மலேசிய நவீனத் தமிழ் கலை இலக்கியப் படைப்புலகம் கவிதை சிறுகதை நாவல், நாடகம், கட்டுரைகள் போன்ற பல்வேறு வடிவங்களால் நிறைந்தது. ஆயினும் சிறுகதை வடிவமே இங்கே அழுத்தமான இலக்கிய நகர்ச்சியைக் காட்டுகிறது என்று துணிந்து கூறலாம். புதுக்கவிதை பலருக்கும் இலக்கியத் தூண்டல்களை உருவாக்கித் தந்தாலும் அது சிறுபிள்ளை விளையாட்டுப்போல் மெத்தனமாகப் படைக்கப்படுவதாலும் பலகீனமான சொல்லாட்சி, கருத்து வெளிப்பாடு போன்றவற்றாலும் கடந்த முப்பது ஆண்டுகளில் சொல்லிக் கொள்ளும்படி வளரவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் ‘வானம்பாடி’ வார இதழில் வெளிவந்த தொடக்ககாலக் கவிதைகளின் தரத்திலேயே இன்றைய இளைய கவிகள் பலரும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஏதோ ஒருவகையில் தன்னை இலக்கிய வெளியில் இணைத்துக்கொள்ளக் கிடைக்கும் எளிய அனுமதிச்சீட்டைப்போல மலேசியாவில் புதுக்கவிதை மாறிவிட்டது.
மேலும் புதுக்கவிதைத் துறையின் நீட்சியாக நவீன கவிதைகள் இலக்கிய உலகில் வளர்ந்த பின்னரும் மலேசியக் கவிஞர்களில் பலரும் நவீன கவிதைக்கான பயிற்சி இன்றி இருப்பது கவிதைத்துறையின் ஆளுமை குன்றிய நிலையையே காட்டுகிறது. அடுத்து, நாவல் போன்ற அகண்ட இலக்கிய முயற்சிகள் மலேசியாவில் முன்னெடுக்கப்படுவது அரிதாகி வருகிறது. இந்நிலையில் மலேசியப் படைப்புலகை ஆராயவும் ஒரு படைப்பாளியின் இலக்கிய ஆளுமையை அளவிடவும் சிறுகதைகள் தக்கசான்றுகளாக அமைகின்றன.
மலேசியச் சிறுகதைளின் வரலாறு அரை நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டாலும் அதன் நகர்ச்சி மொத்தமாகத் தேங்கிவிடாமலும் தீவிரப் பாய்ச்சல் இல்லாமலும் நிதானப் போக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் உள்ளடக்கம், செறிவு, கோட்பாட்டு இருப்புகள் போன்ற இலக்கிய வரையறைகளுக்கு அப்பாற்பட்டு பொதுவான ‘கதை சொல்லும் கலை’ என்னும் செயல்பாட்டுக்கு மலேசிய இலக்கியத்திற்குத் துணை நிற்பவை சிறுகதைகளே. இலக்கிய அரங்குகளில் இலக்கிய ஆர்வலர்களால் அதிகம் விவாதிக்கப்படுவதும் சிறுகதைகள்தாம்.
மலேசியச் சிறுகதைகள் பொதுவாக இரண்டு பெரும் திட்டங்களை உள்ளடக்கியவை என்று கூறலாம். அதிலும் மூத்த படைப்பாளிகளின் படைப்பு நோக்கம் மிக இலகுவானது. ஒன்று கதைசொல்லியாகச் செயல்படுவது. அதாவது வாசகனை வசப்படுத்தும் கதை ஒன்றை சுவையாகக் கூறுவது. அடுத்து, சமுதாயத் தொடர்புடைய ஒரு கருத்தை வெளிப்படையாகவோ (பிரச்சாரமாகவோ) நாசூக்காகவோ சொல்லுவது. இவ்விரு பெரும் நோக்கங்களுக்கு நடுவில் கட்டியமைக்கப்படும் ‘கதை’ என்பது படைப்பாளியின் இலக்கிய ஆளுமைக்கு ஏற்ப இலக்கியத் தகுதியைப் பெற்றதாகவோ அல்லது வெறும் பிரச்சார முன்னெடுப்பாகவோ அமைந்துவிடுவதைக் காணமுடிகிறது. ஆயினும் இலக்கியக் கூறுகளையும் மெல்லுணர்வுகளையும் தொட்டுப்பார்க்கும் எழுத்துகளைப் படைக்கவல்ல தமிழ் இலக்கியப் படைப்பாளிகளும் மலேசியாவில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய மூத்த இலக்கியவாதிகளின் எழுத்தின் தேவைகளும் தேடல்களும் அடிப்படை மொழி உணர்வு சார்ந்ததாகவும் சமூக விழிப்புணர்வு சார்ந்ததாகவும் இருந்துள்ளது. அவர்களின் அடிப்படை இலக்கிய ஆளுமையாக, லட்சியவாதக் கதை மாந்தர்களின் உருவாக்கமும் அவர்களின் வழி சொல்லப்படும் படிப்பினைச் செய்திகளும் இருப்பது இயல்பு. அக்கால மலேசியத் தமிழர்களின் அரசியல், சமூகச் சூழல்களையும் தோட்டப்புறச் சிக்கல்களையும் மையமாக வைத்து எழுதப்பட்ட புனைவுகளே இங்கு நல்ல சிறுகதைகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அழகியலோடு மொழி ஆளுமையும் முக்கியமாகக் கருதப்பட்டதால் பிரச்சார பாணி கூடி இருப்பது தவிர்க்க முடியாதபடி பலரின் கதைகளிலும் காணமுடிகிறது.
சாமானிய கதை விரும்பிகளைச் சென்றடையும் தங்கள் கதைகளினூடே ஒரு சமூகக் கருத்தையும் புகுத்திவிட வேண்டும் என்னும் உத்வேகமே அடிப்படை இலக்கிய நோக்கமாக இருந்தது. பொதுவாக, ஜனரஞ்சக மேடைப்பேச்சுகளாலும் திரைப்படங்களாலும் கவரப்பட்டிருந்த மக்களுக்குக் கராறான இலக்கியக் கூறுகளைவிட நேரடிப் படிப்பினைகளை முன்னிருத்தும் இலகுவான எழுத்துக்களே போதுமானவையாக இருந்துள்ளன.
50-ஆம் ஆண்டுகளில் தமிழக இலக்கியப்பரப்பில் நடந்த புதுமைப்பித்தன்-கல்கி இலக்கிய வாக்குவாதம் போன்ற செயல்பாடுகள் இங்கு நடைபெறவில்லை. தீவிர இலக்கியத்தை முன்னிருத்தும் சிற்றிதழ் முயற்சிகளும் இங்கு நடைபெறவில்லை. பிற்காலத்தில் தொடங்கப்பட்ட “இலக்கிய வட்டம்” போன்ற இதழ்களும் சொற்ப ஆயுசில் நின்று போயின.
