜாபோல் அது உட்கார்ந்திருக்கும். பால்வீதி போல அதை மையமாக வைத்தே அந்த வீடு சுற்றிக்கொண்டு இருப்பது போன்றதொரு பிரமை எனக்குண்டு. பெட்டி வடிவத்தில் மரத்திலான கதவு போன்ற ஒன்றைத் திறந்தால் உள்ளே டிவி இருக்கும். வலது பக்கத்தின் கீழே பிலிப்ஸ் என்று எழுதி ஒட்டியிருப்பார்கள். அதன் இடது பக்கத்திலுள்ள ஆறு பொத்தான்களில் கடைசியில் உள்ள பொத்தானை அழுத்தினால் டிவியில் படம் வரும். நாலாவது பொத்தானை அமுக்கினால் வேறுவேறு படங்கள் ஓடும். டிவியின் மேலே பிளாஸ்டிக் ரோஜாப்பூக்கள் அடுக்கப்பட்ட, காது ஒன்று உடைந்துபோன ஒரு பூஜாடி ரொம்ப நாளாய் இருக்கிறது. வாரம் ஒரு முறையாவது அந்தப் பூஜாடியை லெச்சுமி ஆன்ட்டி தூசு தட்டி விடுவார். டிவி வைக்கும் மேசையின் மேல் வானம்பாடி பத்திரிக்கையும் ராணிமுத்துவும் அடுக்கி வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். வானம்பாடிக்கு கவிதை ஒன்றை எழுதி அனுப்பியிருப்பதாக ஆன்ட்டி ஒருமுறை என்னிடம் சொன்னார். அப்பாவுக்கும் பாரதியார் கவிதைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும்.

ஒரு புதன்கிழமை என்று நினைக்கிறேன். பார்வதி டீச்சர் இங்கிலீஷ் பாடம்  நடத்திக்கொண்டிருந்தார். ராசம்மா டீச்சர் கதவைத்தட்டி உள்ளே வந்து அவரிடம் எதோ சொல்ல, பார்வதி டீச்சர் “செல்வம்…” என்று என்னை அருகில் அழைத்தார். நான் எழுந்துபோய் அவர் பக்கத்தில் நின்று கொண்டேன். அவரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். பெரிய பொட்டு வைத்து கருப்பாக அழகாக இருப்பார். பள்ளிக்கூட கழிவறையில் கனகசபை ஒருமுறை, “பார்வதி டீச்சர் காதல் சுந்தரம் சார் ” என்று பென்சிலால்  எழுதியதை, நான் டீச்சரிடம் சொன்னதிலிருந்து என்னைப் பார்க்கும்போதெல்லாம் கண்களை அகல விரித்து புருவம் தூக்கி அழகாக சிரிப்பார்.

அன்று சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட்டேன். ஆறுமுகம் சார்தான் அவருடைய நீலநிற  ஹோண்டா 70 மோட்டார் சைக்கிளில் என்னை பின்னால் உட்காரவைத்து வீட்டில் கொண்டுவந்து விட்டார். வீட்டு முன்னால் அரச மரத்திலிருந்து வீடுவரை யாரோ சில பேர் டெண்டு போட்டுக்கொண்டிருந்தார்கள். நாலைந்து மேசை நாற்காலிகளும், ஒன்றின்மேல் வறக்கோப்பியும் தாவா ரொட்டியும் வைக்கப்பட்டு இருந்தன. முனியாண்டி மாமா எப்போதும்போல் ஒரு தூணில் சாய்ந்தபடி லேசான தள்ளாட்டத்துடன் தனியாக நின்று கொண்டிருந்தார். எஸ்டேட் கங்காணியும் அப்பாவின் யூனியன் கூட்டாளிகள் சிலரும் சோம்பலாக, மெல்லிய குரலில் பேசியபடி ஆங்காங்கே நின்றுகொண்டு இருந்தார்கள். “மருந்தெல்லாம் ஒழுங்கா கரெக்டா அடிக்கிறேன்னு சொன்னீங்களேடா… அப்புறம் பாம்பு எப்படி அங்கே வந்துச்சு‘ ’என்று கங்காணி யாரையோ பார்த்து அதட்டிக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் பாட்டி அழுதுகொண்டே ‘’செல்லம்‘’ என்றபடி கட்டிப்பிடித்துக் கொண்டாள். அப்பாவை எங்கும் காணவில்லை. அம்மாவைத் தேடிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தபோது, குசினியில் நிழலாடுவது தெரிந்தது. அம்மாவாகத்தான் இருக்கும். ஹாலில் சாமி மேடையின் அகல் விளக்கு தரையில் வைக்கப்பட்டு எரிந்து  கொண்டிருந்தது. சாமி படக் காலெண்டர், தாத்தாவின் படத்தையெல்லாம் யாரோ அம்மாவுடைய பழைய சேலைகளைப் போட்டு மூடி வைத்திருந்தார்கள்.

