இணையப் பயன்பாடு கடந்த பத்தாண்டுகளில் தகவல் மூலங்களைக் கண்டறியும் வழிகளையும், பயன்பாட்டையும் மாற்றிவிட்டிருக்கின்றது. தகவல்களை எளிதாக பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லுதல், எளிதாகக் கண்டடைந்து பயன்படுத்துதல் என, அடிப்படையில் இவ்விணையப் பயன்பாடு நன்மைகளைக் கொண்டு வருவதாக இருந்தாலும்கூட கற்றலைத் தாமதப்படுத்துதல், ஆய்வுகளில் நேர்மையற்ற தன்மையை உருவாக்குதல் என சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதையும் காண முடிகிறது.
சான்றாக, Turnitin மென்பொருளின்வழி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் (ஜூன் 2010 – மார்ச் 2011) சமூக வலைப்பின்னல்கள், Scribd, SlideShare, Yahoo Answers, Answers.com போன்ற உள்ளடக்கப் பகிர்வுத் தளங்கள் (Content Sharing), அரசாங்க மற்றும் கல்விக்கூடங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள், ஏமாற்றுத் தளங்கள், இணைய செய்தித் தளங்கள் ஆகியவை அதிக அளவில் தகவல் மூலங்களாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது. இத்தகவல் மூலகங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் பெருமளவு முறையான மேற்கோள் இடும் வழிமுறைகளைப் பின்பற்றாததாலும், அல்லது வலிந்து மேற்கோளிடப்படாததாலும் அறிவுத் திருட்டுக்கு (Plagiarism) உட்டபட்டதாக இருப்பதை இவ்வாய்வின் முடிவு குறிப்பிடுகின்றது.
இவ்வாறு அறிவுத் திருட்டுகள் பெருகி வழியும் காலச் சூழலில் தகவல் மூலங்கள் மட்டும் இடைவிடாது இணையத் தளங்களில் பெருகி வருவதை ஒரு முரண் செயல்பாடாகவும் கருத இடமுண்டு. முன்பைக் காட்டிலும், மிக அதிகமான கட்டற்ற திறந்த அணுகல் ஆய்விதழ்கள் (Open access journals), மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வுக் கழகங்களில் நடைபெறும் ஆய்வுக் கண்டுபிடிப்புகள், இளங்கலை / முதுகலை ஆய்வுகள் இணையத்தின் வழி பகுதியாகவோ, அல்லது முழுவதுமாகவோ வாசிக்க, தனிப்பட்ட பயன்பாட்டுக்கு வேறு ஊடகங்களில் சேமிக்க, அச்செடுக்க அனுமதிக்கப்படுகின்றன. கட்டுப்படுத்தப்படாத அணுகல் மற்றும் தடையற்ற மறுபயன்பாடு- ‘Unrestricted access and Unrestricted reuse’ என்பதைத் தாரக மந்திரமாக கொண்டியங்கும் திறந்த நிலை அணுகல் முறையானது (open access) தற்கால ஆய்வுலகில் தவிர்க்க முடியாததாகி விட்டிருப்பதையே இது உணர்த்துகிறது.
திறந்தநிலை அணுகல் முறையின் (Open Access) தேவையைப் பட்டியலிடும் ஆய்வுக்கூடங்களும், சுதந்திர ஆய்வாளர்களும் சில அடிப்படைக் கருதுகோள்களை முன்வைக்கின்றனர். அவற்றைப் பின்வருமாறு பகுக்க முடிகின்றது.
- புதிய கண்டுபிடிப்புகளைத் துரிதப்படுத்தும் – பிற ஆய்வுகளை எளிதில் வாசிக்கவும் தங்களது ஆய்வுகளை உடனுக்குடன் மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.
- பயன்பட்டை அடர்த்தியாக்கும் – இணையப் பயன்பாடு சாத்தியப்படிருக்கும் எல்லா இடங்களுக்கும் தகவல் மூலங்கள் பரவி மேலும் அதன் பயன்பாட்டை அடர்த்தியாக்கும்.
- கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் – ஆசிரியர்கள் மாணவர்கள் என உலகம் முழுவதிலிருந்தும் சமீபத்திய ஆய்வு முடிவுகளை அணுகி கற்றல் கற்பித்தலை மேம்படுத்த வழிவகுக்கும்.
இணையப் பயன்பாடு மற்றும் திறந்த நிலை அணுகல் முறை (Open Access) போன்றவை வருவதற்கு முன்பிருந்தே அறிவுசார் பகிர்வுகள் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறான பெயர்களில் நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதை மாநாடுகள், கருத்தரங்குகள், ஆய்வு மாணவர்களுக்கான இணைப்பு வகுப்புகள் (Attachment courses), ஆய்வுக்கூட கண்காட்சிகள் போன்றவற்றின் மூலம் புரிந்து கொள்ளலாம். அவ்வகையில் இணையம் என்பது அறிவுப் பகிர்வை துரிதப்படுத்தும் மற்றுமொரு ஊடகம் மட்டுமே.
