கொஞ்சம் வெளிச்சமும் நிறைய மின்மினிகளும்

12239399_1213787101969081_2433590992940347593_oபத்து வருடங்களுக்கும் மேலாக மலேசிய இலக்கிய உலகில் இயங்கி கொண்டிருக்கிறேன் என்றுதான் பெயர். இதுவரை என்னிடம் யாரும் நூலுக்கான முன்னுரையையோ நூல் குறித்தப் பார்வையையோ அச்சாகும் முன் நூலில் பிரசுரிக்கக் கேட்டதே இல்லை.

எனக்கு 24 வயது இருக்கும். நண்பர் அகிலன் அவரது ‘மீட்பு’ கவிதை தொகுப்பு வெளியீட்டில் என்னை விமர்சனம் செய்யக் கூறினர். அத்தொகுப்பில் இரண்டு மட்டுமே எனக்கு கவிதைக்கான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கிறது என்று வெளியீட்டு விழாவில் பேசினேன். நிகழ்ச்சிக்காக முதன்முறையாக மலேசியா வந்திருந்த மனுஷ்ய புத்திரன் ‘என் ஸ்கிரிப்டை எனக்குத் தெரியாம வாசிச்சிட்டீங்களா?’ என ஆச்சரியமாக அதே இரண்டு கவிதைகளை ஒட்டிப் பேசினார். இது நடந்தது 2005-இல். அது ஒருவகையில் என் வாசிப்பு ரசனை குறித்த நம்பிக்கையை எனக்குக் கொடுத்திருந்தாலும் அதன்பிறகு யாருமே எந்த நூல் வெளியீட்டிலும் என்னைப் பேச அழைத்ததில்லை. அதோடு 2014-இல் பூங்குழலி கவிதைத் தொகுப்புக்கு வெளியீட்டில் விமர்சனம் செய்ய அழைத்தார். கொஞ்சம் மாற்றுக் கருத்துகளை முன்வைத்தேன். குழலிக்கு போர்த் தந்திரங்கள் தெரியும் என்பதால் அதற்குப் பின்பும் நட்பு பாராட்டியே வருகிறார். ஆனால் மற்ற இலக்கிய நண்பர்கள் எவ்வளவு நெருக்கமாகப் பழகினாலும் நூல் வெளியீடு என வந்துவிட்டால் அழைப்பெல்லாம் அடித்த பிறகே விசயத்தைச் சொல்வார்கள்.

இப்படிப் பெரும்பாலும் இலக்கியச் சூழலில் ஒதுக்கப்பட்டுவிட்ட என்னையும் மதித்து முன்னுரை கேட்டுள்ள எம்.கே.குமாருக்கு நன்றியை முதலில் பதிவு செய்து விடுகிறேன். ஆனால் ஒரு சடங்கான முன்னுரையை என்னால் எழுத முடியுமா எனத் தெரியவில்லை. ‘5.12 pm’ என்ற இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளை வாசித்து, அவை குறித்து என் எண்ணங்களை மட்டுமே இங்கே பதிவிடுகிறேன். எனவே இதை முன்னுரையாகவே, நூல் விமர்சனமாகவோ, அல்லது வேறு எந்த வகை அங்கமாகவோ இணைப்பது பதிப்பாளரின் பொறுப்பு.

சக வாசகனாக நான் உள்வாங்கிக்கொண்டதை பொதுவில் பகிர ஒரு வழியாகவே இதைப் பார்க்கிறேன். அந்த வழியை இன்னொரு வாசகன் முற்றாக மறுத்து வேறொரு வாசல் வழி நுழையலாம். அவ்வகையில் இதை வாசிப்பதென்பது வாசகனின் தேர்வு சார்ந்ததே.

