உயிர்க்காடு

kumar-2ரானே திகைத்தான். என்ன செய்வதென்று எதுவும் புரியவில்லை. தலையை பெரிய உருளைக்குள்ளே விட்டு மாட்டிக்கொண்டது போல உடலும் மனமும் வலித்துக்கிடந்தன. இந்தநாள், நல்ல நாளாக விடியவில்லை. லேசாகத் தூறிக்கொண்டிருந்த வானம், மென்புழுக்கத்தை ஏற்றியதும் வியர்வையும் அதிகமாகியது. ‘எப்படி இதைச் சரிசெய்யப்போகிறோனோ’ என்று மிகவும் பதட்டமானான். மனதின் உள்ளுக்குள் ஒரு சுடுநீராவிக்குடிலுக்குள் அமர்ந்துள்ளது போலிருக்க, ’நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி’ என்று மனதில் நினைத்துக்கொண்டான்.

தனது வீவக வீட்டுக்குக் கீழே, காரை ஓட்டிவந்த ரானே, தனது காரை, ’எங்கே நிறுத்துவது?’ என்று இப்போது யோசித்தான். திறந்தவெளிக் கார்நிறுத்துமிடத்தில் தனது காடியை நிறுத்தலாமா, இல்லை இருபிளாக்குகள் தள்ளியிருக்கும், சிறுமலையின்கீழ் நிறுத்தலாமா என்று யோசித்ததில் சிலநிமிடங்கள் கரைந்தன. ’அடுக்குமாடி கார்நிறுத்துமிடம் பிரச்சனையற்றது’ என்று தோன்றினாலும், ’மேலேயும் கீழேயும் ஏறி இறங்குவதில், காருக்குப் பின்னால் இருப்பது என்னாகுமோ’ என்ற யோசனை வர, இங்கேயே நிறுத்துவது உசிதமெனப்பட்டது. உயரமாய் அங்கு நின்றிருந்த நான்கைந்து மரங்களும் தன்னை ஒற்றுப்பார்ப்பது போன்ற கிலியுணர்வைத்தர, மிகவும் தாழ்வான மரத்திற்கு அருகில் தனது காரை நிறுத்தினான்.

’மிகவும் உயரத்திலிருந்து கீழே பரந்தவெளியைப் பார்க்கையில் தன்னுடையதும் தெரிந்துவிடுமோ’ என்ற தேவையற்ற அச்சம், ரானேயைச் சிறிது வாட்டியது. காடியின் இயக்கத்தை மெதுவாக அணைத்துவிட்டு, அந்தக்கட்டிடத்தின் நீண்ட வாலைப்போலிருந்த வீட்டுவசதி வாரியக்குடியிருப்பின் மின்தூக்கி தளமேடையைநோக்கி சரசரவென்று நடந்தான்.

வழியில் வெள்ளையும் கருப்பும் கலந்து கிடந்த ஒரு சிறுபூனை தலையைத் தூக்கிப் பார்க்காமலேயே எதோ ஒரு நினைவில் ’உர்’ரென்றது. விருட்டென்ற அவனது நடையின் வேகத்தில், அது இப்போது, தலையைத் தூக்கிப் பார்த்ததில், அதன் இருகண்களும் சிறு நெருப்புத்துண்டுகள் போல ஒளியைச் சிதறி அவனை மேலும் கலவரமூட்டின. சிலநிமிட இருட்டுக்குள் நடந்துவந்தது நிம்மதியாக இருந்ததைப் போலிருந்தாலும், மின்தூக்கியிலிருந்து வெளிவந்ததும், அணைந்து கிடந்த சில தானியங்கி விளக்குகள், அந்நடைபாதையில் ஒளிரத்துவங்க, அவனுக்குத் திடுமெனப் பயம் வந்தது.

