இலக்கிய விமர்சனம் என்பது மலேசியாவில் மிகச் சிக்கலான ஒரு விடயம். விமர்சனத்தை எதிர்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் போதுமான பக்குவம் மலேசிய இலக்கியச் சூழலில் இல்லை. ஓர் எழுத்தாளனோ அல்லது வாசகனோ ஒரு படைப்பை வாசித்துவிட்டு அதை விமர்சனம் செய்தால் விமர்சனம் செய்தவன் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாவதுதான் இங்கே நிலவும் சூழல். ஓர் இலக்கியப் படைப்பு மீது வைக்கப்படும் கடுமையான, கராறான விமர்சனம் தீவிரமான இலக்கியத்தை முன்னெடுத்து வருங்காலத்தில் தரமான இலக்கியப் படைப்பை வழங்கிட வழிசெய்யும். தரமான படைப்புகள் ஆரோக்கியமான திறனாய்வுக்கு வழிவிடும்.
மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை விமர்சனம் என்பது பொதுநிலையில் ஒருவரை ஒருவர் சொறிந்துவிட்டுக் கொள்ளும் அளவிலேயே உள்ளது. தேர்ந்த படைப்பிலக்கியத்தைத் தேர்வு செய்து அதற்கு விமர்சனம் செய்திட அழைத்து வரப்படும் தமிழக எழுத்தாளர்களும் பல நேரங்களில் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் உண்மை நிலையை எடுத்துரைக்காது முகதாட்சண்யத்துக்காக மேம்போக்கான விமர்சனங்களை மட்டுமே வைத்துவிட்டுச் சென்றனர் – செல்கின்றனர். அதனால் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் உண்மை நிலவரத்தையும் அதன் அடிப்படைச் சிக்கல்களையும் அறிந்திட நமக்கும் வாய்ப்பில்லை. அடிப்படையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை, தமிழ்நாடு, இலங்கை மற்றும் புலம்பெயர்ந்தோரின் இலக்கியப் படைப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதன் தரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்துள்ளது.
மா.சண்முகசிவாவின் ஆளுமை உருவாக்கம்
மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலின் இந்நிலையை நன்கு உணர்ந்து அதற்கான மாற்று நடவடிக்கைகளும் முயற்சிகளும் மேற்கொண்டவர்களில் மிக முக்கியமானவராக மா.சண்முகசிவாவைப் பார்க்கிறேன். மலேசியத் தமிழ் இலக்கியம், பல காலகட்டங்களையும் படிநிலைகளையும் கடந்து வந்தாலும் பிரச்சாரமும் ஜனரஞ்சகமும் மலிந்துகிடந்த மலேசியச் சிறுகதை உலகில் 1980-களின் இறுதியில் நவீன இலக்கியத்திற்கான தொடக்கமாக அமைந்தது அவரது நுழைவு. அதற்குமுன்பே நவீன இலக்கியத்திற்கான முயற்சிகள் இந்நாட்டில் நடைபெற்றாலும் நவீனத்துவ கலை குறித்த வடிவபோதம் அவரால் அதிகம் பேசப்பட்டது. ஒரு மருத்துவரான மா.சண்முகசிவா மலேசிய இலக்கிய அரங்கில் பலராலும் பரவலாக அறியப்படுகின்ற ஓர் ஆளுமை. மலேசியத் தமிழ் இலக்கிய உலகிற்கு அவசியமான சில கலகக்காரர்களை உருவாக்கி விட்ட மூத்த கலகக்காரர்.
மா.சண்முகசிவா, மலேசிய வடக்கு மாநிலமான கெடா, அலோஸ்டார் நகரில் பிறந்தவர். தமிழகத்தில் மானாமதுரையைப் (சிவகங்கை மாவட்டம்) பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தை மு.மாணிக்கம்பிள்ளை கெடாவில் ‘ஜெய்ஹிந்த் ஸ்டோர்’ எனும் மளிகைக்கடை நடத்தியதிலிருந்து தன் வாழ்வைத் தொடங்கியுள்ளார். மலேசியாவில் 1940-களில் தமிழகத்திலிருந்து மிளகாயை வாங்கி விற்றவர் பின்னர் 1945-இல் மீனாட்சி மிளகாய் தூள் மில் என ஆரம்பித்து மிளகாய் அரைத்துத் தூளாக்கி, அப்போது விற்பனையில் இருந்த 555 எனும் சிகரெட்டின் அலுமினிய டின்னில் அடைத்து விற்பனை செய்துள்ளார். இன்று மலேசியத் தமிழர்களிடம் கொடிகட்டிப்பறக்கும் மிளக்காய்த்தூள் விற்பனைக்கு சண்முகசிவாவின் தந்தை ஒரு தொடக்கம்.
மா.சண்முகசிவா ஆரம்பக்கல்வியை ஆங்கிலப்பள்ளியில் கற்றாலும் இராமசாமி செட்டியார் எனும் தமிழ் ஆசிரியர் வீட்டில் வந்து சண்முகசிவாவுக்குத் தமிழ் போதித்தார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் விலங்கியல் துறையில் பட்டப்படிப்பு படிக்கும்போது மொழி மீதான காதல் ஏற்பட்டு அதுவே இலக்கியத்தில் இணைத்துள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரியில் பயிலும்போது அங்கு இயங்கிய இலக்கிய வட்டம் ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டு வாசிப்பைத் தீவிரப்படுத்துவதிலும் இலக்கிய ஆளுமைகளைச் சந்திப்பதிலும் கலந்துரையாடுவதிலும் தனது இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். பின்னாளில் மலேசியா திரும்பியபோது நவீன இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் இல்லாதது அவருக்குச் சோர்வளித்தது. ஆயினும், சில இலக்கிய அமர்வுகளில் கலந்துகொண்டாலும், இலக்கியம் குறித்த மாறுபட்ட புரிதலும் முரண்பட்ட அபிப்பிராயங்களாலும் அவரால் தொடர்ந்து அவற்றில் நீடிக்க இயலவில்லை.
1985-இல் அரு.சு. ஜீவானந்தன், சாமி மூர்த்தி, அன்புச்செல்வன், மலபார் குமார் போன்றவர்கள் இணைந்து நடத்திக்கொண்டிருந்த இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பில் பார்வையாளனாக மட்டுமே இருந்துள்ளார். அவ்வமைப்பின் தீவிரம் குறைந்த பின்னர்தான் 1987-இல் ‘அகம்’ எனும் இலக்கிய அமைப்பைத் தொடங்கினார். டாக்டர் மா. சண்முகசிவாவின் ‘அகம்’ இயக்கம், பிற இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு நேரெதிரான கொள்கையைக் கொண்டிருந்தது. பொன்னாடை போர்த்துதல், பதக்கம் அணிவித்தல், விருது வழங்குதல் என்பன போன்ற வழக்கமான சடங்குகள் இன்றி வெளிவந்த படைப்புகள் குறித்தும் படைப்பாளர் குறித்தும் ஆழ்ந்து ஆராய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் சாமி மூர்த்தி, அரு.சு.ஜீவானந்தன், ரெ.சண்முகம், கந்தசாமி ஆகியோருடன் சேர்ந்து உற்சாகமாகச் செயல்பட்டார். அவரது எதிர்பார்ப்பு படைப்பாளர் தரமும், படைப்புத் தரமும் உயரவேண்டும் என்பதிலும் அதற்கான வழிகளை ஆராய்வதிலும் இருந்தது.
‘அகம்’ இயக்கத்தின் கீழ் சிறுகதை, புதினம், கட்டுரை, கவிதை என எல்லா இலக்கிய வடிவங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதோடு, விவாதம், நூல்களை வாங்கிவந்து வாசித்துப் பரிமாறிக்கொள்ளுதல், தலித் இலக்கியம், பெண்ணியம், இசை, நாடகம், நவீன இலக்கியம் என உரையாடல்கள் விரிந்தன. ஒருசமயம் அதன் செயல்பாடுகள் நின்று பின்னர் 2000-த்தின் தொடக்கத்தில் மீண்டும் புதிய குழுவினருடன் செயல்படத் தொடங்கியது.