***

நண்பர் எம்.கே.குமாரை சிங்கை இலக்கியச் சூழலில் துடிப்புடன் செயல்படுபவராக அறிவேன். எங்களுக்குள்ளான உரையாடல்கள் மிகக்குறைந்த அளவே நடந்துள்ளன. சிங்கை தமிழ் இலக்கியத்தில் என்ன நடக்கிறது என கவனிக்கும் ஒரு வாசகனாகவே தொடர்ந்து எம்.கே.குமாரை வாசித்து வந்துள்ளேன். அவ்வப்போது வாசித்ததை ‘5.12 pm’ என்ற ஒரே தொகுப்பாக வழங்கியபோது முழுமையாகவே இருமுறை வாசித்தேன்.

எம்.கே.குமாரின் சிறுகதைகளின் சுவாரசியமே சிங்கப்பூர் எனும் பெரு நகரத்தில் எங்கோ ஒளிந்து இருக்கும் சற்று வித்தியாசமான மனிதர்களையும் அவர்களின் சிக்கல்களையும் கதைக்குள் கொண்டுவரும் லாவகம்தான். சிங்கப்பூருக்குச் சென்றால் பிழைக்கலாம் என தமிழகத்திலிருந்து நம்பிக்கையுடன் வந்து சேரும் எளிய மனிதர்களின் சிக்கல்கள், தனித்துக் கிடக்கும் வாழ்வை நடத்த உடலை மூலப்பொருளாக உபயோகிக்கும் அலட்சியப்போக்கு நிறைந்த பெண், எப்படியாவது அதிர்ஷ்டம் கிட்டும் என குரங்கிடம் நான்கு நம்பர் கேட்கும் பழைய பாட்டில்களை சேகரிக்கும் பெண், இந்திரா காந்தியுடன் தொடர்பின் இருப்பதாய் நம்பும் மனம் பிறழ்ந்த முதியவர், காமத்தின் உச்சத்தில் மனம் பிறழ்ந்து மரணத்தை நோக்கி ஓடும் பெண், வெளிநாட்டு ஊழியர்களின் வளர்ச்சியால் உள்ளூரப் பொருமும் சிங்கைவாசி, சிங்கப்பூரில் நிரந்தர வாசிகளாகிவிட்ட நண்பர்கள் மூலம் வீட்டு வேலைக்காரியாக மனைவியை வரவழைக்கும் சக தமிழக ஊழியர்கள்  என அவரது பாத்திரங்கள் வாசிக்க ஆர்வத்தை ஏற்படுத்துபவை.

பொதுவாக மலேசிய – சிங்கைச் சூழலில் சிறுகதைகள் குறித்து விமர்சனம் வைக்கும்போது அதை எழுதியவர் தன் சிறுகதை எது குறித்துப் பேச வந்துள்ளது என விளக்கத் தொடங்குவார். இதுவரை தொடப்படாத கரு என்றால் தங்கள் கதையின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பார்கள். சிறுகதை எதைச் சொல்கிறது என்பதைக் காட்டிலும் எப்படிச் சொல்கிறது என்பதில்தான் கலைத்தன்மையை அடைகிறது. இந்தக் காரணத்தினாலேயே மிக முக்கியமான பிரச்னைகளை மையக்கருவாகக் கொண்டு சிறுகதை எழுதியுள்ளதாக நம்பும் எழுத்தாளர்களால் ரசனை விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எம்.கே.குமார் தனது ஒவ்வொரு கதையிலும் முக்கியமான ஒரு கரு குறித்து பேசவே முயன்றுள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் ‘பதிசதி விளையாட்டு’ என்ற கதையை வாசித்தபோது பக்கத்து நாட்டில் நடக்கும் நுட்பமான வாழ்வியல் சிக்கல்களை அறிந்து வைத்திருக்காததை நினைத்து கூச்சமாகவே இருந்தது. அந்தச் சிக்கல்களை வெளிப்படுத்த சுவாரசியமான கதாபாத்திரங்களை உருவாக்குவதோடு நல்ல கதைக்களங்களையும் அறிமுகம் செய்கிறார். ஆனால் இத்தொகுப்பில் சில கதைகள் மேலெழுந்து வராமல் இருக்க வடிவச்சிக்கலே காரணமாக உள்ளது.

