மலேசியாவில் பல்வேறு மொழிகளிலும் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இவற்றுள் மலாய் இலக்கியம் தேசிய இலக்கியமாக விளங்குகிறது. இதர மொழிகளில் படைக்கப்படும் இலக்கியங்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் படைப்பாகவே பார்க்கப்படுகின்றன. இன்று வரையிலும் தமிழ் மற்றும் சீன எழுத்தாளர்கள் தங்களது படைப்பிலக்கியங்களைத் தேசிய இலக்கியமாக அறிவிக்கக் கோருகின்றனர். அறிவித்தபாடில்லை. இந்நிலையில் சீன இலக்கியத்தில், பரவலாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லாடல் ‘மலேசிய சீன இலக்கியம்’ என்பதாகும். இன்றைய காலகட்டத்தில் ‘சீன மலேசிய இலக்கியம்’ என்ற சொல்லாடல் மிக முக்கியமானதாகவும் பொருத்தமானதாகவும் கருதப்படுகிறது. இவ்விரண்டு சொல்லாடல்களும் ஒரே பொருளைக் கொண்டிருப்பதாக எண்ணலாம். ஆனால் சீனப் படைப்பாளர்கள் தங்களது படைப்புகளை ‘சீன மலேசிய இலக்கியம்’ என அடையாளப்படுத்துவதன் மூலமாக மலேசியவாழ் சீனப் படைப்பாளிகளால் படைக்கப்படும் இலக்கியமானது மலேசியத் தேசிய இலக்கியத்தின் ஒரு பகுதியென வலியுறுத்துகின்றனர் (கங்காதுரை, ஏப்ரல் 2014).
கற்பனைவாதமே (Romanticism) வரலாற்றுக் காலம் தொட்டு மலேசிய சீன இலக்கியப் படைப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு முன்பும் பின்பும் யதார்த்தவாத இலக்கியமே மலேசிய சீன இலக்கியத்தின் பொதுப்போக்காக இருந்துள்ளது. மலேசிய நவீன சீன இலக்கியம் 1930-களில் தோன்றி வளர்ந்தாலும், 1960–70-ஆம் ஆண்டுகளில்தான் உறுதியான ஒரு தளத்தை உருவாக்கிக்கொண்டது. அக்காலகட்டத்தில் தொகுக்கப்பட்ட நூல்களில் குறிப்பிடத்தக்கது ‘மலேசிய நவீன சீன இலக்கியச் சிறுகதை’ தொகுப்பு நூல். இந்நூல் இன்று வரையிலும் மிக முக்கியமானதொரு நூலாக விளங்குகிறது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் மலேசியச் சீன எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 1967-ஆம் ஆண்டு நூல் வடிவம் கண்டு பொதுவில் அறிமுகமானது அதுவே முதன்முறை. இப்பணியை லியோன் கொம்பெர் (Leon Comber) ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பாக செய்து முடித்தவர் லாய் சிங்கோ (Ly Singko). லாய் சிங்கோ பெய்ஜிங் பல்கலைக்கழகத்திலும் பாரீஸ் பல்கலைக்கழகத்திலும் கல்வி பெற்றவர். ஆரம்ப காலங்களில் சிங்கப்பூர் ஞாங்சியாங் பாவ் நாளிதழில் செய்தியாளராகப் பணிபுரிந்தவர். அதோடு சிங்கப்பூர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சீன நாடகம் குறித்து பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றியவர். லாய் சிங்கோ சீன இலக்கியத்திற்கு முக்கியப் பங்காற்றியவர். லாய் சிங்கோவிற்கு உறுதுணையாக இருந்த லியோன் கொம்பெர், HEINEMANN EDUCATIONAL BOOKS (ASIA) LTD பதிப்பகத்தின் தென்கிழக்காசிய பிரிவுக்கான நிர்வாக இயக்குனராக பணியாற்றியவர். இப்பதிப்பகமே இந்நூலை அச்சடித்து 1967-ஆம் ஆண்டு முதல் பதிப்பையும் 1975-ஆம் ஆண்டு மறுபதிப்பையும் வெளியீடு செய்தது.
