இரட்சிப்பு

mahathmanஏழாவது முறையாக சிறையிலிருந்து விடுதலையாகிறேன். கடந்த ஆறுமுறையிலும் எங்கு போவது என்ற போக்கிடம் தெரியாமலிருந்தேன். இந்தமுறை கொஞ்சம் ஞானம் வந்ததுபோல அடங்கியிருப்போம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். நானாகத் தேடிக்கொண்டதும் சிக்கிக்கொண்டதும் மூன்றுமுறை. அதிரடிச்சோதனைக்கு ஏதாவதொரு பெயரிட்டு கிடப்பில் கிடந்த ஏதாவதொதொரு கோப்புக்குப் பலியானது மீதி. தைப்பிங் சிறை, தாப்பா சிறை, புடு சிறை, சுங்கை பூலோ சிறை, காஜாங் சிறை எல்லாம் பார்த்தாகிவிட்டது. இனி இப்படியே இருந்தால் சிப்பாங் ரெங்கம் – பூலாவ் ஜெரஜாக் இரண்டிலொன்றில் என் வாழ்க்கையை முடித்துவிடுவார்கள் என்ற பய உணர்வு உள்மனதில் தோன்றிவிட்டது. விடுபடாத ஆபத்து தன்னந்தனி வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நிழலைப்போல பின்தொடர்ந்தே வரும். சொந்தபந்தம் அல்லாத நண்பர் வட்டம் அண்டாத ஓரிடம் வேண்டும். அடைக்கலப்பட்டணம். அடைக்கலக்கோட்டை போன்ற ஒன்று.

இந்தமுறை விடுதலைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அப்படிப்பட்ட அடைக்கல முகவரி கிடைத்தது. ஜாலான் கிள்ளான் லாமாவில் ஜாலான் பீஸாங் என்ற இடத்தில் ‘ரூமா பெட்ரோஸ்’ இருந்தது. கண்டுபிடிக்க சிரமமே படவில்லை. இரண்டு வீடுகள் ஒட்டியுள்ள இரட்டை மாடிவீடுகள்.

உள்ளே அடியெடுத்து வைத்ததுமே நடுத்தர வயதைத் தாண்டிய சீனர் வாசலில் வெளிப்பட்டு, “லூ மனா மரீ?” என்று கேட்டதும் “பெஞ்ஜாரா காஜாங்” என்றேன். கைவிரல்களால் வரச்சொல்லும் செய்கைகாட்டி, “லாய் லாய் பிரதர்,” என்றார். அருகினில் சென்றதும், “பிரேஸ் தெ லோட்,” என்றபடி கைகுலுக்கி தோளில் தன்கையை வைத்து உள்ளே அழைத்துச் சென்றார். இடது புறத்தில் ஒரு பெரிய சதுரமேசையில் பத்துபேர் போல உட்கார்ந்திருந்தனர். என்னையும் ஓரிடத்தில் உட்காரவைத்து தேநீரையும் ரொட்டிகளையும் சாப்பிடக் கொடுத்தனர். ரொட்டிகளில் இனிப்பு வகையறாக்கள் ஏற்கெனவே தடவப்பட்டிருந்தன. மேசையின் நடுவாக அமர்ந்திருந்தவர் தன் பெயர் மார்டின் என்றும் இவ்விடத்தின் பொறுப்பாளர் என்றும் தெரிவித்து கேள்விகளைக் கேட்டார்.

“பெரப்பா காலி பெஞ்ஜாரா பிரதர்?”

“தூஜோ காலி.”

“அப்ப அப்ப செக்‌ஷன். . .”

“302,308,397,379,411,409. . .”

“ரோத்தான். . .”

“தீக.”

“பி எஸ். . .”

“இனி காலி.”

“டாலாம் அட கென துத்தோப் பீளேக். . .”

“அடா. டுவா காலி.”

