இன அரசியலும் மன முடக்கமும்

pandiyan 3நேற்று என் அம்மாவை அரசாங்க மருத்துவமனைக்குக் கண் சிகிச்சை பெற அழைத்துச் சென்றேன். இது இரண்டாவது முறை மருத்துவச் சந்திப்பு. கூட்டம் முந்தியடித்துக் கொண்டு நின்றது. காலை 8-மணி சந்திப்புக்கு 6.30-மணியில் இருந்து மக்கள் வந்து காத்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். பெரும்பான்மை மருத்துவமனைகளில், அதிலும் அரசாங்க மருத்துவமனைகளில் இச்சூழல் இயல்புதான் என்பதால் அமைதியாக, தாதிகளின் அழைப்புக்குக் காத்திருந்தோம். நேரம் ஓடி நண்பகல் நேரம் வந்துவிட்டது. எண்கள் மிகத்தாமதமாக மாறிக் கொண்டிருந்தன.

என் பக்கத்தில் அமர்ந்திருந்த முதியவர் மிகவும் சோர்வாக இருந்தார். பேசியதில் அதிகாலைவரை பாதுகாவலராகப் பணிபுரிந்துவிட்டு சொட்டுத் தூக்கம் இன்றி மருத்துவமனைக்கு வந்து காத்துக்கிடப்பதாகக் கூறினார். கொஞ்சம் பதற்றமாகக் காணப்பட்ட அவர், மருத்துவர் அறையில் இருந்து வெளிவரும் மலாய்காரர்களைக் காட்டி ‘இவனுங்க எனக்குப் பின்னே வந்தானுங்க, சீக்கிரமாப் போறானுங்க, அவனுங்க இனம்னா சீக்கிரம் பார்த்துடுறானுங்க” என்று அலுத்துக்கொண்டார்.

அவரின் அந்த கூற்று மிகப்பிழையானது என்பது எனக்குத் தெரியும். எல்லாம் எண் வரிசைப்படிதான் போய்க்கொண்டிருந்தார்கள். ஆனால், அவரின் அந்தப் புலம்பலுக்குள் இருக்கும் சமூகப் பின்னணியை என்னால் உணர முடிந்தது. மேலும், அவரின் குரல் எனக்குப் புதியதாகவும் இல்லை. காரணம், நவீன மலேசியாவில் சாமானியத் தமிழன் முதல் படித்த உயர்மட்டத் தமிழன் வரை இதே வகைப் புலம்பல்களை, வெவ்வேறு சூழலில் வெவ்வேறு தொனியில் வெளிப்படுத்துவதைச் சாதாரணமாகக் கேட்கமுடியும்.

கல்விக் கூடங்கள், வேலையிடங்கள், அலுவலக முகப்புகள், காவல் நிலையங்கள் என்று பொதுமக்கள் கூடும் எல்லா இடங்களிலும் மலேசிய இந்தியர்கள் தாங்கள் இன அடிப்படையில் குறைத்து கவனிக்கப்படுவதாகவே உணருகின்றனர். இது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய விடயமாகவும் தெரியவில்லை. பாமரப்புலம்பல் என்று ஒதுக்கவும் முடியாது. ஒரு சிறுபான்மை சமுதாயத்தின் மனதில் ஊறிக் கிடக்கும் பெரிய சுமையின் வெளிப்பாடாக இதைக் கொள்ளலாம்.

மலேசிய இந்தியர்களின் இவ்வகை மன அழுத்தத்தின் பின்னணியை,  நவீன மலேசியாவின் வரலாறு தெரிந்த எல்லாரும் பொதுவாக அறிந்திருப்பர். மலேசியக் குடிமக்கள் அரசியல் தேவைகளுக்காக, பூமிபுத்ரா – பூமிபுத்ரா அல்லாதோர் என்ற இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சலுகைகளும் வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டது, இந்நாட்டின் சமூகவியலை அடியோடு மாற்றியதோடு குடிமக்களிடையே இனப் பாகுபாட்டு உணர்வை வளரச் செய்தது. 1969-இல் நிகழ்ந்த மே இனக்கலவரமும் அதன் பிறகான சட்டவிதிகளில் மலாய் இன மேலெடுப்பும் முக்கியமானவை. புதிய பொருளாதாரக் கொள்கைகள், தேசிய மேம்பாட்டுத் திட்டங்கள், அரசாங்க வேலை/தொழில் வாய்ப்புகள்,  மலாய் இன  மேலாண்மை போன்ற பல தொடர் மாற்றங்கள் சிறுபான்மை இந்தியர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கின.