இந்நூலின் சிறப்பு அம்சம், அதன் அணிந்துரை. இந்நூலுக்கு அணிந்துரை எழுதியவர் ஹான் சூயின் (Han Suyin). ஹான் சூயின் சீன எழுத்துலகில் மிக முக்கியமானவர். தன்னுடைய இருபது பக்க அணிந்துரையில் ஹான் சூயின் வரலாற்றுச் சான்றுகளுடன் மலேசிய சீன இலக்கியம் எதிர்கொண்ட சிக்கல்களை விவரித்துள்ளார். அதில் குறிப்பாக ‘மலேசிய சீன இலக்கியம்’ மற்றும் ‘சீன மலேசிய இலக்கியம்’ ஆகிய இரண்டுக்கும் உள்ள முரண்களைக் குறிப்பிட்டுப் பேசியிருப்பது, அப்போதே சீன இலக்கியம் தேசிய இலக்கியத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட்டதை அறிய முடிகின்றது. அதுமட்டுமின்றி ஹான் சூயின் தனது அணிந்துரையில் மற்றொரு விடயத்தையும் முன்வைக்கிறார். அதாவது இலக்கியம் என்பதை மொழியின் அடிப்படையில் வகைப்படுத்தலாகாது. மாறாக அவை இலக்கியத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். அதைத்தவிர மலேசியாவில் சீன இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இதில் விளக்கப்பட்டுள்ளது. அதோடு சீன இலக்கியத்தின் தேவையும் அதன் அவசியத்தையும் குறித்து விவரித்துள்ளார். ஹான் சூயினின் விரிவான, விளக்கமான அணிந்துரையின் நம்பகத்தன்மை வரலாற்றுச் சான்றுகளின் உறுதுணையோடு வலுப்பெற்றிருக்கின்றன.
லாய் சிங்கோ தனது முன்னுரையில் சீனர்கள் மலேசிய நாட்டுக்கு வந்த வரலாற்றை குறித்து விவரிக்கிறார். ‘மிங்’ பேரரசை சேர்ந்த ‘செங் ஹோங்’-இன் காலத்திலிருந்து சீனர்கள் தீபகற்ப மலாயாவிற்கு வருகை புரிந்துள்ளனர். இங்கேயே நிரந்தரமாகக் குடியேற வந்த சீனர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பிரிட்டிஷ் மலாயாவிற்கு வந்தபோது இங்கு அதிகமான சீனர்கள் இருந்தனர். பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கீழ் இன்னும் அதிகமான சீனர்கள் மலாயாவில் குடியேறினர். இவர்களுக்கு அடுத்து சீனக் கல்வியாளர்களும் இங்கே குடிபெயர்ந்தனர். இதன் மூலமாக சீன இலக்கியம் படிப்படியாக வளர்ந்தது. ஆரம்பகால மலாயா சீன இலக்கியம், சொற்பமான படைப்புகளால் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துள்ளது. ஆரம்பகாலப் படைப்புகள் வெறும் சீன இலக்கியமாக இருந்தனவே தவிர மலாயா சீன இலக்கியமாக இல்லை. இரண்டாம் உலகப்போருக்கு முன்பும் அதன் பின்பும் எழுத்தாளர்களின் மனநிலையும் அவர்களது படைப்புலகம் பற்றியும் விவரிக்கிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சீன எழுத்தாளர்களில் குறிப்பாக புதிய தலைமுறை எழுத்தாளர்களிடம் பரவலான மாற்றத்தைக் காண முடிந்ததை நம்மால் அறியமுடிகிறது. போருக்கு முன் மலாயாவில் பல ஆண்டுகளாக தங்கியிருந்தும் பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களை ‘திசையற்ற பறவைகளாகவே’ எண்ணியுள்ளனர். அவர்கள் மலாயாவைத் தங்களது இருப்பிடமாகவோ அல்லது நாடாகவோ எண்ணவில்லை. இந்நிலை போருக்குப் பிந்திய புதிய தலைமுறை எழுத்தாளர்களிடம் மாறியது. அவர்கள் மலாயாவே நம் இருப்பிடம்; இதுவே நம் தாய்நாடு என்று எண்ணினர். இதன் வாயிலாக சிங்கப்பூரில் இயங்கிக்கொண்டிருந்த மலாயாப் பல்கலைக்கழகத்தில் சீன ஆய்வியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சீனப் பல்கலைக்கழகமாக நன்யாங் பல்கலைக்கழகமும் தோற்றம் கண்டது. இவை எழுத்தாளர்களுக்குப் புதிய நம்பிக்கையூட்டும் தளமாக அமைந்தன. லாய் சிங்கோ தன்னுடைய முன்னுரையில் இலக்கியப் பதிப்புகளைப் பற்றிய தகவலையும் இணைத்துள்ளார். 