உயிர்க்காடு

uyirkadu 1“நான் கீழேதான் போகிறேன், எலியாஸ் என்னைப் பொதுத் தொலைபேசியிலிருந்து, அவனுக்குப் போன் போடச்சொல்லியிருக்கிறான். இரு, வந்துவிடுகிறேன், அதற்குள்,  முடிந்தால் சூசனை இங்கிருந்து அனுப்பிவிடு. அவள் இங்கு இருந்தால், நடப்பது யாவற்றையும் அவள் தெரிந்துகொண்டால், உனக்கும் எனக்கும் எல்லாவிதத்திலும் பிரச்சனைதான்” என்று எரிந்து விழுந்தான் ரானே.

“அவளை விடு, அவள் அதிகாலையில்தான் நன்றாகத் தூங்குவாள். அந்த அறையின் கதவை நன்றாக மூடிவைத்துவிட்டுத்தான் நான் வந்திருக்கிறேன். நீ கீழே போய் உன் வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு வா. காரிலிருக்கும் உடம்பிலிருந்து ரத்தம் ஏதும் வரவில்லையல்லவா? ரத்தம் வழியப்போகிறது? அது பெரிய பிரச்சனையாகிவிடும்” என்றாள்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை, பார்த்துவிட்டுத்தான் ஏற்றினேன்” என்று படபடவென்று நடந்து, இரும்புக்கதவைத் திறந்துகொண்டு கீழே ஓடினான் ரானே.

“பத்துக்காசு சில்லறையாக இருக்கிறதா, போனுக்கு? அதை மறந்துவிட்டுப் போகாதே, சீக்கிரம்” என்றாள் நானா.

‘சூசனை எழுப்புவதா வேண்டாமா? ’அவளிடம் ஏதும் சொல்லாமல், எப்படி அவளை இங்கிருந்து அனுப்புவது’ என்று யோசித்தாள் நானா.

‘இந்த ரானே வேறு கடுகடுப்புடன் இருக்கிறான். இப்படியெல்லாம் நடக்கும் என்று யார்uyirkadu 2 நினைத்தார்கள். எலியாஸ் திறமைசாலி, எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லவன், இவனோ பொறுமை பொறுமை என்பதாய் எல்லாவற்றிலும் இழுத்து நிறைக்கும் மூடன். இதே சூழ்நிலையில் எலியாஸ் இருந்திருந்தால், எல்லாவற்றையும் அங்கேயே முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து என்னோடு இதமாய் மது அருந்திக்கொண்டிருப்பான். இவனோ எல்லாவற்றையும் வீடுவரை இழுத்துப் போட்டுக்கொண்டு வந்தது மட்டுமல்லாமல், எல்லாவற்றிலும் எல்லோரையும் சம்பந்தப்படுத்தும் முட்டாளாக இருக்கிறானே’ என்று கிச்சனுக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்தாள்.

கீழே ஓடிசென்ற ரானே, மீண்டும் அவசரமாக உள்ளே வந்தான்.

“எலியாஸ் இங்கு வருகிறானா?” என்று கேட்டாள் நானா.

“இல்லை என்னைத்தான் அங்கு வரச்சொல்லியிருக்கிறான்.” என்றான் ரானே.

“நீ இந்தக்காடியை எடுத்துக்கொண்டு, அதையும் தூக்கிக்கொண்டு, அங்குமிங்கும் ஏன் அலைகிறாய், அவனை, ஒரு டாக்சியை எடுத்துக்கொண்டு இங்கு வரச்சொல்ல வேண்டியதுதானே?”

“அவனிடம் கொஞ்சம்கூடக் காசு இல்லை என்கிறான்.”

“அதனாலென்ன, டாக்சியில் வந்து இறங்கும்போது உன்னிடம் வாங்கிக் கொடுத்துவிடலாமே, நீ ஏற்கனவே அதிர்ச்சியுடன் மிரண்டுபோயிருக்கிறாய், நீ எப்படி காடியை ஓட்டிக்கொண்டு அங்கு செல்வாய்?”

“கேள்வி கேட்பதை நிறுத்துகிறாயா நீ?”  என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக, வெளியே ஓடினான் ரானே.

“எனக்கு ஏதாவது காசு கொடுத்துவிட்டுப்போ, கையில் சுத்தமாய்க் காசு இல்லை.” என்று ரானேயிடம் சொன்னாள் நானா.

