இந்தியாவில் காணப்படும் பல்வேறு இனக்குழுக்களில், பழங்குடியினரின் எண்ணிக்கை குறைவுதான். தனித்த அடையாளங்களும், மற்றவர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்தி வாழும் குணமும் இப்பழங்குடியின மக்களுக்குண்டு. இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பெரும்பகுதி நேரடி அரசியல் அதிகாரத்திற்கு உட்படாமலேயே இவர்கள் வாழ்ந்துவருகின்றனர். மேலும், அண்மைக்காலம்வரை இவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே கல்விகற்றவர்களாக அறியப்படுகின்றனர். இவர்களது வாழிடம், பண்பாட்டுக் கூறுகள் போன்றவை, மற்ற பகுதிகளில் வாழக்கூடிய மக்களிடமிருந்து வேறுபட்டது என்பது நாம் அறிந்ததே. பெரும்பான்மை மக்களிடமிருந்து விலகி, இயற்கைக்கு ஆதரவான வாழ்க்கையை வனப்பகுதிகளில் வாழ்ந்து வரும் இவர்கள் இன்றளவிலும், அடங்கி ஒடுங்கியே வாழ்கின்றனர். தமிழகத்தைப் பொருத்தமட்டில், மலைப்பகுதிகளில் பலவகையான பழங்குடியினர் வாழ்ந்துவருகின்றனர். இன்றைக்கு, பழங்குடியினர்கள் பலர் வேளாண்மை செய்தும் கல்வி கற்றும் ஓரளவுக்குத் தம்வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திக் கொண்டுள்ளனர். அதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல உதவி வருகின்றன. இருப்பினும் ‘பளியர்’ என்கிற மக்களின் வாழ்க்கைநிலை மிகமோசமான நிலையிலேயே இன்றளவும் உள்ளது. அவ்வகையில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இயங்கிவரும் ROSI FOUNDATION TRUST என்ற அமைப்பின் உதவியோடு ‘பளியர்’ இன மக்களின் வாழ்வியலை அறியும்பொருட்டு, நான் மேற்கொண்ட கள ஆய்வுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகின்றது.
சிறுமலை – பளியர் ஓர் அறிமுகம்
தமிழகத்தில் அமைந்துள்ள மலைசார்ந்த ஊர்களில் இச்சிறுமலை தொன்மையான ஒன்றாகும். பெயரளவில் சிறுமலை என்றாலும், திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கி அழகர்மலை எனப்படும் பழமுதிர்ச்சோலை வரையிலும் படர்ந்து நீளும் மலையாகவே உள்ளது. ஆண்டுதோறும் பசுமையாகவே விளங்கும் இம்மலை பண்டைக் காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்டதாக விளங்கியது. இதற்குச் சான்றாக, சிறுமலை நகரை ஒட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பாண்டியன் குளம்’ என்ற குளம் இன்றளவும் உள்ளது. இது பாண்டியர்கள் காலத்தில் குடிநீர் ஆதாரத்திற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். மேலும், சிலப்பதிகாரம் இம்மலையினை “தென்னவன் சிறுமலை” என விவரிக்கின்றது.