இதன் ஊடே அரசியல் தரப்பின் பிரதிநிகள், பூமிபுத்ரா அல்லாதோரை  ‘வந்தேறிகள்’ என்றும் ‘தங்கள் உரிமைகளை கேள்விக்குட்படுத்தினால் கலவரம் வெடிக்கும்’ என்றும் அவ்வப்போது அச்சமூட்டும் எச்சரிக்கைகளை வெளியிடுவது சிறுபான்மை மக்களை மிகுந்த பதற்றத்திற்குள்ளாக்குகிறது. மே கலவரம், கம்போங் மேடான் கலவரம் போன்ற இனம் சார்ந்த கலகங்கள் தந்த அச்ச உணர்வை அரசியல் ஆதாயத்திற்காகச் சிலர், மீண்டும் மீண்டும் மக்களின் மனதில் உருவாக்குவதைக் காணமுடிகிறது.

ஆகவே, இவ்வகையான இடர்களைத் தாங்கிக்கொண்டு பல போராட்டங்களின் ஊடே முன்னகர முயலும் இனக்குழு, தன்  அன்றாடத் தோல்விகளையும் இயலாமைகளையும்கூட இன ஒதுக்கலோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகிறது. அரசியல் அடிப்படையில் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஓரினம் தாழ்வுமனப்பான்மையின் உச்சத்தை அடைந்திருப்பதாகத் தோன்றுகிறது.

2007-ஆம் ஆண்டில் மலேசிய இந்தியர்கள் நாட்டு வளர்ச்சியில் இருந்து முற்றாக ஒதுக்கப்பட்டுள்ளதற்கு, சுதந்திரத்திற்கு முன்பான பிரிட்டீஷ் அரசே காரணம் என்ற குற்றச்சாட்டை ஒரு சட்ட வழக்காக முன்வைத்த இன்ட்ராஃப் போராட்டத்தின் பின்னணியும் அந்தப் போராட்டத்தால் இந்தியர்களிடையே கிளர்ந்த எழுச்சியும் இதற்குச் சான்றாகும்.

இந்தியர்களின் பதற்றமான இந்த மனநிலையை முன்வைத்தே இரு தரப்பு அரசியலும் நாட்டில்pandiyan 2 தீவிரமாக இயங்குகின்றன. இந்தியர்களின் நலனுக்காகப் போராடும் தரப்பாக அரசியல் கட்சிகள் வெகு எளிதாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள இச்சூழல் வழி அமைக்கிறது. ஏதாவதொரு சிக்கலை முன்வைத்து இனஅடிப்படையில் பேசிவிட்டால் அவர் இனப்போராட்டவாதியாக அங்கீகரிக்கப்படும் நிலையே இங்குள்ளது.  அடையாள அட்டைப் பிரச்சனை முதல் தமிழ்ப்பள்ளி பிரச்சனை வரை அனைத்து சட்டப் பிரச்சனைகளும் ஒடுக்கப்பட்ட இனத்தின் குரலாகத்தான் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே, அன்றாட அரசியல் பரபரப்புக்கு மட்டுமே இச்சூழல் சாதகமாக அமைகின்றது.

