இன நல்லிணக்க மேம்பாடு மற்றும் ஒற்றுமையுணர்வை வலியுறுத்தும் விதமாய் சிங்கப்பூரின் அரசாங்க நிறுவனமொன்றில் உயர்ந்த பதவியிலிருக்கும் ராசய்யா டேவிட் வீட்டிற்கு, அன்று காலை பத்து மணியளவில் செம்பவாங்க் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. குங் சங் கூவாங் அவர்கள் வருவதாயிருந்தது. வரலாற்றுச்சிறப்பு மிக்கதாய் டேவிட் கருதியதால் அதிகாலை ஐந்துமணிக்கே எழுந்து குளித்து முடித்து பட்டுவேட்டி சட்டையோடு காத்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு இப்போதுதான் வேட்டிக் கட்டுவதால் அலறிய தொலைப்பேசியை எடுக்க அவசரத்துக்கு எழ முடியவில்லை. மிஸஸ் டேவிட் அலங்காரத்தைப் பாதியில் முடிக்க வேண்டியதாய் போயிற்று. தரையில் சரசரத்த பட்டுப்புடவையோடு அவசரமாய் ஓடினாள். எதிர் முனையில் பேசிய பெண் உற்சாகமாய் கேட்டாள் “குரங்கு வந்திருக்காமே உங்க வீட்டுக்கு, பாத்தீங்களா?!”
‘குரங்கா? என்ன குரங்கு’ அதிர்ச்சியுற்ற மிஸஸ் டேவிட், “இல்லை மிஸஸ் ராஜாமணி, மிஸ்டர் கூவாங் தான் வாறார், இப்போ இல்லை, பத்து மணிக்கு” என்றாள். “இல்லை மிஸஸ் டேவிட், குரங்கு வந்திருக்காமே?” என்றாள். “அய்யோ! இல்லை, மிஸஸ் ராஜாமணி, யு நோ மிஸ்டர் கூவாங், எம்பி, அவர்தான் வாறார்” என்றாள் தெளிவாக. “அடடா, என்னங்க மிஸஸ் டேவிட், நல்லா கதவைத்திறந்து பாருங்க. கூவாங் வரலை; குரங்குதான் வந்திருக்கு” என்று தொடர்பைத் துண்டித்தாள்.
மிஸஸ் ராஜாமணி, மிஸஸ் டேவிட் வீட்டிற்கு எதிர் புளோக்கில்தான் இருக்கிறாள். மிஸஸ் டேவிட் வீட்டிற்கு யார் வந்தாலும் முதலில் அவர்கள் படுவது அவள் கண்ணில்தான். எதிர் புளோக்கிலிருந்து பார்க்கும்போது இவரது வீட்டுவாசல் ஏதும் தெரியாதவாறு தொட்டிச்செடிகளை வளர வைத்துப்பார்த்தார் மிஸ்டர் டேவிட். ஒன்றும் பயனளிக்கவில்லை.
டேவிட்டின் முதல் மகள் ஆஸ்திரேலியாவிற்குப் படிக்கச்சென்று அங்கேயே ஒரு வெள்ளைக்கார ஆடவரைக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டு செட்டிலாகிவிட்டார். படபடவென்று ஒருநாள் தொலைபேசியடிக்க மிஸஸ் டேவிட் ஓடிப்போய் எடுத்தார். ”செக்கச்செவேர்ன்னு, பப்பாளிப் பழமாட்டம் தமிழவங்க சாடையும் வெள்ளைக்காரங்க சாடையும் கலந்து ஒரு ஆம்பளப்புள்ளையோட உங்க மூத்தபொண்ணு குமுதினி வந்திருக்கு, கதவைத்திறங்க” என்றதும் மிஸஸ் டேவிட்டுக்குச் சந்தோசப்படுவதா சங்கடம் அடைவதா எனக் குழப்பமே வந்தது.