“வாழையும், கமுகும், தாழ்குழைத் தெங்கும்
மாவும், பலாவும், சூழ் அடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்…”
(காடுகாண்காதை: 83-85)
(சிறுமலை)
அன்றுமுதல் இன்றுவரை வளமான மலையாக இம்மலை விளங்குகின்றது. இம்மலையில் தொன்றுதொட்டு வாழ்ந்த பூர்வீகக்குடிகள் பளியர் இன மக்களாவர். ஆனால், இவர்களின் வாழிடங்களை இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசும், ஆதிக்கச் சக்திகளும் ஏமாற்றியும், மிரட்டியும் பறித்து காப்பித்தோட்டங்களாக மாற்றியபோது, இப்பழங்குடியின மக்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளானது. காடுகளில் வேட்டையாடியும், உணவு சேகரித்தும் வாழ்ந்து வந்த இவர்களின் புழங்குவெளி, வனங்கள் எஸ்டேட்களாக உருமாறியதில் சுருங்கிப் போனது. மேலும், காடுகளை பாதுகாக்கப்பட்ட வனங்களாக (Reserved Forest) ஆங்கில அரசு அறிமுகம் செய்ததில்தான், இம்மக்களின் வாழ்க்கைநிலையே பெரும் இடர்பாடுகளுக்குள்ளானது. அதிலும் குறிப்பாக, 1984-ஆம் ஆண்டில் வனப்பொருள் சேகரிக்கத்தடை விதித்து, பளியர் சமூக மக்களை காடுகளை விட்டு வெளியேற்றும் முயற்சியை வனத்துறை மேற்கொண்டது. இருப்பினும் வெளிப்புற மக்களுக்கும், வனத்துறையினருக்கும் அஞ்சி ஒடுங்கி, காடுகளே தஞ்சம் என மலைச்சரிவுகளிலும், குகைகளிலும் இன்றளவும் இம்மக்கள் வாழ்ந்துவருகின்றனர். ‘பழையர்’ என்கிற பெயர்தான் மருவி பளியர் என்றாகியது என்ற கூற்றும் நிலவுகின்றது. இவர்களிடையே இரு பிரிவுகள் காணப்படுகின்றன. ‘காட்டுப்பளியர்’ மற்றும் ‘புதைப்பளியர்’. காட்டுப்பளியர் என்போர் சிறிய அளவில் காட்டு வேளாண்மை செய்து வாழ்கின்றனர். புதைப்பளியர் என்போர் மலைக்குகைகள், தற்காலிகக் குடிசைகளில் வாழ்கின்றவர்களாவர். இவர்கள் தேனெடுத்தல், கிழங்கு தோண்டுதல், மூலிகைகள் சேகரித்தல் போன்ற தொழில் செய்பவர்களாவர். சிறுமலையினைப் பொருத்தமட்டில் மலையின் மேல்முகட்டில் ஒருசில காட்டுப்பளியர்கள் வாழ்கின்றனர். மலைச்சரிவுகளில் புதைப்பளியர்களே கணிசமாக வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வியலை நோக்கும்போது பண்டைய இனக்குழு மக்களின் மரபுசார் அறிவினையும் பண்பாடுகளையும் காணமுடிகின்றது.
(நெற்றியில் வேங்கைப் பால் பூசிய பளியர் இனச் சிறுவர்களும் மூதாட்டியும்)
உணவு
இம்மக்களின் முதன்மை உணவு மலைத்தேனும், வள்ளிக்கிழங்குமாகும். மலைகளில் சேகரித்து வரக்கூடிய பழங்கள், சிறிய அளவில் வேட்டியாடிக் கொண்டுவரும் இறைச்சி ஆகியவற்றை உண்கின்றனர். அரிசி உணவினைப் பெரும்பாலும் விரும்புவதில்லை. நாங்கள் இம்மக்களைச் சந்தித்தபோது, அரசு வழங்கும் இலவச அரிசியைச் சமைக்கத்தெரியாமல், தண்ணீரில் ஊறவைத்து வெறும் அரிசியை உண்டதைக் காணநேர்ந்தது. பலவகைக் கிழங்குகளைச் சேகரித்து சிலவற்றைப் பச்சையாகவும், சிலவற்றை வேகவைத்தும், சிலவற்றை நெருப்பில் சுட்டும் உண்கின்றனர். நன்னாரி என்கிற வேரினைக் காடுகளில் சேகரித்துவந்து தண்ணீரில் கழுவி குடிக்கும் நீரில் இட்டு வைக்கின்றனர். இந்த நீரினையே பருகுகின்றனர். வள்ளிக்கிழங்கு இவர்களின் விருப்ப உணவு. வள்ளிக்கிழங்கில் நிறைய வகைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். வட்டவடிவமானதும், நேரானதுமான வகைகளில் அவை காணப்படுகின்றன. வள்ளிக் கொடியினை பளியர் இனச் சிறுவர்கள்கூட அடையாளம் கண்டுகொள்கின்றனர். சிறுவர்கள், கையிலுள்ள கோலினை எடுத்துத் தோண்டி அக்கிழங்கை உண்கின்றனர். பெரியவர்கள் காட்டுக்குள் செல்கையில் ஒருவகை மரப்பிசினை நீரில் ஊறவைத்து உடன் எடுத்துச் செல்கின்றனர். அதை உண்டால் நீண்ட நேரத்திற்குப் பசியெடுக்காது என்கின்றனர்.
