பிரான்சிஸ் வீட்டுக்கு போகாமலே இருந்திருக்கலாம். போனாலும் பார்த்தோமா, வந்தோமா என்றிருந்திருக்க வேண்டும். செய்யாதது பெரும் பிழை.
நினைக்க நினைக்க அவமானம் ஒரு துர்நாற்றம் போல எரிச்சல் படுத்திக் கொண்டிருக்க, வண்டியை வேகமாய் உறும விட்டேன். கோயிலுக்கு நேரமாகிவிட்டது. இன்னேரம் பூசை தொடங்கியிருக்கும் என்பது இன்னும் பதட்டத்தை அதிகரித்தது. இவ்வளவு தாமதமாக ஒரு நாளும் போனதில்லை.
கோயில் கோபுரம் வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. எண்முகம் கொண்ட நாற்பதடி உயர கோபுரம். செங்குத்தாக உயர்ந்த அதன் உச்சியிலிருந்து ஒரு ஒளி அருவி பாய்ந்தோடுவது போலிருந்தது. சீரான இடைவெளியில் அணைந்து அணைந்து விளக்குகள் எரிவதிலே ஓடுகிற ஒரு இயக்கம். ஒன்றன்பின் ஒன்று துரத்துகிற மாதிரி ஒரு பாவனை. ஒரு பென்சிலை சீவி நட்டு வைத்த மாதிரியிருந்த கோபுர உச்சியை பார்க்கவே எனக்கு நடுங்கும்.
கோபுரத்தின் ஜன்னல் போன்ற அமைப்புடன் பல அலங்கார வளைவுகள் இருந்தன. அதன் விளிம்புகளிலும் கோடுபிடித்த மாதிரி தொடர் மின் விளக்குகள் ஒடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. நுணுக்கமாய் அலங்கரிக்கப்பட்டு, கோடுகளாலான வரைபடம் போல தெரிந்தது கோயில்.
தூரத்தில் வருகிறபோதே கவனித்தேன். உச்சியிலிருந்து இரண்டாவது அடுக்கில் ஒரு பகுதி விளக்குகள் அணைந்து இருள் மூடி கிடந்தது.
நான் போய் சேர்ந்தபோது உள்ளே திருப்பலி தொடங்கியிருந்தது. எதிர்பார்த்தது போலவே கோயில் நிரம்பி வெளி முற்றத்தில் ஆட்கள் நிரம்பி இருந்தார்கள். விரிந்த முற்றத்தில் கடல் மணல் நிரப்பப்பட்டிருந்தது. முற்றம் முழுதும் பகல் போல வெளிச்சம். படபடப்பும் கோபமுமாக அந்த மணல் பரப்பில் போய் அமர்ந்தேன். முழங்காலிடுதல், எழுதல், அமர்தல் போன்ற வழிபாட்டு நடைமுறைகள் கடைபிடிக்க சோம்பல் கொண்டு பலரும் வெளியில் அமர்ந்திருந்தனர். குழந்தைகளை வைத்திருந்த தாய்மார்கள் நிறையபேர் வெளியேதான் இருந்தார்கள். என் இடப்பக்கமிருந்த இளம் பெண்களின் பார்வை விழும் இடத்தில் சில இளைஞர்களும் இருந்தனர்.
முழங்காலிட்டு கண்மூடி வேண்டுகையில் வழக்கமான பட்டியல் ஒவ்வொன்றாக மனதில் வந்தன. பணி உயர்வு, வருமானம், கடனிலிருந்து விடுதலை, பிள்ளைகள் படிப்பு எல்லா வேண்டுதல்களும் ஒப்பித்தபின் சொந்தமாய் ஒரு வீடு என்ற கோரிக்கையும் இணைந்து கொண்டதை கவனித்தேன்.
“சேசுவே” யாரோ ஒருத்தியின் அலறல் என் வேண்டுதலை கலைத்தது. “அங்க பாருக்கா. அவன் இப்படி தொங்குகான்.” கோயில் கோபுரத்தைச் சுட்டிக்காட்டினாள்.
அப்போதுதான் கவனித்தேன். விளக்கு எரியாத அந்த இருண்ட பகுதியை அலங்கார வளைவின் விளிம்பில் காலூன்றியபடி ஒருவன் சரி செய்து கொண்டிருந்தான். கீழேயிருந்து பார்க்க அவன் நிழலுருவம்தான் தெரிந்தது என்றாலும் எனக்கு புரிந்துவிட்டது. அது டென்சிங்தான். ஒற்றை கயிற்றில் தொங்கிக் கொண்டு பழுதை சரி செய்ய முயன்று கொண்டிருந்தான்.
