சிங்கப்பூர் வாசகர் வட்ட விழா : ஓர் அனுபவம்

20170309_210446எம்.கே.குமார் தனது ‘5.12 PM’ சிறுகதை நூலுக்கு முன்னுரை கேட்டிருந்தார். அப்படியே அவசியம் சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு நூல் குறித்து பேச வேண்டும் என்றார். நான் முதலில் நூல் குறித்து எழுதிவிடுகிறேன்; பின்னர் வருவது குறித்து பேசுவோம் என்றேன். என்னால் சடங்கான முன்னுரை எழுத முடியாது என்பதை அறிவேன். மலேசியாவில் எனக்கு முந்தைய தலைமுறையிடம் எப்போதும் இருக்கும் ஒவ்வாமை இந்த முன்னுரைதான். முன்னுரை என்பதே ஒருவரைப் பாராட்டி தலையில் தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டும் என்பதாகி விட்டிருந்தது. அது ஒரு கலைஞனுக்கு இழைக்கும் அநீதி என்றே நம்புபவன் நான்.  சக படைப்பாளியின் வளர்ச்சியை விரும்பும் ஒருவர் தட்டிக்கொடுத்துப் பாராட்டுவதாகக் கூறி தட்டித்தட்டியே தூங்க வைக்க மாட்டார். தான் பாராட்டுவதால் ஒருவர் வளர்கிறார் என்பதெல்லாம் வெற்றுக்கற்பனைதான். அல்லது அதுபோன்ற பாராட்டுகள் பலவீனமான படைப்பாளிகளுக்குத் தேவைப்படலாம். தங்கள் படைப்பில் இருக்கும் காலி இடங்களை அந்தப்பாராட்டுகளை வைத்து நிரப்பிக்கொள்ளலாம். தீவிரமான படைப்பாளி தன் படைப்பில் இருக்கும் பலவீனங்களை அறிந்து அதைக் களையவே நினைப்பான். நான் ‘5.12 PM’ சிறுகதை நூலுக்கு கறாரான விமர்சனத்தையே முன்வைத்து எழுதினேன்.

17038528_1432996433391410_3048943692829252196_o

எம்.கே.குமார்

ஆச்சரியமாகக் குமாரிடமிருந்து ஆரோக்கியமான பதில் வந்தது. அதுவே அவர் படைப்பிலக்கிய வளர்ச்சியின் மீது வைத்திருக்கும் அக்கறையைக் காட்டியது. அது இந்தத்தலைமுறையினரிடம் இருக்கும் ஒரு பண்பாகவே நினைக்கிறேன். தன் படைப்புக்குறித்து மாற்றுக்கருத்துக் கொண்டவர்களிடம் நெருக்கமாக இருக்கும் பலரையும் இந்தத்தலைமுறையில் அதிகம் காண முடிகிறது. குமார் மூலமே இம்முறை சிங்கைப் பயணம் சாத்தியமானது.

வாசகர் வட்ட ஆண்டு விழா

வாசகர் வட்ட ஆண்டு விழாவில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. சித்ரா ரமேஷ் தலைவராக இருந்து உற்சாகமாகவே இவ்வியக்கத்தை வழிநடத்துகிறார். ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான எழுத்தாளர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கின்றனர். ஜெயமோகன், நாஞ்சில் நாடன், ஜோ டி குரூஸ் எனும் பட்டியலில் இம்முறை தமிழச்சி தங்கபாண்டியன் அழைக்கப்பட்டிருந்தார். நான் அவரைப் பார்ப்பது இதுவே முதன்முறை. பல புகைப்படங்களில் பார்த்தது போலவே அச்சு மாறாமல் இருந்தார். ஷாநவாஸ் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சி மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. குறித்த நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கினர். முன்னேற்பாடுகள் ஆரோக்கியமான விளைவுகளை வழங்கியது. எழுத்தாளர் அழகு நிலா கச்சிதமாக அறிவிப்பு செய்தார். பெரும்பாலான மேடைச் சடங்குகள் நீக்கப்பட்டிருந்தன.