வடிவம் என்பது திட்டவட்டமானதல்ல. ஒரு சிறுகதை தனக்கான வடிவத்தை தானேkumar உருவாக்கிக்கொள்கிறது. அந்த வடிவத்திற்குள் அது நிற்கிறது. எம்.கே.குமார் சிறுகதையின் ஒரு கருத்தைச் சொல்ல கதாமாந்தர்கள் மூலம் ஒரு சூழலை உருவாக்குகிறார். ஆனால் அவர் உருவாக்கும் சூழல்கள் அந்தச் சிறுகதை வடிவத்துடன் பொருந்தாமல் பல இடங்களில் துருத்திக்கொண்டு இருக்கிறது. உதாரணமாக, ‘அப்யாசிகள்’ சிறுகதையில் மசூர் என்ற முஸ்லிம் ஒருவர் கிருஸ்துவரைக்  கிண்டல் செய்வதிலிருந்து தொடங்குகிறது. அது அப்படியே ‘சொர்க்கம் நரகம்’ எனும் விவாதத்தினுள் செல்கிறது. அது தர்க்கமாக வளர்ந்து மதம், ஆன்மிகம் எனச் செல்கிறது. பின்னர் கதாசிரியர் சொல்ல வந்த கருத்தை வசனமாகப் பேசியவரின் மரணம் நிகழ்கிறது.  மரணத்தைச் சொல்லும் விதம் எளிய திருப்பமாக முடிகிறது. இங்கு மரணம் குறித்து பேசுவதும் அதன் நீட்சியாக நடக்கும் அபத்தங்களுமே கதையாசிரியரின் தேர்வு. ஆனால் அதைச் சொல்ல உருவாக்கப்படும் சம்பவங்கள் எதுவுமே மையத்துடன் ஒட்டாமல் நிற்கின்றன. இதே ரகத்தில் ‘சுழற்சி’ சிறுகதையையும் பார்க்க முடிகிறது. ‘அலுமினியப் பறவை’ சிறுகதையும் இதே சிக்கலைக் கொண்டதுதான். மனைவியுடன் விமானத்தில் புறப்படும் ஒருவனின் மன ஓட்டம். அந்த மன ஓட்டத்தில் சிங்கை வரும் தமிழகத் தொழிலாளர்களின் நிலை. அதற்குள் இவனது நிலை. இறுதியில் வாசக அதிர்ச்சிக்காக விமான விபத்தில் அவன் மரணம். அதுவே கதையின் திருப்பமும்.

எம்.கே.குமாரின் சிறுகதைகளை மொத்தத் தொகுப்பாக வாசித்தபோது, பெரும்பாலும் அது திட்டவட்டமான ஒரு கட்டுமானத்தில் செயல்படுவதாகவே எனக்குத் தோன்றியது. அதை இப்படி எளிமைப்படுத்தலாம். மையக்கருவை நோக்கி நகர எங்கிருந்தோ தொடங்கும் ஒரு எளிய சம்பவம். மையக் கருவை பேசும் பிரதிநிதிகளின் உரையாடல். வாசகனைத் திடுக்கிட வைக்கும் ஒரு திருப்பம். இதுவே இத்தொகுப்பில் அவரது பல கதைகளின் சூத்திரமாக உள்ளது. இது வெகுசன இலக்கியத்துக்கான உத்தி என்பதே என் அவதானிப்பு.

