குளத்தில் முதலைகள் (மூன்றாவது பரிசு)

alagan-1

மதியழகன்  முனியாண்டி

நடு இரவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது காலம். சாலை ஓரத்தில் தெரு விளக்கின் கீழ் இரு மோட்டார் சைக்கிள்கள் நின்றுகொண்டிருந்தன. அந்த மோட்டார் சைக்கிளில் 30 வயது எட்டி இருக்கும் இரு முரட்டு ஆசாமிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது பேச்சின் எந்த வார்த்தையும் ஒழுக்கம் நிறைந்த மனிதர்களாகக் காட்டவில்லை.

அந்த இரண்டு பேரில், ஒருவனின் போன் அலறுகிறது. அலறுகிறது என்றால் இவர்களை அழைக்கும் நபர் அலறுகிறார். போனை எடுக்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டே இருக்கும்போது, போன் அலறுவது நின்று விடுகிறது. இருவரும் தங்களை கலவரத்தோடு பார்த்துக் கொள்கிறார்கள். மீண்டும் அலறல். வேறு வழி இல்லை. பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். போனை எடுக்கிறான்.

“அவன் கிடைச்சானா இல்லையா?”

“இல்லை”

“காசு கட்டி 15 நாள் ஆச்சு. ஆளை காணோம். நீங்கள் எல்லாம் என்ன வட்டி கொலேக்டர்? ஒருத்தனை பதினைந்து நாளா கண்டு பிடிக்க முடியலைனா போய் சாவுங்கடா. இன்னைக்கு ராத்திரிக்குள்ள அவன் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு தூக்கிட்டு வறீங்க. இல்ல செருப்பால அடிப்பேன். நல்லா திங்கறதுக்கு தாண்டா நீங்க எல்லாம் லாயக்கு. சோத்துமாடுங்க. உங்களை நீங்க கேங்ஸ்டர்ஸ்ன்னு வெளியில் சொல்லிக்காதீங்க.”

போன் கட் ஆகிறது.

“கத்துறார் மச்சி”

“அவன் மட்டும் கையில் கிடைச்சான்… செத்தாண்டா. மூஞ்சி மொகறையை எல்லாம் உடைச்சு புடுவேன். வட்டிக்குக் காசு வாங்கும்போது கெஞ்ச வேண்டியது. இப்ப நாம அலைய வேண்டியதா இருக்கு. பதினைந்து நாளா வீட்டுப் பக்கமும் வரலை. வீட்டிலும் யாரும் இல்லை.”

“அவனை பேசி விட்டானே மணி அவனைப் புடிப்போம்.”

“மணியை எங்கே போய் தேடுவது.”

“அந்த கேம் கடையில்தான் இருப்பான். மணியை புடிச்சு உதைக்கிற உதையிலே காசு வாங்குன குமார் வந்து சேரணும்.”

இருவரும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்கள்.

வட்டி வசூலிக்கும் அந்த இரு ஆபிசர்களும் நீண்ட கடை வரிசையில் நடுவில் இருக்கும் ஒரு இரு மாடி கடையின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்துகிறார்கள். கடையின் முகப்பில் ஒரு மாமாக் ஸ்டால் மெலிதான வெளிச்சத்தில் இயங்குகிறது. OPEN என்கிற ஆங்கில எழுத்து LED விளக்கின் பலகையில் ஓடியும், நகர்ந்தும், நடந்தும் பல கோணங்களில் வட்டம் அடித்துக் கொண்டிருந்தது. அந்த மாமாக் கடையின் பின்புறம் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தது. ஒரு சிறு கதவு மட்டும் இரும்பால் செய்யப்பட்டிருந்தது.

அந்தக் கதவை திறந்து ஆபிசர்ஸ் இருவரும் உள்ளே நுழைகிறார்கள். உள்ளே வரிசையாக பல கணினிகள் இருந்தன. பர்மா,kulathil இந்தோனேசியா பணியாளர்கள் கேம் கடை ஊழியர்களாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். பலவித சத்தங்கள் அந்த கணினிகளில் வந்து கொண்டிருந்தன. அந்தக் கடை முழுவதும் நாற்பது கணிணிகளுக்கு மேல் இருக்கும். ஆனால் ஒரு கணிணி கூட காலியாக இல்லை. எல்லோரும் மிகத் தீவிரமாக கணிணியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கடை முழுவதும் சிகரெட்டின் புகை வேறு சூழ்ந்திருந்தது. மிக மெல்லிய வெளிச்சம் கடை முழுவதும் பரவியிருந்தது. கேம் கடை என்பதை மிக எளிமையாக பணம் போட்டு பணம் எடுக்கும் எந்திரம் என்றும் சொல்லலாம். பத்து போட்டு நூறு எடுக்கலாம். ஆயிரம் போட்டு நாசமாய் போகலாம். ஆக மொத்தம் சூதாட்ட மையம்.