நமது கட்டுப்பாட்டை மீறி நமது படைப்புகள் பொதுப் பயன்பாட்டுக்குச் செல்வதை தவிர்க்க முடியாத சூழலிலும், நமது ஆக்கத்தை பொதுப் பார்வைக்கு வைக்க வேண்டிய தேவையும் அதிகரித்து வருவதால் ஆய்வுத்துறைகளில் இயங்கி வருபவர்களுக்கு அறிவுப் பகிர்வு மற்றும் அறிவுத் திருட்டு தொடர்பான பதற்றமும் பயமும் அதிகரித்திருப்பதைப் பரவலாக காணமுடிகிறது. தங்களது ஆய்வுகளில் அறிவுத் திருட்டு நிகழாதிருப்பதை உறுதி செய்வதைக் காட்டிலும் தங்களது ஆக்கம் பிறரது அறிவுத் திருட்டுக்கு உட்பட்டுவிடக்கூடாது என்பதில் பலரும் கவனமாக இயங்குகின்றனர்.
அவ்வகையில் ஒரு ஆய்வானது எதற்கு மேற்கொள்ளப்படுகிறது (Research purpose) என்பதனையும் படைப்பின் அசல்தன்மையைப் பாதுகாப்பது (Originality preference) தொடர்பாக எழும்பியிருக்கும் கட்டுக் கதைகளையும் (myth) புரிந்து கொள்வதன் வாயிலாக இவ்வகை பதற்ற, பய உணர்விலிருந்து ஓரளவு விடுபட முடியும்.
ஆய்வின் அசல்தன்மையும் அது தொடர்பான கட்டுக் கதைகளும்
ஒரு ஆய்வின் அசல்தன்மை என்பது அதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள், உத்திகள், செயல்முறைகள் (tools, techniques, procedures) மற்றும் தரவுகளின் அசல்தன்மையைப் பொருத்தே அளவிடப்படுகிறது. ஆனால் இதுவரை பயன்படுத்தப்படாத கருவி, உத்திகள், செயல்முறைகள் என்று எதுவுமே இருப்பதில்லை. அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அதுவும் வேறொன்றின் மறு உருவாக்கமாகவோ, மாற்று வடிவமாகவோ இருக்க வாய்ப்புள்ளது.
உதாரணமாக, கார்ல் மார்க்சின் அந்நியமாதல் கோட்பாட்டைக் கொள்ளலாம். கார்ல் மார்க்சின் அந்நியமாதல் கோட்பாடு முதலாளித்துவ உற்பத்தி முறையைச் சாடுவதாக பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும். இக்கோட்பாட்டினை பிறகு வந்த மெல்வின் சீமன் போன்ற சமூகவியல் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வின் தேவைக்கேற்ப மீள் உருவாக்கம் செய்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் பாதிக்குள் 12க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கார்ல் மார்க்சின் அந்நியமாதல் கோட்பாட்டை பலவாறாக மாற்றத்திற்கும் மீள் உருவாக்கத்திற்கும் உட்படுத்தி பயன்படுத்தியுள்ளனர். சற்றே கூர்ந்து கவனித்தால் கார்ல் மார்க்சைத் தவிர மற்ற அனைவரது உருவாக்கங்களும் அசல்தன்மை அற்றதாகத் தோன்றலாம். உண்மையில் பலதுறைகளில் இவ்வந்நியமாதல் சூழல் நிகழ்வதால் அது குறித்த ஆய்வுகளும் மீள்/மறு உருவாக்கங்களும் புதிய கண்டுபிடிப்புகளைத் தோற்றுவிக்கும் சாத்தியங்களைக் கொண்டுள்ளது. அவ்வகையில் மேற்கூறிய அனவரது கோட்பாட்டு வடிவாக்கங்களும் அசல்தன்மையிலானவையே.
அடுத்து, ‘இது என்னுடைய உருவாக்கம்’ என்பதும் ‘இதை நான் கொடுத்தால் என் உருவாக்கத்தின் அசல்தன்மை பாதிக்கப்படும்’, ‘எனக்குக் கிடைக்க வேண்டிய வெகுமதி கிடைக்காமல் போகும்’ என்பதான பதற்ற உணர்வெழுச்சிகளை இப்போதைய ஆய்வுலகம் புராணகாலப் பிதற்றல்களாகவே வகைப்படுத்துகின்றது. எந்த ஒரு ஆய்வுமே ஒருவரது மேதமை புத்தியிலிருந்து முற்றிலும் புதியதாக முளைத்து வருவதில்லை. ஆய்வுக்குப் பயன்பட்டிருக்கும் தரவுகள் எண்ணிலடங்கா மூலங்களிலிருந்து பெறப்பட்டவையாக இருக்கும்போது அதனைத் தன்னுடையதாக மட்டும் கொண்டாடுவது ஆய்வாளரின் குறுகிய மனப்பான்மையைக் குறிப்பதாக அமைகிறது.
