இலக்கியம் என்பது ஓர் இலக்கை நோக்கமாக வைத்து மொழியின் துணையுடன் இயங்குதல் என்பது பொதுப்படையான விளக்கம்தான். இலக்கியப் படைப்புகள் எழுதப்படும் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதைக் கணிப்பது அவ்வளவு எளிதன்று. ஒரு செறிவான இலக்கியப் படைப்புக்குள் சூல்கொண்டிருக்கும் மையத்தைத் தொடுவதற்கு வாசகனுக்கு வாசிப்புப் பயிற்சி மிக அவசியமாகிறது. இலக்கிய விமர்சனம் மட்டுமே இப்பணியைக் கொஞ்சம் சுலபமாக்கித் தருகின்றது.
ஆயினும், ஒரு படைப்பாளி என்ன மாதிரியான மனநிலையில் நின்று தன் படைப்பைக் கொடுக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள வாசகன் அழகியல் ரசிப்புகளைக் கடந்து மிக நுட்பமான கண் கொண்டு ஆராய வேண்டியுள்ளது. உலகின் சிறந்த இலக்கியங்கள் அனைத்தும் இவ்வாறே அமைந்துள்ளன. அவை வெளிப்படையாக பேசும் கதையும் நிகழ்வுகளும் வேறாக இருப்பதும் அவற்றின் உள்ளடக்கமாக மறைந்துகிடக்கும் சாரங்கள் வேறாகவும் உள்ளதே அவற்றின் சிறப்பு. இதன் காரணமாகவே உன்னத இலக்கியங்கள் பல கோணங்களில் பார்க்கவும் ஆயவும் ஏதுவானவையாக பன்முகத்தன்மை கொண்டுள்ளன. வாசகனின் முதிர்ச்சிக்கு ஏற்ப அவை புதுப் புது அனுபவங்களையும் கருத்துகளையும் கொடுத்தவண்ணம் உள்ளன.
வாசக மனநிலை, ஒரு படைப்பை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவும் அவற்றோடு உரையாட தயாராகவும் இருக்கும்போதுதான் படைப்புகளுக்குள் முழுமையாகப் பயணிக்க முடிகிறது. இது வாசகனின் அனுபவத்தையும் முதிர்ச்சியையும் சார்ந்தது. ஒரு நல்ல படைப்புக்குள் புகுந்து உரையாடல் நிகழ்த்த அதன் வாசலை முதலில் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. புறவயமாகக் கதை படிக்கும் மனநிலையில் படைப்புகளை வாசிக்கும் வாசகனால் அந்தப் புனைவின் வாசல்கள் அறியப்படாமலே போய்விடக் கூடும். அவன் அப்படைப்பின் கதையாடலை மட்டுமே வாசித்து அதை தனது இலக்கிய அனுபவமாக ஆக்கிக்கொள்கிறான். இதன் அடிப்படையிலேயே சில புனைவுகள் புரியவில்லை என்ற குறைபாடுகளும் சில புனைவுகள் சமூக விரோதமானவை என்கிற சாடல்களும் எழுகின்றன. ஆனால் ஒரு சிறந்த புனைவு வெளித்தோற்றக் கதையாடலை மட்டும் நோக்கமாகக் கொண்டு இருப்பதில்லை. அது தனக்குள் அடுத்த தளத்துக்கான உரையாடலை மறைத்து வைத்திருக்கிறது. ஆகவே ஒரு புனைவு, வாசகனால் அதன் வாசல் கண்டடையப்படும் போதுதான் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது.
புனைவில் நுழையவும் உரையாடல் நிகழ்த்தவும் தேவையான நுழைவு என்பது புனைவில் சொல்லப்படாத விடயங்களில் இருந்து தொடங்குவதைத் தொடர் வாசிப்பில் அறியலாம். புனைவுகளில் தொக்கி நிற்கும் மெளனங்களும் படைப்பாளியால் திட்டமிட்டே தவிர்க்கப்படும் பகுதிகளும் வாசகனின் மீள் உரையாடலுக்காகக் காத்திருக்கும் நுழைவுகள் ஆகும். அந்த வாசல்களை வாசகன் கண்டறியும் வரை அந்த படைப்பு ஒரு தட்டையான பிரதியாகவே இருக்கின்றது.