ஆபிசர்ஸ் இருவரும் அந்த மெல்லிய வெளிச்சத்தில் மணி என்பவனை தேடிக் கொண்டிருந்தார்கள். ஒரு மூலையில் தனியாக மணி என்பவன் கணினியில் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் அருகில் போனார்கள். ஓங்கி தலையில் ஒரு தட்டு தட்டினார்கள். படார் என மணி கணினியின் திரையில் மோதிக் கொண்டான். தடார் மடார் என சத்தம் கேட்கவும் கடையின் மொத்த கண்களும் அந்த மூவரையும் பார்த்தது. அதற்குள் சீனன் ஒருவன் வேகமாக வந்து, மூவரையும் கடையை விட்டு வெளியே போய் சண்டை போடும்படி கத்தினான்.

மணி மிகவும் பயந்து போய் இருந்தான். தலையில் ஓங்கி தட்டியதில் வெட்கத்தாலும், வலியிலும் கண்கள் கலங்கி, மனதுக்குள் அழ ஆரம்பித்துவிட்டான். இன்று பெருசா ஏதோ நடக்கப்போகிறது என்று அவன் உள்மனது சொல்லியது. ஆபிசர்களில் ஒருவன் மணியின் இடதுகையைப் பிடித்து இறுக்கிக்கொண்டே, வெளியே இழுத்துப்போக முயற்சித்தான். இன்னொரு ஆபிசர் மணியின் சிலுவார் பாக்கெட்டில் கையை விட்டு கைபேசி, மணிபர்ஸ், டாக்சி சாவி எஞ்சியிருந்த சில பத்து வெள்ளி நோட்டுகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டான். வேறு வழி எதுவும் தோன்றாதவனாய் மணி அவர்களுடன் கடையை விட்டு வெளியே போனான். மணிக்கு அழுகை அழுகையாய் வந்தது.

மணிக்கு வயது 45 இருக்கும். டாக்சி ஓட்டுனர். பலராலும் உறிஞ்சி பிழியப்படும் மிக பாவமான தொழில் செய்பவர்கள்தான் இந்த டாக்சி ஓட்டுனர்கள். டாக்சி ஓட்டுனர்களின் கதையை சொல்ல இந்த ஒரு கதை போதாது. மணிக்கு நல்ல திடகாத்திரமான உடம்புதான். பாவம் மனம்தான் பிய்ந்து போயிருந்தது.

குமார் என்கிற தன் இன்னொரு டாக்சி ஓட்டும் நண்பனுக்கு வட்டி தவுக்கே ஒருவரிடம் 1000 வெள்ளி வாங்கிக் கொடுத்திருந்தான். டீல் ரொம்ப சிம்பல்தான். ஆயிரம் வெள்ளி கேட்டால், ஸ்டாம்பிங் ஃபீஸ், புரோஸேஸிங் ஃபீஸ் என வெட்டிக் கொண்டு கையில் 800 வெள்ளி கொடுப்பார்கள். நாள் ஒன்றுக்கு 50 வெள்ளி; முப்பது நாட்களில் திருப்பிக் கட்டவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் கட்டவிவில்லை என்றால் வட்டி குட்டி போட்டுவிடும். குமார் பதினைந்து நாட்கள் கட்டவில்லை. இப்போது மணி மாட்டிக் கொண்டான்.

மணியை அவனுடைய டாக்சியின் அருகில் கீழே உட்கார வைத்திருந்தார்கள். முகத்தில் ரெண்டு மூணு அறை விழுந்திருக்கும். முகம் வீங்கி போயிருந்தது. வலி உடம்பில் இல்லை. அவன் மனதில்.

“உனக்கு ஒரு மணி நேரம் அவகாசம் தருகிறேன். உன் நண்பன் குமார் எங்கிருந்தாலும் இங்கு வர வேண்டும். காசு வாங்கும்போது இருக்கும் அறிவும் ஆர்வமும் அதைத் திருப்பிக் கட்டும் போதும் இருக்க வேண்டும்.” இரு ஆபிசர்ஸில் ஒருவன்.

மணி கெஞ்சுகிறான்.

“நான் வாங்கின பணத்தை முறையாக திருப்பி கட்டிக் கொண்டுதானே வருகிறேன். என் நண்பன் குமார் வாங்கிய பணத்துக்கு என்னை ஏன் அடிக்கிறீர்கள்?”

“நீதானே வாங்கிக் கொடுத்தாய். அப்ப நீதான் பொறுப்பு. இப்போ அவனை இங்கு வரச் சொல்லு.”

“நான் அவனை பார்த்தே பத்து நாள் ஆச்சு. எனக்கே அவன் எங்கு இருக்கான் என்று தெரியல.” என்று சொல்லி முடிப்பதற்குள் இன்னொரு அறை விழுந்தது.

இப்போது அவனை மீறி அழுகை வந்தது. மனைவி குழந்தைகள் முகங்கள் தன் கண் முன்னே வந்து போனது. என்ன ஒரு கேவலமான வாழ்க்கை. இந்த வாழ்க்கை வாழ்வதற்கு பதில் செத்துப் போகலாம் என்று தோன்றியது.

