என் இடைநிலைக் கல்வியை முடித்துவிட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருந்தேன். நெடுநாட்கள் அலைந்து அலைந்து பலனற்றுச் சோர்ந்து போயிருந்தேன். என்னோடு படித்தவர்கள் என் கண் முன்னாலேயே வேலைக்காகி கை நிறைய சம்பளம் பெறுவதைப் பார்க்கும்போது மனம் விம்மியது. புத்தம் புதிய ஆடைகள் உடுத்தி, பெருமையோடும் மிடுக்கோடும் அவர்கள் வேலைக்குச் செல்வதைப் பார்க்கும்போது பொறுமினேன். வீட்டில் வெட்டியாக இருப்பதைப் பார்த்து பிறர் ஏதும் சொல்லாமல் இருந்தாலும் உள்மனம் வெடித்து வெடித்து அழுதது. சம்பாதிக்க வேண்டிய வயதில் பெற்றோர் உழைப்பில் உண்ணும் உணவு கசந்தது. வேலையற்று வெறுமனே திரியும் தருணங்கள் என்னைத் தூக்கி தெருவில் வீசி விட்ட கையறுநிலை எனக்கு. கல்வித் தகுதிக்கேற்ப வேலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டிருந்தேன். பினாங்கு தொழிற்பேட்டை தொழிற்சாலைப் படிகளில் ஏறி இறங்கினேன். பினாங்கில் வெளிநாட்டுக் கம்பனிகள் பல தொடங்கிய தொழிற்பேட்டைகள் சன்னஞ் சன்னமாய் முளைத்துக்கொண்டிருந்த நேரம் அது. தொழிற்சாலை வளாகத்துக்கு பல நேர்முகத் தேர்வுகளுக்குப் போனேன். பலனில்லை. சில தொழிற்பேட்டை வாயிற் கம்பிக் கதவுகள் லேசில் திறப்பதாய் இல்லை. அவை என் எதிர்பார்ப்பை நிராகரித்து வெளியே தள்ளும் பெருஞ்சுவராக எழுந்து நின்றன. வாசல் காவலர்கள் நாம் ஏதும் கேட்கும் முன்னரே என் பரிதாபத் தோற்றத்தையும் வெல்பேர் முகத்தையும் பார்த்து குறிப்பறிந்து கைவிரித்து வேலை காலி இல்லை என உதாசீனப்படுத்தினர். அந்த இளமைப்பருவத்தில் எல்லாவற்றிலும் தோல்விதான் எதிர் கொண்டு அறைந்தது. மணற் மூட்டையில் துவாரம் விழுந்து ஒழுகி முற்றாக சப்பையாகிவிடுவது போல, என்னிலிருந்து மெல்ல மெல்ல எல்லாமே இழந்துகொண்டிருப்பது போல உணர்ந்தேன். என்னைப் பார்க்கின்றவர்கள் வேலை கிடைக்கவில்லையா என்று வினவும்போது என்னை அவர்கள் கேலி செய்வதாய்ப் பட்டது. அப்படிப்பட்டவர்களை நான் தவிர்க்க முயன்றேன். அல்லது ஏதாவது பொய் சொல்லிச் சமாளித்து நகர்ந்து விடுவேன். அப்போதெல்லாம் பொய்கள் பேருதவியாக இருந்தன. ஆனால் அகம் முழுதும் ரத்தம் வடிந்தது. காலம் இரக்கமில்லாமல் வெறுமனே கடக்கும்போது அப்பொய்கள் திரிந்து என் நிலை மேலும் பரிதாபத்திற்கு ஆளானது.
வேலை செய்யாதவன் ஆண் இல்லை. வேலையற்றவன் எதற்கும் உதவாதவன். வேலையற்றுத் திரிபவன் தண்டச்சோறு போன்ற உணர்வுகள் என்னைத் தீராமல் சம்மட்டி கொண்டு தாக்கிக்கொண்டே இருந்தன. நான் சுயம் இழந்தவனாய் ஆக்கப்பட்டிருந்தேன். தன்மானம் என் போன்றோருக்குக் கிடையாது என்ற போதாமை என்னை கீழறக்கிய வண்ணமிருந்தது. என் முகம் சன்னஞ் சன்னமாய் பொலிவை இழந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் வெளியே அலைந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது நான் இன்னொரு இருண்ட பிரதேசத்துக்குள் நுழைவதுபோல் இருந்தது.. என் முகம் முப்பொழுதும் ஏந்திக்கொண்டிருக்கும் ஏமாற்றத்தை என்னால் மறைக்க முடியாமலில்லை. எனக்கும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இழந்தவனானேன்.