அவன் நின்ற உயரத்தைப் பார்க்கவே என் ரோமங்கள் சிலிர்த்தன. கண்ணை மூடிக் கொண்டேன். எனக்கு பிரான்சிஸ் வீட்டு மாடியும் அந்த இளக்காரச் சிரிப்புகளும் மீண்டும் நினைவுக்கு வந்தது. வீடா காட்டியிருக்கிறான். தீப்பெட்டியை அடுக்கி வைத்த மாதிரி. மீனாட்சிபுரத்தில் அந்த தெருவில் அத்தனை வீடுகளும் அப்படிதான் இருந்தன. கீழே ஒரு முன்னறையும் சமையலறையும் மட்டுமே இருந்தன. மற்ற அறைகள் ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று மாடிகள். நான் போயிருந்தபோது முன்னறையில் விருந்தினர்கள் நிரம்பியிருக்க அழைத்துக் கொண்டு படியேறினான். ஒவ்வொரு தளமாய் காட்டிக் கொண்டு கடைசியில் மொட்டைமாடியில் கொண்டு நிறுத்தினான். என் போதாத வேளை, கைப்பிடிச் சுவரை பிடித்தபடி பேசிக்கொண்டிருந்த நான் தற்செயலாக திரும்பி வெளியே எட்டி பார்த்தேன். அவ்வளவுதான். ஒரு மாபெரும் பாதாளம் தன் அசுரக் கைகளால் என்னை இழுப்பதுபோல கிலி படர்ந்தது. பயம் அடிவயிற்றிலிருந்து பொங்கி உடம்பெங்கும் வெடித்து சிதறியது. தலை சுற்றிக்கொண்டு வந்தது. கால்கள் தரையை விட்டு நழுவின. பார்வை இருண்டு. உடம்பு நடுங்கி வியர்த்துவழிய. பாதாளத்துக்குள் விழுவதை உணர்ந்தேன். அவ்வளவுதான்.
விழிப்பு வந்தபோது தண்ணீர் தெளித்து எழுப்பப்பட்டிருப்பதை உணர்ந்தேன். இன்னமும் கால்களில் நடுக்கம் இருந்தது. அதைவிட சுற்றியிருந்தவர்கள் முகத்தில் மிச்சமிருந்த சிரிப்பு கிளறிய அவமானம். அவசரமாய் படியிறங்கி நிமிர்ந்து பாக்காமலே கிளம்பி இங்கே வந்தால் மறுபடியும் உச்சியில் இந்தப் பயல் தொங்கிக் கொண்டிருக்கிறான். மனசு படபடத்தது. மீண்டும் வியர்த்தது.
இந்தப் பயலுக்கு அப்படி என்ன வயசு இருக்கும். ஒரு பதினைந்தோ பதினாறோ. இந்த வயதில் இவ்வளவு நெஞ்சுரமா? உச்சியில் ஏற இவனுக்கு பயமே இல்லையா. இந்த வியப்பு திருவிழா தொடங்கிய முதல் நாளிலே ஏற்பட்டுவிட்டது. அன்று ஊரே அவனைப்பார்த்து திகைத்துதான் போனது.
கடந்த வெள்ளிக்கிழமை. அன்றுதான் கொடியேற்றம்.
கொடியேற்று நிகழ்ச்சிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்த நேரமே வந்து சேர்ந்திருந்தேன். பித்தளைத் தகடுகள் பொதிந்த கோயில் கொடிமரம் மாலை வெயிலின் மஞ்சள் பளபளப்புடனிருந்தது. ஒரு ஆள் பிடிக்க முடியாத பருமன். உபயதாரரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த ஆளுயர பீடத்திலிருந்து நாற்பதடி உயரத்துக்கு இருந்தது.
தயாரிப்பு வேலைகளை பாதியில் விட்டு விட்டு எல்லோரும் யாருக்காகவோ காத்திருப்பது தெரிந்தது.
“நேத்தைக்கே போன் பண்ணியிருந்தண்டே. எல்லாம் ரெடியாயிருக்கு வந்திருவேன்னுல்லா சொன்னான். இன்னைக்குப் பாத்தா போனை எடுக்க மாட்டேங்காங். நாறப்பெய மொவன்.” தலைவர் கோபமும் படபடப்புமாக கத்திக் கொண்டிருந்தார்.