“எப்போதும் காசுதானா? வேறு ஒன்றும் தெரியாதா உனக்கு.”

“ங்க்கௌ பெர்கி மானெ? (எங்கே போகிறாய்)” என்று அவன் பின்னால் ஓடினாள் நானா. அவளைச் சட்டைசெய்யாமல் வேகவேகமாக மின் தூக்கியை நோக்கி நகர்ந்தான் ரானே.

“காரின் பின்பக்கத்தைத் திறக்கிறேன், பார்க்கிறாயா?” என்று கேட்டான், ரானே.

“இப்போது திறக்காதே, எங்கேனும் ஒற்றைக்கண்ணன் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கக்கூடும்” என்றான் ட்ரூமேன்.

“எந்த ஒற்றைக்கண்ணன்? ட்ராஃபிக் காவலரா?” என்றான் ரானே.

“இல்லை, சிசிடிவி. சிங்கப்பூர் என்றால் சிசிடிவியூர் என்பது தெரியாதா உனக்கு?”

“இப்போது எங்கே போகிறோம்?”

“நேரே போ. மருத்துவமனையிலிருந்து கிளம்பியதிலிருந்து ஐம்பது முறை கேட்டுவிட்டாய். அந்த பிளாக்குகளைக் கடந்து ரோட்டின் வலது புறம் திரும்பு. அங்கே ஒரு இந்துக்கோயில் இருக்கிறதல்லவா?”

“ஆமாம், அங்கு ஏன்?”

“அதற்கு முன்னால் ஒரு கோப்பிக்கடை இருக்கிறது. அங்கு நிறுத்து.”

“ஏன், அங்கு நிறுத்தச்சொல்கிறாய், என்ன எலியாஸ், விளையாடுகிறாயா, பின்னால் ஒருவன் கிடக்கிறான். அவனை வைத்துக்கொண்டு ஊரைச்சுற்றுகிறோமா நாம்?”

“என்ன செய்யச்சொல்கிறாய், இதெல்லாம் உன்னால்தான். நான் மட்டும் உன்னோடு இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்க விட்டிருக்கமாட்டேன்.”

“நீதான் ஜாலியாக சென்று மருத்துவமனைக்குள் படுத்துக்கொண்டாயே?”

uyirkadu 3“ஏன், அதிலென்ன உனக்கு வயித்தெரிச்சல்? நீயேதோ செலவு செய்தது போலப்பேசுகிறாய், நான் இன்ஸூரன்ஸ் எடுத்திருந்தேன், ப்ரீமியம் கட்டிய பணத்துக்காகவாவது அதை அனுபவிக்க வேண்டாமா? மூன்று வேளையும் நல்ல சாப்பாடு, மணி அழுத்தினால் வரும் பிலிப்பினோ நர்ஸஸ், நல்ல மிதமான ஏர்கானில் தூக்கம், எங்கு கிடைக்கும் இவையெல்லாம்? நீ கொடுத்தாயா? நானும்தான் உன்னோடு இரண்டுவருடங்கள் உழைத்தேன். ‘ஷிப் லாஜிஸ்டிக்ஸ்’ வேலையை விட்டுவிட்டு சொந்தக்கம்பெனி என்றபேரில், உன்னைப்போன்ற முட்டாளோடு சேர்ந்து உழைத்து உழைத்து ’லெவி’ கூட கட்டமுடியாத கடனாளியானதுதான் மிச்சம். ஒவ்வொருநாளும் பணம் பணம் என்று உழைத்துக்கொண்டிருந்தால் எப்போது நம்வாழ்வைத் துய்ப்பது என் ப்ரோ, தினமும் சந்தோஷாமாயிரு என்பதுதானே வாழ்க்கை. நீ பணம் பணம் என்று ஓடினாய், இதோ இப்போது இங்குவந்துநின்று பிணம் பிணம் என்று ஓடுகிறாய்” என்றான் நக்கலான சிரிப்போடு ட்ரூமேன்.

“ஏன், மீண்டும் மீண்டும் என்னை இப்படி எரிச்சலூட்டுகிறாய், இது நமது கம்பெனிதானே, வேலையின் மூலம் வரும் புராஃபிட்டில் நாம் இருவருக்கும் பங்குதானே, இந்தக்கம்பெனியின் பெயரில்தானே எல்லா வேலையும் எடுத்தோம்? இன்னும் சொல்லப்போனால், இந்தக்கம்பெனியும் உன் பெயரில் அல்லவா இருக்கிறது, உண்மையில் இதற்கெல்லாம் நீதானே பொறுப்பு எலியாஸ்” என்று ட்ரூமேனைக் கேட்டான் ரானே.