வெளியே மஞ்சள் வெயில். அதன் கீற்று ஜன்னலின் வழியே மேசையைத் தொட்டிருந்தது. தேநீர் நேரம் முடிந்ததும் என்னை அலுவலக அறைக்கு வரச்சொன்னார் அடையாள அட்டையைக் கேட்டு வாங்கி வைத்துக்கொண்டார். மையத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளை விவரித்தார். தினசரி காரியங்களைச் சொல்லி ஒரு வாரத்திற்கு நான் ஒன்றும் செய்யத் தேவையில்லை என்றார். கவனித்தால் போதுமானது என்றார்.

“அட பாவ அப்ப அப்ப பாராங். . . கஞ்ஜா, ஃபிட், உபாட், ரொக்கோக். . .”

“ரொக்கோக் அட” என்றவாறே சிகரெட் பெட்டியை மேசையில் வைத்தேன்.mahathman-2 உடைகளைக் களைந்து மேசையில் வை என்றதும் கழற்றி வைத்து நிர்வாணமாக நின்றேன். இரு உள்ளங்கைகளால் ஆண்குறியை மறைத்துக்கொண்டேன். மேசைமீது இருந்த யாவையும் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு எனக்கான உடைகளை எங்கிருந்தோ எடுத்துவந்து கொடுத்தார். மாடிக்குச் சென்று குளிக்கச்சொன்னார். மேல்மாடியில் இருந்தவர்கள் எனக்கான கட்டில் மெத்தையையும் துணிகள் வைப்பு இடத்தையும் காட்டினர். என் பெயரையும் வயதையும் கேட்டனர். சொன்னேன்.

மையம் கட்டொழுங்கிலும் கிறிஸ்தவ மத போதனைகளிலும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. சூரியன் மறையும் வேளைகளில் ஒவ்வொரு நாளும் ஒரு கூட்டம். ஜெபக்கூட்டம், கீத ஆராதனைக்கூட்டம், விவிலிய விளக்கக் கூட்டம், சாட்சிப் பகிர்தல் கூட்டம், வருகை தரு பிரசங்கியார் கூட்டம், உதவும் நோக்கத்தில் வரும் பார்வையாளர்கள் கூட்டம், கடைசியாக ஒவ்வொரு ஞாயிறுதோறும் தேவாலய சபைக்கூட்டம்.

இதில் வெள்ளிக்கிழமை கூட்டம்தான் தனித்துவமாய் இருக்கும். மனச்சுவரை, மனக்கல்லை உடைக்கும் வல்லமை வாய்ந்தவர்களாக பிரசங்கியார்கள் திகழ்ந்தனர். சீனமொழிப் பேச்சாளர் என்றால் ஒருவரைக்கொண்டு உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லப்படும். ஆங்கிலப் பேச்சாளர் என்றால் சீனத்தில் மொழிபெயர்க்கப்படும். அசல் பேச்சாளருக்கு ஈடாகவும் அதே உடல்மொழியைக் கையாள்வதும் குரலின் ஏற்ற இறக்கம், மென்மையும் அழுத்தமும் அடிக்குரலின் இறுக்கம் யாவும் ஒன்றுபோலிருக்க ஆச்சரியத்தைக் கொடுக்கும். ’இவங்களுக்கு மத்தியில் யாரோ உதவி செய்யறாங்கப்பா. . .’ என்று எண்ணத்தோன்றும். இவர்களின் வாயிலிருந்து புறப்பட்ட்டு வெளிப்பட்ட சொற்களின் வல்லமை, எறிகுண்டுகளின் தாக்குதல் போலவும் வெண்பனித்தூறலைப் போலவும் இருக்கும். ஆவிக்குள்ளும் ஆத்துமாவிற்குள்ளும் பாய்ந்து ஊடுருவும்.

ஒருவாரம் போனதே தெரியவில்லை. மனம் பாவமன்னிப்புக்கும் பரிசுத்தாவி அபிஷேகத்திற்கும் சதா அலைந்தாடியது. எவ்வித மனத்தடையுமின்றி விவிலிய வாக்கியங்களை மனனம் பண்ணத் தொடங்கினேன். விவிலியத்தைத் தமிழில் படிப்பது நான் மட்டும்தான். இருவர் ஆங்கிலத்திலும் மற்ற பன்னிரெண்டு பேர் சீனத்திலும் படிப்பவர்கள். ஆங்கிலத்தில் படிப்போரும் சீனர்கள்தான். அதுவும் பழைய காலத்து ஆங்கிலம். தீ, தோ, தவ் என்றிருக்கும். இதற்குத் தமிழே மேல் என்றிருந்தேன்.

பசியாறுதல் முடிந்ததும் எனக்கு வீடு பெருக்கும் வேலை தரப்பட்டது. அது முடிந்து காய்கீரைகள் வெட்டி கழுவிக்கொடுப்பது. மதிய உணவுக்குப் பிறகு சமையலுக்குப் பயன்படுத்தப்பட்ட சட்டி பானைகளைக் கழுவிக் கவிழ்த்து வைப்பது, ஒருமணிநேர குட்டித்தூக்கத்தைப் போட்டு எழுந்தவுடன் தோட்டவேலை. வீட்டைச் சுற்றிலும் இருக்கும் தேவையில்லாத புற்களைப் பிடுங்குவது மற்றும் செடிகளுக்கு நீர் ஊற்றுவது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை.

மழையில்லாத காலத்திலும் புது வருகையாளர் இல்லாத காலத்திலும் மாலைவேளை தேநீர் ஆனதும் ஒரு மணிநேரத்திற்கு விளையாட்டு. பூப்பந்து செப்பாக் தக்ரோவ், டம், சதுரங்கமென விளையாடுவோம். ஒருசிலர் உடற்பயிற்சி செய்வார்கள். எங்களிடையே ஒரு பேச்சுவழக்கு உண்டு. ‘போலீஸின் அடி உதை தாங்குவதற்காகவேனும் உடற்பயிற்சி செய்தாக வேண்டும்.’ நெஞ்சு நிமிரும் அளவுக்கு, தவளைக் கை காணுமளவிற்கு, அடித்தால் எதிரி சுருண்டு விழும் அளவுக்கு உடலை பலவிதமான பயிற்சிகளால் ஒரு கட்டுக்குள் கொண்டு வருவோம். எங்களுக்குள் போட்டிகூட வைத்துக் கொள்வோம். உள்ளங்கையை மடக்கிப்போட்டு தரையை ஒரு கையால் ஊன்றி இன்னொரு கையை இடுப்பின்மேல் வைத்து நூறுமுறை ‘பப்பிங்’ செய்யவேண்டும். இதில் ஜேசனும் ஸ்டீவ்வும் வெற்றியடைவர். மற்றவர்களைவிட நான் படுதோல்வி அடைவேன். முப்பதுக்குமேல் கை ஆட்டங்கண்டு விடும். இம்மி நகராது. பொத்தென விழுவேன். விபத்துகளிலும் சண்டைகளிலும் எலும்புகள் உடைந்திருக்கின்றன. போலீஸின் உள்ளடிக் காயங்களுக்கு சிகிச்சையோ மருந்து மாத்திரைகளோ எடுக்கவில்லை. அதனால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது என்றபோது ‘இது வெறும் சாக்குபோக்கு’ என்றான் ஜேசன்.

mahathman-1“இந்த மையத்தில இருக்கிற அத்தனை பேரும் போதைப்பித்து பின்புலத்தோடு வந்தவங்க. இதுல மூணு பேரு எச்.ஐ.வி. ஒரு வருஷத்துக்கு முன்னால நாங்க நோஞ்சா மாதிரி இருந்தோம். எலும்பும் தோலுமா இருந்தோம். ஸ்டீவ் என்னோட மாச்சாய்1. நாங்க ரெண்டு பேருமே ஹய்வேலதான் ஊசி போடுவோம். எல்லா நரம்பும் செத்து ஹய்வே2 நரம்பும் செத்துருச்சு. குஞ்சு எழுந்திருக்காது. நாங்க எந்தவொரு சிகிச்சையும் எடுக்கல. மருந்து மாத்திரை எடுக்கல. எல்லாம் மனசுதான் காரணம். முடியும் அப்படின்னு உறுதியா நினைச்சு அதிலிருந்து பின்வாங்கக் கூடாது. நாங்க பின்வாங்கல. இதுதான் விஷயம்,” மலாய் மொழியில் பேசிய ஜேசனைப் பாத்து சல்யூட் அடித்தேன்.