“இப்பவே மணி நாலாச்சி தலைவரே. இதுவரைக்கும் இப்பிடி பொறுத்ததில்ல. ஆறு மணிக்கு கொடியேத்தணும். எல்லாம் ரெடி பண்ணிட்டு வீட்டுக்குப்போய் ட்ரெஸ் மாத்திட்டு புறப்பட்டு வரணும். நேரமில்ல. இனியும் அவனுக்காக காத்திருக்க முடியாது. ஒரு முடிவெடுங்க” தலைவரிடம் யாரோ உரக்கச் சொல்வது கேட்டது.
மெள்ள விசாரித்தபோதுதான் அந்தக் காத்திருப்பின் காரணம் புரிந்தது.
திருவிழாவின் ஒவ்வோர் அம்சத்திலும் உபயத்தின் அடையாளம் இருக்கும். வழக்கமாக எங்கள் கோயிலில் பக்தர்கள்தான் கொடி, கயிறு, பூமாலை என்று ஆளுக்கொன்றாக காணிக்கை செலுத்துவார்கள். அதைக்கொண்டே கொடியேற்றப்படுவது வழக்கம். முன்னெல்லாம் கொடி காணிக்கை என்றால் இந்த மூன்றும் சேர்த்தே காணிக்கை செலுத்த வேண்டும். தமது பங்களிப்பில்தான் விழா தொடங்குகிறது என்ற எண்ணத்தைத் தருவதால் இந்த கொடி காணிக்கை செலுத்த பெரும் போட்டியே நடக்கும். திருவிழாவுக்கு முன்பே அதற்கான முன்பதிவு இருக்கும். அந்த போட்டியைச் சமாளிக்க குலுக்கலில் ஆளுக்கொரு பொருள் பகிரும் வழக்கம் வந்துவிட்டது.
அப்படிப் பதிவு செய்தவர்களில் கொடியேற்ற கயிறை காணிக்கையாகத் தர ஒப்புக் கொண்டிருந்தவர் இன்னும் வந்து சேரவில்லை. அதற்குத்தான் இந்தப் பதற்றம். நேரம் போய்க் கொண்டேயிருந்தது. ஆளைக் காணவில்லை. தாமதிக்கத் தாமதிக்க நிகழ்ச்சி நிரல் பிசகும்.
“இனி என்னடே செய்ய. நேரமாயிட்டே போவு. பேசாம நம்ம கோயில் கயிற எடுத்து கட்டுங்கடே. வாரத பாப்போம்” என்றார் தலைவர் ஒரு கட்டத்தில். அந்த வார்த்தைக்காகவே காத்திருந்தவர்கள் அவசர அவசரமாக அடுத்தக்கட்ட பணியைத் தொடங்கினர். அடுத்த அரை மணி நேரத்தில் எல்லா ஆயத்த வேலைகளும் கச்சிதமாக முடித்தும் விட்டனர்.
இனி குருவானவர் வந்து ஜெபித்து, புனித நீர் தெளித்து, கயிற்றில் கட்டி கொடியை மேலே ஏற்றி கொண்டாட்டத்தை தொடங்க வேண்டியதுதான் பாக்கி. புதுத் துணியணிந்து ஊரே திரண்டிருந்தது. நாதஸ்வரமும் பாண்ட் வாத்தியங்களும் இருமருங்கும் நின்று இரைச்சலாய் இசையெழுப்பிக் கொண்டிருந்தன.
பங்குப்பேரவை நிர்வாகிகள் ஒரே வண்ணத்தில் உடையணிந்து வந்து சேர்ந்தனர். புகைப்படக்காரர்கள் தவிர கைபேசி வைத்திருந்த அனைவரும் படமெடுத்துக் கொண்டிருந்தனர். திருவிழா வளையல் கடைகளில் கூட்டம் கும்மியது. தேன்குழல் மிட்டாய் சுடச்சுட விற்றுக் கொண்டிருந்தது. பெண்கள் தலை நிறைய பூ வைத்து கழுத்து நிறைய நகையணிந்திருந்தனர். கோயிலின் மேற்கு மூலையில் கொடியேற்றியதும் வெடிக்க, வெடிகளைக் கட்டி தொங்க விட்டுக் கொண்டிருந்தான் வாணவெடிக்காரன்.