டாக்டர் மா.சண்முகசிவாவின் தொடர்முயற்சிகளுக்கான பலன் நவீனத் தமிழ் இலக்கியத்தை இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு அவர்களிடத்திலிருந்து நல்ல தரமான நவீன இலக்கியப் படைப்புகளையும் வெளிக்கொணரச் செய்தது.
மா.சண்முகசிவா படைப்புலகம்
மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்கு டாக்டர் மா.சண்முகசிவா தம் பங்களிப்பாக நல்லதரமான நவீன படைப்புகளைத் தந்தவர். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான “வீடும் விழுதுகளும்” மலேசிய நவீன இலக்கியத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறேன். அவர் வெளியிட்ட ஒரே சிறுகதை தொகுப்பு நூலும் இதுதான். இன்றைய தேதியில் அத்தொகுப்புக்கு வயது பதினெட்டு ஆண்டுகள். இத்தொகுப்பில் பதிமூன்று சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பைத் தவிர்த்து இன்னும்சில கதைகள் வல்லினத்திலும் செம்பருத்தியிலும் வெளிவந்துள்ளன. தேடிப்பிடித்துப் படித்ததில் அவரது தொகுப்பையும் சேர்த்து மொத்தம் பதினேழு சிறுகதைகள் கிடைக்கப்பெற்றன. இது முழுமையான எண்ணிக்கை அல்ல. ‘வெள்ளைக் குதிரையில்’ எனும் சிறுகதை கிடைக்கப்பெறவில்லை. சிறுகதைகளைத் தவிர அவரது மருத்துவக் கேள்வி பதிலும் நூலாக வந்துள்ளது. மேலும் பல ஆக்ககரமான இலக்கியக் கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். வல்லினம் அச்சு இதழாக வந்தபோது அவர் எழுதிய முன்னுரைகள் முக்கிய கவனம் பெற்றன. அதைத்தவிர அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியில் ‘இலக்கிய மேடை’ எனும் இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சியையும் வழிநடத்தியுள்ளார். இந்தக்கட்டுரை டாக்டர் மா.சண்முகசிவாவின் இலக்கிய ஆளுமையை அவரது சிறுகதைகளினூடே பயணித்து முழுக்க முழுக்க வாசக மனநிலையிலிருந்தே விமர்சனமாக வைக்கப்படுகிறது.
“நல்ல கதை என்பது வாழ்க்கை அனுபவத்திலிருந்து உருவாவது. அது சுய அனுபவமாக இருக்கலாம். எதுவாயினும், அக்கதை அனுபவத்தை ஒரு புள்ளியாகக் கொண்டு அதனுள் புதைந்துள்ள உண்மையை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக, உண்மை என்று நாம் அறிந்து கொண்டுள்ளதற்கும் நமக்குமான இடைவெளியை, உறவை, முரணைப் பற்றிப் பேசுவதாக அமைய வேண்டும். ஆக, நல்ல கதை என்பது ஒரு அனுபவத்தின் வழியே அனுபவத்திற்கு உள்ளான மனிதர்களை ஆராய்கிறது”- இது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கூற்று.
மா.சண்முகசிவாவின் சிறுகதைகளின் மையமும் இதைத்தான் ஆராய்கிறது. ஒரு மருத்துவரான மா.சண்முகசிவா தனது அன்றாட வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களைப்பற்றி ஆராய்ந்து அவர்களது வாழ்க்கையை நமக்கு கதைப்படுத்தியுள்ளார். அவரது கதைகள் எல்லாமே நம் முன் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைப்பற்றிப் பேசுகிறது. உயர்சமூகத்தைச் சார்ந்தவர்களும் அடித்தட்டுச் சமூகத்தைச் சார்ந்தவர்களும் அவர் கதைகளில் சரிசமமாக வந்துபோகிறார்கள். அதேபோல விளிம்புநிலை அல்லது உதிரி மனிதர்களும் வருகிறார்கள். இவர்கள் எல்லோருமே நம் வாழ்க்கையில் ஓர் அங்கம்தானே. வாழ்க்கை என்பது நாம் மட்டுமே பயணிக்கக்கூடிய பயணமா என்ன? அந்த வாழ்க்கையை அந்தந்த மனிதர்களை வைத்து மா.சண்முகசிவா நமக்குக் கதையாகச் சொல்கிறார்.
மா.சண்முகசிவாவின் கதைக்களம்
கதையின் மையக்கருவையும் கதாபாத்திரங்களையும் ஒரு வாழ்க்கைச் சூழலில் நம்பகமாகப் பொருத்திக்காட்டவேண்டியது கதைக்கு அவசியம். கதை எங்கே நடக்கிறது, எப்போது நடக்கிறது என்ற கேள்விக்கு, கதையில் பதில் இருக்க வேண்டும். அதற்கேற்ப கதையின் சித்தரிப்புகள் இருக்கவேண்டும். மா.சண்முகசிவாவின் சிறுகதைகளில் கலவையான கதைக்களங்கள், அளவான விவரிப்புகளோடு வாசகனுக்கு வெளிப்படுத்தப்படுகிறது.
அவரது படைப்புலகின் ஒருபகுதி மருத்துமனையைக் களமாக கொண்டு படைக்கப்படுள்ளது. ஒரு மருத்துவர் என்பதாலும் தம் அன்றாட வாழ்வில் மருத்துவம் ஒரு பகுதி என்பதாலும் மருத்துவமனை முதன்மைக் களமாக அமைந்துள்ளது. அவள்–நான்–அவர்கள், கலகக்காரன், உயிர்ப்பு, முறிவு, சாமி குத்தம் ஆகிய சிறுகதைகளில் மருத்துவமனைச் சூழல் அசலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைச் சூழலில் நிகழும் சம்பவ விவரிப்புகள், பணிபுரியும் மருத்துவர்கள், வார்டின் ஆயாக்கள், நோயாளிகள் என எல்லாமே கண்முன் தோன்றும் காட்சிகளாகவே விவரிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைச் சூழலை சிறப்பாக வெளிப்படுத்த மா.சண்முகசிவாவின் அனுபவம் கைகொடுத்துள்ளது. மருத்துவத்துறை சார்ந்த சொற்கள் கதைக்களத்தின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துகின்றன.
அவரது படைப்புலகின் மற்றொரு பகுதியாக புறநகரங்களும், பெருநகரங்களும் அதனை ஒட்டிய புறம்போக்குப் பகுதிகளும் கதைக்களமாக இடம்பெற்றுள்ளன. அவரது நடப்பு, தோழமை, வீடும் விழுதுகளும், திரைகடலோடி சிறுகதைகளில் இவை களமாக அமையப் பெற்றிருக்கின்றன. தோட்டத் துண்டாடலால் தோட்டத்தை விட்டு வெளியேறி புறநகரங்களுக்கும் பெருநகரங்களை ஒட்டிய புறம்போக்குப் பகுதிகளுக்கும் சென்று தங்களின் வாழ்க்கையைத் தொடர்ந்த மக்களின் நெருக்கடியான வாழ்க்கையும் அவர்களது அகச்சிக்கலையும் மா.சண்முகசிவா தம் சிறுகதைகளில் பதிவு செய்துள்ளார்.