இவர்களை திருப்பி அடிக்கக்கூடிய பலம் அவன் உடம்பில் இருந்தது. ஆனால் மனதில் தைரியம் இல்லை. அவர்களுடன் சண்டை போடலாம். அவர்கள் நாலு குத்து குத்தினால் தன்னால் ரெண்டு குத்தாவது திருப்பிக் குத்த முடியும். ஆனால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும். மணியின் வீடு வட்டி ஆபிசர்ஸ்களுக்கு தெரியும். வீட்டில் வந்து பிரச்சனை செய்வார்கள். மனைவி குழந்தைகளை பயமுறுத்துவார்கள். மேலும் சில ஆபிசர்ஸ்களை அழைத்துக் கொண்டு வந்து அடியை கிளப்பலாம். இதை எல்லாம் யோசித்துக் கொண்டே அமைதியாக தரையில் உட்கார்ந்திருந்தான்.

இனி வாழ்கையில் இரண்டு தப்பு செய்யக்கூடாது என தீர்க்கமான முடிவு எடுத்தான். ஒன்று சூதாடுவதில்லை. அது எந்த ரூபத்தில் எந்த டெக்னோலோஜியில் இருந்தாலும் சரி. இரண்டாவது வட்டிக்குக் கடன் வாங்குவது கூடாது. அதைவிட முக்கியம் யாருக்கும் வட்டிக்கு கடன் வாங்கித் தர உதவி செய்யக்கூடாது. உழைப்பவன் உயர்வான். இனி உழைப்பது மட்டும்தான் குறிக்கோள். டாக்சி ஓட்டி முடித்ததும் நேரே வீட்டுக்கு போய் குடும்பத்தோடு கலந்துவிடுவது.

இப்போதைக்கு இவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என யோசித்தான். வேறு வழியே இல்லை. நண்பனை காட்டிக்கொடுத்துதான் ஆக வேண்டும். கண்களை துடைத்துக் கொண்டான். வட்டி வசூலிக்கும் ஆபிசர்ஸ்களிடம் தன் கைபேசியை கேட்டான். கொடுத்தார்கள். குமார் எண்ணுக்கு டயல் செய்தான். போன் ரிங் ஆனது.

“குமார்! எங்கே இருக்க?”

“ஆத்து ஓரத்து ஐயா கோவிலில் இருக்கேன்.”

“அங்கே என்ன செய்யுற?”

“மனசு சரியில்லை. சும்மா உட்கார்ந்திருக்கேன்.”

“சரி நீ அங்கேயே இரு. நான் வரேன்.”

“வரும்போது சாப்பிட ஏதாவது வாங்கி வர முடியுமா? பசிக்குது. காலையில் இருந்து ஒன்னும் சாப்பிடலை. கையில் சுத்தமாக ஒரு காசு  இல்லை.”

மணிக்கு மனசு வலித்தது. முறையாக பணம் செலுத்தும் தனக்கே நாலு அறை விழுந்ததே. குமாரை என்ன செய்யப் போகிறார்களோ என பயந்தான். அவன் கையில் காசும் இல்லை. பசியில் வேறு இருக்கான். இது போல ஒரு மோசமான இரவை அவன் தன் வாழ்கையில் பார்த்ததே இல்லை. ஆபிசர்ஸ் இருவரையும் அழைத்துக் கொண்டு ஆத்து ஓரத்து அய்யா கோவிலுக்கு போனான்.

மணி டாக்சி ஓட்டிக் கொண்டு முன்னே போனான். ஆபிசர்ஸ் இருவரும் மோட்டார் சைக்கிளில் மணியின் டாக்சியை பின்தொடர்ந்து போனார்கள். மணி பிரதான சாலையை கடந்து ஒரு சிறு மண்சாலை வழியாகப் போய் ஆற்றை ஒட்டி இருக்கும் அய்யா கோவிலுக்குள் நுழைந்தான். ஒரே இருட்டு. மணியின் டாக்சியின் முன்புற விளக்கின் வெளிச்சம் அந்த இடத்தை ஓரளவுக்கு தெளிவாக்கியது.

அது ஒரு சிறு ஐயாகோவில். பலகையால் கட்டப்பட்டு இருந்தது. இடுப்பு உயரத்தில் ஒரு ஐயா சிலை. கழுத்தில் பழைய மாலை காய்ந்து போயிருந்தது. விழித்த பார்வை. கையில் பெரிய அருவா கத்தி. பக்கத்தில் ஒரு சூலம். ஐயா பாதம் அருகில் கின்னஸ் ஸ்டவுட் பீர் போத்தல் ஒன்று. எரிந்து முடிந்து போயிருந்த ஊதுபத்திகள். சூடத் தட்டு. அந்தத் தட்டில் திருநீரும் சிவப்பு குங்குமமும் இருந்தது. ஐயா சிலைக்குப் பின்னால் சாட்டை கயிறு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

குமார் கோவிலில் சிமெண்டு தரையில் படுத்து இருந்தான். மணியின் டாக்சியை பார்த்ததும் தெம்பு வந்தவனாய் எழுந்து உட்கார்ந்தான். பசியால் ரொம்பவும் சோர்ந்து போய் இருந்தான். மணி டாக்சியை நிறுத்திவிட்டு இறங்கி நடந்து குமார் நோக்கி வந்தான். டாக்சி விளக்கின் வெளிச்சம் போய் நிலா வெளிச்சம் படர்ந்திருந்தது.