“ஆறு மாசத்துல நானும் நிரூபிச்சுக் காட்டுகிறேன்.”

“இல்ல. மூணு மாசம் போதும். இதுதான் சரியான இடம். நல்ல சத்தான உணவு. பாதுகாப்பு. இதைத்தவிர வேறென்ன வேணும். சொல்லு.”

“. . .”

ஜேசனும் ஸ்டீவும் நன்றாக சமைப்பவர்கள். சீன சமையல். உறைப்புக்கு இந்திய மசாலாவைப் பயன்படுத்த மாட்டார்கள். கறியில் கசகசாவும் இருக்காது, சூப்பில் மெழுகும் இருக்காது. சீனர்கள் வெறும் சோற்றில் காய்கீரைகளைப் போட்டு வாய்க்குள் குச்சிகளால் தள்ளுபவர்கள். என்னால் அப்படி முடியவில்லை. கைவிரல்களால் பிசைந்து சாப்பிடவேண்டும். அப்பளமோ, ஊறுகாயோ, ஊர் மிளகாயோ இருக்கவேண்டும். அப்போதுதான் நாக்கு ருசி காணும். இங்கே தயிரையும் ரசத்தையும் எதிர்பார்க்கவே முடியாது என்ற நினைப்பில் இருக்கும்போதுதான் ஒரு தமிழர் புது வருகையாளராக தன் அண்ணன் அண்ணி துணையோடு வோல்வோ வாகனத்தில் வந்திறங்கினார்.

பெயர் சாந்தகுமார். சாந்தமாகத்தான் இருந்தார். உயரத்திலும் குறைவு. வயதிலும் குறைவு. ஆனால் கட்டுடல். உடுத்தியிருந்த சட்டையிலும் துணிப்பையிலிருந்து எடுக்கப்பட்ட சட்டைகள் யாவிலும் CK3 என்று எழுத்திருந்தது. இடைவாரிலும் அவ்வெழுத்துகள். சரியான CK பைத்தியம்தான் போல.

குமாரை மற்ற சீன நண்பர்களுக்குத் தெரிந்தே இருந்தது. காஜாங் சிறையில் டி புளோக்கிலும் எச்.ஐ.வி புளோக்கிலும் இருந்தவர். குமாருக்கு ஒருவார கவனிப்பு வேலையெல்லாம் இருக்கவில்லை. மூன்றாவது நாள் காலையிலேயே தன் வேலையை ஆரம்பித்துவிட்டார். மீன் கறியும் மீன் பொரியலும். மசாலாவைப் பயன்படுத்திய விதம், உப்புப் போட்ட விதம், மீன் பொரித்த விதம் யாவும் குமார் ஒரு சமையல் நிபுணர் எனக்காட்டியது.

மதிய உணவை ருசிபார்த்த மார்டின் தன் மேலதிகாரிக்கு அழைப்பித்துச் சொல்ல அவர் தன் மனைவி மகளோடு வந்து சாப்பிட்டு பாராட்டிவிட்டுப் போனார்.

ஒருநாள் விட்டு ஒருநாளாக குமாரின் இந்திய சமையல் உணவை ஒரு பிடி பிடித்தேன். நான் கேட்டதெல்லாம் செய்யத் தயங்கவில்லை. சொந்த வீட்டில் கூட இப்படியெல்லாம் செய்ததில்லை என்று நெகிழ்ந்துபோய் பதிலுக்கு தமிழ்மொழியைச் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினேன். எங்கள் நடவடிக்கைகளை அங்குலம் அங்குலமாகக் கவனித்து வந்தனர் மையத்திலுள்ளோர்.

