உள் நுழைந்ததும் வலது பக்கமாக பார்த்துப் போவீர்களேயென்றால் படிகள் தென்படும். முதல் மாடிக்குச் செல்லுங்கள். இரண்டாம் மாடி மூன்றாம் மாடி என்று ஏதுமில்லை. முதல் மாடி மட்டும்தான். வலதுபக்கமாகத் திரும்புங்கள். நேராகச்சென்று மறுபடியும் திரும்புவீர்களென்றால் நான்கைந்து விதமான உணவருந்தும் இருக்கைகள் இருக்கும். இரு மருங்கிலும் காணலாம். வலது பக்கத் தொடக்கத்திலேயே வெண்ணிறப் பிரம்பு நாற்காலிகள் உண்டா, சரி. நீங்கள் எந்தப் பிரம்பு இருக்கைகளிலும் உட்காரலாம். ஆனால் தூண் ஓரத்தில் இருக்கும் மேசைக்குப் போகாதீர்கள். அந்த மேசைக்கு இரண்டே இரண்டு பிரம்பு இருக்கைகள். தூணோடு ஒட்டியிருக்கும் இருக்கையின் பின்னால் பாருங்கள், தூணோடு சாய்ந்து ஏதோவொன்று கருப்புப் பையில் சுருட்டி வைக்கப்பட்டதுபோல இருக்கிறதா. ஆம்… அதுதான் அதுதான்…
அது என்ன ஏதென்று இதுவரை அறியப்படவில்லை. யார் கண்ணுக்கும் இன்னும் அகப்படவில்லை. நீங்கள் அதை எடுத்துக்கொண்டு நழுவப் பார்த்தாலும் நழுவலாம். இடையில் மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல. அந்தப் பொட்டலத்திற்கு நேரே மேலே பாருங்கள். கண்காணிக்கும் கருவி கருமைநிறத்தில் பாதி பந்துபோல பொருத்தப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். இதற்குமேல் உங்கள் பாடு.
கொஞ்சம் பொறுங்கள். இன்னும் இருவர் வருகிறார்கள். அவர்களையும் அழைத்துக் கொண்டு வருகிறேன்.
சாலையோரத்திற்குச் செல்கிறேன். வெள்ளைச் சட்டைக்காரர் சுற்றுலா பயணிகளிடம் மீட்டர்படி என்று சொல்லாமல் இரட்டை கோபுரத்திற்கு கொண்டு செல்ல பேரம் பேசுகிறார்கள். பாவம் சுற்றுலா பயணிகள். புக்கிட் பிந்தாங்கிற்கும் இரட்டை கோபுரத்திற்கும் கட்டணமில்லாத பேருந்து சேவை இருப்பது தெரியவில்லை போலும். அவர்கள் கேட்ட கட்டணம் இவர்களின் புருவங்களை உயர்த்திவிட்டிருக்கிறது. போகட்டும். நம்முடைய விஷயத்திற்கு வருவோம்.
மாரியம்மன் கோயிலின் அன்னதான உணவை ஒரு பிடிபிடித்து சண்முகமும் அசோகனும் சாலையைக் கடந்து வருகிறார்கள். பழக்கடைகளைத் தாண்டி யாசின் உணவகத்தை ஒரு எட்டு பார்க்கிறார்கள். இவர்களுக்கு தெரிந்தவர் ஒருவருமில்லை என்று தெரிந்ததும் உள்நுழைந்து மாடிக்கு ஏறி நான்குபேர் அமரும் இருக்கைகளில் இடம் பிடிக்கிறார்கள். சண்முகம் உட்கார்ந்த ஐந்தாவது நிமிடத்திலேயே குறட்டை விடுகிறார். பானை வயிறு. அசோகன் தென்னை மரம்போல உயரமானவன். அதற்கு ஏற்றார் போல உடல்வாகு. இரவும் பகலும் பட்டைத்தண்ணீர் அடித்தே உடல் முழுக்க பட்டை பட்டையாய் வாங்கியும் தொடர்ந்து அப்படியே செயல்படுபவர். இன்று காலையிலிருந்து ஒன்றும் போடவில்லை. உள்ளங்கை அரிப்பு. தை சோங் அல்லது காப் பாக் அடிக்க வேண்டும். அப்போதுதான் மனம் ஆறும். துருவித் துருவிப் பார்த்துக்கொண்டிருந்த அசோகனுக்கு அந்தப் பொட்டலம் கண்ணில் பட்டது.