லேசாகப் பசித்தது. தாவா ரொட்டியை சாப்பிடலாமாவென்று யோசித்துக்கொண்டிருந்த போதுதான் அதைப் பார்த்தேன். தூரத்தில் வெள்ளை நிற வேன் ஒன்று மஞ்சள் கலரில் தூசைக் கிளப்பியபடி வந்து கொண்டிருந்தது. திடீரென்று வீட்டில் எல்லோரும் பரபரப்பாகி விட்டார்கள். ‘’டேய்… வீட்டுக்குள்ளே போய் பாயை விரி… பொட்டியிலதான வரும்…. குளுப்பாட்ட தண்ணிய ரெடி பண்ணு… நாலு பேர் தயாரா இருங்கப்பா… பாடிய எறக்கணும்… ‘ ’என்று பலரது குரல்களும் குழப்பமாக கேட்டன. வேன் சரியாக எங்கள் வீட்டு முன்னே நின்றபோதுதான் லெச்சுமி ஆன்ட்டியைப் பார்த்தேன். இதற்காகவே அவருடைய வீட்டின் கதவருகிலேயே நின்று  கொண்டிருந்தாரென நினைக்கிறேன். ஆன்ட்டியை அப்படி ஒரு  அவலட்சணமான கோலத்தில் இதற்குமுன் நான் பார்த்ததே இல்லை. தலையைச் சீவாமல், பூ கூட வைக்காமல் பார்க்க சகிக்கவில்லை. ஆன்ட்டி  அவசரமாக வீட்டை விட்டு அழுதபடியே வெளியே ஓடிவந்து கீழே விழுந்தாள். அப்படிப்பட்ட ஆவேசம் கலந்த அரற்றலை நான் அதற்கு முன்பு கேட்டதே இல்லை

அம்மா திடீரென்று வீட்டிலிருந்து  வெளியே வந்தாள். மகாராணி ஒருத்தி தன் பிரஜைகளுக்கு தரிசனம் கொடுப்பது போலவும், உறைந்து சில்லிட்டு போனதொரு கணத்தை சிலிர்ப்பூட்டி உயிர்ப்பிக்க வந்த தேவதை போன்றதொரு பார்வையோடும், உலகனைத்தையும் தன் ஒற்றைப் பார்வையால் பரிகசித்து சிரிப்பது போன்ற நடையோடும் அம்மா ஆன்ட்டியை நோக்கி நெருங்கி நடந்தாள். அரற்றிக் கொண்டிருந்த ஆன்ட்டி அம்மாவின் நிழல் தன்மேல் விழுவதை உணர்ந்திருக்க வேண்டும். நிமிர்ந்து பார்த்தார். ‘’அக்கா…என் கொலதெய்வமே…‘’ என்று அம்மாவின் முழங்காலைப் பிடித்தபடி ஈனஸ்வரத்தில் ஏதோ கேவ ஆரம்பித்தார். அம்மா அன்று ரொம்பவும் அழகாகத் தெரிந்தாள். அதே பழைய சேலைதான். ஆன்ட்டிக்கு கூட அம்மாவின் அந்த புளித்த வாசம் பிடித்திருக்கக் கூடும். லேசாய்க் குனிந்து  எப்பொழுதும் என் வகிடைக் கலைத்து விளையாடுவது போலவே ஆன்ட்டியின் தலைமுடியைக் கோதிவிட்ட அம்மா, ஆன்ட்டியை நிமிர்த்தி, அவரின் கையைப் பிடித்துக்கொண்டு, இழுக்காத குறையாய் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