(பாறை இடுக்குகளில் வசிக்கும் பளியர்கள்)
வாழ்விடம்
தமிழகத்தில் வாழும் பெரும்பாலான பழங்குடியினர் மலைவாழ் மக்களாகவே உள்ளனர். பளியர்களும் மலைகள் மற்றும் காடுகளில் தம் வாழ்விடங்களை அமைத்துக்கொண்டு வாழ்கின்றனர். சிறுமலையில் வாழும் பளியர்கள் அண்மைக்காலம் வரையிலும் மலை இடுக்குகளிலும், இயற்கையாகக் காணப்படும் குகைகளிலுமே வாழ்ந்துவந்தனர். 2008-ஆம் ஆண்டு இப்பகுதியில் பெய்த அடைமழையில் மலைமுகட்டிலிருந்த பெரிய பாறைக்கல் உருண்டு வந்து கீழே இருந்த கற்குகையில் விழுந்தது. அதில் அக்குகை முழுவதும் சிதைந்தது. அக்குகையினுள் வசித்த எட்டுப்பேர் கொண்ட பளியர் குடும்பம் முழுவதும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்குப் பின்னர் மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் வாழ்ந்த பளியர் இன மக்களை மலையினை விட்டு அப்புறப்படுத்தித் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுத்து அவற்றில் குடியேற உத்தரவிட்டனர். காடுகளைத் தம் உயிர்நாடியாகக் கருதும் இம்மக்களால் அவ்வளவு எளிதில் அதனைவிட்டு இடம்பெயர இயலுமா? அரசு கட்டிக்கொடுத்த வீடுகளில் ஒருசிலரே குடியேறினர். போதாததற்கு அரசியல் அதிகாரத்தில் உள்ள உள்ளூர்க்காரர்களின் ஆக்கிரமிப்பு வேறு. மீண்டும் மலையினுள் வாழத்தொடங்கினர்.
பளியர்களின் வாழ்வியல், நாடோடி வாழ்க்கையினை ஒத்ததாகவே உள்ளது. ஏனெனில் நிலையான குடியிருப்புகளை இவர்கள் அமைப்பதில்லை. எனவே மரங்களையொட்டி அமைக்கப்படும் பரண்கள், குகைகள், பாறையிடுக்குகள், எளிய புற்களால் வேய்ந்து உருவாக்கப்படும் குடில்கள் இவர்களது வசிப்பிடங்களாகின்றன. தேனெடுக்க மலைச்சிகரங்களில் இரண்டு மூன்று நாட்கள் கூட தங்குகின்றனர். அவ்வாறு தங்குகையில் தற்காலிகக் குடில்களை அமைத்துக் கொள்கின்றனர். ‘போதைப்புல்’ எனப்படும் புற்கள் உயர்ந்த மலைகளில் காணப்படும். இவற்றைக் கொண்டே தம் குடில்களை அமைக்கின்றனர். இப்புல் 5 அடி முதல் 6.30 அடி வரை வளரும் தன்மையுள்ளது. எப்போதும் ஒருவகை வாசனையை வெளியிடக்கூடியது. அந்த மணத்திற்கு பாம்பு முதல் எந்தவகையான பூச்சியினங்களும் அண்டாது என்கின்றனர் இம்மக்கள். எனவே இப்புற்களை வேரோடு பிடுங்கி அடுக்கிக் கூரையாக அமைப்பர். அடை மழை, கடுங்குளிரில் இருந்துகூட மலைவாழ் மக்களைப் பாதுகாக்கும். பளியர் இனத்தவரின் வழிபாட்டில் இப்புற்களுக்கு முக்கியமான இடம் உண்டு. தங்களது குலதெய்வமான பளிச்சியம்மன் உறையும் இடத்தை இப்புற்களைக் கொண்டே அலங்கரிக்கின்றனர்.