உட்லண்ட்ஸ் தெரு 13ல், வடக்கே நீண்டு கிடைக்கும் நீர்ப்பிடிப்புக்குளத்திற்கும், கிழக்கில் உயர்ந்து பரவிநிற்கும் சிறு மலைக்குன்றுக்கும் இடையிலுள்ள, புளோக்கு எண் 22ன், எட்டாவது மாடியில் இருந்தது அவனுடைய நான்கறை வீடு. இன்றுபோல என்றும் அவன், நள்ளிரவு தாண்டி, பலநேரங்களில் தாமதமாகத்தான் வீட்டுக்கு வருவதுண்டு. மின் தூக்கியிலிருந்து அவனது வீட்டுக்கு, நான்கு வீடுகளைத்தாண்டிச் செல்லவேண்டும். நள்ளிரவு தாண்டியும் வீட்டுக்குவரும்போதும் போகும்போதும் யாரும் அவனை பொருட்படுத்துவதில்லை என்பதால் இப்போதும் ஒரு அசௌகரியமும் இல்லாமல் நடந்தான். மூன்றாவது வீட்டின் வாசலிலிருந்த அந்த முட்செடியின் ஒருபகுதி காற்றில் சரசரத்துக் கையில்பட்டு சுருக்கென்று வலித்தது.

முன்பு ஒருமுறை நகரமன்றத்திற்கு, இந்த முள்செடியைக்குறித்து புகார் செய்திருந்தாலும், இப்போதிருக்கும் அவசரத்திலும் பதற்றத்திலும், அவனுக்கு அது ஒரு வலியாயில்லை. தனது வீட்டு வாசலை அடைந்ததும், அழைப்பு மணியை அழுத்தலாமா, வேண்டாமா என ரானே யோசித்தான். கைத்தொலைபேசியில் ’இயங்குமின்சக்தி’ இல்லாது அணைந்துகிடக்க, அழைப்புமணியைத்தவிர வேறு வழியில்லை என்பதால், ரானே ஒருமுறை மெதுவாக அழைப்புமணியை அழுத்தினான். சிலநிமிடங்களுக்குப்பிறகு, மீண்டும் அழைப்புமணி நோக்கிக் கைநீள்கையில், கதவு மெதுவாகத் திறந்தது.

கலைந்த இரவுடையில் இருந்த ’நானா’ கதவைத் திறந்தாள். ”சீக்கிரம், திற” என நீருக்குள் பாயும் மீனைப்போல வீட்டுக்குள், விருட்டென்று நுழைந்தான் ரானே. வியர்த்து, விறுவிறுத்து, மிகவும் பதட்டமாயிருந்த அவனைப் பார்த்ததும், திடுக்கிட்ட அவள், பயந்து அவனைப் பின்தொடர்ந்து, அவனுடன் உள்ளே சென்றாள்.

”என்னானது, ஏன் இவ்வளவு பதட்டமாயிருக்கிறாய்?” என்றாள் ‘நானா’ மலாய்மொழியில். இரண்டாய் வெட்டிய பரங்கிக்காய்போல படர்ந்து விரிந்த அவளது முகத்தில், நீரில் அலைக்கழிக்கப்பட்ட கொடிகள் போல, சில முடிக்கற்றைகள் விழுந்து தொங்கின. தொய்வாகக் கிடந்த kumar-3பனியன் போன்ற மேலாடையையும் இடுப்புக்குக்கீழே நழுவிய அரைக்கால் சட்டையையும் போட்டிருந்தாள்.

நானாவும் அவளது காதலனான ரானேயும், ”மலாய் இனத்தினர்” என்று அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டாலும், மூன்று தலைமுறைக்குள்ளாக, எல்லா மத, இன அடையாளங்களையும் பல்வேறு கலப்புத் திருமணங்களின்வழி கலைத்துவிட்டு, சிங்கப்பூரர்கள் என்பதை மட்டுமே அடையாளமாய் கொண்டவர்கள்.

”கஸி அயெ உந்தோ மினும்” (குடிக்க எனக்குத் தண்ணீர் வேண்டும்) என்று கூறியவன், திடீரென நினைவுக்கு வந்தவனாய், பாய்ந்துசென்று அவள் ஏற்றியிருந்த மின்விளக்கை அணைத்தான். அவள் அதிர்ச்சியாகி, ”என்ன? ஏன் மின்விளக்கை அணைக்கிறாய்” என்றாள்.

அவன் ஒன்றும் சொல்லாமல், அந்த நீள்செவ்வக வரவேற்பு அறையின் தெற்குச்சுவரில் தொங்கிக்கொண்டிருந்த தொலைக்காட்சித் திரைக்கருகில் இருந்த புகைப்பெட்டியை எடுத்து, எதிரில் கிடந்த கரும்பச்சைநிற மிதவை இருக்கையில் அமர்ந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான். அவனருகில் வந்த நானா, சிறுகண்ணாடிக்குவளையில் கொண்டுவந்த நீரைக்கொடுத்துவிட்டு, ”மெஞ்ஞாபா, மெஞ்ஞாபா (என்னாச்சு?) ஏன் ஒன்றுமே சொல்லாமல் இப்படி இருக்கிறாய்” என்றாள்.