அந்த நேரத்தில்தான் எம்.ஏ. இளஞ்செல்வனின் ‘டுக்கா சித்தா’ என்ற சிறுகதை தமிழ் நேசனில் பவுன் பரிசு முத்திரைக் கதையாகப் பிரசுரமாகிறது. டுக்கா சித்தா என்ற சொல் வேலை கிடைக்காமல் துவண்டு போனவர்களுக்கு மிகப் பரிச்சயமான சொல். நேர்முகத் தேர்வுக்குப் போய்விட்டு வந்த பிறகு நம்மைத் தொடரும் நிழல் போல அரசு முத்திரையிட்ட ஒரு கடிதம் வந்து சேரும். ஆவலோடு திறந்து பார்த்தால், ‘டெஙான் டுக்கா சித்தா ஞா’ என்ற கடிதத்தின் முதல் வரி என் முகத்தில் பாய்ந்து தீப்பிழம்பாய் அறையும். இப்படி எண்ணற்ற கடிதங்களை வாசித்தவர்களுக்கு டுக்கா சித்தா என்ற தலைப்பில் கதை வந்ததும் வாசிக்காமல் விடுவார்கள? வேலைக்கு மனுச்செய்யும் அனைவருக்கும் டுக்கா சித்தா என்ற சொல்லின் வன்மம் புரியும்.
என்னை உடனே வாசிக்க வைத்த தலைப்பு அது.. அக்கதையில் மலாய்க்கார, சீன, தமிழ் இளைஞர்கள் மூவர் எஸ்பிஎம் என்னும் இடைநிலைக் கல்வியை முடித்து வேலைக்காக அலைவார்கள். மலாய்க்கார மாணவருக்கு மலாய்மொழியில் சிறப்புத் தேர்ச்சி கிடைத்து சில மாதங்களிலேயே அரசாங்க வேலைக்காகி விடுகிறான். மலேசிய மொழிப்பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி கிடைக்காத சீன மாணவரும் தமிழ் இளைஞனும் வேலைக்காவதில் பெரும் சிக்கலை எதிர் நோக்குகிறார்கள். பல காலம் காத்திருந்து ஏமாற்றத்தோடு இருந்த சீன மாணவன் தன் அப்பாவின் அங்காடி வணிகமான கரும்புச்சாறு விற்கும் வியாபாரத்தை ஆரம்பிக்கிறான். வியாபாரம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. அப்பாவோடு வணிகத்தில் துணைக்கு நின்ற பழக்கமே அவனை அதில் வெற்றியடைய வைத்திருந்தது. வேலையற்று அலைந்து கொண்டிருந்த தமிழ் இளைஞன் சீன நண்பனின் அங்காடிக் கடைக்குப் போய் அவனோடு நேரத்தைப் போக்குவது வழக்கம். அப்போது அவன் வியாபாரம் சுற்சுறுப்பாய் நடந்து கொண்டிருக்கும். கல்லாவில் சில்லறை விழுந்து சிணுங்கும் சப்தம் அவனை என்னவோ செய்தது. தன் நண்பன் சுய காலில் நின்று சம்பாதிப்பதை நேரடியாக கவனித்தும்கூட மனதில் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தலையெடுக்கவில்லை. சம்பிரதாயமாகவே, வேலை செய்து சம்பாதிப்பதுதான் புருஷ லட்சணம் என்ற மரபான சிந்தனை நம்மில் ஊடுறுத்து டிஎன்ஏவில் கலந்துவிட்டது. வியாபாராம் செய்வது தன்மானத்துக்கு ஊறு விளைவிக்கும் ஒன்று என்று அவன் மனதில் தன்னிச்சையாகவே நிலைகொண்டிருந்தது. பலவகை மனிதர்களிடம் கைநீட்டிக் காசு வாங்குவது இழி பிழைப்பு என்றே வலிந்து நிறுவப்பட்டுவிட்ட சமூகம் இது. பிறர் முன்னால் கைகட்டி கட்டளைக்குக் காத்திருப்பதும் காலங்காலமாய் தமிழ் சமூகத்தின் மரபான நம்பிக்கையாகிவிட்டிருந்ததில், அவனும் விதி விலக்கல்ல.