“ஹா ஹா ஹா” என்று சிரித்த ட்ரூமேன், ”எந்தக்கம்பெனி, இந்த வேலையை எடுத்த கம்பெனியா, ப்ரோ, எல்லாவற்றையும் மறந்துவிட்டாயா, அது ‘நானா’ பெயரில் அல்லவா இருக்கிறது, அவள்தான் பதில்சொல்லவேண்டும்” என்று இழுத்த ட்ரூமேன், “நானா உன்னிடம் சொல்லவில்லையா, இருமாதங்களுக்கு முன்பே என் பெயரை எடுத்துவிட்டு அவள் பெயரைப் போட்டாகிவிட்டதே, இப்போது, அவள் மட்டும்தான் டயரெக்டர், சந்தேகம் இருந்தால் அவளைக் கேள்” என்றான்.

“நானாவா? ஒன்றுமே சொல்லவில்லையே”, என்று ரானேயின் முகம் இறுகவும், “அவள் கேட்டுக்கொண்டதால் மட்டுமே நான் இதில் உனக்கு உதவி புரிகிறேன். நேரத்தைக் கடத்தாதே, பிறகு எல்லாமே நமக்கு, அதாவது உனக்குச் சிக்கலாகிவிடும்” என்று அன்போடு  அவனது தோளில் கைவைத்தான்.

புனிதமரம் பாலசுப்பிரமணியர் ஆலயத்துக்கு எதிரில், சற்று முன்னதாகவே, சாலையின் ஓரத்தில் வெள்ளைநிறத்தில் கட்டம் கட்டமாய் வகுக்கப்பட்டிருந்த காடி நிறுத்தம் ஒன்றில் நிறுத்தினான் ரானே.

“எலியாஸ், பொழுது விடிந்துவிட்டது. காடியை இப்படித் திறந்தவெளியில் பார்க் செய்துவிட்டுப்போவது பயமாய் இருக்கிறது. யாரும் அதைப் பார்த்துவிட்டால்?”

“முட்டாள் ரானே, ரத்தம் ஏதும் இல்லை என்றுதானே சொன்னாய்? அப்புறம் என்ன? ரத்தம் வராதவரைக்கும் நமக்குப் பிரச்சனையில்லை, நாய் பூனை என்ற பிரச்சனையும் இல்லை. வா. கடை திறந்திருக்கிறது, ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.”

ஞாயிற்றுக்கிழமையின் காலைநேரத்தில் அந்த கோப்பிக்கடையில் கூட்டம் இல்லை. ஓரிரு வயதானவர்கள் ஆங்காங்கு அமர்ந்திருந்தனர். நீண்ட தாடியுடன் இருந்த ஒரு வயதான தமிழர், இருவர் அமரும் இருக்கையில் தனித்து அமர்ந்திருக்க, எதிரில் இரண்டு கின்னஸ் போத்தல்கள், ஒன்று வெறுமையாகவும் மற்றொன்று பாதியாகவும் இருந்தன. கடைத்தொகுதியின் மேற்கு மூலைக்குச்சென்று தனியாக அமர்ந்துகொண்டனர், இருவரும்.

“எனக்குச் சாப்பிடத் தோணவேயில்லை. என்னால் சாப்பிடமுடியாது. உனக்கு என்ன வேண்டும் சொல்” என்றான் ரானே.

“ஏன், உன் சொந்தக்காரனா இறந்து கிடப்பது? ஏன் இவ்வளவு சோகமாய் இருக்கிறாய்? சரி, எனக்கு ஸத்து கோசம், ஸத்து துளார்” என்றான் ட்ரூமென்.

“எலியாஸ், நீ கேட்கும் ’ஸத்து ஹோஸம், ஸத்து துலோர்’ வாங்க, இந்தியன் முஸ்லீம் கடை ஏதும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லையே?”

“அட, ஏன் இருக்காது? இங்கு எங்கே கழிவறை இருக்கிறதென்று பார், அதனருகில்தான் அது இருக்கும்?”

“என்ன சொல்கிறாய்?”