1919-ஆம் ஆண்டு முதல் 1942-ஆம் ஆண்டு வரை அரை டஜனுக்கு மேற்போகாத படைப்பிலக்கியங்களே வெளியிடப்பட்டுள்ளன. 1945-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி 1960-ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 137 நாவல்கள் மற்றும் சிறுகதைகள், 20 கவிதை தொகுப்புகள், 56 கட்டுரைத் தொகுப்பு நூல்கள் மற்றும் 16 பிற நூல்களும் வெளியீடு கண்டுள்ளன என்பதை லாய் சிங்கோ குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் போருக்குப் பிந்தைய நன்கு அறிமுகமான எழுத்தாளர்களின் படைப்புகளில், 13 சிறுகதைகளை அதன் தரம், உள்ளடக்கம் மற்றும் கதையின் நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து சீனர் அல்லாதவர்களின் வாசிப்புக்காக லாய் சிங்கோவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
இத்தொகுப்பிலிருந்து ஓரிரு சிறுகதைகளை அறிமுகம் செய்வதின் வழி வாசகர்களின் தேடலுக்கு இத்தொகுப்பு நூல் உள்ளாகும் என நம்பலாம்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள முதல் சிறுகதையானது ‘தான் கோங் பேங்’ எழுதிய “A Jungle Passage”. இச்சிறுகதையை எழுத்தாளர், தன்னிலையில் இருந்து சொல்லத் தொடங்குகிறார். கதையின் தொடக்கமே, ஜூன் மாதம் 1947-ஆம் ஆண்டு திரெங்கானு, பஹாங் மாநிலங்களின் எல்லையிலிருக்கும் ஓர் அடர்ந்த காட்டிலிருந்து தொடங்குகிறது. கதையின் மாந்தர்கள் இரண்டு பேர் மட்டுமே. ஒன்று கதைசொல்லி மற்றொன்று கதைசொல்லியின் பயண வழிகாட்டி பெங்ஹூலு ஹமீட் சாலே (கிராமத்துத் தலைவர்). கதைசொல்லி ‘புண்டி’ எனும் இடத்திலிருந்து ‘பஞ்சிங்’ எனும் இடத்திற்குச் செல்கிறார். பயண வழிகாட்டியான பெங்ஹூலு ஹமீட் அந்தக் காட்டுப் பாதையை நன்கு அறிந்தவர். பயணத்தின் ஊடே பெங்ஹூலு காட்டையும், காட்டிலிருக்கும் மிருகங்களையும் பற்றி விவரிக்கிறார். பொழுது சாய்ந்தபோது காட்டில் ஓர் இடத்தில் தங்கி மறுநாள் பயணத்தைத் தொடர முடிவெடுக்கின்றனர். பெங்ஹூலு நெருப்பை மூட்டுகிறார். கதைசொல்லி தரையில் சாய்கிறார். பெங்ஹூலு கதைசொல்லியிடம், காட்டில் எல்லா மிருகங்களும் நெருப்புக்குப் பயப்படும். இருந்தாலும் பாராங் கத்தியைப் பாதுகாப்புக்குப் பக்கத்திலேயே வைத்துக்கொள்ளும்படி எச்சரிக்கிறார். எம்மாதிரியான மிருகங்களை இங்கே பார்க்க முடியுமெனக் கேட்கிறார் கதைசொல்லி. பெங்ஹூலு தாம் ஏற்கெனவே இங்கே இரண்டு புலிகள் மனிதனின் இறைச்சிக்காக சண்டையிட்டதைப் பார்த்ததாகச் சொல்கிறார். இது தன்னை பயமுறுத்துவதற்காகச் சொல்வதாக எண்ணுகிறார் கதைசொல்லி. இவ்விடத்தில் இருவருக்கும் தொடர் உரையாடல் நிகழ்கிறது. உரையாடலின் இறுதியில் கதைசொல்லி பெங்ஹூலுவிடம், ‘என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறாயா?’ என நேரடியாகக் கேட்கிறார். ‘நீ பயப்படவில்லையென்றால் நான் உன்னிடம் ஓர் உண்மையைச் சொல்கிறேன்’ என பெங்ஹூலு கதைசொல்லியைப் பாறைகளிருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். பாறைகளின் பின்னால் அவர் சற்றும் எதிர்பார்த்திராத மனித எலும்புக்கூடுகள் குவிந்து கிடக்கின்றன. கதைசொல்லி பயத்தில் உறைந்துபோய் மீண்டும் பெங்ஹூலுவுடன் தாம் இருந்த இடத்திற்குத் திரும்புகிறார். கதைசொல்லி கண்ட எலும்புகூடுகள் பெங்ஹூலுவினால் கொல்லப்பட்டவர்களுடையது. கொல்லப்பட்டவர்கள் யாரென்பதை கதைசொல்லி பயத்துடன் விசாரிக்கும்போது, அவர்கள் மனித அரக்கர்கள் என்கிறார் பெங்ஹூலு. தொடர்ந்து தனது கடந்தகால வாழ்க்கையும் தாம் அனுபவித்த கொடுமைகளையும் பெங்ஹூலு கதைசொல்லியிடம் பகிர்ந்துகொள்கிறார். இறுதியாக நிஜ வாழ்க்கையின் உண்மையைச் சொல்லிவிட்டு, உறங்குகிறார். இப்போது கதைசொல்லி நிம்மதியையும் தூக்கத்தையும் இழந்து பயத்துடன் பாராங்கத்தியை அழுத்திப் பிடித்துக்கொண்டு பெங்ஹூலுவைப் பார்த்தபடியே உட்கார்ந்திருப்பதாகக் கதை முடிகிறது. இக்கதையானது வெறும் காட்டைப்பற்றிp பேசும் கதையாக அல்லாமல் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதற்கு காட்டையும், மிருகங்களையும் படிமங்களாகக் காட்டும் கதையாக விளங்குகிறது.
இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு சிறுகதை ‘வாங் வேய்’ எழுதிய “Lily’s secret”. இச்சிறுகதை, உலகம் மிகச் சிறியது; இவ்வுலகில் மனிதன் சக மனிதனை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறான் என்பதை விவரிக்கிறது. லில்லி என்பவள் காபரே நடனமணி. மிகவும் நேர்மையானவள். தன்னுடைய நடனத்திற்குரிய பணத்தை மட்டுமே பெறுபவள். நள்ளிரவுக்குள் வீடு திரும்புவது அவளது வழக்கம். அவள் நடனமாடும் பாரில் ஒருவன் அவளது அழகில் மயங்கி அவளோடு தனியே வெளியே செல்ல பலமுறை கெஞ்சுகிறான். அவள் ஒவ்வொரு முறையும் மறுக்கிறாள். ஒருமுறை வழியின்றி, தன்னை நள்ளிரவுக்குள் வீட்டுக்கு அனுப்பிவிட்டால் தாம் அவனோடு வெளியே வருவதாகச் சொல்லி சம்மதிக்கிறாள். அவனும் அதற்கு ஒப்புதல் கொடுக்கிறான். அவளோடு வெளியே சென்றவன், அன்றிரவு அவளைத் தன்னோடு வைத்துக்கொள்ள முயற்சிக்கிறான். அவள் எதற்கும் அசைந்துகொடுக்காமல் வீட்டுக்குச் செல்வதிலேயே குறியாக இருக்கிறாள். அவனும் வேறு வழியின்றி அவளை வீட்டுக்கு அனுப்ப இணங்குகிறான். தனது காரில் அவளை அழைத்து செல்லும்போது அவன் மீண்டும் அவளை வீட்டுக்குத் திரும்பவிடாமலிருக்க முயற்சி செய்கிறான். வேண்டுமென காரை மெதுவாக ஓட்டிச் செல்கிறான். அவள், தாம் உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாகவும் நேரத்திற்குள் வீட்டுக்குத் திரும்பவில்லையென்றால் கதவை யாரும் திறந்துவிடமாட்டார்கள் என்றும் கெஞ்சுகிறாள். நேரத்திற்குள் வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றால் தனக்கு முத்தம் கொடுக்க வேண்டுமென்கிறான். அவள் வேறு