வெறுமனே தன் வணிகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தமிழ் இளைஞனை சீன நண்பன், “வேலை கிடைக்கும் வரை நீயும் இந்த வியாபாரத்தில் ஈடுபடலாமே” என்கிறான். தனக்கு இதில் ஆர்மில்லையென்றும் வேலை செய்து பிழைப்பதே தன் தலையாய் நோக்கம் என்கிறான்.
ஆனால் விறுவிறுப்பாக நடக்கும் அந்தக் கரும்புச்சாறு வியாபாரமும், பைநிறைய கல்லா கட்டும் நிலையும் அவன் மனதில் நீர்நிலையில் சிறிய கல்லெறிந்தது போல் சலனத்தை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது. மறுபக்கம் உள் மனம் முழுமையும் வேலை வாய்ப்பையே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. பிறிதொரு நாள் சீன நண்பன் வற்புறுத்தவே அவன் தயங்கித் தயங்கி அரை மனதோடு வணிகம் செய்யச் சம்மதிக்கிறான். ஆனாலும் தன் சீன நண்பனைப்போல தன்னால் வெற்றிபெற முடியுமா என்ற சந்தேகம் அவனை சற்றே பின்னடைய வைக்கிறது. சீனர்கள் ஏன் வணிகத்தில் பெரிய வெற்றி அடைக்கிறார்கள் என்பதற்கும் ஒரு சூத்திரத்தைக் கையாண்டு வருவதே காரணம்! ‘செய் அல்லது செத்து மடி’ என்பதுதான் அது. அப்படியே அந்த முயற்சியில் ஒட்டாண்டியாய்ப் போனாலும் ஒன்று ஆகிவிடப் போவதில்லை என்ற நம்பிக்கையை. ‘நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்’ என்ற ஜென் அடிப்படையிலான தத்துவம் அவர்களைத் தளர்ந்துவிடாமல் வைத்திருக்கிறது. எல்லாமே முடிந்துவிட்டது என்று சோர்ந்துவிட்ட நிலையில் இந்த ஜென் தத்துவம் விழுந்துவிட்டவர்களை எழுச்சிபெற வைக்கும்.
புதிய இடத்தில் எளிய முதலீடு செய்து வனிகத்தைத் தொடங்குகிறான் அந்தத் தமிழ் இளைஞன். தொடக்க நாட்களில் அவன் மனம் முழுமையாக ஈடுபட மறுத்தது. சம்பளத்துக்கு வேலை செய்து சம்பாதிப்பதிலேயே கவனப்பட்டுக் கிடக்கிறது மனம். அதனை எளிதில் களைந்து வெளியாக முடியவில்லை.
மெல்ல மெல்ல அங்காடி வியாபாரத்தின் நுணுக்கங்களை அனுபவம் அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறது. நல்ல வருமானத்தையும் பார்க்கிறான். அவ்வப்போது சிணுங்கும் சில்லரைகள், அடிக்கடி சிணுங்கத் தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் கல்லா கட்டும்போது அவன் மனம் துள்ளிக் குதிக்கிறது. குடும்பத்துக்குத் தேவையான முக்கிய வசதிகளை செய்து கொடுக்கிறான். இவ்வளவு நாள் நிலவிய குடும்ப வறுமை அவனால் புறமுதுகிட்டு ஓடிவிடுகிறது. எப்போதுமே பைநிறைய பணம் புழங்கியது. கையில் ஒரு காசு கூட இல்லாமல் வெயிலில் நாதியற்று நடந்த சம்பவங்களை அவன் நினைத்துப் பார்க்கிறான். ஆனால் அந்தக் கையறு வாழ்வை அப்படியே திருபிப்போட்ட இந்த வியாபாரத்தை நெஞ்சு நிறைய ஏந்திக் கொள்கிறான். தனக்கு வேலை இல்லையே என்ற எண்ணம் நல்ல வருமானத்தால் நேர் செய்யப்பட்டுவிட்டது. வீட்டில் அவனுக்குக் கிடைத்த புது மரியாதையில் தன்னை ஒரு முழு மனிதனாக உணர்கிறான்.