(வெவ்வேறு வகையான மலைக்கிழங்குகள் தோண்டிய போது)
தொழில்
பணம் ஈட்ட வேண்டும் என்கிற நோக்கில் பளியர்கள் தொழில் செய்வதில்லை. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கிலேயே மலைக்குச் செல்கின்றனர். குறிப்பிட்டுச் சொல்வதென்றால், உணவுத்தேவையின் பொருட்டே தொழில் செய்கின்றனர். நிலையான, அதிக வருவாய் ஈட்டக்கூடிய தொழில் ஏதும் இவர்களிடம் இல்லை. மலைகளில் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களைச் சேகரிப்பதே இவர்களது தொழிலாகும். அவ்வகையில் தேன், வள்ளிக்கிழங்கு, கீரை வகைகள் மற்றும் காளான், மூலிகை வேர்கள் ஆகியவற்றைச் சேகரித்து விற்பதன் வாயிலாகக் கிடைக்கக்கூடிய தொகையில் தம் வாழ்வாதாரத்தை உறுதி செய்து கொள்கிறார்கள்.
வேட்டைக்கலை
காடுகளில் வேட்டையாடுவதற்கு அரசு தடைவிதித்திருப்பதால் தங்களுக்குத் தெரிந்த வேட்டைக்கலை மற்றும் நுட்பங்களை இம்மக்கள் படிப்படியாக கைவிடத் தொடங்கிவிட்டனர். வேட்டைமுறை குறித்த இவர்களின் மரபுசார் அறிவு என்பது ‘பண்டைய இனக்குழு வாழ்வின் எச்சங்களே இப்பளியர்கள்’ என்பதை உணர்த்துவதாக உள்ளது. எனது கோரிக்கையினை நீண்ட யோசனைக்குப் பிறகு, அவர்களது கூட்டத்தின் தலைவரது ஒப்புதலைப் பெற்ற பின்னர் நிகழ்த்திக்காட்டினர். அதாவது, வேட்டைக்கலையினை விளக்கிச் செயல்படுத்தியும் காட்டினர். வேட்டைக்கென நாய்களைப் பழக்குகின்றனர். அதன் வாயிலாக முயல், உடும்பு, அணில் போன்ற சிறு உயினங்களை வேட்டையாடி உணவாக்கிக் கொள்கின்றனர்.
நாயினை குட்டியாக இருக்கும்போதே வேட்டைக்குரியது, காவலுக்குரியது எனப் பிரிக்கின்றனர். வேட்டைக்குரிய நாயினைப் பக்குவமாகப் பராமரிக்கின்றனர். அவற்றுக்கு அதிகளவில் உணவு தருவதில்லை. தக்க பருவம் வந்ததும் உடும்பு பிடிக்கும் நாய்களுக்குத் தனியாகவும், முயல் பிடிக்கும் நாய்களுக்குத் தனியாகவும் பயிற்சியளிக்கப்படுகின்றது.
உடும்பின் பித்தப்பையினையும், ‘சாணிவண்டு’ எனப்படும் ஒருவகை வண்டினையும் ஒன்றாகக் கசக்கி நாயின் மூக்கில் வைத்து ஊதுகின்றனர். இவ்வாறு பயிற்சிபெறும் நாய் உடும்பின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அதனைக் கவ்விக்கொண்டு வருகிறது. அதற்குப் பரிசாக உடும்பின் சில பாகங்கள் வழங்கப்படும்.
(வேட்டை நாயோடு)
திருமண உறவு
பளியர்கள் திருமணம் அவர்களுக்கேயுரிய பாரம்பரிய முறைப்படி நிகழ்த்தப்படுகிறது. முன்பு வேங்கைமரத்தினடியில் பளிச்சியம்மனைச் சாட்சியாக வைத்து வள்ளிக்கொடியில் ஆண் பெண்ணின் கழுத்தில் தாலிகட்டும் வழக்கம் இருந்தது. தற்போது அவ்வழக்கம் இல்லை. ஆண்கள் சிறுவயதில் திருமணம் செய்துகொள்வதும், பலதாரமணம் அங்கீகரிக்கப்பட்டதாகவும் உள்ளது.