அவன் புகைப்பதில் தெரியும் பதட்டம், அச்சத்தைத் தர, அவன் தோளைத்தொட்டு, ”பெரப்பா காலி ஸயா தாஞா?” (எத்தனை தடவை நான் கேட்பது) என்று அவனை அசைத்தாள். அவன் அதிர்ந்தான். உடலைக் குலுக்கியவாறு அவளின் கைகளை விடுத்து, “மானா மானா புன் ஸூஸா, மானா மானா புன் ஸூசா” என்றவாறு புலம்பினான்.

ஏதோ நடந்துவிட்டது, இல்லையேல் இவன் எவ்வளவு அதிர்ச்சியடைந்திருக்கமாட்டான். என்னவென்று சொல்லித் தொலைத்தாலும் பரவாயில்லை. என்ன செய்வது என்று யோசித்தவாறு, ”என்ன பிரச்சனை, அப்பெ ஹல்?” என்றாள், கொஞ்சம் வெறுப்புடனே.

”யாராவது வீட்டில் இருக்கிறார்களா? யாரும் இல்லைதானே?” என்று கேட்டான் ரானே. நடுநடுங்கின அவனுடைய கைகள்.

”யாரும் இல்லை, நமது சகோதரி சூசன், தன் பிள்ளையோடு மாலையில் வந்தாள். உள்ளே, அறையில் தூங்கிக்கொண்டிருக்கிறாள். வேறு யாரும் இல்லை. அவள் இன்றிரவு இங்கு வருகிறாள் என்று உனக்கு நான் சொன்னேன் அல்லவா?” என்றாள் நானா.

ரானே மேலும் புலம்பினான். ”பாஞ்ஞா  ஸூஸா லா” என்றான்.

”என்ன பிரச்சனை? யாருக்கு என்ன பிரச்சனை பாங்? அவள் இங்கு இருப்பதால் என்ன பிரச்சனை உனக்கு? ஏன் இப்படிப் பதறுகிறாய்? சொன்னால்தானே தெரியும், பாங், சக்கப் லா, என்ன ஆனது? அவளை எழுப்பவா?” என்றாள்.

”அவளை எழுப்பாதே! அவள் காதலனோ முன்னாள் கணவனோ போலீசில் அல்லவா வேலைபார்ப்பதாய்ச் சொன்னாய்? அவளை எழுப்பாதே, அவள் நம்மைக் காட்டிக் கொடுத்துவிடுவாள்” என்று அவன் புலம்பத்தொடங்க, ’என்னானது இவனுக்கு’ என்று நினைத்துக்கொண்டு, “இரு வருகிறேன்” என்று சமையலறையின் சன்னலை நோக்கிச்சென்றாள் நானா.

எட்டாவது மாடியிலிருந்த அவர்களது வீட்டின் சமயலறைச் சன்னலிலிருந்து, கீழேயிருக்கும் திறந்தவெளி கார்நிறுத்ததை அவள் பார்க்க, விளக்குகளின் நிழலில், மரங்கள் ஆங்காங்கு சிறுகுழுவாய்க் குழுமியிருந்ததைப் போலிருந்தது. தூரத்தில் ஒரு சிறுமரத்திற்குமுன்னால், அவர்களுடைய கார் நிறுத்தியிருப்பதைக் கண்டாள்.

முன்னாலும் பின்னாலும் கருப்புவர்ணம் பூசி, முன்னால் ஒரு போலீஸ் காடியைப்போலவும் பின்னால், பந்தயக்காரின் மாதிரி போலவும், விரிந்த சிறகுபோன்ற அலுமினியப்பகுதி இணைக்கப்பட்ட அந்த காரை, அடையாளம் கண்டுகொள்வதில் அவளுக்குச் சிக்கலிருக்கவில்லை, ஆனால் எப்போதும் நிறுத்தும் இடத்தில், இன்று அது நிறுத்தப்படவில்லை. ’கார் விபத்துக்குள்ளாகிkumar-1விட்டதோ’ என்றுதான் முதலில் பயந்தாள் நானா. மேலிருந்து பார்க்க அப்படி ஏதும் தெரியவில்லை. கார் நன்றாகத்தான் இருந்தது. அங்கிருந்து ஓடிவந்தவள், மீண்டும் அவனது முகத்தை ஏறிட்டு, அவனை அணைத்துக்கொண்டு, “அபெ ஜாடி சயாங்” என்றாள்.