வியாபாரம் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டுவரும் நாள் ஒன்றில், அவன் முன்னர் வேலைக்கு மனுசெய்து, நேர்முகத்துக்குப் போய்வந்த வேலையிடத்திலிருந்து ஒரு கடிதம் வருகிறது. அரசாங்க முத்திரையோடு. டுக்கா சித்தா என்றுதான் பதில் எழுதப்பட்டிருக்கும் என்று வேண்டா வெறுப்போடு திறந்து பார்க்கிறான். அது அவ்வாறில்லாமல் வேலைக்கான நியமன மடலாக இருந்தது. இன்ன சம்பளம், இன்ன கூடுதல் சலுகைகள், இன்ன வருடாந்திர ஊதியக் கூடுதல் என்ற விபரமும் எழுதப்பட்டிருந்தது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் அவனுக்கு கரும்புச்சாறு வியாபாரத்தில் கிடைக்கும் மாத வருமானத்தில் கால்வாசி கூட இல்லை! அவன் ஈடுபட்டிருக்கும் வியாபாரத்தில் அவனால் அசுர வேகத்தில் முன்னேற முடியும். அந்த அரசு வேலையில் கிடைக்கப்போகும் சலுகைகளை மற்றும், மொத்த வருமானத்தை விடவும் அவன் வாழ்நாளில் பன்மடங்கு அதிகம் சம்பாதிக்க முடியும். கைகட்டி வேலை செய்யப்போகும் அடிமைத்தனத்திலிருந்து, தன் ஏவலுக்கு அடிபணியும் பணியாட்களை உருவாக்கிக்கொள்ள முடியும். சுய காலில் நிற்கும் பெருமையும், முதலாளிய குணமும் வந்துவிடும். எனவே, அப்போதே ஒரு பதில் எழுதிறான். அவன் பதில் இப்படியிருந்தது. “டெஙான் டுக்கா சித்தாஞா, (வருத்தத்தோடு) எனக்கு இந்த வேலையை ஏற்றுக்கொள்ள சம்மதம் இல்லை. மன்னிக்கவும் என்று எழுதி தபாலில் சேர்க்கிறான். அவனைப் பலமுறை ஏமாற்ற மனநிலைக்கு உள்ளாக்கிய சொல்லையே திரும்ப எழுதியதே எதிர்பாரா திருப்பமாகக் கதையின் வெற்றியை நிர்ணயிக்கிறது..
இங்கே ஒரு சிறுகதை முடிச்சு சட்டென அவிழ்ந்து வாசகனுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கிறது. கதைகளில் பரிமாறப்படும் எதிர்பாரா திருப்பமே ஒரு முழுமைபெற்ற கதையாக உருவாக்கித் தரவல்லது. நவீன கதை சொல்லும் முறை ஐரோப்பாவில் அறிமுகமானதும் ஒரு தரமான சிறுகதைக்கான மோஸ்தரை வலிமையாகவே நிறுவியிருந்தார்கள் மேலை எழுத்தாளர்கள். கதையின் முடிச்சு என்பதே அதன் திடுதிப்பென முடியும் முடிவையே சார்ந்திருந்தது. அதாவது கூர்மையான கூறுமுறை, கவனமாக வளர்த்தெடுக்கும் கதை சொல்லல் நிரல், பின்னர் மௌனமாக வெளிப்படும் திட்டவட்டமான உச்ச முடிவு என கதை வாசக மனத்துக்கு மிக நெருக்கமாக்கி விடும். அதனால் சிறுகதை இலக்கியமே பெரும்பாலானோரால் இன்றைக்கும் வாசிக்கப்படுகிறது. இதனை வளர்த்தெடுத்தவர்கள் ருஷ்ய ஐரோப்பிய பிரம்மாண்டங்களான அந்தோன் செக்கவ், மாபாசோன், ஓ.ஹென்றி போன்றவர்கள். அந்தோன் செக்காவின் ‘பந்தயம்’ என்ற சிறுகதை நினைவுக்கு வருகிறது. இவர்களின் பாணியை அடியொற்றியே தமிழக படைப்பாளர்கள் கதைகளைப் புனையத் தொடங்கினர். கு.ப.ரா, சுஜாதா போன்ற சிறுகதைச் சிற்பிகளின் தொடக்கம் முதல் முடிவு வரை வாசகனை ஆர்வ நிலையில் வைத்திருக்கும். அவருடைய ‘விடியுமா’ சிறுகதை இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு. இளஞ்செல்வன் ஐரோப்பிய கதை கூறும் முறையை நன்கு உள்வாங்கியவர். தமிழ்நாட்டிலிருந்து வரும் தரமான கதைகளின் மோஸ்தரை அவர் கையகப்படுத்தி மலேசியாவின் தன்னிகரற்ற கதைசொல்லியாக வளர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். பெரும்பாலான அவரின் கதைகள் அந்தக் கட்டமைப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டவையாக இருந்தன. புதிதாக எழுத வரும் எழுத்தாளர்கள் அவரின் கதைகளைத் தேடிப் படித்துத் தேறவேண்டுமென்பதே என் ஆசையும். நலிந்துவரும் மலேசிய படைப்பிலக்கியத் துறைக்கு இது ஒரு ஊட்டச் சத்து வைட்டமின்னாக அமையும். இதுபோன்ற எளிமையான வடிவ நேர்த்தி சிறுகதைக் கலை இன்னதெனத் தெளிந்த புரிதலைக் கொடுக்கும். இப்போது வரும் கதைகள் சம்பவத்தைத்தான் சொல்கின்றன. சம்பவங்களைக் கலையாக மாற்றும் சூத்திரம் அறிந்தவர்கள் மிகக் குறைவே.