சிறுகதையில் கட்டமைப்பு என்பதை நடக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்குமான அணுக்கமான தொடர்பு என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சம்பவங்கள் வெறும் செய்தியாக மட்டுமே இருப்பதால் அது கலையாவதில்லை. அதில் உள்ள நுட்பமும் துல்லியமுமே சம்பவங்களைச் செய்தியிலிருந்து பிரிக்கிறது. அலுமினியப் பறவை, முன்சீட் ஆகிய சிறுகதைகள் அவ்வாறு சம்பவங்களைத் தொகுத்து அதை ஒன்றுடன் ஒன்று பிணைத்து கட்டமைக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது. குறிப்பாக முன்சீட் கதையில் வாசகனுக்கான இடைவெளி என எதுவும் இல்லாமல் தீர்வுகளைச் சொல்லி முடிகிறது. மிக அண்மையில் வாசித்த கன்னடச் சிறுகதையான  ‘சிவப்புக் கிளி’ என்ற நீண்ட சிறுகதையை சட்டென உதாரணம் சொல்லலாம். நேர்கோட்டில் அமைந்த வசுதேந்திராவின் யதார்த்தக் கதை. பல ஆண்டுகால சம்பவங்களையும் ஏராளமான கதாபாத்திரங்களையும் உள்ளடக்கியிருந்த அந்தக் கதையில் நடக்கும் ஒவ்வொன்றும் அதற்குரிய காரணத்துடனே கதைக்குள் வருகின்றன. கதையில் ஒரு கதாபாத்திரத்தையோ ஒரு சம்பவத்தையோ தவறவிட்டாலும் முடிவில் அக்கதை கொடுக்கும் அனுபவத்தை நெருங்க முடியாது. எம்.கே.குமாரின் சிறுகதைகளும் யதார்த்த பாணியிலானவை என்பதால் இந்த ஒப்பீடு அவசியம் என்றே கருதுகிறேன். அவர் இந்த நுட்பத்தை அறியும்பட்சத்தில் இத்தொகுப்பில் பல கதைகள் சிறந்தவையாக மாற்றம் பெற நிறைய வாய்ப்புண்டு.

எம்.கே.குமாரின் கதைகளை வாசிக்கும்போது ஏற்பட்ட மற்றுமொரு எண்ணம் அவர் கதாபாத்திரங்களின் உளவியல் குறித்து ஆழமாகச் சித்தரிக்கவில்லை என்பதுதான். அல்லது அதற்கான இடைவெளிகளை வாசகனுக்குத் தரவில்லை எனலாம். எல்லா கதைக்கும் அது தேவையில்லை என்றாலும் சிறப்பாக உருவாகியிருக்க வேண்டிய ‘நேர்மை’ போன்ற சிறுகதைகளில் கதாபாத்திரத்தின் மனப்போக்கு மேலோட்டமாகவே சொல்லப்பட்டுள்ளது. வேலை பறிபோகும் நிலையில் உள்ளவனின் மனநிலையில் முன்னாள் காதலியான புனிதாவின் கதையும் திசையில்லாமல் அலைகிறது. சிங்கை போன்ற பெருநகரத்தில் வேலையில்லாமல் இருக்கும் ஆண், மனைவியை நம்பி இருக்க வேண்டிய நிர்பந்தம் நவீன வாழ்வில் என்னவாக அமைகிறது என்பது குறித்தும் இக்கதை பேசியிருக்கலாம். ஆனால் பழைய காதலைப் பற்றி அதிகம் பேசுவதாக மாறும்போது பலவீனமடைந்து விடுகிறது. அந்தக் கதாபாத்திரம் மூலமே கதையின் இறுதியில் திருப்பம் கொண்டுவர முடியும் என குமார் நம்பியிருக்கலாம். ஆனால் காதலி கதாபாத்திரம் இல்லாமலேயே இக்கதை உருவாகியிருந்தால் நவீன வாழ்வின் சிக்கலைப் பேசியிருக்க முடியும். பழிவாங்குவதாக ஒருவரைச் சந்தேகிப்பதும் பின்னர் அவர் குற்றவாளி இல்லை என அறிவதெல்லாம் பழைய உத்தி.  அதேபோல ‘மரணம் பருகும் பறவை’ சிறுகதையில் வரும் இந்தோனேசியப் பெண்ணின் காமமும் அதன் உச்சத்தில் நிகழும் மன உணர்வும் மேலோட்டமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன. இக்கதை என்னைக் கவர்ந்தது போலவே ‘பதிசதி விளையாட்டு’ சிறுகதையும் அது முன் வைக்கும் சிக்கலால் கவரவே செய்தது. ஆனால் ஒரு சிறுகதை எதைத்தான் மையப்படுத்த முயல்கிறது என்ற தெளிவில்லாத சூழலில் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தர முடியாமல் போகிறது.