குமார் மணியின் வெறும் கையை பார்த்தான். ஏமாற்றம் அடைந்தான். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மெதுவாக அந்த ஐயா கோவிலுக்குள் நுழைந்தன. அவர்கள் யார் என்பதை குமார் அறிந்து கொண்டான். மணியைப் பார்த்தான். அந்தப் பார்வையில் ஆயிரம் கேள்விகள் இருந்தது. குமாருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பக்கத்தில் இருக்கும் ஆற்றில் இறங்கி ஓடி மறுமுனையில் ஏறி தப்பித்து ஓடிவிடலாமா? அல்லது எதிரே இருக்கும் ஒத்தையடிப் பாதையில் ஓடி விடலாமா? அல்லது பின்புறம் இருக்கும் புதர் காட்டில் புகுந்து ஓடிவிடலாமா? என பலவாறு யோசித்தான்.

சரி. ஆனது ஆகிவிட்டது. நடப்பது நடக்கட்டும். துணிச்சலோடு நின்றான். ஆபிசர்ஸ் இருவரும் தலைகவசத்தை கழட்டி கொண்டே கெட்ட கெட்ட வார்த்தைகளால் குமாரைத் திட்ட தொடங்கி விட்டார்கள். முகத்தில் ரெண்டு குத்தும் ஓங்கி ஒரு உதையும் விட்டார்கள். பட்டினியோடு இருந்த குமாருக்கு ரொம்பவும் வலித்தது. பேச வார்த்தைகள் வரவில்லை. மணியும் ஐயா சிலையும் மௌனமாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். “திருப்பி கட்ட முடியாதுன்னா என்னாத்துக்கு கடன் வாங்க வேண்டும்?” எனத்தொடங்கி பச்சை பச்சையாக ஏச்சுகள் விழுந்தன.

ஆபிசர்ஸ் தன் முதலாளிக்கு போன் போட்டார்கள்.

“அண்ண. குமாரை கண்டு பிடித்து விட்டேன். என்ன செய்யலாம்?”

“வழக்கம் போல் என்ன செய்வீங்களோ, அதையே செய்து விடுங்கள்.”

போன் கட் ஆனது.

மணியை டாக்சியை எடுத்து கொண்டு கிளம்ப சொன்னார்கள்.

மணி சொன்னான்.

“நான் ஒரு தடவை அண்ணன் கிட்ட பேசிப் பார்க்கிறேன். குமாரின் டாக்சியை கம்பனிகாரன்  இழுத்துக் கொண்டான். வேலை இல்லாமல் இருக்கான்.”

“நீ அந்த பணத்தை திருப்பி செலுத்துவதாக ஜாமின் சொல்லு குமாரை விட்டு விடுகிறோம்.”

மணி ரொம்பவும் யோசித்தான். மணி இரண்டு வட்டி தவுக்கேயிடம் வட்டிக்கு கார்டு வாங்கி இருந்தான். ஒரு கார்டு ஐம்பது வெள்ளி. ரெண்டு கார்டு நூறு வெள்ளி. டாக்சி வாடகை அறுபது வெள்ளி. வீட்டுக்கு அன்றாடம் ஐம்பது வெள்ளி கொடுக்க வேண்டும். பிறகு டாக்சி ரிப்பேர், சாப்பாட்டு செலவு, சிகரெட் செலவு, நான்கு நம்பர் செலவு, கேம் கடை செலவு என அவனுக்கே இழுத்து பறித்து சமாளிக்க முடியாத சூழலில்தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான். குமாருக்கு ஜாமின் கொடுக்கப்போய் தான் ஏதாவது பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது. தன் குடும்ப நிலை என்னாவது என்று யோசித்தான்.

குமாருடைய நிலையை யோசித்துப் பார்த்தான். கேம் கடையில் நிறைய பணத்தை இழந்து விட்டான். அந்த சூழலில் அவனின் டாக்சி வேறு ரிப்பேர் ஆகி விட மூன்றாவதாக ஒரு கார்டு வாங்கியாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டான். நாள் ஒன்றுக்கு 150 வெள்ளி கட்ட வேண்டி இருந்தது. நாள் வட்டி இல்லாமல் மாத வட்டிக்கும் கடன் வாங்கி இருந்தான். டாக்சி வேறு ரிப்பேர் ஆகி செலவு. அவனால் சமாளிக்கவே முடியாமல் போனது. இந்தச் சூழ்நிலையில் டாக்சி வாடகையை முறையாகக் கட்டவில்லை என கம்பனிகாரன் டாக்சியை பிடுங்கிக் கொண்டான். நான்கு திசைகளிலும் இருந்த பூதங்கள் எல்லாம் குமாரை பிடித்து நசுக்கத் தொடங்கியது.

