Ini Kalilah: தேர்தலுக்கு முன்பான இறுதி கேள்விகள்

ini_kaliதேர்தல் நெருங்கும் இந்தக் காலக்கட்டத்தில் நான் பல நண்பர்களிடம் தொடர்ந்து தேர்தல் குறித்தே உரையாடி வருகிறேன். எனது நோக்கம் யாரையும் வலிந்து குறிப்பிட்டு ஒரு கட்சிக்கு ஓட்டைப் போட வைப்பதல்ல. அவ்வாறு செய்வதும் ஒரு வன்முறைதான். பாரிசான் எப்படி மக்களைச் சிந்திக்க வேண்டாம்…சொல்லும் இடத்தில் ஓட்டைப் பதிவு செய் என அரசு ஊழியர்களை மிரட்டி வைத்துள்ளதோ அவ்வாறான ஒரு மிரட்டல் முறையின் மூலமாக ஜனநாயகம் சாத்தியம் இல்லை.

நாம் அவகாசம் எடுத்து உரையாட வேண்டியுள்ளது. அவர்களுக்கு இருக்கும் சிற்சில கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டியுள்ளது. அவர்கள் சந்தேகங்களைக் களைய வேண்டியுள்ளது. அவர்களுக்கு அவர்களின் உண்மையான தேவையையும் அவர்கள் ஏமாறும் தருணங்களையும் கூற வேண்டியுள்ளது. கண்களை மறைத்து நிர்க்கும் பிரமாண்டமான பொய்களை வலுவான சொற்கள் கொண்டு தகர்க்க வேண்டியுள்ளது. ஆனால் அச்சொற்கள் அவர்களுக்குப் புரிய வேண்டும். அறிவு ஜீவிதமாகப் பேசுகிறோம் என சொற்களைத் தொடங்கினால் அது யாரையும் மாற்றப்போவதில்லை. யாருக்கும் புரியப் போவதுமில்லை.

நான் சந்தித்த பல தர மக்களிடம் உள்ள கேள்விகள் நாடு முழுதும் உள்ளவர்களிடமும் இருக்கும் என்றே நம்புகிறேன். இதுவரை நான் எதிர்க்கொண்ட கேள்விகளையும் பதில்களையும் தொகுத்துக்கொடுப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

இது அரசு ஊழியர்களிட ம்வரும்கேள்வி.

கேள்வி : ஓட்டு சீட்டில் எண்கள் இருப்பதால் நமது அடையாளம் வெளிப்பட்டுவிடும். எனவே எப்படி தைரியமாக எதிர்க்கட்சிக்கு ஓட்டுப்போடுவது.

பதில் : ஓட்டுச்சீட்டு இரகசியமாக இருக்க வேண்டியது உண்மைதான். ஆனால் பாரிசானிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் தேர்தல் ஆணையம் எப்படி வேண்டுமானாலும் வளைந்துகொடுக்கவே செய்யும். எனது கேள்வி என்னவென்றால் நமது ஓட்டை யார் கண்காணித்தால் என்ன? மாற்றம் நமக்கு வேண்டுமென முடிவெடுத்தப்பின் பகிரங்கமாகவே நாம் ஓட்டுப்போடத் தயாராக இருக்க வேண்டும். காரணம் உங்களுக்கு விருப்பமான ஒரு கட்சியைத் தேர்வு செய்வது உங்கள் உரிமை.

கேள்வி : ஒருவேளை அதனால் பாதிப்பு ஏற்பட்டால் ?