மொத்தத் தொகுப்பையும் வாசித்து முடித்தபின் மூன்று சிறுகதைகள் எனக்கு முக்கியமானதாகத் தோன்றியது.

5.12 pm துல்லியமான விவரிப்பைக் கொண்ட சிறுகதை. பெருநகரில் ஒரு புதரில் அப்படி ஒரு பெரியவர் வாழ்வதே சட்டென வாசிப்புக்கு உள்ளே இழுக்கிறது. ஒரே சமயம் ஒருவர் மனப்பிறழ்வு கொண்டவராகவும் அவரே இன்னொரு சமயம் புத்திசாலித்தனமாகவும் மாறி மாறிக் காட்டப்படுவது வசனங்களை பல்வேறு வகையில் உள்வாங்கிச் செல்ல வைக்கிறது. அதேபோல ‘மோர்கன் என்றொரு ஆசான்’ சிறுகதையும் சிக்கலான விசயத்தை எளிதாகச் சொல்லிச் செல்கிறது. எம்.கே.குமார் இத்தொகுப்பில் பல இடங்களில் ஆங்காங்கே சொல்ல முயன்ற நெருக்கடி ஒன்றை இக்கதையில் மிக சிறப்பாகவே முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். மோர்கனுக்கு, தான் சிங்கப்பூர்வாசி என்ற எண்ணம் ஆழமாகத் தோன்ற தாழ்வு மனப்பான்மையே காரணமாகிறது. அவ்வெண்ணம் அவரை வாட்டுவதையும் அதிலிருந்து மீள போலியான கௌரவங்களைக் கட்டமைப்பதையும் தமிழ்ச் சமூகத்தின் பல நிலைகளிலிருந்தும் விமர்சிக்கக்கூடியதாக உள்ளது.

இத்தொகுப்பில் நான் அதிகம் ரசித்து வாசித்த சிறுகதை ‘நல்லிணக்கம்‘. ஒரு மிகச்சிறந்த சிங்கப்பூர் சிறுகதை என யாராவது கேட்டால் இக்கதையையும் பட்டியலில் இணைத்துச் சொல்வேன்.  வடிவ அமைதி, வாசக இடைவெளி என நவீன சிறுகதைக்கான அத்தனை தன்மைகளுடனும் வெளிப்பட்டிருக்கும் சிறந்த கதையாக இது உள்ளது. அரசாங்க நிறுவனமொன்றில் உயர்ந்த பதவியில் இருக்கும் ராசய்யா டேவிட் வீட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நல்லிணக்க மேம்பாடு மற்றும் ஒற்றுமை உணர்வு வலியுறுத்தலுக்காக வர இருக்கும் சமயம் குரங்கு ஒன்று அவர்கள் வசிக்கும் மாடியருகே வந்து நிற்பதும் அதனால் ஏற்படும் சலசலப்பும் கதையைச் சுவாரசியமாகக் கொண்டு செல்கிறது. குரங்கை ஆளாளுக்கு உபசரிக்க முயல்வதும் அதை இந்து மதத்திற்குள் இணைத்துப் பார்ப்பதும் என கதை அடுத்தடுத்த படிகளுக்குத் தாவி குனிங் என்ற பெண் குரங்கின் மூலம் நான்கு நம்பர் எடுக்க முயல்வது வரை சுவாரசியம் குன்றாமல் செல்லும் கதை முற்றிலும் சிங்கப்பூர் வாசிகளின் மனநிலையைக் கிண்டல் செய்யும்படி அமைந்துள்ளது.

ஒரு நல்ல சிறுகதை வாசகனுக்கு ஒரு புரிதலை உருவாக்குவதில்லை. அது வாசிப்பின் பல்வேறு சாத்தியங்களுக்கான திறப்புகளை ஏற்படுத்துகிறது. ‘நல்லிணக்கம்’ அவ்வகையில் ஒட்டுமொத்த சிங்கப்பூரையும் அங்கதத்துடன் அணுகும் கதையாகவே எனக்குத் தெரிகிறது. வேறு சுவாரசியமற்ற பெருநகர வாழ்வில் அவரவர் அவரவருக்கான சுவாரசியங்களைத் தேடிக்கொள்வதும் அதனுள் உண்டாகும் சுயநலத்துக்கு அடித்துக்கொள்வதும் எனச் செல்லும் கதை, இறுதியில் குரங்கால் குனிங் என்ற பெண்ணுக்குக் காயமும் குரங்கைத் துன்புறுத்தியதால் ராசய்யா டேவிட்டுக்கு அபராதமும் கிடைக்க நல்லிணக்கத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துகொள்ளும் இடத்தில் அத்தனை நுட்பமான அரசியலைப் பேசி விடுகிறது. சுற்றங்களுடன் பெரிய நெருக்கமும் அந்நியோன்யமும் இல்லாத சிங்கப்பூர் போன்ற நகரத்தில் மனித உறவுகளைச் சொல்லும் மிகச் சிறந்த சிங்கப்பூர் சிறுகதையாகவே இதை நான் சொல்வேன். இன்னொரு வகையில் குரங்கை நாடளுமன்ற உறுப்பினர் பதவியுடன் படிமமாக்கிப் பார்த்தால் இக்கதை கொடுக்கும் வாசிப்பனுபவம் மேலும் அலாதியானது. சிறந்த அரசியல் பகடி கதையாகவும் இதைத் தாராளமாகச் சொல்லலாம்.

மலேசியாவில் கோலாசிலாங்கூரில் உள்ள மின் மினிப்பூச்சிகள் கூட்டம் உலகப் பிரசித்தி பெற்றது. அமாவாசைப் பொழுதுகளில் அவை ஒளிர்வதைப் பார்க்க வெளிநாட்டுப் பயணிகள் படகுகளில் பயணிப்பதுண்டு. பௌர்ணமியில் அவை இருப்பதில்லை. இருளே மின்மினிக்கு ஏற்ற சூழல். எம்.கே.குமாருக்குள் சிறந்த கதைசொல்லி ஒருவர் ஒளிந்து கொண்டிருக்கிறார். மின் மினிப்பூச்சிகள்  போல அவர் ஓயாமல் ஒளி எழுப்பிக் கொண்டிருக்கிறார். அவ்வொளி அலையாத்திக் காடுகளின் தன்மையை ஆங்காங்கே காட்டுகிறது. அவ்வொளியில் காட்டைக் காண்பது கவர்ச்சியானதுதான். ஆனாலும் நிலவில் தெரிவது வேறொரு காடு. மலேசிய, சிங்கை படைப்பாளிகள் மின்மினிகளின் துணையுடன் காடுகளைக் காணும் வரை தமிழ் இலக்கிய உலகில் தனித்த இடத்தை உருவாக்கச் சாத்தியமே இல்லை. பெரிதினும் பெரிதை நோக்கிச் செல்வதற்கான சூழல் இங்குண்டு. சக பயணியாக நான் அவரிடம் அதையே எதிர்பார்க்கிறேன்.

3 comments for “கொஞ்சம் வெளிச்சமும் நிறைய மின்மினிகளும்

  1. Kalaishegar
    March 10, 2017 at 7:03 am

    சொந்தப் படைப்புகளுக்கு ஒரு தனி பாணி, தனித்தன்மை, மாறுப்பட்ட அம்சங்கள் இருக்கவேண்டியது அவரவரின் திறன் சார்ந்த அவசியம். வரவேற்கக்கூடியது.