“ஆமாம், பெரும்பான்மையான கோப்பித்தியம்களில் அப்படித்தான் இருக்கும்.. ஹா..ஹா”

எலியாஸுக்கு, ஒரு முட்டைப்பரோட்டாவும் சாதாப்பரோட்டவும் வாங்கிவிட்டு, குடிப்பதற்கு, இரண்டு ’கார்ல்ஸ்பெர்க்’ பியர் பாட்டில்களும், அவனுக்கு வெறும் ’தே அலியா’ மட்டும் வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்தான் ரானே.

“ஹ்ம், இப்போது சொல். யாரும் அருகில் இல்லை. என்ன செய்யப்போகிறோம்?” என்று கேட்டான் ரானே.

“ப்ரோ, மூன்று வழிகள் இருக்கின்றன நமக்கு. ஒன்று யாருக்கும் தெரியாமல் இவனைக் கொண்டுபோய் ஏதாவது ஒரு காட்டுப்பகுதியில் போட்டுவிட்டுச்செல்வது. அவன் இறந்துவிட்டான் என்று நீதான் சொல்கிறாய், நான் அவன் உருவத்தைக் கூடப்பார்க்கவில்லை, அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிட்டால், எப்படியும் ஒருசில நாட்களிலோ அல்லது ஒருசில மணித்துளிகளிலோ யார்கண்ணிலும் அவன் படக்கூடும். பிறகு சந்தேகத்திற்கிடமான மரணம் என்று போலீஸ் விசாரிக்கும். எந்தவொரு தடத்தையும் நாம் விட்டுச்செல்லாதவரை நமக்குப் பிரச்சனையில்லை. அதற்கு யாரும் நம்மைப் பார்த்துவிடக்கூடாது. அப்படிப் பார்த்தால் நாம் முடிந்தோம். இதைப்பற்றி யோசி.” என்று பெருமூச்சுவிட்டான்.

“சரி, இரண்டாவதைச் சொல்”

“இரண்டாவது, இங்கே அருகில் எங்காவது ஒரு பள்ளம் தோண்டி, யாருக்கும் தெரியாமல் இவனைப் புதைத்துவிட்டுச்செல்வதுதான். யாரும் பார்த்துவிடாமல், எந்தத் தடயமும் இல்லாமல் செய்வது மிக முக்கியம். யாரும் பார்த்தால், ஏதும் தடயம் கிடைத்தால், உனக்கும் எனக்கும் மரணதண்டனைதான்.”

“சரி, வேறென்ன மூன்றாவது?”

“மூன்றாவது, காட்டுப்பகுதியில் இவன் தற்கொலை செய்துகொண்டதுபோலச் செய்துவிட்டு எந்தவிதத் தடயமும் இல்லாமல் நாம் தப்பித்துக்கொள்வது. என்ன செய்யலாம் சொல். நேரமில்லை” என்று பெருமூச்சு விட்டுவிட்டு, “அந்தப் போத்தலை எடு” என்று ரானேயிடம் சொல்ல, அருகிலிருந்த கார்ல்ஸ்பெர்க் போத்தலை அவன் எடுத்துக்கொடுக்க, அதன் தலையில் உள்ள அலுமினியக்குமிழியைக் ‘கிளிக்’ என்ற சத்தத்துடன் கடித்துத் திறந்து தொண்டைக்குள் கவிழ்த்து ஒரு பெருமூச்சு விட்டான் ட்ரூமேன்.

ஓட்டமும் நடையுமாக, செம்பவாங் கடற்கரைக்குச் செல்லும் ஆட்மிரால்டி மேற்கு சாலையின் சந்திப்பை நோக்கி விரைந்து நடந்தாள் மெலிசா. அதிகாலையில், அந்நடைபாதையில், வயதானவர்கள் சிலர் நாயோடும், தனிமையிலும் விரைவு நடை நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். சில வெளிநாட்டுத் தொழிலாளர்கள், அவளைக் கண்டதும், செல்லும் வழி முழுக்க, ஆங்காங்கு அவளைக் கூர்ந்து நோக்கினர்.

தூரத்தில், வீட்டுவளர்ச்சி வாரியத்தின் புதிய வீடுகளுக்கான, கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஓங்கி உயர்ந்து மேலே சென்று ”T” வடிவத்தில் நிலைநிறுத்தப்பட்ட நான்கு பாரந்தூக்கிகள், நின்று, அங்கு நடந்துகொண்டிருக்கும் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருக்க, ”ட்டி” என்ற அவையனைத்தும் ’எல்லாமே தற்காலிகமானதுதான்’ என்பது போல இருந்தது.

