‘கற்பனையே பிரதானம்’ – அறிவியலாளர் முகிலன்

முகிலனின் ஆரம்பக் கல்வியெல்லாம் சிலாங்கூரிலுள்ள செர்டாங்  தமிழ்ப்பள்ளிதான். எஸ்பிஎம் தேர்வில் 11 ஏக்கள் பெற்ற முகிலன் அமெரிக்க புளோரிடா மாநிலத்திலுள்ள (Embry Riddle Aeronautical University) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அப்பல்கலைக்கழகத்தில்  “விண்வெளிப் பொறியியல் மற்றும் விண்வெளி அறிவியல்” (Aerospace Engineering and Space Science) மாணவராக இருந்து தன் இலக்கை அடைய கற்றார்.

11ஏக்கள் பெற்று சிறந்த மாணவராக விளங்கிய முகிலன் மலேசிய அரசாங்கத்திடமிருந்து கல்விக்கடன் உதவி எதனையும் பெறவில்லை. பல முயற்சிகளை மேற்கொண்டார். பலன் ஏதுமில்லை. தனது முயற்சிகள் பலனளிக்காததால் ஏமாற்றம் அடைந்திருந்த போதிலும் இலட்சியத்தைக் கைவிட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் மாற்று வழிகளை நாடினார்.

எம்ஐஇடி (MIED), (EWRF),தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் ஆகியோரிடமிருந்து  கடன் பெற்றதோடு அவரது தந்தையின் உதவியோடு தன் வெளிநாட்டுக்கல்வியை முடித்து அண்மையில் 10000 அடிவரை பறக்கும் ராக்கெட்டையும் எய்துள்ளார். முகிலனை சந்தித்து உரையாடலைத் தொடர்ந்தபோது இன்னும் விரிவாக அவர் பற்றி அறிய முடிந்தது.

interview-aகேள்வி : முதலில் நீங்கள் அமெரிக்காவில் சோதனை செய்த ராக்கெட் தொடர்பாகக் கூறுங்கள்.

முகிலன் : ராக்கெட்டில் குறைவான சக்தி வாய்ந்தது மற்றும் அதிக சக்தி வாய்ந்தது என இரு பிரிவுகள் இருக்கின்றன. குறைவான சக்தி வாய்ந்த ராக்கெட்டை யாரும் விடலாம். அது பட்டாசு வடிவங்களில் கூட உள்ளது. ஆனால் அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை பாய்ச்சிட  National Association of Rocketry யின் அனுமதி தேவை. அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை விடுவதில் மூன்று பகுதிகள் உண்டு. ஒரு பகுதியில் தேர்வு பெற்ற பின்பே அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். அனுமதி இல்லாமல் ராக்கெட்டை பாய்ச்சிட  முடியாது. அத்தனை  தயாரிப்பு பொருள்களும் ஆபத்தானவை. நான் இரண்டாம் நிலை ராக்கெட்டையே ஏவினேன்.

கேள்வி : இதில் நீங்கள் இயங்க காரணம் என்ன?

முகிலன் : இதை நான் செய்வதற்கு காரணம் எனது ஆர்வம்தான். ஆனால் மலேசியாவில் இது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. நான் எனது ஐந்து வயதுதில் ராக்கெட் விஞ்ஞானியாகவேண்டும் என முடிவெடுத்தேன். ஆனால் இன்று இருக்கும் மாணவர்களின் ஆர்வம் மிகச்சுருங்கியதாய் உள்ளது. மாணவர்களுக்கு இது குறித்து ஆர்வம் இல்லாததற்கு அவர்களுக்கு அது குறித்த எந்தப் பிரக்ஞையும் இல்லாததே காரணம். எனக்கு என் பெற்றோர் வாங்கி கொடுத்த நூல்களின் மூலமாகவே இந்த ஆர்வம் எழுந்தது. எனக்குக் கிடைத்த ஆசிரியர்களும் அற்புதமானவர்கள்.

கேள்வி : அமெரிக்காவில் நீங்கள் மேற்கொண்ட கல்வி குறித்து கூறுங்கள்.