ரானே, சிறிது ஆசுவாசமானவனாய், ”சூசனைச் சென்று பார், அவள் விழித்திருக்கிறாளா இல்லை தூங்கிவிட்டாளா” என்றான்.

”இல்லை. அவள் தூங்கிவிட்டாள். பயப்படாதே, சொல்” என்றாள் நானா.

”இல்லை, போய்ப்பார்த்துவிட்டு வா, அருகே சென்று அந்த அறையைத் திறந்துப் பார்த்துவிட்டு வா” என்று ரகசியக்குரலில் அவளின் காதுக்கருகில் வந்து சொன்னான் ரானே. நானா எழுந்து வேகமாக, அந்த அறையை நோக்கி நடந்தாள்.

அந்தஅறையின் கைக்குமிழியை மெதுவாக உருட்டி, அறையைத்திறந்து தலையை நீட்டி உள்ளே பார்த்தாள் நானா. உள்ளே எந்த ஓசையும் இல்லாததுகண்டு அப்படியே மெதுவாய்க் கதவைச் சாத்திவிட்டு மீண்டும் அவனருகில் வந்தாள். அவன் முகம் மாறியது.

”நம் அறையிலா தூங்குகிறாள்?” என்றான் ரானே கோபத்துடன்.

”ஆமாம், நம் அறையில்தான் தூங்குகிறாள், நீதான் இன்றிரவு வரமாட்டேன், வேலையிருக்கிறது என்று சொல்லிவிட்டுச்சென்றாய் அல்லவா? அவளும் நானும் நள்ளிரவுவரை சாப்பிட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தோம். பிறகு அப்படியே தூங்கிவிட்டோம், அதனால் அவள் அங்கே படுத்திருக்கிறாள்” என்றாள் நானா.

’இதை இன்னும் நீ விடவில்லையா’, என்று வாய்க்குள் முனகியவன், ’இவள் இங்கு வரும்போதெல்லாம் எனக்குப் பிரச்சனைதான்’ என்று நினைத்துக்கொண்டு, மெது-இருக்கையில் சாய்ந்து, கொடிகள் சுற்றிய ஒரு சிறுமரத்தைப்போலக் கிடந்தான்.

”தூங்கிக்கொண்டிருக்கும் அவளைப்பற்றிப் பயப்படாதே, அவளை நான் பார்த்துக்கொள்கிறேன், அவள் மோசமானவள் அல்ல” என்றாள் நானா, தாழ்ந்த குரலில்.

”ஹ்ம், அவளைப்பற்றி உனக்குத் தெரியாது” என்ற ரானே, ”நான் இங்கே வந்திருக்கக்கூடாது, கப்பாள ஸக்கேட் லா” என்றான்.

”என்னவென்று சொல், இல்லையேல் இங்கிருந்து கிளம்பு, நான் தூங்கவேண்டும்” என்று லேசாய் அதட்டிய நானா, மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டாள்.

அவளிடமிருந்து அந்த சிகரெட்டை வாங்கி, வாயில்வைத்து இழுத்தான் ரானே. அவளது தோளைத்தட்டி ’இங்கே வா’ என்று சைகையால் அவளை இழுத்துக்கொண்டு அந்த அறையின் கிழக்கு மூலைக்கு வந்தான். அருகிலிருந்த கதவுத்துவாரத்தின்வழி கண்ணைச்சுருக்கி வெளியே யாரும் இருக்கிறார்களா என்றுப் பார்த்தபடி, சிகரெட்டை வேகமாக இழுத்து “மத்தி லா, மத்தி” என்றான்.

“நடந்ததைக்கேட்டு, நெஞ்சைப்பிடித்துக்கொண்டு அமர்ந்துவிடுவாள்’ என்று பயந்து, நானாவைத் தன்னோடு சேர்த்துக்கொண்டே அனைத்தையும், மிக மெதுவான குரலில் சொன்னான் ரானே.

’என்ன நடந்தது’ என்பதை அவன் சொல்லிமுடிக்கும்வரை பதட்டமாய்க் கேட்டுக்கொண்டிருந்தவள், இப்போது சிறிது தைரியம் வந்தவளாய், அவன் பிடியில் இருந்து விலகினாள்.