மாத வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் வீட்டில் வந்து கேட்காத கேள்வி எல்லாம் கேட்டுப் போனார்கள். மனைவி குழந்தைகள் எதிரே வந்து கத்தி கலாட்டா செய்ததில் குமார் வெட்கத்தாலும் வேதனையாலும் தடுமாறிப் போயிருந்தான்.

kulathil-2பணம் இல்லாவிட்டால் வீட்டில் பிரச்சனை வரத்தானே செய்யும். வீட்டில் பிரச்சனை சீன பட்டாசு போல் பட பட பட வென வெடிக்க தொடங்கியது. அந்தச் சத்தத்தை அவனால் தாங்க முடியவில்லை. சத்தம் அவன் காதை அடைக்கவே, தன் மனைவியை அடித்து விட்டான். மனைவி நேரே போலிசில் போய் புகார் செய்துவிட்டாள். தன் கணவன் தன்னை அடித்து விட்டதாகவும், ஊர் சுற்றி கடன் வாங்கி வைத்திருப்பதாகவும் இனி தன் கணவனுடன் சேர்ந்து வாழ முடியாது எனவும் கூறினாள். விவாகரத்து வேண்டும் என போலிஸ் நிலையத்தில் கேட்டபோது அவர்கள் அதிர்ந்தனர். போலிஸ் சார்ஜன், “அம்மா! இங்கு நீங்கள் புகார் மட்டும் தான் கொடுக்க முடியும். விவாகரத்து எல்லாம் பதிவு இலாகா அல்லது நீதிமன்றத்தில் தான் வாங்க முடியும்” என்று ஆலோசனை கூறி அனுப்பி வைத்தார்.

குமாருடைய மனைவி தன் குழந்தைகள் இருவரையும் அழைத்து கொண்டு அவர் அம்மா வீட்டுக்கு போய் விட்டார். நாசி லெம்மாக் வியாபாரம் செய்தாவது தன் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு பஸ் ஏறி விட்டார்.

வட்டிக்காரர்கள் துரத்துவதால் குமார் வீட்டுப் பக்கமும் போகவில்லை. குமாரின் நிலையை யோசித்த மணிக்கு அடிவயிறு கலக்கியது. இப்போ ஏதோ மணி சமாளிக்க கூடிய சூழலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். மணியின் மனைவி மூக்கு கண்ணாடி விற்கும் கடையில் வேலை செய்து வருகிறார். அவருக்குச் சம்பளம் மாதம் 1500 வெள்ளி. ஏதோ அவனால் தத்தி தவழ்ந்து தன் குடும்பத்தை மனைவியின் உதவியோடு வளர்க்க முடிகிறது. தன் சக்தியை மீறி கடன் வாங்கி அல்லது அடுத்தவருக்கு ஜாமின் சொல்லி மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்று யோசித்தான்.

இதை எல்லாம் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே ஆபிசர்ஸ் இருவரும் மணியை அங்கிருந்து கிளம்ப சொல்லி மிரட்டினார்கள். மணியும் வேறு வழி இல்லாமல் அங்கிருந்து கிளம்பினான்.

குமாரையும் காப்பாற்றியாக வேண்டும். அதே சமயத்தில் தானும் மாட்டிக் கொள்ளகூடாது. மணி யோசித்து கொண்டே டாக்சி எடுத்துக் கொண்டு கிளம்பினான். கிளம்பியவன் சிறிது தூரம் போனதும், டாக்சியை ஒரு மூலையில் நிறுத்திவிட்டு இறங்கினான். மெதுவாக நடந்து ஐயா கோவிலுக்கு போய், ஆபிசர்ஸ் கண்ணில் படாமல் அங்கிருக்கும் புதர் பக்கம் போய் ஒளிந்து கொண்டான். நிலைமை கை மீறி போனால் என்னா ஆனாலும் உள்ளே நுழைந்து குமாரை காப்பாற்றி ஆக வேண்டும் என உறுதியாக இருந்தான்.

குமார் இனி டாக்சி ஓட்டியோ அல்லது இங்கிருந்து கொண்டு வேறு எதாவது வேலை செய்து கடனை எல்லாம் கட்டி, எல்லா சிக்கலிலும் இருந்து மீண்டு வருவது இயலாத காரியம். மணியின் மச்சான் ஒருவர் சிங்கப்பூரில் கிரேன் ஆப்பரேட்டர் வேலை செய்கிறார். நல்ல சம்பளம். குமாரிடம் E Full லைசன்ஸ் இருக்கிறது. இப்போதைக்கு குமாரை சிங்கப்பூருக்கு அனுப்பி விடுவதுதான் ஒரு வழி என்று தோன்றியது. ஆனால் இந்த இரவு முடிந்து பகல் வர வேண்டும். இந்த ஆபிசர்ஸ்களிடம் இருந்து குமாரைக் காப்பாற்றியாக வேண்டும். யோசித்துக் கொண்டே இருந்தான். சற்று தொலைவில் இருந்தபடியே நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தான்.