மேலும் அன்றைய தமிழ்நாட்டு இலக்கியச் சூழலிலும் ஜனரஞ்சக எழுத்தே பொதுவாசிப்புத் தரப்பில் மிகவும் கொண்டாடப்பட்டது. எடுத்துக்காட்டாக 50-ஆம் ஆண்டுகளில், பெரும்பான்மை இலக்கிய வாசகர்களால் கல்கியே கொண்டாடப்பட்ட இலக்கிய ஆளுமையாக இருந்தார். புதுமைப்பித்தன் தரப்பு தீவிர இலக்கிய வாசிப்பு குழுக்களால் மட்டுமே அறியப்பட்டதாக இருந்தது. வாழும் காலத்தில் பரவலான தமிழ் இலக்கிய உலகம் புதுமைப்பித்தனை அங்கீகரிக்கவில்லை என்றே கூறலாம். ஆனால், அதேகாலத்தில் எழுதிய கல்கி பெரும் சிறப்புகளுடன் கொண்டாடப்பட்டார் என்பதையும் நாம் உணரவேண்டும். ஆகவே ஒப்பீட்டளவில் அன்றைய தமிழக வாசகர்களின் மனநிலையும் ஏறக்குறைய மலேசிய இலக்கிய வாசகர்களின் மனநிலை போன்றுதான் இருந்துள்ளது என்பதால் இதைப் பெரிய குறையாகக்கூற ஒன்றும் இல்லை. சிறுபத்திரிக்கைகளோ, இலக்கியக் குழுக்களோ இல்லாமல் நாளிதழ்களிலும் மாத இதழ்களிலும் மட்டுமே தங்கள் எழுத்தை அச்சேற்ற முடிந்த நிலையில் உள்நாட்டுப் படைப்பாளிகளும் இவ்வகை எழுத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தனர்.
மு. வரதராசன், நா. பார்த்தசாரதி, அகிலன் போன்ற தமிழக ஒழுக்கவாத எழுத்தாளர்களே சிறந்த படைப்பாளிகள் என்கிற தோற்றம் இங்கு பொதுவாக எல்லா தமிழ் ஆர்வலர்களுக்கும் இருந்தது. இந்தப் பொய்த்தோற்றம் தமிழக தமிழ்ப் பேராசியர்களால் முன்னெடுக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. மலாயா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற வந்த இரா. தண்டாயுதம் இப்போக்கை முழுதும் முன்னின்று நகர்த்தினர்.
இரா. தண்டாயுதத்திடம் நல்ல இலக்கிய ஆளுமை இருந்தது. அவர் மலேசியாவில் இலக்கிய வட்டங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். மலேசியத் தமிழ் இலக்கியச் செயல்பாடுகளை மலாய் இலக்கிய உலகமும் அறிய நடவடிக்கைகள் எடுத்தார். நாட்டுப்புற (தோட்டப்புற) பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட்ட அவரது முயற்சி மலேசியக் கலை இலக்கியத்துறைக்கு மட்டுமில்லாது சமூகப்பண்பாட்டு வரலாற்றுக்கும் முக்கியமானதாகும். ஆயினும் அவரிடம் முவ சார்பு சிந்தனையே அதிகம் இருந்தது. அவர் மு. வ-வின் மாணவர் என்பதனால் தன் ஆசிரியரை மட்டுமே இலக்கிய ஆளுமையாக முன்னிறுத்தினார். இவர் வழிநடத்திய எல்லா இலக்கியச்சந்திப்புகளும் மு. வரதராசன், நா. பார்த்தசாரதி, அகிலன் போன்றோரின் படைப்புகளைப் போற்றும், முன்மாதிரியாகக் காட்டும் அரங்கங்களாகச் செயல்பட்டன. நாட்டில் உள்ள கல்விக்கூடங்களும் மு. வரதராசன், நா. பார்த்தசாரதி, அகிலன் ஆகியோரின் நன்னெறிக் கதைகளையே பாடநூலாக மீண்டும் மீண்டும் பயன்படுத்திவருகின்றன. ஆகவே, பிற்காலத்திய மலேசிய நவீன இலக்கியத்தின் பிற்போக்குத்தனங்களுக்கு இரா. தண்டாயுதம் போன்றோரின் தவறான இலக்கிய வழிகாட்டல்கள் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது.
70-ஆம் ஆண்டுகளில் இந்நிலை மெல்ல மாற்றங்கண்டு வந்தாலும் முன்னோடிகளின் தாக்கம் முற்றாக நீங்கியது என்று சொல்ல முடியாது. ஆனால், சில எழுத்தாளர்களிடம் சற்றே ஜெயகாந்தன் தாக்கம் உருவாகி இருந்தது. ஆகவே ஜெயகாந்தன் தாக்கம் கொண்ட எழுத்துகளை மலேசிய நவீனச் சிறுகதைகளின் தொடக்ககாலம் என்று கூறமுடியும். எம். ஏ. இளஞ்செல்வன், சி. முத்துசாமி, அருசு. ஜீவானந்தம், மலபார் குமார், சை. பீர்முகமது போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள் நவீன சிறுகதைகளுக்கேற்ற கட்டமைப்புடன் வந்தன.
நவீன சிறுகதைகளின் ஆரம்பகட்ட எழுத்துகள் பலவற்றிலும் எழுத்தாளர் தலையீடுகளும் பிரச்சாரத் தொனிகளும் இருக்கவே செய்தன. ஆயினும் அவற்றைக் காரணம் காட்டி அப்படைப்புகளை முற்றாக ஒதுக்கிவிட முடியாது என்பதையும் உணர வேண்டியது அவசியம். காரணம், அன்றிருந்த இலக்கியப் புரிதல்களுக்கு ஏற்பவும் சமூகச் சூழல்களுக்கு ஏற்பவுமே படைப்பாளிகளின் மனமும் இருந்துள்ளது என்பதே உண்மை.
ஆகவே, ஒரு மலேசிய மூத்த இலக்கியவாதியின் இலக்கிய ஆளுமையை அறிய நாம் அவர் எழுதிய காலகட்டத்தின் பின்னணியோடும் அன்றிருந்த இலக்கியப் புரிதல் குறித்த தெளிவோடும் அணுகுவதே சிறப்பாகும். அந்தக் கண்ணோட்ட எல்லைகளை வகுத்துக் கொண்ட பிறகே இக்கட்டுரை எழுதப்படுகிறது.
மலேசியச் சிறுகதைகளில் 70-ஆம் ஆண்டுகளில் மெல்ல மலேசிய நிலைத்தன்மை திடம்பெற்ற காலத்தில் எழுதவந்தவர் கோ.புண்ணியவான். இவருக்கு எழுத்துலக மூத்தவர்களாக ரெ. கார்த்திகேசு, எம். ஏ. இளஞ்செல்வன், சீ. முத்துசாமி போன்றோர் இருந்துள்ளனர். இவர்களையே கோ.புண்ணியவான் தன் முன்னோடிகளாகவும் கொண்டுள்ளார். மலேசிய இலக்கியச் சூழலில் இன்று போலவே அன்றும் அமைப்புகளின் வழியோ ஒத்தகொள்கைகள் கொண்ட குழுக்கள்வழியோ இலக்கியம் படைக்கப்பட்டதில்லை. இலக்கிய மையம் என்று சொல்லிக் கொள்ளும்படி யாரும் செயல்படாத சூழலில் புதிதாக எழுத வருபவர்கள் தங்களுக்குள் இயல்பாக வெளிப்படும் ‘கதை சொல்லும்’ வெளிப்பாட்டையே இலக்கியமாக வளர்த்தெடுக்கத் தொடங்கினர்.