’அல்லாம் மா, என்ன செய்வது இப்போது? என்ன செய்யப்போகிறாய்? என்ன செய்வது’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தாள். தொலைக்காட்சிப்பெட்டிக்கருகில் இருந்த புகைப்பெட்டியை எடுத்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு ”என்ன செய்வது? உன் அண்ணனை அழைக்கிறாயா? அவனுக்கு நல்ல யோசனை தோன்றும்” என்றாள் பதற்றத்துடன்.

”ஹம்ம், உன்னிடம் சொன்னேன் பார், நீயும் அவனைப்போலவே முட்டாள் அல்லவா?” என்று கடிந்துகொண்டு அதே சிகரெட்டை வாங்கியிழுத்தான் ரானே. அவளிடம் இச்செய்தியைப் பகிர்ந்துகொண்டவுடன், உடம்பில் ஏறியிருந்த சுமை குறைந்தது போன்றிருந்தாலும் அலையலையாய் சில கவலைகள் வந்து மனதுக்குள்  நாலாபக்கமும் சூழ்ந்துகொண்டு நெருக்கியடிக்க ஆரம்பித்துவிட்டதை உணர்ந்தான். இவளிடம் சொல்லியிருக்கக் கூடாதோ என்றும் அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

நானா, ”உன் அண்ணனை அழை. அவன் கண்டிப்பாய் உனக்கு உதவி செய்வான்” என்றாள். ”இல்லை வேண்டாம்” என்று சொன்னான் ரானே, “இன்று, உனக்கு நேரமே சரியில்லை, அதிகாலையிலிருந்து ஏதேதோ தொல்லைகள்தான் உனக்கு” என்றாள் நானா.

”ஆமாம், காலையில், காடியைச் சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, கோப்பி வாங்கச்சென்றேன்; கோப்பி வாங்கிவிட்டு திரும்பிவருவதற்குள், இருகோடுகள் வரையப்பட்ட இடத்தில், என் காடியை நிறுத்தினேன் என்பதற்காக, 75வெள்ளி அபராதம் போட்டுவிட்டார்கள்”

“அதுமட்டுமா? மதியம் ஒரு விபத்து என்று சொன்னாயே?” என்றாள் நானா.

”ஆமாம், ஒரு டாக்ஸிக்காடியை பின்னால் லேசாக இடித்துவிட்டேன். ஒருkumar-4 பாதிப்பும் இல்லை, அந்த காடிக்கும் அவனுக்கும். சிறு உராய்வு அந்தகாடியின் பின்பகுதியில், அவ்வளவுதான். அவனுக்கு எதுவும் இல்லை. இருந்தாலும் அவன் ஏதாவது சாக்குப்போக்குச்சொல்லி, எப்படியும் ஒரு பெரிய தொகையை என் இன்ஸூரன்ஸிலிருந்து கறந்துவிடுவான். என் பிரீமியம் அதிகமாகப்போகிறது.” என்றான்.

”இந்த வேலையிலும் நிறையப் பிரச்சனைகள். நேற்று இரவு 10மணிபோல, ’எல்லாம் உறுதியாகிவிட்டது. இன்று இரவு அந்த வேலையைச் செய்யப்போகிறேன்’ என்று நீ போன் பண்ணிச்சொல்லும்வரை, எப்படி இந்தவேலையை இன்று முடிக்கப்போகிறாய் என்றுதான் யோசனையில் இருந்தேன். அதுவும் நல்லபடியாய் முடிந்திருக்கும் என்று நினைக்கும்போது இப்படி ஒரு பிரச்சனை. என்ன செய்வது இப்போது?” என்ற நானா, அவனது முகத்தைப் பார்த்தாள். அப்போது அந்த அறைக்குளிருந்து ஏதோ சத்தம் கேட்டது. ”சூசன் எழுந்துவிட்டாள், வருகிறாள்” என்று நானா சொன்னாள், படபடப்போடு.

”ஸூஸா, டெமி ஸூஸா லா” என்று அங்குமிங்கும் அலைந்தவன், ”நான் வந்ததைச் சொல்லாதே” என்று அவளிடம் மெதுவாய்ச் சொல்லிவிட்டு, வீட்டுவாயிலின் மூலையில் ஒதுங்கிக்கொண்டான்.