எம்.கே.குமாரின் 5.12 PM நூலுடன் சித்ரா ரமேஷின் ‘ஒரு துளி சந்தோஷம்’,  ஷாநவாஸின் ‘ஒலி மூங்கில்’ ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளும் நீதி பாண்டியின் ‘உதயா மது மாயா’ என்ற கவிதை நூலும் வாசகர் வட்டத்தினர் எழுதித் தொகுத்த ‘இடமும் இருப்பும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலும் இந்த 28ஆவது ஆண்டு விழாவில் வெளியீடு கண்டதுடன் சிராங்கூன் டைம்ஸ் http://serangoontimes.com/ அகப்பக்கம் மற்றும்  வாசகர் வட்ட அகப்பக்கமும் http://vaasagarvattam.com  அறிமுகம் கண்டது. மாலன் அவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.

எம்.கே.குமாரின் நூல் குறித்து நான் நூல் அறிமுகம் செய்தது போலவே,  சிவானந்தம், சித்துராஜ் பொன்ராஜ், எம்.கே.குமார், பாரதி ஆகியோர் வெளியிடப்பட்ட மேலும் நான்கு நூல்கள் குறித்து அறிமுகம் செய்தனர். வழங்கப்பட்ட நேரத்திற்குள் பேச்சு இருந்தது. எனக்கு 10 நிமிடம் வழங்கியிருந்தார்கள். வல்லினம் நிகழ்ச்சிகளில் நேரம் எடுத்துவிட்டால்  நண்பர்கள் யாரையாவது குரல் கொடுக்கச் சொல்வேன். சிங்கையில் 10 நிமிடத்தைத் தாண்டிவிடக்கூடாது என கவனமாகவே பேசினேன். உரையைக் கேட்க : https://www.youtube.com/watch?v=pSq_d_inLXc&feature=share

தமிழச்சி தங்கபாண்டியன் உரை

17039288_1432998743391179_7983013031672030230_oதமிழச்சி தங்கப்பாண்டியன் உரை அவரது படைப்பிலக்கிய முயற்சிகள் அவரது வாசிப்பு என விரிவாகிச்சென்றது. வெகுமக்கள் மத்தியில் எளிய உதாரணங்கள் மூலம் அறிவார்த்தமான விடயங்களைப் பேசும் கலை அவருக்கு வாய்த்திருந்தது. கரிசல்காட்டு மண் சார்ந்த எழுத்தாளரான அவர் தனது மண் சார்ந்த மக்களின் நெருக்கடிகளை மறந்துவிட்டு இலக்கியத்திற்குள் நுழைய முடியாது என்றார். நாம் வாழும் மண் சார்ந்தும் அதில் உள்ள அரசியல் சார்ந்தும் உருவாகும் இலக்கியமே காத்திரமானது என்றவர், ‘சர்வதேச பாணி இலக்கியம் என ஒன்று இல்லை’ எனக்கூறியபோது அவரது பேச்சில் எனக்கு ஈடுபாடு வந்தது. ‘மொழிபெயர்ப்பின் தேவை குறித்து உடன்பாடான கருத்தைக் கொண்டிருந்தாலும் மொழிபெயர்ப்புக்காக இசைந்து ஒரு படைப்பு உள்ளூர் பிரதேச மொழியை நிராகரித்து வருவதில் தனக்கு உடன்பாடில்லை’ என்றார். அவர் கவிதைகள் அவ்வாறான உள்ளூர் பிரதேச மொழியைக் கொண்டுள்ளதைக் கூறி, அதுவே தன் அடையாளம் என்றார். “முழுக்க பனி பொருந்திய பிரதேசத்தில் உதட்டை அதிகம் அசைக்காமல் பேசுபவர்களைப் போல திறந்த வெளி வயல்காட்டில் வேலை செய்பவர்களால் பேச முடியாது.” என்ற தமிழச்சியின் பேச்சு எனக்கு உவப்பானதாகவே இருந்தது.