நான் ஷாஹானுன் அமாட் (Shahnon Ahmad) என்னும் மூத்த மலாய்ப் படைப்பாளியின் படைப்புகளை முதன்முதலாக வாசித்தபோது ஏற்பட்ட எண்ணங்களும் புரிதல்களும் இரண்டாம் வாசிப்பில் வேறுபட்டிருப்பதை உணரமுடிகிறது.
பொதுவாக ஷாஹானுன் மிகச் சிறந்த யதார்த்த கதை சொல்லியாக அறியப்படுகிறார். அவர் படைப்புகள் மலாய் வாசகர்களின் இலக்கியப் பார்வையை வெகுவாக பாதிக்கக்கூடியதாகவும் புதிய சிந்தனைகளைக் கிளறக் கூடியதாகவும் அமைந்திருந்தன. மலாய் இலக்கிய நவீன சிந்தனையைக் கட்டமைத்தவர்களில் ஷாஹானுன் மிக முக்கிய ஆளுமையாவார். கெடா மாநில வழக்கு மொழியிலும் சராசரி மலாய் மக்கள் பயன்படுத்தும் பேச்சு மொழியிலும் அவர் படைத்த புனைவுகள் சுதந்திரத்திற்குப் பிந்திய அடித்தட்டு மலாய் மக்களின் வாழ்வியல் சிக்கல்களையும் தேசிய அரசியல் கவனிக்கத் தவறிய விவசாயிகளின் போராட்டங்களையும் மையப்படுத்தியனவாக அமைந்துள்ளன. அவரது மிக இயல்பான மொழி நடை வாசகர்களை எளிதில் வசீகரிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.
இவ்விடத்தில் தமிழ் நவீன இலக்கிய வாசகர்களுக்கு, ஷாஹானூனின் எழுத்து நடையை ஏறக்குறைய அதே காலகட்டத்தில் தமிழில் இயங்கி வந்த மூத்த படைப்பாளியான தி.ஜானகிராமனோடு ஒப்பிட்டுக் காட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். தி.ஜா வின் தஞ்சை மண்வாசம் மிக்க மொழியில் பயின்றுவரும் திணை சார்ந்த அழகியல் ஷாஹானுனின் எழுத்திலும் மொழி நடையிலும் காணப்படுவது மிகவும் சுவையான அனுபவம். வயல்வெளிகளையும் வனம் சார்ந்த நிலவியலையும் முக்கிய களமாகக்கொண்டே அவரின் பல படைப்புகள் எழுதப்பட்டுள்ளன.
ஷாஹானூன் அமாட் 1933-ஆம் ஆண்டு கெடா மாநிலத்தில் உள்ள ‘சீக்’ என்னும் சிற்றூரில் பிறந்தார். அக்கால மலாய் மக்களின் இயல்புபடி ஷாஹானூனின் குடும்பமும் விவசாயத்தையும் மீன்பிடித்தல் போன்ற கைத்தொழில்களையும் நம்பி வாழ்ந்து வந்தது. ஷாஹானூன் சீக்கிலேயே ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் அலோர் ஸ்டாரில் ஆசிரியர் பயிற்சியை முடித்தார். பின்னர் திரெங்கானுவில் ஆரம்பப் பள்ளி ஆங்கில ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். அதன் பின்னர் தனது கல்வி வாழ்க்கையைப் படிப்படியாக வளர்த்து 1968-இல் ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) ஆய்வு அதிகாரியாகப் பணியாற்றி தன் பட்டப்படிப்பையும் அங்கேயே முடித்தார். வெளிநாடு சென்று கல்வி பயின்ற ஆரம்பகால சொற்ப மலாய் கல்விமான்களில் ஷாஹானூனும் ஒருவர். 1974-இல் நாடு திரும்பிய அவர் சுல்தான் இட்ரீஸ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி உட்பட பல கல்விக் கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றி 1980-இல் பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை பேராசிரியராகப் பணியாற்றினார்.