டுக்கா சித்தா சமகாலப் பிரச்னையை மையச் சரடாகக் கொண்டது என்று குறுகிய நோக்கில் பார்க்க முடியவில்லை. அந்தக் கதை வந்து அறுபது ஆண்டுகள் கழிந்துவிட்டாலும் மலாய்க்காரர்கள் அல்லாத இனத்தின் நிலை பெரிதாக மாறிவிடவில்லை. அரசு போட்ட ஏணியில் பூமிபுத்ராக்கள் மளமளவென மேலேறினார்கள். இந்த அறுபது ஆண்டுகளில் அவர்களின் வாழ்நிலை, பொருளாதாரப் பின்புலம் முற்றிலும் வியக்கத்தக்க வகையில் மாறிவிட்டிருக்கிறது. அவர்கள் மேலேற மேலேற நாம் ஏணியை அண்ணாந்து பார்க்கும் ஏக்க நிலையே இன்றும் காணக்கிடைக்கிறது. அன்றைக்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடினாலும் மலாய்க்கார மாணவர்களுக்கான சிறப்புச் சலுகைத் திட்டம் அந்த அவலத்திருந்து அவர்களைத் கைதூக்கிவிட்டது. ஆனால் அந்நிலைக்கு முரணானதே பூமி புத்ரா அல்லாதோர் வாழ்க்கை.
டுக்கா சித்தா என்ற கதையினூடே இனவாத அரசியலை அன்றைக்கே கண்டித்து முன்னெடுத்தவர் இளஞ்செல்வன். புறக்கணிப்பின் பாதிப்பு ஒரு இனத்தை விளிம்பு நிலைக்கு ஆளாக்கிய பாவம் யாரால் நேர்ந்தது என்பதை கூச்சல் தொனியில்லாமல் கதைக்குள் விதைத்திருந்தார். ஆனால் அக்கதை வாசித்தோர் மனம் ‘கூச்சலிட’ ஆரம்பித்தது. ஓர் இனவாத அரசின் பிற்போக்குக் கொள்கை எத்துணை இழிவானது என்பதை சிறுகதைக்குள் இழையோட விட்டிருந்தார்.
ஆனால் அதே வேளையில் அரசாங்க வேலையை நம்பிப் புண்ணியமில்லை சீன வம்சத்தைப் போல, செய் அல்லது செத்து மடி என்ற மந்திரச் சொற்களைக் கதைக்குள் மிக லாவகமாக உட்செலுத்தியிருந்தார் இளஞ்செல்வன். இக்கதையை வாசித்த வேலை இல்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவித்த எத்தனை பேரின் கண்களைத் திறந்து வைத்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. கதையின் தாக்கம் அப்படிப்பட்டது. ஏனெனில் அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை இலக்கிய இதழ் மட்டுமே பரவலான வாசிப்பு ஊடகமாக இருந்தது. பத்திரிக்கைக் கதைகளை வாசிப்போர் எண்ணிக்கை மிகக் கணிசமான எண்ணிக்கையில் இருந்ததற்கு அதுவோர் காரணம். வானொலி இன்னொரு கூடுதல் ஊடகம் அன்றைக்கு. எனவே கதை வெறுமனே இலக்கியமாக நின்று விடாமல் ஒரு சிலரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கிறதென்றால் கதையின் சுவையுணர்தல் என்ற படியைத் தாண்டிச் சென்று வேறொரு பரிமாணத்தை நிறுவச் செய்ததே காரணம். இலக்கியத்தின் பயன்மதிப்பு இங்கே அதன் வாசிப்பினிமை அனுபவத்தைத் தாண்டி விரிவடைவதைப் பார்க்கிறோம்.