கேள்விக்குறி வடிவில், ஆங்காங்கு படுத்துக்கிடக்கும் சிறுசிறு பாரந்தூக்கிகளும் மண்ணைக் கவ்வும் வாகனங்களும் மற்ற சிறுபளுதூக்கும் ஃபோர்க்லிப்ட்டுகளும் நின்றுகொண்டிருந்தன. ஆச்சரியக்குறிபோல நேரே நின்ற, இரண்டு துளையிடும் எந்திரங்களும் அங்கே இருந்தன. கேள்விக்குறிகளையும், ஆச்சரியக்குறிகளையும் தொடர்ந்து கலந்து, புதைத்து இவ்வீடுகளை அந்த இயந்திரங்கள் எழுப்பித்தருவது போலத்தோன்றியது அவளுக்கு.

அருகில், வெளிர் நீலநிறத்தில் ஒரு நீண்ட, பெரிய, பெட்டியைப் போல தரையிலிருந்து எழும்பி அமர்ந்திருந்தது வெளிநாட்டு ஊழியர்களுக்கான தற்காலிகத் தங்குமிடங்கள். அது ஒரு பெரிய சவப்பெட்டி என்று அடிக்கடி சொல்லும் சில்வன் நினைவில் வந்தான்.

பிரதான நடைபாதையிலிருந்து விலகி, காட்டுக்குள் செல்லும் ஒரு ஒற்றையடிப்பாதை இருந்தது. அதனுள் நுழைந்து நடந்தாள். யாரும் அருகில் இல்லையென்பதையும் யாரும் பார்க்கவில்லை என்பதையும் திரும்பிப் பார்க்காமலேயே உறுதி செய்துகொண்டாள். சில மீட்டர் தூரம் சென்றபின் வாகனச் சத்தங்கள் காட்டுக்குள் கேட்டன.

எவ்வித ஆச்சர்யமும் அடையாமல் அவள் நடந்தாள். இது அவளுக்கும் அவனுக்கும் தெரிந்த இடம்தான். சிறுகுகை போன்றிருந்த அந்த இடத்தை அடைந்ததும் நின்றாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரும் இல்லை என்றவுடன் நுழைந்து சென்றாள்.

குகையின் வெளிப்புறம் பிரதான சிறு கிளைச்சாலை சென்றது. ஆனால், சாலையில் இருந்து பார்த்தால் யாருக்கும் தெரியாத வண்ணம், அது உள்நோக்கிக் கிடந்தது. மெல்ல நடந்து, அங்கிருந்து ஒரு இருபதடி நடந்தபின், சில்வனை எப்போதும் சந்திக்கும் சாலையை ஒட்டிய மறைவான குகையை அடைந்தாள். முன்பு அவர்கள் வந்தபோது, அங்கே அவர்கள் வைத்துவிட்டுச்சென்ற, சிறு புத்தர்சிலை கிடந்தது. அக்காட்டுக்குள் யாருமில்லாது இருளிலும் மறைவு ஒளியிலும் கிடந்தாலும், புத்தகடவுளின் குறுநகை மாறவில்லை.

அந்த அதிகாலையிலும், அவ்வப்போது சிலவாகனகங்கள் அச்சாலையைக் கடந்து சென்றன. அவள் தனது தொலைபேசியைப் பார்த்தபடி இருந்தாள். சில்வன் எப்போது வருவானோ தெரியவில்லையே என்று லேசாய் அருகிலிருந்த கொடியில் சாய, அந்த அதிகாலை அரையிருட்டு வெளிச்சத்தில் சற்றே, அவளையுமறியாமல், கண் அயர்ந்தாள்.

திடுமென, சில்வனோடு அவளை யாரோ துரத்துவது போலிருந்தது. இருவரும் ஒரு பொட்டல்காட்டின் வழியே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பெருமரங்கள் ஏதுமற்று குத்துச்செடிகளும், காய்ந்த சிறுமரங்களும், வறண்ட மணற்பரப்பும் விரிந்து கிடந்த அக்காட்டுக்குள் அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். துரத்துவது யார் என்று திரும்பிப்பார்க்க கணமில்லாது, அவர்கள் அக்காட்டின் வழியே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். திடுமென விரியும் அக்காட்டில் எங்கும் செடிகளோ மரங்களோ அன்றி கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் மண்காடு மட்டுமே கிடக்கிறது.