குமார் அமைதியாக கோவில் தியாங்யில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான். கோவிலுக்குள் இருக்கும் அய்யா சிலையின் கண்களை பார்த்தான். அய்யா சிலை கண்களும் குமாரை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு முடிவுக்கு வந்தான். வட்டிக்கு கடன் வாங்கி ஆகிவிட்டது. அதை திருப்பிக் கட்டித்தான் ஆக வேண்டும். ஓடிக்கொண்டே இருக்க முடியாது. ஓடி ஒளிவது வேறு சிக்கலில் கொண்டுபோய் விட்டு விடும். நின்று அதை எதிர்கொள்வதுதான் ஒரே வழி. கொன்று விடுவார்களா என்ன? ஆனால் கொல்லத்தான் போகிறார்கள் என்று அவனுக்கு தெரியவில்லை. உயிரை எடுப்பது மட்டும்தான் கொலையா? அதற்கு இணையான காரியமும் கொலைதானே.

குமார் யோசித்தான். அடித்தால் அடி வாங்கி கொள்வோம். வேறு வழி இல்லை. கையில் பணமும் இல்லை. இனி யாரும் கடனும் கொடுக்க மாட்டார்கள். பாசாக் கடையில் வைப்பதற்கும் பொட்டு தங்கம் கிடையாது. தாலி ஒன்றுதான் மிஞ்சி இருக்கிறது. அதுவும் இனி கிடைக்காது. ஒன்று வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் விற்று கடனை அடைக்க வேண்டும். அப்படியும் சில ஆயிரங்கள் தேவைப்படும். டாக்சி ஓட்டுனர்களுக்கு பேங்க் ஸ்டேட்மெண்டும் கிடையாது. வங்கியில் லோனும் போட முடியாது. சரி முடிந்த வரையில் பேசிப் பார்ப்போம். அப்புறம் ஐயா விட்ட வழி. ஐயா சிலையின் கண்களை பார்த்தான். அதே வெறித்த பார்வைதான். ஆனால் அதில் வித்தியாசம் தெரிந்தது.

ஆபிசர்ஸ் இருவரும் குமார் அருகில் வந்தார்கள். அதில் ஒருவன்,

“நீ இப்போ வட்டியோடு எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா?”

“தெரியல”

“ரெண்டாயிரம் வெள்ளி”

“நான் வாங்கியது வெறும் 800 வெள்ளிதான் அதில் 300 வெள்ளி திருப்பி செலுத்திட்டேன். இன்னும் ரெண்டாயிரம் வெள்ளின்னா என்னா செய்றது?”

“முப்பது நாட்களுக்குள் கட்டி முடித்திருந்தால், வெறும் 1500 வெள்ளிதான் ஆகி இருக்கும். நீ 15 நாட்களாக கட்டவில்லை. ஓடி ஒளிந்தும் கொண்டாய். நீயே வந்திருந்தால் பேசி இருக்கலாம். இப்போ நாங்கள் உன்னை தேடி வந்ததால் நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நீ சொல்வதை எல்லாம் எங்களால் கேட்டு கொண்டு இருக்க முடியாது.”

“இப்போ என்னிடம் அவ்ளோ பணம் கிடையாதே!”

“நீ சொல்வதை எல்லாம் கேட்டு கொண்டிருக்க நாங்க ஒன்றும் கேனப்பயல்கள் கிடையாது. உனக்கு ரெண்டு நாள் டைம் தருகிறோம். மொத்தமாக ரெண்டாயிரம் வெள்ளி கொடுத்து, செட்டில் பண்ணிவிட்டு போ.”

“அவ்ளோ பணம் என்னால் ரெண்டு நாளில் ரெடி பண்ணமுடியாது. ப்ளீஸ், எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்கள். நான் சத்தியமாக கொடுத்து விடுவேன். ஐயாசாமி மீது சத்தியமாக சொல்கிறேன்.”

“உன் சத்தியத்தை எல்லாம் தூக்கி குப்பையில் போடு.”

“நீ ஓடி விட்டால் உன்னை எங்கே தேடிக் கண்டுபிடிப்பது. நீ வேலைக்கு ஆக மாட்டாய்.”

“ப்ளீஸ் … நம்புங்க … நான் நிச்சயமாய் உங்க பணத்தை தந்து விடுகிறேன்.”

“சரி. நீ தந்து விடுவாய். நாங்கள் நம்புகிறோம். அப்படி என்றால் ஒரு காரியம் செய்.”

“என்ன?”

“உன் பொண்ணுக்கு என்ன வயசு?”