அந்த நேரத்தில்தான் கோயில் வாசலருகே அவசர அவசரமாக அந்த கார் வந்து நின்றது. கார் நிற்பதற்குள் அவசரமாக கதவைத் திறந்து குதித்து ஓடி வந்தார் அவர். அவர் கையில் கொடிக்கான புது கயிறு இருந்தது.
“வரக் கூடிய நேரமா ஓய். போன் அடிச்சாலும் எடுக்க மாட்டீரோ.?’ தலைவர் வெடித்தார்.
“நாங்க கயிறெல்லாம் கட்டியாச்சி. இனி ஒண்ணும் செய்ய முடியாது. போவும்.போவும்.”
“வராம இருப்பமா? கொஞ்சம் பொறுத்து பாத்திருக்கலாம்ல அண்ணாச்சி.” என்றார் வந்தவர்.
“அப்ப நீ வரதுவர நாங்க கொடி ஏத்தப்பிடாதா? ஏமான் வருவாருன்னு துண்ட தூக்கிட்டு காத்திருக்கணுமோ” தலைவர் குரலில் சீற்றம் தெறித்தது. சின்ன கூட்டம் கூடிவிட்டது.
வந்தவர் அழுதுவிடுவார் போலிருந்தது. “தப்பா நினைக்காதிய தலைவரே. சமயத்துக்கு வர முடியாம ஒரு சிக்கல்ல மாட்டிகிட்டேன். நேர்ச்சை பாத்தேளா. அதான் கார பிடிச்சாவது வந்திட்டேமில்லா. எப்படியாவது நிறைவேத்திரணும். என்ன ஒரு அஞ்சு நிமிச வேலைதானே. இந்த கயிற மாத்தி உட்டுருங்க.”
“ஏ. கிறுக்கா வோய் பிடிச்சிருக்கு உமக்கு. இப்ப போய் கயிற மாத்துனு சொன்னா நடக்க கூடிய காரியமா. சாமியாரு வர நேரம். நாங்களும் புது கயிறுதான் போட்டிருக்கோம். வேணும்னா அதுக்க விலைய காணிக்கையா குடுத்திட்டு உன் வேண்டுதலை நிறைவேத்திக்க.”
“அதுக்க விலைய நான் குடுத்திதிரலாம். ஆனா இந்தக் கயிறதான் ஏத்தணும் பாத்துகிடும். ஒரு வருசமா வச்சி செபிச்சாக்கும் கொண்டு வந்திருக்கேன். இன்னைக்குன்னு பார்த்து வீட்டில ஒரு இழவு விழுந்து போச்சி. சரி அத விடுங்க பேசிட்டு நிக்காம இந்த கயிற மாத்தி விட்டுருங்க.”
“ஏல. இவன் யாருல. சொன்னா புரிய மாட்டெங்கான். இந்த நேரத்தில வந்து இப்படி உயிர எடுக்கான்.”
கயிறு வாங்கி வந்தவர் மனைவி காரைவிட்டு இறங்கி கூட்டத்தை பிளந்தபடி உள்ளே வந்தாள். தலைவர் காலில் விழுந்தாள். “அய்யா மன்னிச்சிருங்க. பிந்திப் போச்சி தப்புதான். இன்னைக்குனு பார்த்து என் மூத்த மொவன் ஏதொ ஒரு பொண்ணுக்காக நாண்டுகிட்டு சாவ போயிட்டான். அவனக் காப்பாத்த போய்தான் இவ்வளவு நேரமாகிப் போச்சி. இந்த நேர்ச்சை மட்டும் நிறைவேறல்லேன்னா மனசு நிம்மதி ஆவாது. மாட்டேன்னு மட்டும் சொல்லிராதீய.” கையெடுத்து கும்பிட்டாள். யாருக்கும் பேசத் தோன்றவில்லை.
“சரிப்பா அத மாத்திதான் உட்டிருங்களேன். வேண்டுதலில்லா” ராபர்ட் பரிந்து பேசினான். தலைவரும் நிதானித்தார். “சவுத்துக்கு பிறந்தவன் சொன்னா கேட்க மாட்டான்” என்று சலித்துக் கொண்டவர் “சட்டுபுட்டுனு அத மாத்தி தொலைங்கடே. நேரமாகு” என்றார்.