இவர் பல துறைகளில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். நாவல், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளில் தனி கவனம் செலுத்தினார். மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். இருபதைந்து ஆண்டுகளில் பதினான்கு நாவல்களை எழுதியுள்ளார். மற்றும் பல நூறு சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது நாவல்களில் Ranjau Sepanjang Jalan (1966) Rentong (1965) Srengenge (1973) போன்றவை நன்கு அறியப்பட்டவை. அதிகம் பேசப்பட்டவை என்பதோடு இலக்கியத்தரம் மிக்கவை. இவை ஆங்கிலம் உட்பட பல ஐரோப்பிய மொழிகளில் மொழிமாற்றம் கண்டுள்ளன. சில தொலைக்காட்சி நாடகமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஷாஹானூன் அமாட் பல இலக்கிய விருதுகளையும் டத்தோ பட்டத்தையும் பெற்றுள்ளார். 1982-ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்தின் மிக உயரிய விருதான Anugerah Sasterawan Negara கொடுக்கப்பட்டது. பிற்காலத்தில் அவர் அரசியல் ஈடுபாடு மிக்கவராகவும் கட்சி அரசியலில் தீவிரமாகவும் இயங்கினார். ஒரு தவணைக்கு (1992-1996) சீக்கில் பாஸ் கட்சி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். தீவிர மதவாத இயக்கமான ஹராக்கா போன்றவற்றில் இணைந்தும் செயல்பட்டார். அக்காலகட்ட அரசியல் சூழலில் (1992- ஆன்வார் இப்ராஹீம் துணைப் பிரதமர் பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைபட்டார்) சினம் கொண்டவராக ‘SHIT’ எனும் நாவலை எழுதினார். கடுமையான அரசியல் விமர்சன நாவலான ‘ஷிட்’ (மலம்) மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. மாயாவாத யதார்த்த உத்தியில் எழுதப்பட்ட இந்நாவல் ஆளுங்கட்சியையும் முன்னாள் பிரதமரையும் கடுமையாகச் சாடுகிறது. இந்நாவலைத் தடை செய்ய சிலர் முயன்றனர். மேலும் சிலர் கள்ளப் பதிப்புகளைக் கொண்டுவந்து ஆசிரியர் மேல் பொருளாதாரத் தாக்குதலைத் தொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஷாஹானுன் எழுதிய Muntah (வாந்தி) என்கிற மேலும் ஒரு அரசியல் விமர்சன நாவல் அதிகம் பேசப்படாமலேயே போனது.
அவர் படைப்புகளை வாசித்து தொடக்கத்தில் நான் கொண்டிருந்த புரிதல் முழுமையானது அல்ல என்பதே உண்மை. கதைக்களம், மொழி, அழகியல், கதை சொல்லும் உத்திச் சிறப்புகள் போன்றவையே அவர் கதைகளின் மீது எனது ஈர்ப்புக்கான காரணங்களாக இருந்தன. மிகச்சிறந்த யதார்த்தவாதக் கதைகளை எந்தப் பதற்றமும் இன்றி மிக நிதானமாக சொல்லக்கூடிய பாங்கு அவருடையது. வாக்கியங்களைத் திரும்ப திரும்ப கூறுதலும் கதைக் களத்தை மிகத் துல்லியமாக விளக்கிச் செல்வதும் அவரது தனி உத்திகளாக அமைந்துள்ளன. நேர்கோட்டு கதைகளாக அமைந்துள்ள அவரது புனைவுகளில் சில உருவக பாணியில் சொல்லப்பட்டவை. Gunung (மலை) போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. கம்பத்து வாழ்க்கையையும் காட்சிகளையும் மனிதர்களையும் அவர் மொழிச் சித்திரமாக மாற்றிக் காட்டினார் என்பது மிகையாகாது.
அவரது கதை மாந்தர்கள் பெரும்பாலும் அவர் பிறந்து வளர்ந்த கம்பத்து மக்களை நகல் எடுத்தனவாக உள்ளனர். விவசாய வாழ்க்கையை நன்கு அறிந்த அவர் Gelungnya Terpokah, Perempuan, Pak Utih, Kalau Ibu Sampai Takah Tiga, போன்ற பல சிறுகதைகளில் கம்பத்து மக்களின் அசலான வாழ்க்கையை வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளார். அவரால் படைக்கப்பட்ட சில சிறந்த சிறுகதைகளை ஆய்வதன் வழி அவரின் இலக்கிய மனத்தை நன்கு அறிய முடியும்.