“டேய் ஷன்னு…. டேய் மாடு.. கண்ணு முழிடா..’’
‘’அசோ தொந்தரவு படுத்தாத. ஆள வுடு.. இல்ல.. குசு விட்டேனாக்கா ஓடியே போய்ருவ’’
‘’டேய் மயிராண்டி, கண்ணைத் தொறந்து பாரு அங்கே”
“எங்க”
“அங்கடா, தூணுகிட்டப் பாரு மவனே… ” பற்களை அழுத்திச் சொன்னான்.
சண்முகமும் பார்க்கத்தொடங்கிய அதே வினாடி துப்புரவுப் பணியாளரான இந்தோனேசிய பெண்ணும் பார்க்கிறாள். வண்டியை நிறுத்திவிட்டு பார்த்த பார்வையில் தயக்கம் தெரிந்தது. தன் பக்கம் சோளப்பொரி விற்கும் பென்ணிடம் தன் மொழியில் சொல்கிறாள்.
“கமாரியா, தூணுகிட்ட ஒரு பொட்டலம் இருக்கு பாரேன்”
“அதை ஏன் என்கிட்ட சொல்லிக்கிட்டு. தூக்கிப்போடு இல்ல பிரிச்சி பாரு..’’
‘’ஏஹே…! இப்பவுள்ள காலத்துல என்னென்னவோ கெடக்கு. துண்டிக்கப்பட்ட கை காலு ஏன் ‘பொம்’மா கூட இருக்கலாம். அதான் அதான் அங்கங்க வெடிக்குதே , தெரியாதா உனக்கு…’’
“என்னமோ சொல்ற . பேசாம பாதுகாவல் தலைவி அதோ அங்க பாரு, மீ சூப் சாப்பிடறாங்க. அவுங்ககிட்ட போய் சொல்லு. என்னை ஆளை விடு”
துப்புரவுப் பணியாளர் விருட்டென நடந்து பாதுகாவல் தலைவியிடம் சொல்ல அவள் உண்பதை நிறுத்தி விட்டு வந்து பார்க்க, அசோகன் சண்முகத்திடம் முணுமுணுக்கிறான்.
“ஷன்னு வந்துட்டாளுங்க. இதுக்கு மேல முடியாது போலிருக்கே. கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போச்சே..”
“வுடு. அவ சொல்ற மாரி கைகாலு துண்டா இருந்திச்சு நீ செத்த. மேல பாரு கேமரா இருக்கு. நீதான்னு உடுப்புக்காரங்க முடிவு செஞ்சு உள்ளுக்கு போட்டுடுவாங்க. தேவையா..”
பாதுகாவல் தலைவி தன் நடைபேசியை எடுத்து கண்காணிப்பு அறைக்கு விஷயத்தைச் சொல்ல மூன்றே நிமிடங்களில் இரண்டு போலிஸ்காரர்கள் வந்துவிட்டார்கள். இருவரில் ஒருவன் பருமன். இன்னொருவன் ஐந்தடிக்கு ஏற்றவாறு அவன் வயிறும் இருந்தது. வலது பக்க நெஞ்சுப் பகுதியில் எண்களுக்கு கீழ் அனுபவக் குறிப்பான பட்டை இருந்தது. பருமனுக்கு இல்லை. இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே வாக்குவாதம் வந்தது. பருமனானவன் அப்பொட்டலத்தை எடுக்க முயல அனுபவமுள்ளவன் தடுக்கிறான். மலாயில் காரசாரமான பேச்சு.