கயிறை மாற்றுவதற்கு பழைய கயிற்றின் ஒரு நுனியில் புதிய கயிறை கட்டி இழுத்து மறுமுனையில் விடுவதுதான் வழக்கம். சுலபத்தில் முடிந்துவிடக் கூடியதுதான். எப்போதும் ஒரு பழைய கயிறு கொடிமரத்தில் இருக்கும். வழுக்குகிற கொடிமரத்தில் நினைத்தவுடன் ஏற முடியாது என்பதால் அப்படி ஒரு ஏற்பாடு.
அருள்சாமி சரசரவென்று ஏற்கெனவே போட்டிருந்த கயிறை அவிழ்த்தான். புதிய கயிற்றின் நுனியை அதோடு கட்டினான். நல்ல தடித்த நைலான் கயிறு. கட்டுக்கு நிற்காமல் வழுக்கியது. கம்பி எடுத்து இரு முனைகளையும் கட்டி இறுக்கினான். பின் பழைய கயிறை இறக்கினான். விரைவாக முடித்துவிட வேண்டும் என்ற பரபரப்பு அவனிடம் தெரிந்தது. பழைய கயிறு கீழே இறங்க இறங்க புதிய கயிறு மேலேறியது. அவன் இழுத்த வேகத்துக்கு வழுக்கிக் கொண்டு வந்த கயிறு ஒரு கட்டத்தில் மேலே வளையத்தில் சிக்கிக் கொண்டு நின்றது. முனைகளைக் கட்டியிருந்த கம்பி எங்கோ மாட்டிக் கொண்டது. மேலேயும் போகவில்லை. கீழேயும் வரவில்லை. அருள்சாமிக்கு வியர்த்தது. என்ன இது இப்படி மாட்டிக் கொண்டது.
ராபர்ட் சொன்னான். “பெலத்து இழுடே. வந்திரும்.”
இவன் இழுத்தான். கயிறு இந்த பக்கம் ஒன்றும் அந்த பக்கம் ஒன்றுமாக வந்து விழுந்தது. கூட்டம் பக்கென உறைந்து நின்றது. மேளக்காரன் வாசிப்பை நிறுத்தினான். அருள்சாமி திகைத்துப்போய் நின்றான். தலைவர் தலையில் கைவைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்தார். “இதுக்குதான் அப்பவே சொன்னேன். நாய்க்கு பிறந்தவன். பெரிய வேண்டுதல் இப்பதான் எல்லாம் புடுங்கணும்னு நின்னுகிட்டானா. இப்ப போச்சா. இனி நல்லா கொடி ஏத்துங்க.”
கயிறு வாங்கி வந்தவர் கண்கள் கலங்கி நின்றார்.
“விளங்காதவனுக்கிட்ட பொறுப்பக் குடுத்தா இப்படிதான். நல்ல எழவுடுத்த வேல பண்ணியிருக்கானுவல்ல. இப்ப எவன் கொடி மரத்தில் ஏறி கொடி கட்டுகது. திருவிழா உருப்பட்ட மாதிரிதான்.” பதவி போன முன்னாள் தலைவர் நக்கலடித்தார்.
மேலே ஏறுவதென்றால் கொடிமரத்தையொட்டி சாரம் கட்டிதான் ஏறவேண்டும். இந்தக் குறுகிய நேரத்தில் நடக்கிற காரியமா?
தலைவர் குருசடிக்கு முன் முழந்தாளிட்டு ஜெபிக்க ஆரம்பித்தார். ‘இது போதாத நேரம், ஆளாளுக்கு வறுத்து எடுத்து விடுவார்கள்’ என்ற கவலை அவருக்கு.
தென்னை மரம் ஏறும் பால்மணியை யாரோ கூட்டி வந்தார்கள். சாயுங்காலம் ஆனாலே அவன் போதையில் இருப்பான். இப்போதும் அப்படிதான் இருந்தான். அவன் பக்கத்தில் வந்தபோது நமக்கே போதையேறி விடும் அளவுக்கு மது வாடை அடித்தது. கொடிமரத்தின் பீடத்தை ஏறுவதற்கே அவன் கால்கள் ஒத்துழைக்கவில்லை. கிடுகிடுவென்று நடுங்கியது. “எவனால இதில ஏறமுடியும்பா.” என்று கழன்று போனான்.
“பேசாம புதுசா ஒரு கம்ப நாட்டி அதில ஏத்திருங்க. மத்த வேலைகளை பிறவு பார்ப்போம்” என்று எவனோ ஒருவன் ஆலோசனை சொன்னான்.