அதிலும் கோ.புண்ணியவான் தன் ஆரம்பகாலத்தில் எந்தச் சமுதாய அமைப்புகளோடும் நேரடித் தொடர்பு வைத்திருக்கவில்லை. அரசியல் கட்சிகளிலும் பொறுப்பு வகிக்கவில்லை ஆகவே, கோ.புண்ணியவான் தனது படைப்புகள் வானொலியிலும் நாளிதழிலும் வெளிவரத் தொடங்கிய பிறகுதான் தனக்கு எழுதும் ஆற்றல் உண்டு என்பதை உணர்ந்ததாகக் கூறுகிறார். மலேசிய இலக்கியச் சூழலில் பொதுவாக ஓர் எழுத்தாளரை ‘அங்கீகரிக்கும்’ பணியை நாளிதழ்களே செய்கின்றன. தங்கள் படைப்பு நாளிதழில் வெளிவருவதன் வழி மட்டுமே அவர்கள் தங்களை எழுத்தாளர்களாக அடையாளம் காட்டமுடிகிறது. அவ்வகையில் கோ.புண்ணியவானின் எழுத்துகள் நாளிதழ்களின் ஞாயிறு பதிப்புகளிலும் வானொலியிலும் அதிகம் வெளிவந்துள்ளன. பல போட்டிகளிலும் இவரது சிறுகதைகள் வெற்றி பெற்றுள்ளன. சிறுகதைகளைத் தவிர்த்து பல புதுக்கவிதைகளையும் விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எம். ஏ. இளஞ்செல்வன், கோ. முனியாண்டி போன்ற எழுத்தாளர்களோடு இணைந்து புதுக்கவிதைக் கருத்தரங்குகளை முன்னெடுத்துள்ளார்.
கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவரும் கோ.புண்ணியவான் இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் (நிஜம், சிறை, எதிர்வினை) ஒரு நாவலையும் (செலாஞ்சர் அம்பாட்) ஒரு சிறுவர் நாவலையும் (வனதேவதை) ஒரு கவிதை விமர்சன நூலையும் எழுதியுள்ளார்
கோ.புண்ணியவானின் புனைவு உலகம் – களம்
கோ.புண்ணியவானின் புனைவு உலகம் பெரும்பகுதி தோட்டப்புற வாழ்க்கையைச் சார்ததாக உள்ளது. அதோடு தோட்டத்துண்டாடலுக்குப் பிறகு ஏற்பட்ட இடமாற்றப் பின்னணிகளையும் அவரது கதைகள் முன்னிருத்துகின்றன. சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சாதாரண நிகழ்ச்சிகளில் இருந்தே பெரும்பான்மை கதைகளைக் கண்டெடுக்கிறார். மலேசிய-இந்தியர் வரலாற்றில் தோட்டப்புறமும் தோட்டத்துண்டாடலும் மிக முக்கியமான காலகட்டங்களாகும். மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் இக்காலகட்ட வாழ்க்கையைப் பெரும்பாலும் தங்கள் படைப்புகளில் பதிவு செய்துள்ளனர். ‘எதிர்வினைகள்’, ‘சாமி கண்ண குத்திடிச்சி’, ‘ஆயாக்கொட்டாய்’, ‘எலிகளை விழுங்கும் பாம்புகள்’, ‘அது’ போன்ற கதைகளில் அசலான தோட்டப்புறச் சூழல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும் ரப்பர் தோட்ட கால கட்டமும், செம்பனைத் தோட்ட காலகட்டமும் மாறி மாறி இவர் கதைகளில் வருகின்றன. இவ்விரு காலகட்டங்களும் மலேசியத் தமிழர் வரலாற்றில் நுண்ணிய வேறுபாடுகளைக் கொண்டவையாகும். இவ்விரு காலகட்டங்களிலும் இவர் நேரடி வாழ்க்கை அனுபவம் உள்ளவர் என்பதால் இவை குறித்த துல்லியமான பார்வைகளை இவரால் சிறப்பாக வைக்க முடிகிறது.
ரப்பர் தோட்டங்களில் வாழ்ந்த முதல் தலைமுறைத் தமிழர்களை விட செம்பனைத் தோட்டங்களில் வாழ்ந்த இரண்டாம் தலைமுறைத் தமிழர்கள் சற்றே அரசியல் விழிப்புணர்வும் ‘மலேசியாதான் நம் நாடு’ என்கிற பிடிப்பும் உள்ளவர்களாக இருந்தனர். மேலும் தோட்டத்துண்டாடலால் வாழ்க்கையை இழந்து புறநகரங்களுக்கும் பெருநகரங்களை ஒட்டிய புறம்போக்குப் பகுதிகளுக்கும் சென்ற மக்களின் வாழ்க்கையையும் இவரது சிறுகதைகளில் காணமுடிகிறது. ‘அம்மா’, ’நிராகரிப்பு’, ‘நிதர்சனம்’ போன்ற கதைகள் தோட்டங்களை விட்டு வெளியேறி நகரை ஒட்டிய இடங்களில் வாழும் மக்களின் கதைகளாகும்.
பள்ளிகளைக் களமாகக் கொண்ட கதைகளும் இவருக்கு இயல்பாக வருகின்றன. ‘கதவுகள் தாழிடப்பட்டுள்ளன’, ’நல்லதோர் வீணை செய்தே’, ‘சுமை’, ‘கொக்கோகம்’, ’கலகக்காரன்’ ஆகிய கதைகள் தமிழ்ப்பள்ளிகளைப் பின்னணியாகக் கொண்ட கதைகளாகும். ’மெல்லத் தமிழினி’ தமிழ்ப்பள்ளியின் முக்கியத்துவம் குறித்த நேரடிப் பிரச்சாரக் கதையாகும். கோ.புண்ணியவான், தமிழ்ப்பள்ளி ஆசிரியராகவும் தலைமையாசிரியராகவும் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவசாலி என்பதால் பள்ளிகள், கல்விச் சிக்கல்கள், ஆசிரியப்பணி போன்றவை குறித்த தனது மனப்பதிவுகளைப் புனைவுகளாக மாற்றியுள்ளார்.