(பளியர் இனத் தலைவரோடு தகவல் சேகரித்தபோது)
சூழலியல் காவலர்கள்
காடுகளை அழிக்கின்றனர் என்ற குற்றசாட்டு பொதுவாகப் பழங்குடியின மக்கள்மீது சுமத்தப்படுவதுண்டு. ஆனால் அக்குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை என்பதை இவர்களது வாழ்வியலை நன்கு அறிந்தவர்கள் அறிவர். அதற்குச் சான்றாகச் சிலவற்றைக் கூறலாம். இம்மக்கள் மலைக்குச் செல்கையில் தீப்பெட்டி எடுத்துச் செல்வதில்லை என்ற கொள்கையினைக் கொண்டிருக்கின்றனர்.
மரங்களை வெட்டினால் பளிச்சியம்மன் தண்டிப்பாள் என நம்புகின்றனர். இவர்கள் மலைகளில் காணப்படும் வேங்கைமரத்தின் மீது கத்தியினால் சிறிய கோட்டினைப் பதிக்கின்றனர். அதிலிருந்து சிவப்புநிறத் திரவம் வெளிப்பட்டு சில நொடிகளில் கருமை நிறமாக மாறுகின்றது. அதனை பக்தியோடு சேகரித்துத் தம் குழந்தைகளது நெற்றியில் பூசுகின்றனர். அவ்வாறு செய்கையில் காடுகளில் அலையும் தீய ஆவிகளால் ஆபத்து ஏற்படாது என நம்புகின்றனர். இதுதவிர, வேறு எந்த மரத்தின் மீதும் இவர்கள் கைவைப்பதில்லை. வள்ளிக்கிழங்கு தோண்டும்போது கூட கிழங்கினை எடுத்த பின்பு தோண்டிய குழியினை மூடிவிடுகின்றனர்.
சிற்றூர்களில் தேனெடுக்கும்போது பொதுவாகத் தீ மூட்டியோ, புகை உண்டாக்கியோ தேனீக்களை விரட்டுவர். அவ்வாறு செய்கையில் எண்ணற்ற தேனீக்கள் செத்து மடிவதை நாம் கண்டிருப்போம். ஆனால் பளியர்கள் தேனெடுக்கும் நிகழ்வு இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். ஆம்! பளியர்கள் உயர்ந்த மலைகளின் பக்கவாட்டில் இருக்கும் மிகப்பெரிய தேன்கூடுளில் இருந்தே தேன் சேகரிப்பது வழக்கம். அந்தத் தேன் கூடுகள் இரண்டு மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். அவற்றில் உள்ள தேனீக்கள் ஒரு அங்குலம் அளவு பெரியதாக இருக்கும். இவ்வகைத் தேனீக்கள் இரண்டு கொட்டினால் கூட சற்றுநேரத்தில் மரணம் ஏற்படும் என்கின்றனர்.
ஆனால் தேனீக்கள் பளியர்களைத் தீண்டுவதில்லை. இவர்களும் தீ மூட்டியோ, புகையினைக் கொண்டோ தேனீக்களை விரட்டுவதில்லை. மாறாக, தேன் கூட்டின் அருகில் செல்லும் முன்பு ‘தினுத்துப்பச்சிலை’ என்ற மூலிகையினை உடல் முழுவதும் பூசிக்கொண்டு செல்கின்றனர். அவ்வாறு செய்கையில் அந்த மூலிகையில் இருந்து வெளிப்படும் நெடியான மணம் தேனீக்களுக்கு ஒருவித தற்காலிக மயக்கத்தினை உண்டாக்கி கூட்டை விட்டுக் கலையச் செய்கிறது. பளியர்கள் எளிதாக ஒரு துளியும் வீணடிக்காமல் தேனைச் சேகரிக்கின்றனர். தேனீக்களில் ஒன்று கூட மடிவதில்லை. சற்று நேரம் கழித்துப் பறந்து செல்கின்றன.