வல்லினம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வென்ற சிறுகதை

 

3 comments for “வலி அறிதல் (முதல் பரிசு)

  1. பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்
    December 4, 2016 at 2:33 pm

    ‘ வலி அறிதல்’ சந்தேகமில்லாமல் நல்ல வார்ப்புத்தான் . கதைசொல்லியாகிய சிறுவன் அப்பாவின் யூனியன் ஆபீஸில் வானம்பாடி பத்திரிகைகளின் பிரதிகளைப்பார்த்ததாக ஞாபகத்துடன் பதிவு செய்கின்றான். வானம்பாடி 1972 இல் நின்றுபோன சஞ்சிகை. அ.பாண்டியன் தன் குறிப்பில் குறிப்பிடுவதுபோன்று அக்காலம் 1980 அல்ல, அதற்கு முன்னதாகவுமிருக்க சந்தர்ப்பமுள்ளது. இன்னும் அவர் சொல்வதுபோல சிறுவயது அனுபவங்களைப் பகிரும் ஒரு குழந்தைமொழியில் படைப்பு நகர்ந்தாலும் தேவதை, பால்வீதிபோன்ற உதாரணங்களுக்கு அவர் வார்த்தைகள் மாறுகையில் அவை அந்நடைக்குக் கொஞ்சம் அதிகந்தான். இக்காலக்குழந்தை இலக்கியங்களுடன் பரிச்சயமான சிறுவர்கள் ஸ்டார் வார்ஸ், பேரண்டம், பருப்பொருள்கள் பற்றிய புரிதல்களுடனிருப்பார்கள். காலம் சிந்தனைகளை மாற்றிவைக்கும். மற்றுபடி அக்கால வாழ்க்கையின் நடைமுறைகள் வீடுகள், டிரான்ஸிஸ்டர் றேடியோ, காஸெட் பிளேயர், பிளாக் அண்ட் வைட் தொலைக்காட்சிகள், அங்கே சேர்ந்துவாழும் பாட்டிமார்கள் மெல்லிய தீற்றலால் அழகாகப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த அம்மா அதிஅற்புதமான பாத்திரம், அவரது புரிந்துணர்வு சகிப்புத்தன்மை சாதாரண அம்மாக்கள் எல்லோருக்கும் வந்துவிடாது. செல்வன் காசிலிங்கம் தொடர்ந்து நிறையப் படைக்கவேண்டும். வாழ்த்தும் பாராட்டும் அவருக்கு.

  2. Kannan Subramanian
    December 14, 2016 at 1:24 am

    செறிவுள்ள கதை. கம்பீரமான நடை. கதையின் தாக்கம் என்னுள் அதிகம் இருந்தது.
    எஸ்.கண்ணன், பெங்களூர்.

  3. ஸ்ரீவிஜி
    February 21, 2017 at 5:06 pm

    சிறப்பான சிறுகதை எழுத்து நடை என்னை வியப்பில் ஆழ்த்தியது. அதிகம் பேசப்படாத ஒரு எழுத்தாளரின் எழுத்து இவ்வளவு சிறப்பானதாக இருக்குமென்று நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. வாசிப்பில் இருந்து மனதை எடுக்க முடியாத அளவிற்கு எழுத்தில் கட்டிப்போட்டு விட்டார் கதாசிரியர். கதை முடிந்த பின்பும் நம்மை கதையோடு பயணிக்கவைத்துள்ளார். கதையைச் சொல்லவில்லை. காட்டியுள்ளார். A1 செல்வம். சூப்பர்
    வல்லினத்தின் தேர்வு என்றும் சோடை போகாது என்பதற்கு இதுவே சிறந்த சான்று.

    சபாஷ் வல்லினம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...