வழியின்றி அவனுக்கு முத்தம் கொடுக்கிறாள். அவன், லில்லியை அவளது இடத்தில் இறக்கிவிட்டுச் சென்று தொலைவில் மறைந்து கொள்கிறான். அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின்தொடர்ந்து அவளது வீட்டைச் சென்றடைகிறான். அவள் வீட்டில் தன் குழந்தையோடு கொஞ்சி மகிழ்கிறாள். அதோடு தன் கணவனிடம் அவனைப் பற்றி திட்டிக் கொண்டிருக்கிறாள். எல்லாவற்றையும் வீட்டின் வெளியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அவன் உடனடியாக அவளது வீட்டுக்குள் நுழைகிறான். அவள் அதிர்ச்சி அடைகிறாள். ‘இதுதான் நீ சொன்ன அந்த உறவினர்களா’ என அவன் அவளை வம்பு செய்கிறான். ஓர் அறையிலிருந்து உடைந்த காலுடன் அவளது கணவன் நொண்டியபடியே கோபத்துடன் அவனை நோக்கி வருகிறான். அவனும் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறான். ‘ஓ…நீயா! என் அருமை முதலாளியின் மகனே’ எனக் கத்துகிறான் லில்லியின் கணவன். இப்போது அவனுக்கு லில்லியின் கணவனது முகம் தெளிவாகத் தெரிய, ‘நீயா’ என அலறியபடி வீட்டைவிட்டு ஓட்டம் எடுக்கிறான். காரில் அமர்ந்தபின் லில்லியின் கணவன் பற்றி யோசித்துப் பார்க்கிறான். அவனது தந்தையின் தொழிற்சாலையில் பொறியாளராக வேலை செய்தவன். ஐந்து மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலை விபத்தில் கால் உடைந்து ஊனமாகி போனான். இழப்பீடு கேட்டு அப்பாவைப் பார்க்க வந்தவன், அடித்து உதைக்கப்பட்டு சாலையில் தூக்கியெறியப்பட்டான். அவனது மனைவிதான் லில்லி. உலகம் மிகச் சிறியது என்ற இறுதி வரிகளுடன் கதை நிறைவு பெறுகிறது.
இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு சிறுகதையானது ‘மி சியோ’ எழுதிய “Return”. இச்சிறுகதை வழக்கமான ஒரு காதல் கதையாகவே இருக்கிறது. இக்கதை ஓர் இரயில் பயணத்திலிருந்து தொடங்குகிறது. ஒரு பெண் தன் சொந்த ஊருக்குத் திரும்புகிறாள். பயணத்தின் ஊடே தனது கடந்தகால வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கிறாள். அவள் வாழ்ந்த ஊரில் ஓர் ஆசிரியர் அவள் மீது காதல் கொள்கிறார். அவளைத் திருமணம் செய்ய விரும்புகிறார். அவள் ஆசிரியரின் விருப்பத்தை நிராகரிக்கிறாள். ஊரை விட்டு கப்பல் பணியாளர் வேலைக்குச் செல்கிறாள். கப்பலில் வேலை செய்யும்போது அவள் தன்னைவிட குறைந்த வயதுடைய அயல் தேசத்து இளைஞனுடன் காதல் கொள்கிறாள். இருவரும் காதலில் திளைக்கின்றனர். ஒரு கட்டத்தில் இளைஞன் தன் சொந்த நாட்டுக்கு திரும்பப் போவதாக சொல்கிறான். அவள் தன்னையும் அவனோடு அழைத்துச் செல்லும்படி கேட்கிறாள். அவன் மறுக்கிறான்; காதலையும் முறித்துக்கொள்கிறான். காதல் தோல்வியால் விரக்தி அடைகிறாள். விரக்தியில் நாட்களை நகர்த்தும் அவளுக்கு அத்தையிடமிருந்து கடிதம் வருகிறது. அதன் வாயிலாக அவளை விரும்பிய ஆசிரியர் அவளது நிராகரிப்புக்குப் பின்னர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகவும், சமீபத்தில் அவளிடமிருந்து விவாகரத்து பெற்றதையும் அறிகிறாள். இப்போது அவள் ஊருக்குச் செல்ல எண்ணுகிறாள். அங்கே அவளுக்கான புதுவாழ்க்கை கிடைக்குமென நம்புகிறாள். நம்பிக்கையோடு ஊருக்குத் திரும்புகிறாள். ஊருக்குள் செல்லும்போது ஆசிரியர் பணிபுரியும் பள்ளியைக் கடக்கிறாள். பள்ளியைச் சுற்றிப் பார்க்கிறாள். பள்ளி மாணவர்களின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றது. அவள் அங்கிருக்கும் பாதுகாவலனிடம் விசாரிக்கிறாள். அப்பள்ளியின் ஆசிரியர் இறந்துவிட்டதாகவும் மாணவர்கள் எல்லோரும் இறப்பு வீட்டுக்குச் சென்றுள்ளதாகவும் சொல்கிறான். அவள் யாரெனக் கேட்கிறாள். அவன், இங்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருந்ததாகவும், அவர் பெயர் திரு. சாங்; மிகவும் நல்லவர்; இளம் வயதிலேயே இறந்துவிட்டார் எனக் கூறி வருத்தப்படுகிறான். அவள் ஆசிரியர் இறந்த காரணத்தினைக் கேட்கிறாள். ‘கொஞ்சம் காலமாகவே ஆசிரியருக்கு நுரையீரல் கோளாறு, அதைவிட அவர் சமீபத்தில் மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற்றவர். அதன் வேதனையே அவரை இறுதியில் கொன்றுவிட்டது’ என பாதுகாவலன் சொல்லி முடிக்கும்போது சவ ஊர்வலம் அவ்வழியாக வந்து கொண்டிருந்தது. அவள் நிலைகுலைந்து போகிறாள்; உலகமே இருண்டது போல் தோன்றுகிறது. அழுகையைக் கட்டுப்படுத்த இயலாமல் வெடிக்கிறாள். கனத்த இதயத்துடன் மாணவர்களோடு ஊர்வலத்தில் நடந்து செல்கிறாள். அவளால் ஊர்வலத்தைத் தொடர முடியவில்லை. ஊரின் பார்வையே அவள் மீது விழுகிறது. அப்படியே நின்றுவிடுகிறாள். திடீரென மீண்டும் ரயில் நிலையத்தை நோக்கி ஓடுகிறாள். அதோடு இச்சிறுகதை நிறைவடைகிறது.
பதிமூன்று சிறுகதைகள் இடம்பெற்றுள்ள இத்தொகுப்பு நூலிலிருந்து சில சிறுகதைகள் மட்டுமே இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிறுகதையும் உள்ளடக்கத்தின் வாயிலாகத் தனித்து நின்றாலும், மொத்தத்தில் இச்சிறுகதைத் தொகுப்பு மனிதம், வாழ்வியல், நட்பு, காதல், ஜப்பானிய ஆட்சிக்காலம் என ஒரு கலவையான தொகுப்பாகவே அமைக்கின்றது. குறிப்பாக, சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு மிகச்சிறப்பாக இருப்பதை வாசிக்கும்போதே உணர முடியும். வாசிப்பதற்கு மிக இலகுவான மொழிநடையிலேயே இச்சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இது லாய் சிங்கோவின் மொழிபெயர்ப்புத் திறமையைக் காட்டுகின்றது. பொதுவாகவே இதுவரையிலும் மலேசிய சீன இலக்கியத்தை வாசிக்காதவர்களுக்கு, இச்சிறுகதைத் தொகுப்பு புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. இதன் வாயிலாக சமகாலத்தில் பிறமொழி இலக்கியங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க ஏதுவாக இருக்கும்.
துணைநூல் பட்டியல்
- Chee, L. S. An Introduction to Malaysian Chinese Literature. UTAR.
- Heinemann, W. (1967). An Anthology of Modern Malayan-Chinese Stories(translated by Ly Singko in collaboration with Leon Comber). Singapore.
- Mimi Chan & Harris, R. (1991). Publishing Asian Writers in English’ inAsian Voices in English .(eds.), Hong Kong: University of Hong Kong Press.