திறவுகோல் 7: திரிந்தலையும் திணைகள்

thirinthalayum-thinaigal-500x500இந்தக் குறுநாவல் சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கரால் எழுதப்பட்டு, சந்தியா பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் இந்நூலூக்காக நூலாசிரியர் கரிகாலன் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வருடங்கள் பள்ளியில் ஒன்றாகப் படித்து, திருமணமான பிறகு வெவ்வேறு நாடுகளில் வாழ நேரிடும் இரண்டு பெண்களின் வாழ்க்கைப் போராட்டம்தான் நாவலின் மையமாக உள்ளது. 1983 ஆம் ஆண்டில் தொடங்கி கிட்டத்தட்ட இருபத்தைந்து வருட வாழ்வை சிங்கப்பூர், இந்தியா என்ற இரண்டு களங்களின் வழியாக இந்நாவல் பேசிச் செல்கிறது. பள்ளித் தோழிகளான பத்மா, ரேணு இருவரின் கதைகளும் ரயில் தண்டவாளத்தைப் போல நாவலில் பயணிக்கின்றன.

இந்தியாவில் பிறந்து வளர்ந்து சிங்கப்பூரியனைக் கைப்பிடித்து ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகும் பத்மா, தன் கணவன் தவறான வழியில் மாமியார் வயிற்றில் வந்தவன் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறாள். அந்தத் தவறை மன்னித்து மாமியாரை மணந்து கொண்ட மாமனாரின் மீது பெரும் மதிப்பு கொள்கிறாள். இந்த உண்மையை கணவனிடம் கூறலாமா வேண்டாமா என்ற நெருக்கடி அடிக்கடி அவள் மனதில் எழுகிறது. சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற பிறகும் இந்த மண்ணோடு ஒட்ட முடியாமல் அந்நியமாக உணர்வதன் மூலம் அடையாளச் சிக்கலை எதிர்கொள்கிறாள். தன் மகள் வளர, வளர அவளது போக்கைக் கண்டு பயப்படும் ஒரு சராசரித் தாயாக இருக்கிறாள்.

பத்மா போலல்லாமல் ரேணுவின் வாழ்க்கை துயர் மிகுந்ததாக இருக்கிறது. முதல் கணவன் மனநோயாளியாக இருந்து அவளைச் சித்திரவதை செய்ய குழந்தையோடு அவனை விட்டு பிரிகிறாள். பிறகு தன்னைச் சுற்றி, சுற்றி வந்து காதலிக்கும் மற்றொருவனுக்கு மனைவியாகி அவனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ முடியாமல் அவனையும் விட்டுப் பிரிகிறாள். தனது வாழ்க்கையின் அச்சாணி என்று நினைத்த மகனும் அவளை விட்டு விலகிப் போக இறுதியில் மனநோய்க்கு ஆட்படுகிறாள்.

சிங்கையில் உள்ள யூஷூன் முருகன் கோயிலின் வரலாறு இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் எலந்த மரம் பாலசுப்பிரமணியர் கோயிலாக இருந்து பிறகு புனித மரம் பாலசுப்பிரமணியர் கோயிலாக மாறி உள்ளது. இக்கோயில் கட்டுவதற்கு ஒரு வெள்ளைக்காரர் தனது இடத்தைக் கொடுத்துள்ளார். பிறகு யூஷூன் எம்.ஆர்.டி. கட்டுமானப் பணிக்காக இக்கோயில் செம்பவாங்கிலிருந்து தற்போது உள்ள இடத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இதே போன்று சிங்கையின் வாழ்க்கைச் சூழல் பதிவுகளாக விளையாட்டுத் திடல், பாலர் பள்ளி போன்றவை சிறப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இது போன்ற இடங்களைச் சொல்வதன் மூலம் மட்டுமே சிங்கை  வாழ்க்கையைப் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்திவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. மேலும் சிங்கைக்கே உரித்தான சில வழக்கு  சொற்களைப் பயன்படுத்தியிருப்பதிலும் ஒரு செயற்கைத்தனம் தெரிகிறது. அவை நாவலோடு ஒட்டாமல் தனியாகத் துருத்திக் கொண்டு தெரிகின்றன.