பதில் : இதுவரை போட்டவர்களுக்குப் பாதிப்பு இல்லைடே. இன்னும் சொல்லப்போனால், எதிர்க்கட்சிக்கு ஓட்டுப்போட்ட பல நண்பர்களுக்குப் பதவி உயர்வெல்லாம் கூட கிடைத்துள்ளது. இந்நாட்டின் குடிமகனாக உங்களுக்கு இருக்கும் உரிமையை நீங்கள் யாருக்காக பயந்து விட்டுக்கொடுக்க வேண்டும்.  ஒருவேளை ஏதும் பாதிப்பு என்றே வைத்துக்கொள்வோம். இலங்கையில் இயல்பான வாழ்வுக்காகவே  போராடும்  தமிழர் நிலையோடு ஒப்பிட்டால் அப்படி ஒன்றும் நமது நிலை மோசமாகிவிடாது என்றே நினைக்கிறேன். இருக்கின்ற சொகுசை  கொஞ்சம் கூட இழக்கக்கூட தயாராக இல்லாத நிலையில் எந்த மாற்றமும் சாத்தியம் இல்லை. நீங்கள் பிரசாரம் செய்ய வேண்டியதில்லை. யாரையும் வற்புறுத்த வேண்டியதில்லை. மாற்றம் தேவையென நினைத்தால் யாருக்கும் அஞ்சாமல் உங்கள் ஓட்டை சுதந்திரமாக பதிவு செய்வதே போராட்டத்தின் ஒரு வடிவம்தான்.

கேள்வி : அரசாங்க ஊழியரான நான் அரசாங்கத்துக்கு நேர்மையாக இருக்க வேண்டாமா?

பதில் : முதலில் நாம் அதிகார பீடங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டியதில்லை. நன்றிக்கடன் என்பது முதலாளிகள் உருவாக்கிய கெட்டவார்த்தை என்பதை புரிந்துகொள்ளுங்கள். அரசு ஊழியர் மக்களுக்காக உழைப்பவர். உங்களால் உண்மையில் மக்களுக்காக உழைக்க முடிகின்றதா என யோசியுங்கள். அதற்காக உழையுங்கள். அது மட்டுமே நேர்மை. அதை எந்த அரசு மாறினாலும் செய்யலாம். நமது கவனமும் பார்வையும் வெகுமக்களை நோக்கி இருக்க வேண்டும். ஒருவேளை அது அதிகார பீடத்தை மட்டுமே பார்க்குமானால் அது சேவையல்ல. அடிமை புத்தி. அதிலிருந்து வெளிவாருங்கள்.

கேள்வி : புதிய அரசு நமக்கு இருக்கிற உரிமைகளையும் பறித்தால் என்னாவது? மாற்றத்தை எதிர்க்கொள்வது சாத்தியமா?

பதில் : ஒருபேச்சுக்கு பறிக்கப்படுவதாகவே வைத்துக்கொள்வோம். அதனால் இப்போது என்ன? 55 வருடமாக படாத துன்பத்தையா ஐந்து வருடங்களில் அனுபவித்துவிடப்போகிறீர்கள். ஆனால் இந்த மாற்றத்தின் மூலம் மக்கள் மனம் மேலும் பக்குவமடையும். அரசாங்கம் என்பதையும் உண்மையான ஜனநாயகத்தின் சக்தியையும் ஆழமாக உணர முடியும். அது வளரும் சந்ததியனருக்கும் படரும்.

கேள்வி : அரசாங்க ஊழியர்கள் தேர்தல் பிரசாரம் செய்யலாமா?

பதில் : செய்யலாம் என பழனிவேலு சொல்கிறார். அண்மையில் சிம்பாங் லீமா தமிழ்பள்ளியில் நடந்த கூட்டத்தில் ஆசிரியர்களை பெற்றோர்களிடம் பாரிசானுக்கு ஆதரவாகப் பேசப் பணித்துள்ளார். அப்படியானால் பிரசாரம் செய்யலாம் என்றுதானே பொருள். அது பாரிசானாக இருக்க வேண்டும் எனச்சொல்லும் உரிமை பழனிவேலுவுக்கு இல்லை.

எளிய மக்களின் கேள்வி

கேள்வி :  அதுதான் கேட்டதைக் கொடுக்கிறார்களே இனி பாரிசானுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் போல…

