திறவுகோல் 4: வானத்து வேலிகள்

nila-2மறைந்த மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசுவால் எழுதப்பட்டுள்ளது இந்நூல். திரு.ரெ.கார்த்திகேசுவை ஒருமுறைதான் நான் சந்தித்திருக்கிறேன். அதுதான் முதலும் கடைசியுமான சந்திப்பு. 2015-ஆம் ஆண்டு, நண்பர் ஷாநவாஸிற்கு கரிகாற்சோழன் விருது வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்ள கோலாலம்பூர் சென்றிருந்தபோது அவரைப் பார்த்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டவுடன், அவர் கனிவான குரலில் உங்கள் கதைகளைப் படித்திருக்கிறேன் என்று கூறி புன்னகைத்தார்.

அவரது மறைவை ஒட்டி சமீபத்தில் சிங்கப்பூரில் திரு.அருண்மகிழ்நன் ஒரு நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஓர் எழுத்தாளனுக்கு நாம் செலுத்தும் ஆகச் சிறந்த அஞ்சலி என்பது அவனது படைப்பை வாசிப்பதும்  விமர்சிப்பதும்தான். ஆகையால், அன்றைய நிகழ்வில் முனைவரின் நாவல்களைப் பற்றி சுருக்கமாகப் பேசி என் அஞ்சலியைச் செலுத்தினேன். திரு.ரெ.கார்த்திகேசுவின் சிறுகதைகளோடு எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம் உண்டு. ஆனால் அவரது நாவல் உலகம் எனக்குப் புதிய வாசிப்பனுபவத்தைத் தந்தது.

ரெ.கா எழுதியுள்ள ஐந்து நாவல்களில் ‘வானத்து வேலிகள்’ முதல் நாவலாக 1981-ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. ஒரு தனிமனிதனின் வளர்ச்சியையும் வாழ்க்கையையும் கருவாகக் கொண்டுள்ளது. பத்து வயதாகும் குண்டான் என்ற சிறுவன் ‘டத்தோ’ குணசேகரன் என்ற தொழில் அதிபராக மாற எதிர்கொள்ளும் வெல்விளிகளும், வாழ்வின் சிக்கல்களும், உறவுகளுக்கிடையேயான உணர்ச்சி மோதல்களும் பேசப்பட்டுள்ளன. .

ஒரு நாவல் என்பது நீண்ட காலகட்டத்தை விரித்து, விரித்து எழுதிச் செல்வது என்ற அடிப்படையில் பார்த்தால், நாற்பது ஆண்டு கால (1940–1980) வாழ்க்கையை இந்நூல் பேசினாலும் மிகச் சுருக்கமாகவும் மேலோட்டமாகவும்  சொல்லப்பட்டிருப்பதால் இதை நாவல் என்று சொல்வதைவிட குறுநாவல் என கூறலாம். மொத்தம் இருபது அத்தியாயங்களுடன் நூறு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள குறுநாவல் இது.

ரப்பர் தோட்டத்தில் கூலிகளான பெற்றோரின் மகன்தான் பத்து வயது குண்டான். படிப்பின் மீது நாட்டமுள்ள அவனைப் படிக்க வைக்க ஆசைப்படுகிறாள் அவனது தாய். ஆனால் குடிகாரத் தகப்பனோ அவனை மங்கு துடைக்கும் வேலைக்கு கூப்பிடுகிறான். இதனால் தினமும் பெற்றோருக்கு இடையே நடக்கும் அடிதடி சண்டையைப் பார்த்து கலங்குகிறான் குண்டான். மலாயா ஜப்பானியர்கள் ஆதிக்கத்தின் கீழ் வருகிறது. சயாம் இரயில் பாதையில் வேலை செய்ய ஆண்களை வலுக்கட்டாயமாக கொண்டு செல்லும் ஜப்பானியர்கள், ஓடி ஒளிந்து கொள்ளும் குண்டானின் தந்தையை கிராணியாரின் உதவியோடு பிடித்துக்கொண்டு போகிறார்கள்.