படைப்பின் அல்லது உருவாக்கத்தின் அசல்தன்மை குறித்து சிந்திக்கும் ஆய்வாளர்கள் அதற்கென்று தனித்த தரநிலைகளையும் உருவாக்கி வைக்க முயல்கின்றனர். உதாரணமாக, மூலத்திலிருந்து நேரடியாக நகலெடுத்துப் பயன்படுத்துதல் (Copy and paste), சொல் அமைப்பை மாற்றி அமைத்தல் (Rephrase), பொழிப்புரை செய்தல் (Paraphrase), சுருக்கி எழுதுதல் (Summarise) போன்றவைகளைக் கொண்டிருக்கும் ஆய்வுகள் அசல்தன்மையற்றதாக கருதும் போக்கைச் சொல்லலாம். நிதர்சனத்தில் அறிவுத் திருட்டை மிகத் துல்லியமாக அளவிட பயன்படுத்தப்படும் Turnitin மென்பொருள்கூட படைப்பின் அசல்தன்மையை நிர்ணயம் செய்யும் இறுதி முடிவை ஆய்வு மேற்பார்வையாளரின் கைகளிலேயே விட்டுவிடுகிறது. அப்படியானால் அசல்தன்மை என்பதன் பொருள் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. உண்மையில் அது படைப்பின் உள்ளார்ந்த மதிப்பைக் காட்டுவதில்லை மாறாக, அப்படைப்பை மக்கள் என்னவாகப் பார்க்கிறார்கள் என்பதாகதான் இருக்கின்றது. வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறாகவே அசல்தன்மை குறித்த புரிதலும் ஏற்புத் தன்மையும் இருக்கும் என்பதே இதன் சாரமாகும்.
இதனுடன் பதிப்புரிமையை (copyright) படைப்பின் அசல்தன்மையைப் பேணுவதன் பொருட்டு உள்ளிழுத்துக் கொள்ளும் மாயையும் ஆய்வுலகில் தற்போது அதிகரித்துள்ளது. பெரும்பாலும் ஆய்வு மாணவர்கள் தங்களுடைய ஆக்கங்களை யாரும் களவாடிவிடக் கூடாது எனும் பலத்த பாதுகாப்புணர்வில் பதிப்புரிமை குறித்து பேசுவதுண்டு. பதிப்புரிமைச் சட்டம் ஒருவரது அறிவாக்கத்தைப் பாதுகாக்க உதவும் சட்டமாகக் கருதுவது ஒருவகையில் பொதுப்படையான புரிதலாகும்.
1970-களிலிருந்து தனிநபர் கணினிகள், அனிமேஷன் திரைப்படம், இசை, தொலைபேசிகள், டேப்லெட் மற்றும் டிஜிட்டல் வெளியீடு துறையில் முன்னோடியாகத் திகழ்ந்து வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) ‘good artists copy; great artists steal’ என்பதைப் பல இடங்களில் பதிவு செய்திருப்பது இவ்விடம் நினைவுகூரத் தக்கது. ஸ்டீவ் ஜாப்ஸ் அசல் தொழில்நுட்பம் எதையும் புதிதாக உருவாக்கியவரில்லை. ஆனால் அவர் சிலவற்றை மீள் உருவாக்கம், மீள்வடிவமைப்பு செய்து இறுதியில் உலகத்தின் தேவையை தீர்மானம் செய்பவராக உருவெடுத்தவர். அவ்வகையில் அவரது ஆக்கங்களின் அசல்தன்மை என்பது அவரது ஆக்கப்பூர்வமான சிந்தனையின் வெளிபாடும் படைப்பாற்றலும்தான்.
அசல்தன்மை என்ற சொல்லாடலை இவ்வாறு பெரிய மனப்பாங்குடன் எதிர்கொள்ளப் பழகும்போது ஆய்வின் அசல்தன்மையைப் பாதுகாக்க நினைக்கும் பதற்ற உணர்விலிருந்தும் அதனை பொது அணுகலுக்கு பரப்புவதில் உண்டாகும் தயக்கத்திலிருந்தும் நிச்சயம் விடுபட முடியும்.
1 comment for “ஆக்கத்தின் அசல்தன்மையும் அது தொடர்பான கட்டுக் கதைகளும் (Originality preference & myth)”