பதில் :  உரிமைக்கும் சலுகைகளுக்கும் வித்தியாசம் உண்டு. உதாரணமாக  குடும்பத்தில் ஒரு பெண் எவ்வாறு அடிமை படுத்தப்படுகிறாள் என கொஞ்சம் யோசிக்கலாம். வேலை செய்யும் ஒரு பெண் தனது மொத்த வருமானத்தையும் கணவனிடம் கொடுத்துவிட்டு , தனது எளிய தேவைக்குக் கூட  கணவனிடம் கேட்டு போராடி பின்னர் பெருவது ஒரு முறை. இது அவளுக்கு சலுகையாகத் தரப்படுகிறது. அதுவே ஒரு பெண் தனது சம்பாத்தியத்தை தானே நிர்வாகிக்க வழங்கப்படுவது உரிமை. முதல் பெண் எப்போதும் எதற்கும் கெஞ்சிக்கொண்டும் விசுவாசத்துடனும் இருக்க வேண்டியுள்ளது. இரண்டாவது பெண் அதை செலுத்த தேவையில்லை. ஆனால் விசுவாசத்தை எதிர்ப்பார்க்கும் கணவன் அடக்குமுறையை பிரயோகிக்கத் தொடங்கலாம். அரசும் அதைதான் செய்கிறது. நீங்கள் அதனிடம் விசுவாசம் காட்ட, தேர்தலில் போது தேர்ந்தெடுக்க உங்களுக்கு சில எலும்புத்துண்டுகளை வீசுகிறது.

கேள்வி : கேட்டதையெல்லாம்  கொடுக்கும்போது ஏன் மாற்றம் தேவை?

பதில் : ஒரு நாடு என்பது மக்கள்தான். ஒரே கட்சி 56 ஆண்டுகளாக இந்நாட்டை ஆட்சி செய்துள்ளது. இதை சிலர் பெருமையாக நினைக்கலாம். ஆனால், இத்தனை காலம் ஆட்சி செய்யும் ஒரு கட்சியின் வலதுகரமாகி வளைந்துகொடுக்கும் சட்டமும் அதை மூர்க்கமாக முன்னிறுத்து  இராணுவமும் காவல்துறையும் ஒரு தனியார் நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்போல அதிகார வர்க்கம் இட்ட கட்டளையை முடிக்க மட்டுமே பயன்படுகின்றன. மக்கள் விழிப்புணர்வு என்பது இங்கு சாத்தியமே இல்லை.  இவர்களுக்கு மாற்றம் என்பது சலுகைகள் மட்டும்தான். இங்கு ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்பதெல்லாம் கேள்வி இல்லை. தேர்தல் ஆணையம், நீதி மன்றம், லஞ்ச ஒழிப்பு இலாகா, தொடர்புத்துறை என மக்களுக்காக பயன்பட வேண்டிய அல்லது மக்களின் தேவைக்காக இயங்க வேண்டிய ஒன்று இன்று ஆளுபவர்களின் கைபாவையாக மாறியுள்ளது இந்த ஒரே ஆட்சியின் அவலத்தால்தான். ஜனநாயக முறையில் வாழ விரும்பும் ஒவ்வொரு மனிதனும் இந்த மாற்றத்தை எதிர்ப்பார்த்தே ஆக வேண்டியுள்ளது.

கேள்வி : மாற்றத்தின் மூலம் விழிப்புணர்வு சாத்தியமா?

பதில் : நிச்சயம் சாத்தியம். அனைத்து அரசு துறைகளும் இதன் மூலம் தாங்கள் ஒரு கட்சியின் அடிமைகள் அல்ல என புரிந்துகொள்ள முடியும். நீதிமன்றமும் காவல்துறையும் சுதந்திரமாக இயங்க முடியும். ஒரு தொழிற்சாலையின்  நிரந்தர நிர்வாகம் போல ஆகிவிட்ட நமது நாட்டு அரசியல் நிலை தனது உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்தக்கூடும். அதன் மூலம் ஆட்சியில் உள்ளவர்கள் தங்களின் எல்லைகளைச் சுருக்கிக்கொண்டு அரசு துறைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பார்கள்.

கேள்வி : எனக்கு எல்லாமே இருக்கிறது. நான் ஏன் ஓட்டுப் போட வேண்டும்? நான் ஏன் டென்ஷன் ஆக வேண்டும் ?

