காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 8

agamபன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில்தான் முதல் காதல் கடிதம் எழுதினேன். ஒருவாரமாக யோசித்து யோசித்து ஒன்றும் சரிவராமல் இப்படி எழுதினேன். “நான் உன்னை நேசிக்கிறேன். விருப்பமெனில் திருப்பித்தா. இல்லையெனில் கிழித்து எறிந்துவிடு (ரொம்பதூரம் தள்ளி கீழே) குறிப்பு: இது என் இதயம். தயவுசெய்து கிழித்துவிடாதே”. இந்த கடிதத்தின் வரிகள் எல்லாமே இன்னொரு நண்பனின் உபயம். இந்தக்கடிதத்தில் ஒரு இராசதந்திரம் இருக்கிறது. 1)என்னைப்போல அவள் நாட்கணக்காய் உட்கார்ந்து யோசிக்கும் வேலையை மிச்சப்படுத்துகிறேன். 2) கடிதத்தை என்னிடமே திருப்பித் தந்துவிடுவதால் இந்த கோரிக்கை குறித்து யாருக்கும் தெரியவராது. அவளுக்கும் ஆபத்து இல்லை. 3) பிடிக்காவிட்டால் கிழித்து எறிந்துவிடச்சொல்லும் அதேநேரம் இன்னொருமுறை பரிசீலிக்க குறிப்பும் இருக்கிறது. ரொம்பவே  தயக்கமும் பயமும் இருந்ததால் இன்னொரு நண்பனைக் கூட்டிக்கொண்டு அவள் பின்னாலேயே இரண்டு நாட்கள் போனோம். நண்பன் வெறுத்துப்போனான். அவளைக் கூப்பிட்டுக் கொடுக்கவேண்டும். அவ்வளவுதான் வேலை. ஆனால் நான் இதற்குமுன் அவளிடம் பேசியதேயில்லையே. பெயரைக் கூப்பிட்டால் தொண்டை கட்டிக்கொண்டவன் மாதிரி என் குரல் எனக்கே கேட்கவில்லை. இவ்வாறாக கடைசிவரை என் கடிதம் அவளுக்குப் போய்ச் சேரவேயில்லை. அந்தப் பெண் இன்னும் அதை ஞாபகம் வைத்திருப்பாளா? அவளிடம் காட்டவே காட்டாத அந்த காதல் கடிதத்தைப் படிக்க, ஒருமுறைகூட பேசியிராத என்னுடைய வரிகளை வாசிக்கவேனும் விரும்பினாளா?

வலிமையில்லாத மென்பொன்னில்

செய்த பொற்பாவை அவள்

விண்ணிலிருந்து தவழ்ந்து வரும்

காலை இளவெயில் போல மேனி

ஐவகையிலும் முடியத்தக்க அழகுக் கூந்தலுடையாள்

நாணற்கிழங்கு முளைவிட்டதுபோல் பளீரிடும் பற்களுடையாள்

இசைஞன் இனிய இராகத்தில் மீட்டிப்பாடும்

யாழின் இசைபோல் குரலுடையாள்

தெய்வம்போல் அழகுடையாள்

பெரிய யானைக்கூட்டமொன்று நீர்நிலையில் இறங்க

கலங்கும் அந்நீர்போல் கலக்கமுறுகிறாய் மனமே

அவள் அடைவதற்கரியவள் என்று உணராய்

நாளும் துன்பந்தரும் நீள்வழிப் பாதை கடந்து

என்னைத் துன்புறுத்துகிறாய்

கார்மேகம் உரசி இடித்து மின்னுவதுபோல்

சேரன் செங்குட்டுவன் பகைத்து எழுந்தான்

பல்மொழி பேசும் பாசறையை ஆங்காங்கு அமைத்துச் சுற்றினான்

போரிட யாரும் எழாததுகண்டு மேலும் சினந்து

கடலை முற்றுகையிட்டு வென்றான்.