காரியம் எதுவும் நடந்தபாடில்லை. செய்வது அறியாது கலங்கிப்போய் நின்ற அந்த வேளையில்தான் இந்தப்பையன் வந்தான். “கொண்டாங்கண்ணே நான் போடுகேன்” என்றான். பையனை ஏற இறங்க பார்த்துவிட்டு சம்மதமில்லாமல் நின்றார் தலைவர். “பொடி பையனா இருக்கானே. ஏதாவது உயிர்பலி ஆகிப்போச்சுன்னா” தயங்கினார்.
“விடுங்கண்ணே நம்ம பையந்தான்.” தைரியமூட்டினான் ராஜன். ஒலி ஒளி அமைக்க வந்தவன் அவன்.
பையன் யார் சம்மதத்தையும் எதிர்பார்க்கவில்லை. லுங்கியின் கீழ் நுனியை மடக்கி கால்களுக்கிடையே விட்டு பின்பக்கமாக இடுப்பில் செருகினான். கயிற்றின் ஒரு நுனியை வாயில் கடித்துக் கொண்டான்.சரசரவென ஏறத்தொடங்கினான்.
கொடி மரத்தில் இரண்டு அடிக்கு ஒரு புடைத்த மோதிரம் மாதிரி வளையம் அமைக்கப்பட்டிருந்தது. பையன் அந்தப் புடைப்புகளை வாகாக பற்றிக்கொண்டு மேலே போய்க் கொண்டிருந்தான். பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் பேச்சு மூச்சில்லை. பயத்தில் என் நெஞ்சு பதறித் துடித்தது. கண்ணை இறுக மூடிக்கொண்டேன்.
டென்சிங் பயமில்லாமல் மேலே போய் வளையத்தில் கயிறை மாட்டிக் கொண்டு அதே வேகத்தோடு கீழே இறங்கி வந்தான்.
லுங்கியை சரி செய்து கொண்டு நகர முற்பட்டவனை தலைவர் வந்து கட்டி பிடித்தார். காசு எடுத்து அவன் தலை சுற்றி புனிதரின் சுருபத்துக்கு அருகிலிருந்த காணிக்கை பெட்டியில் போட்டார். அந்தோணியார் சுருபத்தை தொட்டு முத்தினார்.
கயிறு வாங்கி வந்தவர் அவன் முன் மண்டியிட்டு கை கூப்பி வணங்கினார். பணமெடுத்து அவன் சட்டைப்பையில் திணித்தார். சுற்றி நின்ற கூட்டம் கைதட்டிப் பாராட்ட, வெட்கப்பட்டுக் கொண்டே விலகி ஓடினான்.
“லேய் எப்படில ஏறின. பயமாயில்லியா” என்றேன் என்னருகில் வந்தபோது. சிரித்தான். எனக்கு நடுக்கம் இன்னும் விலகவில்லை.
“எவ்ளோ உயரம். யப்பா. எப்படிடே”
“அதெல்லாம் பழக்கம்தாண்ணே”
“கொஞ்சம் கூட பயமே இல்லியா” திரும்பத் திரும்ப அதே கேள்வியே என்னிடமிருந்தது.
“அதெல்லாம் பார்த்தா வேலை நடக்குமாண்ணே” என்றான்.
“எப்படியோ கடவுள் காப்பாத்திட்டான். போ. உள்ள போய் காணிக்கை போட்டுக்கிட்டு போ”
“போங்கண்ணே.” அவன் அடுத்த வேலையை கவனிக்கப் போய் விட்டதால் திமிர் பிடித்த பயல் என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்தினான்.
அடுத்த ள் பகலில் நான் பைக்கில் போய் கொண்டிருந்தபோது கோயிலுக்கு வெளியே ரோட்டில் நின்றிருந்தான். கைகாட்டி நிறுத்தினான். தூக்கக்கலக்கமும் கலைந்த தலையுமாக இருந்தான். சட்டை0 பாக்கெட்டில் ஒரு டெஸ்டர் செருகியிருந்தான். “போற வழியில் என்னை பார்வதிபுரத்தில் இறக்கி விட்டுருங்கண்ணே” நான் பதில் சொல்வதற்குள் அவனாகவே ஏறிக் கொண்டான்.
திடீரென்று அவன் பேசிய ஒரு வார்த்தையை கேட்டு திடுக்கிட்டேன்.
