நெற்றியின் வியர்வை உதட்டை நெருங்க, முதுகிலுள்ள பள்ளிப்பை கனத்தினால் கால்கள் வலித்தன. இதயத்துடிப்பு சற்று அதிகமாக இருந்தாலும் ஏனோ கால்கள் அந்த இடத்தைவிட்டு நகர சம்மதிக்கவில்லை. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தேன். வழக்கம்போல் ஏங்கி இருந்த கண்கள் கண்ணாடிப்பேழையை மட்டும் உற்று பார்த்துக் கொண்டிருந்தன.
மரியாதை தெரியாத வெள்ளைத்தோல் ஆடவன் ஒருவன், அவன் காரசாரமான கையால் என் வலுவில்லா உடலைத் தள்ளிவிட்டான். எனக்கு அவனைத் தெரியும். நிமிர்ந்து பார்க்கவில்லை. பயம். நுனிக்கண்ணால் சுற்றிப் பார்த்தபின்தான் தெரிந்தது நான் என்னை அறியாமலேயே அந்தக் கடைக்குள் நுனழந்திருந்தேன். இரண்டடி தொலைவில் அந்த கண்ணாடிப் பேழை. இருந்தும் என்னால் பார்க்கமட்டும்தான் முடிந்தது.
‘ஏய்…லூஸு… எத்தன வாட்டி சொன்னாலும் விளங்காதா உனக்கு? எப்பப்பாரு இங்கே வேடிக்கைப் பார்க்க வந்து நின்னு அசிங்கப்படுத்திகிட்டு… உன்ன பார்த்தா வர கஸ்ட்டமர் எல்லாம் என் கடைய பத்தி என்ன நெனைப்பாங்கே ? நீயும் அப்படித்தான், உங்க அக்கா ஒருத்தி இருந்தாளே அவளும் அப்படித்தான்…உயிர வாங்காத…போயிரு… இன்னொரு தடவ உன்ன இங்க பாத்தேன்… நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ஆமா…’
கை ஓய்வெடுக்க, சீன முதலாளியின் வாய் இப்பொழுது வேலையை ஆரம்பிக்கிறது. அரை குறை மலாயில்தான் திட்டுவார். தெரிஞ்ச ஓரிரு ஆங்கில வார்த்தைகளை அங்கே இங்கே சேர்த்துக்கொள்வார். பக்கத்துக் கடை முதலாளிக்கு விளங்க வேண்டும் என அவ்வளவு சத்தமாகத் திட்டுகிறாரோ எனத்தோன்றும். இந்த மொழிக்கலப்பினாலேயே சில வார்த்தைகள் பிடிபடுவதில்லை. அதோடு வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு மாதிரி திட்டுகிறார். பிறகு எப்படிப் புரியும்?
‘தி குக்கிங் வேர்ல்ட்’
பெயரைபோலவே கடையும் ரொம்ப பிரம்மாண்டமாக இருக்கும். அந்தப் பிரம்மாண்டக் கடையைப் பார்க்கும்போதெல்லாம் என் வாய்க்குள் ஈ புகுந்து, கண்கள் இரண்டும் பெரிதாகி வெளிய விழுந்துவிடுமாம். அக்காள் அடிக்கடி கிண்டல் செய்வாள். ஹா…அக்காள். எனக்கென பேச அவள் ஒருத்தி இருந்தாள். இரண்டு பேருக்குமே உலகத்திலேயே பிடித்த ஒரே இடம் இதுதான். இந்தக் கடைக்கு ஏதோ ஒரு மாய சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை எங்களுக்கு. பார்க்க வருபவர்கள் அனைவரையும் மூக்கு மேல் என்ன, தலை உச்சியின் மேல் விரல் வைக்க செய்யும். பெரிய பெரிய விளக்குகள், அழகான சீலிங், பளிங்குக் கல் என எல்லாமே பிரமாதமாக இருக்கும். வார இறுதி வந்துவிட்டால் போதும், பெரும் கூட்டம் திரளும். கோட் அணிந்த சமையல் கலைஞர்கள் எல்லாம் கலர் கலர் கார்களிலே வந்து இறங்குவார்கள். சாப்பாடு விலையாக இருந்தாலும்கூட அந்தச் சுவையை ருசிக்க வரும் கூட்டம் இன்னொரு பக்கம். அக்காள் சொல்லியிருக்கிறாள்.