பதில் : திங்க சோறு இருக்கு, மேல கூற இருக்கு, கீழ மெத்த இருக்கு , படுத்தா தூக்கம் வருது என சொல்லும் சுரணையற்றவர்களைப் போல சமூகத்தில் வேறு நோய் பீடித்தவர்கள் இருக்க முடியாது. நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கின்றன. ஒரு பிரஜையாக இந்நாட்டின் அரசியல் நாடகங்களைக் கண்டிக்கலாம். அல்லது குறைந்தபட்சம் அது குறித்து  நண்பர்களிடம் பேசலாம்.   அதற்கு கூட தொடை நடுங்கினால் தனியாக மெத்தையில் அமர்ந்து கொஞ்சம் டென்ஷனாகவாவது ஆகித்தொலையலாம். அந்த உணர்வு கூட இல்லையென்றால் விலங்குகளைப் போல தெருவில் அலையலாம்.  அரசியலே அத்தனையையும் தீர்மாணிக்கிறது. அப்படி இருக்க முதலில் கற்றவர்கள் மத்தியில் எது குறித்தும் அபிப்பிராயம் இல்லாமல் இருப்பது 56 ஆண்டு கால ஒரே ஆட்சியின் தாக்கம்தான். ஜனநாயகம் பறிக்கப்பட்டு மூலை மலடாகிப்போனப்பின்  சோற்றுக்கு மட்டுமே குரல் எழுப்பும் கூட்டமாக நாம் மாறாமல் இருக்க குறைந்த பட்சம் கோபமாவது பட வேண்டியுள்ளது.

கேள்வி : ம.இ.கா இந்தியர்களைப் பிரதிநிதிக்கிறது. அதை நாம் புறக்கணிக்க வேண்டுமா?

பதில் : பழைய தொகுதியில் நின்றால் ஓட்டுக்கிடைக்காது என கேமரன் மலைக்கு ஓடி ஒளிந்துகொண்ட பழனிவேலு தலைமை ஏற்றிருக்கும் ஒரு கட்சியும் அதன் தலைமைத்துவமும் எவ்வளவு அருவருப்பானது. இதற்கு சாமிவேலு எவ்வளவோ மேல். தோற்றாலும் பரவாயில்லை என  அவர் தனது தொகுதியில்தான் நின்றார். கோழைகளா நம்மை ஆழ்வது?

ஹிண்ட்ராப்  ஆதரவாளர்களின் கேள்வி

கேள்வி : வேதமூர்த்தி கேட்டதில் என்ன தவறு உண்டு.

பதில் : நிச்சயமாகத் தவறில்லை. இன்னும் சொல்லப் போனால் ம.இ.கா, ஐ.பி.எப்  போன்ற கட்சிகள் கேட்காததை ஹிண்ட்ராப் கேட்டதில் தவறில்லைதான். ஆனால், அதற்காக அவர்கள் இந்தியர்களின் ஓட்டுகளுக்குக் குறிவைத்துள்ளதுதான் தவறு என்கிறேன். இது ஒருவகையில் மிரட்டல்… அல்லது பேரம் பேசல். ‘நீ இத கொடுத்தா நான் இத கொடுப்பேன்’ என்பது மிகக் கேவலமான ஒரு மனநிலை. கொஞ்சம் கூட மனவளர்ச்சியற்றவர்களிடம்தான் இருந்துதான் இதுபோன்ற அரசியல் பேரம் நடக்கிறது. ஒரு உதாரணம் சொல்லலாம்.

ஒரு தந்தை தன் மகனிடம் “நீ எனக்கு மரியாதை கொடுத்தாதான் நான் சோறு போடுவேன்” எனும் குரல் எவ்வளவு கேவலமோ அவ்வளவு கேவலம் மகன், “நீங்க எனக்கு சோறு போட்டா நான் மரியாதை கொடுப்பேன்” என்பது. ஒரு தந்தையாக தன் மகனுக்கு உணவளிக்க வேண்டியது அவர் கடமை. அப்படியிருக்க அதற்காக பேரம் பேசுவது தவறு. இந்தப் பேரத்தைதான் வேதமூர்த்தியும் பி.என்னும் செய்துள்ளது. பி.என் தன் கடமையைச் செய்ய இந்தியர்கள் ஓட்டை வேதமூர்த்தி மூலம் பேரமாகக் கேட்கிறது.

கேள்வி : எப்படிப் பார்த்தாலும் ம.இ.காவை விட ஹிண்ட்ராப் மேல்தானே.