அறையைத் திறந்துகொண்டு நிழலைப்போல நடந்து வந்தாள், கொஞ்சம் கனத்த உருவம் கொண்ட சூசன். ஏனோதானோவென்ற மெல்லிய ஆடையை உடம்பில் சுற்றியிருந்த அவளுடைய மார்புகள், சரிந்து தொங்கிய கிருணிப்பழத்தைப்போலக் கிடந்தன. ”நானா, அபெ ஜாடி? தூங்கவில்லையா நீ” என்றவள், அவள் அருகில் வந்து, “என்னாச்சு, ரானே வந்துவிட்டானா?” என்று கேட்டாள், சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு.

”இல்லை சூசன், வயிறு ஒருமாதிரியாய் இருக்கிறது, நீ தூங்கு, ஒரு சிகரெட் பிடித்துவிட்டு வருகிறேன்”, என்று சொன்னாள் நானா.

அவளின் அருகில் வந்த சூசன், ”வா லா, மூசாங், ஸய மாஹூ மினும் சூசூ” (எனக்குப் பால் வேண்டும் அருந்த) என்று சொல்லிவிட்டு அவளது மார்பகத்தை லேசாய்த் தடவிவிட்டுச்சென்றாள்.

மூலையில் ஒதுங்கியிருந்த ரானே இதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. சூசன் அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரி என்று சொல்லியிருக்கிறாள். ’ரானேக்கும் நான் சகோதரிதான்’ என்று அவனிடமே அடிக்கடி சொல்லிக்கொள்ளும் சூசன், இங்கு எப்போதும் வருபவள்தான். தான் முன்பு வேலைபார்த்த கப்பல்கட்டும் கம்பெனியில் நானாவுடன் வேலைபார்த்ததிலிருந்து பழக்கம் அவளுக்கு.

கடந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு இங்கே வந்தாள் முதன்முதலாக. அவளது ஒரே ஒரு பெண்குழந்தையையும் இங்கே கூட்டிவந்திருந்தாள். பெயர் ’சுனேயா’ என்ற அக்குழந்தையின் அப்பா, யார் என்று இதுவரை சொல்லவில்லை. போலீஸ்காரனான அவனை விவாகரத்து பண்ணிவிட்டாள் என்றுதான், நானா அவளைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கிறாள். ஆனால், சிலசமயங்களில் ரானேயிடம்கூட, சூசன் கொஞ்சம் நெருக்கமாயிருக்க விரும்புவதுபோல நடந்துகொண்டதை ரானேயும் சொன்னதில்லை. நானாவும் அறிந்திருக்கவில்லை.

சூசன் மெதுவாக நடந்து, இருளில் கரைந்து, கதவைத்திறந்து உள்ளே சென்றபின் கதவு மூடியதும், மெதுவாக வெளியே வந்தான் ரானே, ”நல்லவேளை அவள் என்னைப் பார்க்கவில்லை” என்றான் மெதுவாக. ”அவள் பார்த்திருந்தால் என்னைக் கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்திருப்பாள், மோசக்காரி” என்றான் மேலும். அணைந்திருந்த சிகரெட்டை அணைப்பானுக்குள் செருகிவிட்டு, ”என்ன செய்வது இப்போது, இவள் வேறு இங்கிருக்கிறாளே, நாம் பேசியது கேட்டிருக்குமோ?” என்றான் யோசித்துக்கொண்டு.

”இவளைப் பற்றிக் கவலைப்படாதே, இதுபற்றித்தெரிந்தாலும் இவள் நமக்கு உதவிதான் செய்வாள், ஆனால் விடிவதற்குள், இந்தப்பிரச்சனையைச் சரிசெய்யவேண்டுமே, அதை ஏதாவது செய்துவிடு; இல்லையேல் நமக்குச் சிக்கல்கள்தான்” என்றாள் நானா.

”என்ன சிக்கல்? இவள், இங்கு வந்ததுதான் எனக்குச் சிக்கல், தலைவலி எல்லாம். டெமி ஸூஸா லா, இவள் இங்கு வரும்போதெல்லாம் எனக்குப் பிரச்சனைதான்” என்றான் கோபத்துடன்.

”அவளைப்பற்றிப் பேசாதே, இப்போது என்ன செய்வது என்று பார். அல்லது உன் அண்ணன் எலியாஸை அழைத்து உதவி கேள், அதை விட்டுவிட்டு, பிணத்தைக் காரில் வைத்துக்கொண்டு புறம்பேசித் திரிகிறாய் ஒரு முட்டாளைப்போல நீ” என்றாள் மலாய்மொழியில்.