முகிலன் : Bachelor of Science in Aerospace Engineering ல் எனது கல்வியை முடித்தேன். ஆனால் நான் எனது தேடலை சுருக்கிக்கொள்ளவில்லை. பல்கலைக்கழகத்தில் எங்கு எவ்விதமான புதிய முயற்சிகள் நடந்தாலும் நான் அதில் பங்கு பெருவேன். கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை மட்டும் எனக்கு எப்போதுமே இருந்தது.

கேள்வி : அமெரிக்காவில் இத்துறை பெரிய அளவில் முக்கியத்துவம் பெற காரணம் என்ன?

பதில் : அமெரிக்காவில் இது பொழுதுபோக்காகத்தான் தொடங்கப்படுகிறது. ஆனால் அதன் முக்கிய நோக்கம் ராக்கெட் துறையை பெரிய அளவில் வளர்த்து எடுப்பதுதான். இதற்கு பெரிய  எதிர்க்காலம் உண்டு. என் கணிப்பில் இன்னும் 30 ஆண்டுகளில் விண்வெளிப்பயணம் என்பது சாதாரணமாகிவிடும். அதற்கான ஆர்வத்தை இப்போதே குழந்தைகளிடம் புகுத்த அமெரிக்கர்கள் விரும்புகின்றனர். நமது நாட்டின் பூகோளம் இன்னும் அதற்கு ஏதுவானது. நாம் இப்போது அதற்கான முயற்சிகளை எடுத்தால் தென்கிழக்காசியாவில் முக்கியமான ராக்கெட் ஏவும் மையமாக உருவெடுக்க இயலும்.

கேள்வி : இந்த நிலையை அடைய நீங்கள் கடந்துவந்த படிநிலைகள் பற்றி கூறுங்கள்.

முகிலன் :  படிவம் 5 முடித்தவுடன் மலேசியாவில் நான் விரும்பிய ராக்கெட் தொடர்பான கல்வி உள்ளதா என ஆராய்ந்தேன். இல்லாத பட்சத்தில் அமெரிக்கா சென்று பயில முடிவெடுத்தேன். அதற்கு என் பெற்றோர்களின் ஒத்துழைப்பே காரணம். அவர்கள் இல்லாமல் நான் என் லட்சியத்தை அடைந்திருக்க முடியாது. என்னிடம் இருந்தது தன்னம்பிக்கை மட்டுமே. இன்னொருவர் செய்யும் ஒரு காரியத்தை என்னாலும் செய்ய முடியும் எனத் திடமாக நம்பியதால் நான் அமெரிக்கா சென்று ராக்கெட் தொடர்பாக கற்று அதில் இயங்கவும் முடியும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இந்த நம்பிக்கையைக் கொடுத்தவர் என் அப்பாதான். அவர் நாட்டில் புகழ்பெற்ற தன்முனைப்பு பேச்சாளர் ரெ.கோ .ராசு. ‘தன்னம்பிக்கை’ பாலசுப்ரமணியம்  என் அப்பாவின் நெருங்கிய நண்பர். எனவே என் வளர்ச்சி தன் முனைப்பு பேச்சுகளுடன்தான் தொடர்ந்தது. எனக்கு என்னால் முடியாது என்ற எண்ணம் தோன்றியதே இல்லை.

கேள்வி : தன்னம்பிக்கை மட்டுமே வெற்றிக்கு ஆதாரம் என்கிறீர்களா?

முகிலன் : இல்லை. முதலில் நமக்குக் கற்பனை வேண்டும். பின்னர் கற்பனையின் மீது நம்பிக்கை வேண்டும். அதுவே பின்னர் நடவடிக்கையாக மாறும்.

படிப்பதும் சிறந்த  தேர்ச்சி பெருவதும்  ஒரு மாணவனின் நடவடிக்கைகளால் விளைவது. நடவடிக்கை நம்பிக்கையால் மட்டுமே நடக்கிறது. நம்பிக்கை உருவாக கற்பனையே காரணமாக உள்ளது. நான் ஒரு தமிழ்ப்பள்ளி மாணவன். தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு எவ்வித தாழ்வு மனப்பான்மையும் தேவையில்லை. அதை அகற்றவே நான் நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களை சந்திக்க விரும்புகிறேன்.

interview-bகேள்வி : நீங்கள் சொன்ன கற்பனை வளர இன்றுள்ள கல்வி அமைப்பு உதவுகிறது என நம்புகிறீர்களா?

முகிலன் : இப்போது உள்ள கல்வி அமைப்பு என்னை மிகவும் கவர்கிறது. மாணவர்களுக்கு இன்று சுயமாகத் தேட நிறைய வாய்ப்புகள் உண்டு. அவர்கள் சுயமாக இயக்க ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டியுள்ளது. இணையம் இன்று மாணவர்களின் உலகை விசாலமாக்கி உள்ளது. அவை இன்று மாணவனின் கற்பனையை விரிவாக்கியுள்ளது. நான் 18 வயதில் அமெரிக்கா சென்ற போது அந்தச் சுமையைத் தாங்க என் தந்தை தயாராக இருந்தார். ஒரு மாணவனின் ஆர்வத்தை பூர்த்தி செய்ய பெற்றோர்கள் தயாராக உள்ளனர். நாம் ஆசைப்பட வேண்டும். என் அப்பா சொல்வது போல ஒரு தலைமுறை செய்யும் தியாக்கத்தில்தான் அடுத்த தலைமுறை வாழ்கிறது.

கேள்வி : நீங்கள் சந்திக்கும் மாணவர்களின் மனநிலை குறித்து கூறுங்கள்.

முகிலன் :  எந்த மாணவனை இப்போது கேட்டாலும் மருத்துவராக, வழக்கறிஞராக, இஞ்சியனராக வர வேண்டும் என்றே கூறுகின்றனர். அவர்களின் ஆர்வத்தை தீர்மானிப்பது அவர்கள் பெற்றோர்கள். பொருளாதாரம் சார்ந்த ஆசை அது. ஆனால், அந்த மாணவனுக்கு எதில் உண்மையான ஆர்வம் எனத் தெரிய வேண்டும்.

முன்பு பல மாணவர்கள் சின்ன வயதில் தனது எதிர்க்கால ஆசை ஆசிரியராக வர வேண்டும் எனச் சொல்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்கள் அப்படிச்சொல்லக் காரணம் ஆசிரியர்களை அவர்கள் பார்ப்பதால்தான். ஒரு மாணவன் பலவற்றையும் பார்ப்பதும் அதன் மூலம் உணர்வது அதி முக்கியமானது. அதன்  மூலமே கற்பனை சாத்தியமாகிறது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஒரு மாணவனுக்குச் செய்ய வேண்டியது அதைதான்.

கேள்வி : நீங்கள் இந்த நிலையை மாற்ற ஏதேனும் திட்டம் வைத்துள்ளீர்களா?

முகிலன் :  நிச்சயமாக. நான் படிக்கும் போது இத்தகைய வாய்ப்பு இல்லை. ஆனால், இந்தக் காலத்தில் நம் மாணவர்களுக்கு இதுபோன்ற நிலை வரக்கூடாது. எனவே ஆரம்பப்பள்ளியில் பயிலும்  5  மற்றும் 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கும் படிவம் 1 முதல் படிவம் 6 வரை பயிலும் மாணவர்களுக்கும் எனது நிறுவனம் மூலம் ராக்கெட் தொடர்பான அறிமுகங்களை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.

கேள்வி : இன்று அதற்கான முன்னெடுப்புகள் அறவே இல்லை என்கிறீர்களா?

முகிலன் : சந்தைகளில் 2000 ரிங்கிட்டுக்கு பறக்கும் தட்டுகள் விளையாட்டுப் பொருளாக விற்பனை ஆகின்றன. அவற்றை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். அனைத்தையும் இணைக்கும் உக்திகள் அந்தப் பொருளோடு இருக்கும். அதை வாங்கி பொருத்தும் ஒரு மாணவன் அறிவது கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்பதை மட்டுமே. மாறாக அது பறக்கும் விதத்தை அவன் எப்போதும் அறியப் போவதில்லை. ஆனால் நான் கொண்டுவரப்போகும் மாற்றும் முயற்சிகள் மூலம் ஒரு மாணவன் அடிப்படையான உக்திகளைப் பயில்வான்.அறிவியல் என்பது கருவிகளை உபயோகிப்பதில் இல்லை. எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிவதில்தான் உள்ளது.

interview-cகேள்வி; மலேசியாவில் உள்ள இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நீங்கள் எப்படி பங்காற்ற  முடியும்.?

முகிலன் : மாணவர்களை கருத்தரங்குகள் மூலமாகத்தான் சந்திக்க முடியும். இன்று நாட்டில் பல இடங்களில் கல்விக் கருத்தரங்குகள் நடை பெற்று வருகின்றன.

அமெரிக்காவில் நான் படித்துக் கொண்டிருக்கும் காலங்களில் ,விடுமுறையில் நான் மலேசியா வரும் போதெல்லாம் நாடு முழுமையும் சென்று “மிக சிறந்த மாணவராக திகழ்வது எப்படி?” என்ற தலைப்பில் கருத்தரங்குகள் நடத்தி இருக்கிறேன். இப்போது நான் இங்கேயே இருப்பதால் ,எனது வியாபார நிமித்தம் நான் வெளி நாடுகள் போகாத காலங்களில் இங்கே நான் மாணவர் பயிற்சி நடத்திட முடியும். நாட்டின் எந்த இடத்தில் இருந்து பயிற்சி நடத்திட என்னை அழைத்தாலும் ,என்னால் சென்று பயிற்சி  நடத்திட  முடியும். இந்த ஏற்பாட்டை செய்ய வாய்ப்புள்ளவர்கள் தாரளமாக என்னை அழைக்கலாம்.

கேள்வி :பொதுவாக எல்லோராலும் சிறந்த மாணவராக வந்து விட முடியும் என நீங்கள் எண்ணுகிறீர்களா?

முகிலன் : முடியும் என்பதுதான் உண்மை. இதை விட முக்கியம் ‘வேண்டுமா ?’ என்பதுதான். அந்த ‘வேண்டும்’ என்ற  எண்ணத்தைத்தான் மாணவர்களின் நெஞ்சத்தில் நாம் பதிக்கிறோம். இது ஒரு நாள் வேலை அல்ல. தொடர்ந்து செயல் படுத்தப் பட வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அன்றாடம்  மனதினில் புகுத்தப் படுத்தப் பட வேண்டும். அடி மேல் அடி அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல ,’என்னால் முடியும்’என்ற நம்பிக்கையும் ,’நான் சாதிப்பேன்’ என்ற உணர்வும் ,’என்னால் என் குடும்பத்துக்கு பெருமையை தேடித் தர முடியும்’என்று ஒரு  மாணவனை நினைக்க வைத்து  விட்டால் ,எல்லாரையும் வெற்றிகரமான மாணவராக ஆக்கிட முடியும் என்பதே என் நம்பிக்கை.

இன்னும் முப்பது வயதைக்கூட எட்டாத முகிலனின் சாதனைகளும் வருங்கால சந்ததியினரின் மேல் அவர் காட்டும் அக்கறையும் உற்சாகமூட்டியது. பள்ளிகளில் பாடத்திட்டத்தை மட்டும் மையப்படுத்தாமல் முகிலன் போன்ற அறிவியலாளர்களை அறிமுகம் செய்து வைப்பதன் வழி மாணவர்களின் கற்பனை உலகத்தை இன்னும் விரிவாக்கலாம்.

முகிலனின் தொடர்பு எண் : 0163116524

மின்னஞ்சல் முகவரி : mugilan.j@gmail.com

—————————————

நேர்காணல் : .நவீன்

3 comments for “‘கற்பனையே பிரதானம்’ – அறிவியலாளர் முகிலன்

  1. vasanthan
    July 12, 2013 at 7:52 am

    Nalla neerkanal mugilan pondravarkal nam samutayathukku innum eetavathu seyya mun vara veendum.

    – vallavan

    • soosai manickam
      July 16, 2013 at 6:33 pm

      வருங்காலங்களில் தமிழர்கள் சிறப்பாகவே வாழ்வார்கள் என்று உறுதியாகவே நான் நம்புகிறேன். இந்தப் பேட்டி அதனை உறுதிப் படுத்துகிறது. வாழ்க தமிழினம்!

      கோடிசுவரன்

  2. R. SHARAVANA THEERTHA
    July 15, 2013 at 9:51 pm

    தமிழ் உருவாக்கிய வின்கலன் முகிலன்

Leave a Reply to R. SHARAVANA THEERTHA Cancel reply