Gelungnya Terpokah (வறண்ட வயல்) சிறுகதையில் இரண்டு நபர்களுக்கிடையே நடக்கும் குரூரமான போட்டியும் அதன் விளைவுகளும் பேசப்படுகிறது. பாமர மக்களின் சந்தேகப் புத்தியும் போட்டியும் பொறாமையும் தரும் ஆதிக்க மனப்பான்மையும் வன்மமும் இக்கதையில் ஆழமாக பேசப்படுகிறது.
Lagu Kit Kit Kit (கிட் கிட் கிட் பாடல்) என்னும் சிறுகதை ஒரு குழந்தை தன் தாயின் மரணத்தை உணராமல் அதை ஒரு கொண்டாட்டமாகக் கருதும் அபத்த நிலையை விளக்குகிறது. வாசகர் மனங்களை கலங்கடிக்கும் இக்கதை ஷாஹனூனின் படைப்புகளில் தனி இடம் பிடிக்கிறது. தாய் மரணப்படுக்கையில் கிடக்கிறாள். அவளைக் கடைசி முறையாக பார்க்க அக்கம் பக்கத்தார் வருவதும் போவதுமாக இருக்கின்றனர். தன் தாயுடன் தனித்து வாழும் அக்குழந்தைக்கு அது ஒரு புது அனுபவமாக இருக்கிறது. பலரும் தன் வீட்டுக்கு வருவது குழந்தையை பரபரப்பாக்குகிறது. வீட்டுக்கு வரும் அனைவரும் தன் தலையைத் தடவுவதும் கன்னத்தை கிள்ளுவதும் கரங்களைப் பற்றுவதும் அந்தக் குழந்தைக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தன் மீது செலுத்தப்படும் திடீர் கவனிப்பில் அது அசந்து போகிறது. தொடுதலுக்காக அது காத்துக்கிடக்கிறது. “அம்மாவுக்கு நோய் வந்துவிட்டது” என்னும் வாக்கியத்தை மீண்டும் மீண்டும் உச்சரித்து அதை ஒரு பாடல்போலப் பாடிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘Ibu sakit; Ibu sakit; kit kit kit….’ என்னும் வரிகள் மிகுந்த குதூகலத்தில் அக்குழந்தையின் வாயில் இருந்து வந்தவண்ணம் இருக்கிறது. வீட்டுக்கு வரும் நபர்களை வாசலிலேயே பாடலோடு வரவேற்று அம்மா படுத்துக்கிடக்கும் அறைக்கு அழைத்து வருகிறது. அவர்களின் தொடுதலை நாணத்தோடு ஏற்றுக்கொள்கிறது. பிறகு மீண்டும் வாசலுக்கு ஓடி அடுத்தவர் வருகைக்காக ஏக்கத்தோடு காத்துக்கிடக்கிறது. முடிவில் தன் தாய் இறந்தது அறியாமலே அவள் பக்கத்தில் படுத்து ஆழ்ந்து தூங்கத் துவங்குகிறது. சுற்றி நிற்போர் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர். இக்கதை மனித வாழ்க்கையின் அபத்தத்தையும் ஒரு குழந்தையின் அக உலக தர்க்கங்களையும் அதிர்வுகளோடு வெளிப்படுத்துகிறது.
தொடர்ந்து, மலாய் இனச் சமுதாயத்தின் மீதும் நாட்டு அரசியல் மீதும் கொண்ட அக்கறையின் காரணமாகவும் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். பெண் உரிமை, பாலியல், அறமற்ற தலைவர்கள் போன்ற பலதரப்பட்ட பிரச்சனைகளை இக்கதைகள் பேசுகின்றன. Ingau, Dongeng Merdeka, Al, Angan-angan Mr. Proudfoot போன்ற சிறுகதைகளில் அக்காலகட்ட அரசியல் தலைவர்களின் போலி முகங்களைப் பகடி செய்திருப்பதோடு நாடு பெற்ற சுதந்திரம் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது என்றும் சுட்டுகின்றார்.
1962-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட Pak Utih என்னும் சிறுகதை, கம்பத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் நகர்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இருக்கும் பொருளாதார வேறுபாட்டை அங்கதமாக விளக்குகிறது. பாக் ஊத்தே எனும் கிராமவாசி ஆண்டுக்கு ஒரு முறை (அறுவடை முடிந்ததும்) பக்கத்தில் இருக்கும் அலோர் ஸ்டார் நகரத்துக்கு தன் மனைவி பிள்ளைகளுடன் சுற்றுலா செல்லவேண்டும் என்று திட்டமிடுகிறான். அது தனது பொருளாதார நிலைக்கு ஒத்துவராது என்று அஞ்சினாலும் நகரத்துக்கு சென்று வந்தவர்கள் அது பற்றி வியந்து பேசுவது அவனது ஆசையை வளர்க்கிறது. மேலும் துங்கு அப்துல் ரஹ்மான் சுதந்திரம் பெற்றதன் விளைவாக அலோர் ஸ்டார் சொர்க்கமாக மாறிவிட்டதாகக் கூறுகின்றனர். அந்த அபரிமிதமான வளர்ச்சியைத் தாங்களும் பார்க்கவேண்டும் என்று பாக் ஊத்தே விரும்புகிறான். முடிவாக அவன் தன் குடும்பத்துடன் அலோர் ஸ்டார் செல்கின்றான். அங்கு பணம் மிக முக்கிய தேவையாக இருப்பதும் பிற இன வணிகர்கள் மலாய்க் கம்பத்து வாசிகளிடம் நயமாக பேசி வியாபாரம் செய்யும் சூழலும் அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
அவன் மனைவி சீன சிகை அலங்காரக் கடையில் தலைமுடியைச் சுருட்டிக்கொள்கிறாள். மகன்கள் கைக்கடிகாரமும், காலணியும் வாங்கிக் கொள்கின்றனர். விடுதியில் தங்க பணம் போதவில்லை. பிறகு வீட்டில் இருந்து கொண்டுசென்ற உணவை ஓர் இந்திய முஸ்லீம் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு இரவில் ஒரு பள்ளிவாசலில் தூங்கி விடுகின்றனர். அதிகாலை பஸ்ஸில் கம்பத்துக்குத் திரும்புகின்றனர். அவர்கள் திட்டமிட்டபடி உல்லாசமாக நகரத்தில் சுற்ற முடியாவிட்டாலும், தன் மனைவி சீனக் கடையில் முடி சுருட்டிக்கொண்டதை மிகப் பெருமையாக நினைத்துக்கொள்கின்றான் பாக் ஊத்தே. அதை அவன் கம்பத்தில் பல பேரிடம் பெருமிதத்தோடு பேச முடிவும் செய்கிறான். அன்றைய மலாய் இனத்தவரின் ஏமாளித்தனத்தை இக்கதை விவரிப்பதோடு, ‘மே 69’ கலவரத்துக்கு முந்தைய இன, பொருளாதார வேறுபாடும் அந்த ஏற்றத்தாழ்வுக்கு எதிரான குரலும் பதிவு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘Al’ என்னும் சிறுகதையில் அரசாங்க உயர்பதவி வகிக்கும் Ali ஆங்கிலேய வாழ்க்கை முறைக்கு அடிமையாகி, தன் இன நலனை முற்றாக மறந்து வாழ்கிறான். Dongeng Merdeka என்னும் சிறுகதையில் ஒரு பிச்சைக்காரனுக்கு பெயர் ‘மெர்டேக்கா’ (விடுதலை). அவன் எந்நேரமும் மெர்டேக்கா!, மெர்டேக்கா! மெர்டேக்கா! என்று முழங்கியபடி இருக்கிறான். அதே சமயம் அவ்வூர் நாடாளுமன்ற உறுப்பினர் தன் மூன்று மனைவிகளுடன் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அந்த அரசியல் தலைவரின் இளம் வயது மகன் அந்த ‘மெர்டேக்கா’வால் கவரப்பட்டு அவனைப் போலவே பாவனை செய்கிறான். தன் தந்தையிடம் ஒருமுறை ‘மெர்டேக்கா’ என்றால் என்ன என்று கேட்டதும் அந்த அரசியல் தலைவர் நிலைகுலைந்து தன் தேசப்பற்று பாவனைகள் அனைத்தும் சிதைந்து போனவராக நிற்கின்றார். இக்கதையில் எழுத்தாளர், பிச்சைக்காரனுக்கு மெர்டேக்கா என்ற பெயர் சூட்டியதன் வழி நாட்டு சுதந்திரத்தில் மறைந்திருக்கும் அபத்தங்களை மிகத் தீவிரமாகப் பேசுகிறார். உதாரணத்திற்கு “‘விடுதலை’ அரைநிர்வாணமாக, எலும்பும் தோலுமாக, பரட்டை முடியுடன், குச்சி போன்ற கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு, அசிங்கமாக பல் இளித்துக் கொண்டு வந்து வாசலில் நின்றது” என்னும் வரியில் மறைந்து நிற்கும் அரசியல் விமர்சனம் மிகக் கூர்மையானது.