பொதுவாக பெருநகரங்களில் வசிப்பவர்கள் சத்தமிட்டு பேசுவதை அநாகரீகமாகக் கருதுவதுண்டு. அவர்கள் நாகரீகமாகக் கருதுவது ஆங்கிலேயர்களின் உச்சரிப்பை ஒத்த உதட்டசைவை. நான் பள்ளியில் அறிவியல் பாடம் போதிக்கும்போது பனிக்கரடிகளும் ஓநாய்களும் குளிர்பிரதேசத்தில் தங்கள் உடலில் இருக்கும் உஷ்ணத்தைத் தக்கவைக்க அதிகம் அசையாமல் நெடுநேரம் தூங்கும் என போதிப்பதுண்டு. கரடிகள் மட்டுமல்ல; அதுபோன்ற பிரதேசங்களில் வாழும் மனிதர்களும் அவ்வாறுதான் செயல்படுகிறார்கள். அந்தத் தேசம் கொண்டிருக்கும் சீதோனநிலை, உணவு, வாழ்க்கை முறையை ஒத்து அவர்களது பழக்க வழக்கங்கள் அமைகின்றன. மேற்கை வளர்ச்சியின் அடையாளமாகப் பார்க்கும் நாம் அதுபோலப் பழக்க வழக்கங்களையும் அதுபோல மொழியையும் மாற்றிக்கொள்வதையுமே நாகரீகம் எனக் கருதுகிறோம். அது இலக்கியத்திலும் தொனிக்கிறது.

17098609_1433008060056914_2211487262199892000_nதொடர்ந்து மாலன் பேசினார். நமக்கு நடக்கும் ஒரு அனுபவத்தை நமக்கான அனுபவமாக மட்டும் பதிவு செய்யாமல் உலகப் பொதுமைக்குமாகச் செய்ய வேண்டும் என்றார். பொதுமனிதனுக்கான அனுபவமாக ஓர் இலக்கியம் மாறுவதன் அவசியம் குறித்து கூறினார். கி.ராஜநாரயணன் போன்றவர்களை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல்களைக் கூறினார். மாண்ட்டோ முதல் புதுமைப்பித்தன் வரை பொதுமனிதனுக்கான அனுபவமாகத்தான் எழுதியுள்ளனர் என்றார். எனக்குச் சட்டென புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ சிறுகதை நினைவுக்கு வந்தது. அக்கதையை மொழிபெயர்க்க முடியும் என்றாலும் (மொழிபெயர்த்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை) தொன்ம அடையாளத்தின் துணையுடன் உருவாகியிருக்கும் அதிலுள்ள அங்கதத்தை வேறு வகை கலாச்சாரம் கொண்ட ஒருவரால் அறிய முடியுமா என்ற கேள்வியை வைக்க வேண்டியுள்ளது. கொஞ்சம் மேலோட்டமாகச் சொல்வதென்றால் ‘இருபத்து மூன்றாம் புலிகேசி’ திரைப்படம் தமிழ் ரசிகனுக்குக் கொடுத்த அங்கதம் இந்தியாவில் வேறொரு மொழி பேசுபவருக்குக் கொடுக்குமா என்பது சந்தேகம்தான். காரணம் திரைக்கதையைத் தாண்டி அரசன் கதாபாத்திரத்தினுள் உள்மடிப்புகளாக இருக்கும் அடையாளங்கள் திரைப்படத்தில் சொல்லாத அதற்கு முன் நம் மனதில் படிந்திருப்பவையே. அவையே நம்மை சிரிக்க வைக்கிறது.

மாலன் தன் உரையில் எதையும் தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால் இவ்வாறான தெளிவில்லாத பேச்சுகள்தான் இளம் எழுத்தாளர்களைக் குழம்பச் செய்பவை. பொது மொழியையும், தன் அடையாளத்தை நீக்கி, பொதுவான சூழலையும், பொதுவான வாசிப்புக்கு உகந்த சாரத்தையும் தேர்ந்தெடுக்கும்  ஓர் எழுத்தாளன், தன்  அடையாளத்தைத் தவிர்த்தே எழுத  வேண்டியுள்ளது. சமூகம் பன்மைத்தன்மைகளால் ஆனது. ஒற்றைப்படையான எழுத்தியக்கம் எழுத்தாளனை கருத்துச்சுதந்திரமற்ற படைப்பாளியாகவே உருமாற்றும். மேலும் உலகம் மொத்தத்துக்குமான இலக்கியப்பிரதியாக எது கருதப்பட்டாலும் அது எழுதப்பட்ட மொழியின் அசல் காத்திரத்துடன் அறிந்துகொள்ளப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அணைந்தபின் இன்னும் உஷ்ணம் இருக்கும் கரித்துண்டை கையில் வைத்துக்கொண்டு நம்மால் நெருப்பின் ஜுவாலையைக் கற்பனை செய்ய முடியும்.

உலகில் எந்த மொழியில் ஒருவன் தன் அடையாளத்தைச் சுமந்துகொண்டு இலக்கியம் படைத்தாலும் அந்தக் கலாச்சாரம் தங்களுக்குள் கொண்டுள்ள நுட்பமான அனுபவங்களை உலகம் மொத்தத்துக்குமாகக் கடத்திவிட முடியாது.  கி.ராவின் எழுத்துகள் அவ்வாறான தனித்துவத் தன்மைக்கொண்டதே. மொழிபெயர்ப்பைக் கொண்டு அவரது ஆளுமையை அளவிட முடியாது. ஆனால் மாலன் போன்ற பத்திரிகையாளர்கள் ஒரு இலக்கியப்பிரதிக்கான முக்கியத்துவத்தை விருதுகளை வைத்து அளவிட முடிவதில் ஆச்சரியம் இல்லை. ‘இந்தியா டுடே’ போன்ற பத்திரிகை, ‘திசைகள்’ போன்ற முயற்சிகள் மூலம் நவீன இலக்கியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது. அதுவே நவீனத் தமிழ் இலக்கியப்பரப்பில் அவரது இடம். சில நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளார் என்பதையும் மறுப்பதற்கில்லை.  ஆனால் மலேசியாவில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், திலிப்குமார் போன்ற எழுத்துலகில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தவர்களைக் கொண்டு பட்டறைகள் நடத்துவதுபோலவே மாலனை வைத்தும் தொடர்ச்சியாக  நாவல் – சிறுகதைப் பட்டறைகள் நடத்துவது முரண்நகை. சாகித்திய அகாதமி, சரஸ்வதி சம்மான் போன்ற அமைப்புகளில் இருப்பதால் அவரது இலக்கியம் சார்ந்த கருத்துகள் முக்கியமானவை என மலேசிய – சிங்கை வட்டாரங்களில் நம்பப்படுகிறது.  .  யசுனாரி கவபட்டாவின் (Yasunari Kawabata) போன்ற நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளரின் படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் அவற்றில் தோய்ந்துள்ள கலாச்சார நுட்பங்களை உள்வாங்கிவிட முடியாது.  ஆப்பிரிக்க இலக்கியங்களும் அவ்வாறே.

பிழைக்க வந்தவர்கள்

நிகழ்ச்சியின் இடைவேளையிலும் முடிந்தபிறகும் பல நண்பர்களிடம் பேசும் வாய்ப்பு17098637_1433016943389359_894172851884865121_n கிடைத்தது. பெரும்பாலும் புதியவர்கள். நான் மேடையில் வைத்த விமர்சனத்தால் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தின் மீது எனக்குக் கீழான அபிப்பிராயமும் இருப்பதாக நினைத்திருக்கலாம். விமர்சனத்தை வெறுப்பின் வெளிப்பாடாக நம்பும் மொண்ணைக்கூட்டம் அது. அவர்கள் தங்களைச் சிங்கப்பூர் இலக்கியத்தில் இணைக்க விரும்பாதவர்கள். தங்களைத் தமிழ்நாட்டு வாசகர்களாய் மட்டுமே அடையாளப்படுத்துபவர்கள்.  அப்படியொன்றும் சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம் வளராது எனும் மனநிலையில் பேசினர். அவர்கள் கேலியில் நான் இணைந்துகொள்வேன் என எதிர்ப்பார்த்திருக்கலாம். அவர்கள் தமிழச்சி தங்கபாண்டியனின் உரையை மட்டுமே கேட்க வந்தவர்களாக இருக்கலாம். எனக்கு அவ்வாறான அவநம்பிக்கையான பேச்சில் உடன்பாடில்லை. ஒப்பீட்டளவில் நான் சந்தித்த பல சிங்கப்பூர் வாசகர்கள் விரிவான வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களே. எதையும் செய்யாமல் ஓர் எகத்தாளச் சிரிப்பில் பிறரது உழைப்பை மட்டம் தட்டுவதன் மூலம் தனது ஆளுமையை விரிவாக்கிக் காட்டும் கூத்தையெல்லாம் பலகாலமாக மலேசியாவிலேயே பார்த்துவிட்டதால் அதுபோன்றவர்களுக்கு முகம் காட்டவில்லை.

அடுத்தது சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்களிடம் பேசும்போது ‘பிழைப்புக்கு வந்தவங்க’ ‘பிழைக்க வந்தவங்க’ எனும் சொல்லாடலைத் புதிய குடியேறிகளை நோக்கி அதிகம் உபயோகிப்பதைக் கேட்க முடிந்தது. எனக்கு இந்தச் சொல்லாடலின் மீது பெரும் குழப்பம் உண்டு. அவர்களையெல்லாம் பார்த்து ‘உங்கள் மூதாதையர்கள் இந்நாட்டுக்குப் பிழைக்க வராமல் சமூக சேவை செய்யவா வந்தனர்?’ எனக்கேட்க ஆசையுண்டு. மலேசியாவில் நான் பிறந்தவன் என்றாலும் எனக்கு முந்தைய தலைமுறையினர் மலேசியாவில் பஞ்சம் பிழைக்கவே வந்திருப்பர். அவர்கள் முதன் முதலாய் எழுதிய இலக்கியங்களில் தாயகத்து ஏக்கமும் தமிழகம் குறித்த நினைவுகளுமே இருந்தன. அப்படித்தான் அந்தச்சூழல் மறைந்து இன்று மலேசிய இலக்கியம் தனித்த அடையாளத்தைத் தேடி வருகிறது. ஒப்பீட்டளவில் சிங்கப்பூரில் வாழும் தமிழகப் பிரஜைகள் சிங்கப்பூரில் அவர்களின் வாழ்வையே எழுதுகின்றனர். அந்த மண்ணுடன் ஒட்ட முடியாத மனநிலையையும் அந்நியப்பட்டுக்கொண்டே இருக்கும் சமூகச்சூழலையும் அவர்கள் படைப்புகளில் அதிகமே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படிப் பார்க்கும்போது தமிழச்சி சொன்னதுபோல இந்த ஊடாட்டத்தின் அழுத்தத்தில் உருவாகும் இலக்கியம் சிங்கப்பூரின் இன்னொரு முகம்.

17157855_1433004890057231_4603019414286989596_oமலேசியச் சூழலை இதனோடு பொருத்திப்பார்க்கிறேன். இன்று வங்காளதேசத்தினர் மலேசியாவில் மிகுந்துவிட்டனர். அவர்களுக்கான ஒரு வாழ்வியல் சூழலை அவர்களே வகுத்தும் வைத்துள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்குத் தாங்களும் ஒரு காரணம் எனக்கூறலாம். அப்படிக் கூறுவதில் தவறு இருக்க முடியும் என நான் கருதவில்லை. தமிழர்கள் காட்டை அழித்து நாட்டை உருவாக்கினார்கள் என்றால் வங்காளத்தினரும் இந்தோனேசியர்களும் பெருநகரங்களை உருவாக்கத் தங்கள் உழைப்பைச் செலுத்தி உள்ளனர். தமிழர்கள் அவலமான சூழலில் வாழ்ந்தார்கள் என்றால் அவர்களும் இன்று கட்டுமானத்துறையிலும் தோட்டங்களிலும் பணியாற்றும்போது அவலமான நிலையில்தான் தங்கள் வாழ்வைக் கழிக்கின்றனர். அவர்கள் குழந்தைகள் இங்குள்ள பள்ளிகளில் பயில்கிறார்கள்.  நாளை அவர்களுக்கான இலக்கியத்தை எழுதும்போது அது மலேசியாவின் புதிய முகத்தையே காட்டும். அது வந்தேறிகள் இலக்கியமல்ல.

நிகழ்ச்சி முடிந்து நீதி பாண்டியுடன் எம்.கே.குமார் வீட்டுக்குச் சென்றேன். அவரது ‘நல்லிணக்கம்’ சிறுகதை குறித்துப் பேச வேண்டும் போல இருந்தது. நல்ல கதைகளை மீண்டும் மீண்டும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதேபோல தங்கள் தொடர்புகளாலும் சிபாரிசுகளாலும் முன்னெடுக்கப்படும் மந்தமான படைப்புகளைக் கறாரான விமர்சனத்திற்கு உட்படுத்தவும் வேண்டியுள்ளது. மலேசிய- சிங்கைத் தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து இவை நடந்தால் மட்டுமே அதன் போக்கில் மாற்றம் சாத்தியம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...