பதில் : இல்லை. ம.இ.காவின் இன்னொரு முகம்தான் ஹிண்ட்ராப். ஹிண்ட்ராப் போல ம.இ.கா மிரட்டவோ கெஞ்சவோ வேண்டிய அவசியம் இல்லை. காரணம் அது பாரிசானின் உறுப்பு கட்சி. நண்பர்கள் வட்டத்திற்குள் மிரட்டம் தேவையில்லை. ஆனால் ஹிண்ட்ராப் அந்நியன். அதனால் அது தன் பரிந்துரைகளை பட்டவர்த்தனமாக வைக்க வேண்டியுள்ளது. 2009ஆம் ஆண்டு இந்தியர்களுக்காக நஜீப் அமைத்த அமைசரவை செயல்குழுவில் ம இ கா பரிந்துரை செய்த சுமார் 50-க்கும் மேலான திட்டங்களை நஜிப் ஏற்றுக்கொள்ளவே செய்தார். 2010 இல் இக்குழு மறுவடிவம் பெற்று SITF என்ற விசேச செயலாக்க பிரிவாக முக்கியக் காரணம் இதன்  செயலாக்கத்தின் சுணக்கம்தான். இதுவும் பின்னர் பழனிவேலுவின் தலைமையில் கொள்கை செயலாக்க பிரிவு அமைக்கப்பட்டது.  இந்தச் சுணக்கத்திற்குக் காரணம் ம.இ.காவின் மெத்தனப்போக்கு மட்டுமல்ல . எத்தனைக் கொள்கை அறிக்கையில் கையொப்பம் இட்டாலும்  அம்னோ இனவாத அரசு இருக்கும் வரை அது நிறைவேர சாத்தியம் இல்லை. வேதமூர்த்தியில் பரிந்துரைகளுக்கும் இதே நிலைதான்.

கேள்வி : அப்படியானால் வேதமூர்த்தி சோரம் போய்விட்டாரா?

பதில் : நாம் என்ன வேண்டுமானாலும் அனுமானிக்கலாம். அது நம் வேலையல்ல. ஆனால் இருக்கும் சூழலை கெடுக்க முனைகிறார். மக்களைக் குழப்ப முனைகிறார். இதன் காரணமாகவே ஹிண்ட்ராப்புக்காக உண்மையில் போராடும் உதயகுமார் அவரை நிராகரித்துள்ளார்.

அரசியல் குறித்த எவ்வித ஆர்வமும் இல்லாதவர்களின் வழக்கமான கேள்விகள் …

கேள்வி : பாஸ் ஒரு இஸ்லாமியக் கட்சியாயிற்றே. அது ஆட்சிக்கு வந்தால் நமது உரிமைகள் நிலைக்குமா?

பதில் : இந்துக்களின் நம்பிக்கைகளை கேலி செய்த பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் அம்னோவைப் பிரதிநிதித்து தேர்தலில் நிர்க்கிறார்.  அதன் தலைவர் இப்ராஹிம் அலி பைபிளை எரிக்க வேண்டும் என்கிறார் இண்ட்ராப் காலத்தில் தீபாவளியின் போது கோயில்களை இதே அம்னோ அரசு உடைத்தது. அப்படியிருக்க நீங்கள் பாஸை இனவாதமான கட்சியாக வர்ணிப்பதுதான் ஆச்சரியம். இதுவரை இவ்வாறு பேசியதாக பாஸ் மீது ஏதும் குற்றச்சாட்டு வந்துள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்.

கேள்வி : எதிர்க்கட்சியில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சிகள் இல்லையே?

பதில் : பாரிசானில் இருந்து மட்டும் என்ன கிழித்தார்கள்? இனரீதியான ஆட்சிமுறையால்தான் நமக்குக் கிடைக்க வேண்டியது ம.இ.காவின் மேல் மட்டத்துக்குள் மட்டுமே அடங்கி போனது. இனியும் இது தொடர வேண்டுமா என்ன? நமக்கு இனி இடைத்தரகர்கள் வேண்டாம். நமது பிரச்சனை இனி இந்தியர் பிரச்சனை அல்ல. அது தேசிய பிரச்சனை ஆகட்டும்.

கேள்வி : பாரிசான் இன்றுவரை அரசை நடத்தி வருகிறது. பாக்காதான் வந்தால் அதை சரிவர நடத்த முடியுமா?