திருமணம் முடிந்த சில நாட்களில் காதலித்தவன் மிரட்டலுக்குப் பயந்து Tiravukol 3தற்கொலை செய்து கொள்ளும் பத்மாவின் தம்பி மனைவி மீனா. இரு திருமணங்களிலும் தோல்வியுற்ற அக்காவைப் பார்த்த பிறகு திருமணமே வேண்டாம் என்று முடிவு எடுக்கும் ரேணுவின் சகோதரி ரேவதி. தனது பிள்ளைகளுக்கு நல்வாழ்வு அமைத்துத் தர பணிப்பெண்ணாக சிங்கைக்கு வந்து இறுதியில் புற்று நோயால் மரணமடையும் இலங்கைப் பெண் தர்ஷிணி. தனது மகனின் நண்பனுடன் வாழ ஆரம்பித்து, அதனால் மகனின் வெறுப்புக்கு உள்ளாகி, இறுதியில் காதலனாலேயே கொலை செய்யப்படும் சீனப்பெண் லீலிங். விபத்தில் அழிந்து போன தனது கல்யாண புகைப்படங்களை நினைத்து தன் வாழ்க்கையைத் தொலைத்து மன நோய்க்கு ஆளாகும் கவிதா. இருபது வயதில் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்குத் தாயாகி எப்போதும் அடுத்தவரைச் சார்ந்து வாழும் சோம்பேறியான அமாட்டின் மகள். தனது விருப்பங்களிலும், இலக்குகளிலும் தெளிவாகவும் தைரியமாகவும் இருக்கும் நவீன காலப் பெண்களின் பிரதிநிதியான பத்மாவின் மகள் அர்ச்சனா.

இப்படிப் பல பெண்களின் கதைகள் நாவலின் ஓட்டத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் சீனப்பெண் லீலிங்கைத் தவிர வேறு எந்தப் பெண் கதாபாத்திரமும் ஒரு வாசகியாக என் மனதில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும். சரவணனின் பிறப்பு ரகசியம் பத்மாவுக்குத் தெரிய வருவது, அதைப் பற்றி அவள் தனது அப்பாவுக்குக் கடிதம் எழுதுவது, உண்மையான அப்பா கதாபாத்திரம் ஆகியவை நாவலை உயர்த்த எந்த விதத்திலும் பங்காற்றவில்லையோ என்று தோன்றுகிறது.

நாவலின் தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. தமிழர்கள் வாழ்க்கையை அகத்திணை, புறத்திணை என்று இரண்டாகப்  பிரித்தனர். ஆனால் இன்றைய உலகமயமாக்கச் சூழலில் மற்றவர்களுடன் கூடி வாழ்வதில் பல நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டு, நாம் ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகளாக திரிந்தலைகிறோம் என்பதுதான் நிதர்சனம்.

புனைவாக இருந்தாலும் வாசிப்பவருக்குக் கதாபாத்திரங்களின் மீது ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது அவசியம் என்ற வகையில் பார்த்தால், நிழற்படங்களின் மீது அதீத ஆசை கொண்டு தனது திருமணப் புகைப்படங்கள் அழிந்து போவதால் மனநோய்க்கு ஆளாகும் கவிதா என்ற கதாபாத்திரம் யதார்த்தத்தை மீறிய ஒன்றாக எனக்குத் தோன்றியது.

மஞ்சுவின் தற்கொலை, பத்மாவுக்கு நேரும் விபத்து போன்ற சில நிகழ்வுகள் நாடகத்தனமாக தோன்றின. வாழ்க்கையில் இப்படியான நாடகத் தருணங்கள் இல்லையா? என்று கேட்டால் இல்லவே இல்லை என்று முற்றிலுமாக மறுத்துவிட முடியாது. ஆனால் ஒரு நாவலில் அவை இடம் பெறும்போது அவற்றின் பின்புலம் மேலோட்டமாக இல்லாமல் அந்நிகழ்வை நியாயப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

சிங்கப்பூர், இந்தியா என்ற இரண்டு நாடுகளில் கதை நகர்ந்தாலும் சிங்கப்பூர் வாழ்க்கையை வாசிக்கையிலும் இந்தியத் தன்மையே தென்படுவது நாவலின் பலவீனமாகத் தோன்றியது. பெண்களைப் பற்றிய நாவல், குறிப்பாக ஒரு பெண் எழுத்தாளர் எழுதியது என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், பெண் கதாபாத்திரங்களின் அகத்திணைகள் இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் அவர்களது பார்வையிலிருந்தே சொல்லப்பட்டிருந்தால் இந்நாவல் இன்னும் ஒருபடி மேலெழுந்திருக்க வாய்ப்புண்டு. நாவல் என்ற களத்தில் புலம் பெயர் எழுத்தாளர்கள் அதுவும் பெண் எழுத்தாளர்கள் குறைவாக உள்ள சூழலில் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டதற்காக எழுத்தாளரைப் பாராட்டலாம்.

1 comment for “திறவுகோல் 7: திரிந்தலையும் திணைகள்

  1. April 9, 2017 at 7:01 pm

    தெளிவான விமர்சனம்…

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...