“என்னடே கெட்ட வார்த்தையெல்லம் பேசுற”
“எங்க ஓனர்னே. வேலை செய்த கூலியக் கேட்டா தர மாட்டேங்கான். பிச்சகார பய. வீட்டுக்குப் போனா எங்கம்ம தொணதொணன்னு வரும். ஏதாவது குடுத்து வாய அடைக்கணும்லா. வெறும் முன்னூறு ரூபா தாரான். பன்னிக்கு பிறந்தவன். வரட்டும். வலிய வந்து கூப்பிடுவான்ல. அப்ப இருக்கு அவனுக்கு.”
“பள்ளிக்கூடத்துக்கு போமாட்டியா நீ”
“படிக்க மண்டையில் ஏறணும்லா. அங்க போனா வாத்தியாரு என் உயிர எடுக்க ஏம்ல வாரேன்னு கேட்காரு. என்னத்த செய்ய.”
“இதெல்லாம் உங்க அப்பா கேட்க மாட்டாரா”
“அவரு போனதினாலதானே இந்த பொழப்பு”
“எங்க போனாரு”
“ஈபில போஸ்ட் நாட்ட போவாருண்ணே. குடிச்சிபோட்டுதான் போறது. விளங்குமா சோலி. ஒருநாளு போஸ்ட் மேலே இருந்து கீழே விழுந்து செத்துப் போயிட்டாருண்ணு பக்கத்து வீட்டு அண்ணந்தான் ஸ்கூல்லயிருந்து கூட்டிகிட்டு வந்தான்.”
“அண்ணையிலயிருந்து படிப்ப விட்டிட்டியோ?”
“படிப்பு இல்லேன்னா என்னண்ணே. என்ன வேலைன்னாலும் நாலு காசு சம்பாதிக்கணும். நல்ல உசரத்துக்கு போணும்” என்று சொல்லிக் கொண்டிருக்கையிலே பார்வதிபுரம் வந்துவிட்டது. நிறுத்தி இறங்கி புறப்பட்டுக் கொண்டிருந்த சர்குலரில் ஏறிப் போனான்.
அதன் பிறகு திருவிழாவின் கடைசி நாளான இன்றுதான் நல்ல உயரத்தில் அவனைப் பார்க்கிறேன். அவனுக்கு இது இயல்பாய் மாறி விட்டிருக்கிறது. அண்ணாந்து பார்த்த என் கால்கள் வெடவெடத்தன.
“இதெல்லாம் முதல்லே சரி பண்ணியிருக்காண்டாமா. எல்லா லைட்டும் எரியலேன்னா ஒரு பைசா வாங்கிகிட மாட்ட பாத்துக்க.” ஒலிபெருக்கிக்காரனை விழாக்குழு விரட்டிக் கொண்டிருந்தது.
“நீங்க போங்கண்ணே. பய கில்லாடி. ஓடற கரண்டையே கைல பிடிப்பான். இப்ப ரெண்டு நிமிசத்தில சரி பண்ணிருவான்,“ சவுண்ட் சர்வீஸ்காரன் அவரை சமாளித்துக் கொண்டு போனான்.
பையன் கில்லாடிதான். வேறு எந்த பாதுகாப்பு உபகணங்களும் இல்லாமல் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தான். அதில் ஏணி மாதிரி மேலே ஏறியும் இறங்கியும் பரிசோதித்தபடி இருந்தான். இந்த கோபுரத்தின் உச்சியில் கூட இந்த கயிற்றை இவனே கட்டியிருக்கக் கூடும்.
என்னதான் பழக்கமாயிருந்தாலும் அதற்கும் ஒரு தொடக்கம் இருந்திருக்கதானே வேண்டும். அப்போதும் பயமில்லாமல்தான் ஏறினானா? பிழைப்பு என்று வந்துவிட்டால் எல்லா பயமும் போய்விடுகிறதா?. பார்க்க பயமாயிருக்கிறது என்றாலும் அவ்வப்போது அண்ணாந்து அவனை பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. இப்படி கவனம் பிசகுவது மன அமைதியை கெடுத்தது. திருப்பலியில் முழுமையாக ஈடுபட முடியாத குமைச்சல் வேறு.
என் அருகிலிருந்தவர், “இவனுவளுக்கு இப்படிதான் ஒரு லைட் எரியலேன்னாலும் இருப்பு வராது. நோண்டிகிட்டேயிருப்பானுவ.” என்று எரிச்சல் பட்டுக் கொண்டார்.