சில சிறுகதைகளில் மேல்தட்டுக் குடும்பங்கள் கதையின் களமாக அமையப்பெற்றுள்ளன. கிழிசல், திரிபு, முறிவு, ஒரு கூத்தனின் வருகை ஆகிய சிறுகதைகள் அத்தகைய களத்தில் எழுதப்பட்ட சிறுகதைகள். மேல்தட்டுக்கே உரித்தான அந்தப் பகட்டு வாழ்க்கையின் மினுமினுப்பும் செல்வ ஜொலிப்பும் மட்டுமல்லாது அந்தப் பகட்டுத்தனமான நாகரீகம் கச்சிதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர மையம், தவிப்பு, ஆகிய சிறுகதைகள் இடைநிலை சமூக அந்தஸ்தில் உள்ள குடும்பங்களின் கதைக்களமாக அமைந்துள்ளன. மா.சண்முகசிவாவின் சிறுகதைகளில் வர்க்கத்தினரிடையே காணப்படும் வேறுபாட்டை அதற்கே உரிய விவரிப்புகளோடு வேறுபடுத்திக் காட்டியிருப்பது அவரது லாவகமான கதைசொல்லல் முறையைக் காட்டுகிறது. சில வர்ணனைகளிலும் கதாமாந்தர்களின் மொழிப்பயன்பாட்டிலும் அவர்கள் தோற்றங்களை விவரிப்பதிலும் வாசகனுக்கு, சூழலை எளிதில் அடையாளம் காட்டுகிறார் சண்முகசிவா.
அதையடுத்து தரிசனம் மற்றும் சுருதிபேதம் சிறுகதைகள் கோவில் மற்றும் பள்ளிக்கூடத்தைக் கதைக்களமாகக் கொண்டிருக்கின்றன. தரிசனம் சிறுகதையில் நேர்த்தியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கோவிலின் சூழல் போன்று சுருதிபேதம் சிறுகதையில் பள்ளிக்கூடச் சூழல் வெளிப்படவில்லை.
பொதுவாகவே வலுவான கதைக்களப் பின்னணியில் கதைசொல்லும் மா.சண்முகசிவாவின் படைப்புகளில் இருந்து ‘மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கன்னியம்மனும்’ மாறுபடுவதாகவே உணர்கிறேன். வாசகனுக்கு திட்டவட்டமான கதைக்களத்தை அறிமுகப்படுத்திடாத ஒரு நிலையிலேயே இக்கதை பயணிக்கிறது. கம்பெனி, வீடு, தோட்டப்புறச் சூழல் என மாறி மாறிப் பயணிக்கும் இக்கதையில் நுணுக்கமாக மனித உணர்வைப் பகடி செய்வதால் ‘களம்’ கதையின் பின்புலத்தில் நிழலாக மட்டுமே வந்துபோகிறது.
அவரது படைப்புகளை ஆராயும்போது, அசலான தோட்டப்புற வாழ்க்கையைச் சார்ந்த கதைக்களம் எந்தப் படைப்புகளிலும் இடம்பெறவில்லை. அவரது காலகட்டத்தில் எழுதிய எல்லா எழுத்தாளர்களுக்கும் தோட்டப்புற வாழ்க்கை ஆதர்சமான கதைக்களமாக இருந்த பட்சத்தில் மா.சண்முகசிவாவின் படைப்புகள் அதைவிட்டு விலகி நிற்பதை வாசகனால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். தோட்டத்துண்டாடலால் தோட்டத்தைவிட்டு வெளியேறும் செல்லாம்மாவின் கதையான ‘வீடும் விழுதுகளும்’ சிறுகதையிலும் தோட்டத்துண்டாடல் ஒரு கீற்றாக வெளிப்பட்டு அதோடு மறைந்துவிடுகிறது. மலேசியத் தமிழ் இலக்கியத்தில் முழுமையான, அசலான தோட்டப்புற வாழ்க்கையைப் பதிவு செய்யாத படைப்புகளாக அவரது படைப்புகள் இருக்கின்றன.
தோட்டப்புறத்து வாழ்க்கையைக் கதையாக்குவதற்கு டாக்டர் மா. சண்முகசிவாவிற்கு வாய்ப்பு அமையவில்லை. மலேசியாவில் பிறந்து, பின்னர் இருபது ஆண்டு காலம் கல்விக்காக அயலகத்தில் வசித்து நாடு திரும்பியவருக்கு, தோட்டப்புற வாழ்க்கை கிட்டாதது அதற்குக் காரணமாக இருக்கலாம். திரிபு மற்றும் முறிவு சிறுகதைகளில் வரும் தமிழ்நாட்டுச் சூழல் அந்நாட்டுடனான அவரது நெருக்கமான மனநிலையைக் காட்டுவதாய் உள்ளது.
மா. சண்முகசிவாவின் கதாபாத்திரங்கள்
ஒரு கதையைப் பற்றிப்பேசும் முன் “இது யாருடைய கதை?” என்ற கேள்வி மிக முக்கியமானது. ஒரு மையக்கதாபாத்திரத்தை வரையறுத்துக் கொள்வது ஒரு சிறுகதையின் வடிவ ஒருமைக்கு இன்றியமையததாகும். மையக் கதாபாத்திரத்தை நோக்கி வாசகனின் கவனம் இருக்கும்படி கதை அமையவேண்டும். அந்த மையக் கதாபாத்திரத்தின் குணச்சித்திரம் கதையில் கொடுக்கப்படும்போது கதைக்கு இரு குவிமையங்கள் அமைகின்றன.
மா.சண்முகசிவாவின் சிறுகதைகளில் மையக்கதாபாத்திரங்கள் சரியாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அது எல்லாக் கதைகளிலும் நடைபெற்றதாக அர்த்தம்கொள்ள முடியாது. உதாரணத்திற்கு ‘திரிபு’ யாருடைய கதை என்ற கேள்வியை வைக்கும்போது வாசகனால் அது திரிபுரசுந்தரியின் கதை என்று சொல்லிட முடியும். இதே கேள்வியை ‘சாமி குத்தம்’ சிறுகதையில் பொருத்திப் பார்க்கும்போது அது முனியாண்டி சாமியின் கதையா? அல்லது அரசியல்வாதியின் கதையா? என அதற்கான விடையைக் கண்டறிய வாசகன் குழப்பம் கொள்ள வேண்டியுள்ளது. இதேநிலை மற்றொரு சிறுகதையான ‘மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கன்னியம்மனும்’ சிறுகதையிலும் நிலவுகிறது. இக்கதை யாருடைய கதை? முனியாண்டியின் கதையா? அல்லது திரு.ரட்னராஜாவின் கதையா? எனும் நிலையில் இரண்டு கதாபாத்திரங்களும் சம அளவில் கதையில் ஆட்சியைப் பெற்றிருக்கின்றன. இதை, கதாபாத்திரங்களை உலாவவிட்டு அவர் கதைக்கருவிற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகவே எண்ண முடிகிறது. அது யாருடைய கதையும் இல்லை. சமூகத்தின் கதை. சமூகத்தின் கதையை சண்முகசிவா ஒரு சாட்சியாக இருந்து ஒரு ஒளிப்பதிவுக் கலைஞனாக, எந்தத் தலையீடும் செய்யாமல் பதிவு செய்துகொண்டே இருக்கிறார்.
ஒரு வாசகனால் அவரது எல்லா கதைமாந்தர்களுடனும் இலகுவாக நெருங்க முடிவதில்லை. அவரது எளிய மனிதர்களின் கதாபாத்திரங்களுடன் உண்டாகும் நெருக்கம் டாக்டர் சுந்தரம், திரு.திருமதி கனகரட்னம், டாக்டர் கிறிஸ்டபர், டாக்டர் ரவி, ஜூலி போன்ற கதாபாத்திரங்களிடத்தில் ஏற்படவில்லை. அதற்கு வாசகனான எனது பின்புலமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மா.சண்முகசிவாவின் கதாபாத்திரங்களில் பெண் கதைமாந்தர்களும் ஆண் கதைமாந்தர்களும் சமமான அளவில் படைக்கப்பட்டுள்ளனர். பதினேழு கதைகளில் எட்டு கதைகளின் மையக்கதாபாத்திரம் பெண்கள். அவரது படைப்புலகில் வரும் பெண் கதைமாந்தர்கள் கலவையான ஆளுமை கொண்டவர்களாகவே வெளிப்படுகின்றனர். ஒரு கதாபாத்திரம் வீரியமானதாக இருக்கும் பட்சத்தில் அடுத்து வரும் கதாபாத்திரம் பலவீனமானதாக அமையப்பெற்றிருக்கிறது. மா.சண்முகசிவாவின் படைப்புலகத்தில் வீரியமான பெண் கதைமாந்தர்கள் மேல்வர்க்கத்தைச் சார்ந்தவர்களாகவும் பலவீனமான பெண் கதைமாந்தர்கள் விளிம்புநிலையைச் சார்ந்தவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளனர். நவீன இலக்கியத்தின் அழகியலைக் கைக்கொண்ட அவரது புனைவில் அக்கதாபாத்திரங்கள் இயல்புத் தன்மைகளுடன் அவ்வாறுதான் வந்துபோக முடியும் என்ற உண்மை உள்வாங்கக்கூடியதுதான். உதாரணமாக, ‘கிழிசல்’ சிறுகதையில் வரும் மிஸஸ் ரெட்னம் மற்றும் அம்மணி கதாபாத்திரம் அதற்கான சான்று.