ஆக, ஷாஹானூனின் சிறுகதைகள் யதார்த்தவாத சிறுகதைகளாக, அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும் அரசியல் அபத்தங்களையும் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாக இருப்பது உண்மை. ஆயினும் அவர் புனைவுகளை மீள்வாசிப்பு செய்வதன் வழி அவற்றில் மறைந்திருக்கும் அதிகாரங்களுக்கு எதிரான குரலைக் கண்டறிய முடிவதோடு புதிய தளத்தில் உரையாடலைத் தொடர முடிகிறது.
பல புனைவுகளில் அவர் விட்டுச்செல்லும் மெளனங்களின் வழி மட்டுமே அவரின் அதிகாரங்களுக்கு எதிரான குரலையும் கேலியையும் அறிந்துகொள்ள முடியும்.
அதிகாரம் என்பது அரசியல் அதிகாரமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. மதம், பண்பாடு போன்ற அதிகார பீடங்களாகவோ, குடும்பம், உறவுகள் போன்ற உறவு சார்ந்த அமைப்புகளாகவோ இருக்கலாம். மனித மன இயக்கங்களில் அதிகார வேட்கை என்பது மிக நுட்பமானது. அது வன்மையின் வழி மட்டுமே தன் செயல்பாட்டைத் தொடங்கும் என்பது ஒரு மாயையாகும். காரணம் அன்பு, காதல், நட்பு, பரிவு, அக்கறை, நன்றிக்கடன் போன்ற அழகிய முகங்களோடுதான் அது அதிகம் செயல்படுகிறது.
அதிகார மையங்கள் எல்லா இடங்களிலும் இருந்தாலும் அவை ஒன்றுபோல இருப்பதில்லை. சமுதாயத்தில் அடித்தட்டில் வாழும் மனிதனும் இன்னொரு மனிதனின் மீது தன் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் நிலைநாட்டவே முயல்கிறான். கணவன் மனைவியின் மீது செலுத்தும் அதிகாரம், தந்தை பிள்ளைகளின் மீது செலுத்தும் அதிகாரம், அண்ணன் தம்பிகளின் மீது செலுத்தும் அதிகாரம், ஆசிரியர் மாணவர்களின் மீது செலுத்தும் அதிகாரம் என்று அதிகார மையங்கள் சமுதாயத்தில் எல்லா நிலைகளிலும் இயங்கிக் கொண்டிருப்பதை ஷாஹானுன் அமாட் தன் புனைவுகள் சிலவற்றில் மையமாக வைத்துள்ளார் என்பது தீவிர மீள்வாசிப்பில் அறிய முடிகிறது. இத்தகைய நுண் பார்வை கொண்ட புனைவுகளுக்கு உதாரணமாக Kalau Ibu Sampai Takah Tiga (அம்மா பரலோகம் போனால்…), Perempuan (பெண்) ஆகிய இரண்டு புனைவுகளை சிறப்பாக குறிப்பிடலாம்.