தூரத்தில் தெரிகிறது அலையலையாய் நிரம்பிக்கிடக்கும் ஒரு நீர்ச்சுனை. சிறுசுனையில் தெரியும் கலங்கிய நீரை ஒரு செந்நாய் நக்கிநக்கிக் குடித்துக்கொண்டிருக்கிறது. அதைத்தவிர யாரும் அங்கில்லை, வேறு எதுவும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. மிகவும் சோர்ந்த சில்வனுடைய கால்கள் தடுமாறுகின்றன. அவள் அவனுடைய கைகளை இறுக்கிப் பிடித்துக்கொள்கிறாள். இருவரும் ஓடுகிறார்கள். சற்றுமுன்தான் அந்த செந்நாய் எதையோ வேட்டையாடிக் கொன்று தின்றிருக்கவேண்டும். அதன் வாயிலிருந்து வழியும் ரத்தத்தோடு, அச்செந்நாய், அந்தச்சுனையில் கலங்கிய நீரைத் தன் நாக்கால் நக்கிநக்கிக் கலக்கிக் குடித்துக்கொண்டிருக்கிறது.

தூரத்தில் ஓடிவரும் அவர்களைப் பார்த்ததும் அச்செந்நாய் ஓட்டம் எடுக்கிறது. ஓடி வந்த uyirkaduஅயர்ச்சியில் பொத்தென்று அச்சுனையில் விழுகிறான் சில்வன். ரத்தத்துளிகளுடன் கலந்தகிடந்த, கலங்கிய அந்நீரை அவன் அள்ளிஅள்ளிப் பருகுகிறான். அவனது கையிலிருந்து சொட்டும் நீரை அவள் எடுத்துத் தன் தொண்டைக்குள் விட்டுக்கொள்கிறாள். இருவருடைய நாக்கிலும் ரத்தத்துளிகள் கலக்க, மீண்டும் மீண்டும் தாகம் எடுக்கிறது. அள்ளி அள்ளி அவளும் அவனும் குடித்துக்கொள்கிறார்கள்.

கையிலிருந்த கலங்கிய அந்நீர், அவளது மேலாடைகளில் பட, கொடியில் காய்த்திருக்கும் சிறு காய்களைத் தாங்கி, ஒரு கொடிச்சியாக நிற்கிறாள் அவள். ரத்தவாடையுடன் நெருங்கி நின்ற சில்வன், அவளை வினோதமாய்ப் பார்க்கிறான். திடுமென, அக்கொடிகளில் பால்சுரக்க, ஒரு சிறுமகவு போல அவன், அவற்றை எவ்வி எவ்வித் தன் வாயில் வைத்து மாற்றிமாற்றிக் கவ்விக்கொள்கிறான்.

வாயிலிருந்து வழியும் சிறுதுளிப்பால், அக்கொடியில் விழ, மலர்கள் பூக்கின்றன. உருவமில்லாத அப்பூக்களின் மணத்தை அவன், அக்கொடியின் மேல் விழுந்து விழுந்து நுகரமுயல்கிறான். பிச்சியே, உன் உடலெல்லாம் பூக்களின் மணம். ஓரிரு பூக்கள் அல்ல. ஓராயிரம் பூக்கள். குவளை, ஆம்பல், அல்லி, பிச்சிப்பூ, தாமரை என ஆயிரமாயிரம் பூக்கள். என வாய் குழறி நாசி குளிர்ந்து மலர்ந்து கிடக்கிறான்.

திடுமென தூரத்தில் ஒரு வினோத சத்தம் வருகிறது. இருவரும் திரும்பிப் பார்க்கிறார்கள். சற்றுமுன் ஓடிய செந்நாய், நீளமான நாக்குடன், திரும்பி ஓடிவருகிறது. கணத்தில் அது அவர்களை நெருங்கிக் கவ்வ முயல, இருவரும் எழுந்து ஓடுகிறார்கள். அவர்கள் ஓட ஓட, அச்செந்நாய் அவர்களைத் துரத்துகிறது. செந்நாயின் நீளமான நாக்கின் மூச்சிரைப்பு சத்தம் ஒரு வினோத ஒலிக்கலவையாய் காடுகளில் தெறித்து எழுகிறது.