’பிணம்’ என்று அவள் சொன்னவுடன் திடுமென, விலகி அதிர்ந்து எழுந்தான் அவன்.

விடிகாலை 4.30மணியை நெருங்கிக்கொண்டிருந்த பொழுதில், சூழ்ந்திருந்த ஆபத்தின் பேராபத்தை உணர்ந்து, தான் செய்வதறியாது, ரானே, தன் காதலி ’நானா’ சொல்லுக்கிணங்கி, தன் சகோதரனான ’எலியாஸ்’ எனப்படும் யு.எஸ்.எஸ் ட்ரூமேனைத் தொலைபேசியில் அழைத்தான்.

யுனைட்டெட் ஸ்டேட்ஸின் அணுசக்தியால் இயங்கும் கப்பலான ‘யு.எஸ்.எஸ் ஹேரி ட்ரூமேன் கப்பல் (USS Harry S. Truman)’ 2004ஆம்ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தபோது, தனது பெயரை, ’ட்ரூமேன்’ என்று நிறுவிக்கொண்ட எலியாஸ், இப்போதெல்லாம் தன்னை, யு.எஸ்.எஸ் ட்ரூமேன் என்றே அழைக்கவேண்டும் என்று அனைவரிடமும் சொல்லிவந்தான். ‘அணு ஆயுதம் இருந்த கப்பலின் அறைக்குள்ளே சென்று வந்தவன்’ என்று தனது நிறுவனத்தில் வேலைபார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களிடம் பிரமிப்பூட்டியிருந்தான். அப்போது அக்கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கும் செல்வதாயிருந்தது. அப்போதிருந்த தமிழக முதல்வர் ஆணோ பெண்ணோ, ‘அணு ஆயுதத்தால் இயக்கும் அக்கப்பலால் சென்னைக்கு ஆபத்து’ என்று தனக்குப் பிடிக்காத மத்தியஅரசுக்கு ஓலை அனுப்பி, ’சென்னையில் நங்கூரமிடக்கூடாது’ என்று சொல்லியிருந்தார். அக்கப்பல் சென்னை வராமல் கொச்சின் வழி கொழும்பு சென்று, அங்கிருந்து சிங்கப்பூருக்கு வந்திருந்தது.

ஆசியாவிற்கு அல்லது சிங்கப்பூருக்கு அருகில் வரும் எல்லா அமெரிக்கக் கப்பற்படைக் கப்பல்களும் சாங்கி நேவித்தளத்திற்க்கு வந்துவிட்டுத்தான் செல்லும். என்ன விஷயம் என்று கேட்டால்போதும், ட்ரூமேன், கதைகதையாய்ச் சொல்வான். அதெல்லாம் அவனிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அப்பொழுது அது சம்பந்தப்பட்ட ’ஷிப் லாஜிஸ்டிக்ஸ்’ வேலைதான் பார்த்தான் ட்ரூமேன்.

எலியாஸ், ட்ரூமேன் ஆனது, பெரிய வரலாற்று நிகழ்வெல்லாம் இல்லையெனினும் அவன் அந்நாளை மறப்பதில்லை. சாங்கி கடற்படைத்தளத்தில் நின்ற, அக்கப்பலின் கீழ்த்தளத்திலிருந்த ஒரு குப்பைத்தோம்பை, ஒற்றைஆளாய்த் தூக்கிவந்து, கப்பலுக்கு வெளியே வைத்தது அவனைப் பொறுத்தவரைக்கும் ஒரு சரித்திர நினைவுதான். இருவராய் மூவராய்த்தான் அந்த குப்பைத்தோம்பைத் தூக்க இயலும். அவ்வளவு கனமாக இருக்கும் அந்த கருப்புநிற பிளாஸ்டிக் குப்பைத்தோம்பைக், கிழியாமல், அவன் தூக்கிவந்தான். பொதுவாகப் பாதிவழியில் அவை கிழிந்துகொட்டிச் சிதறநேருவதால், இரும்புத் தோம்புக்குள் அவற்றைக்கொட்டி, சிறுபாரந்தூக்கியால் தூக்கி, கப்பலிலிருந்து கரையில் வைப்பார்கள். அன்றும் அப்படித்தான் திட்டமிட்டார்கள். ஆனால், ட்ரூமேன் விட்டால்தானே?