மாறாக தனிமனித நிலையில், நிச்சயமாக இந்நிலை செயலூக்கத்தை முடங்கச்செய்யும் அகச்சிக்கலாகும். அரசியல் அடிப்படையில் வாய்ப்புகள் மறுக்கப்படுதலால் ஏற்படும் புறபாதிப்புகளை விட மனிதனின் தன்னம்பிக்கையை குலைக்கும் அகச்சிக்கல் மேலும் ஆபத்தானது. அரசியல் அன்றி பொது உறவு விடயங்களிலும் விரிசலையும் எதிர்மறை எண்ணங்களையும் வளர்க்கும் இம்மனநிலை, தனக்குள் தானே முடங்கிச் சுருண்டு படுத்துக்கொள்ளும் ஆபத்தான மனோநிலையாகும். மலேசிய இந்தியர்கள் தாங்கள் இன ஒதுக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை மனதளவில் உணர்ந்தவாறே ஒவ்வொரு நாளையும் கடத்துவதால் இச்சிக்கல் மேலும் அதிகரிக்கிறது. இந்த மனநிலையின் வெளிப்பாடுதான் சாதாரண விடயங்களில் கூட  “அவனுங்களுக்குன்னா மொத வாய்ப்பு கொடுத்துடுவானுங்க” என்ற புலம்பலாக வெளிப்படுகிறது.

ஆளும் அரசாங்கமும் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள இந்தியக் கட்சிகளும் இந்தியச் சமுதாயத்துக்கு மறுமலர்ச்சியைக் கொண்டுவர நினைத்தால் உண்மையில் மேற்கண்ட இறுக்கமான மனநிலையில் இருந்து சமுதாயத்தை வெளிக்கொணரத் திட்டமிடவேண்டும். தங்களை இரண்டாம் தரக் குடிகளாக உணர்ந்து உள்ளுக்குள் சிறுமைப்பட்டு வாழும் மக்களால் நிச்சயம் சுதந்திரமாக சிந்திக்கவோ, செயல்படவோ முடியாது. அடக்கிவைக்கப்பட்ட மன அழுத்தமும் இயலாமையும், வெறுப்பு மற்றும் வன்முறை மிக்க சமுதாயத்தையே உருவாக்கி இருக்கிறது.

இந்தியா சென்றுள்ள பிரதமர் நஜிப், ‘இந்தியர்கள் இன்றி மலேசியாவின் இன்றைய தோற்றம் சாத்தியம் இல்லை” என்று கூறியிருப்பது ஒரு புகழ்ச்சி என்று எடுத்துக்கொண்டாலும், உள்நாட்டின் எதார்த்த நிலையை ஆழ்ந்து நோக்கவேண்டியுள்ளது. ‘எல்லாத் துறைகளிலும் இந்தியர்கள் முன்வந்து நாட்டு முன்னேற்றத்துக்காக உழைக்கிறார்கள்’ என்பது உண்மையானால், அவர்களுக்கான வாய்ப்புகளும் முழுமையாக கொடுக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. மாறாக, சாமானிய மக்களின் மனதில் முரடுகட்டி நிற்கும் இன ஒதுக்கல் உணர்வு வேறுவகைச் சித்திரத்தையே கொடுக்கிறது.

எதிர்வரும் 14-வது பொதுத்தேர்தல் பரப்புரைகளில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் மேற்கண்ட, நஜிப்பின் கூற்றை ஒத்த கருத்துகளை மேடைகளில் தொடர்ந்து கூறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும். ஆயினும், அவை இந்தியர்களின் ஓட்டுவங்கியைக் குறிவைக்கும் தற்காலிகப் புகழுரைகளாக மட்டுமே இருப்பதால் மலேசிய இந்தியர்களின் ஆழ்மனச் சிக்கலை அவ்வளவு எளிதில் போக்கிவிட முடியாது.

உண்மையில், நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கடந்தும் மலேசிய இந்தியனுக்கு அவனுக்கான உரிமையும் இடமும் இன்னும் புரியாமலே இருக்கிறது. இந்தியர்கள் இந்நாட்டு வளர்ச்சிக்காக உழைப்பவர்கள் என்ற அங்கீகாரத்தை மட்டும் அவ்வப்போது அரசியல் மேடைகளில் கூறி கைதட்டல் வாங்கிவிட்டு நடைமுறையில் உழைப்பதற்கான கதவுகளை மூடும் அரசியல் போக்கு எரிச்சல் மூட்டுகிறது.