இவை தவிர, கோ.புண்ணியவானின் கதைகளில் மருத்துவமனை வார்டுகளும், இறப்பு வீடுகளும் சிறப்பிடம் பிடிக்கின்றன. ‘தாய் மாமன்’, ‘யாமிருக்க’, ‘நிராகரிப்பு’,’எதிர்வினை’ போன்ற கதைகள் இறப்பு வீட்டில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ’மனசுக்குள்’, ‘நலந்தானா’, ’இனியொரு விதி செய்வோம்’, ’உறவு’ போன்ற கதைகள் முழுக்க முழுக்க மருத்துவமனை வார்டுகளைக் கதைக்களமாகக் கொண்டவை. மருத்துவமனை வார்டுகளும் இறப்புவீடுகளும் மனிதனின் மனோவியலோடும் தத்துவார்த்தப் புரிதலோடும் நெருங்கிய தொடர்பு உள்ள இடங்கள் என்பதோடு அங்கே உறவுகளின் பாசாங்குகளையும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதனால் கோ.புண்ணியவான் இக்களங்களைத் தன் தேர்வாக ஆக்கியிருக்கக் கூடும்.
மலேசிய இலக்கியச்சூழல் கோ.புண்ணியவானுக்கு மிக வருத்தமும் உளைச்சலும் தரக்கூடியதாக இருப்பதை அவரது சில புனைவுகளில் காணமுடிகிறது. ‘நிகரற்றவன்’, ‘புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க இயலாத சில பக்கங்கள்(1&2)’ ஆகிய மூன்று கதைகளும் மலேசிய இலக்கிய அரங்கில் நிகழும் அபத்தங்களையும் அவலங்களையும் மிகுந்த எள்ளலுடன் சொல்லும் கதைகளாகும். இக்கதைகள், எழுத்துப்பணியில் அவருக்கு ஏற்பட்ட சலிப்புகளையும் சந்தித்த எதிர்மறை நபர்களையும் நினைவுகூர்வனவாக உள்ளன. ஆயினும் இந்தச் சலிப்புகள் அவருக்கு நிரந்தரமானவை அல்ல என்பது அவரின் தொடர் இலக்கிய முயற்சிகளின் வழிஅறியமுடிகிறது.
கதை மாந்தர்
கோ.புண்ணியவானின் கதை மாந்தர்கள் முழுக்கவும் நிஜ உலக மாந்தர்களின் வார்ப்புகளாகவே இருக்கின்றனர். சாரதா, சாமிக்கண்ணு, ராணி, ஆயா கிழவி, குப்புச்சி, முருகேசு, கல்யாணி என்று பல சாமானிய மனிதர்களே இவர் கதைகளின் கதை மாந்தர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நாம் மிக சகஜமாக சந்திக்கக் கூடிய மனித பிம்பங்கள்தான். உயர்ந்த கல்வி அறிவோ நாகரீக வாழ்க்கையோ வாழாதவர்கள். சாதாரண உணர்ச்சிகளும் தேவைகளும் உடைய இந்த எளிய மக்களை முன்னெடுப்பதில்தான் கோ.புண்ணியவான் மிகுந்த முனைப்புக் காட்டியுள்ளார். இவரது கதைகளை வாசிக்கும் வாசகன் மிக எளிதில் இவரது கதாமாந்தர்களோடு பழக முடியும். காரணம் இவர்கள் நம் உறவுக்காரர்களின் சாயலையோ பக்கத்தில் வாழும் மனிதர்களின் சாயலையோ உடையவர்களாவர்.
இவரது கதைகளில் அதிகமாக பெண் கதாமாந்தர்களே முதன்மைக் கதாமாந்தர்களாகவும் நாயகக்குணங்கள் கொண்டவர்களாகவும் உள்ளனர். பெண்கள் குடும்பங்களைப் பொறுப்புடன் கவனிக்கின்றனர் அல்லது கவனிக்க முயல்கின்றனர். ஆனால், ஆண்கள் பொறுப்பற்றவர்கள். பெரும்பகுதி குடிகாரர்கள், குடித்துவிட்டுக் குடும்பத்தை மறப்பவர்கள். ‘குப்புச்சியும் கோழிகளும்’, ‘எதிர்வினைகள்’, ’இறந்தவனைப் பற்றிய வாக்குமூலம்’ போன்ற கதைகள் குடிகாரக்கணவனால் வாழ்க்கையை இழந்து தவிக்கும் பெண்களின் அவலங்களைக்காட்டுகின்றன. உண்மையில் இந்த மூன்று கதைகளும் ஒரே கதையின் மூன்று கோணங்கள் போல் அமைந்துள்ளன. குடிகாரக் கணவனை ஆணாதிக்க சமூகத்தின் குறியீடு என்றும் நாம் பார்க்கமுடிகிறது.
நாகரீக வாழ்க்கையிலும் கோ.புண்ணியவான் ஆண்களைக் கயமையும் சுயநலமும் மிக்கவர்களாகவே காட்டுகிறார். ‘துறவு’, ‘நூலாம்படை’ ஆகிய கதைகள் ஆண்களின் அதிகார மனமும் பாலியல் சுதந்திரமும் பெண்களின் வாழ்க்கையை நாசமாக்குவதைக் காட்டுகின்றன. மேலும் உதிரியாக, ஆயாக்கொட்டா கிழவி, நடிகை நிஷா, ஜானகி, பணிப்பெண் புர்வாண்டி, கல்யாணி என்ற பல பெண் கதாமாந்தர்களின் துயரங்களை இவர் கதைகளில் காண முடிகிறது.
சமுதாயத்தில் பெண்களை மரியாதையாக நடத்துவதில்லை என்பதோடு ஆண் வர்க்கம் தன் சுயநலத்துக்குப் பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறது என்னும் குற்றச்சாட்டை கோ.புண்ணியவான் தன் கதைகளில் வைத்துள்ளார். ஆயினும் புண்ணியவான் பெண்ணியக் கருத்துகளோடு முழுதும் உடன்படுபவர் என்றும் சொல்ல முடியாது. அவரது, ‘சிறை’, ‘நெஞ்சே உன் ஆசை என்ன?’, ‘துறவு’, ‘நூலாம்படை’, போன்ற கதைகள் பெண்ணியப் பார்வைக்கு முரணானவை என்றே கூறலாம். அல்லது சற்றே பழைமை நோக்குடையவை என்று வகைப்படுத்தலாம். ஆண் துணை இல்லாத பெண்கள் சமுதாயத்தில் வாழ்வது சிரமம் என்னும் பழங்கருத்தையும், பெண்கள் மென்மையானவர்கள் என்பதால் அன்புக்கு அடங்கக் கூடியவர்கள் என்கிற புரிதலையுமே இக்கதைகள் முன்வைக்கின்றன. அதோடு, பெண்களின் பரிசுத்தம், தூய்மை (கற்பு நெறி) குறித்த தகவல்களையும் புகுத்தியே கதை சொல்லியுள்ளார். எதிர்வினைகள் கதையில் ‘இனிமேதான் நான் நல்லா இருக்கப்போறேன்…நீ பார்க்கப் போற” என்று சாரதா விடும் சவால் கூட மற்றொரு பெண்ணிடம் அவள் காட்டும் வீரம் மட்டுமே என்றே தோன்றுகிறது. கணவன் உயிருடன் இருந்தபோது அவள் அவனது எல்லா அட்டகாசங்களையும் சகித்துக்கொண்டு அவனுடன்தான் வாழ்ந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘குப்புச்சியும் கோழிகளும்’ கதையில் மட்டுமே சூழலோடு இயைந்த வாழ்வியல் காட்டப்படுகிறது.
ஆகவே,‘பெண்கள் மென்மையும் பலகீனமும் உடையவர்கள் என்பதால் ஆண்கள் பொறுப்புடன் அவர்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும்’ என்னும் பழைமையான பெண்ணியப் புரிதலே கோ.புண்ணியவானின் கதைகளில் உள்ளன. பெண்ணிய விழிப்பு தமிழ் இலக்கியத்தில் எட்டிப்பார்த்த காலகட்ட எழுத்துகள் பலவற்றிலும் உள்ள நிலைதான் இது. ஆகவே, கோ.புண்ணியவான் தன் சமகால எழுத்துகளின் எல்லைகளை மீறாமல் பெண்கள் மீதான தனது கரிசனப் பார்வையை வைத்துள்ளார் என்று கூறலாம்.
மொழி
கோ.புண்ணியவான் தம் கதைகளுக்கு ஏற்ற மொழியைத் தேர்வு செய்வதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை. ஆயாக் கிழவிக்கான அடித்தட்டு மொழியும், பள்ளி ஆசிரியருக்கான அதிகார மொழியும் பிசிரின்றி மிகச்சரியாக அவருக்குக் கைவருகிறது. தன் கதாமாந்தர்களுக்கேற்ற மொழியை அவர் அவர்களின் தன்மைக்கேற்பவே கையாள்கிறார். அதேபோன்று ‘புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க இயலாத சில பக்கங்கள்’ கதையில் சற்றே வேறுபட்டு ஆவணமொழி நடையைப் பயன்படுத்திக் கதை சொல்லலின் சுவைகூட்டியுள்ளார்.
மதுவும் சமுதாய தாக்கங்களும்
கோ.புண்ணியவானின் சிறுகதைகள் பலவற்றின் சிக்கல்களுக்கு மூலகாரணமாகக் காட்டப்படுவது மதுப்பித்தாகும். ஆண்கள் பலரும் குடித்துவிட்டு வாழ்க்கையைத் தொலைப்பவர்கள். திருமணம் செய்து குழந்தைகள் இருந்தும் தங்கள் மதுப்பித்துக்காகக் குடும்பத்தையே வீதியில் நிறுத்தத் துணிந்தவர்கள். ‘நிராகரிப்பு’, ‘எலிகளை விழுங்கும் பாம்புகள்’, ‘எதிர்வினை’, ‘குப்புச்சியும் கோழிகளும்’, போன்ற சிறுகதைகள் மது அடிமைத்தனத்தையே பிரச்சனைகளுக்கு மூலமாகக் காட்டுகின்றன. ‘உறவு’ சிறுகதையில் வரும் இளைஞர்களும் குடித்துக் கும்மாளம் போடுகிறார்கள். ‘குப்புச்சியும் கோழியும்’ கதையில் மதுப்பித்தாகி குடும்பத்தைப் பிரிந்த கணவன் பழக்கிக்கொடுத்த மதுப்பழக்கத்தை குப்புச்சியும் தொடர்கிறாள். “ஒரு நாளைக்கு மருந்து மாத்திரை மாதிரி மூணு வேளை ஊத்திக் கொள்ளவில்லையாயின் அவளின் உடலில் உண்டாகும் நடுக்கம் பார்வையில் உண்டாகும் ஒளிக்குறைவு ஊனம்…சோறு இல்லையென்றாலும் பரவாயில்லை…. இந்த சுகம் இல்லையென்றால்…. .” என்பது அவளது நிலையாக இருக்கிறது. ஆகவே சமுதாயத்தின் சிக்கல்கள் பலவற்றுக்கு புண்ணியவான் மதுவை ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கிறார். அதிலும் சம்சு என்னும் கள்ளச்சாராய மோகம் மலேசிய – இந்தியர்களின் முதல் எதிரி என்பது அவர் முடிவாக இருக்கிறது.
ஆயினும் பணக்கார, மேல்தட்டு இந்தியர்களும் குடிப்பழக்கம் உள்ளவர்கள்தான் என்பதை நாம் மறைக்கமுடியாது. அவர்களின் குடிப்பழக்கம் சமுதாயச் சிக்கலாக காட்டப்படுவதில்லை. நன்கு படித்தவர்களும் பெரும் பதவியில் இருப்பவர்களும் குடிப்பது கொண்டாட்டத்திற்குரியதாக இருப்பதோடு, அப்பழக்கம் ஒரு சமூகச்சிக்கலாகக் காட்டப்படாத நிலையில் அடித்தட்டு மக்களின் குடிப்பழக்கமே சமுதாயச் சீரழிவிற்குக் காரணம் என்னும் வாதம் சற்றே மிகையானதுதான். போதையின் மேல் மலேசிய-இந்தியனுக்கு உள்ள ஈர்ப்பு பொதுவானதுதான். பணம் உள்ளவன் ஆடம்பர விடுதியில் உயர்ரக மதுவருந்தி மயங்கிக்கிடக்கிறான். பணம் இல்லாதவன் சீனன்கடை கள்ளச்சாராயத்தில் தன் தேவையை தீர்த்துக்கொள்ள முயல்கிறான். ஆயினும் சமூக ஆர்வலர்களின் சாடல் எப்போதும் ஏழைகளின் போதையை மட்டுமே சுட்டுவதாக உள்ளது. ஆகவே, மலேசியத் தமிழர்களின் வாழ்வியல் சிக்கல்களுக்குக் குடிப்பழக்கம் மட்டுமே முக்கியக் காரணம் இல்லை என்றாலும், கள்ளச்சாராயத்தால் ஏழை இந்தியர்களுக்கு நேர்ந்த அவலங்களும் துர்மரணங்களும் வரலாற்றில்பதிவாகவே உள்ளதால் கோ.புண்ணியவானின் கருத்தை நாம் முற்றாக மறுக்க முடியாது. கள்ளச்சாராயம் என்பது ஏழைகளைச் சுரண்டும் இன்னொரு முதலாளித்துவ உற்பத்தியே என்னும் புரிதலுடன் இப்பிரச்சனையை நாம்அணுக வேண்டியுள்ளது.
எல்லைகளுக்குள் நிகழ்ந்த சாதனைகள்
கோ.புண்ணியவானின் கதைகள் ஒடுக்கப்பட்ட உதிரி மனிதர்களைப் பற்றி அதிகம் பேசுகின்றன. மேலும் லட்சியக் கதாபாத்திரங்களை இவர் கதைகளில் காணமுடியாது. வழக்கமான அரசியல் பிரச்சார நெடிகளும் தலைவர்களை வியத்தலும் இல்லை. ஆகவே கோ.புண்ணியவானின் கதைகள் நவீனச் சிறுகதைகளின் தனித்துவக் கூறுகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால், கதை கூறும் முறையில் அவை சம்பிரதாயமான முறைகளையே பின்பற்றுகின்றன. இருண்மையான கதைசொல்லல்களைத் தவிர்த்திருக்கிறார். வாசக இடைவெளி குறைவுதான். விதிவிலக்காக, ‘கடைசி சந்திப்புக்குப் பிறகான நினைவுக்குறிப்புகள்’ என்கிற கதை வாசகனுக்கு பல திறப்புகளைத் தருகிறது.
மேலும், கோ.புண்ணியவானின் கதைகள் புறவயமாக எழுதப்பட்ட படைப்புகளாகும். அவர் பார்த்த கேட்ட அனுபவங்களை அப்படியே மறுவடிவம் கொடுத்து வாசகனுக்கு அனுபவப் பகிர்வாகக் கொடுக்கிறார். படைப்பாளர் காட்ட விரும்பும் காட்சியை அல்லது நிகழ்ச்சியை நல்ல வெளிச்சத்தில் வாசகன் முழுமையாகப் பார்க்க முடிகிறது. ஆரம்பகட்ட வாசகனுக்கு இவ்வகை எழுத்துகள் கதைவாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டை உருவாக்கும் என்பது இயல்பு. ஆயினும் அகவயமான மோதல்கள் இல்லாததால், அடுத்தகட்டத்திற்கு நகரமுடியாத நிலையில் பல கதைகள் நின்றுவிடுகின்றன. ஆகவே, படைப்பாளியின் கோணத்தில் இருந்து மட்டுமே வாசகனும் கருத்துகளைப் புரிந்துகொள்ளவேண்டிய குறுக்கம் ஏற்பட்டுவிடுகிறது.
மேலும், அவர் தனது கதைகளில் அகவய அலசல்களைக் காட்டுவதில்லை என்றே கூறலாம். ‘நீருக்குள்ளிருந்தே நழுவும் மீன்கள்’ மனப்பிறழ்வை மையப்படுத்திய கதை. ஆயினும் அவர் மனப்பிறழ்வுச் சிக்கலை புறத்தாக்கங்கள், வெளி அத்துமீறல்கள் வழியாகத்தான்அணுகுகிறார். கதையில், குடும்பச் சிக்கலுக்குத் தரும் முக்கியத்துவத்தால் மனப்பிறழ்வு ஒரு சராசரி சம்பவமாக நின்றுவிடுகிறது. ‘துறவு’, ‘நெஞ்சே உன் ஆசை என்ன?’ போன்ற கதைகள் பெண்ணின் உடல் மனம் இரண்டுக்குமான தொடர்புகளையும் முரண்களையும் வெளிப்படுத்த வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஆனால், அவர் அவற்றைச் சாமானிய பண்பாட்டுச் சிக்கலாக மட்டுமே காட்டி நிறுத்திக்கொள்கிறார். தனிமனித மனமும் ஆசைகளும் பண்பாட்டு வரையறைகளைச் சடுதியில் தாண்டக் கூடியவை என்பதை சிலசொற்களில் அவர் உணர்த்தினாலும் அதுகுறித்த மேல் உரையாடலை அவர் நாசூக்காகத் தவிர்த்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. மலேசிய வாசகச்சூழலில் பாலியல் தொடர்பான கதைகள் ‘அருவெறுப்பாக’ அணுகப்படுவதால் அவர் திட்டமிட்டே மேலோட்டமாக எழுதியிருக்கிறார். இவ்வாறான அவரின் ‘சுயக் கட்டுப்பாடான’ எழுத்து முறைக்கு இரண்டு காரணங்களைக் கூறமுடியும்.
முதலாவது, கோ.புண்ணியவான் சிறுகதைப் போட்டிகளில் தொடர்ந்து பங்கெடுத்து வெற்றிகளைத் தக்கவைத்துக் கொண்டவர். “இந்நாட்டில் இலக்கியத்திற்கு என்று பெரிய அங்கீகாரம் ஏதும் இல்லாத சூழலில் சிறுகதைப்போட்டிகள் தனக்கு ஊக்கமூட்டி எழுதச்செய்கின்றன” என்பது அவரது கருத்தாகும். ஆயினும் போட்டிகளில் பங்கெடுக்கும் கதைகளுக்கென்றே வழக்கமாக இருக்கும் வெளிப்படையான சமூக அக்கறை சில நேரங்களில் கதைகளின் கலையம்சத்தைப் பாதிக்கின்றன. கோ.புண்ணியவானின் கதைகளில் இவ்வித விபத்துகளை அதிகம் பார்க்கமுடிகிறது. ஆகவே, போட்டிகளை நோக்கமாகக் கொள்ளாத பரிசோதனை முயற்சிகள் தனக்கான சுதந்திரத்தால் மேலும் சிறப்பான கதைகளாக அமையக் கூடும். பொதுவாக தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று இன்றுவரை கொண்டாடப்படும் கதைகள் எல்லாமே போட்டிகளுக்கு எழுதப்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நல்ல கதைகளில் கூட பிரச்சாரத் தொனியும், ஆசிரியத்தலையீடும் முடிவின் உச்சங்களுக்குப் பின்னும் நீளும் விவரிப்புகளும் உண்டு. இவை நீதிபதிகளின் எதிர்ப்பார்ப்பை முன்வைத்து எழுதப்படும் கதைகளில் காணக்கூடிய பொதுவான அம்சங்களாகும். இவை கதைக்கான வீரியத்தைக் குறைக்கின்றன. உதாரணமாக, குப்புச்சியும் கோழிகளும் சிறுகதையில், கதைசொல்லும் பணியில் இருந்து விடுபட்டு ஆசிரியர் முன்வந்து நின்று பேசும் பல தருணங்கள் உள்ளன.
“அப்படியென்ன வாழ்ந்து முடித்துவிட்டாள் அவனோடு”?
“இந்த அரணில்லாத வாழ்க்கையை விட்டு அவள் போக வேண்டிய அவசியமும் இல்லை……. தன் பிள்ளைகளே தான் எங்கே இருக்கிறேன் என்று கண்டு கொள்ளாத போது?”
“இவளுக்கும் வளர்க்கப்படும் இந்தப் பண்ணைக் கோழிகளுக்கும் என்ன வித்தியாசம்?”
போன்ற ஆசிரியர் கூற்றுகள் கதையின் சாரத்தை அல்லது குப்புச்சி குறித்து ஆசிரியருக்கு தோன்றும் மனவோட்டங்களை வாசகனுக்கு வலிந்து சொல்லும் உத்திகளாகும். இவற்றை நாம் பிரச்சார எழுத்து என்று கூறலாம். உண்மையில் மேற்கண்ட கூற்றுகளை கதையை வாசிக்கும் வாசகனே கதை நிகழ்த்தும் உளபாதிப்புகளின்வழி உணரவேண்டும். ‘குப்புச்சியின் நிலையை ஆசிரியர் “அரணில்லாத வாழ்க்கை” என்று முன்வந்து சுட்டிக்காட்டத் தேவையில்லை. ஆசிரியருக்கு அவளின் வாழ்க்கை அரணில்லாத வாழ்க்கையாகத் தோன்றலாம். ஆனால், வாசகப்பார்வை அவளின் வாழ்க்கையை ‘மன தைரியம் உள்ள ஒரு பெண்ணின் வாழ்க்கை’ என்றே கண்டடையக் கூடும். ஆகவே ஆசிரியரின் கோணத்திலேயே வாசகனையும் சிந்திக்க ஒருமுகப்படுத்தும் செயல்பாடு கதையின் பன்முகத்தன்மையைக் கெடுத்துவிடும். படைப்பாளியின் பணி கதையை அதன் முழுத் தீவிரத்துடன் கூறுவது மட்டுமே. ஆனால், வாசகன் தன் பங்கேற்பின் வழி பிற புரிதல்களுக்குச் செல்வதே சிறத்த சிறுகதைகளுக்கான வரையறையாகும்.
மேலும் கதையை அதன் உச்சத்தில் நிறுத்தி விடுதலே வாசகப் பங்கேற்புக்குப் போதுமான இடத்தைக் கொடுக்கும். கதை அதன் உச்சத்திற்குப் பின் மேலும் விவரணை செய்யப்படுவதால் வாசிப்புச்சுவை கெடுவதோடு வாசகப்பங்கேற்பும் நடைபெறாமல் போகிறது. எடுத்துக்காட்டாக, சாமி கண்ணை குத்திடுச்சி கதையில் “……. அவர் ஆத்தா என்று கத்தத் தொடங்கியபோது அவர் வாயிலிருந்தும் சம்சு வாடை கசிந்து கொண்டிருந்தது” என்ற இடத்தில் கதை தன் உச்சத்தை அடைந்துவிடுகிறது. அதன்பின் கரகப்பூசாரிக்கு என்ன நேர்ந்தது என்பதையும் ஏன் அப்படி ஆனது என்பதையும் வாசகர்கள் தங்கள் ஊகத்திலேயே புரிந்துகொள்ள முடியும். மேலும் அந்த உச்சத்திற்குப் பிறகான சுற்றுப்புறச் சூழல் குறித்த விவரிப்புகள் ஆசிரியர் தலையீடு இன்றியே இயல்பாக வாசகனின் மனதில் சுயமாக விரியவேண்டிய காட்சிகளாகும். ஆனால், ஆசிரியர் கடைசி எல்லைவரை சென்று தன் கதையை விவரித்துக் கூறுவது வாசிப்பு அனுபவத்தைச் சிதைக்கிறது.
அடுத்து, கோ.புண்ணியவான் எழுதியது பொதுவாசகர்களுக்கு என்பதும் அவரின் எழுத்துகள் அதிகம் அச்சானது நாளிதழ்களில் என்பதும் குறிப்பிடத்தக்கன. ஆகவே அவர் தன் எழுத்தை மிகத்தீவிரமான எல்லைகளைத் தொடாமல் தவிர்த்தது புரிந்துகொள்ளக்கூடியதே. சிற்றிதழ்களும் இலக்கிய இதழ்களும் மலேசியாவில் இல்லாத நிலையிலும் உதிரி மனிதர்களின் பாடுகளைத் தனது எழுத்தில் முதன்மைப்படுத்தியதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
இத்தகைய புறச்சூழல்களைத் தாண்டி, அவரின் சிறந்த சிறுகதைகள் என்று போற்றத்தக்கவை ‘குப்புச்சியும் கோழிகளும்’, ’சாமி கண்ணை குத்திடிச்சு’ (கரகம்), ’எதிர்வினைகள்’ போன்றவையாகும். இக்கதைகள் தெளிவான சிறுகதை வடிவத்துடனும், கலை நேர்த்தியுடனும், ஆரவாரக் கூச்சல்கள் இல்லாதமொழி நடையுடனும் வாசகனுக்குப் புதிய திறப்புகளைத் தரும் முடிவுகளுடனும் சிறப்பாகப் புனையப்பெற்றுள்ளன.
‘குப்புச்சியும் கோழிகளும்’, கணவனாலும் சொந்தப் பிள்ளைகளாலும் கைவிடப்பட்ட பெண்ணின் வாழ்க்கையைக் கொஞ்சமும் மிகையின்றி புலம்பல் இன்றிக்காட்டும் கதையாகும். அவள் சமூகப் பார்வையில் குடிகாரியாகவும் அருவெறுப்பானவளாகவும் இருப்பது தவிர்க்கமுடியாதது. ஆயினும் பிறர் தயவின்றித் தன் சொந்த உழைப்பில் வாழும் அவளின் உழைப்புக்கு முன்னால் சமூகம் வைக்கும் மதிப்பீடுகள் பொருளற்றவையாகின்றன. கணவன் இறந்த பின்னர், பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் அவள் மிகத் துணிச்சலாக தனக்கான வாழ்க்கை ஒன்றைத் தேர்வு செய்து கொள்கிறாள். அந்த வாழ்க்கை பண்பாட்டு மதிப்பீடுகளுக்கு முரணாக இருப்பது பற்றியெல்லாம்அவள் கவலைப்படவில்லை, கவலைப்படவும்முடியாது. வாழ்க்கை என்ற பெருங்கடலில் துடுப்புப் போட்டு மீள முயலும் போராட்டம் அவளது. அந்தப் போராட்டத்துக்குத் தக்கவாறு அவள் தன்னை தகவமைத்துக் கொள்கிறாள் என்பதே உண்மை. ஆகவே அவள் எந்த இடத்திலும் தன் புலம்பலையோ புகார்களையோ முன்வைக்கவில்லை. அவள் நிலை நிச்சயம் பண்ணையில் வளரும் கோழிகள் போன்றதன்று. அவள் தன் நிலை உணர்ந்தே அங்கே வாழ்கிறாள். சீனனுடன் உடன்படுகிறாள். மேலும் அவள் தன் மகளைப் பாதுகாக்கும் பெரிய பொறுப்பையும் சற்றும் சலிப்பின்றி ஏற்றுக் கொள்கிறாள். இவளது வாழ்க்கையைச் சமூக மதிப்பீடுகளுக்குள் வைத்து அளக்க முயல்வது அர்த்தமற்றது. அவள் குற்றமற்றவள்தான் உண்மையில் சமுதாயம்தான் இவளின் நிலைக்குத் தன்னைக் குற்றம் சாட்டிக்கொள்ளவேண்டும்.
பொதுவாசிப்பில், இக்கதையில் வரும் சீன முதலாளியின் சுயநலமும் கீழான சிந்தனையும் வாசகனை நிச்சயம் சீண்டும். அவனுடைய சிறுமை, தூக்கலாக கண்ணுக்குத் தெரியும். ஆனால், அது வாசகனின் இயலாமையை மூடிமறைத்துக் கொள்ளும் முகமாக வெளிப்படும் பாசாங்குதான் என்பதை உணரவேண்டும். ஆழ்ந்து நோக்கும்போது குப்புச்சியை நிராதரவாகக் கைவிட்டுச் சென்ற கணவனும் பிள்ளைகளும் அந்தச் சீன முதலாளியை விட மோசமான சுயநலமிகள் என்பது புலப்படும். அதைவிட குப்புச்சியைச் சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளிவைத்து பண்பாட்டுச் சட்டதிட்டங்களை வைத்து அவளை அளவிட முயலும் சமுதாயத்தின் மேட்டிமைப் புத்தியும் தெளிவாகும்.
அடுத்து, ‘எதிர்வினைகள்’ சிறுகதையில் வரும் சாரதா, மற்றுமொரு பெண்ணிய முன்மாதிரியாக இருக்கிறாள். அவளும் வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடியவள் அல்ல. சமூக மதிப்பீடுகள் பற்றிய அச்சமும் இல்லாதவள். அவளது வாழ்க்கை அவளுக்கான சுதந்திரத்தை உள்ளடக்கியது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறாள். உதவாக்கரை கணவனின் மரணம் அவளைக் கொஞ்சமும் அசைத்துப் பார்க்கவில்லை. மாறாக, புதிய விடுதலை உணர்வைப் பெறுகிறாள். அதைப் பாசாங்கின்றி பலர் அறிய உரைக்கவும் செய்கிறாள். மரபான பெண்குலத்தின் பதிபக்தியை இவளின் ‘இனிமேதான் நான் நல்லா இருக்கப்போறேன்…. . நீ பார்க்கப் போற” என்கிற வீச்சு உடைத்துப்போடுகிறது. பெண் என்பவள் ஆணின் தேவைகளை நிரப்பக்கூடிய ஒரு பொருள் அல்ல என்பதையும் அவளுக்கான வாழ்க்கை என்ற ஒரு வெளி உள்ளது என்பதையும் சாரதா குப்புச்சியைவிடத் தீவிரமாக உணர்கிறாள். அதை உரைக்கவும் செய்கிறாள். தங்கள் விதியைத் தாங்களே எழுதிக்கொள்ளத் துணிந்த பெண்களின் கதைகளாக இவை படைக்கப்பட்டுள்ளன.
அடுத்து, ‘சாமி கண்ணை குத்திடுச்சி’ (கரகம்), அழகியல் சார்ந்த எதார்த்தவாதக் கதையமைப்பைக் கொண்டது. அதோடு நம்மிடையே இருந்து இன்று மறைந்துபோன ஒரு பண்பாட்டுக் கலைவடிவத்தையும் இக்கதை உள்ளடக்கியுள்ளது. மர்மமும் திருப்பமும் நிறைந்த இக்கதை வாசகனுக்கு புது அனுபவங்களைத் தரக்கூடியதாகும். ஒரு தேர்ந்த கதைசொல்லியாக கோ.புண்ணியவான் சமூகத்தின் பண்பாட்டு வரலாறொன்றை இக்கதையின் ஊடே சொல்லியுள்ளார்.
தோட்டப்புறக் கோயில் திருவிழாக்களில் கரகப்பூசாரியின் செல்வாக்கு குறித்த தகவல்களை இக்கதையின் வழி அறியமுடிகிறது. மேலும், கோயில் திருவிழாவின் பண்பாட்டு மூலத்தையும் இக்கதை திறந்து காட்டுகிறது. கோயில் திருவிழா, பக்தியின் அடிப்படையில் மட்டுமே சமூகத்தால்ஏற்றுக்கொள்ளப்பட்ட விழாவன்று. அது பன்முகத் தேவைகளைக் கொண்ட சமூகத்தின் கொண்டாட்ட மனநிலையின் உச்சம் என்று சொல்லலாம். பல அடுக்கு மக்களும் பல்வேறு தேவைகளை மையப்படுத்திக் கோயில் திருவிழாக்களை முன்னெடுத்தார்கள்.உழைக்கும் வர்க்கத்தின் உடல், மன இளைப்பாற்றியாகவும் திருவிழா செயல்பட்டுள்ளது. சாமி கண்ணை குத்திடிச்சி கதையில் வரும் சூழல் கோயில் திருவிழாவின் கொண்டாட்டப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. ஆனால், அந்தக் கொண்டாட்டத்தில் நிகழும் ஒரு விபரீதம் பக்தியோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படுவதில் உள்ள அபத்தத்தையும் இக்கதை அழகாகச் சுட்டியுள்ளது.
நவீன கதை சொல்லலின் முன்னோடி
கோ.புண்ணியவான் நாற்பது ஆண்டுகளாக எழுதுகிறார் என்பதை விட அவர் தொடர்ந்து தன்னைத் தரப்படுத்திக் கொண்டும் தகவமைத்துக் கொண்டும் தீவிர இலக்கியம் நோக்கி முன்னேறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது மூன்று சிறுகதைத் தொகுப்பின் வழி தனது சிறுகதைப் படைப்பாற்றலை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். ஆயினும், நிஜம் தொகுப்பில் உள்ள கதைகளை விட அண்மையில் வெளிவந்த எதிர்வினைகள் தொகுப்பு முதிர்ந்த கதைகளைக் கொண்டுள்ளது. மொழியும் கதை சொல்லும் உத்தியும் சமகாலச் சிறுகதைகளின் கூறுகளை உள்ளடக்கியுள்ளது. ‘கடைசி சந்திப்புக்குப் பிறகான நினைவுக்குறிப்புகள்’, ‘புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க இயலாத சில பக்கங்கள்’, ‘நீருக்குள்ளிருந்தே நழுவும் மீன்கள்’ போன்ற கதைகள் நவீன கட்டுமுறையில் சொல்லப்பட்ட கதைகளாகும்.
மலேசிய இலக்கியச்சூழலில், கோ.புண்ணியவானின் இலக்கியப் பங்களிப்புமிக முக்கியமானது. அவர் மலேசிய அரை நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் நூல் அறுபடாமல் இருக்க, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்ததை கண்டிப்பாகக் கூறவேண்டும். அதிலும் வெறுமனே எழுதாமல் தொடர் தேடலிலும் வாசிப்பிலும் உரையாடலிலும் ஈடுபட்டு நவீன மாற்றங்களை உட்கொண்டு செரித்துக்கொண்டு தன்னைப் புத்தமைக்கவும் அவர் தயங்கவில்லை. மூத்த தலைமுறை எழுத்து வகையோடு ஒட்டி தனது படைப்புகளைக் கொடுக்கத்தொடங்கியவர் மேலும் முன்நகர்ந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நவீன கதை கூறல் முறைகளையும் வந்தடைந்திருக்கிறார். ஆகவே, கோ.புண்ணியவான் மலேசியாவில் நவீன சிறுகதை எழுத்தில் மூத்தவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பாலமாகச் செயல்படுகிறார். அவரது படைப்புகள் மலேசிய நவீன தமிழ் இலக்கிய நகர்ச்சியையும் வளர்ச்சியையும் மிகச்சிறப்பாக அடையாளம் காட்டி நிற்கின்றன.