“‘ஏன் கேட்கிறீங்க?”

“ஒன்னும் செய்ய மாட்டோம். எங்களுக்கும் மனசாட்சி இருக்கு. சும்மா சொல்லு.”

“பன்னிரெண்டு வயசு”

“சரி. உன் பெண்ணை நிர்வாணமா போட்டோ எடுத்துக் கொடு. அப்படி நீ பத்து நாளில் ரெண்டாயிரம் வெள்ளி தரலன்னா அந்தப் போட்டோவை ப்ரிண்ட் எடுத்து அங்கங்கே ஒட்டி விடுவோம். வாட்ஸாப், ஃபேஸ்புக்குன்னு ரிலீஸ் பண்ணிருவோம். மத்தபடி ஒன்னுமே செய்யமாட்டோம்.”

குமாருக்கு அப்படியே நெஞ்சு நின்றுவிட்டது. அடி வயிற்றில் இருந்து ஒரு பயமும் ஆத்திரமும் கிளம்பி உச்சி தலைக்கு வந்தது. ஐயா சிலையின் கண்கள் மௌனமாக குமாரை பார்த்துக் கொண்டிருந்தது. ஐயா சிலையின் கையில் இருந்த அருவா கத்தியை பிடுங்கி அங்கேயே ஐயாவுக்கு காவு கொடுக்க வேண்டும் போல் தோன்றியது. வாழ்க்கையின் உச்சகட்ட வேதனையை அனுபவித்தான்.

இந்தச் சித்திரவதைக்குப் பதில் செத்தே போகலாம் எனத் தோன்றியது குமாருக்கு. இனி எதற்கு பயம்? ஏன் இந்த அடிமை உணர்வு. இப்போதும் ஐயா சிலையின் கண்கள் மௌனமாக குமாரை பார்த்து கொண்டிருந்தது.

புதர் மறைவில் ஒளிந்து கொண்டு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த மணிக்கு கோபம் உச்சியை தொட்டது. இனி பொறுத்து கொள்ள முடியாது. ஆபிசர்ஸ் ரெண்டு பேர்கள். நாமும் ரெண்டு பேர்கள். தப்பு செய்கிற அவர்களுக்கே இவ்ளோ துணிச்சல் இருக்கும் போது, நாம் ஏன் கோழைகளாக இருக்க வேண்டும். இரண்டு பேருமாக சேர்ந்து, அவர்களின் மூஞ்சி முகறை எல்லாம் உடைத்துவிட்டு, போலிசில் போய் புகார் செய்துவிட வேண்டியதுதான். இனி போலிசுக்கு போவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆனது ஆகட்டும் என மணி புதர் மறைவில் இருந்து எழுந்து அவர்களை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

பட்டினியோடு அடி வாங்கி சோர்ந்து போயிருந்த குமாருக்கு, ஆத்திரமும் ஆவேசமும் புது தெம்பை கொடுத்து இருந்தது. எழுந்து நின்றவன், தன் பலத்தை எல்லாம் ஒன்று சேர்த்து, ஆபிசர்ஸ் ஒருவனை ஓங்கி ஒரு குத்து விட்டான். ஆபிசருக்குத் தலையே சுற்றி விட்டது. தடுமாறி போய் தூர விழுந்தான். இன்னொருவனின் கையை பிடித்து முறுக்கி முதுகில் ஒரு குத்தும் கால் முட்டியில் ஒரு உதையும் விட்டான். அவன் வலி தாங்காமல் கெட்ட வார்த்தையில் முனகிக் கொண்டே கோவிலின் பக்கவாட்டில் போய் விழுந்தான். அவன் விழுந்த இடத்தில் மலை பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது.

மணி வேகமாக ஓடி வந்தான். குமார் மணியை கவனித்தான். ஒன்றும் பேசாமல் ஆற்றில் இறங்கி, கடந்து,  அந்தப் பக்கம் இருக்கும் மண் சாலையில் ஓட ஆரம்பித்தான். ஐயா சிலையின் கண்கள் நடப்பதை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தன.

வல்லினம் சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற சிறுகதை

5 comments for “குளத்தில் முதலைகள் (மூன்றாவது பரிசு)

  1. பொ.கருணாகரமூர்த்தி.
    December 3, 2016 at 6:14 pm

    சுமார் என்கிற ரகந்தான், ஊளைச்சதையாக பல தேவையற்ற வார்த்தைகள் கதை முழுவதும் விரவியுள்ளன, கதையில் முடிப்பிலும் ’அவன் விழுந்த இடத்தில் மலை பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது’ போன்ற காட்சிகளில் கொஞ்சம் நாடகீயம் இருந்தது. முயன்றால் போட்டியாளர் இன்னும் நல்ல கதைகள் பன்னலாம்.