Kalau Ibu Sampai Takah Tiga (அம்மா பரலோகம் போனால்…) என்னும் சிறுகதையில் மிக யதார்த்தமான ஒரு சூழல் குறிப்பிடப்படுகிறது., மரண வாசலில் கிடக்கும் தாயை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதையும், அவள் இறந்துவிட்டால் இறுதிக் காரியங்களை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் மிகத் துல்லியமாக விளக்கி ஒரு அண்ணன், தன் தம்பிக்கு எழுதிய கடிதமே இக்கதை. படுத்த படுக்கையாகக்கிடக்கும் அம்மாவுக்கு, எப்படியெல்லாம் மருத்துவம் பார்க்கலாம் என்று தொடங்கி, பணத்துக்கு எப்படி ஏற்பாடு செய்வது, கம்பத்தில் இருக்கும் நாட்டு வைத்தியர்களில் யாரெல்லாம் சிறந்தவர்கள், அவர்களை எங்கே சந்திக்கலாம், மற்றும் இறப்பு நிகழ்ந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், பிரேதத்தின் கால்மாட்டில் யார் இருக்க வேண்டும், தலைமாட்டில் யார் இருக்க வேண்டும், யார் யார் எத்தனை முறை குர்ஆன் ஓதவேண்டும், எந்த ‘காதியை’ அழைக்கலாம், பிணப் பெட்டியைச் சிறப்பாக செய்யக் கூடியவர் யார், குழி வெட்ட யாரை அழைக்கலாம், ‘கஃபான்’ துணியை எங்கு வாங்கவேண்டும், அதை யார் பயன்படுத்தவேண்டும் போன்ற விவரங்களை மிகத் துல்லியமாக அந்த அண்ணன் கடிதத்தில் எழுதுகிறார். மிகவும் சாந்தமான அன்பான மொழியில் அக்கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. தன் தந்தையின் இறப்பில் நடந்துவிட்ட சின்னச் சின்னக் குறைகள் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பது அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது. “தம்பி! அம்மாவை நன்றாகக் கவனித்துக்கொள்” என்னும் வேண்டுகோள் மீண்டும் மீண்டும் வைக்கப்படுகிறது. இச்சிறுகதையை வாசிக்கும் பலரும் இதில் வெளிப்படும் அண்ணனின் தாய்ப் பாசத்தையும் தம்பியின் மேல் கொண்ட அன்பையும் கண்டு வியந்துபோகக்கூடும். பல விமர்சகர்களும் இதையே குறிப்பிட்டும் உள்ளனர். அதோடு கம்பத்து இஸ்லாமிய மக்களின் வழக்குகள் பலவும் இக்கதையில் மிக இயல்பாக உள்ளதும் குறிப்பிடக்கூடியதே.
ஆயினும் இக்கதையில், கடிதம் எழுதும் அண்ணன் எங்குள்ளான் என்பதோ அவன் அம்மாவைப் பார்க்க ஏன் வரவில்லை என்பதோ எங்குமே குறிப்பிடப்படாதது வியப்பு. இவ்வளவு விவரமாகத் தன் தம்பிக்கு கடிதம் எழுதும் அண்ணன் ஏன் தானே வரவில்லை? அல்லது வரமுடியாத காரணம் என்ன? என்பது நம்மைத் தீவிரமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது. இது படைப்பாளி அறிந்தே செய்த விடுபடல் என்ற முடிவுக்கே நாம் வருகிறோம். அண்ணன் தம்பிக்குச் சொல்லும் செறிவான தகவல்களும் அறிவுரைகளும் வேண்டுகோள்களும் உண்மையில் அதிகாரத்தின் குறியீடு என்றே கூறலாம். அன்பு அல்லது பாசம் என்ற பெயரில் நம்மீது செலுத்தப்படும் அதிகாரத்தையும் மதம், பண்பாடு போன்ற அதிகார பீடங்கள் நம் மீது செலுத்தும் அதிகாரத்தையும் இக்கதை ஒருங்கே காட்டியுள்ளது. அண்ணன் கூறுபவனாக அல்லது கட்டளை இடுபவனாகவும் தம்பி கட்டளைகளைக் கேட்டு செயல்படுத்துபவனாகவும் இரு நிலைகளில் மனிதர்களை ஷாஹானுன் நிறுத்திக் காட்டுகிறார். பணம், பதவி, மதம், பண்பாடு, அன்பு, குடும்பம் என்ற பல நிலைகளில் மனிதர்கள் இன்னொரு மனிதன் மேல் செலுத்தும் மென்மையான அதிகாரமே இக்கதையின் சாரமாகும்.