என்மீதும் குமார் மீதும் கொண்ட நம்பிக்கையின்பேரில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு கிள்ளான் லாமா FGA-வின் தமிழ் சபைக்கு போய் வந்தோம். சபை ஆராதனை, கணீரென ஒலிக்கும் வேதவாசிப்பு, மூப்பர்களின் முன்மாதிரிகள், விசுவாசிகளின் மாசற்ற புன்னகை, புது வருகையாளர்களுக்கென உற்சாக வரவேற்பு, அரைகுறை ஆடையில்லாத அலங்கரிப்பு போன்றவை ஆங்கிலசபைக்கு ஒப்பிட்டால் முற்றிலும் மாறுபட்டதாய் இருந்தது. அன்னியோன்யமும் ஐக்கியமும் தமிழ் சபையில் எங்களுக்கு நிறைவாய் கிடைத்தது. ஆங்கில சபைக்கும் தமிழ் சபைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான், தமிழ் பிரிவில் பெரும்பான்மையானோர் ஏழைகளாகவும் பற்றாக்குறையாளர்களாகவும் இருந்தனர்.

விசுவாசிகளுள் பெண்கள் கூட்டம்தான் அதிகமாய் இருந்தது. அதுவும் கன்னிகைகள். கன்னிப்பெண் எனக்கு வேண்டாம். அதற்கு நான் தகுதியில்லை. ஒரு பிள்ளை இருப்பதுபோல தனித்துவாழும் தாய் கிடைத்தாலே போதும். நான் ஏற்றுக்கொள்வதைவிட அவள் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமே. ‘கொலை கேசுக்குப் போயிருக்கேன். ஏழுமுறை ஜெயிலு,’ என்று சொன்னதுமே மயக்கமடைந்து விடுகிறார்களே, என்ன செய்ய?

ஒருநாள் காலைநேரத்தில் சபை போதகரும் அவர்தம் சகோதரியும் மையத்திற்கு வந்திருந்தனர். மார்டினிடம் என்னைப்பற்றி தீர விசாரித்துச் சென்றனர். மார்டின் என்னிடம், “ஒரு திட்டத்தோடு வந்திருக்கிறார்கள். பொஸடிவ்தான். சபை ஊழியத்திற்கு உன்னை அழைக்கலாம். தொடர்ந்து ஜெபி,” என்றார். ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்றெண்ணியவனாய் துதிமகிமையோடு ஜெபித்து வந்தேன்.

ஞாயிற்றுக்கிழமை வந்தது. ஆராதனை முடிந்ததும் போதகர் என்னை தன் அலுவலகத்திற்கு அழைத்தார். குமாரை வெளிவாசல் இருக்கையில் அமரச்செய்து உள்நுழைந்தேன். போதகர் என்னை உட்காரச்சொல்லி பேசத் தொடங்கினார்.

“உங்களுக்கு போதை மருந்து, மாத்திரை, மதுபானம், சிகரெட் பழக்கம் எல்லாம் இப்ப இல்லைன்னு தெரியவருது. உங்க ஆவியின் உற்சாகத்தையும் ஜெபத்தின் வல்லமையையும் கண்டோம். சபைக்கு ஊழியம் செய்ய வாங்க. வீட்டுக் கூட்டங்களுக்கு அழைத்துப்போறோம். பேசுங்க. உங்களது தாலந்தை உபயோகப்படுத்துங்க. கர்த்தருக்குச் சித்தமானால் அவர் உங்களை தன்னுடைய கருவியா, பாத்திரமா பயன்படுத்தக்கூடும். . .”

அமைதியாக பொங்கிவந்த ஆனந்தத்தை அடக்கிக்கொண்டு செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“சரியா ஆறு மாசத்திற்குப் பிறகு ஏழு வயசுப் பிள்ளையோட ஒரு தனித்துவாழும் தாய்மார் இருக்காங்க. ரெண்டு சைட்டிலும் சம்மதம்னாக்கா சபையே முன்வந்து திருமணம் செய்து வைக்கும். அந்தப் பெண்ணோட கணவர் விபத்துல இறந்துட்டாரு. அவரோட இன்சூரன்ஸும் ஈபிஎஃபும் எடுத்துட்டாங்க. அதனால சபையோட மேற்பார்வையிலே நீங்க சொந்தத் தொழில் செய்யறதுக்கும் வாய்ப்பிருக்கு. ஸோ. . .உங்ககிட்ட ஒண்ணுமே இல்லையேன்னு கவலைப்படத் தேவையில்லை. ரெண்டாவது, நீங்க முன்பு வாழ்ந்த வாழ்க்கையை சுத்தமா மறந்திடுங்க. புது மனுஷனா, புது சிருஷ்டியா தேவனுடைய கிருபையில வாழுங்க. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நாளையிலேருந்து ஒன்பது மணிக்கு இங்க வந்திடுங்க. சொல்ற வேலையை செய்யுங்க. கொஞ்சத்தில் உண்மையாயிருங்க. கர்த்தர் உங்கள அதிகமதிகமாய் உயர்த்திக் காட்டுவார். . .”

கரங்கூப்பி விடைபெற்றேன். ஒரு வார்த்தையும் வரவில்லை. விட்டால் அழுதுவிடுவேன் போல. மையம் வரை குமாரிடம் ஒன்றுமே பேசவில்லை. எனக்கும் நல்லது நடக்கிறதே! மார்டினிடம் சொல்வதற்கு முன்பே விஷயம் அவரை எட்டிவிட்டது. சாட்சி பகிர்தலின்போது விம்மி விம்மிச் சொல்ல வேண்டியதாய் போயிற்று. அடங்கினாலும் அடங்காததாய் வெளிப்பட்டது அழுகை. நான் அழுவதைப் பார்த்து பலரும் கண்களைத் துடைத்துக் கொண்டனர்.

முதல்நாள் வேலை என்பதால் முதலாவது நபராக எழுந்து குளிக்கும்போது வலதுகாலின் மேற்பாகத்தை கண்ணுற்றபோது திட்டுத் திட்டாக முற்றுப்புள்ளிகள் போன்று கருஞ்சிவப்புப் புள்ளிகள் இருந்தன. இடதுகாலிலும் அதேபோலத் தென்பட்டதால் பசியாறும் வேளையில் மார்டினிடம் காண்பித்து என்னவென்று தெரியவில்லை என்றபோது அந்தப் புள்ளிகளை உற்றுப் பார்த்தார். “நத்திங் டு வெரி பிரதர், ஜீஸஸ் வித் யூ” என்று சொல்லிவிட்டு தனக்கு அடுத்து இருந்த உதவியாளரை அழைத்து, என் காலைப் பார்க்கவைத்து பங்சாரில் உள்ள சிறிய பொது மருந்தகத்திற்கு அழைத்துப் போகச்சொன்னார். முடிந்ததும் வேலையிடத்தில் விட்டு வரும்படியும் சொன்னார்.

நடுத்தர வயதைத் தாண்டிய சீன பெண்மருத்துவ உதவியாளர் பூதக் கண்ணாடியைக் கொண்டு திட்டுதிட்டான புள்ளிகளைப் பார்த்தவிதம் எனக்கு சிரிப்பை வரவழைத்தது. இதுவொரு சின்ன விஷயம், வெள்ளைத் திரவமருந்தைக் கொடுத்து அனுப்பப் போகிறாள் என்றிருந்தேன். தன் குறிப்பேட்டில் நான்கு வாங்கியங்கள் போல ஏதோ கிறுக்கிக் கையொப்பமிட்டு அரசு முத்திரை பதித்து என்னை அழைத்துவந்த சீனரிடம் தந்து உடனே பொது மருத்துவமனைக்குப் போகச்சொன்னாள். நாங்கள் இருவரும் வந்த்தான் மீ கிச்சாப்பை ருசிபார்த்து சாவதானமாகச் சென்றோம்.

பொது மருத்துவமனையில் சீக்கிய மருத்துவர் எங்கோ வைத்திருந்த பூதக்கண்ணாடியைத் தேடிக்கண்டுபிடித்து தீவிரமாக உற்றுப்பார்த்தார். திருப்தியின்மையும் இயலாமையும் அவர் முகத்தில் தெரிந்தது. மூன்றுநாட்கள் சிகிச்சைப் பிரிவில் தங்கவேண்டுமென்று உத்தரவிட்டு அதற்கான நுழைவு பாரத்தில் கையொப்பமிட்டு முத்திரை பதித்து தன் தாதியரிடம் தந்தார். “ஸப் ஸப் சூய்லோ. . . கிளின்ச்சாய். நன்தி தீகா ஹரி வ மரி. . .” என்று சொல்லிவிட்டு சீனநண்பர் கிளம்பிப்போனார்.

தோல்வியாதிப் பிரிவிற்குள் சேர்க்கப்பட்டேன். நோயாளிக்குரிய உடைகள் தரப்பட்டன. குளிரூட்டியுடன் காற்றாடிகளும் இருந்தன. மெத்தையும் தரையும் படுசுத்தம். கழிவறையிலும் குளியலறையிலும் அசுத்தக்கோடுகளோ கருமஞ்சள் புள்ளிகளோ திட்டுகளோ இல்லை. தொலைக்காட்சி பார்ப்பதற்கென ஓரறை. அதில் மும்மொழி பத்திரிக்கைகள் அளவான கட்டையில் சேர்க்கப்பட்டு மருத்துவமனை முத்திரை பதிக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு படுக்கையிலும் இருக்கும் மனிதர்களை அருகில் சென்று பார்த்தேன். உடல் முழுக்க பத்தல் பத்தலான தோல். வெள்ளை நரம்பு வெளிப்பட்ட அளவுக்கு சொறிசிரங்கு. தோல் புற்றுநோய். மஞ்சள் தோலை கருஞ்சிவப்பாகக் காட்டும் நோய். வெள்ளைப் பூச்சின் படரல். அங்குமிங்குமாக சிறுசிறு குழிகளாகிப் போன தோல். பார்க்கப் பார்க்க பயம் வந்தது. திரும்பி என் கட்டிலுக்குப் போய் அமர்ந்து கொண்டேன்.

சிவப்புப் புள்ளிகளைப் பார்த்தேன். அவை இரு கால்களிலும் ஒன்றாய் கணுக்கால்களுக்கு மேல்வரை ஏறியிருந்தன. இரவு உணவை எனக்குத் தடை விதித்தனர். அதிகாலையிலேயே மென்மையாய் தட்டியெழுப்பி இடது கையிலிருந்து நான்கு சிறு குப்பிகளுக்கு இரத்தத்தை நிரப்பி எடுத்துச் சென்றனர். விடிந்தததும் பத்திரிக்கை வாசிப்பிலும் படம் பார்ப்பதிலும் நேரம் கழிந்தது.

இரண்டாம் காலை கண்விழிப்பில் சிவப்புத் திட்டுகள் முழங்கால் வரை எட்டியிருந்தன. கால்களை அசைக்க முடியாமல் திணறினேன். செவிலித்தாயைக் கத்திக் கூப்பிட்டேன். ஓடோடி வந்தனர். நிலைமையைச் சொன்னதும் சக்கர நாற்காலியைக் கொண்டுவந்து கழிப்பறைக்குப் போய்வர உதவினர். அன்றைய நாள் முழுதும் அவர்களுக்குச் சிரமம் கொடுக்கும்போதெல்லாம் மனம் கஷ்டப்பட்டது. அவர்கள் முகஞ்சுளிக்காமல் பணிவிடை செய்தது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. தமிழ்ப்பெண்கள் என்றால் கையெடுத்துக் கும்பிடலாம், மலாய்ப் பெண்கள், என்ன செய்வது? மருத்துவக் குழுவும் அதன் தலைவரும் குழம்பிப் போவதைக் கண்டேன். மாத்திரைகள் சோதனை அடிப்படையில் தரப்பட்டன.