திடுதிப்பென முடியும் இறுதி வாக்கியங்கள் வாசகனை அசைவற்ற நிலைக்கு ஆளாக்கும். சில, நிலைகுலைய வைக்கும். இந்த திடீர்முடிவு கதை உதாரணங்களைத் தன் கதை சொல்லலில் இறுகப்பிடித்துக் கொண்டவர்களில் இளஞ்செல்வன் மிக முக்கியமானவர். அவரின் பெரும்பாலான கதைவளர்ச்சி அதன் முடிவில் ஒரு திருப்பத்தை நோக்கியே முன்னகரும். கதையின் கடைசி வாக்கியம் வரை வாசகனை கவனச் சிதறலுக்கு இடம் தராமல் தனக்குள்ளேயே பிடித்து வைத்திருக்கும் எழுத்து நடை அவருடையது.
‘டெங்ஙான் டுக்கா சித்தாஞா‘ என்ற வரியை கதையின் முடிச்சாக வைத்ததன் வழி இனவாதத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு அரசை நோக்கிய எள்ளல் பார்வையை வைக்கிறார். அதிகாரத்தை நோக்கிய அறச்சீற்றத் தொனியும், மனிதாபிமானமும் இழையோடுவதைக் காணமுடிகிறது இதில். நம்மால் முடியாவிட்டாலும் நம் எதிரியை பிறர் தாக்கும்போது நாம் நிறைவடைகிறோம் அல்லவா? அதுபோல வேலை கிடைக்காமல் டுக்கா சித்தா என்ற அவலச் சொல்லால் எரிச்சலும் ஏமாற்றமுமடைந்திருந்த படித்த இளைஞர்களின் சோகத்துக்கான ஒரு தற்காலிக வடிகாலை இக்கதை கொடுத்துச் செல்கிறது.
இக்கட்டுரையை எழுதத் தோன்றியபோது டுக்கா சித்தா கதையை நான் மீண்டும் பிரத்தியேகமாகப் படிக்கக்கூடாது என்ற முடிவில் இருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டாவது முறையாக வாசித்ததாக நினைவு. அக்கதையின் முக்கியக் கதைமாந்தரான தமிழ் இளைஞன் எனக்குள் திரண்டு உருக் கொள்கிறானா என்ற சோதனை முயற்சியே அதற்குக் காரணம். டுக்கா சித்தா எனக்குள் உண்டாக்கிய பாதிப்பே அதனை நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக இருந்திருக்கிறது, அக்கதையின் தொடக்கப் பகுதி வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்த என்னை நகல் எடுத்ததாகவே உணர்ந்தேன். அதன் முடிவு நான் அனுபவித்த வேதனைகளிலிருந்து என்னைத் தற்காலிகமாக விடுவிப்பதாக இருந்தது. அவருடைய கதைகளில் என்னைப்போலவே விரக்தியில் பாதிக்கப்பட்டவர்கள் மையப் பாத்திரமாக வருவார்கள். இளஞ்செல்வனின், ‘கொடிகள் அரைக் கம்பத்தில் பறப்பதில்லை’ (இக்கதை நூல் வடிவம் பெறவில்லை) ‘இழைப்பு உளி’, போன்ற கதைகளில் சமூகத்தின் விரக்தியடைந்த மனிதர்களைச் சந்திக்கலாம்.
சிறுகதைகளுக்குச் சரியான தலைப்பிடுவது மிகமுக்கியம். கதையின் போக்கையோ மையத்தையோ அது தொட்டுக்கூட காட்டக்கூடாது. டுக்கா சித்தா என்ற சொல்லை நுணுக்கமாக வைக்கப்பட்ட தலைப்பாகவே பார்க்கிறேன். இறுதி வரியிலும் டுக்கா சித்தா என்ற சொல் முற்றிலும் வேறான எதிர்நிலையைக் காட்டும் என்று வாசகன் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டான். கதையின் குவிமையம் முழுதும் நாயகனின் அல்லல்களையும் அதனைக் கடந்து வந்த போராட்டத்தையும், கடைசியாக அவன் வெற்றி பெற்றதையுமே சொல்லிக்கொண்டு போகிறது. ஆனால் கடைசி வரியைப் முடித்ததும்தான் அச்சொல் வெடித்து வாசகனை சற்றே நிமிர்ந்து உட்கார வைக்கிறது. இறுதி முனை வரை அறைந்து சரியாக இறக்கப்பட்ட ஆணியாக உறுதியாய் நிற்கிறது அச்சொல்லின் பொருத்தப்பாடு.
டெங்கான் சுக்கா சித்தா ஞா
சாயா சுக்காகான் கராங்கான் கோ புண்ணியவான்.