அடுத்து Perempuan (பெண்) என்னும் புனைவில், பெண் ஒருத்தி தன் தந்தையால் தேர்வு செய்யப்பட்ட மணமகனை – வயது முதிர்ந்தவன் – திருமணம் செய்யப் பிடிக்காமல் மருகுவதைக் காட்டுகிறது. ஆயினும் அவள் தன் எதிர்ப்பைத் தன் பெற்றோரிடம் காட்டாமல் மெளனம் சாதிக்கிறாள். கிராமத்தில் சமயக் கல்வியில் வளர்ந்தவளின் மனநிலையை அவள் பிரதிபலிக்கிறாள். ஆயினும் அவள் ஆழ்மனக் கொந்தளிப்பை சுற்றி இருக்கும் பொருட்களின் மேலும் அற்ப உயிர்களின் மேலும் காட்டுகிறாள். காலை உரசும் பூனையும், வாசலில் நின்று உரத்துக் கூவும் கிழட்டுச் சேவலும் அவளின் வெறுப்புக்கு ஆளாகின்றன. சுவரில் நகரும் பல்லியையும் வீட்டு மூலையில் வலை பின்னி இருக்கும் சிலந்தியையும் வன்மமாகத் தாக்குகிறாள். தன்னைச் சுற்றி உள்ள உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் அத்தனையையும் அவள் சபிக்கிறாள். தன்னைச் சமையல் அறையில் இருக்கும் எந்தவித சுயஉரிமையும் அற்ற சமையல் பாத்திரங்களோடு ஒப்பிட்டு, சோர்ந்து போகிறாள். இச்சிறுகதை ஆணாதிக்கத்திற்கும் பெண் அடிமைக்கும் எதிரான குரலாக ஒலிப்பது வெளிப்படையானது. அதேசமயம் இப்புனைவின் வழி ஷாஹானுன், அதிகார மையம் குறித்த மற்றொரு பார்வையையும் விட்டுச் செல்கிறார். கீழ்திசை நாடுகளில் மரபாக கொண்டாடப்படும் தந்தையின் அதிகாரத்தையும் இக்கதை கேள்விக்கு உட்படுத்துகிறது. அதனினும் மேலாக, மனித மனம் தன்னைவிட வலிமை குறைந்தவர்கள் மீது செலுத்தும் அதிகாரத்தையும் பேசுகிறது. அந்தப்பெண் வல்லமை பொருந்திய இடத்தில் (தந்தை) அடங்கிப் போவதும் தன்னைவிட வலிமை குறைந்த பிராணிகளிடம் தன் அதிகாரத்தைக் காட்டுவதும் மிக முக்கிய குறியீடுகளாகும்.
Gelungnya Terpokah என்னும் சிறுகதையில் இரண்டு நபர்கள் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அதிகாரத்தையும் அதன் விளைவுகளையும் பேசுவதும் குறிப்பிடத்தக்கது.
ஷாஹானுன் அமாட்டின் படைப்புகள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் அதிகார மையங்களை விமர்சிப்பனவாகவே உள்ளன. ஆனால் அந்த அதிகார மையங்கள், பாமரர் முதல் மேல்மட்ட மனிதர்கள் வரை பரவி இருப்பதை அவர் கவனப்படுத்துகிறார். ஆயினும் அதிகார மையங்களைக் கேள்விகேட்கத் துணியும் ஒருவன் தன்னை அறியாமலேயே இன்னொரு அதிகார மையத்தை உருவாக்கிக்கொண்டு அதில் சிறைப்படும் நிலையே அவருக்கும் ஏற்பட்டுள்ளதை அவரின் வாழ்க்கை காட்டுகிறது. எனினும் மலேசிய இலக்கியத்தில் ஷாஹானுன் அமாட்டின் படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசிப்பதும் உரையாடுவதும் புதிய திறப்புகளை கொடுக்கும் என்பது உறுதி.
துணைநூல் பட்டியல்:
- Karim. (2014, April 26). Shahnon Ahmad. Retrieved from http://abkar178.blogspot.com/2014/04/shahnon-ahmad.html
- Sada Menua. (2010, July 19). Esei: Sumbangan Shahnon Ahmad dalam Mengangkat ISu Kemiskinan dalam Novel Pilihan. Retrieved from http://tajaulama90.blogspot.com/2010/07/esei-sumbangan-shahnon-ahmad-dalam.html
- Shahnon Ahmad. (2005). Tonil Purbawa, Siri Cerpen Pilihan Abad ke-20. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka.
- Laurent Metzger. (August, 2009).Continuity and Change in the Itinerary of the Malay Novelist, Shahnon Ahmad. Journal of Southeast Asian Studies. Retrieved from http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online HYPERLINK “http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=4441468″& HYPERLINK “http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=4441468″aid=4441468
- (2013, April 19). Sasterawan Negara Shahnon Ahmad. Retrieved from http://mimbarkata.blogspot.com/2013/04/shahnon-ahmad.html