மூன்றாம் நாள் கண்விழிப்பில் சிவப்புத் திட்டுகள் நெஞ்சுவரை ஏறியிருந்தன. உடலை நிமிர்த்த முடியவில்லை. தலையை மட்டும் அசைக்க முடிந்தது. கைகால்கள் மரத்துப்போயின. கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. எதேச்சையாக வந்த செவிலித்தாய் ஒருவர் என் கண்ணீரைக் கண்டதும் பதற்றத்துடன் விரைந்தார். மருத்துவருக்கு அவசர அழைப்பு விடுத்தார். தினமும் வரும் மருத்துவரோடு விசேஷ மருத்துவர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து சோதித்தனர். மருத்துவக்குழு வந்து ஒவ்வொருவரும் துணியைத் தூக்கி அந்தரங்கப் பகுதியைப் பார்த்தபோது வெட்கம் பிடுங்கித் தின்றது.

ரூமா பெட்ரோஸ் மையத்திலிருந்து நண்பர் குழாம் வந்தது. ஆளுக்கொரு பக்கமாக தலைமாட்டிலும் கால்மாடிலும் நின்றுகொண்டு தங்கள் கரங்களை என் பக்கமாக நீட்டிக்கொண்டு பிரார்த்தித்தனர். நெக்குருகி வேண்டிக்கொண்டதைப் போலிருந்தது. மருத்துவர் குழு என் குடும்ப உறுப்பினர்களை விசாரிக்கத் தொடங்கினர். யாருமில்லையென தலையசைத்தேன். மார்டினும் சீன நண்பர்களும் என்னைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லிக் கையொப்பமிட்டனர். ஒருவர் பின் ஒருவராக வந்து மௌனமாக என் கையை தொட்டுச் சென்றனர்.

மறுநாள் வலது தொடையில் தோலை வெட்டியெடுத்து இரசாயனப் பரிசோதனைக்கு அனுப்புவதற்காக அனுமதிக் கையொப்பம் கேட்டனர். இட்டேன், கோணலும் மாணலுமாக. பத்துக்காசு அளவுபோல தோலை எடுத்துச்சென்றனர். இரவில் ஒரு குறிப்பேட்டை கட்டில் தண்டில் தொங்கவிட்டனர்.

ஒரு செவிலித்தாயிடம் என் தோல்வியாதியின் பெயரென்ன என்று கேட்டதற்கு கட்டிலின் முன்பக்கத் தண்டில் மாட்டிவைக்கப்பட்ட குறிப்பேட்டை எடுத்துப் பார்த்தாள். திகைப்போடு அவள் தன் தோழியிடம் காட்ட அவளும் திகைப்பைக் காட்டினாள். குறிப்பேட்டை என்னிடம் காட்டினார்கள். இருவரிசையை அடைத்துக் கொண்டாற்போன்ற புரியாத வாக்கியங்கள். அது பிரான்ஸ் மொழி, லட்சத்தில் ஒருவருக்குத்தான் இம்மாதிரி நோய் வரும் என்றனர். ஆக, அபூர்வ நோய்.

அடுத்து வந்த நாட்களில் விடிவதும் இருளடைவதும் தெரியாமல் ஆனது. கண்ணிமைகள் திறக்கமுடியாதபடிக்கு பாறாங்கல் பாரமாய் இருந்தன. காலடிச் சத்தங்களும் பேச்சு சத்தங்களும் கிணற்றுக்குள்ளிருந்து கேட்பதுபோல் காதுகள் அடைபட்டன. விழிப்பு வந்தால் முழுவீச்சில் கத்த முயன்றேன். எடுபடவில்லை. வாய்க்குள் எதுவோ ஒன்று செருகப்பட்டிருந்ததை உணர முடிந்தது. போகப்போக அந்தக் கிணற்றுச் சத்தங்கள் போலவும் கேட்காமல் முழுவதுமாக அமைதியானது. கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகின் காட்சிகள் தற்சிதைவு கொண்டன. மனவுலகின் காட்சிகளும் அப்படியே. ஒரு கருந்துளைக்குள் மெல்ல மெல்ல மூழ்கிக்கொண்டிருந்தேன்.

****

மாச்சாய் – கையாள்.

ஹய்வே – கால் நரம்புகள்.

CK – Calvin Klein.

1 comment for “இரட்சிப்பு

  1. January 5, 2017 at 9:46 am

    அருமை மீண்டும் ஒருமுறை படிக்கத்தூண்டுகிறது

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...