கப்பலின் முதன்மை அதிகாரி ஒரு பெண்ணாவார். அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே எலியாஸ் அந்தபையைத் தூக்கித் தோளில் வைத்துவிட்டான். குப்பைகள் கிழிந்து முகத்தில் வழிவது அன்று நடக்காதது எலியாஸ் செய்த வரலாற்றுப் புண்ணியம். ’அக்கப்பல் அடிக்கடி நங்கூரமிடும் தென்கொரியா, சவுத் ஆப்ரிக்கா, மியாமி, மும்பை, கொழும்பு என இதுவரை எந்த துறைமுகத்திலும் இப்படி யாரும் தூக்கியதில்லை’ என்று சொல்லி, பாதிமீதமிருந்த ஒரு ‘வைன் போத்தலை’ எடுத்துக்கொடுத்தான் அக்கப்பலின் இரண்டாம் பொறியாளன். அன்றிலிருந்து எலியாஸ் தன்னை, ‘யு.எஸ்.எஸ் ட்ரூமேன்’ என்று அழைக்கலானான்.

ரானே அவனைத் தொலைபேசியில் அழைத்தபோது, பாம்புகள் போல நெளிந்தோடிய திரைச்சீலைகளுக்கு அப்பால் ட்ரூமேன் உறங்கிக்கொண்டிருந்தான். அவனது மூச்சு ஒரு சுழற்காற்றைப்போல அவ்வறையில் உலவிக்கொண்டிருந்தது. நீள  அரைவட்டவடிவில் அவனது படுக்கையைச் சுற்றியிருந்த அத்திரைச்சீலையில், வெளிர்செஞ்சிவப்புநிற மெல்லிய பூக்கள் படர்ந்து கிடந்தன. அருகிலிருந்த சிறுமேசையில் ஒரு ரிமோட்டும் ஒரு காகிதத்துடைப்பான் பெட்டியும் இருந்தன. மிதமான குளிரூட்டிய அந்த அறையில், லேசான குறட்டை ஒலியில் தன்னைக் கண்டவனாய், நல்ல தூக்கத்திலிருந்தான் ட்ரூமேன்.

’அன்று அதிகாலை சாப்பாட்டு மெனுவில், மலாய்ச்சாப்பாடாக வைத்திருந்த ஐட்டங்கள் எதுவும் ருசியில்லை’ என்று நேற்றே சாப்பாடு பரிமாறுபவரிடம் சண்டைபோட்டிருந்தவன் கனவில், நல்ல சிக்கன் முர்தபாவும் தொட்டுக்கொள்ள ஆட்டுக்கால் தூலாங்கும் தோன்றி மிளிர்ந்தது. யாரோ, தூலாங்கின் சிவப்பு மையை அள்ளி அவனுடைய தலையில் கொட்டியதுபோலத் திடீரென்று தோன்ற, அதிர்ச்சியுடன் எழுவதற்கும் ரானேயின் அழைப்பு வருவதற்கும் சரியாக இருந்தது.

“அபெ பாங், கச்சாவ், பாகி, பாகி” என்று இழுத்தான். எதிர்முனையில் ரானே காட்டிய அவசரத்தில் எழுந்தவன், படுத்திருந்த கட்டிலை நிமிர்த்தினான். “என்ன, உடனே வரணுமா, ஸூஸா லா, நான் இங்கே ரொம்ப சௌகர்யமா இருக்கேன், தபோலெ லா (முடியாது)” என்றான். ”என்ன ஆனாலும், சக்கப் டலாம், டெலிப்போன் (தொலைபேசியில் சொல்)” என்றான்.

மீண்டும் மீண்டும் வரமுடியுமா என்று ரானே அழைத்தபோது மிகவும் கடுப்பான யு.எஸ்.எஸ் ட்ரூமேன், ”தபோலெ லா, ஸய தபோலே ததாங்” என்று அலறினான்.

அவன் போட்ட அலறலில் எதிரில் படுத்திருந்த, நேற்றுத்தான் புதிதாய் வந்திருந்த, ஒரு தமிழ்த் தாத்தா, ’சரியான அஞ்சடிப் பயப்போலயிருக்கு’ என்று கறுவிக்கொண்டே கண்ணை விழித்து மீண்டும் மூடினார்.

தொடரும். . .

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...