    பிறரை/பிறர் படைப்பை விமர்சிப்பதிலும் அப்படி இருந்தாகணுமா? பெரிதாக பாராட்டிவிடக்கூடாது என்ற கவனமும், அப்படியே நல்ல விடயங்கள் இருந்தாலும் அதை கடைசியில் சொல்லியும் சொல்லாமலும் சொருகும் யுக்தியும், நம்மை கறாரான விமர்சகர் என்ற முத்திரை பதித்திட வேண்டும் என்றொரு வேட்கையும், சர்ச்சைக்குரிய விமர்சனமாக இது பேசப்பட வேண்டும் என்றொரு ஆர்வமும் முன்னுரைக்கோ அல்லது பிறர் படைப்பாற்றலின் விமர்சனத்துக்கோ அவசியமா?

    இந்த இடத்தில அதிகம் பேசப்படவேண்டியது படைத்தவரின் பலமும் பலவீனமுமா அல்லது விமர்சிப்பவரின் எழுத்தாற்றலா? என்றொரு குழப்பம் உருவாகியுள்ளது.

    நவீன் சொல்லியுள்ள இதே விடயங்களை இந்த பிரகாரத்திலிருந்து களைத்து; வேறு விதமாய் வரிசைப்படுத்தினால் விமர்சனத்தின் பார்வையே வேறொரு ரீதியில் படிப்பவரை வசைக்கும் என்பது என் கருத்து.

    நன்றி

  2. nanthini
    March 17, 2017 at 1:13 pm

    . திரு . குமார் அவர்கள் தான் திரு . நவீனை முன்னுரை எழுதக்கூறியிருக்கிறார் . இவராக முன் வந்து எழுத வில்லை . எ.காட்டு

    (என்னையும் மதித்து முன்னுரை கேட்டுள்ள எம்.கே.குமாருக்கு நன்றியை முதலில் பதிவு செய்து விடுகிறேன். ஆனால் ஒரு சடங்கான முன்னுரையை என்னால் எழுத முடியுமா எனத் தெரியவில்லை. ‘5.12 pm’ என்ற இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளை வாசித்து, அவை குறித்து என் எண்ணங்களை மட்டுமே இங்கே பதிவிடுகிறேன். எனவே, இதை முன்னுரையாகவே, நூல் விமர்சனமாகவோ, அல்லது வேறு எந்த வகை அங்கமாகவோ இணைப்பது பதிப்பாளரின் பொறுப்பு.)

    மின்மினிப் பூச்சியில் வெளிச்சத்தில் காடுகளைத்தெளிவாகக் காண இயலாது , நிலவின் ஓளியின் காடுகளை வேறு வடிவத்த்தில் தெளிவாகக் காணமுடியும் என்று எழுத்தாளரின் பலத்தையும் பலவீனத்தையும் இதைவிட வார்த்தை ஜாலத்துடன் மனம் நோகாமல் கூற இயலாது.
    நிச்சயம் எழுத்தில் கலையம்சம் இருக்க வேண்டும். இது விமர்சனம் செய்வரின் எழுத்தாற்றலை காண்பிக்க வேண்டும் என்ன செருக்கில் எழுதவில்லை . இலக்கிய உலகில் பெரிதை நோக்கிப்பாதுகாப்பாக பயணம் செல்ல வேண்டும் என்பதுதான் நவீன் அவர்களின் நோக்கம் என்பது எனது உறுதியானக் கருத்து .

  3. Subramanian Venkataraman
    March 29, 2017 at 6:14 pm

    Literature is also politicalised like any other field. What is written is shadowed by who has written. The culture is inherent anywhere and every where. As long as people are prepared to surrender to any one on money or position recognition to desrving takes long time.

Leave a Reply to Kalaishegar Cancel reply