நான் இப்போது மறுபடி அவனைப் பார்த்தேன். ஜன்னல் போன்ற அமைப்பில் கால் வைத்து நின்றவன் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கோபுரத்தை உந்தி தள்ளியபடி மறுபக்கம் போனான். இருட்டில் ஒரு பறவை பறப்பது போன்ற இலாவகம் இருந்தது. பக்கத்திலிருந்தவர், “தல தெறிச்சி போவான். விழுந்து தொலைச்சிர போறான்.” என்று பதறினார். அப்படியெல்லாம் விழுந்து விடமாட்டான் என்று திடமாக நம்பத் தொடங்கியிருந்தேன்.
சற்றுநேரம் கழித்து மறுபுறத்திலிருந்து திரும்பி வந்து இன்னொரு இடத்தைப் பரிசோதித்தான். பின் ஏதோ ஒரு தொடுதலில் பட்டென எல்லா விளக்குகளும் எரிந்தன. அப்பாடா என்று நிம்மதி எனக்குள் ஏற்பட்டது.
மீண்டும் மேலே பார்த்தபோது தடுப்பில் ஒரு கால் ஊன்றி கோபுரத்தில் சாய்ந்து அப்படியே நின்று கொண்டிருந்தான். என் செல்போன் சிணுங்கியது.
கொஞ்ச நேரம் அப்படியே இருந்தவன் கயிறை இழுத்து பக்கவாட்டில் விட்டுக் கொண்டான். அங்கு வெளிச்சம் அதிகமில்லை. அல்லது முன்புற வெளிச்சத்தினால் ஏற்பட்ட பார்வை மயக்கமாயிருக்கலாம். ஒரு காலை கோபுர சுவரில் வைத்துக் கொண்டு மறு காலுக்குள் கயிறை ஒரு சுற்று சுற்றிக் கொண்டான். அப்படியே சில நிமிடம் நின்று ரசித்தான். பின் எதிர்பாராத நேரத்தில் கயிற்றில் சறுக்கியபடி இறங்கினான்.
விடாமல் அடித்துக் கொண்டிருந்த போனை எடுத்து காதில் வைத்தேன். ஜெகன் அழைத்தான். “மக்கா எங்க இருக்க.” நான் பதில் சொன்னதும் “நாங்க பக்கத்திலதான் திருவிழா கொண்டாடிகிட்டு இருக்கோம். ரெண்டு ஃபுல்லு வாரியா” என்றான்.
போனை அணைத்துவிட்டு மேலே பார்க்கையில் அவன் லுங்கி அவிழ்ந்து அதை பிடிக்க அவன் கை காற்றில் துழாவுவது போலிருந்தது. அவன் வந்த வேகத்துக்கு நெஞ்சை பிடித்துக் கொண்டேன். ’செத்தான்’ என்றே தோன்றியது. இறுக கண்ணை மூடிக் கொண்டேன்.
‘தொம்’ என்ற ஓசை எனக்கு மட்டும்தான் கேட்டதா என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த நேரம்தான் கோயில் மணியும் அடித்தது. திகைத்து நின்ற சில நிமிடங்களுக்கு பின்புதான் எழுந்து ஓடினேன். பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது.
நாலைந்து பேர் பதற்றத்துடன் கூடி நிற்க நடுவில் மல்லாந்து விழுந்து கிடந்தான். உண்மையிலே செத்துப் போனானா? பயத்தை மறைத்துக் கொண்டு அருகில் போனேன்.
லுங்கி நெகிழ்ந்திருந்தது. ஊடே தெரிந்த தொடை கயிறு உரசி, கன்னிச் சிவந்து போயிருந்தது.
ஒருவர் கை பிடித்து தூக்கினார். ’ஸ்ஸ்ஷ்’ என்று வலியை அடக்கினான். கையில் இரத்தம் பிசுபிசுத்தது. வலது கால் ஊன்றவே முடியாமல் நொண்டியபடி எழுந்தான்.
“என்னடே இப்படி ஆயிப்போச்சி. கவனமா இருக்காண்டாமா?” என்றபோது என் குரல் தடுமாறியது. “விடுங்க சார். செத்தா போயிட்டேன்“ என்றான்.
திருப்பலி முடிந்து கூட்டம் கலையத் தொடங்கியது.
`கயிறு’ கதை அபாரம். நானே கதை நிகழ்ந்த இடத்தில் இருந்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது. உரையாடலை மிகவும் ரசித்தேன்.