கிழிசலான உடையில் ஊக்கைக் குத்திக்கொண்டு வீட்டுவேலை செய்யும் வேலைக்காரியான அம்மணி எனும் பதிமூன்று வயது நிரம்பிய ஏழைப் பெண், தினம் தினம் அந்த வீட்டு எஜமானியான மிஸஸ் ரெட்னம் என்பவளால் சிறுமைபடுத்தப்பட்டு அவமானப்படுகிறாள். ஒரு நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள அழைப்பு வருகிறது. அதற்கு பிரத்யேக உடையில் வரும்படியும் சொல்லப்படுகிறது. அதற்கான உடையைத் தேடி அலைந்து வாங்கி வருகிறாள் மிஸஸ் ரெட்னம். உடல் பருமனால் அவள் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அந்த உடையை அணிகிறாள். அதற்கு அம்மணி உதவுகிறாள். நிகழ்ச்சியில் உடை விவகாரத்தில் மிஸஸ்.ரெட்னம் ஏமாற்றப்படுவதோடு உடை கிழிந்து பொதுவில் அவமானப்படுத்தப்படுகிறாள். திரு.ரெட்னத்திடம் நடந்ததைக்கூறி அவமானத்தால் அழுகிறாள். திருமதி.ரெட்னத்தின் மனவேதனையைக் கண்டு அம்மணியும் அழுவதாகக் கதை முடிகிறது.
இக்கதையில் தன் கணவனை அதட்டுவதோடு அடக்கி ஆளும் போக்கைக் கொண்டவள் மிஸஸ் ரெட்னம். அவளது வீட்டில் வேலை செய்யும் சிறுவயதுப் பெண்ணான அம்மணியையும் ஆங்காரத்துடன் நடத்துகிறவள். அவளது கதாபாத்திரம் திமிரான, பகட்டான கதாபாத்திரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அம்மணி மிஸஸ்.ரெட்னத்திற்குப் பயந்து அடிபணிந்து சேவகம் செய்கிறாள். அம்மணி கதாபாத்திரம் பலவீனமான, சிறுமைப்படுத்தப்பட்ட கதாபாத்திரமாக படைக்கப்பட்டுள்ளது. இரண்டுமே இக்கதையின் மையக் கதாபாத்திரங்களாக இருந்தாலும் இரண்டுமே நேரெதிர் பாத்திரங்கள். கதையின் இறுதியில் இவ்விரண்டு பாத்திரங்களுமே அழுகையுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் கமலஹாசன் நடித்த தசாவதாரம் திரைப்படம் நினைவுக்கு வராமல் இல்லை. இப்படத்தில் தலித் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார் கமல். முதலாளிகளை எதிர்க்கும் போராளியாக இருப்பார். ஆனால் கடைசியில் முதலாளியின் மகளைக் காப்பாற்ற நீரில் மூழ்கி இறப்பார். ஒடுக்கப்பட்டவனை இரக்கம் உள்ளவனாகக் காட்டுவதும் அவன் தியாகம் செய்யத்தயாராக இருப்பதாக வடிவமைப்பதையும் அன்றைய பின் நவீனத்துவ விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். ஒடுக்கப்படுபவன் தன் சமூகத்துக்காக அல்லாமல்; அவன் ஒரு போராளியாக நிலைக்காமல் மீண்டும் மீண்டும் தன்னை அடிமைப்படுத்துபவர்களுக்காக அழுவதும் சேவை செய்வதும் அடிமைக் குணத்தின் இன்னொரு பகுதி என்றே விமர்சிக்கப்பட்டது. இக்கதையை இன்னும் கூட விரிவாக்கிப் பார்க்கலாம். உண்மையில் இது மிகச்சிறந்த சிறுகதையாக உருவாக வேண்டியது. அந்தச் சிறுமியின் அவ்வழுகை அவளுக்கானதாகக் கூட இருப்பதாக வாசகன் கற்பனை செய்யலாம். காலம் முழுதும் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை அடக்கி அடக்கி அவமானத்தின் காத்திரத்தை தன் முதலாளியின் முன் உருவெடுத்துப் பார்க்கும்போது அது இத்தனை அசிங்கமானதா என அழுவதாகக் கூட வாசகனை எண்ண வைக்கலாம். ஆனால் அதற்கெதற்கும் இடம் கொடுக்காமல் கதாசிரியரே அவள் அழுகைக்கான காரணத்தைச் சொல்லிச் செல்வது வாசகனுக்கான இடைவெளி இல்லாமல் செய்கிறது. அவள் அழுகைக்கான காரணத்தைச் சொல்லும் இடத்தில்தான் அந்தக் கதை தோற்கிறது.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மற்றொரு சிறுகதை ‘முறிவு’. பணக்கார வீட்டுப்பெண்ணான ஜூலி, டாக்டர்.சுந்தரத்துடன் திருமணம் செய்கிறாள். ஒரு போலியான வாழ்க்கையை வாழும் டாக்டர் சுந்தரம் ஒரு கட்டத்தில் ஜூலியை விட்டுப் பிரிந்திட முடிவு செய்கிறான். அப்பிரிவை ஜூலியிடம் சொல்வதற்குத் திராணியற்ற கோழையாகவே இருக்கிறான். அவன் தன்னை பிரியப்போகிறான் என்பதை அறிந்து அவனிடம் கேட்கும்போது அவன் போலியாக அப்படியொன்றும் இல்லையெனவும் ஊருக்கு மட்டுமே செல்வதாக பதிலளிக்கிறான். முடிவில் ஊருக்கு செல்லும் டாக்டர் சுந்தரத்தின் கையில் கடிதம் ஒன்றைக் கொடுத்து ஜூலி வழியனுப்பி வைக்கிறாள் இனி அவன் திரும்ப வரப்போவதில்லை எனத் தெரிந்தும். மா.சண்முகசிவா தொடும் சம்பவங்கள் பலவும் நுட்பமானவையே. கோழைத்தனமும் அதனால் வெளிப்படும் போலியான மனதையும் விரும்பாத ஒரு மேல்தட்டுப் பெண்ணின் நியாயம் கதை முழுவதுமே வியாபித்திருப்பதால் இறுதியில் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் வாசகனுக்குத் தேவையே இல்லை. கதாபாத்திரத்தின் மூலம் ஆசிரியர் தன் கருத்தை ஏற்றி வாசகனுக்குச் சொல்லும் தகவல் அதன் கலைத்தன்மையை மந்தமாக்குகிறது.
ஜூலி, சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவள். பிற ஆண் நண்பர்களுடன் சகஜமாக வெளியே செல்கிறாள். மது அருந்துகிறாள். கோபத்தில் கணவனை அதட்டுகிறாள், அடிக்கிறாள். பிரிவுக்கு முன்னதாக ஜூலி டாக்டர்.சுந்தரத்திடம் சண்டையிடுகிறாள், அவனைக் கட்டிக்கொண்டு அழுகிறாள். இவ்வாறு அவளது பாத்திர வார்ப்பை மிகச்சிறப்பாகவே செய்துள்ளார் ஆசிரியர். டாக்டர் சுந்தரத்தின் கையில் ஜூலி கடிதம் கொடுத்தனுப்பி பிரிவுக்கு மறைமுக ஆதரவு தருவதெல்லாம் அற்புதமான தருணங்கள். ஆனால், வாசகன் அவளது நியாயத்தை கடிதம் வழி அறியவேண்டும் என ஆசிரியர் விரும்புவதுதான் மிகை உணர்ச்சியாக மாறுகிறது.