தேனீக்களின் ரீங்கார ஒலியைக் கூர்ந்து கவனித்து அவை செல்லும் திசையினை வைத்துக் கூடுகளைக் கண்டுபிடிக்கின்றனர். தவிர மிகக்கூர்மையான பார்வைத்திறனும் இவர்களுக்குண்டு. வெகுதொலைவில், மலையுச்சியில் உள்ள தேன்கூடுகளைக் கூட அடிவாரத்தில் இருந்தே மிகச்சரியாகக் கண்டுபிடித்துச் சொல்கின்றனர். அதேபோல மலைகளில் வாழும் பிற விஷமுள்ள உயிரினங்கள் கூட இவர்களைத் தீண்டுவதில்லை. சான்றாக, ஒரு மூலிகை வேரினை எப்போதும் இடுப்பில் கட்டிக் கொள்கின்றனர். அந்த வேரின் வாசனைக்குப் பாம்பு அருகில் வராது என்கின்றனர்.
(வேங்கை மரப் பால் சேகரித்தலும், தேனெடுக்கச் செல்தலும்)
“மலையேறினாலும் மச்சினன் துணை வேணும்” என்கிற பழமொழி கேள்விப்பட்டிருப்போம். அது இவர்களை வைத்தே உருவானதோ என்று தோன்றுகின்றது. காரணம், பளியர் இன ஆண் தேனெடுக்க மலைக்குச் செல்கையில் உடன் அவனது மனைவியின் சகோதரனும் உடன் செல்கிறான். மலையுச்சியின் பக்கவாட்டில் உள்ள தேன் கூட்டை அடைய, ஒருவிதக் காட்டுக்கொடியில் பின்னிய கயிற்றினைப் பயன்படுத்துகின்றனர். அக்கயிற்றின் ஒரு முனையினை இடுப்பில் கட்டிக்கொண்டு கூடையுடன் மாமன் இறங்க; மறு முனையினை மைத்துனன் மேலிருந்து கெட்டியாகப் பிடித்துக்கொள்கின்றான். இவ்வழக்கத்தையே இவர்கள் பின்பற்றுகின்றனர். ஏன்? என்று கேட்டால். “மைத்துனன்தான் கவனம் சிதறாமல் கயிற்றைப் பிடிப்பான். ஏனென்றால் அவனது சகோதரியின் வாழ்க்கை அக்கயிற்றில் உள்ளதாக நினைப்பானாம்” என்கின்றனர் சிரித்தவாறு.
வாழ்வியல் சிக்கல்
எண்ணிக்கையில் நாளுக்குநாள் அருகிவரும் பழங்குடியின மக்கள் வெளியுலக மக்களுக்கு அஞ்சியே வாழ்கின்றனர். பெரும்பாலும் மலையினை விடுத்து இவர்கள் வருவதில்லை. தேன், மூலிகை போன்ற பொருட்களை விற்பனை செய்ய ஊர்களுக்குள் வருகின்றனர். இவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள் அரிதான, எளிதில் கிடைக்காதவைகளாகும். இருப்பினும் பல இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுகின்றனர். சான்றாக, இவர்களது கலப்படமில்லாத மலைத்தேன் லிட்டர் ஐநூறிலிருந்து ஆயிரம் வரை விலைபோகக் கூடியது. ஆனால் சில இடைத்தரகர்கள் லிட்டர் நூறு ரூபாய்க்கு இவர்களிடமிருந்து வாங்கி அதிக விலைக்கு வெளியில் விற்பனை செய்கின்றனர்.
அவ்வாறு கிடைக்கும் சொற்பத்தொகையினையும் வனக்காவலர்கள் பலருக்கு தாரைவார்க்க வேண்டியுள்ளது. அவ்வாறு தராவிட்டால் மலையில் சுதந்திரமாக வாழவோ, தொழில் செய்யவோ முடியாது. பல வகைகளில் நெருக்கடி கொடுக்கின்றனர். காவலர்களுக்குப் ‘படியளக்காவிடில்’ கடுமையாகத் தாக்குவர், இல்லையென்றால் காடுகளுக்குத் தீ வைத்ததாகப் பொய் வழக்குப் போடுவர், மிரட்டுவர் என்கின்றனர்.