தந்தையின் தொல்லை இல்லாமல், குண்டான் தோட்டப் பள்ளிக்கூடத்தில் மகிழ்ச்சியாக கல்வியைத் தொடர்கிறான். பள்ளியில் உடன் படிக்கும் தோழி இந்திராவின் மீது இனக்கவர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் இந்திராவோ கிராணியாரின் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி கர்ப்பமடைகிறாள். அவளை அந்நிலைக்கு ஆளாக்கிய கிராணியாரைக் கொல்ல குண்டான் எடுக்கும் முயற்சி தோற்றுப்போக தோட்டத்திலிருந்து தப்பித்து எங்கெங்கோ சென்று, ஏதேதோ வேலைகள் செய்து பிழைக்கிறான். ஐப்பானியர்கள் வெளியேறி மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி மலர, குண்டான் எழுதப் படிக்கத் தெரிந்த காரணத்தால் காண்டிராக்டர் விஸ்வலிங்கத்திடம் வேலைக்குச் சேர்கிறான். அவர் அவனை ஓர் அடிமை போல் நடத்துகிறார். தனது மகள் கமலத்துடன் குண்டான் நெருங்கிப் பழகுவதை விரும்பாத விஸ்வலிங்கம் அவனைக் கண்டிக்கிறார். அதே சமயத்தில், அவன் படிப்பதற்கு உதவி செய்கிறார்.

நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறும் குண்டான் வக்கீலுக்குப் படிக்க விரும்பும்போது விஸ்வலிங்கம் “கூலிக்கார நாய்க்கு வக்கீல் படிப்பு கேட்குதா?” என்று கேட்கும் கேள்வி அவனைச் சீண்ட, அதுவரை கமலத்தின் காதலை உதாசீனம் செய்பவன் அவளைக் காதலிக்கத் தொடங்குகிறான். திருமணத்துக்கு முன்பே கமலம் கர்ப்பம் அடைகிறாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் தன்னை வக்கீல் படிப்பு படிக்க வைக்கவேண்டுமென்று விஸ்வலிங்கத்திடம் நிபந்தனை போடுகிறான் குணசேகரன்.

திருமணம் நடக்கிறது. அவனது வளர்ச்சிக்காக தன்னைப் பயன்படுத்திக் கொண்டான் என்று எண்ணும் கமலம் தாம்பத்திய உறவை மறுக்கிறாள். ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. மேற்படிப்பிற்காக குணசேகரன் லண்டனுக்குச் செல்கிறான். லண்டனில் இருக்கும்போது விஸ்வலிங்கம் தனது சொத்தில் இரு பாகங்களை அவனுக்கு உயில் எழுதிவிட்டு இறக்கிறார்.

மீண்டும் மலாயா திரும்பும் குணசேகரனின் தொழில் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது. கமலம் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு இவனை முற்றிலும் புறக்கணிக்கிறாள். வெளிநாட்டில் படிக்கும் மகன் ஆனந்தன் தந்தையின் தொழிலை ஏற்று நடத்த ஆர்வம் காட்டாதது குணசேகரனை வருத்தமடையச் செய்கிறது. இறுதியில் புற்றுநோயால் இறந்துபோகும் ஆனந்தனின் மறைவு குணசேகரனையும் கமலத்தையும் தாம்பத்தியத்தில் இணைக்கிறது.

நூலாசிரியரே தனது முன்னுரையில் சொல்லியிருப்பது போல மிகை உணர்ச்சியுடnila-3ன் கூடிய கதை சொல்லாடல் கொண்ட இந்நூலை வாசித்து முடித்தவுடன் ஒரு பழைய தமிழ் திரைப்படத்தைப் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆரம்ப அத்தியாயங்களில் நாவலாக விரித்து எழுதத் தொடங்கிய ரெ.கா. சில அத்தியாயங்களுக்குப் பிறகு விரைந்து முடிப்பதில் முனைப்பு கொண்டு சுருக்கி எழுதியது போலிருந்தது. சில அத்தியாயங்களின் தொடக்கத்தில், மற்ற நூல்களில் இருந்து எடுக்கப்பட்டதும் கதையோட்டத்திற்குத் தொடர்புடையதுமான மலாயா வரலாற்றுக் குறிப்புகள் சில மிகச்சுருக்கமாக, மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன.

மலேசியாவின் தலைவர்களான துங்கு அப்துல் ரஹ்மான், துன் சம்பந்தன், டத்தோ சாமிவேலு ஆகியோரும் இக்கதையில் கதாபாத்திரங்களாக உலாவுகின்றனர். புத்தகத்தை வாசித்துவிட்டு யாராவது புயலைக் கிளப்பிவிடலாம் என்ற பதற்றத்தில் “தலைவர்களின் பெருமை மாசுபடாமல் அவர்களது வாழ்க்கையின் உண்மைகள் சிலவற்றை அடிப்படையாக வைத்துக் கற்பனை நிகழ்ச்சிகளை  வடித்திருக்கிறேன்” என முன்னுரையிலேயே சொல்லி ரெ.கா. சாதுரியமாகத் தப்பித்துக்கொள்கிறார். இதுபோன்ற சாதுரியங்களை எழுத்தாளர்கள் கொண்டிருப்பது மலேசியா மற்றும் சிங்கையில் அவசியமா அல்லது அர்த்தமற்றதா என்ற கேள்வி எழுகிறது.