’என் பிச்சியே, என்னால் இனி ஓடமுடியாது, தேனை உண்ட வண்டுபோல என்னால் உன்னை, உன் நறுமணத்தைத் தூக்கிக்கொண்டு ஓடமுடியாது. அந்த செந்நாய் என்னைக் கொல்லட்டும். உன் நறுமணத்தை நுகர்ந்த என் ரத்தம் அச்செந்நாயின் உடலில் இனி கலக்கட்டும். இது போதும். இந்தச்செந்நாய்வழி நான் போகிறேன். இனி, இக்காட்டின் அனைத்துச் செந்நாய்களிலும் உன் நறுமணம் ஓடும், என் பிச்சியே, என் கொடிச்சியே, என் உடலோடு படர்ந்தவளே, உனது பூக்கள், உனது காய்கள், உனது கனிகள், உனது நறுமணம் இப்பூமியின் எல்லாச்செந்நாயிலும் பரவட்டும்…’

“நேரமில்லை. கிளம்பு” என்றான் ட்ரூமேன்.

“கிளம்பு என்றால் எங்கே, தலை சுற்றுகிறது எனக்கு, என்ன செய்வது?” என்று ரானே கூறவும், “நீ கிளம்பு ரானே, இந்த ட்ரூமேன் இருக்கக் கவலை ஏன் ப்ரோ” என்று சொல்லிவிட்டு, காரைத்திறந்து காரின் முன்பக்கம் அமர்ந்தான். காரின் சக்கரம், கால் அடி, மண்ணில் அழுந்தியது.

“ஒரு நல்ல மறைவிடம், காடாய் இருந்தால் நல்லது, இப்போது நமக்குத்தேவை,” என்றான் ட்ரூமேன்.

“கிராஞ்சி எம்.ஆர்.டிக்கு எதிரே செல்லும் நீண்ட சாலையில், பழைய மலேசிய ‘கேடிஎம்’ ரயில்வே கேட்டுக்கு அடுத்துவரும் எல்லா தொழிற்பேட்டைகளையும் தாண்டிச் சென்றால், அங்கே கடலைப் பிரிக்கும் ஒரு சாலை உள்ளதல்லவா, அதற்கு அடுத்து ஒரு பார்க் உள்ளது. அந்த  பார்க் எப்படி?” என்றான் ரானே. மனதுக்குள், சிங்கப்பூரில் அவன் சம்பந்தப்பட்ட எல்லா இடங்களிலும் மறைவான இடங்கள் என்றொரு பட்டியலை அவனது மூளை தயாரித்துக் கொடுத்திருந்தது.

“எது, பேருந்து எண் 925 செல்லும் வழி, அதுவா? எப்போது கடைசியாய்ச் சென்றாய் நீ, அங்கெல்லாம இ்ப்போது காடுகளோ மறைவுகளோ இல்லை. சில வருடங்களுக்கு முன் நடந்த சில கொலைகளுக்குப்பின், ஏகப்பட ஒற்றைக்கண்ணன்கள் இருக்கிறார்கள். மாட்டிக்கொள்ள எளிய வாய்ப்பு, வேண்டுமா உனக்கு?” என்றான் ட்ரூமேன்.

“அதைத்தாண்டிச் சென்றால், அங்கே ஆடுமாடுமீன் பண்ணைகளும் சில காய்கறித்தோட்டங்களும் இருக்கும், அவற்றைத் தாண்டிச்சென்றால் வரும் ’லிம் சு காங்க்’, முழுக்கக் காடு. அங்கேபோய்விடுவோமா?”

“உன்னோடு ஸூஸா லா ரானே. அங்கே போயிருக்கிறாயா நீ? முஸ்லீம், சீன, பார்சிய, கிறித்துவ சமாதிகள் எல்லம் அங்குதான். ஏகப்பட்ட கட்டுமான வேலைகளும் போய்க்கொண்டிருக்கின்றன. அதுவும் அந்த ஏரியாவில் அடிக்கடி இப்போது ராணுவப்பயிற்சியும் நடக்கிறது. போலீசிடம் மாட்டாமல், ராணுவத்திடம் மாட்டிக் கொள்ள உனக்கு ஆசை போலும், செல்லலாமே” என்றான் ட்ரூமேன்.

“என்ன எலியாஸ், விளையாடுகிறாயா? எஙகே செல்வது, சொல்? என் வீட்டுக்கருகில், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கருகில் இருக்கும் நீர்ப்பூங்கா?”