கடையில் இருந்து விரட்டப்படுவது எனக்கு ஒன்றும் புதிது அல்ல. என் அழுக்குக் காலணிகள் பலமுறை அந்தக் கடையின் வாசல் கார்ப்பெட்டில் தடம் வைத்து சென்றிருக்கின்றன. முன்பு அவருக்கு அதிக கோபம் வரும். நானும் அக்காளும் கொஞ்ச நேரம் கடைமுன் நின்றுவிடக்கூடாது. உடனே அந்த சுற்றும் நாற்காலியிலிருந்து வெளியே வந்து புராணத்தை ஆரம்பித்துவிடுவார். அதில் என்னமோ சந்தோசம் இருக்கிறது போல அவருக்கு. இல்லையென்றால் அந்தப் பெரிய உடம்பு எதற்கு இத்தனை தடவை கஷ்டப்பட்டு எழுந்திருக்க வேண்டும்? அவர் முக்கி எழுவதற்குள் நாங்களோ ஓடி வீட்டிற்கே சென்றிருப்போம். இன்னமும் புலம்பிக் கொண்டிருப்பதாக வீடு வந்த பிறகும் தோன்றும். அரை குறை இங்கிலிஷ் கலந்த புதிய மலாய் காதுகளில் கேட்கும்.
என் சிறிய உலகம் அந்தச் சின்ன கண்ணாடிப் பேழையினுள் அடங்கியது. அதனுள் ஒரு வெள்ளைத் தொப்பி. வழக்கமாக எல்லா சமையல்காரர்களும் அணியும் தொப்பிதான். ஆனால் எனக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல். தொப்பியை இதுவரை அணிந்ததில்லை. இருந்தும் அது என் தலைக்கு மிகச் சரியான அளவில் இருப்பதுபோல ஓர் உணர்வு. அழகிய வெண்மை நிறம். மென்மையாக இருக்கும் என்று அக்கா சொல்லுவாள். ஒவ்வொரு தடவையும் அந்தத் தொப்பியை பார்க்கும் பொழுது என் முகம் மலர்ந்து புன்சிரிப்பதை உணருவேன்.
கையை தூக்கி மணி பார்த்தேன். வழக்கம்போல அம்மாவர இன்னும் நேரம் இருந்தது. ஐஸ் பெட்டியைத் திறந்தால் உள்ளே தக்காளி மட்டும் மிச்சம். பிறகென்ன, வீட்டு பின்புறம் சென்று கைப்பிடி அளவு கீரை எடுத்து வந்தேன். ஒரு கையில் சட்டி, மறு கையில் தக்காளி. கட்டிலின் அடியில் கைவிட்டு தடவினேன். ஏறக்குறைய ஐம்பது சமையல் புத்தகங்கள் இருக்கும். இதில் சில நண்பர்களின் வீட்டிலிருந்து எடுத்து வந்தது. இன்னும் சில பள்ளிக்கு கொடுக்கும் பணத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்து நானும் அக்காவும் வாங்கியது. ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம் எடுத்து பார்ப்பேன். எனக்கு அதிலுள்ள படங்களைப் பார்க்க மிகவும் பிடிக்கும். தடவியதில் கையில் கிடைத்தது ஒரு வடஇந்திய சமையல் புத்தகக் குறிப்பு. இறையை கும்பிட்டு புத்தகம் திறந்து பக்கம் திருப்பினேன். இன்றைய சமையல் பெயர்…தக்காளி குருமா.
சூடான சட்டியில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி, சீரகம், சோம்பு, வெங்காயம், பட்டைமிளகாய் போட்டு இலேசான நெருப்பில் வதக்கவிட்டேன். மெல்ல வாசம் மூக்கை தொட்டது. ஆஹா…இப்போது கொஞ்சம் பூண்டு சேர்த்துக்கொள்ளலாம். அடுத்து, வெட்டி வைத்த தக்காளிகளை உள்ளே போட்டு பிரட்ட… அருமை… பிரமாதம்… சுமார் ஐந்து நிமிடங்கள் கழித்து, அரைத்த தேங்காயையும் குருமாவையும் சேர்த்துக்கொண்டேன். இன்னொரு பதினைந்து நிமிடங்கள் பொறுமை கடைபிடிக்க, இறுதியாக மல்லித்தழையைத் தூவிவிட்டு இறக்கினேன். வாசம் என்னதான் என்னை இழுத்தாலும், ஒரு ஐந்து நிமிடம் சூட்டைத் தணியவிடுவது மிக அவசியமாகப்பட்டது. இதை அக்கா செய்யும் இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என யோசித்தபோது வாயில் எச்சில் ஊறியது. தக்காளி குருமாவை எடுத்து வாயில் வைக்க கரண்டியை எடுத்தேன்.
* * *
சுத்தமான வெள்ளைத்துணி. அதை அந்த நீள மேசையில் விரிக்க வேலை ஆட்கள் இருந்தனர். அவர்களைப் பார்ப்பதற்கு ஏதோ பிசினஸ் செய்யும் நபர்கள் போலத்தோன்றுவது இயல்பு. அந்த மேசையை உற்றுக் கவனித்தால்… அப்பப்பா… என்ன வேலைப்பாடு. நுணுக்கமாக செதுக்கப்பட்டிருந்தது. பளபளக்கும் கரண்டிகளும் உணவுப் பாத்திரங்களும் சரியாக இடைவெளி அளந்து மேசையில் அடுக்கப்பட்டிருந்தது. நாற்காலிகளும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்ய ஒருவர் இருப்பார். அவர் மட்டும் வேறு நிறத்தில் சுய்ட் அணிந்திருப்பார். அவரின் தலைகலைந்து நான் பார்த்ததில்லை. அங்கு நடந்தால் தரையில் நடப்பதுபோலவே தெரியாது. கார்பெட் அத்தனை மென்மை. எனக்கும் நான் இப்போது இருக்கும் வாடகை வீட்டில் அந்த மாதிரி ஒன்று வாங்கிப் போடவேண்டும் என்ற ஆசை வந்தது. இடது புறம் உள்ள சுவரில் ஓவியங்கள் மாட்டி வைக்கப்பட்டிருக்கும். அதில் ஏனோ மனிதர்களோ கட்டிடமோ மிருகமோ இல்லை. சில வர்ணங்களை கொண்ட கிறுக்கல்கள். நான் இரண்டு மூன்று வயதில் இப்படித்தான் வரைத்திருப்பேன் என்ற எண்ணம். ஆனால் இதனை இப்போது பெரியவர்கள் மாதக்கணக்கில் உட்கார்ந்து கிறுக்கிறார்கள். அதை லட்சங்கள் கொடுத்து வாங்கும் இன்னும் சிலபேர். புரியவில்லை. வலதுபுறம் கண்ணாடிகள் தெரிந்தன. ஆட்கள் கடைக்கு வருகிறார்களோ இல்லையோ, அந்தக் கண்ணாடியை தொடுகிறார்களோ இல்லையோ, அவை ஒவ்வொரு நாளும் துடைக்கப்படுகின்றன. தலையை கொஞ்சம் தூக்கிப் பார்த்தால்… இரட்டைக் கோபுரம் கம்பீரமாக நின்றது. ஒவ்வொரு மாலையிலும் சூரியன் மறையும் அழகை கொஞ்சநேரம் ரசித்து விட்டு மீண்டும் சமயலறைக்குச் சென்று தொப்பியை மாட்டிக்கொள்வேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஐஸ்வரி.
***
அக்காளிடமிருந்து மூன்று மாதங்களுக்கு முன் வந்த கடிதம் அது. இதுவரை ஒன்றுதான் வந்திருக்கிறது. என் கனவைப்போல அதுவும் கட்டிலின் அடியில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்துகொள்ளும் நிலை. கோலாலம்பூரில் உள்ள ஒரு உயர்தர உணவகத்தில் பணிபுரிவதாக எழுதியிருந்தாள். ஆனால், விலாசம் எதுவும் குறிப்பிடவில்லை. அவளுக்கு அங்கே இருக்க ரொம்பப் பிடித்திருக்கிறது. அந்த உணவகத்தில் சமையற்கலைஞராக வேண்டுமென்று அவள் கனவாம். இப்போதைக்கு மேசை துடைப்பவளாக பணியாற்றுகிறாளாம். ஆனால் அம்மாபோல் இல்லை என்றாள். அதோடு என்னை விட்டுப் பிரிந்திருப்பதால் கொஞ்சம் கவலையாக இருப்பதாக எழுதியிருந்தாள்.
அக்காள்… என் கூட நின்ற ஒரே துணை அவள். அக்காவுக்கும் சமையல் என்றால் உயிர். சின்ன வயதில் எல்லோரும் பட்டம்விட்டு விளையாடும்போது அவளும் நானும் அம்மா சமைத்துவிட்டு கொடுக்கும் மிச்சம் மீதியை வைத்து விளையாடுவோம். அவளிடமிருந்துதான் நான் சமையல் செய்ய கற்றுக்கொண்டேன். சமையல் தொப்பியின் மீதுள்ள பைத்தியமும் அவளால்தான். பழகப்பழக புதிய சாப்பாட்டு ரெசிப்பிக்களை உருவாக்கியிருக்கிறோம். அவள்தான் செய்தாள். நான் எழுத உதவினேன். ஆனால் இப்போது நானே உருவாக்கிய ரெஸிபிகள் நிறைய உள்ளது. வாய்ப்பு மட்டுமே பாக்கி. புத்தகத்தில் படித்திருக்கிறேன், வாய்ப்பு வேண்டுமென கதவைத் தட்டக்கூடாதாம்; எட்டி உதைத்து நான் வந்திருக்கிறேன் என்று சொல்லவேண்டுமாம்… அதைத்தான் அக்காள் செய்தாளோ என்னவோ. கோவக்காரிதான். இருந்தாலும் அவளைப்போல தைரியமாக கனவு காணும் ஒருவரை நான் இதுவரை கண்டதில்லை. வயதில் எங்களுக்கு ஒரு வருடம் வித்தியாசம். அதனாலோ என்னவோ நாங்கள் மிக நெருக்கமாகவே வளர்ந்தோம். அவளுக்கு பிடித்ததெல்லாம் எனக்கும் பிடித்திருந்தது. முக்கியமாக… சமையல், அந்தச் சீனனின் கடை, தொப்பி.
அப்பா மட்டும் அன்று அப்படி செய்யாமல் இருந்திருந்தால் நிச்சயம் அக்கா ஓடிப்போய் சமையல் செய்யவேண்டிய தேவை இருந்திருக்காது. அவள் இன்னமும் என்னோடு இருந்திருப்பாள்.
அம்மாவின் சப்பாத்துச் சத்தம் கேட்டது. கால் நுனியிலிருந்து தலைமுடிவரை நடுக்கம். அம்மா நல்லவர்தான். ஏனோ பல வருடங்களுக்கு முன் அப்பா அவரை விட்டுவிட்டு போயிட்டார். காரணம் தெரியாது. அம்மா சொன்னதும் இல்லை. அதுவரை வீட்டில் அப்பா மட்டும்தான் வேலைக்குச் சென்று வீட்டுச் செலவுகளை பார்த்துக்கொண்டார். அம்மா அழுக்காக இருந்து நாங்கள் பார்த்ததில்லை. எப்போதும் குளித்து சுத்தமாகவே காட்சியளிப்பார். எங்களையும் அப்பாவையும் கவனித்துக் கொள்வதுதான் அவர் முழுநேர வேலையாக இருந்தது. அப்பா வீட்டை விட்டு போனபிறகு அம்மா எங்களுக்காக வேலை செய்யவேண்டிய சூழ்நிலை. முறையான படிப்பு ஏதும் இல்லாததால் எங்கள் மூவருக்கும் கொஞ்சம் கடினமான காலம் அது. தெரிந்த நண்பர் ஒருவர் அம்மாவை இந்திய உணவகம் ஒன்றில் சமையல்காரராகச் சேர்த்துக்கொண்டார். சமையல்காரர் என்றால் மேசையைத் துடைத்து எச்சில் மங்குகளை கழுவி அதோடு சேர்த்தே சமையலையும் கவனித்துக்கொண்டார். காலையில் ஏழு மணிக்கெல்லாம் கடையில் இருப்பார் அம்மா. வருவதற்கு இரவு ஆகிவிடும். வரும்போது கடையில் இருந்து சாப்பாட்டைப் பொட்டலம் கட்டி கொண்டுவருவார். அம்மா உடனே சாப்பிட மாட்டார். கைகளைக் கழுவிக்கொண்டே இருப்பார். ஏதேதோ நினைத்து குமட்டுவார். ஊரில் அனைவரது எச்சிலும் அவர் கையில் இருப்பதாகப் புலம்புவார். பெருநாள் வாரங்களில் கூட வேலை செய்வார். இருந்தும் சம்பளம் குறைவாகத்தான் இருந்தது. அம்மாவுக்கு சமையல் மீதுள்ள வெறுப்பு இப்படித்தான் தொடங்கியது. அப்பாவின்மேல் உள்ள கோபத்தையும் வேதனையையும் அம்மா சமையல் மூலம் மறுவுருவம் கொடுத்தாள். இதற்குமுன் எங்களை சமைக்க ஊக்குவித்த அதே அம்மா இப்போது நாங்கள் சமையல் செய்தாலே கத்த ஆரம்பித்தாள். அக்கா சமைக்கிறாள் என்று தெரிந்தால் அவ்வளவுதான். பல சட்டிகள் இரண்டாகிவிடும். ஆனால் அக்காவால் சமையலை விட முடியவில்லை.
* * *
அம்மாவின் சப்பாத்துச் சத்தம் இப்போது இன்னும் வேகமாகக் கேட்டது. விறுவிறுவென பாத்திரங்களை எடுத்து ஒளித்து வைத்து சமைத்த சுவடு தெரியாமல் சுத்தம் செய்தேன். வழக்கம்போல் என் சமையல் குப்பைக்கு போனது. பொருள்கள் எல்லாம் அந்தப் பழைய அலமாரியில் திணிக்கப்பட்டது. முன்பென்றால் அக்காளும் இருப்பாள். இருவரும் ‘டக்’என சுத்தம் செய்து விடுவோம் என அப்போது தோன்றியது.
வல்லினம் சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதை
அருமையான சிறுகதை,அற்புதமான சிந்தனை!!!
அருமை ஐஸ்வரி. வாழ்த்துகள்
“வாய்ப்பு வேண்டுமென கதவைத் தட்டக்கூடாதாம்; எட்டி உதைத்து நான் வந்திருக்கிறேன் என்று சொல்ல வேண்டுமாம்…”
இந்தச் சின்ன வயதில் எத்தனை உயர்வான வாழ்வுச் சிந்தனை!
கோம்ஸ் பாரதி கணபதி
??
Gomes Barathi Ganapathi
?…..865.850.1913
Oak Ridge TN USA