ஜப்பானியர்களது ஆட்சியில் தோட்டத்தொழிலாளர்களின் அன்றாட வாழ்வே பெரும் பிரச்சனையாக இருந்ததால், பிள்ளைகள் பள்ளிகளுக்குச் செல்லாமல் மரவள்ளிக்கிழங்கு திருடவும், செம்புக் கம்பிகள் திருடி விற்கவும் சென்றிருக்கிறார்கள். பள்ளிகளில் பாடம் தொடங்குவதற்கு முன், ஜப்பானிய தேசிய கீதம் (கிமிகாயோ) பாடுவதும் ஜப்பானிய அரசரின் மகிமையை சொல்வதும் கட்டாயமாக இருந்துள்ளன. இந்தியாவில் மகாத்மா காந்தி நடத்திய மதுவிலக்கு போராட்டத்தை  மலாயாவில் பரப்பிய சில இளைஞர்கள் தோட்டம், தோட்டமாக கள் விற்பனை செய்த காண்டிராக்டர்களுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இது போன்ற வரலாற்று நிகழ்வுகள் ஒரு தகவலாக மட்டுமே கதையில் இடம் பெற்றிருக்கின்றன. வல்லினம் இதழுக்கு ரெ.கா. அளித்துள்ள ஒரு பேட்டியில் “நான் சமகால வாழ்வைக் கவனித்து அது பற்றி எழுதுபவன். சரித்திரத்தைப் பதிவு செய்வதில் ஆர்வமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். ரெ.காவின் இந்த ஆர்வமின்மையால் ஒரு வாசகராக நான் இழந்தது அதிகம் என உணர்ந்தேன். தனி ஒருவனின் முன்னேற்றத்தை குறுநாவலாக வடித்துள்ள ரெ.கா. அதோடு சேர்த்து, கதை நகரும் காலத்தில் மலாயா மலேசியாவாக மாறியதன் பின் உள்ள வரலாற்றுப் பிண்ணனியையும், அதனால் சமூகத்தில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார, வாழ்வியல் மாற்றங்களையும் இன்னும் சற்று விரிவாக எழுதியிருந்தாரானால் இந்நூல் வரலாற்று புனைவாக மேலும் பல வாசகர்களை உள்ளிழுத்துக் கொண்டிருக்கும்.

நூலாசிரியர் அறிவுரையோ, தீர்வோ சொல்லாமல் தன் குரலை ஓங்கி ஒலிக்க விடாமல் கதாபாத்திரங்களின் வழியாக கதை சொல்லிச் செல்வது  இந்நூலின் சிறப்பம்சமாகும். கதை நாயகனான குணசேகரனை உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்கும் லட்சியவாதியாக வடிவமைத்துள்ளார் ரெ.கா. லட்சியவாதிகளான பாத்திரங்களைப் படைக்கும் படைப்பாளிகள் அவர்களைக் கிட்டத்தட்ட கடவுளுக்கு இணையாகச் சித்தரிப்பது வழக்கம். உதாரணத்திற்கு ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன். ஒரு வீடு. ஒரு உலகம்’, நாவலில் வரும் ஹென்றியைச் சொல்லாம். “ஹென்றி மாதிரியான மனிதர்களை யதார்த்த வாழ்வில் சந்திக்க முடியுமா?” என்ற கேள்விக்கு ஜெயகாந்தனின் பதில் “தேடுங்கள் கண்டடைவீர்கள்!” என்பதுதான். ஆனால் ரெ.கா அப்படி ஒரு கேள்விக்கு இடம் தராமல், அந்த லட்சியவாதியின் மனதில் ஏற்படும் கீழ்மைகளையும், அறத்திற்கு முரணான உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் நேர்மையாக பதிவு செய்வதன் மூலம் ஒரு படைப்பாளியாக வெற்றி பெறுகிறார்.

ரெ.காவின் படைப்புகளில் எனக்கு பிடித்த அம்சம் வாசிக்க எளிமையானதும் சரளமானதுமான அவரது மொழிநடை. மேலும் ரெ.கா. எதையும் வலிந்து திணிக்காமல், சமகாலத்தையும் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் கவனித்து புனைவு கலந்து யதார்த்த மொழியில் எழுதக்கூடியவர். அதற்கு எடுத்துக்காட்டு அவரது சிறுகதைகள். நுட்பமான மொழியில் அருமையாக எழுதப்பட்ட அவரது சிறுகதைகளோடு ஒப்பிடும்போது இந்த நாவலில் ஏதோ ஓர் இழை அறுபட்டது போலவே மனம் உணர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *