மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதலிடம் வகிப்பது உணவு. மனித நாகரிகம் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்த சூழலில் உணவுப் பண்பாடும் ஓசையின்றி உடன் வளர்ந்ததை மானிடவியல் ஆய்வுமுடிவுகளின் வாயிலாக அறிகின்றோம். தமிழர்களது முற்கால வரலாற்றை ஆராயும்போது, உணவு உள்ளிட்ட அடிப்படைக்காரணிகள் குறித்தும் உடன் விவரிக்கப்படுகிறது. அந்த அளவிற்கு உணவிற்கான இருப்பு மனித வரலாற்றில் நீக்கமற நிலைத்துள்ளது. தொல்காப்பியர் முதலாக தற்கால எழுத்தாளர்கள் வரையிலும் தங்களது படைப்புகளினூடே வெவ்வேறு காலகட்டங்களில் உணவுக்குறிப்புகளைத் தத்தம் பாணியில் பதிவு செய்துள்ளனர். அவ்வகையில், தமிழ்ச்சூழலில் பண்பாடு குறித்த விவாதத்தில் மொழி, கலை, இனம், உடை, வீரம் ஆகியனவற்றோடு உணவு இடம்பெறத் தவறுவதில்லை. அங்ஙனம் பண்பாடு குறித்த விவாதங்களில் அதிகக் கவனம் பெறக்கூடிய உணவுதான், அண்மைக்காலத்தில் அனைவரையும் இந்திய அரசியலை நோக்கியும் பார்வையைச் செலுத்தக் காரணமாக அமைந்தது. ஆம், இங்கு உணவில் கூட பேதம் பார்த்து, அதன்பொருட்டு உயிரையும் குடிக்கும் அவலம் பெருகி வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், மனிதனது பரிணாம வளர்ச்சியில் உணவின் பங்கு குறித்தும்; தமிழர் பண்பாட்டில் அசைவ உணவு குறித்தும், உணவிற்கான மதிப்பு கூட்டப்பட்ட இன்றைய நிலை குறித்தும் விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மனித உணவில் இறைச்சி
மனித வரலாறு குறித்த அறிவியல் ஆய்வுகள் மனிதனின் தோற்றம், உடலமைப்புகள்; அவை பரிணமித்த தன்மை குறித்துத் தக்க சான்றுகளுடன் விவரிக்கின்றன. அவற்றில் மனிதனது பற்களின் அமைப்புக் குறித்தும் அவற்றின் படிநிலை மாற்றம் குறித்தப் பல்வேறு தகவல்கள் சுட்டப்படுகின்றன. அதாவது “நியாண்டர்தால்களுக்கு எட்டு இணைப்பற்கள் காணப்படுகின்றன (8×2). வெட்டுப்பற்கள் 2/2, கோரைப்பற்கள் 1/1, கடைவாய்ப் பல் 3/3, இடைவாய்ப் பல் 2/2. இவை பொதுவாக வேட்டையாடிய மாமிசத்தைக் கிழிக்கவும், அரைக்கவும் அதிகம் பயன்பட்டன. குறிப்பாக, கோரைப்பற்களின் அமைப்பானது மனிதன் மாமிசப்பட்சிணி என்பதை உணர்த்துவதாக உள்ளது”1 இக்கூற்றின் வாயிலாக மனிதனது தொடக்ககால உணவு பெரும்பாலும் இறைச்சியே என்பதையும் அதற்கேற்ப மனிதனது உடல் பாகங்கள் தகவமைக்கப்பட்டுள்ளன என்பதையும் அறியலாம். செவ்வியல் காலகட்டத்தில் வாழ்ந்த இனக்குழு மக்களான சங்ககால மக்கள் உணவிலும் இறைச்சி பயன்பாட்டில் இருந்ததை அறியமுடிகிறது.
தொல்தமிழரும் உணவுப் பயன்பாடும்
மனித வரலாறு குறித்த விவாதத்தில் உணவினைப் புறந்தள்ளிவிட இயலாது. உலகளவில் நடைபெறக்கூடிய மானிடவியல் சார்ந்த ஆய்வுகளில் உணவு குறித்த பகுப்பாய்வுகள் பல தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காரணம், உணவின் பயன்பாடு மனித வாழ்வியலோடு தொடர்புடைய உயிர்க்காரணியாகும். ஆதியில் மனிதக்கூட்டங்கள் வேட்டைச் சமூகக் குழுக்களாக இயங்கின. ஆகவே, குழு வேட்டையில் கிடைத்த இறைச்சியும், இயற்கையில் எளிதாகக் கிடைத்த தாவரவகை உணவுகளுமே மனிதனின் அடிப்படை உணவுகளாயின. இக்காலகட்டத்தில் மனிதனுக்கு அவ்வப்போது ஏற்படும் பசியினைப் போக்கிக்கொள்ளும் தேவைக்கே உணவு என்ற நிலை நிலவியது. ‘அடுத்த வேளைக்கான உணவு சேகரிப்பு’ என்ற எண்ணம் மனிதனுக்குத் தோன்றிய நிகழ்வே நாகரிக வளர்ச்சியின் அடுத்தகட்ட நகர்வாகக் கருதப்படுகிறது. இங்கிருந்துதான் மனித சமுதாயத்தின் நவீன வரலாறு ஆரம்பமாகிறது என்கின்றனர் மானுடவியல் அறிஞர்கள். இனக்குழுச் சமூகத்தின் உணவுப் படிநிலை வளர்ச்சியினை அறிந்துகொள்ள ஏதுவாக தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்கள் விளங்குகின்றன. “புராதனத் தமிழ்ச் சமூகத்தில் ஆரம்பத்தில் கூட்டு வாழ்க்கைமுறையே நிலவியது. உள்ளோர், இல்லோர் என்ற பேதம் இருக்கவில்லை. அவர்கள் கிடைத்ததைப் பகிர்ந்து உண்டனர். அல்லது பட்டினி கிடந்தனர். உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டனர், அலைந்தனர். உணவு தேடும் முயற்சியில் கூட்டாக ஈடுபட்டனர். தலைவரும், வீரரும் சமமாக இருந்து உணவு உண்டனர், கள் அருந்தினர். இறைச்சி சாப்பிட்டனர். அவர்களது உணவுமுறை எளியதாக அமைந்தது”2 என்கிற இக்கருத்து தொல்தமிழர் வாழ்வில் உணவிற்கான இருப்பு பற்றி அறிந்திட ஏதுவாக உள்ளது. அவற்றை நோக்குகையில் இனக்குழு மக்கள் வாழ்வில் பசி என்னும் தூண்டலின் அடிப்படையில்; தேவை ஏற்பட்டபோது மட்டுமே உணவு என்று வாழ்ந்துவந்தனர். இயற்கை உணவுகளும், வேட்டையாடலும் அதற்குப் பயனளிப்பதாக இருந்தது. நகரும் வாழ்வியலைக் கொண்டிருந்த மக்களை சமூகமயமாதல் என்னும் கட்டமைப்பிற்குள் இட்டுச்சென்றது உணவுதான் என்றால் அது மிகையாகா. உழவுத்தொழிலும் அது சார்ந்த மரபு அறிவும் மனிதனை நிலையாக வாழ்ந்திட உந்தியது என்பதை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்.
மேலும், சங்ககாலச் சிற்றூர்களில் வசித்த தொல்குடிகள் மேற்கொண்ட தொழில் என்பது பெரும்பாலும் பொருளீட்ட அன்றி, அன்றாட உணவுத் தேவையினைப் பூர்த்திசெய்து கொள்ளவும், அடுத்த வேளை உணவுக்கான பொருட்களை உருவாக்கிக் கொள்ளவுமே என்றிருந்தன. ஐவகை நிலங்களில் வசித்த மக்களின் அன்றாட தொழில்களை நோக்கும்போது அது உணவுக்கான தேடல்தான் என்பது தெளிவாகும். சான்றாக, சுரம்மிக்க நிலமான பாலை நிலத்து மக்கள் வழிப்பறியின்பால் கிடைக்கும் பொருட்களையே நம்பியே வாழ்ந்தனர். எனினும் வேட்டையாடுவதும், ஆநிரை கவர்தலும் அவர்களது உணவுத் தேவையினைப் பெருமளவு நிறைவுசெய்தன. இவை தவிர, ஈசல், உடும்பு, நண்டு, முயல், மான், ஆநிரைகள் போன்றவற்றின் இறைச்சியினையும் உட்கொண்டனர்.
“தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகுஆ வீழ்த்து திற்றி தின்ற…” (அகம் 249: 12-13)
“இன்சிலை எழிஏறு கெண்டி புரைய
நிணம்பொதி விழுத்தடி நெருப்பின் வைத்து எடுத்து
அணங்குஅரு மரபின் பேஎய் போல
விளர்ஊன் தின்ற வேட்கை நீங்க
துகள்அற விளைந்த தோப்பி பருகி
குலாஅ வலவில் கொடுநோக்கு ஆடவர்
புலாஅல் கையர் பூசா வாயர்
ஒராஅ உருள்துடி குடுமிக் குராலொடு
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும்…” (அகம் 265: 12-21)
“வயவாள் எறிந்து வில்லின் நீக்கி
பயம்நிரை தழீஇய கடுங்கண் வழவர்
அம்புசேண் படுத்து வன்புலத்து உய்த்தென
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்புஆ எறிந்து குருதி தூஉய்
புலவுப்புழுங்கு உண்ட வான்கண் அகலறை…” (அகம் 309:1-6)
விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் – அகம் 89/10
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க – அகம் 265/15
விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர் – புறம் 359/5
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர் – அகம் 129/12
மேற்கண்ட சங்க இலக்கிய வரிகள் யாவும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களது உணவில் இறைச்சியின் பங்கு குறித்து விவரிப்பதாக உள்ளன. அவற்றில், அகநானூற்று 249-ஆவது பாடலானது; மயிலின் இறகுகளால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த மழவர்கள், பல பூக்களையுடைய காட்டில் சுருங்கிய நிழலில் தங்கி, இளைய பசுவினைக் கொன்று, அதன் ஊனைத் தின்ற இடமாகிய புலால் வீசும் இடம் என்று விரிந்து செல்கிறது. அடுத்ததாக இடம்பெறும் சான்றுகளில் ‘விளர் ஊன்’ என்பது புதிய வெளிரிய இறைச்சி எனப்படும். ‘கொழுப்பு ஆ தின்ற கூர்ம்படை மழவர்’ கொழுத்த ஆக்களைக் கவர்ந்துசென்று, கொன்று தின்ற கூரிய படைகளையுடைய மழவர்கள் என்ற விளக்கம் ஆநிரைகளை உண்ணும் வழக்கம் தமிழரிடையே வழக்கத்தில் இருந்ததைக் காட்டுகின்றது. ‘திற்றி’ எனும் பதம் கடித்துத் தின்னுதற்குரிய இறைச்சி என்று அகராதிகள் சுட்டுகின்றன. மேலும், பாலை நிலத்தில் காணப்படும் புல்லரிசியினை நிலஉரலில் குற்றிச் சமைத்து அதனுடன் உப்புக்கண்டம் (பதப்படுத்தப்பட்ட இறைச்சி) சேர்த்து உண்டனர் என்ற செய்தியும் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளது. வேட்டையாடுவதில் வல்லவர்களான மறவர்கள் வில்லாற்றலில் சிறந்தவர்களாதலின் அவர்கள் இருப்பிடங்களைச் சுற்றிக் காணப்படும் விலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியினை வாட்டி உண்டனர். எஞ்சியவற்றைப் பக்குவப்படுத்திச் சேகரித்து வைத்தனர். அக்காலத்தைய இனக்குழுக்கள் ஆநிரை கவர்தலைத் தொழிலாகக் கொணடிருந்தனர் என்பது நாம் அறிந்ததேயாகும். அங்ஙனம் ஆநிரை கவர்ந்து வருகையில் தம் வெற்றியினைக் கொண்டாட, அவற்றில் கொழுத்த கன்றை அடித்து அதன் மாமிசத்தை வாட்டி உண்டுள்ளனர். தாம் வழிபடும் தெய்வங்களுக்கு நன்றிப்பலியாகவும் ஆநிரை இறைச்சியைப் படைத்துள்ளனர். ஆனால் இன்றைக்கு மாட்டு இறைச்சியினை உண்போர் தீண்டத்தகாதோர் என்று இச்சமூகம் வரையறுத்துள்ளது. சங்ககாலத் தொல்தமிழரின் உணவில் அது இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சங்ககால இனக்குழு மக்கள் புலால் உணவினையே பெரிதும் விரும்பியுண்டனர். இது பண்டைய நாடோடி இனக்குழு வாழ்வில் மேற்கொண்ட வேட்டைச் செயலின் தொடர்ச்சியாகவே தெரிகிறது. குறிப்பாக, சங்ககாலச் சிற்றூர் மக்கள் வேட்டை உணவுகளையே பெரிதும் விரும்பி உண்டனர். அந்தந்த நிலங்களில் காணப்பட்ட உண்ணக்கூடிய விலங்குகளைத் தத்தம் பாரம்பரிய மரபுகளின் அடிப்படையில் வேட்டையாடி உண்டனர் என்பதைச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. “வசதி குறைந்த குறிஞ்சி நில மக்கள் பெரும்பாலும் ஆநிரைகளைக் கவர்ந்தனர். வேட்டையாடி மிருகங்களைக் கொல்வதைவிட, ஆநிரைகளைக் கவர்வது வேட்டுவருக்குக் குறைந்த உழைப்பையும் அதிகப்பயனையும் தந்தது. ஆநிரை கவர்தல் ‘வெட்சி’ என்ற பெயரில் புறத்திணையில் பின்னாளில் அது ஒரு போர் ஒழுக்கமாகப் பரிணமித்தது”3 என்ற இக்கருத்து வேட்டைச் சமூக இனக்குழு மக்களின் ஆதிகாலத்துப் புலால் உணவில் ஆநிரை உள்ளிட்ட பல விலங்குகளின் இறைச்சி உணவுப்பட்டியலில் இடம்பெற்றதை அறிகின்றோம். குறிப்பாக மாட்டிறைச்சி, தொல்காப்பியப் புறத்திணைச் செய்திகளை நோக்குகையில், ஆநிரை கவர்ந்த வீர்கள் அம்மகிழ்ச்சியைக் கொண்டாடும் பொருட்டு, அவற்றில் ஒன்றை அறுத்துப் பகிர்ந்து உண்ட செய்திகள் பதிவாகி உள்ளன. சீறூர் மன்னர்களும் காளையினை அறுத்து உண்டதாகப் புறப்பாடல்கள் விவரிக்கின்றன. ஆனால், பிற்காலங்களில் இவ்வுணவு தீட்டாகக் கற்பிக்கப்பட்டது. அதனை உண்போர் தாழ்ந்த மக்கள் என அடையாளப்படுத்தப்பட்டனர். உண்மையில் இது ஆதித்தமிழர்களின் பாரம்பரிய உணவு என்பது குறிப்பிடத்தக்கது.
சங்ககாலப்பாடல்கள், தமிழகத்தில் இறைச்சி உண்பது இயல்பான களியாட்டமாக இருந்ததைக் காட்டுகின்றன. ஆநிரை கவர்ந்து வந்து அவற்றை கொன்று உண்டு அந்த கொழுப்பை வில்லின் நாணிலேயே தேய்த்துவிட்டு; உடனே மீண்டும் ஆநிரை கவரச்செல்லும் தலைவனைப்பற்றி சங்கப்பாடல் வியந்து பாடுகிறது. அதேவேளையில் மாட்டிறைச்சியை உண்பவரை ‘இழிசினன்’ என்று தரம்தாழ்த்திய பதிவுகளையும் காணமுடிகிறது. இதற்கான காரணம், வந்தேறிகளின் எச்சங்கள் பிற்காலத்தில் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்து வலிந்து சேர்த்த இடைச்செருகல்களே அவை என்பது கண்கூடு.
உணவும் பண்பாட்டுச் செறிவூட்டலும்
ஒவ்வொரு நாட்டிலும் வாழக்கூடிய இனக்குழுக்களுக்கு, அவர்கள் வாழும் நிலம்சார்ந்த அடையாளங்களில் உணவும் இடம்பெறுவதுண்டு. அங்ஙனம் வாழ்விடம், சுற்றுச்சூழல், இயற்கைவளம் ஆகியவற்றின் அடிப்படையில் உயிரினங்கள் உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. அவற்றில் மனிதனும் அங்கம் வகிக்கின்றான். சமைக்கும் முறை, பரிமாறுதல், உண்ணும் விதம் என ஒவ்வொரு சமூகக் குழுவிற்கும் பல தனித்தன்மைகள் உள்ளன. இத்தனித்தன்மைகளைச் சமூக மானிடவியல் ஆய்வாளர்கள் தங்கள் இனவரைவியல் ஆய்வுகளில் சிறப்புறப் பதிவுசெய்துள்ளனர். சான்றாக, மாட்டிறைச்சியைச் சமைத்து உண்ணும் மக்கள் மீதான இச்சமூகப் பார்வை என்ன என்பது நாம் நன்கு அறிந்ததே. “தலித்துகளின் மாட்டுக்கறி, பன்றிக்கறி உண்ணும் வழக்கமே அவர்கள் மீதான தீண்டாமைக்கான அடிப்படைக் காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது”4 என்பதே இன்றுவரையிலும் பெரும்பாலானவர்களின் கருத்தாகும். இவ்வாறாக மாட்டிறைச்சியை உண்ணும் இனக்குழுக்களின் சமூக அமைப்பையும், அவர்களுக்கான சமூக இருப்பினையும், அவர்கள்மீது திணிக்கப்படும் ஏற்றத்தாழ்வையும் பார்க்கும்போது, உணவு என்பது உண்ணக்கூடிய அதாவது பசியைப் போக்கக்கூடிய ஒரு பொருள் என்ற கருத்து இங்கு உடைபட்டு அதனுள் பண்பாடு என்னும் மாயக் கற்பிதம் திணிக்கப்பட்டுள்ளதை உணரலாம். உணவுகளின் மீதான புனிதமானது – புனிதமற்றது, விலக்கும் – விருப்பமும் என பலவகையில் உணவுக் கற்பிதம் இந்தியாவில் நிலவுகின்றது. உணவை வட்டாரம் சார்ந்து, நிலம் சார்ந்து, சமூகங்கள் சார்ந்தது எனப் பலதரப்பட்டவர்களின் அடையாளமாகக் கொண்டுவர முயற்சி செய்துள்ள நிலையில், ஆரியர்களின் பண்பாட்டில் இறைச்சி இடம்பெற்றிருந்ததையும் மறுக்க இயலாது. சான்றாக, “இந்தியச் சமூகத்தின் தனி முத்திரை”5, “இந்தியச் சமூகத்துக்கு கருத்தளிக்க வந்த கபிலர், புத்தர், மகாவீரர் மற்றும் பலரையும் பின்தள்ளி ‘மநுவே’ அனைவரையும் வழிநடத்துவராக இன்றும் இருக்கிறார்”6 என்றெல்லாம் புகழப்படும்(!!) ‘மனுதர்ம சாஸ்திரம்’ என்னும் நூல் பின்வருமாறு கூறுகின்றது; “முள்ளம்பன்றி, சல்ய மிருகம், உடும்பு, காண்டாமிருகம், ஆமை. முயல் இவை ஐந்தும் நகங்களுடையவை எனினும், இவற்றையும்; ஒட்டகம் தவிர்த்த ஒற்றைப் பல்லுள்ள மிருகங்களையும் உண்ணலாம்”7 “வேள்விக்கென்றே பசுக்கள் பிரம்மனால் படைக்கப்பட்டன. உலக நன்மையை முன்னிட்டே நடைபெறுவனவான வேள்விகள் செய்யப்படும்போது அது தவறாகாது”8 என்ற இக்குறிப்புகளை பொது வெளியில் நின்று ஆராய்கின்றபோது, மனிதனது வாழ்வில் ‘பசிக்கு உணவு’ என்பதுதான் ஆரம்ப நிலை என்பதும், இன்றைய போலிக் கற்பிதங்களான; ‘மாட்டிறைச்சி உண்ணாதே, பசுவதை இந்தியப் பண்பாட்டுக்கு எதிரானது’ என்பது போன்ற வெற்று முழக்கங்களைப் பொய்யாக்குவதாக உள்ளன.
இறைச்சியும் தீண்டாமையும்
இந்தியச் சமூகத்தில் இறைச்சி உண்பவர்கள் இரு கூறாகப் பகுக்கப்படுகின்றனர். அதாவது, ஆட்டிறைச்சி உண்பவன் மேலோன். மாட்டிறைச்சி உண்பவன் கீழோன். இவ்விரண்டில் உள்ள ஏற்ற இறக்கம் எதனால், எங்கிருந்து வந்தது என்பது புரியாத புதிராகவே உள்ளது. மாட்டிறைச்சி உண்பவர் ஒதுக்கப்பட்டதன் விளைவு, அவர்களை ‘தீண்டத்தகாதவர்’ என்று பிரித்தாளக் காரணமானது. “வடக்கில் நிலவிய நால்வருண முறையிலிருந்து ஆயிரக்கணக்கான இறுக்கமான சாதிகள் கிளைத்தன. உணவு முறையாலும், மணவினையாலும் ஒவ்வொரு சாதியும் பிற சாதிகளோடு உறவு கொள்ள முடியாதவாறு இறுக்கமுற்றது”9 என்ற இக்கருத்து உணவின் பின்னணியில் இந்தியாவில் சாதிய அமைப்புகள் நிறுவப்படன என்பதை உணர்த்துவதாக உள்ளது. இதே உணவுப் பேதம்; குறிப்பிட்ட மக்களின் சமய மாற்றத்திற்கும் வழிவகுத்தது என்பதை நாம் அறிவோம். மாட்டிறைச்சி உண்ணும் மக்களைத் தாழ்த்தி ஒதுக்கிய இந்துமதத்தைத் துறந்து கிறித்தவ சமயத்தில் தஞ்சம் புகக் காரணமானதும் உணவுதான். ஆனால், பின்னாளில் இந்தியக் கிறித்தவர்களிடையேயும் சாதியம் தலைவிரித்தாடியது. இன்றைக்கும் ஆங்காங்கே தலித்துகள் தேவாலயங்களில் புறக்கணிக்கப்பட்டு, தேவாலயங்களில் உரிமைகளை இழந்து ஒதுக்கப்படுகின்றனர். அதற்கு அவர்கள் உண்ணும் மாட்டிறைச்சியும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், பரிசுத்த வேதாகமம் மாட்டிறைச்சியினை உயர்ந்ததொரு உணவாகச் சுட்டுகின்றது. சான்றாக ஊதாரியின் மைந்தன் உவமை பின்வருமாறு விவரிக்கின்றது; “அப்பொழுது தகப்பன் தன் வேலையாள்களிடம்; நீங்கள் உயர்ந்த ஆடைகளைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குக் காலணிகளையும் அணிவியுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து சிறந்த விருந்து சமையுங்கள். நாம் விருந்துண்டு, இன்பமாயிருப்போம். என் மகனான இவன் இறந்தான், திரும்பவும் உயிர்த்தான். காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்போது அவனுடைய மூத்தமகன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டுக்கு அருகே வருகிறபோது, கீதவாத்தியத்தையும், நடனக்களிப்பையும் கேட்டு, வேலையாள்களில் ஒருவனை அழைத்து; என்ன என்று விசாரித்தான். அதற்கு அவன், உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் நலமுடன் உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காக விருந்து செய்கிறார் என்றான். அப்பொழுது அவன் கோபமடைந்து, வீட்டினுள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தார். அவன்; தகப்பனுக்குப் பதிலாக; இதோ, இத்தனை வருடகாலமாய் நான் உமக்கு வருந்தி உழைத்தேன், ஒருக்காலும் உம்முடைய கட்டளையை நான் மீறாதிருந்தும், என் நண்பர்களோடு நான் இன்பமாயிருக்க, நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக்கூடக் கொடுக்கவில்லை. விலைமாதர்களிடத்தில் உம்முடைய சொத்தை அழித்த உம்முடைய மகனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காகச் சமைத்து விருந்து கொண்டாடுகிறீர் என்றான்” (லூக்கா 15:11-32). ஆகவே, உலகளவில் தொன்மைவாய்ந்த குடிகள் யாவரும் இறைச்சி உண்ணும் வழக்கத்தையே கொண்டிருந்தனர். சான்றாக, இன்றுவரையிலும் உலகளவில் எண்ணிக்கையில் அதிகளவில் வாழும் அயலகக் கிறித்தவர், இசுலாமியர், சீனர்கள் என அனைவரும் மாமிச விரும்பிகள்தான் என்பது உலகறிந்த உண்மை. ஆகவே மாட்டிறைச்சி என்பது உண்ணக்கூடிய ஒன்றுதான். அப்படியிருக்க அதனையுண்ணும் மக்களைப் பிரிவினைக்குட்படுத்துதல் எங்ஙனம் தகும்?
