ஒளியும் ஒலியும்

sck -1மின்னணு ஊடகம் மங்கள இசை இசைத்து மதுரமழை கொட்டிய காலங்களில்  உண்டான வானவில் ஒளியும் ஒலியும்; சித்ரஹாரையும் சிந்தனையில் இணைத்து மக்கள் ஊடக உலகத்திற்குத் தயாராகியிருந்த தொடக்க காலம்; வெள்ளிக்கிழமையும் ஒளியும் ஒலியும் இணைபிரியாத நண்பர்கள்; மக்களின் குறைகளைக் கேட்பதற்குக் கூடாத கூட்டங்கள் பஞ்சாயத்து டெலிவிஷன் முன் குழுமியிருந்த காலம்; தமிழ்த் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக் குழந்தைகளின் நடுவில் ஒளிர்ந்த நட்சத்திரக் குழந்தை இந்த ஒளியும் ஒலியும்; மின்னணு ஊடகத்தின் உச்சத்திலிருந்த இச்சொல் மரபு ஊடகத்தில் அமைந்திருந்த விதம் குறித்து ஆராய வேண்டுமெனில் பக்தி இலக்கியம் இதற்கான பற்றுக் கோடாக இருப்பதை அவதானிக்கலாம்.

ஒளியும் ஒலியும் இந்தத் தொடருக்குப் பக்தி இலக்கியம் பரிமாறும் பதங்கள் பலவாகும். ஒலி(Sound) ஒளி(Light) என்பதாகக் கொண்டால் இவற்றுள் எது Sck -4சிறந்தது என்ற வினா இயல்பாகத் தோன்றும். இறைவன் ஒலியாகவும் இருக்கின்றான். ஒளியாகவும் இருக்கின்றான். ஆயின் அடியவர்களுடன் இறைவன் கொள்ளும் தொடர்பைக் கொண்டே ஒலிஒளியில் உன்னதம் எது என்பதைக் கண்டறிய இயலும். அறுபத்துமூவர் வாழ்க்கையை அடுக்கிச் சொல்லும் பக்தி இலக்கியப் பெரும் புதையல் பெரிய புராணத்தினுள் ஒளியும் ஒலியும் ஊடாட்டம் இடம்பெறும் விதம் உன்னதம்.

அடியவர்களில் ஒருவர் இளையான்குடி மாறர். மற்றொருவர் திண்ணனார் என்னும் கண்ணப்பர். இவ்விருவருக்கும் இறைவன் அருள்புரியும் விதம் வெவ்வேறானது. நீடு சூத்திர நற்குலம் செய்தவத்தினால் தோன்றிய இளையான்குடி மாற நாயனார் அடியவர்களுக்குத் தொண்டு (சரியை) செய்வதையே தம்முடைய கொள்கையாகக் கொண்டவர். சரியை என்பது இறைவனை அடைவதற்குச் சைவசித்தாந்தம் குறிப்பிடும் ஒரு மார்க்கம். திருத்தொண்டு. அத்தொண்டு பாசநீக்கம் பெற்று இறைவனை அடைவதற்கு வழி வகுக்கும். பாசம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களால் ஆனது. இடைவிடாத தொண்டின் மூலமாக இறைவனின் திருவடிகளைச் சென்று சேரலாமென்பது சித்தாந்த சாரம்.

இந்நிகழ்வினைச் சேக்கிழார் இளையான்குடி மாறனார் புராணத்தில் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். இளையான்குடி எனும் ஊரைச்சேர்ந்த அடியவரின் அருள்தொண்டினை உலகிற்கு அறிவிக்க வேண்டி இறைவன் அவர் இல்லத்திற்குச் செல்கிறார். அப்படிச் செல்லும் இறைவனைக் குறிப்பிடும் சேக்கிழார், ‘கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாதக் கொள்கையர்’ என்பதாகக் குறிப்பிடுவார். அடிமுடி தேடிய பிரமனும் மாலும் தனக்கு இருந்த பாசத்தை அறியாதவராய் மயங்கியமை காரணமாக இறைவனைக் காண இயலவில்லை. ஆனால், அடியவர்களுக்கு அருள்தொண்டு செய்யும் மாறனார் ‘குழி நிரம்பாத நன்செய்க் குறும்பயிர் தடவி பாசப் பழிமுதல் பறிப்பார் போல பறித்துக் கறிக்கு நல்கியமை’க் காரணமாக பெருமான் சோதியாய் (ஒளி-light) தோன்றினார் என்பதாகக் குறிப்பிடுவார்.