பதில் :  இதை மற்ற இனத்தவர்கள் கேட்கலாம். காலம் முழுக்க தமிழ் நாட்டு அரசியலை பார்க்கும் நமக்குமா இதில் குழப்பம் இருக்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் பாக்காதான் ஆண்ட மாநிலங்களில் ஏற்பட்ட மாற்றத்தை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். அன்வார் உட்பட பல ஆளுமை மிக்க அனுபவம் மிக்க தலைவர்கள் அதில் இருக்கிறார்கள் என்பதையும் மறக்க வேண்டாம். எதையும் ஒருமுறை சோதித்த பிறகே அறிய முடியும். இன்று நமக்கு தேவை மாற்றம்.

நாம் சொல்ல வேண்டிய ஒரே கோஷம்…

Ini kalilah!

2 comments for “Ini Kalilah: தேர்தலுக்கு முன்பான இறுதி கேள்விகள்

  1. Netra
    April 28, 2013 at 3:27 pm

    Nalla villakkam.. We’ve only seen one sided governing by the ruling party.. There has been no comparison, no competition.. Create the difference now.. Let’s compare after 5 years..

  2. ஸ்ரீவிஜி
    April 29, 2013 at 5:50 am

    நமக்கு இனி இடைத்தரகர்கள் வேண்டாம்// இதைத்தான் நான் பலரிடம் சொல்லிக்கொண்டிருக்கின்றேன். இனத்தலைவர்களால் நமக்கு ஒன்றுமே ஆகப்போறதில்லை. ஒரு பிரச்சனை குறித்து உதவிகேட்டால், வாய்கிழிய நம்மிடம் சட்டம்பேசுவார்கள். கஷ்டம், முடியாது, தகுதி இருக்கா? இது நம்வேலையல்ல!, நீங்க எந்த தொகுதியோ அங்கே முறையிடுங்கள், என் கிட்ட சொல்லீட்டிங்க இல்ல, பிறகு ஏன் பத்திரிகையில் எழுதணும், அவர்களே பார்த்துக்கொள்ளட்டும். அவர்களின் உரிமையில் கைவக்காதீர்கள், அதைப்பற்றி நீபேசாதே, யார் சொன்னா? நீ பார்த்தியா? யூகத்திலே என்னிடம் பேசாதே..! முடிந்தா பண்ணிக்கோ, எங்கே போனாலும் ஒண்ணும் நடக்காது.. என சவுடால் பேச்சில் வெறுப்பேற்றுவார்கள். SPM தேர்வில் 10ஏ’க்களைப்பெற்ற ஒரு மாணவிக்கு, மெட்ரிகுலேஷன் கிடக்க நமது தலைவர் ஒருவர் ,துணைமந்திரி பதவியில் இருக்கின்றபோது சிபாரிசு வாங்க அலையாய் அலைந்தும், அந்த சிபாரிசு கிடைத்தும், dukacita dimaklumkan என்கிற கடிதமே வந்தது. என்ன புண்ணியம்? என்ன மரியாதை?
    இதில் பத்திரிகையில் புகைப்படம் போட்டு, எங்களால்தான் மாணவர்களுக்கு அந்த யூ கிடைத்தது, இந்த யூ கிடைத்தது என்கிறார்கள். அவ்வளவும் பித்தலாட்டம். கிடைக்கும் இவர்களால் அல்ல, அவர்கள் போடும் பிச்சையால். இவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஏறக்குறைய விஷய ஞானமுள்ள நானே சில விஷயங்களில் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றால், ஒன்றுமறியாத தமிழ் மக்களைப் படுத்தியிருக்கின்ற பாடு? அவர்கள் படுகின்ற வேதனைகளை நினைத்தால், வெறுத்துப்போகிறேன் இந்த ஆட்சியை. இதில் நமது உரிமைதனைக்கேட்க கடன்கேட்பதைப்போல் கூனிக்குறுகவேண்டும் இவர்களிடம். எத்தனை அழைப்பு..! எத்தனை எதிர்ப்பார்ப்பு.! மாற்றியே ஆகவேண்டும். வேண்டாம் இடைத்தரகர்கள். ஒரே தேசியம் அதுவே நம் லட்சியம்.

Leave a Reply to ஸ்ரீவிஜி Cancel reply