  2. Mani Megalai Guna Sekaran
    December 7, 2016 at 12:28 pm

    பாராட்டுகள். விமர்சகர் பாண்டியன் கூறியது போல இந்த கதை இரண்டு வகையில் என்னை கவர்ந்தது. முதலாவது, இந்த கதை மலேசிய சூழலில் மட்டுமே நடக்கக்கூடியது. மலேசிய சூழல் தெரிந்தவர்கள் அல்லது மலேசியர்களுக்கு மட்டுமே இந்த கதையை அனுபவிக்க முடியும். இரண்டாவது. இந்த கதை புதிய தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வட்டி பிரச்சனை, கள்ள சூதாட்ட கடைகள் என புதிய தளமாக உள்ளது. மேலும் இந்த கதையை படிக்கும் போது, எனக்கு ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு. மிகவும் விருவிருப்பாக கதை நகர்கிறது. ஒவ்வொரு பத்தியிலும் ஒரு சம்பவம் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆழமாக விவரிக்காமல் சுருக்கமாக வர்ணித்து இருப்பது அழகு. உதாரணம் ஐயா கோவில், கேம் கடை என சட்டென வர்ணித்து, மீண்டும் கதைக்குள் நுழைந்து விடுவது. இந்த கதை சிறுகதையில் புதிய பாணியாக இருக்கிறது. கதை ஆரம்பம், கதை மாந்தர்களுக்கு நடக்கும் சம்பவங்கள், கதையின் முடிவு ஒரு திரைக்கதை போல் எழுதப்பட்டுள்ளது. நிறைய எழுத வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன். நன்றி.

  3. Shanthi Krishnan
    December 8, 2016 at 6:03 am

    அருமையான கதை. பாராட்டுக்கள். தோழி மணி இந்த கதையை படித்து பார்க்க சொன்னார். அவர் சிபாரிசின் மூலம் இந்த கதையை படித்தேன். மிகவும் விருவிருப்பாக ஒரு படம் பார்ப்பது போல் இருந்தது. அதிலும் சண்டை காட்சிகளை விளக்கியது அருமை. இன்று நாட்டில் மிகவும் பயங்கரமாக பிஸினஸாக இந்த கேம் கடைகள் இருக்கு. எங்கு போனாலும் கேம் கடைகள். நமக்கு தெரிந்த சொந்தகாரர்கள் நண்பர்கள் அதிகம் பேர்கள் கேம் கடை பைத்தியம் பிடித்து அலைகிறார்கள். இவைகள் சட்ட விரோதமாக நடக்கிறது. அதிகம் பேர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அரசாங்க கண் மூடி இருக்கிறது. கதை கேம் கடையால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று மேலும் விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். ஆனாலும் கதை எங்குமே போரடிக்காமல் விருவிருப்பாக நகர்கிறது. தியேட்டர் போய் படம் பார்த்தது போல் இருந்தது.

  4. குமரதேவன் குட்டி
    December 8, 2016 at 11:31 am

    வணக்கம். விருவிருப்பான கதை. இன்று அன்றாடம் பலரும் அனுபவிக்கும் தொல்லைகளை கதையாக சொல்லி இருக்கும் கரு அருமை. இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லி இருக்கலாம். திரைப்படம் போல் விரியும் கதை காட்சிகள் பாராட்டுக்கு உரியது. இந்த கதையில் மூன்று பெண்கள் நேரடியாக சம்பந்தம் படாமல் ஆனால் கதையில் வருகிறார்கள். குமாரின் மனைவி. வெகுளிதனமாக போலிஸ்காரரிடம் விவாகரத்து கேட்பது பிறகு குழந்தைகளை வளர்க்கும் தைரியத்துடன் கிளம்பி போவது. கணவனின் செயலால் மனம் வெறுப்பது என அந்த பென்ணின் கதை வருகிறது. இன்னொரு பெண் மணியின் மனைவி. இன்றைய மோசமான காலகட்டத்தில் குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலை செய்தே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையில் வேலைக்கு போகிறார். மூன்றவது பெண் குமாரின் மகள். இந்த மகள் பாத்திரம் எங்கும் கதையில் வரவில்லை என்றாலும் அவருடைய நிர்வாண போட்டோ கேட்கும் போது நமது மனம் பெரும் துயரத்தை அடைகிறது. நம்மை மீறி ஒரு அனுதாபமும் அந்த பென்ணை பற்றிய கவலையும் நமக்கு வருகிறது. என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால் இந்த கதை மலேசிய தமிழ் சிறுகதை உலகில் தனி முத்திரை பதிக்கும். சமூகத்தில் கண்ணுக்கு தெரியாமல் அல்லது நாம் முன்னே நடந்தும் நாம் அதை கடந்து போய் கொண்டிருக்கும் பலரது வாழ்வின் கதைகள் இன்னும் சொல்லப்பட வேண்டும். எழுதி குவியுங்கள். படிக்க நாங்கள் காத்து கொண்டிருக்கிறோம். இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க. குமரதேவன் குட்டி, சிரம்பான்.

  5. Mariamma Micheal
    December 10, 2016 at 12:25 pm

    Nalla kathai. Welone.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...