விளிம்புநிலைக் கதைமாந்தர்களாக பார்வதி, செல்லம்மாள், கோவிந்தமாள் போன்ற கதாபாத்திரங்கள் வருகிறார்கள். ‘உயிர்ப்பு’ எனும் சிறுகதையில் கணவனை இழந்த பார்வதி தொடர்ந்துவாழ விருப்பம் காட்டாதவளாக இருக்கிறாள். அவளுக்கு நாகலிங்கம் (நாகு) எனும் நான்கு வயது மகனும் இருக்கிறான். அவளுக்கும் அவளது மகனுக்கும் ஆதரவாக தாத்தா மட்டுமே இருக்கிறார். தன் மகனுடைய வயிற்று வலி மேற்சிகிச்சைக்காக மலாக்கா கங்கைச்சௌ தோட்டத்திலிருந்து கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்குச் செல்கிறாள். மருத்துவமனையில் குழந்தைகளுக்கான வார்டைத் தேடித் தவிக்கும் அவளுக்கு ஆயம்மா ஒருத்தி உதவுகிறாள். நாகுவை வார்டில் சேர்க்கவேண்டிய சூழலில் மீண்டும் ஆயம்மாவைத் தேடிச்செல்ல வழி தவறிவிடுகிறாள். முப்பது நிமிடங்களாக மகனையும் தாத்தாவையும் பிரிந்து ஆயம்மாவும் இன்றி தத்தளிக்கிறாள். நாகுவும் அம்மாவைக் காணாது திமிறித் திமிறி அழுகிறான். ஒருவழியாக ஆயம்மாவை கண்டடைந்து மீண்டும் தாத்தா, நாகுவிடம் திரும்புகிறாள். அந்த முப்பது நிமிட தவிப்பும் மகனின் ஏக்கமும் அவள் இனி அவனுக்காகவாவது வாழவேண்டும் என்ற எண்ணம் உயிர்ப்புப் பெறுவதாக கதை முடிகிறது.
இக்கதையில் வரும் பார்வதி, கதை முழுவதும் வாழ்க்கையை வாழ விரும்பாதவளாக வாழ்க்கை என்பதை வேறு வழியின்றி வாழ்ந்து வருவதாகக் காட்டப்படுகிறாள். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சாவு மட்டுமே இந்த வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவிக்குமென நம்புகிறாள். கதையின் தொடக்கம் முதற்கொண்டே பார்வதி ஒரு பலவீனமான கதாபாத்திரமாகவே வருகிறாள். கதையின் முடிவில் அவளிடம் பிறக்கும் அந்த நம்பிக்கை மட்டுமே ஒரு திருப்பமாக அமைகிறது.
உளவியல் நிபுணரான சண்முகசிவாவிடம் இருந்து இவ்வாறான சிறுகதைகள் வருவது உற்சாகத்துக்குரியது. மனம் எவ்வாறான முரண் இயக்கம் கொண்டது என அவர் புனைவுமூலம் நுட்பமாகச் சித்தரித்துள்ளார். காரணம் இன்றி மனம் அடையும் விரக்தியும் உற்சாகமும் எளிய அறிவைக்கொண்டு அளவிட முடியாதது. சண்முகசிவா காட்சிகள் மூலம் அந்த மனதின் சிடுக்குகளில் புகுந்து செல்கிறார்.
அதைப்போல மற்றொரு கதையான ‘வீடும் விழுதுகளும்’ எனும் சிறுகதையில் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் கணவனைஇழந்த செல்லம்மாள் தன் பிள்ளைகளுடன், பெருநகரை ஒட்டிய புறம்போக்குப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தோட்டத்தைவிட்டு ஓடிப்போன தோழி கோவிந்தம்மாளைப் பார்க்கச் செல்கிறாள். கோவிந்தம்மாள் பாலியல் தொழில் செய்து பிழைப்பு நடத்துகிறாள். அவளது உதவியுடன் கையிலிருந்த கடைசி பணத்தைப் போட்டு வங்காளிக் கம்பத்தில் வீட்டை வாடகைக்கு எடுக்கிறாள் செல்லம்மாள். புது வீட்டுக்குப் பிள்ளைகளுடன் செல்லும்போது புறம்போக்கு நிலப்பகுதியிலிருக்கும் வங்காளி கம்பத்து வீடுகள் உடைக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் இழந்து நிற்கும் செல்லம்மாள் பிள்ளைகளுக்காக வாழ்ந்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் வேறுவழியின்றி கோவிந்தம்மாளிடம் செல்கிறாள். மனிதன் இறுதியாக வாழ்ந்தாக வேண்டியுள்ளது. வேறு எதையும்விட அவனுக்குத் தானும் தன்னைச் சுற்றியுள்ளவர்களும் முக்கியம். இன்னும் அணுகிப்பார்த்தால் தான் மட்டுமே முக்கியம். அதற்காக அவன் எந்த நிலைப்பாடும் எடுப்பான். கதையில் கோவிந்தம்மாள் அதைத்தான் செய்கிறாள். விருப்பு – வெறுப்பெல்லாம் வாழ்க்கை சாவகாசமாக இருக்கும் வரைதான். சண்முகசிவாவின் கதைகள் தனித்து இருக்க இதுபோன்ற மனித மனங்களின் உளவியலை அறிந்திருப்பதும் ஒரு காரணமோ எனத் தோன்றுகிறது.
மற்றுமொரு சிறுகதையான ‘அவள்–நான்–அவர்கள்’ கதையில் துர்க்காபாய் எனும் ஆயம்மா கதாபாத்திரம் வருகிறது. ஊடே மருத்துவரின் கதாபாத்திரமும் முக்கியத்துவம் பெற்றே இருக்கிறது. மருத்துவர்தான் கதைசொல்லி. கதைசொல்லி தன்னை தவறுகள் நிறைந்தவனாகக் காட்டி துர்க்காபாயின் மகத்துவத்தைக் காட்டும் எளிய கதை. பாலியல் வன்புணர்ச்சியினால் கர்ப்பமுற்ற தினேஸ்வரி எனும் பன்னிரண்டு வயதுச் சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அதை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தங்கள் சுயலாபங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள மருத்துவமனையின் குழந்தைகள் வார்டின் ஆயம்மாவாக இருக்கும் துர்க்காபாய் அச்சிறுமியின் மீது அக்கறை கொண்டு அவளைக் காப்பாற்றுவதாகக் கதை முடிகிறது. இக்கதையில் துர்க்காபாய் எனும் ஆயம்மா கதாபாத்திரம் வீரியமாகவும், அக்கறை கொண்டதாகவும், துணிந்து செயல்படுவதாகவும் சித்தரிக்கப்படுகிறது. சண்முகசிவா சிறுகதைகளின் பலவீனம் அவரது முடிவில் இருக்கிறது. ஒரு நவீனச் சிறுகதையின் அத்தனை அங்கங்களையும் ஒருங்கே பெற்றுள்ள அவர் கதைகள் முடிவில் மட்டும் வாசகனுக்குச் சொல்லவருவதை தெளிவாக விளக்குவதில் ஈடுபாடு காட்டுகிறார்.
பார்வதி, செல்லம்மாள், கோவிந்தமாள் போன்ற மாந்தர்கள் வாயிலாக வாழ்க்கை என்பது இப்படித்தான், இதில் வேறுவழியில்லை. கஷ்டமோ நஷ்டமோ இந்த வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும் எனும் சிந்தனை. இக்கதைகளின் பாத்திரங்கள் எங்குமே புரட்சி பேசவில்லை; பிரச்சாரம் செய்யவில்லை; மாற்றுக்கருத்தும் போதிக்கவில்லை. பணக்காரப் பெண் கதைமாந்தர்களாகட்டும் விளிம்புநிலை பெண் கதைமாந்தர்களாகட்டும் அக்கதாபாத்திரங்களின் தன்மையும் அதன் போக்கும் யதார்த்த நிலையிலேயே கதை முழுக்க வியாபித்திருக்கின்றன.
மா.சண்முகசிவாவின் ஆண் கதைமாந்தர்கள் பெண் கதைமாந்தர்களுக்கு நேரெதிர் நிலையில் படைக்கப்பட்டுள்ளனர். வீரியமான ஆண் கதைமாந்தர்கள் விளிம்புநிலை மனிதர்களைச் சார்ந்தவர்களாகவும் பலவீனமான ஆண் கதைமாந்தர்கள் மேல்வர்க்கத்தைச் சார்ந்தவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளனர். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதாகக் காட்டப்படும் திரு.கனகரட்னம், டாக்டர்.சுந்தரம், டாக்டர்.கிறிஸ்டபர், திரு.ரட்னராஜா போன்றவர்கள் தனிமனித அளவில் மிகவும் பலவீனமானவர்களாகவும், கோழைகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் ‘கலகக்காரன்’ சிறுகதையில் சமூகத்தில் குண்டராகக் காட்டப்படும் சூரியா அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களுக்குப் போராடும் போராட்டவாதியாக இருக்கிறான். ‘தோழமை’ சிறுகதையில் குண்டராகக் காட்டப்படும் ரங்கா சமூகத்தில் மரியாதை பெற்றவனாக வருகிறான். இது வர்க்க ரீதியாகவும் பாலின ரீதியாகவும் அமையப்பெற்ற புனைவுலகப் பாத்திரங்களின் முரண்களைக் காட்டுகின்றது.
அதுமட்டுமில்லாது, கதாபாத்திரங்களையும் கடந்து அவற்றுக்கான பெயர்களும் வர்க்கத்தின் அடிப்படையிலான பெயர்களாகவே சூட்டப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, மேல்வர்க்கக் கதைமாந்தர்களின் பெயர் திரு.திருமதி கனகரட்னம், டாக்டர் சுந்தரம், டாக்டர்.கிறிஸ்டபர், ஜூலி, திரு.ரட்னராஜா, டாக்டர்.சிவா, திரிபுரசுந்தரி, சிவராமகிருஷ்ணன் போன்றவற்றைக் குறிப்பிடலாம். அதுபோல விளிம்புநிலை மற்றும் உதிரி மனிதர்களின் கதைமாந்தர்கள் பெயராக சூர்யா, ரங்கா, செல்வம், மணிராசு, முத்துசாமி தம்பிரான், செல்லம்மாள், பார்வதி, கோவிந்தம்மாள், நல்லசாமி, குணசேகரன் போன்றவற்றை குறிப்பிடலாம்.
மா. சண்முகசிவாவின் கதைசொல்லல் மொழி
மா. சண்முகசிவாவின் சிறுகதைகளின் மொழி எல்லா கதைக்களத்துக்கும் பொருந்தும் மொழியாக தன்னை வசமாக்கிக் கொண்டுள்ளது. வாசகன் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் உள்வாங்கிக் கொள்ள அதன் மொழியும் ஒரு துணையாக அமைகிறது. மேல்தட்டு மொழியாகட்டும், பேச்சுவழக்கு மொழியாகட்டும், கதாபாத்திரத்திற்கு உரித்தான வட்டார வழக்கு மொழியாகட்டும், அதிகாரத் தோரணையிலான மொழியாகட்டும் எல்லாமே அவரது படைப்பில் அசாத்தியமாகவே வெளிப்பட்டுள்ளது.
மா.சண்முகசிவாவின் கதைசொல்லல் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருப்பதை அறிய முடிகின்றது. அவரது புனைவுகள் பெரும்பாலும் மூன்றாம் நிலையிலிருந்தே சொல்லப்படுகின்றன. ஓரிரு கதைகள் மட்டுமே தன்னிலையிலிருந்து சொல்லப்பட்ட கதைகள். அவை திரிபு, ஒரு கூத்தனின் வருகை, அவள்–நான்–அவர்கள் ஆகியவையாகும். தன்னிலையிலிருந்து சொல்லப்படும் கதைகள் வாசகனை தனக்குள் இழுத்துச்செல்கிறது. மா. சண்முகசிவாவின் தேர்ந்தெடுத்த கதைசொல்லல் முறை சலிப்பூட்டாதவையாக இருந்தாலும் சில இடங்களில் தொய்வடைகின்றன.
அவள்-நான்-அவர்கள் கதையின் துவக்கம் நன்றாக அமைந்திருந்தாலும் கதையின் மையப்பகுதியில் தொய்வடைந்து பின்னர் அது வெறும் நாளிதழ் செய்தியாக மாறிவிடுவதை உணர முடிகிறது. ‘கலகக்காரன்’ சிறுகதையிலும் இதுமாதிரியான தொய்வு ஏற்படுகின்றது. சூரியாவின் குரல் சில இடங்களின் மா.சண்முகசிவாவின் குரலாக வெளிப்படுவதாகவே உணர்கிறேன். அதுவும் பிரச்சார தொனியிலான குரலாக அமைகிறது.
மா.சண்முகசிவாவின் சிறுகதைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று ஆரம்பகாலச் சிறுகதைகள். அவை பின்னாளில் ‘வீடும் விழுதுகளும்’ தொகுப்பாக வெளியீடு கண்டது. மற்றொன்று தொகுப்புக்குப் பின் நாளிதழ்களிலும் இணையத்திலும் பிரசுரமான சிறுகதைகள். ‘வீடும் விழுதுகள்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் உளவியல் சார்ந்த விசயங்களையே அதிகமாக முன் நிறுத்துகின்றன. அவை மிக மென்மையான அழகியல் தன்மையைக் கொண்ட ‘Melodrama’ இரசனைப்போக்கு வகையிலான கதைகள். அவை மா.சண்முகசிவாவுக்குள்ளிருந்து வெளிப்படும் வண்ணதாசன், வண்ணநிலவனின் தாக்கம் என்பதை வாசகனால் உணர முடியும். வல்லினம் இணைய இதழ் உள்ளிட்ட ஊடகங்களில் பிரசுரமான கதைகள் மிக நேர்த்தியான சிறுகதைகள். அவை அதிகாரத்தை நோக்கிப் பகடி செய்கின்றன. இவை இரண்டுக்குமான கால இடைவெளியை கதை சொல்லல் முறையிலேயே வாசகனால் அறிந்துகொள்ள முடியும். ஆரம்பகால சிறுகதைகளைவிட பின்நாளில் பிரசுரமான சிறுகதைகளின் தரமும் கதை சொல்லல் முறையும் மேம்பட்டிருப்பதைக் காண முடிகிறது. ‘வீடும் விழுதுகளும்’ சிறுகதைத் தொகுப்பில் வெளிப்படாத நகைச்சுவை உணர்வும் கதையின் போக்கும் பின்னாளில் பிரசுரமான படைப்பில் வெளிப்படுவதை உணரமுடியும்.
அதற்கு உதாரணமாக ‘சாமி குத்தம்’, ‘மெர்சிடிஸ்பென்சும் முண்டக்கன்னியம்மனும்’ சிறுகதைகளைச் சொல்லலாம். இக்கதைகளில் நகைச்சுவை அசாத்தியமாக வெளிப்பட்டிருக்கும். நவீனச் சிறுகதைகளான இவை வாசகனுக்கு முழுக்க முழுக்க நகைச்சுவையாகவே சொல்லப்பட்டிருக்கிறது.
மா.சண்முகசிவாவின் சிறுகதை அமைப்பு
நவீன இலக்கிய வடிவங்கள் வாசகப் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் உருவானவை. நவீன படைப்புகளில் வாசகன் படைப்பாளிக்கு இணையாகவே கற்பனையை செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சிறுகதையில் வாசகனை கதைக்குள் இழுக்கும் ஆசிரியர், வாசகன் கதை முடிவைப்பற்றி என்ன நினைக்கிறான் என்று ஊகித்து அதற்கு நேரெதிராக கதையை முடித்து வாசகனைத் திகைக்க வைக்கிறார். இது ஓர் உத்திமுறை. ஆண்டன் செகாவ் போன்ற படைப்பாளிகள் இவ்வாறு சிறுகதையைக் கையாண்டு அதை இலக்கியத்தரமான வடிவமாக மாற்றினர். பின்னர் இது பிரபல உத்தியானது. தமிழில் இந்த வகை எழுத்துமுறை அறிமுகம் கண்டது. இது வெற்றியடைந்த வடிவமாக இருந்தாலும் எல்லா புனைவெழுத்தும் இந்தக் கட்டமைப்புக்குள் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. புதுமைப்பித்தனின் மிகப்பிரபலமான ‘செல்லம்மா’ உட்பட பல பிரபலமான சிறுகதைகள் முடிவை முதலிலேயே சொல்லி உணர்வு ரீதியாகக் கதையை நகர்த்திச்செல்பவை.
மா.சண்முகசிவாவின் சிறுகதைகளில் பெரும்பான்மையான கதைகள்போல திருப்பங்களை நோக்கிச் செல்பவைதான். ஆனால், அது எல்லாக் கதைகளிலும் முழுமையாக எடுபடவில்லை. ‘நடப்பு’ கதையின் முடிவில் ஏற்படும் திருப்பத்தை முன்னதாகவே வாசகனால் கணிக்க முடிகிறது. ஒரு கதையின் முடிவை அல்லது அதன் திருப்பத்தை இடையிலேயே கணிக்க முடிந்துவிட்டால் அக்கதை தோல்வியடைந்து விடுகிறது. ‘உயிர்ப்பு’ சிறுகதையும் அதே நிலையைத்தான் அடைகிறது. கதையின் தொடக்கம் முதற்கொண்டே எல்லா விசயங்களும் அக்கதையின் நோக்கத்தைக் குறித்தே அமைந்திருப்பதால் அதன் முடிவில் வாசகனுக்கு எவ்விதத் திகைப்பும் நிகழ்ந்திட வாய்ப்பில்லை. கதையில் தொடக்கத்திலிருந்தே இடம்பெற்றுள்ள விசயங்களை வைத்து வாசகனால் அக்கதையின் முடிவை எளிதில் கணித்துவிட முடிகிறது.
மாறாக ‘சாமி குத்தம்’, ‘மெர்சிடிஸ்பென்சும் முண்டக்கன்னியம்மனும்’, ‘தவிப்பு’, ‘ஒரு கூத்தனின் வருகை’ போன்ற சிறுகதைகள் வாசகனின் முன்முடிவை புறந்தள்ளி அதற்கான முடிவை வைக்கும்போது வாசகன் அடையும் திகைப்பில் மா.சண்முகசிவா வெற்றிபெற்றுவிடுகிறார்.
சிறுகதையின் இடைவெளி
நவீன இலக்கியப்படைப்புகளில் ‘வாசக இடைவெளி’ முக்கியக் கூறாகக் கருதப்படுகிறது. ஒரு படைப்பு வாசகன் தன் கற்பனையின் மூலம் நிரப்பிக் கொள்வதற்கு விடும் இடைவெளிதான் அது. மாறாக சொல்லவந்ததை தெளிவாகச் சொல்லிவிட்டுப் போனால் அது சிறுகதையாகாது.
மா.சண்முகசிவாவின் சிறுகதைகளில் வாசகனுக்குப் போதுமான ‘வாசக இடைவெளி’ இருந்தும் அவர் அந்த இடைவெளியில் மேற்கொண்டு விவரித்து வாசகனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளார். சுருதிபேதம் சிறுகதையில் “இவன் மகாதேவனைக் காட்டிலும் இன்னும் குழப்பத்தோடும் கலக்கத்தோடும் வெளியேறினான்” என்ற இடத்திலேயே கதையை முடித்திருத்தால் அது வாசகனின் கற்பனையைத் தூண்டும்படியான முடிவாக இருந்திருக்கும். எதிர்பார்த்ததைச் சட்டென்று கச்சிதமாக அந்த வரி வெளிப்படுத்துவதனால் வாசகன் அக்கதையை இரசித்திருக்க முடியும். வாசகனுக்குக் கிடைத்திருக்க வேண்டிய ‘வாசக இடைவெளி’யும் நிரம்பியிருக்கும். அதுபோல மற்ற சிறுகதைகளான ‘திரைகடலோடி’ மற்றும் ‘கிழிசல்’ கதைகளின் முடிவும் நிறுத்தப்படவேண்டிய நுட்பமான இடத்திலிருந்து நீண்டு செல்கின்றன. கதையைக் கடைசிவரை இழுத்துச்சென்று முடித்திருப்பது ஆசிரியரின் தலையீட்டைக் காட்டுகின்றது. வாசகனைப் பொறுத்தவரை ஏமாற்றமே மிஞ்சுகிறது.
மா. சண்முகசிவாவின் புனைவு உலகின் மையம்
மா.சண்முகசிவாவின் புனைவுகளின் மையம் உளவியல் சார்ந்தவை. அவர் தனது கதைகளில் மனிதர்களின் உளவியல் சார்ந்த சிக்கல்களை முதன்மைப்படுத்திக் கதையாக்குகிறார். அவருடைய கதைகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதில் காணப்படும் ஒருமையாக மனிதர்களின் உளவியல் சார்ந்த சிக்கல்கள் முன்னிலை வகிக்கின்றன. சுருதிபேதம், திரைகடலோடி, கிழிசல், தோழமை, திரிபு, முறிவு, ஒரு கூத்தனின் வருகை, மையம், உயிர்ப்பு, தவிப்பு, நடப்பு, மெர்சிடிஸ்பென்சும் முண்டக்கன்னியம்மனும், தரிசனம், வீடும் விழுதுகளும், போன்ற சிறுகதைகள் மனிதர்களின் உளவியல் சார்ந்த சிக்கல்களைப் பேசும் கதைகளாக அமைகின்றன. அதையடுத்து அரசியல்வாதிகளை அல்லது அதிகாரவர்க்கத்தையும் அவர்களது அரசியல் கொள்கைகளையும் விமர்சிக்கும் போக்கு அவரது கதைகளில் காணப்படும் மற்றொரு மையமாகும். சாமி குத்தம், அவள்–நான்–அவர்கள், கலகக்காரன் போன்றவை அத்தகைய அதிகாரவர்க்கத்தை விமர்சிக்கும் கதைகளாக மிளிர்கின்றன.
சிறந்த நவீன சிறுகதைகள்
மா.சண்முகசிவாவின் சிறுகதைகளில் ஓரிரு சிறுகதைகள் சிறப்பான கதைகளாக திகழ்கின்றன. அக்கதைகள் அவற்றின் தரத்தில் பிற கதைகளைக் காட்டிலும் மேம்பட்டிருக்கின்றன. ‘சாமி குத்தம்’ எனும் சிறுகதையை நவீன சிறுகதையாகச் சொல்லலாம். ஆதவன் தீட்சண்யா எழுதிய “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” எனும் சிறுகதை ஒட்டுமொத்த இந்திய அரசியலில் தேர்தல் முறையைக் குறித்துப் பகடி செய்யும் சிறுகதை. கிட்டத்தட்ட அதற்கு ஏற்றாற்போல ஒரு சிறுகதை ‘சாமி குத்தம்’. மலேசிய நாட்டில் கோவில் உடைபடுவதால் ஏற்படும் சிக்கலில் உள்ள அடிமட்ட அரசியல் முதல் மேல்மட்ட அரசியல் நிலை வரை சரமாரியாக விமர்சித்துப் பகடி செய்யும் சிறுகதை. தீவிரமான எழுத்து நடையில்லாமல் பேச்சு வழக்கில் நகைச்சுவையாகவே விமர்சித்துச் செல்வது இக்கதையின் சிறப்பம்சம். ஒரு கோவில் எதேச்சையாக உடைந்ததா இல்லை உடைக்கப்பட்டதா எனத் துளியும் அறியாது பத்திரிக்கை நிருபர் முதல் ஆளுங்கட்சி எதிர்கட்சி அரசியல்வாதிகள் வரை செய்யும் அரசியல், இக்கதையில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சமகால பிரச்சனையைப் பேசும் கதையாக ‘சாமி குத்தம்’ திகழ்கிறது. இக்கதை எங்குமே கதையாக சொல்லப்படவில்லை. நவீனத்துவக் கலைமரபின்படி வெறும்காட்சி அல்லது நிகழ்ச்சிகளின் கோவையாக மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.
கதையில் எங்குமே கருத்துகள் சொல்லப்படவில்லை. காட்சிகளிலும் கருத்துச் சார்ந்த சங்கதிகள் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், வாசகன் அக்கதையின் மையச் சரடான அரசியலையும் அதுசார்ந்த விழிப்புணர்வையும் கண்டடைகிறான். இக்கதையின் மொழியும் மிக இயல்பாகவும் யதார்த்தமாகவும் அமையப் பெற்றிருக்கிறது.
அடுத்ததாக ‘மெர்சிடிஸ்பென்சும் முண்டக்கன்னியம்மனும்’ எனும் சிறுகதை. தலைப்பு நவீன சிறுகதையின் கூறுகளில் ஒன்றாக இருக்கிறது. தலைப்பு இக்கதை மையத்தின் படிமமாக இருக்கிறது. இக்கதையும் சமூக அதிகாரத்தை நோக்கிக் கேலி செய்யும் கதையாக அமைகிறது. அதனூடே இச்சமூகத்தில் ஊறிக்கிடக்கும் மூடப்பழக்கவழக்கங்களையும் அது விமர்சிக்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஓர் அதிகாரம் மற்றோர் அதிகாரத்திற்குப் பயந்து இருப்பதையும், அந்தப் பயத்தை வைத்து ஓர் அதிகாரம் மற்றோர் அதிகாரத்தை எப்படிப் பணிய வைக்கிறது என்பதையும் இக்கதை நகைச்சுவையாக வாசகனுக்குக் காட்டுகிறது. மற்ற கதைகளைக் காட்டிலும் இக்கதையில் மா.சண்முகசிவாவின் எழுத்தும் அதன் தரமும் சிறப்பான நிலையை அடைந்திருக்கிறது. இக்கதையும் நவீனத்துவக் கலைமரபின்படி வெறும் சம்பவங்களின் கோர்வையாக மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது
முனியாண்டி கம்பெனி வண்டியை சுயதேவைக்குப் பயன்படுத்தி விடுகிறான். அதுகுறித்த புகார் மேனேஜரிடம் பற்ற வைக்கப்படுகிறது. மேனேஜர் ரட்னராஜா சாமி பைத்தியம் என்பதை அறிந்து நெற்றி நிறைய விபூதி குங்குமம் பூசிக்கொண்டு ரட்னராஜா வீட்டுக்குச் செல்கிறான் முனியாண்டி. வேலையை விட்டுத் தூக்கிவிட வேண்டாமென்று ரட்னராஜா காலில் விழுந்து அவன் கெஞ்சும்போது அவனுடைய நெற்றிக் குங்குமம் ரட்னராஜா காலில் பட்டுவிடுகிறது. பில்லி சூனியத்திற்குப் பயப்படும் ரட்னராஜாவுக்கு இதில் எதாவது சூனியம் இருக்குமோ என்ற திகில் ஒட்டிக்கொள்ள அது முண்டக்கன்னியம்மனின் கோவில் குங்குமம் எனச் சொல்கிறான் முனியாண்டி. ஏற்கனவே வேலையிடத்தில் ஊசி வைத்த எலுமிச்சையை மிதித்துவிடும் ரட்னராஜா யாரோ தனக்குச் சூனியம் வைத்துவிட்டதாக பயம் கொள்கிறான். முனியாண்டியின் துணையுடன் முண்டக்கன்னியம்மன் கோவிலுக்குச் செல்லும் ரட்னராஜா அங்குள்ள பூசாரியிடம், தனக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டதாகவும் அதை எடுப்பதற்கு அருள் வர வேண்டி நிற்கிறான். பூசாரிக்கு வர வேண்டிய அருள் இடம் மாறி முனியாண்டிக்கு வந்துவிட முண்டக்கன்னியம்மனே வந்துவிட்டதாக எண்ணி முனியாண்டியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறான். அருள் வந்திறங்கிய முனியாண்டி பின் இருக்கையில் குறட்டைவிட்டுத் தூங்க ரட்னராஜா பென்ஸ் காரை ஓட்டிச் செல்வதாகக் கதை முடிகிறது. இக்கதையில் இரண்டு அதிகாரங்கள் காட்டப்படுகின்றன. ஒன்று முனியாண்டி பயப்படுகின்ற ரட்னராஜா எனும் மேனேஜர் அதிகாரம். மற்றொன்று ரட்னராஜா பயப்படுகின்ற முண்டக்கன்னியம்மன் (கடவுள்) எனும் அதிகாரம். இரண்டு இடங்களில் அதிகாரம் தன் மேல் அதிகாரத்திடம் மண்டியிடுகிறது. ஒன்று முனியாண்டி ரட்னராஜாவின் காலில் விழுகிறான். மற்றொன்று ரட்னராஜா முனியாண்டி (முண்டக்கன்னியம்மன்) காலில் விழுகிறான். இக்கதையின் சூட்சுமம் அதன் வாசக இடைவெளியில் மறைந்திருக்கிறது. அதைக் கண்டடையும்போது இச்சிறுகதைக்குள் மற்றொரு கதை மறைந்திருப்பதை வாசகனால் அறிய முடியும். அதற்கான இரண்டு குறிப்புகள். ஒன்று, பூசாரி ஏன் முனியாண்டியைப் பார்த்து நையாண்டி சிரிப்புச் சிரிக்கவேண்டும்? இரண்டு, பூசாரிக்கு வர வேண்டிய அருள் முனியாண்டிக்கு வந்தது எப்படி? இவைதான் வாசகன் தன் கற்பனையாலும் பங்கேற்பாலும் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய இடைவெளி.
மலேசியாவில் 70-களில் நவீன இலக்கியம் குறித்தப் பேச்சுகள் எழுந்தாலும் அது ஜெயகாந்தனின் முற்போக்கு அழகியலையே மையமிட்டிருந்தது. வடிவம், கலையமைதி, குறிப்பால் உணர்த்தும் தன்மை ஆகியவை குறைந்திருந்த மலேசியச் சிறுகதை உலகில் மா.சண்முகசிவாவின் புனைவுகள் புதிய தொடக்கங்களாக இருந்தன எனக்கூறலாம். துல்லியமான வர்ணனைகள், பிரச்சாரமற்ற தொனி ஆகியவற்றால் அவரது கதைகள் பல தனித்து நிற்கின்றன. பல ஆண்டுகால தொடர் எழுத்துப்பணியால் இன்று அவரது சிறுகதைகளின் தன்மை முற்றிலும் வேறு தளத்தில் பயணிப்பதைக் காணமுடிகிறது. தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களைக் கண்ணீருடனும் கோபத்துடனும் பார்த்த அவர் இப்போது அவற்றை அங்கதமாக்க முனைந்துள்ளார். அங்கதம் தேர்ந்த கதைசொல்லிகளுக்கு ஏற்ற வடிவம். தமிழில் நாஞ்சில் நாடனை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். எப்படிப் பார்த்தாலும் சண்முகசிவா மலேசிய இலக்கியத்தில் நவீனத்துவ அழகியலை அறிமுகப்படுத்திய முன்னோடி எனச்சொல்வது சாலப்பொருந்தும்.
1 comment for “டாக்டர் மா.சண்முகசிவா சிறுகதைகள் : நவீன அழகியலின் முகம்”