pandiyan 4மலேசிய அரசியல் கொள்கைகளின் மீது பெருவாரியான இந்தியர்களுக்கு மனக்குறை உண்டு. இக்குறைகளை அலசி ஆராய்ந்து பாமர மக்களுக்கு யதார்த்தச் சூழலை விளக்கிச் சொல்ல ஆள் இல்லை.  ஆனால் அரசியல் தலைவர்கள் விதவிதமான நாட்டுப்பற்று சுலோகங்களை முன்நிறுத்துகின்றனர். மக்கள் ‘இது என் நாடு’ என்று உணர்ந்து ஒன்றுபடவேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றனர். அல்லது ஆவேசமான பேச்சுகளின் வழி மக்களின் மனதில் போராட்ட விசையை முடுக்கி விடுகின்றனர். இந்தியர்களின் எதிர்மறையான மனநிலையைக் கூட அரசியல் ஆதாயமாக்க நினைக்கும் அரசியல்வாதிகள்தான் இங்கு அதிகம்.

அரசியல்வாதிகளின் போலிப் பேச்சுகளும் உண்மையை நேர்மையாக உடைத்துப் பேசும் தைரியம் இல்லாமையுமே மலேசிய இந்தியர்களை எப்போதும் சந்தேகங்கள் சூழ்ந்த தடுமாற்ற நிலையில் இருத்தி வைக்கிறது. இந்தியர்கள் இந்த நாட்டின் முழு உரிமை பெற்ற சிறுபான்மை மக்கள் என்பதையும் சட்டவிதிகளுக்கு உட்பட்ட எல்லா உரிமையும் உள்ள மக்கள் என்பதையும் அவர்கள் மனம் இன்னும் சந்தேகத்தோடே நோக்குகிறது.

நாட்டில் இன அடிப்படைவாத அரசியல் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்தும் அதன் உள்ளீடுகளையும் எதார்த்த நிலையையும் மக்களுக்குப் புரியவைக்காமலே அரசியல்வாதிகள் மேம்போக்காக இயங்கியதன் விளைவு இது. நாட்டுப்பற்று என்பது மேடையில் போடும் நாடக முழக்கமன்று. அது தன் உரிமைகளை உணர்ந்து கொண்ட மக்களின் அரசியல் வெளிப்பாடு.  இங்கு அரசியல் உரிமைகள் குறித்த பேச்சு, தேர்தல் காலத்துச் சலுகைகள் வழியாக மழுங்கடிக்கப்படுவதே வழக்கம்.

மலேசியாவில் மலாய் மேலாண்மை அரசியல்தான் முதன்மை பெறுகிறது. இடஒதுக்கீடு என்பது மிக உறுதியாகப் பின்பற்றப்படும் நடைமுறை. இது மறுக்கமுடியாத உண்மை. பெரும்பான்மைக்கு முன்னுரிமையும் சலுகையும் கொடுக்கும் ஜனநாயகமுறைதான் இங்கு பின்பற்றப்படுகிறது. வரலாற்றில் மலாய் இனம் அரசியல் விழிப்புணர்வின் வழி அறுபது ஆண்டுகளுக்கு முன் போராடிப் பெற்ற சலுகைகள் அவை. இதற்கு மிகப்பெரிய பின்புலம் உள்ளது.

அரசியல் அமைப்பில் இருக்கும் சாதகமற்ற நிலைகளை உணரும் அதேவேளை நம்பிக்கை தரும் விடயங்களையும் அரசியல் தலைவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். சிறுபான்மை மக்களின் வகுக்கப்பட்ட உரிமைகள்  என்ற சில வசதிகளும் வாய்ப்புகளும் உள்ளன என்பதை  இந்தியச் சமூகம் புரிந்துகொள்ளும்படி சொல்ல வேண்டிய பணி அரசியல்வாதிகளுக்கு உண்டு. மலேசியக் குடிமக்களான இந்தியர்களும் இன அடிப்படை ஒதுக்கீட்டு முறையின் நிதர்சன நிலைக்கு ஈடு கொடுத்து வாழப்பழக வேண்டும். இருக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு முன்னேறும் துணிவு வேண்டும்.

எடுத்துக்காட்டாக, மலேசியக் கல்வித்துறையில் இனம் சார்ந்த இடஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு கல்வி வாய்ப்புகளை வழங்குவதில் எழும் குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கில்லை. சிறப்புத் தேர்ச்சி பெற்றும் நிபுணத்துவக் கல்விகளுக்கான வாய்ப்புகள் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்குக் கிடைப்பது மிகக் குறைவாகவே உள்ளது. ஆகவே இது பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்ப்பதோடு சர்ச்சைகளை வளர்க்கிறது.