நிறைவாக
உணவு என்பது உயிர்வாழத் தேவையான ஒன்றே என்றாலும், காலப்போக்கில் அதன் தன்மை, வகை, சமைக்கப்படும் முறை போன்றவற்றால் அதற்கான மதிப்பு கூட்டப்பட்டது. வயிற்றுப் பசியினைப் போக்கிய நிலை மாற்றம் பெற்று; சமூகம், தகுதி, பொருளாதாரம் ஆகியவற்றிற்கு ஏற்ப உணவின் மதிப்பு இச்சமூகத்தால் மாற்றியமைக்கப்பட்டது என்பதே உண்மை. இன்று இந்தியச் சூழலில் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கு என்றே தனித்த உணவுவகைகள் அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. ‘உணவும் சமூகமும்’ ‘உணவும் பண்பாடும்’ ஒன்றையொன்று ஊடாடுபவை. மனித குலம் ஒன்றாயினும்; வாழும் சூழலுக்கேற்பப் பண்பாட்டிற்கும், சமூகத்திற்கும், குழுவிற்கும், தனிநபருக்கும் உணவுவழியாகத் தனித்தன்மையான அடையாளங்கள் இவ்வுலகில் வகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒருபடி மேலே சென்று உணவில் உயர்வு-தாழ்வு என்ற பேதங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இவை திட்டமிட்டுக் கற்பிக்கப்பட்டவை. இத்திட்டத்தினை வகுத்து உருவாக்கியவர்கள் வந்தேறிக் கூட்டங்களேயாவர். அவ்வாறு செய்வதன் வாயிலாக சமூகப் பிரிவினைகளை உருவாக்கிட இயலும் என்ற அவர்களின் இலக்கு, அது மிகச்சரியாகப் பயனளித்தது. அன்று முதலாக உணவு என்பது ஒரு பொருளாக அன்றி, அது சமூகத்துடன் இணைந்த ஓர் குறியீடாகக் கருதப்படுகின்றது. இன்றைக்கு எவனோ விரித்த வலையில் அகப்பட்டுக் கொண்டு, நீ இதை உண்ணாதே, இது புனிதமானது! இது இழிவானது! என்று பாடம் புகட்டும் வந்தேறிகளின் மிச்சங்களுக்கு, அப்பாவி மண்ணின் மைந்தர்கள் பலியாவதுதான் இப்பொதுவுடைமை இந்தியாவின் இறையாண்மையாகக் கருதப்படுகின்றது.
குறிப்புகள்:
- சு.கி. ஜெயகரன், மூதாதையரைத் தேடி, ப-44.
- சி.மெளனகுரு, பண்டைத் தமிழர் வரலாறும் இலக்கியமும், ப. 53.
- மேலது, ப-52.
- ச.சீனிவாசன், ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம், ப-241
- திருலோக சீதாராம் (மொழிபெயர்ப்பாளர்), மனுதர்ம சாஸ்திரம்,பதிப்புரை
- மேலது
- மேலது, அத்தியாயம் -5, சுலோகம் -18, ப-72.
- மேலது, அத்தியாயம் -5, சுலோகம் -39, ப-73.
- ச.சீனிவாசன், ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம், ப-240