“அதே கதைதான். அடர்ந்த செடிகளையும் மரங்களையும் வெட்டி, இப்போது மிகவும் சுத்தமாக இருக்கிறது அந்த இடம். சென்ற மாதம் கூட, பழைய நினைவில், பெருஞ்செடி என்று நினைத்து ஒரு சிறு மறைவுக்குப் பின் நின்று புணர்ந்துகொண்டிருந்த ஒருத்தியையும் ஓர் ஆடவனையும் ‘ஓப்சீன் ஆக்ட்’ என்று கைது செய்துவிட்டார்கள் போலீஸ். ஹ்ம், நீ ரொம்ப நாளாய், வேலை வேலை என்று இருந்துவிட்டாய் போலும், சிங்கப்பூர் நிலவரமே தெரியாமல் இருக்கிறாயே..ஹ்..ஹ்!”

“என்ன செய்வது, இப்போது?”

“அவனை என்ன செய்வது என்று நான் சொன்ன மூன்றில், ஒன்றை நீ தேர்தெடுத்துவிட்டாயா சொல், முதலில்?”

“குழப்பமாய் இருக்கிறது, தடயம் இருந்துவிட்டால் மாட்டிக்கொள்வோமே எலியாஸ்?”

“தடயம் இருந்தால்தானே? நாம் செய்யும் ஒரு தவறுக்குமேல் மீண்டும் தவறு செய்தால், தடயம் கூடிக்கொண்டுதானே செல்லும்? அப்போதுதான் மாட்டிக்கொள்வோம். தடயத்தைக் குறைக்க, ஒரே ஒரு எளிய வழிதான் உள்ளது, அது,  ஆள்நடமாட்டம் குறைந்த இடத்தில் யாரும் வரும்முன், படக்கென்று தள்ளிவிட்டுவிட்டு நாம் போய்விடுவதுதான், என்ன சொல்கிறாய்? யாராவது பார்த்து, போலீசையோ ஆம்புலன்ஸையோ அழைத்து, அவர்கள் வந்து, எப்படியோ கீழே விழுந்து இறந்துவிட்டான் என்று முடிவுசெய்துவிடுவார்கள். நமக்கும் பாதிப்பும் வராது, என்ன சொல்கிறாய்?”

இதுவரை எரிதழலின் மேல் நின்றுகொண்டிருந்தவனைப் போலிருந்த ரானே, முதன்முறையாய் மனம் சாந்தியடைந்து குதூகலமடைந்தான். ‘எலியாஸ் உனக்கு எப்படி நன்றி சொல்வேன்’ என்று அவனது கைகளைப் பிடித்துக்கொண்டான்.

ட்ரூமேன், “என் கையை விட்டுவிட்டு, பின்னால் இருக்கும் பையிலிருந்து ஒரு கார்ஸ்ல்பெர்க் டின்னை எடு” என்றான்.

நிரம்ப நேரம் எங்கும் சுத்திக்கொண்டிருக்கக்கூடாது என்று ட்ரூமேனும் ரானேயும் முடிவுசெய்தார்கள். இருமுறை நானா அழைத்தாள். “எங்கிருக்கிறீர்கள்” என்று கேட்டாள்.  “அதையெல்லாம் என்னிடம் விட்டுவிடு, நான் பார்த்துக்கொள்கிறேன். நீ நல்ல ஊடாங் சம்பால் சமைத்து வை. ஒரு பிரச்சனையும் இல்லாமல் எல்லாவற்றையும் சுமூகமாக முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுகிறோம். மருத்துவமனைச் சாப்பாட்டில் ஜீவன் செத்துவிட்டது” என்றான் ட்ரூமேன் அவளிடம். அவள் ரானேவிடம் எதுவும் பேசாமல், அலைபேசியை வைத்துவிட்டாள்.

“வண்டியை வலது பக்கம் திருப்பு” என்றான் ட்ரூமேன்.

“ஏன்?”

“சொன்னதைச் செய்.” என்ற ட்ரூமேன், திடீரென உற்சாகம் வந்தவனாய், ”கிராஞ்சியும் வேண்டாம், உட்லண்ட்ஸ்சும் வேண்டாம், காடியை வலது பக்கம் திருப்பு, அருமையான இடம் கிடைத்துவிட்டது” என்றான்.

  • தொடரும்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...