அவனது வேல் உன் மார்பில் பாயட்டும்

அடையமுடியாப் பெண்ணை எண்ணி

நீங்காத் துயர் துயர் தரும்

உன் செருக்கு அழியட்டும்

இயற்றியவர்: பரணர்

திணை : குறிஞ்சி

[அல்லகுறிப்பட்டு நீங்குந் தலைமகன் தன் நெஞ்சினை நோக்கிச்சொல்லியது.]

தாவில் நன்பொன் தைஇய பாவைagam-8

விண்தவழ் இளவெயில் கொண்டநின் றன்ன

மிகுகவின் எய்திய தொகுகுரல் ஐம்பால்

கிளையரில் நாணல் கிழங்குமணற் கீன்ற

முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்         5

நயவன் தைவருஞ் செவ்வழி நல்யாழ்

இசையோர்த் தன்ன இன்தீங் கிளவி

அணங்குசால் அரிவையை நசைஇப் பெருங்களிற்று

இனம்படி நீரில் கலங்கிய பொழுதில்

பெறலருங் கரைய ளென்னாய் வைகலும்         10

இன்னா அருஞ்சுரம் நீந்தி நீயே

என்னை யின்னற் படுத்தனை மின்னுவசிபு

உரவுக்கார் கடுப்ப மறலி மைந்துற்று

விரவுமொழிக் கட்டூர்1 வேண்டுவழிக் கொளீஇப்

படைநிலா இலங்குங் கடல்மருள் தானை         15

மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன்

பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து

செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி

ஓங்குதிரைப் பௌவம் நீங்க வோட்டிய

நீர்மாண் எஃகம் நிறத்துச்சென் றழுத்தக்           20

கூர்மதன் அழியரோ நெஞ்சே ஆனாது

எளிய ளல்லோள் கருதி

விளியா எவ்வந் தலைத்தந் தோயே.

  1. விரவு மொழித் தகட்டூர் என்றும் பாடம்.

இப்பாடலில் ஐவகைக் கூந்தல் அலங்காரம் பற்றி ஒரு குறிப்பு வருகிறது. பெண்கள் கூந்தலை ஐந்துவகையில் அலங்காரம் செய்து கொண்டனர்.

  1. குழல்: கொத்தாகச் சுருட்டி முடிதல்
  2. அளகம்: சுருள் சுருளாக அமைத்தல்
  3. கொண்டை: பக்கவாட்டில் முடிவது
  4. பனிச்சை: முடிச்சிட்டுத் தொங்கவிடுதல்
  5. துஞ்சை: பின்னித் தொங்க விடுதல்

அவள் ஐவகைக் கூந்தல் அலங்காரம் பண்ணக்கூடியவள் என்றால் அவன் எத்தனை நாட்கள் அவளைப் பார்த்திருப்பான். இப்பாடலை இரண்டு விதமாகப் பார்க்கலாம். எத்தனை சொல்லியும் அடங்காத நெஞ்சை அடக்க சேரமன்னனின் வேலால் குத்தப்படவேண்டும்; அதனால் நெஞ்சு அடங்கும் (செத்துப்போதல்?). இன்னொன்று, அவன் வீரத்தை ஒப்பிட்டு, அவளை அடையமுடியாத இயலாமை குறித்த மறைமுகப் புலம்பலாகவும் வாசிக்கலாம்.

சேரன் செங்குட்டுவனுக்கு ‘கடற் பிறக்கோட்டிய செங்குட்டுவன்’ என்ற புகழ்பெயரும் உண்டு. ஒரு தீவில் இருந்தபடி கப்பல்களைக் கொள்ளையடித்து வந்த ஒருகூட்டத்தை தனது கடற்படையால் வென்றமையால் இப்பெயர். சேரநாட்டுத் துறைமுகம் முசிறி சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கியது. யவனர்களுடன் வணிகம் முசிறி துறைமுகம் வாயிலாக நடந்துவந்தது. பொன்னுக்குப் பதில் மிளகு விற்றனர். இதன் பொருட்டு தன் நாட்டு வணிகத்தைக் காக்க சேரன் செங்குட்டுவனின் தந்தை நெடுஞ்சேரலாதன் காலத்திலிருந்தே வலுவான கப்பற்படை இருந்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...