ஒளியாய்த் தோன்றிய சிவபெருமான் முன்பு பிரமன், திருமாலுக்குத் தன்னைக் காட்டாத திருவருள். பின்னர் அடியவர்களுக்குத் தொண்டு செய்த மாறன் பாசப் பழிப் பறித்ததன் காரணமாகச் சோதி தரிசனம் செய்தார். ஆயின், திண்ணனார் எனும் கண்ணப்பர் செய்த அருள்தொண்டு யாதோ என யாரைப் பார்த்து வினவுவது சிவபிரானையா? அல்லது சேக்கிழாரையா? சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நால்நெறியில் கண்ணப்பர் செய்த திருநெறி யாது? அரும்பெறன் மறவர் தாயத் தான்ற தொல்குடிப் பிறந்த கண்ணப்பர் இறைவனுக்கே கண்ணைக் கொடுக்கின்றார்.  கண்ணப்பர் கண்ணைக்கொடுத்தார் என்றவுடன் ஒளியாய் (light) வரும் திருவருள் ஒலியாகியது (sound) ஆம் மூன்றடுக்கு! அமுத வாக்கினால் நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப! என்று ஒன்றிற்கு மூன்று முறை அழைக்கின்றார். இவ்விடத்தில் தான் திருவருளின் திருநெறி நம்மைத் திகைக்க வைக்கிறது.

  Sck -2Sck -3

மாறனார்  – அடியவர் தொண்டு – இறைவனின் ஒளிக்காட்சி

கண்ணப்பர்  – இறைத்தொண்டு  –  இறைவனின்  ஒலிக்காட்சி

இவ்விடத்தில் அடியவர்களுக்குத் தொண்டுச் செய்வதனால்  இறைவனின் ஒளிக்காட்சி மட்டுமே கிட்டும் என்பதாகவும் இறைவனுக்குத் தொண்டு செயின் ஒலிக்காட்சி கிடைக்கும் என்பதாகக் கொள்ளலாமா? மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதெல்லாம் பொய்க்குறிப்போ என்றெல்லாம் எண்ணத் தோன்றும். இவ்விடத்தில் தான் மரபு ஊடகம் நம்மை வேலை வாங்கும் விதம் அதன் பலம் என்பது புரிய வரும்.

பெரியபுராணம் பதிகமாகவிருந்து (திருத்தொண்டர்தொகை) அந்தாதியாகி (திருத்தொண்டர் திருவந்தாதி) காப்பியமாக (பெரிய புராணம்) உருப்பெற்றது.  இதனுள் பெரியபுராணக் கண்ணப்பர் அதற்கு முன்பாகவே இருவேறு ஆசிரியர்களால் எடுத்தாளப் பெற்றவர். ஒருவர் திருக்கண்ணப்பத்தேவர் திருமறம் நக்கீரத்தேவர் 58 வரிகளான ஆசிரியம். மற்றொருவர் – திருக்கண்ணப்பத்தேவர் திருமறம்-கல்லாடர் 38 வரிகளான ஆசிரியம்.

கண்ணப்பருக்கு இறைவன் மீதான அன்பு இயல்பாக வந்து தோன்றியதல்ல. ஏலவே அருச்சுனனாக இருந்தபோது பன்றியுருக் கொண்ட மூகதானவனெனும் அசுரனை அழிக்க சிவமூர்த்தி பழிப்பு ஏற்படுகின்றது. எனவே, மீண்டும் பிறவியெடுத்துத் தன்னை அடைதல் வேண்டும். இறைவன் பணித்தமை இதனுள் இடம்பெறும் புராணக்குறிப்பு. அடியவர் தொண்டு காரணமாகத்தான் இளையான்குடி மாறநாயனாருக்கு இறைவன் பிரமன், திருமாலுக்குக் காட்டாத சோதி வடிவை ஒளி (light) ஒரே பிறவியில் காட்டினான் என்பதும் இறைவனுக்குத் தொண்டுச் செய்த கண்ணப்பரிடம் பேசுவதற்கு (sound) இறைவன் ஒரு பிறவி காக்க வைத்தான் என்பதும் சேக்கிழார் மரபு ஊடகம் வழியாக நடத்திக் காட்டும் மரபு ஊடக ஒலியும் ஒளியும்.

முனைவர் சு .சிவசந்திர குமார்

தமிழ் உதவிப்பேராசிரியர்

தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர் – 635601

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...