ஆனால், அரசாங்கத் தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெறும் இந்திய மாணவர்களைவிட மத்திமpandiyan 1 நிலைத் தேர்ச்சியும் சுமாரான தேர்ச்சியும் பெரும் மாணவர்கள்தான் அதிகம். தேர்வு முடிவுகள் வந்த பின்னர் இந்தத் தரப்பு மாணவர்களின் நிலை தடுமாற்றமானது. சற்று தவறினாலும் ஏதாவதொரு தனியார் கல்லூரியின் விளம்பரக் கவர்ச்சியில் சிக்கி கடனாளியாகும் வாய்ப்புகள் அதிகம். ஆயினும், அரசாங்கத்தால் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு வாய்ப்புகளை இவர்கள் முழுமையாகப் பயன்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறிதான். அரசாங்க போலிடெக்னிக் கல்லூரிகள், தொழில் திறன் கல்லூரிகள் போன்ற வாய்ப்புகள் இந்திய மாணவர்களால் நிரப்பப்படாமல் பல இடங்கள் காலியாகவே இருக்கின்றன. அரசாங்கப் பள்ளிகளில் கிடைக்கும் ஆறாம் படிவ வாய்ப்பையும் புறக்கணிக்கும் மாணவர்களே அதிகம்,

அரசாங்க வாய்ப்புகளைக் குறைந்த செலவில் பெற முடிந்தாலும் பெரும்பான்மை மாணவர்கள் தனியார் கல்லூரிகளையே நாடிச்செல்கின்றனர். இதற்கு மாணவர்களின் தரப்பில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அரசாங்கம் இட ஒதுக்கீட்டின் வழி இந்தியர்களுக்குக் கொடுக்கும் சலுகைகள் பயனற்றுப் போவதையே குறிப்பிட வேண்டியுள்ளது.

ஆகவே, நாட்டின் அரசியல் அமைப்பைக் காரணம் காட்டி நாம் செயலூக்கம் அற்று இருக்கலாகாது. சற்று விரிவாக நோக்கினால், உலக நாடுகள் பலவற்றிலும் மக்கள் பல்வேறு விடயங்களை முன்வைத்துப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அரசியல் போராட்டங்களைத் துணிந்து சந்திக்கும் அதேவேளையில் தளராத ஊக்கமும் முயற்சியும் நம் எதிர்காலத்தை வடிவமைக்கும். நாம், அரசியல் நிதர்சனத்தையும் தன் உரிமையையும் உணர்ந்த இனமாக, தெளிவான சிந்தனையுடனும் குறைந்தபட்ச நம்பிக்கையுடனுமாகவேனும் வாழ்வதற்கான திட்டங்களைச் சிந்திப்பதே சிறப்பு. பெரும்பான்மைக்கு முக்கியத்துவமும் சலுகைகளும் கொடுக்கும் ஒரு அரசியல் அமைப்புக்குள் சிறுபான்மை மக்களின் நலனைக் காப்பதற்கான திட்டமிடல் என்பது மக்களின் அடிப்படை அரசியல் புரிதலில்  இருந்து தொடங்கவேண்டும்.

ஆகவே, எல்லா நிலையிலும் இயலாமையோடும் விரக்தியோடும் வாழும் சமூகத்தின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவருவதே இன்றைய சூழலில் மிக அவசியமான அரசியல் திட்டமாக இருக்கவேண்டும். மனநிலை மாற்றத்தில் கவனம் செலுத்தாத பொருளாதார, கல்வித் திட்டங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது. அத்திட்டங்கள் வழக்கம்போல சில சுயநல அரசியல்வாதிகளின் நன்மைக்காவும் அதிகாரிகளின் லாபத்திற்காகவும் மட்டுமே பயன்படமுடியும்.

1 comment for “இன அரசியலும் மன முடக்கமும்

  1. R Muthusamy
    April 19, 2017 at 6:31 am

    மிகச்சிறந்த ஆய்வுடன் கூடிய பதிவு.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...