பளியர்களின் உணவாகவும், பாரம்பரிய அடையாளமாகவும் விளங்குவது தேனாகும். தற்போதைய சூழலியல் மாற்றத்தின் காரணமாகவும், காடுகள் அழிக்கப்பட்டதன் விளைவாகவும் தேனீக்கள் அதிக அளவில் காணப்படுவதில்லை. தவிர ரசாயன உரங்களின் பயன்பாட்டினால் தேனீக்கள் இனப்பெருக்கம் குறைந்ததனால் தேன் கூடுகள் அரிதாகவே தென்படுகின்றன. தேனெடுப்பதைத் தவிர வேறு எவ்விதத் தொழிலும் இவர்களுக்குப் பரிச்சயமில்லை என்பதே உண்மை. வேறு தொழில் செய்யவோ, கூலி வேலை செய்ய முற்பட்டால் கூட எவரும் வாய்ப்புத் தருவதில்லை என்பதும் இவர்களின் நிலையாக உள்ளது.
ஊர்ப்பகுதியிலிருந்து மலைகளில் ஆடு மேய்க்கச் செல்லும் ஆண்கள் அங்கு தனிமையில் இருக்கும் பளியர் இனச் சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது சாதாரண நிகழ்வாகவும், வாடிக்கையான ஒன்றாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்து மிகுந்த தயக்கத்துடனும் கண்ணீருடனும் பேசிய திரு.முருகன் ஐந்து வருடங்களுக்கு முன்பு தன் மகள் காமாட்சியை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிச் சீரழித்துவிட்டு, இதுவரை திருமணம் செய்யாமல் சுதந்திரமாக அப்பகுதியில் உலாவும் பாலகுமார் என்ற 35 வயது மதிக்கத்தக்க இளைஞரைப் பற்றிக் கூறியது பளியர்களின் இயலாமையினையும் அப்பாவித்தனத்தையும் உணர்த்துகின்றது.
அரசாங்கம் இம்மக்களுக்கெனப் பெயரளவில் அறிவிக்கும் திட்டங்கள் பல கிடப்பில் போடப்பட்டு செயலற்றுக் கிடக்கின்றன. முன்பு கொண்டுவரப்பட்ட ஒருசில சலுகைகளைக் கூட இம்மக்கள் அனுபவிக்க முடிவதில்லை. அதுகுறித்த விழிப்புணர்வும் இவர்களுக்கு எள்ளவும் இல்லை. ஆனால் இவர்களைப் பயன்படுத்தி சில உள்ளூர் அரசியல் புள்ளிகள் அரசு வழங்கும் சலுகைகளைப் பெற்றுத்தருவதாகக் கூறிப் படிவங்களில் ரேகை வாங்கிச் சென்றுவிட்டு, அதன்வாயிலாகக் கிடைக்கும் தொகையினைத் தாங்களே அனுபவித்து வரும் கொடுமையும் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றது.
இறுதியாக
ஒரு காலத்தில் காடுகளின் காவலர்களாகவும் இம்மண்ணின் மைந்தர்களாகவும் வாழ்ந்துவந்த இம்மக்கள் அழிவின் விளிம்பில் சொற்ப எண்ணிக்கையில் இச்சிறுமலையினை ஒட்டி வாழ்ந்துவருகின்றனர். இம்மலையில் இவர்களுக்குச் சொந்தமான இடங்கள் யாவும் இன்று சிறு அங்குலம் கூட இவர்களிடம் இல்லை. கேட்பாரற்று அநாதைகளாக வாழ்ந்துவரும் இவர்களை அரசாங்கம் கண்ணெடுத்துப் பார்க்கும் காலம் என்றெனத் தெரியவில்லை. இம்மக்களின் வாழ்வியல் இனக்குழு வாழ்வினை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. பளியர் இனத்தாரை, அவர்கள் விரும்பும் காடுகளிலேயே வாழ வகை செய்வதுதான் பொருத்தமான ஒன்றாக இருக்கமுடியும். அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவியாகவும் இருக்கும்.
மிகவும் அருமையான கட்டுரை. பளியரின் வாழ்க்கை முறை, அவர்களின் நிலையை பற்றிய நல்ல பதிவு.
கண்ணுல தண்ணி முட்டுதுங்க! ..
அருமை காட்டு நாயக்கன் வரலாறு அனுப்ப முடியுமா சகோதரே