ஆயிரம் பூக்களின் நறுமணங்களுடன்
எனது குருதிநாளங்களில்
இப்பொழுதுமுண்டு
யட்சிகளினுடையதைப்போன்ற
அருவிகளின் பெருஞ்சிரிப்பு
எனது இளமையை இவ்வனங்களுக்கும்
எனது இதயத்தை
அநாதரவாகித் துயருறுவோரின்
வேதனைகளுக்கும் கையளித்தேன்
எனது கால்களில் இப்பொழுதுமுண்டு
குன்றுகளில் ஓடித்திரிந்த
கொலுசுகள் அணிந்திராத சிறுபருவம்
எனது தலைக்குள்
ஓடைகளில் குதித்தாடிய
காதலற்ற இளம்பருவம்
இந்த ஆதிவாசிகளின் கண்களில்
நானோர் இளம்பெண்ணாகிறேன்
அவர்களே எனது பள்ளிக்கூடம்
எனது மொழியின் பெயர் ‘ புரட்சி’
எனது அரிச்சுவடியின் தொடக்கம் ‘ நீதி’
துன்புறுகிற இவர்களின் செவிகளில்
காற்று இலைகளிடம் சொல்வதைப்போல
விடுதலையின் ரகசியத்தைக்
கிசுகிசுத்தேன்
பதிலுக்கு இவர்கள் எனக்களித்தவை
அன்பின் உப்பும் மீனும் கிழங்கும்
எனது கூந்தலை இரண்டாகத் தழையவிட்டு
கண்ணாடி வளையல்களைப் போன்ற கலகலப்புடன்
தோழிகளுடன் பள்ளிக்குச் செல்கிறேன்
சிலவேளைகளில்
செம்பருத்திச் செடிகளின் மறைவிலிருந்து
தோழனொருவனின் முகம்
எனைக் கூர்ந்து நோக்கும்
சிலவேளைகளில் எனது கனவுகளில்
வீடும் அம்மாவும் அப்பாவும்
மின்னொளி போலே நிறைகிறார்கள்
சட்டென்றுதான் நடந்தது
நான் கற்றில் வெடிமருந்தை நுகர்ந்தது
அது பூட்சுகளின் சத்தத்தில் கரைந்தது
உறக்கமற்ற வேதனையிநடுவே
அதுவொரு கொடுங்கனவென நினைத்தேன்
எனது நெஞ்சிலிருந்து ஒழுகிய குருதியை
கனவில் மலர்ந்திருந்த
சிகப்பு ரோஜாவே என நினைத்தேன்
இப்பொழுது நான் அமைதியற்ற ஆன்மாவாகி
வாழ்வின் இடைபொழுதுகளில் அலைகிறேன்
‘சட்டத்தின் முன்தான் இந்த நீதி நடந்தது’ என
மக்களிடம் சத்தமிட்டுச் சொல்ல விரும்புகிறேன்
நீங்கள்தான் எல்லாம்
நீங்களதை அறியும் தருணம்
அரியாசனங்கள் நொறுங்கி வீழும்
அதன்பின்
வன்முறை தேவையிழந்துபோகும்
நேரமாயிற்று
வறண்டநிலத்தில் வடிந்துறைந்த
எனது குருதியிலிருந்து
நான் பிறக்கவிருக்கிறேன்
நான்
நான்காம் அஜிதா.
குறிப்பு: நான்கு அஜிதாக்கள்
1) புத்தர் மற்றும் மகாவீரரின் சமகாலத்தவர் என்று கருதப்படுகின்ற உலகாயதவாதியான
தர்க்கவாதி அஜிதகேச கம்பிளி.
2) 70 களில் புரட்சிக்காரியாக இருந்த கேரளத்து அஜிதா.
3) நிலம்பூர் வனத்தில் கொல்லப்பட்ட இக்கவிதையில் உரையாடுகிற அஜிதா.
4) வாழ்வில் தோற்கடிக்க முடியாத மக்கள்தலைவி.
மலையாளத்தில் : கே. சச்சிதானந்தன்
மலையாளத்திலிருந்து தமிழுக்கு
அன்பு வேந்தன் & சுரேஷ் விஜயராஜன்