“ஒன்னுமேயில்லாத ஒன்னுக்கு இப்படி தயங்கக்கூடாது புரோ”
“இதுதான்… இங்குதான் நீ தவறு செய்ற… உண்மையிலேயே அந்தப் பொருள் ஆபத்தானது, அபாயகரமானதுன்னு தெரிய வந்துச்சா..”
“தெரிய வரணும்தானே தொட்டுப் பிரிச்சி பார்க்கப் போறேன். இதுக்கு ஏன் தடுக்கற . அதான ஏன்னு விளங்கல.”
“நீ பிரிச்சி வெடிச்சிருச்சின்னா.. நீ மட்டும் போனா பரவாயில்லை. உன்னோட சேர்த்து பத்து பேரு இருபது பேருன்னா..”
“பிரிச்ச உடனே வெடிக்குமா. என்னலா புரோ”
“நீ எந்த காலத்துல இருக்கே ? கைபேசி கண்ணாடில விரல வைச்சாலே போதும். இங்க வெடிக்கும்”
“ஓ அப்படி சொல்றியா. சரி பிரச்சனையை முடிப்போம். என்ன பண்ணலாம்”
“சார்ஜன் என்ன சொல்றாரோ அதன்படி செய்வோம்”
இருவரும் படிகளில் விரைகின்றனர். சண்முகம் தூக்கம் கெட்டு அசோகனைப் பார்க்கிறான்.
“இனிமே இங்க இருக்கக்கூடாது. பொம்மு கும்முனு சொல்றாங்க. இங்க, இப்ப நா சாக விரும்பல, இன்னும் இருபது வருஷமாவது வாழணும் . ரஜினிக்கு அடுத்து யார் சூப்பர் ஸ்டாரா வர்றாங்கன்னு பாக்கணும். விஜய்யா, சூர்யாவா, அஜித்தா இல்ல சிவகார்த்திகேயனான்னு பார்க்கணும்ல. வா ஓடிப்போலா.”
அசோகன் தலையை அடித்துக்கொண்டு பின்தொடர்ந்தான். சார்ஜன் ஒஸ்மான் தன் சிறு படையோடு வந்து சேர்ந்தார். அவரும் பொட்டலத்தினருகே போகவில்லை. தன் நடைபேசியை எடுத்து கண்காணிப்பு அறைக்கு அழைத்தார்.
“கொண்ட்ரோல் ரூம் மாசோக். கொண்டரோல் ரூம். இனி சார்ஜன் செகாப்”
“யா துவான் கொண்டரோல் ரூம் இனி”
“சீல பங்கெல் பொம்பா, செக்ஷன் ஸ்குவாட் பொம், திங்கட் ஸத்து அட சத்து புங்குஸான், யாங் டிஷாக் பொம்”
“ஓகே துவான்”
“ரோஜர் அவுட்”
சர்ஜன் ஒஸ்மான் கோப்ரல் மாஸ்லானிடம் போலிஸ் தடை விதிக்கும் கயிற்றுப் பட்டையை கொண்டு வந்து இங்கே போடும்படி உத்தரவிட்டார். வாக்குவாதம் பண்ணிய நபரான ஜோஷான் சார்ஜன் அருகில் மெல்ல வந்தார். செருமிக்கொண்டு சொன்னார்.
“சந்தேகம் மட்டும்தானே பொட்டலத்தை பிரிச்சி கூட பாக்காம பொம்பாவ கூப்புடறோம்.. தவறில்லையா … சார்ஜன்..”
“பொட்டலம் இருக்கு, நமக்கு சந்தேகம். பொம்பா வரும். சோதனை பண்ணும். அப்படி நெகட்டிவானாக்கா குற்றமாயிடுமா?”
“அதான் தெரியல. உங்ககிட்ட கேட்கறேன்”
“பிறகு உனக்கு தெரிய வரும்”
கோப்ரல் மஸ்லான் கயிற்றுப்பட்டியை கொண்டு வந்தார். கோப்ரல் அதனை ஜைனுடின் மற்றும் ஜோஹானை அழைத்து கட்டச்சொன்னார். அவர்கள் மூன்று மேசைகளை ஒட்டி இழுத்து இரும்புச் சட்டத்தில் கட்டினார்கள்.
சார்ஜன் தன் கீழுள்ள யாவரையும் ஒவ்வொரு மூலைக்கும் நுழை வாயிலுக்கும் அனுப்பினார். தான் மட்டும் அங்குள்ள ஒரு மேசையின் இருக்கையில் அமர்ந்துக்கொண்டார்.
உணவருந்திக்கொண்டிருந்த ஒரு மலாய்க்கார பெண்மணி துப்புரவுப்பணியாள் பெண்ணிடம் போலீஸ் பாதுகாப்பு வளையத்தைப் பற்றி விசாரிக்க அவள் என்னவோ ஏதோவென்று சொல்ல உணவருந்துவதை பாதியிலே நிறுத்திவிட்டு கைப்பையை எடுத்துக்கொண்டு எழுந்து சென்றாள். அவள் அரக்கப்பரக்கப் போவதைக் கண்ட தோழிகள் என்னவென்று கேட்க அவர்களின் காதோரம் ஓத உணவை அப்படியே வைத்துவிட்டு இடத்தைக் காலி செய்தனர்.
காதோடு காதாக செய்தி அப்படியே பரவ உணவகங்களிலிருந்து கும்பல் கும்பலாக வெளியேறினர். உணவு தயாரிக்கும் தேநீர் போட்டுக்கொடுக்கும் பணியாளர்களும் எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு விரைந்தோடினர். ஒரு சிலர் திரும்ப ஓடி வந்து கல்லாப்பெட்டியைத் திறந்து பணக்காசுகளை ஒரு கையில் அள்ளிப்போட்டு எடுத்துக்கொண்டு விரைந்தனர். . துப்புரவுப் பணியாளர்களும் நைசாக நழுவினர்..
முதல்மாடி உணவுக்கடைகள் மட்டும் வெறிச்சோடிக் கிடந்தன. பக்கத்துக் கடைகளான துணிக்கடைகளிலும் கைவினைப் பொருட்கள் கடைகளிலும் பொன்னலங்காரப் பொருட்கள் கடைகளிலும் வேலை பார்த்த பணியாளர்களும் வருவோர் போவோர் யாவரும் உணவுக் கடைகள் பக்கம் எட்டிப் பார்த்துக் கேட்டனர். பிறகென்ன? அங்கே என்ன நடந்ததோ இங்கேயும் நடந்தது. கூடுதலாக கூச்சல் குழப்பத்தை உருவாக்கிவிட்டனர்.
மேலேறிவந்த சுற்றுலாப் பயணிகளும் அயல் நாட்டினரும் எல்லோரும் குய்யோ முய்யோவென கத்திக்கொண்டு இறங்குவதைக் கண்டு மிரண்டு இவர்களும் அவர்களோடு நடந்தோடினர்.
இரண்டு நுழைவாயில்களிலும் இருந்த போலிஸ்காரர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் ‘அப்பெ பஸால் னீ‘ என்று கேட்க பொதுஜனம் ஒரே குரலாக ‘பொம்’ என்று கத்தினர்.
முதல்மாடிக்குச் செல்லும் நான்கு படிகளிலிருந்தும் மனிதக் கூட்டம் கன்னாபின்னாவென இறங்கியது. கீழ்தளமெங்கும் தள்ளுமுள்ளு நடந்தது. நுழைவாயிலிலும் வெளிவாயிலிலும் ஜனத்திரள் அடைத்துக் கொண்டது.
குழந்தைகள் வீறிட்டு அலறின. பெற்றோர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு தள்ளு வண்டிகளை மடக்கிப் போட்டு வெளியேற முயன்றனர்.
சிறுவர் சிறுமியர் தங்களின் தாய் தந்தையர் சகோதர சகோதரிகளின் கைப்பிடி விடுபட்டதும் இடைவிடாமல் கத்தி அழுதனர்.
போலிஸ்காரர்களும் பாதுகாவலர்களும் சூழலைக் கட்டுப்படுத்தக் கூடாமல் போயிற்று. மக்கள் கூட்டம் அடித்தும் பிடித்தும் வெளியேறுவதைப் பார்த்து வெளியே கடை திறந்திருக்கும் சிறு வணிகத்தைச் சார்ந்தோரிடையே பீதி உண்டாயிற்று. ‘பொம்’ ‘பொம்’ என்ற சொல் அசுர கதியில் வேலை செய்தது. அவரவர் தங்களின் சின்னஞ்சிறிய பலகையிலான சிறிய கடைகளை அவசர அவசரமாக இழுத்து மூடி தூரம்போய் கும்பல் கும்பலாக நின்று வேடிக்கை பார்த்தனர்
“எப்போது வெடிக்கும்?”
“என்ன மாதிரி வெடிக்கும்?”
“கட்டிடம் முழுமையாக இடிந்து சிதைந்து போகுமா?”
“நமது வியாபாரம் அவ்வளவுதானா ?”
“வட்டிக்குக் கடன் கொடுத்தவனுக்கு என்ன சொல்ல?”
என்ற பலவிதமான கேள்விகள் மக்களிடையே எழுந்தன.
கூடியிருந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களின் கைபேசிகளை எடுத்து படம் பிடிக்க ஆயுத்தமாயினர்.
எங்கு முதலில் வெடிக்கும்? இந்தக் கூரையா அந்தக் கூரையா? முன் வாசலா பின் வாசலா? பல கோணங்களில் படம் எடுக்க யோசித்தனர். சிலர் எதிரில் இருக்கும் கட்டிடத்தின் மொட்டை மாடிக்குப் போக முயற்சித்தனர். சிலர் பெரிய அஞ்சல் நிலையத்திற்கு ஓடினர். அங்கிருந்து மொத்த கட்டிடமும் வெடித்துச் சிதிலமாகும் காட்சியைப் படம் பிடித்து முகநூலில் அல்லது இணையதள காணொளியில் போட்டு புகழும் பணமும் பெறலாம் என்ற நோக்கத்தில் தீவிரமாய் செயல்பட்டனர்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பீதி மறந்து படம் பிடிக்கும் ஆர்வத்தில் கட்டிடத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் தீயணைப்பு வாகனங்களும் வெடிகுண்டு சோதனைப் பிரிவு வண்டிகளும் வந்து சேர்ந்தன.
தீயணைப்பு வண்டியிலிருந்து இறங்கிய வீரர்கள் துரிதகதியில் கட்டிட வெளியில் எங்கெல்லாம் தீயணைப்பு குழாய் இருக்கிறது என தேடத்தொடங்கினர். வெடித்தவுடன் நீரை பீய்ச்சியடித்து 1888-லிருந்து இருக்கின்ற பாரம்பரிய கலை கலாச்சார கைவினைப்பொருட்களுக்கென கட்டிட விருதை வாங்கியிருக்கும் இக்கட்டிடத்தை முக்கால் பகுதியேனும் காப்பாற்றிவிட வீரர்கள் எத்தனித்தனர்.
வெடிகுண்டு சோதனைப் பிரிவுக் குழுவினர் முகம் மறைக்க கண்ணாடி பொருத்தப்பட்ட தலைக்கவசமும் பிரத்தியேக உடையுடனும் சோதிக்கும் கருவிகளோடு முதல் மாடிக்கு விரைந்தனர். மோப்ப நாய் ஒன்று அதன் பயிற்றுனரோடு எகிறிப் பாய்ந்து ஓடியது.
முதல்மாடியில் போலீஸ் தடைவிதிக்கப்பட்ட கயிற்றுப்பட்டை அண்டையில் குழுமியிருந்தனர். மோப்ப நாய் ‘தன்னை எப்போது விடுவிப்பார்கள்?’ எப்போது கடமையைச் செய்ய விடுவார்கள் என அதி உற்சாகத்துடன் காத்திருந்தது.
குழுவின் தலைவர் உத்தரவு இட்டதும் நாய் விடுவிக்கப்பட்டது. பொட்டலத்திடம் வந்த நாய் முகர்ந்து பார்த்து மறுபடியும் மறுபடியுமாய் முகர்ந்து தன் பயிற்றுனரை ஒரு விதமாய் பார்த்தது. அப்பார்வையின் அர்த்தத்தை பயிற்றுனரால் புரிந்துகொள்ள இயலவில்லை. குழுவின் தலைவர் பயிற்றுனரை பார்த்தார்.
“அப்பெ யாங் தக் கென..?”
“தக் தாஹுலா துவான் . பியார் சயெ யங் பொரெக்ஸா..”
அவர்களுக்கேயுரிய சோதனை செய்யப் பயன்படுத்தப்படும் கையுறைகளோடு நாயின் பயிற்றுனர் பொட்டலத்தின் அருகே சென்றார். பொட்டலத்தின் முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்தார். மெதுவாக நிதானத்தோடு அவிழ்த்துத் திறந்தார்.
மூக்கோடு மூடிவைத்திருந்த கவசத் துணியை நீக்கிப்பார்க்கும்போது கோழி வறுவல் உணவாக இருந்தது. இரண்டு காகித மடிப்புகளில் வாழையிலையில் உள்ள உணவு. இன்னும் ஊசிப்போகவில்லை. குழுவின் தலைவர் அப்பொட்டல உணவைத் தன் கைபேசியில் படம் பிடித்தார். தலைவரோடு மற்ற வீரர்களும் சார்ஜன் ஒஸ்மானை சுற்றி வளைத்துக்கொண்டனர். பேச்சோடு பேச்சாக பொட்டலத்தை விட்டுவிட்டனர். மோப்ப நாய் உணவை லபக் லபக்கென தின்று தீர்த்தது.
சார்ஜனுக்கும் சோதனைக்குழுவின் தலைவருக்கும் பேச்சு அதிகமாகி முகங்கள் மாற்றங்கண்டவுடன் சார்ஜனைச் சார்ந்தவரும் குழுத்தலைவரைச் சார்ந்தவரும் பின்னுக்கிழுத்து சமாதானப்படுத்தினர். அமைதி ஏற்பட்ட சூழலில் ஒருவர் நாயை கவனித்தார். உண்ட மயக்கத்தில் தரையில் சாய்ந்து படுத்துக்கொண்டது..
“அப்பெ இனி.. அப்ப டாஹ் ஜாடி அன்ஜேங் காவ் ஹே”
என்று கத்த நாயின் பயிற்றுனர் ஓடிச்சென்று நாயின் கண்களை கவனிக்க அது திறந்து திறந்து மூடிக்கொண்டது.
“துவான் அன்ஜேங் சுடா பெங்சான் துவான்… சாய ஷாக் மக்கானான் இனி அடெ ராச்சூன் துவான்”
எல்லோர் பார்வையும் நாயின் மீதும் பொட்டலத்தின் மீதும் இருந்தது. சோதனைக் குழுவின் தலைவர் நாயைத் தூக்கிக்கொண்டு மிருக சோதனைப் பிரிவுக்கு ஓடும்படி கத்தினார். பயிற்றுனரும் இன்னும் இருவரும் நாயை தூக்கிக்கொண்டு விரைந்தனர்.
வெளிய வந்ததும் பொதுமக்கள் இவர்களையும் நாயையும் தங்கள் கைப்பேசியில் படம் பிடித்தனர். வாகனத்தில் நாய் ஏற்றப்பட்டதும் ஆபத்து அவசர ஒலிப்பான் சத்தத்துடன் விரைந்து சென்றது.
தீயணைப்புப் படை வீரர்களும் சோதனைப் பிரிவின் வீரர்களும் வெளியேறிப் போகும்போது பொதுமக்களில் சிலர் கேட்க அவர்கள் சொல்ல செய்தி பரவியது. சிலர் மகிழ்ச்சியடைந்தனர். சிலர் ஆத்திரமடைந்தனர். சிலர் சலித்துக்கொண்டனர்.
நீங்கள்???