மிஸஸ் ராஜாமணி சொன்னதுபோல குரங்குதான் வந்திருந்தது என்பது, இஞ்சி தின்ற குரங்குபோல கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு டேவிட் திரும்பி வந்ததிலிருந்து தெரிந்தது. ”என்னாச்சி” என்றாள் பதறியவாறே. குரங்கைச் சைகையால் செய்து காட்டியவர் அமைதியாய் உள்ளே போனார். வேட்டியைக் கட்டிக்கொண்டு அவரால் அவ்வாறு செய்ய முடியும் என்பதே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மிஸஸ் டேவிட்டுக்கு சிங்கப்பூரில் எதற்கும் பயமில்லை. பூனையையும் குரங்கையும் தவிர! மிரட்சியுடன் அமர்ந்திருக்கும் பூனையை, எதையோ நினைத்துக்கொண்டதுபோல பாவனை செய்து, பார்க்காது அமைதியாய் கடந்துவிட்டதைப்போல கடந்து செல்பவளிடம் குரங்கு மட்டும் மிஸ் ஆகவே ஆகாது. சிங்கப்பூர் ஸூவில் மட்டுமல்ல; ஆஸ்திரேலியா சென்றபோதும் அப்படித்தான். குரங்குக்கு எப்போதுமே அவளை பிடித்திருக்கிறது அல்லது பிடிக்காமலிருக்கிறது. இவை இரண்டும் அவளைப் பொறுத்ததல்ல. தனக்கும் குரங்குக்குமான ராசி இப்படி இருக்க, எதற்கும் இருக்கட்டும் என்று அவளுக்கே அந்நியமாய்த் தோன்றும் நடுநிலைமையான ஒரு புன்னகையுடன் அவள் குரங்கைப் பார்ப்பாள்.
பக்கென்றது.
ஒரு கையில் வாழைப்பழத்தோடும் இன்னொரு கையில் ஆரஞ்சுப்பழத்தோடும் நெற்றியில் திருநீரு பூசி வெளியே நின்றிருந்தாள் மிஸஸ் ராஜாமணி. வெளியில் வரும் மிஸஸ் டேவிட்டைப் பார்த்ததும் உற்சாகமாகி “வாங்க வாங்க” என்று வரவேற்றாள். “ம்ம்” என்றவாறு கொஞ்சம் பார்வையை நீக்கி நிமிர்த்தி ஏறிட்டபோது குரங்கைக் காணவில்லை. ‘குரங்கைத்தானே தேடுகிறீர்கள்?’ என்று கேட்டாள் மிஸஸ் ராஜாமணி. எதைச் சபிப்பது என்பதான தேடலுடன் ஆமாம் என்றவாறு அங்குமிங்கும் பார்த்தாள். ‘அட! அது இங்க இருக்கு‘ என்று அவள் கைகாட்டிய திசையைப் பின்தொடர்ந்தாள். அமைதியாக அங்கு அமர்ந்திருந்தது.
எப்படிப் பரவியதென்று தெரியவில்லை செய்தி. குமுகுமுவென குரங்கைப் பார்க்க கூடியது கூட்டம். என்ன செய்வதென்று தெரியாது உள்ளே போய் அமர்ந்துவிட்டார் டேவிட். மிஸஸ் ராஜாமணி வருபவர்களுக்கெல்லாம் சேதி சொல்லிக்கொண்டிருந்தாள். மிஸஸ் டேவிட் விருந்தாளியாய் வந்ததைப்போல அவளது வீட்டு வாசலில் அவள் நின்றுக்கொண்டிருந்தாள்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் அபாங் ரசூலி ஓடிவந்தான். மலேசியாவிலிருந்து வந்து இங்கேயே தங்கி கட்டுமானவேலை செய்பவன் அவன். கொத்துவேலை செய்வதைவிட குரங்கு புண்ணியத்தில் ஏதாவது குருட்டதிர்ஷ்டம் கிடைத்தால் குபேரனாகிவிடலாம் என நினைத்தவன் விழுந்து விழுந்து குரங்கைக் கவனித்தான். சுட்ட சோளம் சாப்பிட்டுக் கொண்டிருந்திருந்தவன் அதை எடுத்துக்கொண்டு ஓடிவந்து கொடுத்தான். சோளத்தை நீட்டவும் அதை என்னமோ போல மேலும் கீழும் பார்த்தது அது. சம்பந்தமேயில்லாதவாறு தன் விரலைப் பிசைந்து நீட்டி மடக்கிப் பார்த்தது.
மிஸஸ் ராஜாமணி நன்கு பழக்கமானவருக்கு காஃபி கொடுப்பதைப்போல கொடுத்த வாழைப்பழத்தைச் சீண்டக்கூடவில்லை குரங்கு. சந்தோசமாய் அதைக் கண்சாடையில் சீண்டினாள் மிஸஸ் டேவிட். எப்படியாவது ஆரஞ்சுப்பழத்தைக் குரங்கிற்கு கொடுத்து அவளது முகத்தில் கரியைப் பூசவேண்டும் என்பதுபோல படாதபாடு படத்தொடங்கினாள் மறுபடியும். இவளது சேஷ்டைகளை கொஞ்சம் கூட சீண்டாது சுற்றி முற்றி பார்த்துக்கொண்டிருந்தது குரங்கு. அவளால் குரங்கின் மனதை அனுமானிக்க முடியவில்லை. நன்கு வளர்ந்த குரங்குதான் அது. செம்பட்டை உரோமமும் நீண்ட வாலுமாக அந்த வெய்யில் நேரத்தில் நல்ல தேஜசுடன் காட்சி கொடுத்தது. பக்தியினால் எதையாவது சாதிக்கமுடியுமா என நினைத்தவள், ’ராமதூத நமஹ’ என்று மந்திரம் சொல்லத்தொடங்கினாள். மிஸஸ் ராஜாமணிக்கு ஏதோ குரங்கு பாஷை தெரியும் என நம்பிய ரசூலியும் நமஹ என சேர்ந்துகொண்டான்.
உட்லாண்ட்ஸ் ஸ்திரீட் பதினான்கு, புளோக்கு எண், முந்நூற்றுப் பன்னிரெண்டின் மூன்றாம் மாடியில் டேவிட், ரசூலி வீடுகளுக்கு அடுத்த, இரண்டறை கொண்ட வீட்டில் வசித்துவந்தாள் குனிங். காலை ஐந்துமணிக்கு எழுந்து சுற்றுவட்டார புளோக்குகளை ஒரு ரவுண்டு வந்தபின் மெதுவாய் ஹாக்கர் சென்டர் பக்கம் கண்களை மேயவிடுவாள். பிறகு மார்க்கெட் வரும் அவள், அங்கிருந்து வடக்கிலுள்ள சில புளோக்குகளை நோட்டம் விட்டுவிட்டு கிழக்கு நோக்கி நகர்வாள். கிழக்கில் ‘ஃபாரின் ஒர்க்கர்ஸ்’ நிறைய தங்கியிருந்தார்கள். அவர்களின் மேல் இவளுக்கு எப்போதும் பாசம் அதிகம்.
சிலசமயங்களில் ஹாக்கர் சென்டர், மார்க்கெட் எங்கும் போகவேண்டாம், ஒரே காலையில் ஃபாரின் ஒர்க்கர்ஸ் பிளாக்கை இரண்டு ரவுண்டு முடித்து அள்ளிக் குவித்து விடுவாள் பீர்பாட்டில்களை. ஆனால் அதெல்லாம் ஒரு காலம். கடந்த மூன்று மாதமாய் பீர்பாட்டில்கள் அவ்வளவாய் எங்கும் கிடைப்பதில்லை. நிறைய ஒர்க்கர்ஸ், ‘காகி புகித்’ போய்விட்டார்கள். அரசாங்கம் அங்கு அவர்களுக்காய் குடியிருப்பு ஒன்று கட்டிவிட்டதாம்.
குனிங் திருமணம் ஆனவள்தான். இரு குழந்தைகளுக்குத் தாயும் கூட. மூத்தவன் திருமணம் செய்துகொண்டு செங்காங்கில் செட்டிலாகிவிட்டான். இளையவன் கேர்ள்பிரெண்டு வீட்டிலேயே வாழ்ந்துவந்தான். கணவர் இந்தோனேசியாவின் ‘பாதாம்’ தீவுகளுக்கு அவ்வப்போது போய் வந்தவர் இப்போது அங்கேயே செட்டிலாகிவிட்டார். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கருகில் உள்ள ஹாக்கர் சென்டரில் அவரைப் பார்க்கலாம். அன்று முழுவதும் நண்பர் குழாம் சூழ்ந்திருக்க, கருப்பு பீர் வாங்கிவாங்கிக் குடித்து கொடுத்துக் கொண்டேயிருப்பார். ஒரு கை, மேடம் குனிங்கின் தொடையைத் தடவிக்கொண்டேயிருக்கும். தூர்ந்த கிணற்றில் அசையும் சருகுகளைப் போலவே அந்தத்தடவல் இருக்கும்.
பீர்பாட்டில்கள் ஒன்று கூட கிடைக்காமல் போன தருணங்களும் அவளுக்கு உண்டாகத்தான் செய்தன. கடை வைத்திருந்த சம்சுதீன் ராவுத்தரே வங்காளத்தான் ஒருவனை ராத்திரி மட்டும் வேலைக்கு வைத்து, அப்பிராந்தியத்திலுள்ள எல்லாப் பிராந்திப்பாட்டில்களையும் பீர்பாட்டில்களையும் பொறுக்கிவிட்டிருந்தார். அதில் சம்சுதீன் ராவுத்தருக்கும் குனிங்கிற்கும் ஏற்பட்ட பிரச்சனைக்குப்பிறகு இப்போது பேப்பர் மற்றும் அட்டைப்பெட்டிகளைப் பொறுக்குகிறாள், அதிலும் அலுமினியக்கேன்களை பிரியமாய் தேடித்தேடி எடுத்துக்கொள்கிறாள். குப்பை பொறுக்கும்போதே பரவி ஓட விடும் மனிதர்களின் அருவருப்பைக் கண்டுகொள்ளாத அவள் அன்று சீமான்கள் சிந்தும் அதிசயப்பார்வையையும் கண்டுகொள்ளவில்லை.
டேவிட்டிற்கு இப்பிராந்தியந்தியத்திலேயே பிடிக்காத ஒருவர் உண்டெனில் அது மேடம் குனிங்தான். காரணமிருக்கிறது. ஒருநாள் நிரம்ப நேரம் கொதிக்கவைத்து விட்ட ஒரு பதார்த்தம் பொங்கி வழிந்து வீணாக்கிவிட்ட ‘மைக்ரோ அவனை’க் காயவைப்பதற்காய் வெளியில் வைத்தார் டேவிட். வைத்துவிட்டு வந்து ஐந்து நிமிடம் இருக்காது; காணவில்லை. குனிங் அந்த வழியாய் அப்போதுதான் வந்துகொண்டிருந்தாள். அவளிடம் போய் என்ன கேட்பது? சீன மொழியில் அவள் திட்டும் திட்டுக்களை செவிடன் கூட விரும்பமாட்டான்.
பிளாஸ்டிக் கூடையில் பலவித பழங்களை எடுத்து வந்தாள் அவள். இவ்வளவு கஷ்டப்படும் வாழ்விலும் இவ்வளவு இரக்கமா, அதிலும் குரங்கு மீதா? பார்ப்பவர்களெல்லாம் அதிசயித்தார்கள். ஒவ்வொன்றாய் எடுத்து அதனருகில் வைத்தாள். பித்தளையில் செய்த சிறிய குண்டான் ஒன்றை மட்டும் யாருக்கும் தெரியாதவாறு அருகிலேயே வைத்துக்கொண்டாள் அவள். அதற்குள் ஏதோ இருந்தது போலிருந்தது.
குரங்கு ஒரு குழந்தையைப்போல அவளது கை போகுமிடத்தையெல்லாம் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தது. பெரும்பாலும் தலையை அசைக்காமல் கண்களை மட்டும் அசைத்தது. கொஞ்சம் பயந்தது போல பற்களைக் காட்டி பின்னர் நிதானமானது. கூடியிருந்த மக்களெல்லாம் அதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அதிசயத்தையெல்லாம் சிறிதுகூட அசட்டை செய்யாது தேவனுக்குச் செய்யும் பணிவிடையைப் போல அவள் செய்துகொண்டிருந்தாள். அவள் கொடுத்த மாட்டிறைச்சி பன்னை பிரியமுடன் அது வாங்கி முகர்ந்தபோது மிஸஸ் ராஜாமணி முகம் அஷ்டகோணலானது. “ராமதூதனாம் ராமதூதன், வரவர இந்துக்களை இந்துக்களே மதிக்கிறதில்லை, சீனசாதி எப்படி மதிக்கும்” என்றவாறு அவள் பின்னகர்ந்தாள். ஒரு இந்துக் குரங்காகிவிட்ட அது மாட்டிறைச்சி பன்னை கையில் ஏந்தியதையே அவளால் தாங்க முடியவில்லை. மிஸஸ் ராஜாமணியின் அருவருப்பு மிஸஸ் டேவிட்டுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
தனது வீட்டு வாசலில் இப்படியெல்லாம் இன்று நடக்கும் என்று டேவிட்டும் அவர் மனைவியும் நினைத்துக் கூடப்பார்க்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்கள். “என்னங்க, இங்கெ என்னவோவெல்லாம் அசிங்கம் பண்ணிக்கிட்டு கெடக்குது, நீங்க கண்டுக்காம இருக்கீங்க” என்றவாறு அவர்களருகில் வந்தாள் மிஸஸ் ராஜாமணி. ஓர் இந்துக் குரங்கு பண்ணிய மீறலை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை, நெஞ்சு ஏறியிறங்கியது. குரங்கு பன் ரொட்டியை ஒரு கடி கடித்ததும் ’ராமதூதா’ என அலறியே விட்டாள்.
”இங்க பாருங்க மிஸஸ் டேவிட், இதெல்லாம் சாமி தெரியும்ல, பாருங்க; எத்தனை வீடு இந்த ரோவுல இருக்கு, யாரு வீட்டுக்காவது வந்துருக்கா? ஏன் வரலை? உங்க வீட்டுக்கு மட்டும் ஏன் வரணும்? பாருங்க! இந்த ரோவுல உங்க வீடு மட்டும்தான் தமிழவங்க. மத்ததெல்லாம் சீனவங்க, மலாய்க்காரங்க. நான் நெனைக்கிறேன், ஏதோ நல்லதுக்குத்தான் உங்க வீட்டுக்கு அது வந்திருக்குன்னு. நீங்க ஏதாவது சாப்பிடக்கொடுக்கணும் பாருங்க!” என்றவாறு கூட்டத்தை எட்டி குரங்கைப் பார்த்தாள். அது இன்னும் மென்று கொண்டிருந்தது.
”போங்க, போய் ஏதாவது எடுத்துட்டு வாங்க” என்று கணவனை ஏறிட்டாள் மிஸஸ் டேவிட். ”பைத்தியமா நீ, வி கேன்னாட் ஃபீட் மங்கீஸ், இட்ஸ் ஆன் அஃபென்ஸ், யு நோ” என்றவாறு அவளை சரிக்கட்ட முனைந்தார் அவர். என்ன கொடுப்பதென்று தெரியவில்லை. கொடுப்பதும் தவறு என்று தயங்கினார் அவர். குரங்குக்கு மாமிச வாடை பிடிக்காமல் இருந்திருக்கலாம். குனிங் கையில் ரம்புத்தானைப் பார்த்ததும் பன் ரொட்டியைக் கீழே போட்டது. மிஸஸ் ராஜாமணிக்கு ஏக சந்தோஷம். “நான் சொல்லல. அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம்” என கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.
குனிங், ஒவ்வொரு முறை பழம் கொடுக்க குரங்கின் கையருகே கொண்டு செல்லுவதும் பழத்தை அது வாங்கிய உடனே அப்பித்தளைக் குண்டானை அதனருகில் காட்டி ஆட்டுவதும் எதற்கென்று யாருக்கும் புரியவில்லை. அவளும் எல்லா ரம்புத்தான் பழங்களும் முடியும் வரை அப்படிச் செய்துகொண்டேயிருந்தாள். ஒருமுறையாவது குரங்கு அக்குண்டானைப் பார்க்காதா என்று அவள் ஏங்கியது தெரிந்தது. பழங்களும் முடிந்தன. பழம் முடிய முடிய குரங்கு அக்குண்டானைப் பார்க்கும், ஏதாவது செய்யும் என்று மிகுந்த ஆசையோடு நீட்டினாள். பாழாய்ப்போன குரங்கிற்கு பழம் தெரிந்த அளவு குண்டான் தெரியவில்லை போலும். அவள் அப்படிச்செய்வதைப் பார்த்த அபாங் ரசூலி ஏதோ புரிந்துகொண்டவன் போல அவசரமாய் உள்ளே ஓடினான்.
வெளியே வரும்போது இரண்டு வாழைப்பழமும் ஒரு சிவப்புநிற மூங்கில் கூடையும் கொண்டு வந்தான். ஒரு வாழைப்பழத்தைக் குரங்கிடம் நீட்டும்போதே மூங்கில் கூடையையும் நீட்டினான். குரங்கு இம்முறை இரண்டையும் குறுகுறுவென பார்த்தது. இதற்கிடையில் மேடம் குனிங்கின் பழமெல்லாம் தீர்ந்துவிட்டது. பித்தளைக் குண்டானைக் குரங்கிற்குப் பிடிக்கவில்லையோ என்று மடமடவென்று வீட்டிற்கு ஓடினாள். எங்கே குரங்கு ரசூலியின் மூங்கில் கூடையை தேர்ந்தெடுத்துவிடுமோ என்று அவள் பயந்து துடித்தது போலிருந்தது. வீட்டிலிருந்து அவசரமாய் ஓடிவந்தவள் கையில் இப்போது இன்னொரு கொத்து ரம்புத்தான் பழமும் ஒரு மூங்கில் கூடையும் இருந்தது. அதற்காக பித்தளைக் குண்டானையும் அவள் விடவில்லை, அதையும் நீட்டினாள். குரங்கு எதையும் சீண்டவில்லை. சிறு யோசனைக்குப்பிறகு குனிங்கின் ரம்புத்தானை வாங்கிச் சாப்பிட்டது. அதற்கு அதுவே பிடித்திருந்தது போலும்.
அது சாப்பிட ஆரம்பிக்கும்போதே குனிங், பித்தளைக் குண்டானை நீட்டினாள். குரங்கு அதைத்தள்ளிவிட்டது, மீண்டும் நீட்டினாள். மீண்டும் அதைத்தள்ளிவிட்டது. மீண்டும் நீட்டினாள்; மீண்டும் தள்ளிவிட்டது. வந்தது கோபம் அவளுக்கு. ரெண்டு கொத்து ரம்புத்தானை சாப்பிட்டுவிட்டு அவளையே அவமதித்ததால் கோபம் கொப்பளித்தது. ஹொக்கியன் பாஷையில் குரங்கைக் கத்தினாள் வெறிவந்தவளைப்போல. அருகிலிருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்தார்கள்.
மிஸஸ் ராஜாமணி பரபரப்பானாள். ”அதெப்படி அவள் நம்ம குரங்கைத்திட்டலாம்? என்னங்க, குமுதினி அப்பா, எல்லாரையும் போகச்சொல்லுங்க, இது உங்க வீட்டுக்கு வந்த குரங்கு. இந்து குரங்கு.” என்றாள்.
அவருக்கும் குரங்கை அவள் அப்படித் திட்டியது பிடிக்கவில்லை, “பிளீஸ் எல்லாரும் கெளம்புங்க, எம்பி வரப்போறார்” என்றார் அவசரமாய். இச்சலசலப்பைக் கண்டு உபத்திரவமடைந்ததாய் எழுந்து மெல்ல நகர்ந்தது குரங்கு. டேவிட் எப்படியாவது அது நகர்ந்து விட்டால் போதும் என்றிருந்தார். மேடம் குனிங் விடுவதாயில்லை. பின்னால் ஓடினாள். ஓடும்போது அப்பித்தளைக் குண்டானையும் காட்டிக்கொண்டே ஓடினாள். குரங்கு அதையும் அவளையும் சட்டை செய்யக்கூட இல்லை. அதன் வேகம் மட்டும் அதிகரித்தது.
அவளும் விடுவதாயில்லை, பித்தளைக்குண்டானை நீட்டியவாறே ஓடினாள். உதிரி உதிரியாய் எழுதப்பட்டிருந்த எண்கள் கொண்ட சீட்டுகள் அதனிலிருந்து விழுந்தன. கீழே விழுந்த இன்னும் சில சுருட்டிய சீட்டுகளில் நான்கிலக்க எண்கள் எழுதப்பட்டிருந்தன. சிந்தும் சீட்டுகளையும் பொருட்படுத்தாமல் அவளும் குரங்கோடு ஓடிக்கொண்டிருந்தபோது கேட்ட நங்கென்ற ஒலியால் குரங்கு மிரண்டு அருகிலிருந்த மரத்தின் கிளைபற்றிப் பாய்ந்தது.
இரு வாரம் கழித்து, வனவிலங்குக்கு ஊறு விளைவித்ததாய் டேவிட் குடும்பத்தாருக்கு நூறு வெள்ளி அபராதம் விதித்தது வனவிலங்கு வாரியம். வெளியில் வந்து அதை வாங்கும்போது தடுக்கி விழுந்ததில் பித்தளைக் குண்டான் வெட்டி, பிளாஸ்டர் போடப்பட்டிருந்த மூக்கு மற்றும் கன்னத்துக் காயத்தைத் தடவிக்கொண்டே குனிங் வீட்டைக்கடந்து சென்றாள். என்ன நினைத்தாளோ கொஞ்ச தூரம் சென்றதும் திருப்பிப் பார்த்தாள். டேவிட்டும் அவளும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். இன நல்லிணக்கத்திற்கான ஒரு அறிகுறியாகவும் அது தென்பட்டது.
3 comments for “நல்லிணக்கம்”